Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

6

நீலகண்டன் அவனின் தாய் மாமா வீட்டிற்கு சென்றான். காலையில் கடையை திறந்து வைத்துவிட்டு கோகுலிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, தன்னிடம் அழைத்து பேசுபவரை.. போனில் அழைத்து வழிக் கேட்டுக் கொண்டு சென்றான்.

‘பெரிதாக எந்த விரோதமும் கூடாது.. எதோ உடல்நலமில்லாதவர் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும்.’ என மனதில் முடிவோடு சென்றான்.

தன்னுடைய கடையிலிருந்து பதினெட்டு இருபது கிலோமீட்டர் தூரம் எனவே பைக்கில் சென்றுக் கொண்டிருந்தான். இடம் சொல்லியிருந்தனர், எனவே அந்த தெரு முணையில் நின்றுக் கொண்டு மீண்டும் அழைத்தான்.

ஏனோ லோக்ஷேன் அனுப்பும்படி இவனும் சொல்லவில்லை, அவர்களும் வழி சொல்லி கூட்டிதான் சென்றனர்.

யாரோ இருவர் வண்டியில் வந்தனர்.. “நீங்க நீலகண்டனா” என கேட்டுக் கொண்டு வீடு நோக்கி அழைத்துச் சென்றனர். 

ஜனத்திரள் நிறைந்த பெரிய மார்கெட் வீதியில்தான் வீடு.. இல்லை அது அலுவலகமாகதான் இருந்தது. 

வீட்டின் முன் பெரிய திடல்.. அதில் கார்கள் இரண்டு.. நான்கு வண்டிகள் அதை தவிர ஏதேதோ வண்டிகள் முறையாக நிறுத்தியிறாமல்.. நின்றது. எதோ கட்சி கொடி அந்த இடத்தில் இருந்தது. நீலகண்டன் யோசனையோடு.. வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றான்.

முதலில் வராண்டா.. சிமெண்ட் தரை போட்டு.. மேலே கூரை போல.. ஓடுகள் வேய்ந்திருந்தனர். அடுத்து தலைவாசல் அதில் நுழைந்ததும் இடது பக்கவாட்டில் அலுவலக அறை போன்ற அமைப்பு.. பெரிய பெரிய தலைவர்கள் படங்கள்.. ஏதேதோ பதாகைகள் என இருந்தனர். அந்த அறையில்   இரண்டு நபர்கள் வேலை செய்துக் கொண்டிருந்தனர்

அதை தண்டி உள்ளே சென்றதும்.. பெரிய பட்டாசாலை.. அதன் வலதுபக்கம் பெரிய மரவேலைபாடு கொண்ட பெரிய திவான் இருந்தது.. நடுவில் டீபாய் போன்று ஒரு டேபிள் அதில் தமிழ் ஆங்கில நாளிதழ் இருந்தது. அதற்கு பின்புறம் ஒரு அறை. அந்த திவானின் இடது புறம் மாடிக்கு செல்லும் வழி. இப்போது வந்த வாசலின் வழியில் நேரே உணவு உண்ணும் அறை, அதையடுத்து ஒரு சமையலைறை.. பின்புற வாசல் என பெரிதாக இருந்தது வீடு.

அவனின் மனதிலேதோ ஒரு அழுத்தம்.. ஏனென்றே தெரியவில்லை.. யாரும் எதிர்படவில்லை.. வாசலில் அமர்ந்திருந்த கட்சி நபர்கள்..  என அந்த இடம் எங்கோ அவனை இழுத்து சென்றது. 

அந்த பெரிய திவானில் அமர் வைக்கப்பட்டான் நீலகண்டன்.

இப்போது நபர் வந்தார்.. முப்பதுகளில் இருந்தார். அந்த இடத்திற்கு சிறிதும் ஒட்டாமல் பேண்ட் ஷர்ட் அணிந்துக் கொண்டு.. கண்ணாடி அணிந்து கொண்டு வந்து அமர்ந்தார் எதிர் சோபாவில்.

நீலகண்டனுக்கு, அது யாரென தெரியவில்லை.. அந்த வீட்டை அமைதியாக சுற்றியும் பார்த்துக் கொண்டிருந்தான்.. ’எனக்கு பார்த்து பழகிய இடம் போலவே இருக்கு.. ஒருவேளை இது என் அம்மா பிறந்த வீடாக இருக்குமோ.. இந்த திவான்.. பின்புறம் தாத்தா ரூம்’ என எதோ நினைவு வர.. எப்போதும் இறுகியிருக்கும் அவனின் முகம்.. கொஞ்சம் யோசனைக்கு தாவியது.

அதற்குள் வந்து அமர்ந்தார் அந்த நபர்.. “ஹலோ  நீலகண்டன்.. நான்தான் உங்களை போனில் அழைத்து பேசினேன்.. நான் ரகுநாதன்..” என்று தானே அறிமுகம் செய்துக் கொண்டு.. “ஏதாவது குடிக்கிறீங்களா” என்றார்.

நீலகண்டன் “இல்லைங்க.. ஒன்றும் வேண்டாம்.. சொல்லுங்க” என்றான். என்ன பேசுவது என்றே தெரியவில்லை.. இந்த வீடு எனக்கு பரிட்சையமானதாக இருக்கிறது.. இவர் யார்.. இவர்களுக்கு என்ன வேண்டும் எனத்தான் அந்த நிலையில் யோசிக்க முடிந்தது, நீலனால்.

இப்போது ரகு “சித்தப்பா, ஹாஸ்ப்பிட்டலில்தான் இருக்கார்.. இதோ இப்போது நாங்க போக போறோம்.. உங்களையும் கூட்டிட்டு போறோம்.. சிறுநீரகம் பொருத்துவது கொஞ்சம் கடினம்ன்னு சொல்றாங்க.. இதோ தம்பி வந்திடுவான்.. மோர் குடிங்க..” என்றபடி ஒரு நபர் மோர் கொடுக்க.. தானும் எடுத்துக் கொண்டு.. நீலனுக்கும் கொடுத்தார் ரகு.

நீலகண்டனுக்கு.. இந்த உறவுமுறையில் சிக்கல் தோன்றியது ‘சித்தப்பான்னா.. எனக்கு இன்னொரு மாமா இருக்காரா.. தம்பின்னு யாரை சொல்றார்.. இவர்’ என எண்ணம் ஓட.. மோர் குடித்தான். மனது உறவுமுறையில் உறுத்தியது..

அப்போது மேலிருந்து கீழே இறங்கியபடியே போன் பேசிக் கொண்டே ஒருவன் வந்தான்.. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை.. ஆனால், துண்டு மட்டும் கட்சிகரை வைத்து கையில் வைத்து இருந்தான்… உயர்தர போன்.. அதில் யாருடனோ மெல்லிய குரலில் பேசிக் கொண்டே வந்தான்..

ரகு, இறங்கி வந்தவனை பார்த்து “தம்பி.. நம்ம சித்தப்பாவின் தங்கச்சி பையன் இவர்.. இவரை பார்க்கத்தான் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்..” என எதோ பாவனையாக சொன்னான்.

இப்போது போனில் பேசிக் கொண்டிருந்தவன் எதோ சொல்லி போனை வைத்துவிட்டான். நீலகண்டன் அமர்ந்திருந்த சோபாவில் அமர்ந்தான்.. அவனின் பார்வை, துளைத்தது.. நீலனை. 

நீலகண்டன் ஏன் இப்படி பார்க்கிறான் என கொஞ்சம் கோவமாகி “எ..ன்ன” என தொடங்க.

ரகு, “ஹா.. தம்பி மாதவா.. நம்ம சி… உன் அப்பாவை பார்க்க வந்திருக்காங்க.. எப்படி இருக்கீங்க.. என்னான்னு கேளுப்பா.. நமக்கு வேலை எப்போவும்தான் இருக்கு” என்றான் சிரித்துக் கொண்டே, முகம் அக்கறை பாவனையை காட்டியது.

மாதவன், ஒரு எடை போடும் பார்வை ஆராய்ச்சி பார்வையை மாற்றாமல்  தம்பி என்றழைத்த ரகுவை பார்த்தான்.. “ம்.. சரி, அவர் கிட்ட கூட்டி போங்க..” என்றான் அசித்ரையாக.

பின் மிகவும் முக்கியமான விஷயமாக “சென்ட்ரலில் இருந்து நம்ம ஆளு வந்திருக்கான்.. போய் ஒரு அட்டன்னஸ் போட்டுட்டு வந்திடுறேன்.. காலையிதான் தகவல் வந்தது.. சென்னை போறேன்.. பார்த்துக்க” என்றான் ரகுவை பார்த்து.

ரகுதான் பெரியவன்.. இவன்.. பார்க்கவே சிறு பையன் போல முகபாவம் இருந்தது.. ஆனாலும் பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாக.. வெள்ளை வேட்டி  சட்டை என தோரணையாக இருந்தான்.

நீலகண்டனுக்கு அந்த இளையவனின் அலட்சியம் என்னமோ செய்தது.. ‘நான் ஒன்று நினைத்து வந்தால் இங்கே என்னமோ சரியில்லை. சரி எப்படியோ போகட்டும் நமக்கென்ன’ என தோன்றியது. எனவே, எழுந்துக் கொண்டான்.

ரகு “இருங்க நீலகண்டன்.. அவசரப்படாதீங்க.. உங்களை தொலைச்சு இருபது வருஷம் ஆச்சு.. இப்போதான் கண்டுபிடிச்சிருக்கோம்.. இதோ இப்போ கிளம்பி போகலாம். சித்தப்பா ரொம்ப வருஷமாக உங்களை பார்க்க காத்திருக்கார்” என்றான் எழுந்து நின்று,

அப்போதும் மாதவனின் பார்வை அலட்சியமாகத்தான் நீலகண்டனை பார்த்தது. ‘என்னமோ சரியில்லை எதற்கு என்னை ஆராய்கிறான்.. யார் இவன்..’ என தோன்றியது.

ரகு “சரி மாதவா.. நான் கிளம்பறேன்.. “ என்றான்.

மாதவன் “வேலையை முடிச்சிடு ண்ணா” என்றான்.

ரகு “க்கும்.. ம்… ம்..” என்றான் மழுப்பலாக சிரித்தபடியே.

இப்போது வாசலிலிருந்து.. ஒரு பெண் குரல் கேட்டது. மெல்லிய கொலுசு சத்தம்.. உள்ளே வந்தாள் ஒரு பெண்.. “ரகு அண்ணா” என்றாள் சின்ன குரலில்.. அழைத்துவிட்டு அப்படியே அந்த அலுவலக அறை வாசலில் நின்றாள்.

ரகு “நீ ஏன் இங்க வர ரஞ்சனி..” என்றான்.. முகம் சட்டென இரு ஆண்களுக்கும் கடுகடுத்தது.

மாதவன் எழுந்து நின்றான்.

ரகு “நீ இரு..” என்றவன், நீலகண்டனை பார்த்து “டூ செகண்ட் ப்ளீஸ்..” என்றான் கெஞ்சலாக. 

ரகு அந்த பெண்ணை நோக்கி சென்றான். எதோ பேசிக் கொண்டனர், அந்த அலுவலக அறையில்.. நீலகண்டன் அமர்ந்தான் போன் பார்க்க தொடங்கினான்.

மாதவன் போன் பேசிக் கொண்டிருந்தான்.

அந்தபெண் சென்றுவிட்டாள் போல.. ரகு “கிளம்பலாம் நீலகண்டன்..” என்றான்.

இருவரும் கிளம்பினர்.

முதலில் நீலகண்டன் தன் வண்டியைதான் எடுத்தான்.. ரகு “பக்கத்தில்தான் ஹாஸ்ப்பிட்டல்.. அரைமணி நேரத்தில் வந்திடலாம்.. வாங்க காரில் போயிட்டு வரலாம்.” என தன்மையாக பேசினான்.

நீலகண்டன் “இல்ல, பரவாயில்லை நான் வண்டியில் வரேன்..” என்றான்.

கார் முன்னாடி செல்ல.. நீலகண்டன் பின் தொடர்ந்தான்.

மருத்துவமனை வந்து சேர்ந்தனர். சற்று நேரம் காத்திருந்தனர். அப்போது ரகு “உங்க அம்மா இப்போ இல்லை இல்லையா.. கேள்விப்பட்டோம்.. எப்படியோ உங்க இடம் உங்ககிட்ட வந்திடுச்சி..” என அவர்களை பற்றிய தகவல்களை சொன்னானா.. மிரட்டினானா தெரியவில்லை.

நீலகண்டன் அதீத யோசனையில் எல்லாம் கேட்டுக் கொண்டான்.. தன்னை மறைத்துக் கொள்ள கொஞ்சம் முயற்சித்தான் இப்போது. ‘எப்படி, எல்லாம் தெரிகிறது இவர்களுக்கு’ என எண்ணம் உள்ளே கனன்றுக் கொண்டிருக்கிறது.

‘யார் இவர்கள்.. என் தாய்மாமாவிற்கு எனக்கு தெரிந்து குழந்தைகளே இல்லை.. என் அம்மாவும் சொல்லியதுண்டு. சித்தப்பா.. அப்பா.. என உறவு எப்படி வந்தது.. எனக்கு தெரிந்து ஒரே தாய்மாமா தான்.. எனக்கு’ என உள்ளே எல்லாம் வெடித்து சிதறும் கேள்விகள்தான். ஆனாலும் ஒன்றுமே கேட்க்காமல்.. அவர்களாக என்னை அழைத்திருக்கிறார்கள்.. பார்ப்போம்.’ என எண்ணிக் கொண்டு அமைதியாக வந்தான்.

பின் ரகு, செவிலியரிடம் பேசி.. உள்ளே செல்ல.. நீலகண்டனுக்கு ஒரு உடை கொடுத்தனர்.. ரகுவும் அதே போன்றதொரு உடையை அணிந்துக் கொண்டான். இருவரும் உள்ளே சென்றனர்.

Advertisement