Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

2௦

திருமணம் முடிந்தது அங்கேயே ஒரு உணவகத்தில் உணவு ஏற்பாடு செய்திருந்தான் நீலகண்டன். காலை நேரம், எனவே, காலை உணவு நடக்க தொடங்கியது. தன் உணவை முடித்துக் கொண்டு குகன் கிளம்பினான். அதிகாலையில் வந்தான் குகன், நேரே ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிக் கொண்டான். 

கார்த்தியை அழைத்து.. கேட்டுக் கொண்டான் முகூர்த்த நேரத்தை, அதற்கு தக்க.. நேரத்தை கணக்கிட்டு.. சரியான நேரத்திற்கு மனையாளோடு வந்து நின்றான் கோவிலில். ‘நீங்கள் கிளம்பிவிட்டீர்களா.. எப்போது வருகிறீர்கள்.. பெண்ணை யார் அழைக்க செல்லுகிறார்கள்..’ என ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை.

நீலகண்டன், அர்ச்சனாவைதான், பெண் அழைக்க செல்ல சொல்லலாம் என எண்ணியிருந்தான். அத்தோடு தங்களின் சார்பாக புடவை.. நகை.. என எல்லாம் வாங்கியிருந்தான் நீலகண்டன். ஆனால், எதையும் சபையில் செய்ய முடியாமல் போகிற்று, நீலகண்டனுக்கு. குகன் வீடு வராததால்.

அன்று, அரசு அவசரமாக நீலகண்டனுக்கு போன் செய்யவும் கிளம்பிவிட்டான். அப்போதே, தன் தம்பிக்கு அழைத்து சொல்ல வேண்டும் என மனம் நினைத்தது. ஆனால், அவசரத்தில் குகனிடம் சொல்ல முடியவில்லை.

ஆனால், அன்று இரவு அழைத்தான் குகனை. தம்பி கோவத்தில் போனை எடுக்கவில்லை. கணவனுக்கு அழைத்ததை பார்த்து, அர்ச்சனா அழைத்தாள், நீலகண்டனை. 

நீலகண்டன், அர்ச்சனாவிடம் மாலையில் நடந்ததை சொன்னான். நாளை, மறுநாள் திருமணம் எனவும் சொன்னான். ஆனால், அர்ச்சனாவிற்கு, இதை எப்படி எடுப்பது என தெரியவில்லை. சரி சரி என கேட்டுக் கொண்டு வைத்துவிட்டாள்.

ஆக, குகனுக்கு இப்படி, தன் மனையாள் மூலமாகத்தான் விஷயம் தெரியும்.. அதில் அவனின் மனது சங்கடமானது.. நான் வேண்டாம் என்று சொல்லியும்.. திருமணத்தை முடிக்க நினைக்கிறார், அதே பெண்ணோடு என எண்ணம் வந்தது தம்பியுள். ஏனோ, பிடித்தம்.. அவா.. இது எல்லாம் அண்ணனுக்கும் இருக்கும் என யோசிக்கவில்லை குகன்.

குகனுக்கு என்னமோ கோவம் தீரவேயில்லை. என்னமோ அண்ணனை தனியாய் யோசிக்க முடியவில்லை. நீலகண்டனின் முடிவு எப்போதும் தம்பியை சார்ந்ததாகவே இருக்கும்.. ஒரு போன் வாங்குவது தொடங்கி, வண்டி கார் வாங்குவது.. கடையை பார்ப்பது எல்லாம் தம்பியை மையப்படுத்திதான் இத்தனை வருடங்கள் இருந்தது.

இன்று இந்த திருமணம் விஷயத்தில் எப்படி.. என்னை மீறி அண்ணன் முடிவெடுத்தான் என கோவம். அத்தோடு, தன் மாமியார் வீட்டில், தன் மீது நம்பிக்கை கொண்டு.. என் அண்ணனனுக்கு பெண் கொடுக்கிறார்கள்.. அந்த நம்பிக்கையை பற்றி அண்ணன் யோசிக்கவேயில்லையே, என்னை பற்றி யோசிக்கவேயில்லையே என மீண்டும் மீண்டும் கோவம் ஆற்றாமை கொள்கிறான் தம்பி. 

அதனால், திருமணம் என்பது அண்ணனை பொறுத்தவரை.. ஒரு கமிட்மென்ட் எனதான் அவனால் யோசிக்க முடிகிறது. அப்படி என்றால் ஏன், நான் சொல்லும் பெண்ணை அண்ணன் திருமணம் செய்யவில்லை.. என கோவம் கொள்கிறான். அதற்கு தக்க.. நீலகண்டனும் எனக்கு ரஞ்சனியை பிடிக்கும் என ஒரு வார்த்தை சொல்லவில்லை.

அதனால், நாளை மறுநாள் திருமணம்.. எனவும், ஏன் இவ்வளவு அவசரம்.. எனக்கு இப்போதுதான் சொல்லுகிறான்.. நான் என்ன செய்ய முடியும்.. என பல கேள்விகள், குகனுக்கு.  முதலில் திருமணத்திற்கே வரமாட்டேன் என்றான்.. அர்ச்சனாவின் பிடிவாதமே.. அண்ணனின் திருமணத்திற்கு வந்தது அவன்.

இரவு, காரில் கிளம்பினான். ஹோட்டலில் அறை எடுத்து தங்கினான். இந்த கோவில் என சொல்லவும் வந்து நின்றான் வாசலில் அவ்வளவுதான்.

நீலகண்டனுக்கு, தம்பி தன்னிடம் ஏதும் பேசவில்லை, கேட்கவில்லை என எண்ணம்.. எப்படியும் வீட்டிற்கு வருவான் என எண்ணம். ஆனால், நீலகண்டன் எதிர்பார்த்த எதுவும் நடக்காமல் போனது. இப்படி ஏற்கனவே இருந்த இடைவெளியை இவர்கள் இன்னும் பெரிதாக்கிக் கொண்டனர்.

திருமணத்திற்கு, தம்பி.. தங்கள் வீட்டிற்கு வரவில்லை.. பெண் அழைக்க தங்கள் வீட்டு சார்ப்பாக, தன் தம்பி செல்லவில்லை எனவும், தான் ரஞ்சனிக்கு செய்ய வேண்டியது எல்லாவாற்றையும் அப்படியே எடுக்காமல் வைத்து விட்டான். புடவை கூட இவன் வாங்கியது இல்லை, ரஞ்சனி தன்னிடம் இருந்த புடவையிலேயே வந்து நின்றாள். இப்படி முழுவதும் அவசர கல்யாணமாக நடந்துவிட்டது.

ரஞ்சனி, நீலகண்டனோடு திருமணம் என்ற எண்ணத்தை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டாள். திருமணம் எப்படி நடக்கிறது.. என அவளால் ஆராய முடியவில்லை.

நீலகண்டன் வீட்டிற்கு வந்து நின்றது.. அதிர்ச்சிதான் ரஞ்சனிக்கு. எந்த வகையிலும் அவனை அங்கே எதிர்பார்க்கவில்லை பெண். அதுவும் தன்னை திருமணம் செய்ய கேட்டு வந்திருக்கிறான் என தெரிந்ததும்.. இன்னும் அதிர்ச்சி. அவளின் கண்கள் நீலகண்டனை தவிர வேறு எங்கும் செல்லவில்லை.. உறைந்து நின்றாள்.

அரசு எல்லோரின் எதிரிலும்.. ‘ஒருவரின் பொருளை’ என பேசவும், நீலகண்டன் ‘என் பொண்டாட்டிய இன்னொருத்தனுக்கு பேசுவ’ என முணுமுணுத்தது அவள் காதில் விழத்தான் செய்தது. அதில், குளிர்ந்து போனாள் பெண்.. என் நினைவு இருக்கிறது என எண்ணம் வந்தது ரஞ்சனிக்கு. ஆனால், மறந்தும் தன்னை பார்த்து சிரிக்கவில்லை நீலகண்டன் எனவும் மனதில் குறித்துக் கொண்டாள்.

பின் அரசு பேசியது.. மற்றவர்கள்  பேசியது எல்லாவற்றையும் பார்த்தவளுக்கு.. முதலில் பயம் இருந்தாலும், அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளில், இது இப்படிதான் இருக்கும்.. என புரிந்தது. நிகழ்காலம் இப்படிதான் என தெரிந்தது. எனவே, மறுத்து பேசி.. ஆர்பாட்டம் செய்யாமல் திருமணத்தை ஆனந்தமாக ஏற்றுக் கொண்டாள்.

“உன்போன்ற இளைஞனை

மனம் ஏற்காமல் 

மறுப்பதே பிழை..

கண்டேன் உன் அலாதி 

தூய்மையை..கண் பார்த்து 

பேசும் பேராண்மையை..”

நீலகண்டனுக்கு, திருமணம் முடிந்ததும், தம்பி உடனேயே கிளம்பியதும் இன்னும் இன்னமும் அவனை நோகச் செய்தது.  

ரஞ்சனியின் வீட்டிலும் மாதவன் வராததும் இன்னும் அவனுள் எதோ செய்தது. 

கண்ணனின் பெரியம்மா, சபையிலேயே.. ரகுவின் அம்மாவிடம் “பெண்ணு மாப்பிள்ளையை நம்ம வீட்டுக்கு கூப்பிடு” என்றார். ரகுவின் பெற்றோரும் மாப்பிள்ளை பெண்ணை வீட்டுக்கு அழைத்தனர். அப்போதே ரஞ்சனி வீட்டார்  எல்லோரும், குகன் இல்லையா என கேட்டனர்.. நீலகண்டனிடம்.

நீலகண்டன்தான் அர்ச்சனா மாசமாக இருக்கிறாள்.. அலைச்சல் ஆகாது என சொல்லி சமாளித்தான். ஆனாலும் ஒரு பேச்சு அங்கே எழத்தான் செய்தது.

நீலகண்டனால், ரஞ்சனியின் வீட்டு அழைப்பை தட்ட முடியவில்லை. அவர்கள்தான் வயதனாவர்கள்.. தான் அழைத்த போது பெண் கேட்க்க என வந்து நின்றவர்கள், அவர்களை மீற முடியாதே. எனவே, நீலகண்டன் ரஞ்சனி தம்பதி. கண்ணன் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

கண்ணன் பெரியம்மா முறையாக எல்லாம் செய்தார்.. பால்பழம் கொடுத்து.. விளக்கேற்றி.. கண்ணனை வணங்க செய்து.. என எல்லாம் செய்ய சொன்னார் மணமக்களை. மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.

நீலகண்டன் சார்ப்பாக அரசுவும், அதியமான் கார்த்திக் என மூவர்தான் இருந்தனர். திருமணத்திற்கு வந்த பெண்கள் எல்லோரும் கிளம்பியிருந்தனர்.

நீலகண்டனுக்கு விருந்தினர் அறையை ஒதுக்கி தந்தனர். நீலகண்டனும் மற்றவர்களும் அங்கே சென்றுவிட்டனர்.

மாதவன் இங்கே இல்லை. ரஞ்சனி எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. மதியம் உண்டு முடித்து.. சற்று நேரம் ஓய்வுக்கு பின் மாலையில் தன்  வீட்டிற்கு.. மனையாளோடும்.. உறவுகளோடு வந்து சேர்ந்தான் நீலகண்டன். 

அங்கேயும் கண்ணனின் பெரியம்மா எல்லாவற்றையும் முறையாக செய்ய சொல்லினார். நேரம் கடந்தது.. மணமக்கள் இருவரும், பெரிதாக கண் நோக்கி காரியம் செய்யவில்லை.. அமைதியாக பெரியவர்கள் சொல்லியபடியே நடந்தனர். நீலகண்டன் எழுந்து தன் வேலையை பார்த்தாலும்.. ரஞ்சனி பெரிதாக அவனை பார்வையால் தொடரவில்லை. பெரிதாக ஆர்பாட்டம் இல்லாமல் நடந்துக் கொண்டனர் மணமக்கள். அமைதியாக சென்றது நேரம்.

எல்லோருக்கும் நீலகண்டன் உணவு வரவழைத்தான். அக்கம் பக்கத்தினர் நால்வர் என மொத்தம் இருபது நபர்கள் உண்டு கிளம்பினர். பின் மணமக்களை தனியே விட்டு எல்லோரும் கிளம்பினர்.

எல்லோரையும் வாசலில் நின்று வழியனுப்பி வைத்த பின்னர்தான் தன்னவள் முகம் பார்த்தான் நீலகண்டன். அவளும் அப்படியே தயங்கியபடியே கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

நீலகண்டன் திரும்பி நடந்தான்.. ரஞ்சனியும் அவனோடு உள்ளே வந்தாள்.. கலைந்து கிடந்த.. யாருமில்லாத அந்த ஹால் இருவரையும் மிரட்டியது. என்ன பேசுவது எப்படி தங்கள் உறவரை ஆரம்பிப்பது என நீலகண்டனுக்கு தெரியவில்லை.. புரியவில்லை.. அப்படியே அமர்ந்துக் கொண்டான். ஏனோ சந்தோஷம் வரவில்லை.. பாரமாக உணர்ந்தான்.. மலையாக தெரிந்தது இந்த திருமணநாளின் தொடக்கம்.

Advertisement