Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

2

நீலகண்டனும் படித்தான், அஹா ஓஹோ என இல்லாவிட்டாலும்.. தங்களின் நிலை உணர்ந்து படித்தான். பள்ளி படிப்பின் இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண்களோடு தேறினான்.

மேலும், என்ன படித்தால் தனக்கு உடனே வேலை கிடைக்கும் என தெரிந்திருந்தான் அந்த வயதில்.. முட்டி மோதி இஞ்சினியரிங் சேர்ந்துவிட்டான்.

அதன்பின் அவன் வாழக்கை தரம் கொஞ்சம் மாறிற்று. கல்லூரி இரண்டாம் வருடம் முதல்.. பலவகையில் வருமானம் வருமாறு செய்துக் கொண்டான். 

அதிகாலையில் பால் லோடு எடுக்க சென்றான்.. மாலையில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்க்கு வேலைக்கு சென்றான்.. விடுமுறை நாட்களில், கால் டாக்ஸி ஓட்டினான்.. வெளியூர் பயணம் சென்றான். இப்படி உடனே பணம் வரும் வழிகள் பல அறிந்தான். தன் தம்பியின் துணைக் கொண்டு.. எல்லாவற்றையும் செய்தான். வீட்டின் கஷ்ட்ட ஜீவனம்  கொஞ்சம் மாறியது, மிச்சம் பிடிக்கலாம் என்ற நிலையம் வந்தது.

அப்போதுதான் கேஸ் இறுதி கட்டத்தை எட்டியது. கோர்ட்டில், இவர்களின் பக்கம் தீர்ப்பாகும் எனவும்.. கடன் கொடுத்தவர்கள்  மிரட்ட.. தொடங்கினர்.

ம்.. கோர்ட்டில் நீலகண்டன் பக்கம் தீர்ப்பு என்ற வகையில் வழக்கு நடந்தது.. எனவே, கடன் கொடுத்தவர்களுக்கு, தொகையின் அளவு குறைந்தது. எனவே மத்தியஸ்தத்திற்கு அழைத்தனர்.. மறுக்கவும் மிரட்டினர் ‘எப்படி நீ பிழைக்கிறேன்னு பார்க்கிறேன்’ எனத்தான்.

வக்கீலும் கொஞ்சம் சுதாரித்து.. நீலகண்டனிடம் பேசினார் ‘இப்போது நீ மேஜர்.. அதனால், முதலில் கேஸ்சின் மத்யஸ்தத்திற்கு ஒத்துக் கொள்.. அந்த பெரிய இடம்.. இப்போது அவர்களின் கடனை அடைக்கும் அதை விற்று விடு.. உன் வீட்டை காப்பாற்றிக் கொள்..’ என எல்லா வகையிலும் கடன் தந்தவர்களிடம் பேசி.. நீலகண்டனுக்கு சாதகமாக இந்த வீட்டை மட்டும் மீட்டு தந்தார்.. மற்ற எல்லாவற்றையும் இழந்து. வேறு வழியும் இருக்கவில்லை.. சொத்துகளை தக்க வைக்க.. மகன் வளர்ந்து வர வேண்டி இருந்தது. சொத்தின் மதிப்பும் வளர்ந்தது. எனவே கணிசமான தொகை.. கையில் நிற்கவும் நீலகண்டனிடம் யோசனை சொல்லி.. சம்பந்த்பட்டவர்களிடம் பேசி எல்லாம் செய்துக் கொடுத்தார் வக்கீல்.

வள்ளியம்மைக்கு, அந்த வீட்டை மீட்டது அவ்வளவு நிம்மதி. நன்றி நன்றி என புலம்பிக் கொண்டே இருந்தார் அந்த வக்கீலை பார்க்கும் போதெல்லாம். வேறு என்ன செய்வது.. என்ன சொல்லுவது.. என தெரியவில்லை அப்போது வள்ளிக்கு. நன்றி மறக்கவில்லை வள்ளி. பசங்களும் வக்கீல் சொல் போச்சுக்கு மறுபேச்சு பேசாதவர்களாகத்தான் இருந்தனர். 

படிப்பு முடித்து வேலையில் சேர்ந்தான் நீலகண்டன். மாத வருமானம் என கணிசமான தொகை வந்தது. தம்பி அப்போது இஞ்சினியரிங்  இரண்டாம் வருடம்.

வள்ளிக்கு உடல்நிலை முடியாமல் போனது.. ஒருவருடம் அன்னைக்கு மருத்துவ செலவு செய்தான். பின் அன்னையும் அவர்களை விட்டு பிரிந்தார்.

அப்போதுதான் சொந்தத்திற்கு சொல்ல வேண்டும் என வக்கீல் சொல்ல.. நீலகண்டன் ‘யார் சொந்தம்.. எதுக்கு சொல்லணும்’ என கோவம் கொண்டான். அதிலிருந்து இப்போதுவரை அதே கோவம்தான் அவனுக்கு.

அங்கேயே தன் அம்மாவின் காரியங்களை செய்தனர் பிள்ளைகள் இருவரும். அடுத்து, தனியான வாழ்க்கைதான் அண்ணன் தம்பி இருவருக்கும்.. நீலகண்டன் எப்போதும் வீட்டில் கூட.. தம்பி அம்மாவோடு.. பெரிதாக அமர்ந்து பேசி அறியாதவன். உண்பதற்காவது அன்னையிடம் பேசுபவன்.. இப்போது அந்த பேச்சும் இல்லை. மிகவும் தனியானான். நண்பர்கள் என யாரையும் அவன் நாடியதில்லை. உறவுகள் வேண்டாம்.. தெரிந்தவர்கள் என நாலு நபர்கள் மட்டுமே. அப்படியே இப்போது வரை வாழ்கிறான்.

ஆறு வருடம் வேலை பார்த்தான்.. அதில் சேர்த்த வருமானம் முழுவதையும் இந்த கடைக்கு என செலவு செய்கிறான். கடனும் வாங்கி இருக்கிறான். அந்த IT வேலையை இப்போதும் செய்கிறான். ஆக, உழைப்பு, உழைப்பு உழைப்பு அதை தவிர வேறு ஏதும் தெரியாது அவனுக்கு.

ஒரு சினிமா.. பாட்டு.. விளையாட்டு.. என எதுவும் தெரியாது. அஹ.. ஒன்று தெரியும் சமையல்.. நன்றாக சமைப்பான் நீலகண்டன். நன்றாக வகை வகையாக சமைப்பான். வேலைக்கு சேர்ந்த புதிதில் எதோ ஹோட்டலில் கொஞ்ச நாட்கள் பணியாற்றிய அனுபவம் உண்டு.. அதனால் செய்வான்.

இன்று..

விடியற்காலையில்தான் நீலகண்டன் தன் வீட்டிற்கு வந்தான். இங்கே தனியாக ஒரு அப்பார்ட்மென்ட் வாடகைக்கு எடுத்திருக்கிறான். முதலில், இந்த பெரிய பாழடைந்த வீட்டை எடுத்து கட்டலாம் என எண்ணினான்.

ஆனால், ‘வருமானம் வருமா’ என யோசனை வந்தது. அத்தோடு அம்மாவும் இல்லை.. எதுக்கு வீடு.. என்ன இருக்கு அங்கே.. எனவும் ஒரு சலிப்பு. எனவே வருமானம் வரக்கூடிய வகையில் ஒரு தொழில் என எண்ணி இந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் என அண்ணன் தம்பி இருவரும் முடிவு செய்தனர்.

ம்.. தம்பியும் உறுதியாக சொன்னான் ‘அப்பா பெயரை அங்கே மீண்டும் காட்டனும்’ என அழுத்தி சொன்னான். அந்த எண்ணம் நீலகண்டனுக்கும் உண்டு, என்பதால் இருவரும் பேசி முடிவெடுத்தனர்.

குகன், ‘ஒரு வீடு வாங்கலாம்’ என்றான். அண்ணன்தான் முழு நேரமும் அந்த கடையை பார்ப்பது தங்களின் ஊருக்கே செல்லுவது என முடிவெடுத்த பின் குகன் அப்படிதான் சொன்னான்.

ஆனால், நீலகண்டன் ஒத்துக் கொள்ளவில்லை.. சொந்தமாக வீடு வாங்கிவிடலாம்தான்,  அதற்கும் முதலீடு செய்ய வேண்டும்.. அதனால், முதலீடு கடைக்கு குறையும்.. இந்த அளவில் பெரிய கடை என்பது கொஞ்ச காலம் எடுக்கும் என யோசித்தவன்.. மறுத்துவிட்டான்.

தனது எல்லா முதலீடுகளையும் கடையில் போட்டான்.. கொஞ்சம் கடனும் வாங்கி இருக்கிறான்.. அத்தோடு இன்னமும் தான் வேலை செய்துக் கொண்டுதானே இருக்கிறான்.. சில வருடம் சமாளிக்கலாம்.. என எண்ணினான்.

நீலகண்டனை பொறுத்தவரை இது அகலக்கால்.. ஆனால், ஒரு வெறி.. அது ஒரு வைராக்கியம்.. அது என்னவென அவர்களுக்கு மட்டுமே தெரியும். இது இப்படி என எல்லாவாற்றையும் சொல்லிவிட்டால்… அந்த வெறி அடங்கிவிடுமே.. அதனாலோ, என்னமோ ஓடிக் கொண்டே இருப்பான். தன் தம்பியையும் சேர்த்துக் கொண்டு.. 

இப்போது வீட்டிற்கு வந்தான், மணி அதிகாலை நான்கு. வரும் போதே பால் பாக்கெட் வாங்கிக் கொண்டு வந்தான். மொத்தம் ஐந்து மாடி கட்டிடம், இந்த அபார்ட்மென்ட். இவன்  இரண்டாம் தளத்தில் இருக்கிறான். இந்த தளத்தில் நான்கு வீடுகள்.. மற்ற எல்லா தளத்திலும் இரண்டு மூன்று என பெட்ரூம் வசதிகளை கொண்ட வீடுகள் உள்ளது.

குளிப்பதற்கு எதுவாக ஹீட்டர் ஆன் செய்து வந்து அமர்ந்தான். மனது ஒருவித நிறைவில் இருக்கிறது.. ஆனாலும் அம்மா இல்லையே என்ற வருத்தம் எதோ ஒரு மூலையில் அவனுள் இருக்கிறது. அதையெல்லாம் அவன் காட்டமாட்டான்.

இப்போது தனியே அமரவும்..”அம்மா..” என சத்தமாக அழைத்தான். எதோ இவன் அழைத்ததும் கிட்சனிலிருந்து வந்து ‘என்ன பா’ என கேட்டுவிடுவார் போல.. அப்படி சத்தமாக அழைத்தான் ஏனென்று தெரியவில்லை அழைத்தான். தன்னிலை மறந்திருந்தான் போல.. அழைத்துவிட்டான். ஒரு நொடி சென்று உண்மை உரைக்க.. அமைதியாக அமர்ந்துக் கொண்டான்.

ஹாலில் சின்ன சோபா ஒன்று வாங்கி போட்டிருக்கிறான் இப்போதுதான். அதில் அமர்ந்தான். வயிறு பசித்தது.. இரவோடு இரவாக இரண்டு நாளாக இந்த செல்ப் முறைப்படுத்தும் வேலை சரியாக இருந்தது அவனுக்கு. கடையில்தான் வாங்கி உண்டான் நேற்று.. எனவே உறக்கம் சாப்பாடு சரியாக இல்லை.. ஓய்வுக்காக ஏங்கியது அவனது உடல். இதில் அம்மாவின் நினைப்பும் சேர்ந்து கொள்ள.. அமர்ந்தான், சற்று நேரம்.

பின், பால் அடுப்பில் வைத்துவிட்டு.. குளித்து வந்தான். பால் பொங்கியது.. அவல் எடுத்து நீரில் அலசி.. பால் ஊற்றி சர்க்கரை போட்டு எடுத்துக் கொண்டான்.. கொஞ்சம் காபி கலந்துக் கொண்டான். உண்டு காபி குடித்து.. அப்படியே கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான். கண் மூடினானா அதுவாக மூடிக் கொண்டதா தெரியவில்லை.. உறங்கிவிட்டான்.

காலை எட்டு மணிக்கு மேல்.. அவனின் போன் ஒலித்து அவனின் உறக்கத்தை கெடுத்தது.. குகன் அழைத்திருக்கிறான்.. நீலகண்டன் “ஹலோ” என்றான் அழைப்பை ஏற்று.

குகன் “அண்ணா.. வீட்டு லொக்கேஷன் ஷேர் பண்ணு” என்றான்.

தூக்கத்தில் “எதுக்கு” என்றான்.

குகன் “நானும் என் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் வந்துகிட்டு இருக்கோம்.. இப்போது அரை மணி நேரத்தில் வந்திடுவோம்.. ஷேர் பண்ணு அண்ணா” என்றான்.

நீலகண்டன் “டேய் ஏண்டா சொல்லவேயில்ல.. இப்போது எதுக்கு லீவ் எடுக்கற..” என பேச பேச போனை வைத்துவிட்டான் குகன்.

அண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.. ‘சொன்னா கேட்காது.. அலைச்சல்தான்’ என திட்டிக் கொண்டே.. தம்பி, கேட்டபடி அனுப்பிவிட்டு எழுந்துக் கொண்டான். 

சமைக்க தொடங்கினான் நீலகண்டன்.

Advertisement