Advertisement

அத்தியாயம் 26

குழந்தைகளை தாங்கள் அழைத்து சென்று கொஞ்ச நாள் பார்த்துக் கொள்ளவா என்று கேட்டிருந்தாள் கண்மணியின் அன்னை. குழந்தைகள் மட்டுமல்ல நாங்களும் இரண்டு மூன்று நாட்கள் அங்கு வந்து தங்கிக் கொள்வதாக கூறினான் பார்த்திபன்.

கண்மணி குழந்தைகளோடு அவள் வீட்டுக்கு சென்றிருக்க, பார்த்திபன் துணிமணிகளை எடுத்து வருவதாக வீட்டுக்கு வந்திருந்தான்.

வண்டியில் வரும்போது கார்த்திகேயன் கயல்விழியின் அருகில் தான் அமர்ந்திருந்தான். கயல்விழியோ வெளியே வேடிக்கை பார்த்தவாறு வந்தாலே ஒழிய அவனைப் பார்த்தாலில்லை. வண்டியில் வைத்து பேச முடியாது என்பதால் அவளை பார்ப்பதும் வெளியே பார்ப்பதுமாக அமைதியாகவே வந்தான் கார்த்திகேயன்.

அனைவரும் வீட்டுக்குள் செல்ல “ஏய் நில்லு. நீ எங்க வர? வெளியே போ” என்று கயல்விழியை பார்த்து கத்தினான் சிவபாலன்.

“திரும்ப ஆரம்பிச்சுட்டாரா?” என்ற பார்வையோடு என்னதான் உங்களுக்கு இப்ப பிரச்சனை என்று கேட்டவாறு கயல்விழியின் கையை பிடித்து வீட்டின் உள்ளே அழைத்து வந்திருந்தான் கார்த்திகேயன்.

“ஏண்டா இந்த சிங்காரிய தேடி புடிச்சி கல்யாணம் பண்ணியே இவ லட்சணம் என்னானு தெரியுமா? கட்டின புருஷன் வீட்டுல இருக்கும் போதே அவன் சிநேகிதன் கூட உறவு வச்சிருக்கா. அத தெரிஞ்சி இவ புருஷன் கேள்வி கேட்டதும் அவனை ஜெயில்ல போட்டு, இங்க வந்து ரொம்ப நல்லவ போல உன்ன கட்டிக்கிட்டு இருக்கா” சிவபாலன் மேற்கொண்டு பேசும் முன்

“அப்படின்னு உங்க கிட்ட யார் சொன்னா…” எந்த உண்மையையும் யாரிடமும் பலநாள் மறைக்க முடியாது. ஒருநாள் தெரிய வந்தால் முகம் கொடுத்துத்தானேயாக வேண்டும் என்று தயாராகத்தான் இருந்தான்.

“டேய் கார்த்தி அப்பா என்னடா சொல்லுறாரு” அதிர்ச்சியாக வள்ளி மகனிடம் கேட்டாள்.

சிவபாலன் கத்த ஆரம்பிக்கும் பொழுதே மதியழகி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்று விட்டாள்

தன் வாழ்க்கையில் மறக்க வேண்டிய, மறக்க முடியாத அத்தியாயம். அது இந்த வடிவில் மீண்டும் தன் கண்முன் வந்து நின்றதை பார்த்து அதிர்ந்து கார்த்திகேயனின் கைகை இறுக பற்றிக் கொண்டாள் கயல்விழி.

“ஏய் புள்ளைய பறி கொடுத்தவன் வயிறெறிஞ்சி சொன்னான்” என்று சிவபாலன் சொன்னதும்

“அவரு சொன்னதும் நீங்க நம்பிட்டீங்க. நீங்க பேசுறது என் பொண்டாட்டிய. அத மறந்துடாதீங்க” கார்திகேயனுக்குள் கோபம் கட்டுக்கடங்காமல் பற்றி எறிந்தாலும் நிதானம் தவறாமல் பொறுமை காத்தான்.

“டேய் அறிவு கெட்டவனே, நடத்த கெட்டவள கட்டியிருக்கன்னு சொல்லுறேன். புத்திகெட்டு அலையிரியா? முழிச்சிக்கடா…” கயல்விழி தன் கணவனை ஏமாற்றி அவனுடைய தோழனோடு உறவு வைத்திருந்ததாகவும் அது தெரிய வந்ததும் கணவனையே போலீசில் மாட்ட வைத்து உத்தம பத்தினி போல் ஊருக்கு வந்திருப்பதாகவும் சந்தோஷின் தந்தை டாக்டர் மோகனசுந்தரமே சிவபாலனிடம் கூறியிருந்தான். 

தன் பேச்சை தன் பிள்ளைகள் கேட்பதில்லை. முக்கியமாக கார்த்திகேயன் கேட்பதில்லை. கயல்விழி வந்த பின்பு சுத்தமாக கேட்பதில்லை. விவாகரத்தான அவளை திருமணம் செய்து கொண்டது சிவபாலனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.  கார்த்திகேயனுக்கு கயல்விழி கொஞ்சமேணும் பொருத்தமில்லை. அவளை அவனது வாழ்க்கை இருந்து விலக்க வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தவனுக்கு கயல்விழி ஏன் அவளுடைய முன்னாள் கணவனிடமிருந்து விவாகரத்து வாங்கினாள் என்று விசாரிக்க தோன்றியது. விசாரித்ததில் தான் டாக்டர் மோகனசுந்தரத்தை பற்றி அறிந்து கொண்டிருந்தான். அவரிடம் சென்று கயல்விழியின் கடந்த திருமணத்தைப் பற்றி விசாரித்தால் தன்னுடைய மகனைப் பற்றி குறை கூறுவாரா இவ்வாறு தான் கூறியிருந்தார்.

உண்மையை உள்ளபடியே கூறினால் கூட இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. குற்றம் நடக்கவே பெண் தான் காரணம் என்பது போல் பெண்கள் மீதுதான் குற்றம் கூறுவார்கள். அப்படி இருக்க டாக்டர் மோகனசுந்தரம் உண்மையை திருத்தி கூறியிருக்கிறார்.

அதை சிவபாலன் நம்பியது மட்டுமல்லாது, வீட்டில் வந்து கூறிக் கொண்டிருக்கிறார். அதை வீட்டாரும் நம்பிவிட்டால் தன்னைப் பற்றி எவ்வாறு நினைப்பார்கள் என்று எண்ணுகையில் கயல்விழியின் உடல் ஆட்டம் கண்டது. அதைவிட தன் வாழ்க்கையில் நடந்த கொடூர சம்பவத்தை மறக்க முடியாமல் இத்தனை வருடங்களாக துடிக்கிறாளோ, அதையே தன் வாயால் சொல்ல நேரிடும் என்று நினைக்கையில் கயல்விழிக்கு மயக்கமே வரும் போல் இருந்தது. தன் புறம் சாய்தவளை தாங்கிப் பிடித்திருந்தான் கார்த்திகேயன்.

“ரொம்ப நல்லா நடிக்கிறா. முதல் இவள வீட்டை விட்டு தொரத்து” என்றான் சிவபாலன்.

“யாரோ ஒருத்தன் சொன்னான்னு நம்புறீங்க. உங்க பையன் நான் சொன்னா நம்ப மாட்டீங்களா? என் பொண்டாட்டி வாழ்க்கையில் என்ன நடந்தது என்று எனக்கு நல்லாவே தெரியும்” என்றவன் பல வருடங்களுக்கு முன்னாக ஆஸ்திரேலியா நியூஸாக வந்த செய்தியை அலைபேசியில் சேகரித்து வைத்திருப்பான் போலும் அதை எடுத்து காட்டியிருந்தான்.

அது தமிழில் தான் இருந்தது. அவன் தெரிந்தே தான் அதை தமிழாக்கத்தில் வைத்திருந்தான். அதை பார்த்து வீட்டார் அனைவரும் அதிர்ச்சி அடைய, கயல்விழியின் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென வழிந்தது.

அதை பார்த்த பின்னும் சிவபாலன் மனம் இறங்கவில்லை “ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா? இவ தப்பு பண்ணிட்டு, அவனுங்கள போலீஸ்ல புடிச்சு கொடுத்திருப்பா. இந்த மாதிரி ஒருத்தி உனக்கு பொண்டாட்டியா? முதல்ல இவள அத்து விட்டுடு” என்றான்.

கயல்விழி நினைத்தது தான் நடந்தது. அதையே சிவபாலன் கூறியதும் அவள் உடல் இறுகியது. மூக்கு விடைக்க பெருமூச்சு விட்டாள்.

சிவபாலன் கூறியதை அங்கிருந்த யாருமே நம்பவில்லை. ஏன் வள்ளி கூட நம்பவில்லை. ஒரு வேலை கயல்விழி ஊருக்கு வரும் முன் கூறியிருந்தால் நம்பி இருப்பார்களோ, என்னவோ, இந்த ஒரு வாரமாக சின்ன மருமகளோடு இருந்தவளுக்கு கயல்விழி தப்பான பெண்ணில்லை என்று மட்டும் புரிந்தது. ஆனால் வேறொருவனால் சீரழிக்கப்பட்ட பெண் தன் மகனின் மனைவியா என்று எண்ணுகையில் கசந்தது.

“அப்பா கார்த்தி… அப்பவே சொன்னேன் இந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு வேணாம்னு சொல்லி. ஏம்பா பிடிவாதம் பிடிக்கிற?” வள்ளியின் பேச்சில் உடைந்தே போனாள் கயல்விழி.

“அவனே உடம்பு முடியாம இருக்கான். அவன் கிட்ட போய் தேவையில்லாத பேசிகிட்டு” இந்த விஷயத்தை இவ்வாறு சட்டென்று பேசி தீர்க்க முடியாது என்று புரியவே சபையை கலைக்க முயன்றான் தினகரன்.

அது சிவபாலனை அசைத்ததோ, இல்லையோ, வள்ளியை அசைத்தது. “கார்த்தி உடம்பு முடியாம இருக்க, கண்டதை யோசிக்காமல் முதல்ல உள்ள போ” என்றாள்.

“அவனுக்கு உண்மையிலே உடம்பு முடியாம இருக்கா? இல்ல இவள கல்யாணம் பண்ண பொய் சொன்னானா என்று உன் மகனையே நீ கேளு. இவ சொல்லித்தான் இவன் அப்படி ஒரு பொய்யை சொல்லி இருப்பான்” என்றான் சிவபாலன்.

கார்த்திகேயன் பொய் சொன்னான் என்றெல்லாம் சிவபாலனுக்கு தெரியவில்லை. கயல்விழியை பற்றி உண்மையை அறிந்த பின்னும் அவளை திருமணம் செய்தவன், தங்களிடம் பொய் கூட சொல்லி இருப்பான் என்று கணித்தான்.

கயல்விழி அவனை கண்ணீரோடு முறைத்துப் பார்க்க, ஒரு உண்மை தெரிந்ததற்கே இந்த ஆட்டம் என்றால், இந்த உண்மையும் தெரிந்தால் சோலி முடிஞ்சது என்று அறிந்த கார்த்திகேயன் விழித்துக் கொண்டான்.

வக்கீலான அவனுக்கு பேச சொல்லியா கொடுக்க வேண்டும்?

“ஆமா கண் முன்னாடி இருக்கிற உண்மையை உங்களுக்கு புரிய வைக்க முடியல. இதுல நான் புதுசா தான் பொய் சொல்லணும்” என்றவன் “இவளுக்கு நடந்த எல்லாத்துக்கும் நீங்கதான் முழு காரணம்” என்று தந்தையையே குற்றம் சொன்னான்.

“டேய் என்னடா பேசுற?” தைரியமாக இருக்கும் கயல்விழியின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தேறி இருக்கிறது என்று அதிர்ச்சியில் பார்த்திருந்த பார்த்திபன் முதன் முறையாக வாய் திறந்தான்.

ஏற்கனவே தந்தை கோபமாக இருக்கிறார். தம்பி இவ்வாறெல்லாம் பேசினால் தந்தையின் கோபம் அதிகமாகுமே தவிர குறையாது என்று தான் பேசினான்.

“நீ பேசு டா தம்பி” என்று அது அவனுக்கு எடுத்துக் கொடுத்தது போல் தான் இருந்தது.

“பின்ன என்னடா… இவ அப்பா உடம்பு முடியாம ஹாஸ்பிடல் படுத்திருக்கும் போது, இவள என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டாரு. அப்பவே இவள கூட்டிகிட்டு வீட்டுக்கு வந்து பேசினோமே. அப்போ இவரு கல்யாணம் பண்ணி வெச்சிருந்தா? இவ வேற ஒருத்தன கல்யாணம் பண்ணி இருப்பாளா? இவரு நமக்கு கல்யாணம் பண்ணி வைக்காததனால தானே இவ அவளோட அப்பா ஆசையை நிறைவேத்த வேற ஒருத்தனுக்கு கழுத்த நீட்டினா. அதனால தானே இவளுக்கு அப்படியெல்லாம் ஆகிருச்சு. அதுக்கு காரணம் இவர்தானே” என்று விரல் நீட்டி நீட்டி தந்தையை பார்த்து பேசினான் கார்த்திகேயன்.

“நானாடா சொன்னேன் இவளுக்கு அவன கல்யாணம் பண்ணிக்க சொல்லி. நானா இவளுக்கு மாப்பிள்ளை பார்த்தேன்” கோபத்தில் கொதித்தான் சிவபாலன்.

“இவர் மட்டுமல்ல. இதோ இவங்களும் தான் காரணம். பெத்த பையன் ஆசைப்படுறானே என்று கொஞ்சம் மகனைப் பத்தி யோசிச்சாங்களா? யோசிச்சிருந்தா,  இவங்க முன்னாடி நின்னு எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க. வைக்கலையே. வெச்சிருந்தா…  அன்னைக்கு அவளுக்கு அப்படி நடந்திருக்காது. எங்கள இப்படி நிக்க வச்சு பிரச்சினை பண்ணிக்கிட்டு இருந்திருக்க மாட்டீங்க” என்றான்.

அவன் பேசுவது கயல்விழிக்கே அபத்தமாகப்பட்டது. அவள் இருந்த மனநிலையில் அவன் பிரச்சனையை திசை திருப்பத்தான் அவ்வாறு பேசுகிறான் என்று அவளுக்கு புரியவில்லை.

“டேய் என்னடா பேசுற? நடந்து முடிஞ்சத பத்தி பேசி என்னடா பிரயோஜனம்” என்று வள்ளி கேட்க,

அவள் ஒரு அர்த்தத்தில் சொல்ல கார்த்திகேயன் அதை பிடித்துக் கொண்டு “ஆ அத அங்க சொல்லு” என்று சிவபாலன் பக்கம் கையை காட்டினான்.

தங்களுடைய திருமணத்தால் ஏற்கனவே சிவபாலனுக்கும் கார்த்திகேயனுக்கும் இடையில் பிரச்சினை. இதில் இந்த விஷயத்தில் கார்த்திகேயன் வீணாக பேசி இன்னும் பிரச்சனையே வளர்க்கிறான் என்று தான் கயல்விழி எண்ணினாள்.

“இப்ப எதுக்கு நீ அவங்கள குத்தம் சொல்லிக்கொண்டே இருக்க? எனக்கு நடந்த எல்லாத்துக்கும் அவங்க காரணம் இல்ல. நீ தான் காரணம்” கார்த்திகேயனை பார்த்து கத்தினாள் கயல்விழி.

“ஏய் என்னடி” சூழ்நிலை புரிந்து கொள்ளாது இவள் வேறு படுத்துகிறாளே என்றுதான் கார்த்திகேயன் அவளை அதட்டினான். “புரிந்துகொள்ளேன்” என்று பார்வையால் கெஞ்ச வேறு செய்தான். ஆனால் அவன் மனையால் அவனை பார்த்தால் தானே.

“காதலிக்கும் போதும் உன்கிட்ட நான் எத்தனை தடவை சொல்லி இருப்பேன் என்ன உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ, கூட்டிட்டு போ, கூட்டிட்டு போய் உன் அம்மா அப்பா எல்லார்கிட்டயும் அறிமுகப்படுத்த சொல்லி சொன்னேனே. பண்ணியா? நீ பண்ணல. அதனால தான் இப்படி எல்லாம் ஆயிடுச்சு.

இதோ உங்க அண்ணன் கல்யாணம் நடந்திருச்சு அப்பவாச்சும் கூட்டிட்டு போய் அறிமுகப்படுத்தி இருந்தா, உங்க அம்மாக்கு என்ன பிடிச்சிருக்கும். உங்க அப்பாக்கு என்ன பிடிச்சிருக்கும். நீ என்ன லவ் பண்றதா சொல்லி, அவங்க எதிர்த்து இருந்தா, காரணத்த கேட்டு இருக்கலாம். என்னை பிடிக்க வைச்சு இருக்கலாம். பண்ணியா நீ? பண்ணியா?” என்று சொல்லி சொல்லி அவனை கைகள் வலிக்கும் வரை அடிக்கலானாள்.

கார்த்திகேயன் கோபப்பட்டு இருந்தால் அவன் வார்த்தைகளோ “அடிப்பாவி. நான் வேணான்னு விட்டுட்டு போய் வம்படியா அவன கல்யாணம் பண்ணி. வம்பை இழுத்துக் கொண்டது நீதாண்டி” என்று தான் வந்திருக்கும்.

ஆனால் அவனோ காயம் பட்ட அவள் மனதை மேலும் நோகடிக்க விரும்பாமல் “ஆமாண்டி தப்பு எல்லாம் என் மேல தான். உங்க அப்பா ஹாஸ்பிடல் படுத்துகிட்டு என் பொண்ண கல்யாணம் பண்ணிக்க என்று கேட்ட போவே, உன் கழுத்துல தாலிய கட்டி இருக்கணும். பண்ணாம விட்டது என் தப்பு தான். அப்படி பண்ணி இருந்தா.. எந்த பிரச்சனையுமே வந்து இருக்காது” என்றான்.

“ஆமா ஆமா உன் தப்பு தான். உன் தப்பு தான். ஏன் நீ பண்ணல. ஏன் நீ பண்ணல” என்று அவனை அடிப்பதை அவள் நிறுத்தவே இல்லை. அவளை பார்த்தவன் அவள் கொடுத்த அடிகளை அமைதியாக வாங்கிக் கொண்டான்

அவனை அடித்து ஓய்ந்தவள் அவன் கைகளிலே மயங்கி சரிந்தாள்.

உள்ளிருக்கும் இதயத்துக்கு

எனை புரியும் யாருக்குத்‌தான்

நம் காதல் விடை தெரியும்

காதல் சிறகானது

இன்று சருகானது

என் உள்நெஞ்சம்

உடைகின்றது

உன் பாதை

எது என் பயணம்

அது பனி திரை

ஒன்று மறைக்கின்றது

ஏன் இந்த சாபங்கள்

நான் பாவம் இல்லையா

விதி கண்ணாமூச்சி

விளையாட நான்

காதல் பொம்மையா

விழியிலே என்விழியிலே

கனவுகள் கலைந்ததே

உயிரிலே நினைவுகள் தழும்புதே

கண்களில் கண்ணீர் வந்து

உன் பெயரையே எழுதுதே

முத்தமிட்ட உதடுகள் உளறுதே

நான் என்னை காணாமல்

தினம் உன்னை தேடினேன்

என் கண்ணீர் துளியில்

நமக்காக ஒரு மாலை சூடினேன்

பார்த்தீபனின் அலைபேசி அடித்தது. கண்மணி அழைத்து ஏன் இன்னும் வரவில்லை என்று பார்த்தீபனை கேட்டிருக்க, வீட்டில் நடந்த எதையும் கூறாமல் காலையில் வருவதாக கூறி அலைபேசியை அனைத்து விட்டான்.

மயங்கி சரிந்த கயல்விழியை தூக்கி சோபாவில் கிடத்திய கார்த்திகேயன் அவள் தலையை கொதி விட்டு, அவள் கைகளை பற்றிக் கொண்டான்.

“கார்த்தி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்டலாம்” என்றான் தினகரன்.

“அவளுக்கு ஒண்ணுமில்ல. கொஞ்சம் எமோஷனலாகிட்டா. அவ்வளவு தான்” என்றவன் “நான் உங்க எல்லார் கிட்டயும் பேசணும்” என்றவன் தந்தை அமர்ந்திருந்த இடத்துக்கே வந்தான்.

“கயல் வாழ்க்கைல என்ன நடந்தது என்று தெரிஞ்சே தான் நான் அவள கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சொல்லப்போனா பிடிவாதமா, அவ சம்மதம் இல்லாம தான் பண்ணிக்கிட்டேன். என்ன கல்யாணம் பண்ணிகிட்ட பிறகு அவளுக்கு அப்படியொரு சம்பவம் நடந்திருந்தா, நான் ஒரு காலமும் அவளை கைவிட்டிருக்க மாட்டேன். அதனால கயல விடச் சொல்லி முட்டாள் தனமா பேசிகிட்டு இருக்காதீங்க” தந்தையை பார்த்தவாறே கூறியவன்

வள்ளியை பார்த்து “அவ இல்லாத வாழ்க்கையை எனக்கில்லை. உங்களால அவ வாழ்க்கைல நடந்தத மறந்து அவள ஏத்துக்க முடியலைன்னா. என்னையும் மறந்துடுங்க. உங்களுக்கு பொறந்ததே ரெண்டு பசங்க என்று நெனச்சுக்கோங்க”

தன் மகனின் சந்தோஷத்துக்காக அவனை திருமணம் செய்ய மறுத்தவள் நிச்சயமாக தப்பான பெண்ணாக இருக்க முடியாது என்று நொடியில் வள்ளியின் ஞாபகத்துக்கு வந்தது. கார்த்திகேயனின் பிடிவாத குணமும் அவளுக்கு நன்றாகவே தெரியும். இத்தனை வருடங்கள் பெத்த மகனே பிரிந்து இருந்து விட்டாள். மொத்தமாக இழுந்து விட முடியுமா? அதனால் ஒரு பெருமூச்சோடு அமைதியானாள்.

“டேய் என்னடா….” பார்த்திபன் அவன் தோளில் கை வைத்திருக்க, தினகரன் அமைதியாக அருகில் வந்து நின்று கொண்டான்.

“கயல இவ்வளவு வெறுக்குறீங்கல்ல. அவ வேற யாரோ இல்ல. உங்க தங்கச்சி பொண்ணு” என்று கார்த்திகேயன் சொல்ல

“டேய் கார்த்தி என்னடா சொல்லுற? ஏண்டா இத இத்தன நாள் எங்க கிட்ட சொல்லாம இருந்த” முகம் மலர்ந்தாள் வள்ளி.

வள்ளி வாய்விட்டு கேட்டதை சிவபாலன் கண்களாளேயே கேட்டு அமைதியாக அமர்ந்திருந்தான்.

தன்னுடைய பெற்றோர்கள் வீண் பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்று இவன் அப்பாவின் தங்கை ஓடிப்போன கதையை கயல்விழியிடம் கூற,

அவளோ “ஏன்டா பேத்த லாயரே. ஓடிப்போன உங்க அத்தைய கண்டு பிடிக்கணும் என்று எப்பவாச்சும் யோசிச்சியா? உங்கப்பா கோவத்துல விட்டுட்டாரு. போனவங்க புள்ள குட்டியோட சந்தோசமாக வாழ்ந்தா சரி. அவங்களுக்கு ஏதாவது ஆகியிருந்தா?” என்று அச்சத்தோடு கேட்டாள்.

அவள் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தால் தான் அவள் இவ்வாறு நினைத்து அச்சப்படுகிறாள் என்று கார்த்திகேயனுக்கு புரியாமலில்லை.

“எனக்கென்னமோ என் அத்த பொண்ணே நீ தான் என்று தோணுது” என்று இவன் வம்பிழுத்து அவளை அப்போதைக்கு சமாதானம் செய்திருந்தான்.

ஆனால் அவளோ விசாரிக்கும்படி இவனை நச்சரித்தாள்.

பார்த்தீபன் குழந்தைகளை தத்தெடுக்க போவதாக கூறிய பொழுது ஓடிப்போன அத்தை பற்றி கேட்டான்.

“அவங்க ஓடிப் போய் நாப்பது வருஷம் இருக்குமா?” தம்பி காரணமில்லாமல் கேட்கமாட்டானே என்று அன்னையிடம் கேட்டு தகவல்களை பெற்றுக் கொடுத்திருந்தான்.

கயல்விழி ஒன்றும் ஓடிப்போன அத்தை தமிழ் செல்வியின் மகள் அல்ல. தேன்மொழியின் மகள். யாரோ எவளோ என்றால் கண்டுகொள்ள கூட மாட்டார்கள். தன்னுடைய இரத்தம் என்றால் தான் துடிப்பார்கள். ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை செய்ய முடியும் என்றால், ஒரே ஒரு பொய்யைச் சொல்லி கயல்விழியை தன் குடும்பத்தோடு இணைத்து வைக்க முடியாதா? என்றுதான் வாயில் வந்ததை சட்டென்று என்று கூறியிருந்தான் கார்த்திகேயன்.

கயல்விழி மட்டும் கண் விழித்திருந்தால் மீண்டும் அவனை அடித்திருப்பாள். 

மாடிக்குச் சென்று தங்களது பைகளை சுமந்து வந்தவன் “சரி நாங்க கிளம்புறோம்” என்றான்.

“இந்த நைட்ல எங்கடா கிளம்புற?” கேட்டான் பார்த்திபன்.

“விடிய காலையிலயே சென்னைக்கு கிளம்பலாம் என்று தான் இருந்தேன். நைட்டே கிளம்பினால் காலையில வேலையை பார்க்கலாம்” பேசியவாறு சென்று வண்டியில் பைகளை வைத்துவிட்டு வந்தவன், கயல்விழியை தூக்கிச் சென்று வண்டியில் அமர்த்தினான்.

கயல்விழி கண் விழித்தால் அவளுக்கு சங்கடமாக இருக்கும் என்று தினகரனோ, பார்த்திபனோ அவனை தடுக்கவில்லை. வள்ளி மட்டும் விடிந்த பிறகு செல்லலாமே என்றாள் கார்த்திகேயன் செவி சாய்க்காமல் கிளம்பி விட்டான்.

நீ காற்று

நான் மரம்

என்ன சொன்னாலும்

தலையாட்டுவேன்

நீ மழை நான் பூமி

எங்கு விழுந்தாலும்

ஏந்திக்கொல்வேன்

நீ இரவு நான் விண்மீன்

நீ இருக்கும் வரை தான்

நான் இருப்பேன்

நீ அலை நான் கரை

என்னை அடித்தாலும்

ஏற்றுக்கொள்வேன்

நீ உடல் நான் நிழல்

நீ விழ வேண்டாம்

நான் விழுவேன்

நீ கிளை நான் இலை

உன்னை ஒட்டும் வரைக்கும்

தான் உயிர்த்திருப்பேன்

நீ விழி நான் இமை

உன்னை சேரும் வரைக்கும்

நான் துடித்து இருப்பேன்

நீ சுவாசம் நான் தேகம்

நான் உன்னை மட்டும்

உயிர் தொட அனுமதிப்பேன்

நீ வானம் நான் நீலம்

உன்னில் நானாய்

கலந்திருப்பேன்

நீ எண்ணம் நான் வார்த்தை

நீசொல்லும் பொழுதே

வெளிப்படுவேன்

நீ வெயில் நான் குயில்

உன் வருகை பார்த்து தான்

நான் இசைப்பேன்

நீ உடை நான் இடை

உன்னை உறங்கும் பொழுதும்

நான் உடுத்திருப்பேன்

நீ பகல் நான் ஒளி

என்றும் உன்னை மட்டும்

சார்ந்தே நான் இருப்பேன்

பெண்களிடம் பேசவே தயங்கும் ஆணிடம் கேட்டால் ஒரு பெண்ணிடம் தன் மனதை திறந்து காதலை சொல்வது தான் கடினம் என்பான். காதலை கூட வாய் மொழியாக ஒப்புவிப்பான். ஆனால் காதலை உணர்த்த அவன் வாழ்நாள் கூட போதாது.

காதலை சொல்வது கூட இலகுதான். வார்த்தைகள் கூட தேவையில்லை. கண் ஜாடையே போதும்.

காதலை உணர்த்துவது தான் கடினம். வாழ்ந்துதான் பார்க்க வேண்டும். வாழ்ந்துதான் காட்ட வேண்டும். வாழ்ந்துதான் உணர்த்த வேண்டும்.

அதுவும் தன் துணைக்கு ஒரு பிரச்சினை என்றால் கார்த்திகேயன் உறுதுணையாக நின்று காதலை உணர்த்துவது போல் எத்தனை பேர் தான் உணர்த்துவார்கள்? அவன் காதலின் ஆழத்தையும், வலிமையையும் உணர்ந்து கொள்வாளா கயல்விழி.

Advertisement