Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

22

ரஞ்சனி, கணவனை அமைதியாக பார்த்தாள்.. பால் கொண்டு வந்து கொடுத்தாள். கண்கள் கணவனை அப்பட்டமாக முறைத்துக் கொண்டே இருந்தது. 

நீலகண்டன் மனையாளை பார்க்க.. தயங்கிக் கொண்டே பால் டம்ப்ளரை வாங்கினான்.

ரஞ்சனி “உண்மையை சொல்லுங்க, உங்களுக்கு தலை வலிக்குதா.. இல்லை, நான் பேசறது பிடிக்கலையா” என்றாள்.

நீலகண்டன் “எ..என்ன இப்படி பேசற” என்றான், வருந்துகிறேன் எனும் குரலில்.

ரஞ்சனி ஒன்றும் சொல்லாமல் அறைக்கு சென்று.. கதவை சாற்றிக் கொண்டாள். என்ன சொல்ல.. பேச முடியும்.. வாயே திறக்கமாட்டேன் என்பவனிடம். நானும் எத்தனை முறை.. அவனை சகஜமாக்க எண்ணுகிறேன் என கோவமாக வர.. போடா.. உனக்கா தோணினா பேசு என சென்றுவிட்டாள்.

அன்று போல.. இன்றும் உள்ளே வந்துவிட கூடாது என கதவை தாழிட்டுக் கொண்டாள்.

நீலகண்டனுக்கு சமனில்லா மனநிலை. உறக்கம் வர மறுத்தது. ‘ஏன் நான் இவ்வளவு இறுக்கமாக இருக்கிறேன்.. என்னை நம்பி வந்தவளையும், நான் நோகடிக்கிறேன்.. அவளிடம் கூட உன்னால் சகஜமாக இருக்க முடியாதா’ என யோசனை முதல்முறை அவனுள் ஓடியது. ‘இயல்பாக செல்லும் நேரங்களில் நான் ஏன் தம்பி தம்பி என நினைக்கிறேன்’ என சிந்தனை.. அதனை தவறு என அவன் நினைக்கவில்லை ஆனால், தன்னால், இயல்பாக இருக்க முடியாமல் செய்கிறது தம்பியின் சிந்தனை என உணர்ந்தான். இனி அவளை காயப்படுத்த கூடாது.. ‘இனி, நான் என்பது அவளும் சேர்ந்தது தானே.’. என தோன்ற.. அதை அவனின் மனம் விரும்பி ஏற்றது போல.. உள்ளே ஒரு குறுகுறுப்பு. 

சற்று நேரம்.. மாலையில் அவளின் கைபிடித்து நின்ற போது.. அவளின் மென் விரல் தந்த இதம்.. இப்போது வேண்டும் போல இருந்தது.. மெல்லிய சிரிப்பு அவன் உதடுகளில்.. தன் மனதை எண்ணி சிரித்தான். அழகாக, உரிமையாக.. அவள் நிற்கும் கிட்சென் சென்று அமர்ந்தான், சிறிது நேரம். என்னமோ வேறு வேறாக புதிய சிந்தனை எல்லாம் வர.. அந்த இரவு அவனுக்கு போதி மரமானது.. லாப் எடுக்கவில்லை இன்று.. ஹாலிலேயே அங்கும் இங்கும் நடை பயின்றுக் கொண்டிருந்தான். அதிகாலையில்தான் உறங்கினான்.

அன்று காலையில் நீலகண்டன் கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். ரஞ்சனி “நான் என் ப்ரெண்ட்டோட அப்பாகிட்ட அசிஸ்சென்ட்டா வேலைக்கு போகலாம்ன்னு இருக்கேன்.. இன்னிக்கு, அவரை போய் பார்க்கணும்.. மதியம் வந்து சாப்பிட்டு போயிடுங்க.. சாவி எடுத்துக்குங்க” என்றாள்.

நீலகண்டன் “எங்க.. எந்த இடம்” என்றான்.

ரஞ்சனி எல்லா விவரமும் சொன்னாள். நீலகண்டன் “எத்தனை மணிக்கு போகணும்” என்றான்.

ரஞ்சனி “பதினோரு மணிக்கு மேல அங்கிள் வர சொன்னார்..” என்றாள்.

நீலகண்டன் “சரி, எப்படி போவ… நான் கடைக்கு போயிட்டு, அரைமணி நேரத்தில் வந்திடுறேன்..ரெடியா இரு” என்றான்.

ரஞ்சனி “இல்ல, பரவாயில்ல.. கால் டாக்ஸில போய்க்கிறேன். அப்படியே வரும் போது என் வீட்டுக்கு போய் வண்டியை எடுத்துட்டு வரேன்” என்றாள்.

நீலகண்டன் பூஜை அறையில் நின்று அவளை திரும்பி பார்த்தான். ரஞ்சனி அடுப்பில் வேலை பார்த்தபடி இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள்.. கணவன் தன்னை முறைப்பதை கவணிக்கவில்லை.. இப்போது கணவன் ஏதும் சொல்லவில்லையே என திரும்ப, அவனின் முறைப்பு பார்வையை பார்த்தவள் “என்ன.. உங்களுக்கு வேலை இருக்கும்ன்னு சொன்னேன்..” என்றாள் அதட்டலாக.. அதே சமயம் சமாளிக்கும் குரலில்.

நீலகண்டன் குங்குமம் எடுத்து கொண்டு வந்தவன் “நான் வரேன்.. உன்னை ட்ராப் பண்றேன்.. வெயிட் செய்து உன்னை கூட்டிட்டும் வரேன்.. என்ன இப்போ உனக்கு“ என்றவன், குங்குமம் வைத்து விட்டான்.. கூடவே முத்தமும் வைத்தான் முன்நெற்றியில்.

ரஞ்சனிக்கு, கணவன் என்ன செய்கிறான் என கண் பார்க்க.. சட்டென அவனின் உதடுகள்.. மீசை முடியோடு நெற்றியில் பட்டதில், அந்த குறுகுறுப்பில் கன்னம் சிவக்க “ஹ..” என அவனிடமிருந்து நகர்ந்தாள்.

“உன்போன்ற இளஞ்சனை..

மனம் ஏற்காமல்.. மறுப்பதே பிழை..

கண்டேன் உன் அலாதி தூய்மையை..

என்கண் பார்த்து பேசும் பேராண்மையை..”

நீலகண்டன் ஏதும் சொல்லாமல் அவளை பார்த்து புன்னகைத்துவிட்டு “சாப்பிடலாமா” என்றான்.

ரஞ்சனியும் சுதாரித்து உணவை எடுத்து வைத்தாள். உண்டு கிளம்பினான். சொன்னது போல அரைமணி நேரத்தில் வீடு வந்தான். 

ரஞ்சனி, கிளம்பி தயாராக இருக்க.. தனது ஸ்பெண்டர் வண்டியில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான். 

காலை பத்துமணி வெய்யில்.. வண்டி அளவான வேகத்தில்தான் சென்றது.. ரஞ்சனி தானே வண்டி எடுத்து சென்றிருக்கிறாள்.. ஆனால், இப்படி பின் அமர்ந்து சென்றதே இல்லை அவள். யாரோடு சென்றாலும் கார்தான். 

இப்போது அந்த வண்டியில் அவளால் சட்டென அமர தெரியவில்லை.. இருபக்கமும் கால் போட்டு அமர்ந்துக் கொண்டாள். என்னமோ தோதாக இல்லைதான் அந்த இருக்கை.. ஆனால், கணவனின் அருகாமையில் எதையும் நினைக்காமல் அமர்ந்தாள் ரஞ்சனி.

நீலகண்டனும், பொறுமையான வேகத்தில் வண்டியை செலுத்தினான். கணவனை அன்றி வேறு பிடிமானம் எங்கிருக்கிறது என தெரியவில்லை.. பெண்ணுக்கு, அதை அவள் தேடவும் இல்லை.. கணவனின் தோள்களைதான் பற்றும் படி இருந்தது. 

சற்று தூரம் சென்றதும் அந்த பிடிமானமும் தேவையாக இருக்கவில்லை மனையாளுக்கு.. இருவருக்கும் இத்தனை நெருக்கம் புதிதாக இருக்க.. என்னமோ ஒரு மௌனத்தில் நகர்ந்தது வண்டி.

சற்று நேரத்தில் நீலகண்டன் “எங்க எந்த கட்..” என்றான்.

ரஞ்சனிக்கு அப்போதுதான் தான் வேலைக்கு செல்ல போறோம் என தோன்ற.. அந்த இடம் பார்த்து.. வழி சொன்னாள் பெண்.

ஒரு வீடு போன்ற அமைப்பில் இருந்தது அந்த அலுவலகம். வேலை செய்துக் கொண்டிருந்தனர் நிறையப்பேர். ரஞ்சனி, வரவேற்பறை சென்று.. விவரம் சொல்லி வந்தாள்.

நீலகண்டன், அங்கிருந்த சேரில் அமர்ந்தாள். ரஞ்சனியும் விவரம் சொல்லிவிட்டு வந்து அமர்த்துக் கொண்டாள். நீலகண்டன் “முன்னமே தெரியுமா இவங்களை.. எப்படி” என விவரம் கேட்டுக் கொண்டிருந்தான்.

ரஞ்சனியும் விவரம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

வரவேற்பில் இருந்த பெண்.. ரஞ்சனியை அழைத்து.. எப்படி செல்லுவது என வழி சொன்னாள். 

நீலகண்டன் “நீ போய்டுவியா, நான் வரணுமா” என்றான்.

ரஞ்சனி புன்னகைத்து “இல்ல, வேண்டாம்.. எனக்குதானே வேலை” என்றவள் “ஆல் தி பெஸ்ட் சொல்லமாட்டீங்களா” என்றாள்.

நீலகண்டன் “ஹ.. ஆல் தி பெஸ்ட்” என்றான் சிரித்துக் கொண்டே எழுந்து நின்று. ரஞ்சனி உள்ளே செல்ல.. நீலகண்டன் போனோடு தன் வண்டியிடம் வந்து நின்றுக் கொண்டான்.

கார்த்திக்கு அழைத்து பேசினான். நீண்டநாள் ஆகிற்று அவனிடம் பேசி.. எனவே பேசினான். கார்த்திக் முடிந்தவரை “என்னை மறந்துட்டீங்க ப்ரோ..” என கலாய்த்து பேசி.. “வீட்டுக்கு எப்போ வரீங்க அம்மா கேட்க சொன்னாங்க..” என்றான்.

நீலகண்டன் “இந்த வீக் எண்டு” என சத்தியம் செய்யவும்தான் அடுத்து பேசினான் கார்த்திக். நீண்ட நேரம் பேசி.. ரஞ்சனி வரவும்தான் போனை வைத்தான் நீலகண்டன்.

ரஞ்சனி “அங்கிள், ஃப்ரைடே நாள் நல்லா இருக்கு.. அன்னிக்கு வேலையில் ஜாயின் செய்ய சொல்லிட்டார்.. உங்களை கேட்டார்.. நான் இன்னொருநாள் இன்ட்ரோ கொடுக்கிறேன்னு சொல்லிட்டேன்..” என்றாள்.. முகம் கொள்ளா புன்னகையோடு.

கணவன் அந்த புன்னகையை பார்த்துக் கொண்டே ஹெல்மெட் அணிந்தான்.. வண்டியை எடுக்காமல் அப்படியே நின்றான்.. ரஞ்சனி கணவனை பார்த்துக் கொண்டே இருந்தவள்.. அவனின் பார்வையில் மாற்றத்தை உணர்ந்து பேச்சை நிறுத்தினாள். 

நீலகண்டனும் “போலாமா” என்றான்.

ரஞ்சனி முகம் விகாசிக்க.. வண்டியில் ஏறி அமர்ந்தாள்.. இந்தமுறை எதோ பழகிய வண்டியாக தோன்றியது.. வண்டி அதே மிதமான வேகத்தில் நகர்ந்தது. 

Advertisement