Advertisement

கண்ணன் அங்கே தனியே படுத்திருந்தார்.. உபகரணங்கள் நிறைய இருந்தது.. அவரை பார்க்கவே முதலில் அடையாளம் தெரியவில்லை.. அவர் முதலில் அடையாளம் தெரியுமளவு இல்லை.. இயல்பானவர்களை விட மெலிந்து உருகி ஒட்டி இருந்தார்.. இப்போது நேற்றிலிருந்து எதோ காய்ச்சல் அதனால் தனியாக இருக்கிறார். நம்மிலிருந்து தொற்று ஏதும் அவருக்கு பாதிக்காமல் இருக்க.. இந்த பாதுகாப்புகள். மெல்லிய திரை அவரை சுற்றி.. அதற்கு வெளியே அமர்ந்தனர் இருவரும், பார்த்தனர். பேசுவது காதில் கேட்டும் தூரம்தான். 

கண்ணன் முகம் மட்டும் வெளியே தெரிந்தது.. அதில் லேசான  ஆங்காங்கே கருப்பு கருப்பாக தடிப்புகள். நீலகண்டன் பார்த்தான்.. அவரை. அவரின் கண்ணோடு கண் நோக்கினான்.. இவனை தெரிந்துக் கொண்டதற்கான சின்ன ஒளி அவரின் கண்ணில்.. சட்டென ஒரு ஸ்பார்க் என்பாற்களே அப்படி இருந்தது.

ஏதும் பேச முற்படவில்லை நீலகண்டன்.

கண்ணன் மிகுந்த கவனமாக இருக்கிறார்.. இந்த நாட்களில்.. கிட்ட தட்ட ஆறுமாதமாகதான் தன்னை சுற்றி என்ன நடக்கிறது.. இதுவரை என்ன நடந்திருக்கிறது என்றே தெரிகிறது அவருக்கு. அதனால், இயல்பாக தனக்கு சாதகமானவர்களை தேடுகிறார், இப்போது. 

ஐயோ!.. எப்படி இருப்பர், இவர் அப்போதெல்லாம் செய்த செயலுக்கு.. அதனால் மனது ஓய்ந்து போனது இப்போதெல்லாம்.. உயிர் வாதனையை அனுபவிக்கிறார். இந்த வலிக்கு.. உயிர் போனாலும் நன்று என எண்ணம்தான் ஆனால், உயிர் சுமக்கிறார்.. முயன்று எதற்கோ சுமக்கிறார்.. ம்.. ரஞ்சனி எனும் குழந்தைக்காக இத்தனை மனிதர்களின் முகங்களையும் தெரிந்துக் கொண்டு.. தான் வாழ்ந்த வாழ்க்கையின் அழகை.. அவர்களின் நடத்தையில் புரிந்துக் கொண்டு.. வலி சுமக்கிறார். 

இப்போதும் அப்படியே.. இது.. தன் தங்கை பையனை வர சொன்னதும் தன்னுடைய கடைசி முயற்சிதான். இவனும், இவரின் தேர்வில் பாஸ்சாகவில்லை என்றால்… தனக்கென யாரும் இல்லை.. தான் செய்த செயல் அப்படி என தெரிந்தவர்.. தன்னோடு தன் பெண்ணையும் கூட்டிக் கொண்டு சென்றுவிடுவார்.

எந்த பாவனையையும் முகத்தில் காட்டாமல் கண்ணன் “வள்ளி பையன்.. ம், வள்ளி பையன்தானே நீ.. வந்துட்டியா.. எப்படி இருக்கா அம்மா” என்றார் பேச்சு நன்றாகவே வந்தது.. லேசான தடுமாற்றம்தான் மற்றபடி உடல் வேதனை.

இப்போது தங்கை மகனை பார்க்கவும் உற்சாகமானார் போல..

அவர் கேட்ட கேள்வியில் ரகுவை பார்த்தான் நீலகண்டன். ரகு மழுப்பலாக சிரித்தான். நீலகண்டனுக்கு.. அவன் மேலிருந்த மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது இப்போது.. ஒன்றும் இல்லாமலே போய்விட்டது.

நீலகண்டன் “என்ன ஆச்சு.. உங்க பசங்க இவ்வளோ பெரிய பொஷிஷனில் இருக்காங்க.. கிட்னி ஃபெயிலியர் சொன்னாங்க.. என்னாச்சு..” என்றான் இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த எல்லா கேள்விகளையும் நேரடியாக இவரிடமே.. ஒரே கேள்வியாக கேட்டான்.

கண்ணன் முகத்தில் பெருமிதமான புன்னகை. ரகுவை பார்த்தார்.. ஒருமாதிரி அவனின் உடல் கூசி குருகுமாறு பார்த்தார். 

நீலகண்டனை பொறுத்தவரை.. இந்த அரைமணி நேர ஆராய்ச்சியில்.. இவர் மகனின் செல்வாக்கிற்கு.. இந்நேரம் இவரின் குறையை சரி செய்திருக்க முடியும். எனவே, எதற்கு இந்த ஆர்பாட்டம்.. கடைசி நேர அழைப்பாக எதற்கு இந்த அழைப்பு என கோவம், அவனிற்கு.

ரகு சின்ன குரலில், நீலகண்டனிடம் “அது வேற.. நீங்க சும்மா பார்த்துட்டு.. எது சொன்னாலும் கேட்டுட்டு வாங்க..” என்றவன் “சித்தப்பா நான் வெளியில் இருக்கேன்..” என சத்தமாக சொல்லி வெளியே சென்றான்.

ரகு ‘என்ன பேசிவிட போகிறார்..’ என எண்ணிக் கொண்டே போனில் பேசிக் கொண்டிருந்தான். வெளியில் அமர்ந்து.

கண்ணன் “சாக போகிறவன் என்ன சொல்லிவிட போகிறேன்.. ம்.. என்ன சொன்னாலும்.. உனக்கு இது சம்மந்தம் இல்லா செய்தி, நீயும் செய்யமாட்டாய்.. அதுதான் அவனின் எண்ணம். அது சரியும் கூட.. அதைவிடு அம்மா எப்படி இருக்கா..” என்றார்.

நீலகண்டனுக்கு அவரின் பேச்சில் அத்தனை குழப்பம். ‘திடமாக இருக்கிறார்.. அவர்களும் நல்ல வசதி.. நான் பார்த்த தாத்தா வீடு இல்லை இது.. பின் என்னதான் பிரச்சனை. இவருக்கு உண்மையாகவே ஒன்றும் தெரியாதா.. சொல்லுவதா! வேண்டாமா!’ என யோசனைதான். 

ஆனாலும் இப்படி ஒன்றுமே தெரியாமல் இருப்பார் என அனுமானிக்க முடியவில்லை அவனால். ரகு என்னுடைய எல்லாவற்றையும் சொல்லுகிறான்.. இவருக்கு ஒன்றுமே கூடவா தெரியாது.. எனவும் ஆராய்ச்சி.

நீலகண்டன் ஒரு பெருமூச்சு விட்டு “அம்மா இறந்து ஐந்து வருடம் ஆகிறது..” என்றான்.

கண்ணன் “போ.. அவளும் இல்லையா என்னை மன்னிக்க..” என சோர்ந்து போனார். தான் செய்த தவறு எல்லாம் புரிந்தாலும்.. சாகும் போது சிவ சிவா என்றால் என்ன செய்ய முடியும் என்பதும் புரிந்தே இருந்தது போல அவருக்கு.. எனவே கடைசி நேர சலிப்பு அவருக்கு.

நீலகண்டன் “எதுக்கு கூப்பிட்டீங்க.. அதான் உங்க நிலை உங்களுக்கே தெரியுது.. உங்க பசங்க இருக்காங்க பார்க்க.. நான் என்ன பண்ணனும்.. இன்னும்” என்றான் என்னமோ குழப்பம்.. மேலும் ஒட்ட முடியவில்லை அவனால்.. மீண்டும் பொய்யான மனிதர்கள் என உறுதி வந்துவிட்டது ரகுவை பார்த்ததும் எனவே எப்போதும் போல எரிந்து விழுந்தான்.

கண்ணன் “சரி பா.. நல்லா இருக்கியா, எங்க இருக்க.. என்ன பண்ற” என்றார்.

நீலகண்டன் “ஏன் உங்க பசங்க ஏதும் சொல்லலையா” என்றான்  இறுகிய குரலில்.

கண்ணன் “ஒன்னு சொல்லவா.. அவங்க என் பசங்க இல்லை, ச்ச எப்படி சொல்ல.. அப்படியும் சொல்ல முடியாது.. நான் தத்தெடுத்துகிட்டேன் ஒருத்தனைத்தான்.. ஆனால்.. விடுப்பா.. விடு.. என்குறை என்னோடு.. நீ நல்லா இருக்கியா.. தம்பி எப்படி இருக்கான்.. எனக்கு எதுவும் தெரியாது பா.. நான்.. நான் அப்போது எதோ கேட்பார் பேச்சை கேட்டு, எதோ செய்தேன்.. இப்போதுவரை எனக்கு ஏதும் புரியாமலே போய்விட்டது.. விடு..” என்றார் பெருமூச்சு விட்டு. 

நீலகண்டனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.. கோவமும்.. எரிச்சலும்தான் வந்தது அவரின் பேச்சில். அமைதியாக இருந்தான்.

இப்போது ஒரு பெண் நர்ஸ் வந்தார்.. “கண்ணன் சர் போதும் பேச்சு.. உங்களுக்கே தெரியும்.. எல்லோரும் என்னைத்தான் கேட்ப்பாங்க.. ஈவ்னிங் பாருங்க..” என கண்ணனிடம் ஆரம்பித்து.. நீலகண்டனிடம் முடித்தார் அந்த செவிலியர்.

கண்ணன் மெல்லிய குரலில் “பா… நீலகண்டா.. பெயர் சரிதானே.. இ.. இவங்க நம்பர் வாங்கிக்க.. அப்புறம் நான் பேசறேன்.. அப்புறம் ஒரு விஷயம், உன் கையெழுத்து கேட்ப்பாங்க.. அ..அது.. ஆபீஸ் ஏதும் போனியா.. நேரே இங்கே வந்திட்டியா” என்றார்.

நீலகண்டன் “அது வீடுதானே.. இப்போதானே கட்சி அரசியல்ன்னு எதோ போல இருக்கு” என்றான் இறுகிய குரலில்.

கண்ணன் “ம்.. அங்க பார்த்தியே, அது பூர்வீக வீடு.. உங்க அம்மாக்கும் எனக்கும் மட்டுமான வீடு.. அதை மாற்ற உன்கிட்ட கையெழுத்து கேட்பாங்க.. போட்டிடாதே.. ம்.. சரி போ.. உன் நம்பர் கொடுத்திட்டு போ.. இன்னும் என்ன செய்வாங்களோ.. தெரியலை..” என்றார் சலிப்பான குரலில்.

மீண்டும் அவரே “நிறைய சொல்லணும்.. ஆனால், அதுக்கு கூட எனக்கு தகுதி இல்லை பா.. இப்போது என்னோட இன்னொரு கிட்னியும் எதோ ப்ரோப்ளேம் போல.. தெரியலை.. எனக்கு ஒரே ஒரு கவலை மட்டும்தான்.. என் பழி என் குழந்தையை சேருமோன்னு. ம்…” என்றார் ஒரு மூச்செடுத்து.. தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.

பின் தானே “இருப்பேனோ என்னமோ தெரியலை.. ஏதாவது தகவல் சொன்னால்.. வந்து ஒரு வாக்கரிசி போட்டு போ.. மன்னிச்சிட்டேன்னு நினைச்சிக்கிறேன்..“ என்றார் தழு தழுத்த குரலில்.

நீலகண்டன் ஸ்தம்பித்து அமர்ந்தான்.

“மகனே ஒன்றை யாக்குதல் மாற்றுதல்

அழித்திடல் லெல்லாம் நின்செய லன்று காண்

தோற்றேன் என நீ உரைத்திடும் பொழுதிலே

வென்றாய்.. உலகினிலே வேண்டிய தொழிலெல்லாம்

ஆசையுந் தாபமும் அகற்றியே புரிந்து

வாழ்க நீ..”

-பாரதி

Advertisement