Advertisement

‘இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது கடையின் திறப்பு விழாவிற்கு.. நாளை பேப்பரில் விளம்பரம், நோட்டீஸ் வைக்க வேண்டும்..’ என சொல்லி இருந்தான் நீலகண்டன், தன் தம்பியிடம்.  இன்று  மளிகை சாமான்கள் வந்திறங்கும், அதை ஒழுங்கு செய்ய வேண்டும்..  இப்படி நிறைய வேலையிருக்கு ஏன் லீவ் போடறேன்னு கேள்வி வேற’ என தன் அண்ணனை இடித்துக் கொண்டே குகன் கார் ஓட்டிக் கொண்டிருந்தான்.

குகன், சொன்னது போல சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தனர். மொத்தம் குகனோடு சேர்ந்தது மூன்று நபர்கள்.. நீலகண்டனுக்கும் தெரியும் அவர்களை.. தன் தம்பியோடு ஒன்றாக படித்த, கல்லூரி தோழர்கள்தான்.. இப்போது உதவிக்கு என வந்திருந்தனர்.

நீலகண்டன், கதவை திறக்கவும்.. தன் தம்பியின் நண்பர்களை பார்த்து அதிர்ந்தான், ஆனாலும் ஒன்றும் சொல்லாமல் வரவேற்றான் “சாப்பிட்டு , ரெஸ்ட் எடுங்க.. நான் பத்திரிக்கை ஆபீஸ் வரை போயிட்டு வரேன்..” என்றபடி உடனே கிளம்பிவிட்டான் அண்ணன்.

குகனுக்கு, அண்ணன் அப்படி வெளியே சென்றதே போதுமானதாக இருந்தது. அண்ணன் இருந்தால்.. அமைதியாக இருக்கும் வீடு. அது என்னமோ அப்படிதான்.. என்ன பேசுவது என இருவருக்கும் தெரியாது. தம்பியின் நண்பர்களும் கொஞ்சம் தயங்குவார்கள். எனவே, அண்ணன் வெளியே போனது கொஞ்சம் ரிலாக்ஸ்சாக இருந்தது குகனுக்கு.

குளித்து, நண்பர்கள் மூவரும் பேசியபடியே உண்டு.. பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு.. தாங்கள் வந்த காரில் கடைக்கு சென்றனர்.

நீலகண்டன், தான் வருவதற்கு அரை மணி நேரமாகும் என சொல்லிதான், கடைக்கு செல்லும் வழியை சொன்னான். 

ஆனாலும் குகன், “நீ வா.. நாங்க சும்மா பார்க்கத்தானே போறோம்” என மழுப்பிவிட்டு சென்றனர்.

நீலகண்டனிடம்தான் கடையின் சாவி இருந்தது.

குகன், வந்து சேர்ந்துவிட்டான் கடைக்கு. அண்ணன் சொன்ன வழியை பற்றிக் கொண்டு வந்து சேர்ந்தான். கடையை இதுவரை அவன் பார்த்ததேயில்லை.. இப்போது வெளி தோற்றமே பெரிதாக இருந்தது.

ஹை-பையாக இருந்தது அந்த இடம்.. கடையின் முன்புறம் வண்டி நிறுத்துவதற்கு இடம்.. ஆறு ஏழு படிகள் ஏற.. முன்புறம் ஸ்நாக்ஸ் ஸ்டால் போடும் அளவிற்கு இடம்.. பின் பெரிய கடை.. என முகப்பு தோற்றம் அழகாக இருந்தது.

குகன், கண்ணில் நீரோடு நிமிர்ந்து கடையை பார்த்துக் கொண்டே நின்றான் சிறிது நேரம். அவனின் நண்பர்களுக்கும் தெரியுமே அவன் நிலை.. எனவே, தொந்திரவு செய்யாமல்.. எதிர் கடைக்கு போய்.. இரண்டு கடலை மிட்டாய் வாங்கிக் கொண்டு.. சற்று தூரம் சென்று கொறித்துக் கொண்டே நின்றனர்.

சற்று நேரம் சென்று குகன் வந்து சேர்ந்தான்.

நீலகண்டன் வந்தான்.. அதன்பின் கடையின் பெயர் பலகை வந்தது.. மாலையில் சரக்கு வந்து இறங்கியது. இப்படி ஒவ்வொன்றாக வர வர.. வேலை நடந்துக் கொண்டே இருந்தது.

குகனும் நண்பர்களும் பொருட்களை எடுக்க அடுக்க.. என வேலையில் இருந்தனர்.

எட்டு மணிக்கு மேல்.. பெயர் பலகையை ஆட்கள் கொண்டு சரியான இடத்தில் வைத்தனர். நீலகண்டனும் குகனும் நின்று பார்த்தனர்.. பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அது.. எதிரில் இருந்த அதியமான் கண்ணில் பட்டது “வாகை பல்பொருள் அங்காடி..” என. தமிழிலும் ஆங்கிலத்திலும் மின்ன.. அதியமானுக்கு இப்போது இன்னும் நெருங்கி நின்றது.. அதவாது தன்னுடைய சந்தேகம் தீரும் என்ற எண்ணம். 

நீலகண்டனின் முகம் இப்போது நினைவு வந்தது ஆக, அவன் பசங்களா என்ற எண்ணம் உடனே எழுந்தது.. யோசிக்கவே இல்லை.. ஓட்டமும் நடையுமாக தன் கடையிலிருந்து கிளம்பிவிட்டார் மனிதர். 

ஆனால், வெளியே நின்றிருந்த நீலகண்டனின் தோற்றம் இப்போது கண்ணில் தெரிய.. அமைதியாக தயக்கமாக அங்கேயே நின்றுக் கொண்டார், அதியமான்.

இப்போது அதியமானிடம் வேலை செய்யும் ஆட்கள் “அண்ணாச்சி பில் எவ்வளோ ஆகுதுன்னு பாருங்க..” என சொல்ல, அமைதியாக வேலையை பார்க்க சென்றார்.

ஆனாலும் கடையையே பார்த்துக் கொண்டிருந்தார், அவ்வபோது.

கூட்டம் குறைந்தது.. நேரமும் எப்போதும் கடை அடைக்கும் நேரம். எனவே, அதியமான் எப்போதும் போல கிளம்பினார்.

இப்போது, கடையின் உள்ளே வேலை செய்துக் கொண்டிருந்த அந்த மூவரும் வெளியே வந்தனர்.. உண்பதற்காக.

அதியமான் அவர்களை எதோ வேலையாட்கள் என எண்ணிக் கொண்டு “தம்பிகளா எப்போ ஓபன்” என்றார், தன் வண்டியை நகர்த்திக் கொண்டே.

குகன் “நாளை மறுநாளங்க.. வருவோம் கூப்பிட.. கண்டிப்பா வரணும்..” என்றான்.

அதியமான் மனதில் ‘க்கும்.. யாரு அவனா..’ என எண்ணிக் கொண்டு, சின்ன குரலில் “ம்.. உங்க முதலாளி எந்த ஊர்” என்றார்.  

குகன், இந்த வார்த்தையில் உச்சி குளிந்தான். ஏனென்றால் இவனும்தானே முதலாளி. அத்தோடு ‘இந்த முதலாளி என்ற வார்த்தை இதுவரை.. தாங்கள்தான் மற்றவர்களை பார்த்து சொல்லியிருக்கிறோம்.. இப்போது இவர் எங்களை பார்த்து.. இல்லையே, வேறு யாரையோ பார்க்கிறார் போலவே’ என எண்ணி “யாரு..” என்றான் யோசனையான குரலில்.

இப்போது வண்டியை பார்த்தவாறே நின்ற அதியமான் லேசாக திரும்பி “அதான் அந்த ட்ராயர்.. போட்டிருப்பாரே, ஓ, இன்னிக்கு பேன்ட் போட்டிருக்காரே அவர், அந்த சிகப்பு சட்டை போட்டிருக்காரில்ல அவர்தான் எந்த ஊரு” என்றார் இப்போதும் அதே சின்ன குரலில்.

குகனுக்கு யோசனை வந்தது “ஏன் இதே ஊருதான்.. இது எங்க ஊரு, நீங்க எந்த ஊரு” என்றான் ரைமிங்காக.

அதியமான் முறைத்தார்.. “நானும் இதே ஊருதான்.. ஆனா, இதுவரை நான் உங்களை பார்த்ததே இல்லை.. ஆமாம், அந்த வாகை ‘ன்னா என்ன.. யாரு” என்றார் ஆர்வமாக.

குகன் “ஏன்.. சர் கேட்க்குறீங்க.. எங்க கடை பேரு..” என்றான். ஓய்ந்தே போனார் பெரியவர் இந்த சின்ன பசங்களிடம் பேசவே முடியவில்லை என எண்ணிக் கொண்டார்.

அதியமானுக்கு ஆர்வம் தாங்கவில்லை தானே “வாகைசூடன்னு எனக்கு ஒரு ப்ரெண்ட் இருந்தான்” என சொல்லி முடிக்கவில்லை.

குகன் “எங்க இருந்தார்” என்றான் தெளிவாக்கிக் கொள்ள எண்ணி.

அதியமான் மீண்டும் ஓய்ந்து போனார் “இங்கதான்.. நீங்க கடை போட்டிருக்க இடத்தில்தான் இருந்தார்.. அப்படியே உ..” என சொல்லி முடிக்கவில்லை.

மீண்டும் குகன் “என்னது எங்க அப்பா உங்க ப்ரெண்டா.. எங்க அப்பா பேரு வாகைசூடன் எங்க அம்மா பேரு வள்ளி.. எங்க அண்ணன் பேரு நீலகண்டன், என் பேரு குகன்.. எங்களை தெரியுமா உங்களுக்கு..” என்றவன் பின்னே திரும்பி “நீலா.. அண்ணா…” என அழைத்தான். மொழி புரியா நாட்டில், தாய் மொழியில் பேசும் ஆட்களை பார்த்ததும் வருமே ஒரு ஆனந்தம்.. அந்த ஆனந்தம் இப்போது குகனிடம்.

இப்போது அதியமான் வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்தினார்.. பொறுமையான குரலில் “நினைச்சேன்.. உங்க அண்ணனா அவரு.. அவரை பார்க்கும் போதே எங்கையோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்..” என சொல்லிக் கொண்டிருந்தார்.

பின் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.. குகனுக்கு அவர் பெயரை கேட்கவும் “அங்கிள் நீங்க அதியமான் அங்கிளா… உங்களை பத்தி அம்மா சொல்லி இருக்காங்க.. அண்ணனுக்கு தெரியும்.. “ என்றான்.

நீலகண்டனும் இப்போது வந்தான். குகன் “அண்ணா, இது அதியமான் அங்கிளாம்.. உனக்கு ஞாபகம் இருக்கா” என்றான்.

நீலகண்டனுக்கு  உடம்பெல்லாம் ஒரு நிமிடம் ஆடி போனது.. முதல்முறை, தங்களை தெரிந்த மனிதர்களை பார்க்கும் ஆனந்தத்தில் ஆடிபோனான். வார்த்தை வரவில்லை  “ம்.. அம்மா சொல்லியிருக்காங்க, எங்களை ஞாபகம் இருக்கா அங்கிள்.. வாகைசூடன் பசங்க..” என்றான்.

அதியமானுக்கு இப்போது என்ன சொல்லுவது என தெரியவில்லை.. அப்படியே உசரமாக நிற்கும் நீலகண்டன், தன் நண்பனை போலவே இருந்தான்.. பொறுமையாக அதியமான் “அம்மா எப்படி இருக்காங்க” என்றார்.

குகன் “அம்மா தவறி ஐந்து வருஷம் ஆகுது, நாங்க மட்டும்தான். இந்த.. அப்பாவோட இடம் எங்க அடையாளம்ன்னு இங்க இப்போதான் வரோம்.. நான் சென்னையில் IT வேலை பார்க்கிறேன்.. அண்ணன்தான் முழு இன்சார்ஜ்.. நீங்க வாங்க கடையை பாருங்க.. வாங்க அங்கிள்..” என்றான் பரபரப்பாக.

அப்படி எளிதாக பேசக் கூடியவன் இல்லை நீலகண்டன், எப்போதும் போல கைகட்டிக் கொண்டு சற்று நகர்ந்து நின்றான். 

அதியமான், நீலகண்டனை பார்த்தார்.. அது என்ன பார்வை என உசந்தவனுக்கு புரிந்தது போல “சர், வாங்க.. எனக்கு, முன்னாடி யாருன்னு தெரியலை.. வாங்க சர்.. வாங்க” என கொஞ்சம் இளகிய முகத்தோடு அழைத்தான்.

குகன் “அட வாங்க அங்கிள்..” என கைபிடித்தேவிட்டான்.

அதியமான் சிரித்தார் “நீ உங்க அப்பா மாதிரியே இருக்க..” என்றார், இளையவனை பார்த்து. ம்.. வாகைசூடனின் கலகலப்பு குணம் கண்டு சொன்னார் பெரியவர்.

குகன் “அப்படியா, அப்பா பத்தி சொல்லுங்க அங்கிள்.. எங்களுக்கு அவ்வளவாக தெரியாது அவரை பத்தி. வாங்க” என பேசிக் கொண்டே கடைக்கு அழைத்து சென்றான்.

நீலன் தனியே நின்றான்.. செல்லும் அவர்களை பார்த்துக் கொண்டே நின்றான். 

Advertisement