Advertisement

வீட்டிலிருந்து தினகரனும், பார்த்திபனும் அழைத்து எந்த பிரச்சினையும் இல்லையே என்று கேட்டிருக்க, கார்த்திகேயன் இல்லை என்றிருந்தான்.

கயல்விழிக்கு அவர்கள் அழைத்தது தெரியும். என்ன பேசினார்கள் என்று கேட்கவில்லை. கார்த்திகேயனிடம் யாரும் வேண்டாம் என்று சொன்னவள் தான். அதற்காக உறவை துண்டித்து வாழ நினைக்கவில்லை. அவர்கள் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லையாயின் தான் வலிய சென்று உறவு கொள்வதின் அவசியம் என்ன என்று எண்ணினாள். இவளிடம் பேச வேண்டும் என்றால் வீட்டார் இவளை அழைத்து பேசுவார்களே என்று விட்டு விட்டாள்.

நடந்த சம்பவம் எதுவுமே கண்மணிக்கு தெரியாது. மதியழகி அழைத்து பேசுவது என்றால் தினகரனின் அலைபேசியில் இருந்து தான் அழைத்துப் பேச வேண்டும். கயல்விழியிடம் பேச வேண்டும் என்று இவள் அவனிடம் கேட்பாளா? வள்ளி அழைத்துப் பேசினால் தான் உண்டு. இரண்டு நாட்களாக யாரும் அழைக்கவில்லை.

கயல்விழி மற்றும் கார்த்திகேயனின் வாழ்க்கை எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. ஆனால் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. கயல்விழி அவளுடைய தடையை உடைத்து வெளியே வர வேண்டும் என்று கார்த்திகேயன் காத்திருக்க, கார்த்திகேயனே தன்னை நெருங்கி வரட்டும் என்று கயல்விழி காத்திருந்தாள்.

ஒரு நாள் கோபத்தில் கயல்விழி கார்த்திகேயனை மூக்கொலியன் என்று அழைத்திருக்க, அவளை விரட்டிச் சென்று வளைத்து பிடித்தவன் இதழோடு இதழ் பொருத்தி “இனிமே அந்த பேர சொல்லிக் கூப்பிடுவியா? கூப்பிட்டா இதுதான் தண்டனை” என்று மிரட்டினான்.

அவனை வம்பிழுக்க இவள் மூக்கொலியன் என்று அவனை அழைக்க, அவனும் இவளுக்கு இதழ் முத்தம் வைக்க, அதைப் பற்றிக் கொண்டவள் முத்தம் வேண்டும் என்று கூறாமல் மூக்கொலியன் என்று அழைக்கலானாள்.

அந்தப் பேரை அழைத்தால் அவனுக்கு அப்படி என்ன கோபம் வருகிறதோ தெரியவில்லை. இவளுக்கு தண்டனை கொடுப்பதாக சொல்லி முத்தத்தை வாரி வழங்கலானான்.

அவனோடு வாழ வேண்டும் என்ற பேராசை அவளுக்கும் எழுந்தது. தங்களுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு அடி எடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் தோன்றவே அதை அவனிடம் எவ்வாறு சொல்வது என்று அவளுக்குள் ஒரு தடுமாற்றம்.

சூசகமாக சொல்லலாமென்றெண்ணி ஒரு நாள் இரவு அவனிடம் நாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என்று கேட்டிருந்தாள் கயல்விழி. கார்த்திகேயனுக்கு சுறுசுறுவென கோபம் வந்தது.

ஏற்கனவே குழந்தையை தத்தெடுக்கலாம் என்றவள், தான் அன்று பேசியதை மனதுக்குள் வைத்துக்கொண்டு இப்பொழுது டெஸ்டியூப் பேபியை பற்றி தான் பேசப் போகிறாள் என்று “இப்போ ஒன்னும் அவசரம் இல்ல. பேசாம தூங்கு” என்றான்.

அவள் மனதை இவ்வாறு தானே புரிய வைக்க முடியும். அதனால்தான் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என்று கேட்டிருந்தாள். அது அவனுக்குப் புரியவில்லை. “சரியான மரமண்ட” என்று திட்டி விட்டு தூங்கலானாள்.

சரி நாமலே முயற்சி செய்வோம் என்று “போடா மூக்கொலியா” என்று அவனை திட்டுவாள்.

அந்தப் பெயரை சொன்னால் தானே அவனுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்து, அவளுக்கு தண்டனை கொடுக்கிறேன் என்ற பெயரில் இதழ் முத்தம் வைப்பான்.

அடிவயிற்றில் உணரும் அந்த உணர்வு, தன் மெய் தீண்டி, உயிர் தீண்டி, இதழால் உருக வைத்து சூறாவளிக்குள் சிக்கிக் கொண்ட உணர்வு. அந்த உணர்வு அவ்வளவு பிடித்தது. அவன் இதழ் கொள்ளையிடும் வேகம். உருகிப் போனாள். அவனை விலக விடாது இவள் அவனை கொள்ளை இட முயன்றால் மட்டும், அவளை தன்னிடம் இருந்து மெதுவாக விலக்கி, அவள் இதழ்களை விரலால் வருடி விட்டு “தூங்கு கயல்” என்பான்.

இவளுக்கு சப்பென்று என்றாகிவிடும்.

அவனிடம் நேரடியாக சொல்ல அவளுக்கு சங்கோஜமாக இருந்தது. நாட்கள் தான் நகர்கின்றதே ஒழிய அவனுக்கு எவ்வாறு புரிய வைப்பது என்றும் இவளுக்கும் புரியவில்லை.

“நான் ஒரு புக் எழுதலாம் என்று இருக்கேன்” வேலை பார்த்துக் கொண்டிருந்த கயல்விழி சட்டென்று கூற,

“இருக்கிற வேலையில எதுக்கு வேண்டாத வேல?” என்று கேட்டான் கார்த்திகேயன்.

“ஏன் இதுக்கு முன்னாடி லாயர்ஸ் புக்கே எழுதினது இல்லையா? ஜெயிலுக்கு போற கைதிங்களே புக் எழுதறாங்க” அவனை முறைத்தவாறே

“பாலியல் பலாத்காரத்துக்குட்பட்ட பெண்கள ஹஸ்பன்ஸ் ஏத்துக்கிட்டாலும், அவங்கள ஒதுக்கி வைக்கிறாங்க என்று ஒரு ரிப்போர்ட் இருக்கு. அந்த ஹஸ்பண்ட்ஸோட மனநிலை என்ன? ஏன் அவங்க ஒதுக்கி வைக்கிறாங்க என்று ரிசர்ச் பண்ண போறேன். அந்தப் பொண்ணுங்களுக்கு மட்டுமல்ல ஹஸ்பன்ஸுகளுக்கும் சேர்த்து கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று சொல்ல போறேன்” என்றாள்.

அவள் சொன்ன விஷயத்தை விட, அவள் சொன்ன விதம் கார்த்திகேயனை யோசனைக்கு உள்ளாக்கியது.

கயல்விழியை அழைத்து கண்மணி பலமுறை பேசி இருந்தாள். அவள் பேச்செல்லாம் குழந்தைகளை பற்றியதாக மட்டுமே இருந்தது. நடந்த சம்பவம் எதுவும் அவளுக்கு தெரியவில்லை. பார்த்திபன் அவளிடம் எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று அவளின் பேச்சில் புரிந்து கொண்டாள் கயல்விழி. அதனால் அவளோடு சகஜமாக இவளால் பேச முடிந்தது. வீட்டாரைப் பற்றி இவளும் கேட்கவில்லை. கண்மணியும் எதுவும் பேசவில்லை.

புது எண்ணில் இருந்து அழைப்பு வரவும் யோசனையாகவே எடுத்துப் பேசினாள். காரியாலயத்தில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் வழக்குகள் வந்து, கயல்விழி செல்ல நேர்ந்தால் அதனால் அவளுக்கு ஏதாவதாகி விடுமோ என்று விசிட்டிங் கார்டில் அவளது எண்ணை இணைக்க மறுத்தான் கார்த்திகேயன். அதனால் அவளுக்கு தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வர வாய்ப்பில்லை என்றெண்ணியவாறு தான் பேசினாள். அழைத்ததோ மதியழகி.

“நல்லா இருக்கியா கயல்?” சாம்பிரதாயமாக கேட்டவள் “மாமா எனக்கு புது போன் வாங்கி தந்துட்டாரு” என்றாள்.

“அக்கா கலக்குறீங்க” என்று இவள் கிண்டல் செய்ய,

 “போ… கயல்” என்று அவள் கதை சொல்ல ஆரம்பித்தாள்.

காலேஜ் செல்லும் மதியழகியின் தம்பி ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கிறான் போலும் அதை பார்த்த உறவில் ஒருவர் அதை வீட்டில் சொல்லிவிட அது சிவபாலனின் காதுக்கு வந்து விட்டது. இது போதாதா உடனே நாட்டாமை செய்ய தங்கையின் வீட்டுக்கு கிளம்பி விட்டான். 

பார்த்திபன் மற்றும் கார்த்திகேயனின் காதல் விவகாரத்தில் மாமனார் எவ்வாறு நடந்து கொண்டார் என்று பார்த்த மதியழகிக்கு கை கால் உதற ஆரம்பித்தது. கல்லூரிக்குச் செல்லும் தம்பிக்கு உடனே திருமணம் செய்து வைத்து விடுவாரோ என்று அஞ்சி இவளுக்கு ஜுரமே வரும் போலிருக்கு என்ன செய்வது என்று கூட தெரியவில்லை. கொஞ்சம் நாட்களாகத்தான் கணவன் சாதாரணமாக பேசுகிறான். அவனுக்கு அலைபேசி அழைப்பு விடுத்து பேசலாம் என்று பார்த்தால் அவளுக்கோ வள்ளிக்கோ அலைபேசி கூட இல்லை. தினகரன் வீட்டுக்கு வந்தால் தான் வீட்டாரே இவளுக்கு அழைப்பு விடுப்பார்கள் அல்லது சிவபாலனின் அலைபேசிக்கு தான் அழைப்பு விடுத்து பேசுவார்கள். அப்படி இருந்தது மதியழகியின் நிலை. வெளியே சென்று தொலைபேசி தொடர்பு கொண்டு விட்டு வரலாம் என்று பார்த்தால் வள்ளியோ அவளை வெளியே செல்லக்கூடாது என்று கூறிவிட்டாள் மாமியாரை மீறி அவளால் வெளியே செல்ல முடியவில்லை.

“ஏண்டி ஒரு போன் பண்ணி சொல்ல கூடாது. அமுகுனி மாதிரி வீட்டில் உட்கார்ந்து இருக்க. உன் தம்பி எனக்கு போன் பண்ணான். இல்லனா எங்கப்பா இல்லாத பிரச்சினை பண்ணியிருப்பாரே” வீட்டுக்கு வந்ததும் வராது தினகரன் மதியழகியை திட்ட ஆரம்பித்தான்.

“என் கிட்ட தான் போனே இல்லையே” என்றவள் அவன் பார்த்த பார்வையில் “அத்த கிட்டயுமில்ல. வெளிய போகக் கூடாது என்று சொல்லிட்டாங்க” என்றாள்.

மதியழகிக்கு விவரம் பத்தாது என்று பாடசாலைக்கு அவன் எண்ணை தான் கொடுத்திருந்தான் தினகரன். அவள் வீட்டார் மட்டும் தானே அவளை அழைத்துப் பேசுகிறார்கள் தான் வீட்டில் இருக்கும் பொழுது பேசினால் போதாதா? அப்படியே அவசரம் என்றால் தந்தையின் எண்ணை தொடர்பு கொள்வார்கள் என்று அலட்ச்சியமாக இருந்து விட்டான். அவள் தன்னையோ, பிறரையோ தொடர்புகொள்ள வேண்டுமாயின் என்ன செய்வாள் என்று யோசிக்கத் தவறினான்.

அவள் தன்னிடம் அலைபேசி இல்லை என்றதும் அவனுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. அவன் முறைப்பதாக நினைத்து வள்ளியிடமும் அலைபேசி இல்லை என்ற விட அவன் முகம் கனிந்தது.

முதல் வேலையாக அலைபேசியை வாங்கி வந்து அனைவரின் பெயரையும், எண்ணையும் போட்டுக் கொடுத்தவன் அனைவருக்கும் அழைத்து பேசுமாறு கூறியிருக்க, அன்னைக்கு அழைத்தவள் அதன்பின் கயல்விழியை அழைத்திருந்தாள்.

“அப்போ ஒரே ரோமன்ஸ் தான் போங்க”

“என்ன ரொமான்ஸ்” மதியழகி புரியாது முழிக்க,

“அதான் மாமா வீட்டுக்கு வரும் போது டைலி மல்லிப்பூ வாங்கிட்டு வராரு உங்களுக்குத்தானே. இப்போ போன் வாங்கித்தந்து ஆபீஸ் நேரத்துல பேச வேற சொல்லுறாரா? நீங்க நடத்துங்க” என்று சிரித்தாள்.

ஊரில் இருக்கும் பொழுது மதியழகிடம் வந்த கயல் “என்ன அக்கா இப்படி பண்ணுறீங்க? மாமா ஆசையாசையா பூ வாங்கிட்டு வராரு அத சாமிக்கு சாத்துறீங்க. மாமா மனசு நோகதா?” கிண்டல் செய்வது போல் கேட்டிருந்தாள்.

ஆரம்பத்தில் தனக்குத்தான் வாங்கிக் கொண்டு வருவதாக எண்ணியவள் தான். மாமியார் பார்த்த பார்வையில் சாமிக்கு சாத்தி விட்டாள். கணவனும் எதுவும் சொல்லவில்லை. சாமிக்கு தான் கொண்டு வந்தாரா என்று அவளாகவே நினைத்து சாமிக்கு சாத்தலானாள். தினகரன் அவளிடம் உனக்குத்தான் வாங்கி வந்தேன் என்று கூறியிருந்தால் அவள் அதை வள்ளியிடம் கூறியிருப்பாள். வள்ளியும் பிரச்சனை செய்திருக்க மாட்டாள். அன்னை ஏதாவது கூறியிருப்பார் அதனால் தான் மனைவி தான் கொண்டு வரும் பூக்களை சூடுவதில்லை என்று புரிந்து கொண்டு தன்னால் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று தினகரன் அமைதியாகிவிட்டான்.

இந்த பக்கம் கார்த்திகேயன் “ஏன்டா அண்ணிக்காகத்தானே பூ வாங்கிட்டு வர, அத அவங்க கைல கொடுக்குற. கொடுக்கும்போது வாய திறந்து அத அவங்களுக்காகத்தான் கொண்டு வந்தேன்னு சொல்லு” என்றான்.

“அவ பூ வைக்கலைனாலும் பரவால்ல. அவளால எந்த பிரச்சினையுமில்லாம இருந்தா போதும்” என்றான் தினகரன்.

“எதிர் எதிர் துருவங்கள் தான் ஒன்னு சேரும் என்று சொல்வாங்க. ஆனா நீயும் அண்ணியும் ஒரே மாதிரி இருக்கீங்க. ரெண்டு பேரும் பேசி, சண்டையாகி டிவோர்ஸ் பண்ண கோர்ட்டுக்கு போறதுக்கு பதிலாக இப்படி ரெண்டு பேரும் அமைதியா இருக்குறது நல்லது தான். ஆனா வயசாகி வாழ்ந்த வாழ்க்கைய திரும்பி பார்க்குறப்போ அர்த்தமானதா இருக்கணும். யோசிக்க” என்று விட்டு சென்றான் கார்த்திகேயன்.

அதன்பின் சாமிக்கு வேறு அவளுக்கு வேறு பூவை வாங்கி வந்து கொடுக்க மதியழகி புரிந்து கொண்டாள்.

இன்னும் அவர்களிடம் பெரிதாக பேச்சு வார்த்தை இல்லை. என்ன செய்யலாமென்று கார்த்திகேயனிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருக்கிறான் தினகரன்.

இதை செய், அதை செய், இப்படி செய் என்று அண்ணனுக்கு ஐடியா கொடுத்துவிட்டு, இந்தப் பக்கம் கயல்விழியிடம் அதை பற்றி கூறிச் சிரிப்பான்.

“உன்னை நம்பி உன் அண்ணன் ரகசியம் சொன்னான், நீ அத என்கிட்ட வித்துக்கிட்டு இருக்க” என்று இவள் அவனை அடிப்பாள்.

“உன் புக்குக்கு உதவும் என்று தான் சொன்னேன். அவன நினைச்சா சிரிப்பா இருக்கு. அடுத்த வருஷம் அவனுக்கு நாற்பதாகிடும்” என்றான்

“எந்த வயசிலையும் லவ் பண்ணலாம். உனக்கு முப்பது தாண்டிருச்சு. இன்னும் முப்பது, நாப்பது வருஷம் உன்ன லவ் பண்ணலாம் என்று பார்த்தா, நீ சரிப்பட்டு வர மாட்ட போலே”  என்று வம்பிழுத்தாள்.

“ஓ… பண்ணலாமே…” என்று அவளை மேற்கொண்டு பேச விடாது செய்யலானான்.

அவர்களுக்குப் பேச வழக்குகள் மாத்திரமன்றி வீட்டில் நடப்பவைகளும் இருக்க, இறுக்கமே இல்லாமல் இருவருக்கும் இடையில் இடைவெளி குறைந்து இணக்கமாக இணைந்திருந்தார்கள்.

புத்தகம் எழுதுவதாக கயல்விழி ஒன்றும் சும்மா கூறவில்லை. அது அவளுக்கு நன்மை பயக்கும் என்றாலும், பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்ட பெண்களை சந்திக்க நேரும் பொழுது அவள் அடையும் பதட்டத்தை பார்த்து எங்கே அவள் மீண்டும் தன் கூட்டுக்குள் அடைந்து கொள்வாளோ என்று கார்த்திகேயனுக்கு அச்சமாக இருந்தது. அவன் நினைத்தது போல் சமீபத்தில் மணிப்பூரில் நடந்த நிகழ்வை கேட்டே பதறிவிட்டாள். இதில் ஊடகத்தில் வரும் செய்திகளையும் காணொளிகளையும் பார்த்திருந்தால் மயக்கமே போட்டிருப்பாள்.

ஒரு வழக்கறிஞராக இல்லாமல் அவள் வேற ஏதாவது தொழில் செய்தால், ஒருவேளை இந்த கஷ்டம் அவளுக்கு இருக்காதோ என்றெண்ணி கார்த்திகேயன் மெதுவாக அவளிடம் பேசிப் பார்த்தான்.

“நீச்சல் தெரியலன்னா குதிச்சு கத்துக்கிட்டா தான் உண்டு கார்த்தி. தெரியலன்னு கரையிலிருந்து வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தா சரியா? அது மாதிரி தான் இதுவும். பயந்துகிட்டே ஒதுங்கி போன சரி வராது. எனக்கு வக்கீலா இருக்குறது தான் பிடிச்சிருக்கு. நான் இங்கதான் இருப்பேன். வேறு எந்த வேலையும் பார்க்க மாட்டேன்” உறுதியாக சொல்லி விட்டாள். அதன்பின் கார்த்திகேயன் அவளிடம் அதைப் பற்றி பேசவே இல்லை.

திருமணமாகி எட்டு மாதங்களுக்கு மேலாகி விட்டது. கயல்விழியிடமும் மாற்றம் தெரிகிறது என்று அன்று மாலையே கார்த்திகேயன் அவளிடம் தேனிலவுக்கு செல்லலாமா? என்று கேட்டான்.

இன்று அவளிடம் கேட்கலாம், இப்பொழுது கேட்கலாம் என்று எண்ணுபவன் இல்லை வேண்டாம் என்று விட்டுவிடுவான். அவளை கவனித்ததில் அவளுக்குள் இருக்கும் தடுமாற்றம் மெல்ல புரியவே கேட்டிருந்தான்.

வேண்டாம் என்று தலையசைத்து மறுத்தாள் கயல்விழி.

அவள் குறிப்பு காட்டுவதாக தான் தப்பாக புரிந்து கொண்டு விட்டேன் போலும் என்று உள்ளுக்குள் எழுந்த பேராவளை அடக்கியவாறு “சரி” என்று புன்னகைத்தவன் அவள் கன்னத்தை தட்டி விட்டு நகர்ந்தான்.

“சரியான தத்தி கார்த்தி” அவன் முதுகில் அடித்தவள் “நீ மட்டும் பேசிட்டு அப்படியே போற. நான் என்ன சொல்ல வரேன்னு கேட்க மாட்டியா?” கோபமாக அவனை முறைத்துக் கொண்டு நிற்பவளை ஏறிட்டவன் புரியாமல் பார்த்தான்.

“ஹனிமூன் போகணும் என்றா எங்க போகணும் என்று டிசைட் பண்ணவே உனக்கு டைம் எடுக்கும். அப்புறம் போய் சேரவே ஒரு நாள் ஆகும். அதுவரைக்கும் டைம் வேஸ்ட் பண்ண சொல்றியா?”

என்ன இவன் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறானே என்ற கோபத்தில் தான் பேச ஆரம்பித்தாள். கோபத்தில் அவள் மனதையும் திறந்து விட்டாள். 

புருவம் உயர்த்தி அவளை ஏற, இறங்க பார்த்தவன் “கயல்…” என்று அளவில்லா கிறக்கத்தில் அவள் இதழ்களை முற்றுகை இட்டவாறே அவசர அவசரமாக அவனது சட்டை பட்டன்களை அவிழ்க்கலானான். எத்தனை வருட காதல்? எத்தனை நாட்கள் காத்திருப்பு? அணையை உடைத்த காட்டாறு வெள்ளமாக அவள் மீது படர்ந்தான்.

அவளுக்குள் இருந்த அச்சம் அவனுக்குள் கடத்தப்பட்டு “வலிக்குதா? வலிக்குதா?” என்று வேறு இவன் கேட்டு வைக்க,

“பேசாத கார்த்தி எனக்கு வெக்க வெக்கமா வருது” என்று அவன் தோள்பட்டையில் வலிக்க கடித்தாள்.

அவன் தேடல்கள் அவளின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இருந்தாலும், அவனுள் கடத்தப்பட்ட அச்சத்தால் அவளை பொறுமையாகவே கையாண்டான். அதன்பின் பேச்சுக்கு அங்கே இடமில்லை முத்தச் சத்தமும் சினுங்கள்களும் சங்கீதமானது.

யாதுமாகி போன அவன் காத்திருப்பு அவள்

அவள் நினைவில் நின்றவன் இவன்

அவள் அகிலத்தின் தேடல் அவன்

அவன் நினைவில் நின்றவள் இவள்

நன்றி

வணக்கம்

BY

MILA

Advertisement