Advertisement

அத்தியாயம் 1

கோயம்புத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பாக கூட்டம் கூடியிருந்தது. காரணம் நடிகை சுப்ரியாவின் விவாகரத்து வழக்கு இன்று நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

நடிகை சுப்ரியாவை காண ஒரு கூட்டம் அலை மோதி இருக்கிறது என்றால், கார்த்திகேயனை பேட்டி காண ஒட்டு மொத்த மீடியாவும் அங்கு தான் நின்றிருந்தனர்.

கார்த்திகேயன் நடிகை சுப்ரியாவுக்காக வாதாடப் போகும் வக்கீல் அல்ல. அவளது வக்கீலுக்கு ஆலோசனை கூறும் வக்கீல். அவ்வாறு தான் அவன் தன்னை பிறரிடம் அறிமுகப் படுத்திக்கொள்வான்.

வக்கீல் என்றாலே பொய் சொல்லி பிழைப்பவன் என்று பெயர் இருக்க, தனக்கு பணம் மட்டும் போதாது, பெயரும் புகழும் வேண்டும் என்று செய்யும் தொழிலே தெய்வமென்று தனக்கேற்றது போல் அமைத்துக் கொண்டவன். 

அதற்கு அவன் தேர்ந்தெடுத்த வழிதான் வினோதமானது. பணத்தை கூட எந்த வழியிலும் சம்பாதித்து விடலாம். தரமான ஒரு கேஸ் கிடைத்தால் பெயர் கூட கிடைத்து விடும். புகழின் உச்சிக்கு கூட செல்லலாம் நாளாடைவில் அந்த கேஸையும் மக்கள் மறந்து விடுவார்கள் தன்னையும் மறந்து விடுவார்கள்.

யாரும் தன்னை மறக்க கூடாது. தினமும் செய்தித் தாள்களிலும், தொலைக்காட்ச்சிகளிலும் தன்னுடைய பெயர் வர வேண்டும். கார்த்திகேயன் என்ற நாமம் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அதற்கு புகழ்! புகழ் என்ற ஒன்று அழியாமல் தன்னை சுற்றிக் கொண்டு இருக்க வேண்டும். தன்னை சுற்றி புகழ் இருக்க, தான் பார்க்கும் அத்தனை வழக்கும் புகழுக்குரிய, பிரபலன்களுடையதாக இருக்க வேண்டும் என்று நடிகர்கள், சினிமாவில் சம்பத்தப்பட்ட அனைத்து கலைஞ்சர்கள், விளையாட்டு வீரர்கள், ஏன் அரசியல்வாதிகள், மாத்திரமன்றி பிரபலமான வளையொலியாளர்கள் என்று அனைவரையும் பற்றி விரல் நுனியில் தகவல்களை திரட்டலானான்.

புகழை அடைவது மக்கள் மத்தியில் தன் பெயர் நிலைக்கத்தானே? மக்கள் மத்தியில் இன்று பிரபலமாக எந்த வழக்கு பேசப்படுகிறதோ அதையும் கவனத்தில் கொண்டு தான் களத்தில் இறங்குவான் கார்த்திகேயன். 

முதல் வழக்கே குடித்து விட்டு வண்டியோட்டி நாயை அடித்துத் தூக்கிய நடிகர் ராமாகாந்த்தின் வழக்கு தான். 

சீசீடிவி காட்சிகள் கூட அவருக்கு எதிராக இருக்க, இவனாகவே அவர் முன் சென்று நின்று தான் இந்த வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்வதாக கூற அவரது வக்கீல் மாத்திரமன்றி நடிகர் ராமாகாந்துமே இவனை துரத்தியடித்தார்.

“எனக்கு சம்பளம் கூட வேணாம். உங்கள இந்த கேஸ்ல இருந்து வெளில கொண்டு வந்தா மீடியா முன்னாடி பேட்டி கொடுப்பீங்கள்ல. கூடவே என்னையும் வச்சிக்கோங்க” என்றான்.

இவ்வளவு நம்பிக்கையாக ஒருவன் கூறுகிறானே என்று ஒன்றும் நடிகர் ராமாகாந்த் கார்த்திகேயனுக்கு தன்னுடைய வழக்கை ஒப்படைக்கவில்லை. பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த தன்னுடைய வக்கீல் சோமசுந்தரம் தன்னை காப்பாற்ற முடியாது என்று கைவிட்ட நிலையில் இவன் என்ன செய்வான்? என்ற ஒரு ஆவல் கார்த்திகேயன் பேச்சில் எட்டிப் பார்த்திருக்க,  சவால்களை விரும்பும் ராமாகாந்த் கார்த்திகேயனுக்கு ஒரு வாய்ப்பை கொடுக்க விரும்பினாலும் தான் ஜெயிலுக்கு செல்ல நேர்ந்தால் கார்த்திகேயன் மீது வழக்கு தொடர்வதாக மிரட்டியவாறுதான் இந்த வழக்கை அவனிடம் கொடுத்திருந்தார்.  

“இதெல்லாம் ஒரு கேஸு. பட்டப்பகல்ல குடிச்சிட்டு வண்டியோட்டினதே தப்பு” முணுமுணுத்தவன் “சார் குடிச்சதுக்கு பைன் கட்டுக்குங்க. நாய கொன்னதுக்கு, ஐ மீண்ட் அடிச்சி தூக்கினத்துக்கு உள்ள போக வேண்டியதில்ல. ஜெயிக்காத கேஸெல்லாம் நான் வாதாட மாட்டேன்” இறுமாப்பாக மார்தட்டிக் கொண்டான் கார்த்திகேயன்.

“சார் இந்த பொடிப்பய சொல்லுற பேச்சு கேட்டு கோட்டு, கேஸு என்று போகாம நாம அந்த எக்ஸ் மிலிட்டரி கிட்ட பேசி சமரசமா போலாம் சார்” என்றார் ராமாகாந்த்தின் வக்கீல் சோமசுந்தரம்.

கார்த்திகேயனின் தோற்றமும், பேச்சும் ராமாக்கத்துக்கு கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்திருந்தது. 

“அதான் ஒரு தடவ பேசிட்டோமே. அந்தாள் வழிக்கு வந்தானா? இல்லையே. இவன் தான் பாத்துக்கிறேன் என்று சொல்லுறானே” என்று கார்த்திகேயனை ராமாகாந்த் பார்த்த பார்வையில் இல்லையென்றால் உன் கதை அத்தோடு முடியும் என்றிருந்தது.

அவருடைய வக்கீலுக்கோ இந்த வாலிபன் வழக்கில் ஜெயித்தால், ராமாகாந்த் தன்னை நீக்கி விட்டு இவனை சேர்த்துக் கொள்வாரோ என்ற அச்சம். வயதான காலத்தில் யாரிடம் போய் வேலை தேடுவது என்ற பயம்.

அவர் அச்சப்பட்டது போல் எதுவும் நிகழவில்லை. அதாவது கார்த்திகேயன் வழக்கை வென்றும் ராமாகாந்த் அவனை தன்னோடு இருக்க சொல்லியும் கார்த்திகேயன் மறுத்து விட்டான். இந்த வழக்கை அவன் கையில் எடுத்ததன் நோக்கம் அதுவல்லவே

“சீசீடிவியிலையே ஆதாரம் இருந்திருக்கு நமக்குத்தான் தெரியல” ரமாகாந்த்தின் வக்கீல் சோமசுந்தரம் சமாளிக்க முயன்றார்.

“எங்க இருந்தது? அந்த நாய் குறுக்க வர்ரது தான் இருந்தது. தம்பிதான் பாய்ண்ட்ட புடிச்சிட்டானில்ல” என்றார் ராமாகாந்த்.

சீசீடிவி காட்ச்சியின்படி எக்ஸ் மிலிட்டரி சதாசிவம் நடைபயிற்சிக்கு அழைத்து சென்ற அவரது நாயை ராமாகாந்த் வண்டியை விட்டு மோதியிருக்கவில்லை. நாய்தான் பாதையில் குறுக்கே பாய்ந்திருந்தது. ஆனால் ராமாகாந்த் குடித்து விட்டு வண்டியோட்டியதால் தவறு அவர் மீது என்று சதாசிவம் வாக்குவாதம் செய்து வழக்கு தொடர்ந்திருந்தார். 

சதாசிவத்தின் கையை மீறி நாய் பாதையை கடந்ததா? அல்லது அவர் வேறேதாவது செய்து கொண்டிருந்தாரா என்று சீசீடிவியில் தெரியவில்லை.

அங்குதான் கார்த்திகேயனுக்கு அதிஷ்டம் அடித்தது. “மக்கள் படை” எனும் வளையொலியை சேர்ந்த அருண் குமார் அவனது வண்டியில் செல்வது சீசீடிவி காட்ச்சில் பதிவாகியிருந்தது. அதை பார்த்து, அவனை தேடிச் சென்று சந்தித்து, அவனது தலை கவசத்தில் பொருத்தியிருந்த கேமராவில் பதிவாகியிருந்த காட்ச்சிகளை பார்த்த பின் தான் நடிகர் ராமாகாந்த்தை வந்து சந்தித்து இந்த வழக்கை தான் வாதாடி வெற்றி ஈட்டுவதாக சவாலிட்டான்.  

எக்ஸ் மிலிட்டரி சதாசிவம் நாயின் பட்டியை விட்டு விட்டு கால் ஷூவின் பட்டியை கட்ட குனிந்த பொழுது நாய் வண்டியின் குறுக்கே பாய்ந்திருந்தது. தப்பு அவர் மீது என்று வாதாடி வழக்கை வென்றிருந்தான் கார்த்திகேயன்.

வழக்கை வென்றால் பணம் வேண்டாம் என்று கார்த்திகேயன் கூறி இருந்தாலும் தனக்கு தலைவலி போய் மனநிம்மதி கிடைத்த நிம்மதியில் கார்த்திகேயனுக்கு கைநிறைய வாரி வழங்கியிருந்தார் ராமாகாந்த்.

ஆனால் அவன் எதிர்பார்த்தது புகழ். அதையும் ரமாகந்த்தை வைத்து சாதித்துக் கொண்டான்.

தேடித் தேடி பிரபங்களினதும், பிரபலமான வழக்குகளையும் பின் தொடர்ந்தே தனக்கென்று தனி இடத்தை பிடித்தவன் இப்பொழுதெல்லாம் வழக்குகளில் வாதாடுவதை விட ஆலோசனை கூறுவதை தொழிலாக வைத்திருக்கின்றான்.

அதற்காக பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையை எட்டிப் பார்த்து புகைப்படம் பிடிப்பது. வீடியோ எடுப்பது என்று எந்த எல்லைக்கும் சென்றான். அதற்காக அவனிடம் அவனுக்காக வேலை செய்ய ஆட்கள் வேறு இருந்தனர். கார்த்திகேயன் பிரபலங்களின் வழக்குகளை ஜெயித்தே பிரபலமானவன் அதற்கு அவன் செய்யும் வேலைகளை அறிந்தவர்கள் அவன் பிடரிக்கு பின்னால் அவனை அழைப்பது மூக்கொலியன் {சங்கிலி} {சிக்கினால் சின்னாபின்னம் தான்} அது அவன் காதுக்கு வராமலா இருக்கும்? வெற்றியடைய முடியாதவர்கள் பொறாமையில் கூறுவதாக அதையெல்லாம் கண்டு கொள்ளாது கடந்து விடுவான்.

வெற்றி தன் பக்கம் இருக்கிறதா? வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறதா? என்று ஆராய்ந்த பின்னரே வழக்கை கையில் எடுப்பான். இந்த முறை அவன் கையில் எடுத்த வழக்கு நடிகை சுப்ரியாவின் வழக்கு. அதற்காக சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வரை வந்துள்ளான்.

“வெற்றி என்றால் கார்த்திகேயன். கார்த்திகேயன் என்றால் வெற்றி. வாழ்க்கையில் தோல்வியையே தழுவாத ஒரு மனிதர் என்றால் அது வக்கீல் கார்த்திகேயன் தான்” ஏதோ ஒரு ஊடகம் மைக்கை பிடித்தவாறு கார்த்திகேயன் கடந்து செல்லும் பொழுது அவனை படம் பிடித்தவாறே அவனது புகழ் பாடியது.

அதை காதில் வாங்கியவனுக்குத்தான் இதயத்தின் ஓரம் நெருஞ்சி முள்ளாய் அவள் வந்து “எல்லாம் வெற்றியா? காதல் தோல்வி தானே” என்று நினைவூட்டிச் சென்றாள்.

யாரை பார்த்து தலையசைத்து புன்னகைத்தானோ அவளை துரத்தி விட்டு நடிகை சுப்ரியாவோடு நடந்தான்.

ஆனால் அவளோ அவன் நடக்கும் திசையில் அவன் வரவுக்காக  பூங்கொத்தோடு காத்திருந்தாள்.

தூர அவளை பார்த்தது அடையாளம் கண்டு கொண்ட இவன் இதயம் தான் அனுமதியில்லாமலையே தறிகெட்டு தாறுமாறாக துடிக்க ஆரம்பித்திருந்தது.

யாரும் பார்க்காமல் எனை பார்க்கிறேன்

என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்

சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது

உன்னை கண்டாலே குதிகின்றதே

அவளோ இவனை பார்த்து மெல்லிய புன்னகையை சிந்தி ஒரு அந்நிய பார்வையை வீசிக் கொண்டிருந்தாள்.

சுற்றியிருந்த அத்தனை கண்களும் இவனை பார்த்துக் கொண்டிருக்க, இவன் கண்களோ அவளையே பார்த்திருந்தன. பார்க்காதே பார்க்காதே என்று மூளை தடை உத்தரவு போட்டாலும் கண்கள் சொல் பேச்சு கேட்கவில்லை. கூடியிருந்த ஊடகங்கள் படம் பிடித்து நாளை அவனுக்கு போட்டுக் காட்டி அவனிடம் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வான்? எச்சரிக்கைக்காக இருப்பவனின் இருதயம் இன்று அவனுக்கு மாறு செய்தது.   

“வணக்கம் மிஸ்டர் கார்த்திகேயன்” சுப்ரியாவுக்காக வாதாடப் போகும் வக்கீல் பரசுராமன் வைத்த வணக்கத்தில் மந்திர கட்டிலிருந்து விடுபட்டவன் போல் கார்த்திகேயன் அவரை பார்த்து வணக்கம் வைத்தான்.

“இவங்க ரெண்டு பேரும் என் ஜூனியர்ஸ். இவன் என் பையன் விக்னேஷ். இவ கயல்விழி”

“யார் நீ…”

“என் பேர் கயல்விழி” இரண்டு வருடங்களாக  தன்னை ஒருத்தி கவனித்துக் கொண்டிருக்கின்றாள் என்பதே அதிர்ச்சி. இவள் தனக்காக இதை செய்தாளா? என்ற பேரதிர்ச்சியில் அவள் பெயரை மீண்டும் ஒருமுறை கூறிப் பார்த்துக் கொண்டான் கார்த்திகேயன். மறக்கக் கூடிய பெயரா அது. கல்லில் பொறிக்கப்பட்டது போல் அவன் நெஞ்சில் பொறிக்கப்பட்ட பெயரல்லவா. பெயர் மட்டுமா? முகமும் தான்.

நினைவுகளில் இருப்பவளை துரத்தியடிப்பவனுக்கு கண்முன்னே இருப்பவளை துரத்தியடிக்க வழி தெரியாமல் சினேகமாக புன்னகைத்தான்.

இவன் கைகுலுக்க கையை நீட்டினால் அவளோ வணக்கம் வைத்தாள். “ஓஹ்… நான் தீண்டத் தகாதவனா? கை கூட கொடுக்க மாட்டாளா?” அவளை வசைபாட காரணங்களை தேடியலைந்து அவன் மனம்.

பூங்கொத்தை கயல்விழி கார்த்திகேயனிடம் கொடுத்து அவனை வரவேற்க, அதை பெற்றுக் கொள்வது போல் அவள் புறம் குனிந்து “கல்யாணம் பண்ணா… புள்ள குட்டிய பெத்தியா, புருஷன பாத்துக்கிட்டியானு வீட்டோட இருந்துட வேண்டியது தானே. எதுக்கு என் கண்முன்னாடி வந்து உசுர எடுக்குற?” அவளை கடிந்தான்.

கண்களை அகல விரித்த கயல்விழியோ எந்த எந்த பதிலும் கூறவில்லை. கூறக் கூடிய சூழ்நிலையும் அங்கில்லையே.

“இப்படி பார்த்தே கண்ணால என்ன கொல்லு” கடமை அழைக்கவே கயல்விழியை முறைத்த கார்த்திகேயன் நீதிமன்றத்தினுள்ளே சென்றான்.

நீ போகும் வழியெல்லாம் உன் கால் தடம். பின் தொடர்ந்து நான் வருவேன் உன்னிடம் என்பது போல் கார்த்திகேயனின் பின்னால் சென்றாள் கயல்விழி. 

நடிகை சுப்ரியாவின் வழக்கு கார்த்திகேயனுக்கு இலகுவான ஒன்று தான். பத்தொன்பது வயதில் நடிக்க வந்த சுப்ரியாவை அந்த திரைப்படத்தின் இயக்குனர் பிரதாப் இரகசியமாக திருமணம் செய்து கொண்டிருந்தார். புகழின் உச்சிக்கு செல்லச் செல்ல சுப்ரியாவை கண்டு கொள்ளாது பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகளை திருமணம் செய்ய முடிவும் செய்து விட்டார்.

அதிர்ச்சியடைந்த சுப்ரியா சண்டைப் போட்டாள். கருவேப்பிலை போல் சுப்ரியாவை உபயோகித்து விட்டு தொழிலதிபரின் மகளை மணக்க முடிவு செய்தாரோ அன்றே பிரதாப்புக்கு சரிவு காலம் ஆரம்பித்து விட்டது.

சுப்ரியா பிரதாப்பை விட்டு விலகிய பின் பல இயக்குனர்களோடு கைகோர்த்து நல்ல நல்ல கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்க, தொழிலதிபரின் மகளோ பிரதாப்பை விட்டு விட்டு வேறு ஒரு பணக்காரனாக பார்த்து திருமணம் செய்து கொண்டிருந்தாள்.

சுப்ரியாவின் வளர்ச்சியை பார்த்த பிரதாப் மீண்டும் அவளோடு சேர முயற்சி செய்வதாக அவளை தொல்லை செய்ய ஆரம்பித்தான்.

பிரபலங்களை கண்காணிக்கும் கார்த்திகேயனுக்கு சுப்ரியாவின் பிரச்சினையை பற்றி தெரியாதா? அவனே சுப்ரியாவிடம் சென்று அவளது வழக்கை தான் வாதாடுவதாக கூற, அவளுமே கார்த்திகேயனை பற்றி ஊடகங்களின் மூலம் அறிந்திருந்தமையால் அப்பொழுதே தான் வென்று விட்டதாக மகிழ்ந்து கார்திகேயனிடமே ஒப்படைத்து விட்டாள்.

கார்த்திகேயனுக்கு பயந்து பிரதாப் தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் வழக்கை பதிவு செய்திருந்தார்.

நீ எங்க போனா என்ன? வழக்கை யார் வேணாலும் வாதாடட்டும். வழிநடத்துவது நானே என்று சுப்ரியாவோடு கோயம்புத்தூர் வந்திருந்தான்..

வந்த இடத்தில் கயல்விழியை சந்திப்பான் என்று தான் அவன் எதிர்பார்க்கவில்லை.

“யுவர் ஓனர். என் கட்ச்சிக்காரர் பிரதாப் என்பவர் நடிகை சுப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இன்று சுப்ரியா முன்னணி நடிகையாகவும், பிரதாப் பட வாய்ப்புகள் எதுவுமின்றி இருப்பதனால் அவரை விட்டு விலக முயற்சி செய்கிறார். அவர்களின் பாஷையில் சொல்வதேயானால் கழட்டி விடப் பார்க்கின்றாள்” என்று சிரிக்க, நீதிமன்றத்தில் கூடியிருந்த கூட்டமும் சிரித்தது.

பிரதாப்பின் வக்கீல் நந்தன் ஏதேதோ பேசினாலும் கார்த்திகேயன் கூறியதால் சுப்ரியாவின் வக்கீல் பரசுராமன் அமைதிகாத்தார்.

பிரதாப்பின் வக்கீல் நந்தன் தன் பக்க நியாயங்களையும், ஆதாரங்களையும் சமர்ப்பித்து முடிக்க, கார்த்திகேயனின் கண்ணசைவில் பரசுராமன் பேச ஆரம்பித்தார்.

“யுவர் ஓனர். என் கட்ச்சிக்காரர் சுப்ரியாவை திரு. பிரதாப் அவர்கள் காதலித்து திருமணம் செய்தார் என்கிறாரே வக்கீல் நந்தன், அதுவே சுத்தப் பொய். இவர்களுக்குத் திருமணம் நிகழும் பொழுது இயக்குனர் பிரதாப்புக்கு முப்பது வயது, சுப்ரியாவுக்கு பத்தொன்பது வயது. பத்தொன்பது வயதான பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார்.

சுப்ரியா இணங்கி இருந்தால் ஆசைநாயகியாக கூட வைத்துக் கொண்டிருப்பார். சினிமா துறையில் இருந்தாலும் ஒழுக்கமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று எண்ணும் சுப்ரியா திருமணத்திற்கு பிறகுதான் எல்லாமே என்று கூறியதால் திரு. பிரதாப் அவர்கள் சுப்ரியாவை திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொண்டு தனது ஆசைகளை தீர்த்துக் கொண்டார் என்பது தான் உண்மை.

பத்து வருடங்களுக்கு முன்பு சுப்ரியாவுக்கு சினிமா வாய்ப்பு அவ்வளவாக இல்லை. காரணம் சுப்ரியா பிரதாப்பின் பிடியில் இருந்தாள். பிரதாப் திறமையான இயக்குனராக கோடிகளில் புரண்டார்.

அப்பொழுது அவருக்கு கிட்டிய வரன் தான் தொழிலதிபர் லக்ஷ்மிபதியின் ஒரே மகளான சீதாலக்ஷ்க்மியின் வரன். நிச்சயதார்த்தம் நடந்தததற்கான ஆதாரம்” என்று பரசுராமன் கூற, கயல்விழி அன்றைய செய்தித்தாளிலில் வந்த புகைப்படங்களையும், யார் கண்களுக்கும் கிட்டாத கார்த்திகேயன் கைகளில் கிடைத்த பிரதாப் மற்றும் சீதாலக்ஷ்க்மியின் நிச்சயதார்த்தம் மற்றும் வேறு சில புகைப்படங்களையும் ஆதாரங்களாக எடுத்துக் கொடுத்தாள்.

“வக்கீல் நந்தன் சொன்னது போல் அன்று திரு. பிரதாப் தான் சுப்ரியாவை கழட்டி விட்டார். சின்னப்ப பெண்ணான சுப்ரியா பிரதாப்பிடமிருந்து விலகி தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இன்று புகழின் உச்சிக்கு சென்று பணமும் சம்பாதித்த பின் இன்று திரு பிரதாப் அவர்கள் ஒட்டுண்ணி போல ஒன்றாக இணைய முயற்சிக்கிறார். ஒழுக்கமான பெண்ணான சுப்ரியா முறையாக விவாகரத்து வாங்காததால் இன்று வரை வேறு திருமணம் கூட செய்துகொள்ளவில்லை. என் காட்ச்சிக்காரரான சுப்ரியாவுக்கு விவாகரத்தை கொடுத்து திரு. பிரதாப் அவர்களிடமிருந்து விடுதலை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”

  

பத்திரிகையில் வந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் சுப்ரியாவை திருமணம் செய்ய முன்பாக எடுத்துக் கொண்டவை என்றும், ஏனைய புகைப்படங்களும் அவ்வாறானதே என்றும் வக்கீல் நந்தன் வாதாடினார்.

சுப்ரியாவின் கழுத்தில் பிரதாப் தாலி கட்டியிருந்தாலும், திருமணத்தை பதிவு செய்திருக்கவில்லை. சுப்ரியா நினைத்திருந்தால் தங்களுக்கு திருமணமே ஆகாவில்லை என்று கூறியிருக்கலாம்.

பிரதாப்புக்கும் சுப்ரியாவுக்கும் திருமணம் நிகழ்ந்த பொழுது எடுத்துக் கொண்ட ஒரு சில புகைப்படங்களை கார்த்திகேயனின் உதவியோடு கயல்விழி சமர்ப்பிக்க,  நேர்மையாக வாழ வேண்டும் என்று எண்ணும் சுப்ரியா திருமணமானதை மறைக்காமல் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று நியாயமாக போராடுவதாக பரசுராமன் வாதாடியதோடு அந்த புகைப்படங்களில் கேமராவின் புண்ணியத்தால் திருமணம் நிகழ்ந்த திகதி வேறு பதிந்திருந்தது.

அதைக் கொண்டு பிரதாப் சுப்ரியாவை திருமணம் செய்த பின்னர் தான் தொழிலதிபரான லக்ஷ்மிபதியின் மகள் சீதாலக்ஷ்க்மியை நிச்சயம் செய்திருக்கிறார் என்று உறுதியானது.

தீர்ப்பு சுப்ரியாவின் பக்கம் சாதகமாக வரும் என்று தெரியுமென்பதால் கார்த்திகேயன் அவளை பார்த்து மெலிதாக புன்னகைத்தான்.

“என் கேஸ எடுக்குறேன்னு வந்து நின்னீங்களே! அப்போ கூட இதே புன்னகையை தான் சிந்தினீங்க மிஸ்டர் கார்த்திகேயன். ஆக தீர்ப்பு என் பக்கம் தான் வரும் என்று உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு” என்றாள் சுப்ரியா.

“ஜெயிக்காத கேஸெல்லாம் நான் எடுக்க மாட்டேன்” என்ற கார்த்திகேயன் அதே புன்னகையை சிந்தினான்.

இவர்களின் சம்பாஷணையை கயல்விழியும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். ஊடகங்களில் வரும் செய்திகளை பார்த்து கார்த்திகேயன் பணத்துக்காகவும், புகழுக்காகவும் பிரபலங்களின் வழக்குகளை வாதாடுவதாக எண்ணியிருந்தாள். கொஞ்சம் உண்மையின் பக்கமும் இருக்கின்றான். இன்னும் அவன் பழைய கார்த்திகேயன் தான் என்று தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.

சுப்ரியாவும், பிரதாப்பும் காதலித்து திருமணம் செய்து கொண்டதத்தால் யாரையும், யாரும் ஏமாற்றி திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும், திருமணம் செய்த பெண்ணை விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முனைந்தது பிரதாப் செய்த தவறு என்றும், பத்து வருடங்களாக பிரிந்திருந்தது விட்டு இப்பொழுது சேர்ந்து வாழ வேண்டும் என்பது பணத்துக்காக என்பது தெளிவாக புரிகிறது என்பதால் நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது.

தீர்ப்பை அறிவித்த நொடியே ஊடகங்கள் உடனடி செய்தியாக ஒளிபரபிக் கொண்டிருக்க, சுப்ரியா கார்த்திகேயன் மற்றும் பரசுராமனுக்கு நன்றி கூறிவிட்டு விடைபெற்று சென்றாள்.

“சொல்லுங்க சார். என்ன பேசணும்?” பரசுராமன் கார்திகேயனிடம் பேச வேண்டும் என்று கூறியதால் சுப்ரியாவை வழியனுப்பி வைத்து விட்டு, ஊடகங்களின் கண்களுக்கு சிக்காமல் பரசுராமனின் காரியாலய அறைக்குள் வந்து நின்றான் கார்த்திகேயன்.

கயல்விழியிடமும் அவனுக்கு பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றனவே. இதை விட்டால் சந்தர்ப்பம் அமையுமா என்ன?

“அது வந்து சார். முதல்ல உக்காருங்க. அம்மா… கயல் சாருக்கு குடிக்க ஒரு டீ போடுமா… கயல் நல்லாவே டீ போடுவா சார்”

“அப்படியா?” கயல்விழியை நக்கலாக பார்த்தவாறே இருக்கையில் அமர்ந்து கொண்டான் கார்த்திகேயன்.

அவன் பார்வையின் அர்த்தம் கயல்விழிக்கு புரியாமலில்லை. உன்னை திருமணம் செய்து கொண்டு உன்னோடு வாழ்வேன் என்பவள் தானே. அவனுக்காக எல்லாம் செய்வேன் என்றவள் தானே.

“அது வந்து சார் என் பையன் உங்க கூட இருந்தா நல்லா வருவான். அவனை உங்க கூட வச்சிக்கிறீங்களா?” பட்டென்று பரசுராமன் விஷயத்தை போட்டுடைத்தார்.

“உங்க பையன பத்தி மட்டும் யோசிக்கிறீங்க. இந்த பொண்ண பத்தி ஒண்ணுமே சொல்லையே” கயல்விழியை பாராமல் தான் பேசினான் கார்த்திகேயன்.

இனிமேல் பார்க்க மாட்டோமா என்ற காதலியை பார்த்து விட்டான். அடுத்தவன் மனைவி என்று அறிந்த பின்னும் அவளை மனம் எண்ணாமல் இருந்ததில்லை. இதில் அவளை அவன் அருகிலையே இருத்திக்கொள்ள அவன் வாய் திட்டம் தீட்டுகிறது.

“ஆமா, ஆமா கயல்விழி திறமையான பெண்தான்” தன் மகன் விக்னேஷை கார்திகேயனிடம் அனுப்ப கயல்விழியையும் அனுப்ப வேண்டும் என்று கார்த்திகேயன் கூறுவது பரசுராமனுக்கு தெளிவாக புரிந்தது. கயல்விழி சம்மதிக்க வேண்டுமே என்று அவளை பார்த்து வைத்தார்.

கயல்விழி கொடுத்த டீயை பெற்றுக் கொண்டு அதை அமிர்தமாக அருந்தியவன் “அப்போ முடிவெடுத்துட்டு எனக்கு போன் பண்ணுங்க” என்று விடைபெற்று அங்கிருந்து கிளம்பினான். 

Advertisement