Advertisement

நீ என் காதல் புன்னகை -18(2)

அத்தியாயம் -18(2)

“உங்களை பத்திரமா அவளை அவ வீட்ல விட்டுட்டுதானே வர சொன்னேன், தனியா அனுப்பி வச்சீங்களா அவளை?” கோவமாக கேட்டான் உதய்.

“தெரிஞ்ச ஆட்டோலதான் அனுப்பி வச்சேன்” என்றார்.

மறுபடியும் கவலையாக நேரத்தை பார்த்த உதய் உடனடியாக சிவாவுக்கு அழைத்தான்.

அவன் அழைப்பை ஏற்றதுமே, “இன்னும் பத்து நிமிஷத்துல பூவை அவ அம்மா வீட்டுக்கு வந்திருப்பா, பத்திரமா வந்திட்டாளான்னு பார்த்து சொல்லு” என்றான்.

“அது நீயே கேட்டுக்க வேண்டியதுதானே? ஆமாம்… இந்த நேரம் பூவை ஏன் இங்க வருது?” எதிர்கேள்வி கேட்டான் சிவா.

“கடுப்புல இருக்கேன், சொன்னதை மட்டும் செய்டா தடிமாடு” என்றான் உதய்.

“அட தடி தாண்டவராயா! என் தங்கச்சிகிட்ட திருப்பியும் சண்டை போட்டியா? வீட்டை விட்டு வர்ற அளவுக்கு என்னத்தடா பண்ணி தொலைச்ச பரதேசி? டேய்! இந்த முறை நேர்ல வந்து நிஜமா உன் சட்டையை பிடிக்க போறேன்டா” என்றான் சிவா.

“ஆமாம் எங்களுக்கு சண்டைதான், ஏன் சண்டைனு ரீசன் சொல்லவா?”

“சொல்லுடா மவனே, எப்படியும் என் தங்கச்சி மேல தப்பிருக்காது. என்ன பேசி தொலைச்சியோ, உன் தாடைய பேத்து எடுக்கிறேன்”

“ஷியாமிக்கு அங்க பாவேந்தன் மாமா மாப்ள பார்த்து வச்சுருந்தார். ரொம்ப நல்ல இடம், இவ என்னடான்னா அந்த பையன் வேணாம், நானே மாப்ள பார்த்து வச்சிருக்கேன்னு சொல்றா. நான் முடியாது, மாமா பார்த்த பையன்தான் எனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னேன், இதை வச்சு எங்களுக்குள்ள சண்டை ஆகிட்டு. அதான் ஷியாமி கல்யாணம் முடிஞ்சதும் வாடின்னு உன் தங்கச்சிய அங்க அனுப்பி வச்சிட்டேன்” என்றான் உதய்.

“டேய்…”

“ஷியாமி கல்யாண வேலையெல்லாம் நீதான் முன்னாடி நின்னு செய்யணும். அம்மா வந்திட்டாங்கதானே, அங்க திருச்சில உனக்கும் ஒரு பொண்ணு பார்த்து வச்சிருக்கேன். நாளைக்கு வந்து நேர்ல பேசுறேன்” என்றான் உதய்.

“டேய்!”

“என்னடா டேய் டேய் னா என்ன அர்த்தம்? போய் பூவை வந்திட்டாளான்னு பார்த்து சொல்லு. என் தாடையை பேப்பியா நீ? நாளைக்கு நேர்ல பார்க்கும் போது உன் கழுத்தெலும்பை முறிச்சு விடுறேன் நான்” என கோவமாக சொல்லி வைத்து விட்டான் உதய்.

உதய் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நாதன், “ரொம்ப அக்கறைடா உனக்கு? அங்கேர்ந்து வந்தப்பவே கோவமா வந்துச்சே பூவை. இதான் காரணமா? பூவை யாரை மாப்ள பார்த்து வச்சிருக்கு, அப்படியே பார்த்தாதான் என்ன? பூவைக்கும் எல்லா உரிமையும் இருக்கே, நீ ஏன் இதுக்கு கோவ படுற?” எனக் கேட்டார்.

“ஷியாமிக்கு பரீட்சை முடியட்டும், அவளுக்கும் இருக்கு” உறுமினான் உதய்.

“என் பொண்ணை ஏன்டா இழுக்குற? அவளுக்கு ஒண்ணும் தெரியாது”

“ப்பா ஷியாமியும் சிவாவும் விரும்புறாங்க, அதை பத்தி பேசப் போய்த்தான் எங்களுக்குள்ள சண்டை. இங்க வந்தா மோதிரத்தை வச்சு மொத்தமா முடிச்சு விட்டுட்டீங்க நீங்க” என்றான்.

முதலில் திகைத்த நாதன் பின் பாவமாக பார்க்க, “டென்சன் ஆகாதீங்க. சிவா என் ஃப்ரெண்ட்ங்கிறதுக்காக சொல்லலை, ரொம்ப நல்லவன். அவனுக்கே ஷியாமியை கொடுக்கலாம்” என்றான் உதய்.

“பூவை வீட்ல இல்லாம எப்படி டா?”

“ரெண்டு நாள்ல அவளை நானே போய் கூட்டிட்டு வர்றேன்.ஷியாமி கல்யாணத்துக்குன்னா என் மேல என்ன கோவமிருந்தாலும் கண்டிப்பா வருவா. நீங்க சாப்பிட்டு போய் தூங்குங்க” என்றான்.

“நீயும் வாடா”

“கண்டிப்பா சாப்பிடுறேன் ப்பா. கொஞ்ச நேரம் ஆகட்டும். ப்ளீஸ் நீங்களும் புரிஞ்சுக்காம தொந்தரவு செய்யாதீங்க” என உதய் சொல்ல, எப்படியும் மருமகள் வந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் சாப்பிட்டு படுத்து விட்டார் நாதன்.

உதய் அவனது அறையில் அமைதி இழந்து நடை போட்டு கொண்டிருந்தான். கண் முன்னால் இருக்கும் பிரச்சனைகள் இடியாப்ப சிக்கலை விட அதிக சிக்கலாகியிருப்பது நன்றாகவே தெரிந்தது. எதை சொல்லி எதை விட்டு எல்லாவற்றையும் எப்படி தீர்ப்பது என குழம்பிக் கொண்டிருந்தான்.

ஆட்டோவிலிருந்து இறங்கிய பூவை அழுகையை அடக்கிக் கொண்டே அபார்ட்மென்ட் வளாகத்தின் உள்ளே நடக்க ஆரம்பித்தாள். லிஃப்ட் ஏற மனமோ கசந்தும் வெறுத்தும் கிடந்தது. தோள்கள் இரண்டிலும் மூட்டை மூட்டையாக சுமை சேர்ந்தது போல பாரமாக உணர்ந்தவள் எந்திரத் தனமாக நடந்து வீட்டை அடைந்தாள்.

திடீரென வந்து நிற்கும் மகளை பார்த்து புவனா அதிர அவளுக்கு முன் அங்கு காத்திருந்தான் சிவா. அவனை பார்த்து முறைத்து விட்டு சோபாவில் தொப் என அமர்ந்தாள் பூவை. அங்கேயே அமர்ந்து கைபேசியின் மூலம் பூவை வந்துவிட்டதாக குறுந்தகவல் அனுப்பி வைத்தான் சிவா.

“என்ன உங்க ஸ்பை வேலை முடிஞ்சுதா?” சிவாவிடம் கோவமாக கேட்டாள் பூவை.

சிவா பாவமாக பார்க்க, “வந்ததும் வராததும் ஏன் டி அந்த தம்பிகிட்ட கோவ படுற?” எனக் கேட்டார் புவனா. பேசும் சத்தம் கேட்டு ஜெயந்தனும் ஹால் வந்து விட்டான்.

“என்ன நடந்துச்சு பூவை? என்னால உங்களுக்குள்ள சண்டையா?” எனக் கேட்டான் சிவா.

“என்ன சண்டையோ அண்ணா… உங்க ஃப்ரெண்ட் என்னை வீட்டை விட்டு போக சொல்லிட்டார். அம்மா வீடு இருந்ததால இங்க வந்தேன், இல்லன்னா ரோட்ல நிறுத்தியிருப்பாரா என்னை? திருச்சில அவ்ளோ கோவமா கிளம்பினப்ப நல்லவன் மாதிரி என்னை மல்லுகட்டி அவரோடவே அழைச்சிட்டு வந்து, நியாயமா நான் கேள்வி கேட்டதும் ராத்திரி நேரம்னு கூட பார்க்காம போ ன்னு சொல்லிட்டார்” என்ற பூவை வேதனை தாள முடியாமல் அருகில் நின்றிருந்த அம்மாவின் இடையை கட்டிக் கொண்டு அழுதாள்.

மகளை அரவணைத்துக் கொண்ட புவனாவும் கண்ணீர் விட ஜெயந்தன் செய்வதறியாமல் இயலாமையோடு நின்றிருந்தான்.

“என்ன தம்பி இது? இப்படி நிராதரவா இவளை விடலாமா மாப்ள?” என சிவாவிடம் கேட்டார் புவனா.

“எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரியல, ஆனா அவன் கண்டிப்பா பூவையை விட்டுட்டான்னு சொல்றதை என்னால ஏத்துக்க முடியாது, பூவை மேல என்ன கோவம் இருந்தாலும் எப்பவும் அவனோட மனைவியை அவன் விட்டதே கிடையாது” என்றான் சிவா.

அழுகையை நிறுத்தி கோவமாக சிவாவை பார்த்த பூவை, “உங்க உயிர் நண்பர்னா விட்டு கொடுக்காம பேசுறதுக்கும் ஒரு அளவு இருக்கு, என்ன என்னை விட்டு கொடுக்கல அவர்? எல்லாம் தெரிஞ்ச மாதிரி நீங்களா எதையாவது அடிச்சு விடாதீங்க” என சீறினாள்.

“அடிச்செல்லாம் விடலை பூவை, நான் உண்மையைதான் சொல்றேன்”

“உண்மையா? சொல்லுங்களேன், நானும் தெரிஞ்சுக்கிறேன் அந்த பயங்கரமான உண்மையை” இளக்காரமாக கேட்டாள் பூவை.

“இப்ப நீ இருக்கிற இந்த வீடு அவன் வீடு” என சிவா சொல்ல மற்ற மூவரும் அதிர்ந்து பார்த்தனர்.

“ஆமாம், அவன் அப்பா அவனுக்கு கொடுத்தது. வாடகைக்கு விட்ருந்தாங்க. நீ ஹாஸ்டலுக்கு போன அடுத்த நாளே இந்த வீட்டை காலி பண்ணி எப்படியாவது உன்னை இங்க குடி வைக்க சொன்னான். எந்த புரோக்கர் சொல்லியும் நான் உன்னை தேடி வரலை. அவன் சொல்லித்தான் வந்தேன்”

“இங்க ஏற்கனவே இருந்த டெனன்ட்க்கு உடனே அட்வான்ஸ் கொடுத்து கடைசி மாத வாடகை வேணாம்னு சொல்லி அவங்ககிட்ட ரிக்வஸ்ட் பண்ணி காலி செய்ய வச்சான். அவங்களுக்கு வேற வீடு நான்தான் பார்த்து கொடுத்தேன். அவங்க ரீலொகேட் செலவையும் அவனே ஏத்துக்கிட்டான்”

“இங்க நான் இருக்கேன், உனக்கு பேங்க் பக்கம், அவன் வீட்லேர்ந்தும் வந்து போக வசதினு இங்க தங்க வச்சான் உன்னையும் உன் குடும்பத்தையும். ஆனா அவன்தான் செய்றான்னு தெரியாம தானா நடக்கிறது மாதிரி காட்டிகிட்டான் அந்த இடியட்” என சிவா சொல்லி முடிக்க பூவை திகைப்பாக பார்த்திருந்தாள்.

“என்னால ஆஃபீஸ்ல லீவ் எடுக்கவே முடியலை அப்போ, என்கிட்ட கெஞ்சி உனக்கு எல்லா ஹெல்ப்ம் செய்ய சொன்னான். ஏன் அந்த லக்ஷ்மன் இட பத்திரம் தராம இழுத்தடிக்கும் போது யார் அந்த லாயர் பரந்தாமன்கிட்ட அழைச்சிட்டு போக சொன்னது… அவன்தான். அவரை எனக்கு முன்னாடியே எல்லாம் தெரியாது”

“அவர் சிட்டில எவ்ளோ பிஸி லாயர்னு தெரியுமா? சின்ன விஷயமெல்லாம் அவர் டீல் பண்றதே இல்லை, ஆனா அவர்கிட்ட போனா சரியா சொலூஷன் தருவார்னு எத்தனை கஷ்டப்பட்டு அவர்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி கொடுத்தான் தெரியுமா உனக்கு?”

“நான் அப்ப கும்பகோணம் ஏன் போயிருந்தேன் தெரியுமா? அந்த பைத்தியக்காரன் லக்ஷ்மனை ஆள் வச்சு மிரட்ட. லீகலா மூவ் பண்ணினாலும் உடனே பத்திரம் கைக்கு வந்து சேராதுன்னு அதையும் உதய்தான் பண்ண சொன்னான். அந்த மிரட்டலுக்கு பயந்து போய்தான் பத்திரம் உடனே கைக்கு வந்து சேர்ந்தது” என சிவா சொல்ல பூவை விக்கித்து விட்டாள்.

கர கரவென கண்களில் நீர் வழிந்தோட, “எனக்கு இதெல்லாம் தெரியாது அண்ணா” என்றாள்.

“அந்த தடியன் தெரிய படுத்த விட்டாதானே? அவன் செய்றதா தெரிஞ்சா நீ ஒத்துக்க மாட்டேன்னு நினைச்சான். ஏன் ஜெயந்தனுக்கு இங்க சர்ஜரி நடந்திச்சே.. அப்ப நம்ம கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்ல அவ்ளோ வேலை, அவனால தனியா பார்க்க முடியாதுன்னு ஹாஸ்பிடல்ல உதவிக்கு வேற யாரையாவது அரேஞ் பண்ணலாம் சொன்னதுக்கும் கேட்கவே இல்லை. ‘இப்ப அங்க அவளுக்கு துணையா நான் நின்னுருந்திருக்கணும், அவ விட மாட்டா. நீ ன்னா பொறுப்பா இருப்ப, அவளும் நிம்மதியா இருப்பா. இங்க நான் பார்த்துப்பேன், நீ போற அவ்ளோதான்’ அப்படின்னு கம்பெல் பண்ணி என்னை அனுப்பி வச்சான்” என சிவா சொல்ல பூவை மெலிதாக தேம்பினாள்.

“நீயே அவனை புரிஞ்சுக்கலைன்னா அவனுக்கு கஷ்டம் இல்லையாமா? அப்படி என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?”

முக்கிய பிரச்சனை பற்றி கூறாமல், “அவங்கம்மா ரிங் எடுத்ததா பழி சொன்னப்போ அவங்க அம்மாகிட்ட கேட்கலைதானே அவர்? என்னையும் கேட்க கூடாதுன்னு சொன்னார். என் மேல அவருக்கு அன்பு, அக்கறை இருக்குன்னா என்னை சார்ந்தவங்களுக்கு என்ன நடந்தாலும் நான் ரியாக்ட் செய்யக் கூடாதாண்ணா? இப்ப வரை இதுபத்தி என் அம்மாகிட்ட வந்து பேசலைதானே அவர்?” அழுகையை நிறுத்தி விட்டு அதன் பின்னணி பற்றி தெரிந்து கொள்ள கேட்டாள்.

“அவன் அம்மான்னா கொஞ்சம் வேற மாதிரி ஆகிடுவான் பூவை. அவங்களும் எங்கேயோ மோதிரத்தை தொலைச்சிட்டு ஏதோ பேசிட்டாங்க, அவங்களே உயிரோட இல்லை, அதை விடக்கூடாதா?” என பொறுமையாக கேட்டான் சிவா.

“ஐயோ அண்ணா அந்த ரிங் அங்க வீட்லதான் இருக்கு. அவங்க அம்மா பொய் சொல்லியிருக்காங்க. அது இவருக்கு தெரிஞ்சும் இதுவரை வாயே தொறக்காம இருந்திருக்கார். அதை என்னன்னு கேட்க போய்தான் இங்க அனுப்பிட்டார்” என ஆதங்கத்தோடு சொன்னாள் பூவை.

“பூவை…” நடுங்கும் குரலில் தங்கையை அழைத்த ஜெயந்தன் தடுமாற்றமாக நின்றிருந்தான். முகம் எல்லாம் வியர்த்து வடிய ஏதோ அசௌகர்யமாக காணப் பட்டான்.

பூவை திரும்பி பார்க்க, “மாமா மேல எந்த தப்பும் இல்ல, நான்தான்… நான்தான்…” சொல்ல முடியாமல் தவித்தான் ஜெயந்தன்.

என்ன சொல்ல வருகிறான் என ஓரளவு புரிந்து கொண்ட பூவையின் உடல் முழுதும் பதற ஆரம்பித்து விட்டது.

“நீ என்ன செஞ்ச?” அதட்டலாக கேட்டான் சிவா.

“அந்த மோதிரத்தை எடுத்தது நான்தான், மோதிரம் மட்டுமில்லை, அதோட பிரேஸ்லெட் வளையல் கூட சேர்த்து எடுத்தேன். மாமா சிங்கப்பூர்லேர்ந்து வந்த அன்னைக்கே அவருக்கு இது தெரியும்” என சின்ன குரலில் பயமும் வெட்கமும் கலந்து யாரையும் பார்க்க முடியாமல் தலை குனிந்த வண்ணம் ஜெயந்தன் சொல்ல பூவைக்கு தட்டாமாலை சுற்றுவது போலிருந்தது.

Advertisement