Advertisement

அத்தியாயம் 27-1

ஒரு பெண் கழுத்து நிறைய நகைகளுடன் நள்ளிரவில் வீதி வழியே சென்று பாதுகாப்பாக வீடு திரும்பும் போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றார் தேசப்பிதா மகாத்மா காந்தி. ஆனால் உலகில் அதிக பாலியல் குற்றங்கள் நடக்கும் பத்து நாடுகளில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம்.

கடந்த ஆண்டில் மட்டும் 77 கற்பழிப்பு வழக்குகள் பதியப்பட்டதாக மத்திய அரசே தகவல் தெரிவித்திருக்கிறது. பதியப்பட்ட வழக்குகளே 77 எனின் பதியப்படாத வழக்குகள் எத்தனையோ?

கடந்த ஆண்டில் பதியப்பட்ட பெண்களுக்கு எதிரான மொத்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட 25,498 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும், 2,655 பேர் சிறுமிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனதளவில் துவண்டு போன பெண்களையும், சிறுமிகளையும் மீட்டெடுப்பது எவ்வளவு கடினம் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் கேட்டால் சொல்வார்கள். இதில் கொடுமை என்னவென்றால் சில சமயம் அந்த குடும்பத்தாரே இந்த பெண்களை அசிங்கமாக பார்த்து, குற்றம் நடக்க இவர்களே காரணம் என்பது போல் பேசி, தற்கொலைக்கு தூண்டி விடுவதால் பதியப்பட்ட தற்கொலை வழக்குகளும் ஏராளம்.

எத்தனை பெண்கள் தான் இந்த வன்கொடுமையில் இருந்து தங்களை மீட்டுக் கொண்டு சாதனை படைத்து வாழ்கின்றனர்? அப்படியே வாழ்ந்தாலும் நெருஞ்சி முள்ளாக அவர்களின் நெஞ்சோரம் அந்த சம்பவம் குத்தி கிழித்து கொண்டு அல்லவா இருக்கின்றது.

மீண்டு வர ஆண் துணை தேவையா என்று கேட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் வேண்டாம் என்று தான் கூறுவார்கள்.

ஒரு ஆணிடம் உண்மையான அன்பையும், அக்கறையையும் மட்டுமே அவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஒரு ஆண் தந்தையாக, சகோதரனாக, தோழனாக, கணவனாக அவர்களோடு உறுதுணையாக இருந்தாலே போதும். அவர்கள் தங்களை விரைவில் மீட்டுக் கொண்டு விடுவார்கள்.

அதிலும் தன் கணவன் கட்டிய மனைவி இருக்கும் பொழுதே பல பெண்களோடு உறவு வைத்திருப்பது அறிந்த பின்னும் மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை மனைவி என்ற பெண்ணுக்கு மட்டுமே இருக்கிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் அதே தவறை மனைவி செய்தால் மன்னிக்கும் மனப்பான்மை பல கணவன்மார்களுக்கு கிடையாது.

அதற்குக் காரணம் ஆண் என்ற திமிரோ, அகங்காரமோ மட்டும் கிடையாது. இந்த சமூகமும் தான்.

ஒரு பெண்ணை அடைய நினைப்பவன் அந்த பெண்ணை கற்பழித்தால் திருமணம் செய்து வைத்த சமூகம், கற்பழிப்பு குற்றம் என்று கருதினாலும், அது நடக்க காரணமும் பெண் தான் என்று தான் குற்றம் கூறுகிறார்கள்.

குழந்தைகள் கற்பழிக்கப்பட்டால் தாய் குழந்தையை சரியாக பார்த்துக் கொள்ளவில்லையே என்று குற்றம் கூறுவார்கள். எங்கே தவறு நேர்ந்தாலும் பழிச்சொல் மட்டும் பெண்ணுக்கு தான்.

எல்லா ஆண்களையும் குறை கூற முடியாது ஆண்டனி ராஜூ ஒரு ஆண் தான் கயல்விழியை தைரியமான பெண்ணாக வளர்த்த தந்தை.

கணவனே கயவனாகி போன நேரத்தில், யாரையும் நம்ப முடியாத மனநிலையில் இருந்த கயல்விழி தன்னை தேற்றிக் கொண்டு அதிலிருந்து வெளிவரவும் ஒரு மனதைரியம் வேண்டும். போராடி ஜெயித்து இன்று ஒரு வழக்கறிஞராக சமுதாயத்தின் முன் நிமிராக நிற்கின்றாள். அதற்கு அவளுக்கு உறுதுணையாக நின்றது தோழன் விக்னேஷ் என்றால் மிகை இல்லை.

கார்த்திகேயன் தன் வாழ்க்கையில் இருந்திருந்தால் தனக்கு இவ்வாறெல்லாம் நிகழ்ந்திருக்காது என்று அவள் மனம் எப்பொழுதும் எண்ணும். அவனுக்காக ஏங்கும். அதன் வெளிப்பாடாகத்தான் அவள் தனக்கு நிகழ்ந்த எல்லாவற்றுக்கும் அவன் தான் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தாள்.

தனக்கு நிகழ்ந்ததற்கு தான் காரணம் இல்லை. அது ஒரு விபத்து. அதிலிருந்து தான் மீண்டு வர வேண்டும் என்று அவள் தெளிவாகத்தான் இருந்தாள். மீண்டும் வந்து விட்டாள்.

அப்படியாயின் அவளுக்கு இருக்கும் பிரச்சினை தான் என்ன? கார்த்திகேயனுக்கு புரியவில்லை. மீண்டும் மருத்துவ ஆலோசனை அவளுக்கு தேவைப்படுமா என்று விக்னேஷிடமும் பேசிப் பார்த்தான். கயல்விழியிடம் நேரடியாக பேசவே அவனுக்கு அச்சமாக இருந்தது. நடந்த சம்பவத்தை ஞாபகப்படுத்தி எங்கே அவளை காயப்படுத்தி விடுவோமோ என்று அவன் அஞ்சினான்.

“அவளுக்கு போதும் போதும் என்கிற அளவுக்கு கவுன்சிலிங் கொடுத்தாச்சு. ஆஸ்திரேலியாவில் இருக்க பிடிக்காமல் தான் இந்தியாவுக்கே வந்தாள். அவளுக்கு இருக்கிற பிரச்சினையே அவள்தான். அந்த சம்பவத்துக்கு பிறகு அவள் மனம் விட்டு பேசுவதே இல்லை. உங்ககிட்ட பேசுவா என்று நினைக்கிறேன்” என்றான் விக்னேஷ்.

ஒரு வழக்கறிஞராக அவன் வாதாடிய பாலியல் வழக்குகள் சொற்பம் தான். அவன் மனைவிக்காக வேண்டி உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் நடந்த பாலியல் வழக்குகளை அலசலானான். பொதுவாக வழக்குகளை அவன் அலசுகையில் வாதி, பிரதிவாதியின் வாதத் திறமையையும், என்ன தீர்ப்பு கொடுத்திருப்பார்கள் என்றும் தான் கவனிப்பான்.

தன் மனைவியை மீட்டெடுக்க முதன்முறையாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டவர்கள் அவர்களை எவ்வாறு மீட்டெடுத்தார்கள் என்று ஆராய்ந்தவனுக்கு, அவர்கள் தங்களை மீட்டெடுக்க பல வருடங்கள் எடுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளானான்.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்ற குறள் கார்த்திகேயனின் ஞாபகத்தில் சட்டென்று வந்து நின்றது. சினிமா பாணியில் சொல்ல வேண்டும் என்றால் பாலியல் வன்கொடுமை என்பது அதற்கும் மேல். உடல் பட்ட வேதனையை மனம் என்றுமே மறக்காது. சொற்களால் கூட விவரிக்க முடியாத வலி அது.

தன்னவளை எவ்வாறு மீட்டெடுப்பது என்று யோசிக்கையில் கார்த்திகேயனின் கண்களில் நீர்கோர்த்தது. ஆனால் அவனுக்கென்று அமைந்த சந்தர்ப்பம் தான் ஊருக்கு சென்ற பயணம்.

ஊருக்கு வந்தவள் அவன் காதலியாகவே மாறி அவனிடம் பேசவும், அவள் தன்னிடம் மனம் திறப்பாள் என்று கார்த்திகேயனுக்கு நம்பிக்கை வந்து விட்டது. நினைப்பதெல்லாம் நடந்து விடுமா? எதிர்பாராதது நடப்பது தானே மனித வாழ்க்கை. எந்த உண்மை தன் வீட்டிற்கு தெரிந்து விடக் கூடாது என்று வேண்டினானோ அந்த உண்மை எல்லோருக்கும் தெரிந்து விட்டது. கயல்விழி கண் விழித்தால் எந்த மனநிலைமையில் இருப்பாளோ என்று அஞ்சியவாறே தன்னருகில் அமைதியாக தூங்கியவாறு வரும் மனைவியை பார்த்தவாறு வண்டியோட்டலானான் கார்த்திகேயன்.

ஓ மனமே ஓ மனமே

உள்ளிருந்து அழுவது ஏன்

ஓ மனமே ஓ மனமே

சில்லுசில்லாய் உடைந்தது ஏன்

மழையைத்தானே யாசித்தோம்

கண்ணீர் துளிகளைத் தந்தது யார்

பூக்கள் தானே யாசித்தோம்

கூழாங்கற்களை எறிந்தது யார்

ஓ மனமே ஓ மனமே

உள்ளிருந்து அழுவது ஏன்

ஓ மனமே ஓ மனமே

சில்லுசில்லாய் உடைந்தது ஏன்

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து

இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை

துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து

துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை

இன்பம் பாதி துன்பம் பாதி

இரண்டும் வாழ்வின் அங்கம்

நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்

நகையாய் மாறும் தங்கம்

தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி

வெற்றிக்கு அதுவே ஏணியடி

கார்த்திகேயன் கண் விழிக்கையில் அருகில் கயல்விழி இல்லை.

நடு ஜாமத்தில் வீடு வந்தவன் கயல்விழியை கட்டிலில் கிடத்தி அருகிலேயே அமர்ந்திருந்தான். அவள் கண் விழித்ததும் அவளிடம் பேசினால் தான் அவனுக்கு நிம்மதி என்று துணியைக் கூட மாற்றாமல் அவள் கையை பற்றி கொண்டிருந்தவனின் கண்கள் சொக்க, அவள் கண் விழித்தால் தனக்கு தெரிய வேண்டும் என்று அவள் மேல் காலையும் கையையும் போட்டு அவளை இறுக அணைத்துவாறு தான் தூங்கியிருந்தான்.

நடந்த சம்பவத்தால் மன உளைச்சலும், வண்டியொட்டியதால் உடல் அசதியிலும் இவன் ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்றிருக்க, தன் மீது படர்ந்து, தான் எங்கும் நகர விடாதபடி தூங்கும் கணவனின் முகத்தில் தான் கயல்விழி கண் விழித்தாள்.

எங்கே இருக்கிறோம் என்று புரிந்தவளுக்கு கணவனின் அசதியும் புரிந்தது, அவனது தூக்கத்தின் ஆழமும் புரிந்தது. அவனை மெதுவாக தள்ளிவிட, அவனே குழந்தை போல் நகர்ந்துகொள்ள, மெதுவாக புன்னகைத்தவாறே அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

நேற்று மாலை நடந்தவைகள் ஞாபகத்தில் வரவே பெருமூச்சொன்றை விட்டவள் எழுந்து சென்றாள்.

மனைவியை காணாமல் பதறி துடித்த கார்த்திகேயன் கீழ்த்தளம் நோக்கி ஓடி வந்திருக்க அங்கே அக்ஷராவோடு அமர்ந்து கயல்விழி ஏதோ ஒரு வழக்கை பற்றி பேசிக் கொண்டிருந்தாள்..

நேரமோ மதியம் தொட்டிருந்தது. இந்த நேரத்தில் பட்டு வேட்டி சட்டையில் தூங்கி எழுந்து வந்திருப்பவனை பார்த்து திருவும் விக்னேஷும் புரியாமல் முழிக்க,

“ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கு போன மாப்பிள்ளை பொண்ணு கிட்ட இருந்து என்ன காப்பாத்துங்க என்று வந்தால் இப்படி இருக்கும் கார்த்தி. என்ன மல்லிப்பூ தான் மிஸ்ஸிங். ஒன்னு ரெண்டு பூ உன் மேல இருந்தா ஓகே” என்று அக்ஷரா கிண்டல் செய்ய, கயல்விழியை பார்த்து நிம்மதி பெருமூச்சடைந்தவன் அங்கிருந்தவர்கள் தன்னை பார்த்த பார்வையில் அசடு வழிந்தான்.

“என் மானத்தை வாங்காத கார்த்தி” என்று கயல்விழி அவனிடம் ஓடி வந்திருக்க,

 “மூஞ்சில லிப்ஸ்டிக் ஒட்டி இருக்கு பாரு” என்று அக்ஷரா சத்தமா சொல்ல, அவன் இருந்த மனநிலையில் துடைக்க வேறு செய்தான்.

“நான் எப்படா லிப்ஸ்டிக் போட்டேன்?” அவன் முதுகில் அடிகளை கொடுத்தவாறு கயல்விழி அவனை வீட்டுக்கு இழுத்துச் சென்றாள்.

வீட்டுக்கு வந்தவன் அவளை இறுக அணைத்து கொண்டு “எங்க நீ என்ன விட்டுட்டு ஒரேயடியா போயிட்டியோ என்று நினைச்சேன்” என்றான்.

அவளுக்கு அவன் அச்சம் புரிந்தது “ஆமா நான் வீட்டை விட்டு போனா… நீ போயிட்டா என்று சந்தோஷப்பட்டு விட்டுடுவியா? ஊரு முழுக்க தேடி என்ன கண்டுபிடிச்சிருக்க மாட்டியா? நானும் நீ இல்லாம இருந்த நாட்கள் எவ்வளவு கொடுமையானது என்று கண்ணீர் வடிச்சிட்டு, உன் கூட வீட்டுக்கு வரமாட்டேனா? இல்ல உன் மொத்த குடும்பமும் கூப்பிட்டா தான் வருவேன் என்று பிடிவாதம் பிடிப்பேனா? இது என்ன சினிமாவா? நீ இல்லாம நான் ரொம்ப பட்டுவிட்டேன் கார்த்தி. எனக்கு யாரும் வேணாம். நீ மட்டும் போதும்” என்றாள்.

ஆம் கண்விழித்த கயல்விழி கார்த்திகேயன் அவளை அணைத்த்திருந்த விதத்திலேயே ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

தான் கார்த்திகேயனை விட்டுச் சென்றதால் தான் தனக்கு இந்த நிலைமை ஏற்பட்டு விட்டது என்று குற்ற உணர்ச்சியில் தான் கயல்விழியை ஆட்டி படைத்திருந்தது.  அதில் இருந்துதான் அவளால் மீண்டு வர முடியவில்லை.

இல்லை ஒருவேளை நாம் நினைப்பது போல் நம் காதல் கைகூடி இருந்தால் ஒரே துறையில் இருக்கும் நமக்கிடையில் போட்டியும் பொறாமையும் வந்திருக்கும். புரிதல் இல்லாமல் நாம் பிரிந்து சென்றிருக்கவும் கூடும் என்று அவளுக்கு புரிய வைக்க முயன்றான் கார்த்திகேயன்.

 “அப்படின்னா எனக்கு இப்படி நடந்தது சரின்னு சொல்ல வரியா?” கணவனை கோபமாக முறைத்தாள்.

  .

“நான் என்னைக்குமே அப்படி சொல்ல மாட்டேன். நடந்தது நம்மள மாத்த முடியாது. நடந்ததிலிருந்து வெளியே தான் வரும் என்று தான் சொல்ல வரேன். நடப்பது எல்லாமே நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டா லைப் இஸ் சோ ஈஸி” என்றான்.

தேடும் முன்பே

வந்த பொருள்

வாழ்வில் நிலைப்பதில்லை

தேடி தேடி

கண்ட பொருள்

எளிதில் தொலைவதில்லை

அவள் என்ன தப்பு செய்தாள்? அவள் தந்தை இறுதி மூச்சை பிடித்துக் கொண்டு கேட்ட ஆசையை நிறைவேற்றினாள். அவளுக்கு நடந்தது ஒரு விபத்து. கார்த்திகேயன் சொல்வது போல் திருமணத்துக்குப் பின் அந்த விபத்து நிகழ்ந்திருந்தால் அவன் அவளை கைவிட்டிருப்பானா? நிச்சயமாக இல்லை.

தனக்கு விபத்து ஏற்பட்டு கையோ, காலோ போனால், ஏன் படுக்கையிலே விழுந்தால் என்னை நீ விட்டு விடுவியா? என்று கார்த்திகேயன் கேட்டிருக்க, அவன் வாயை பொத்தியிருந்தாள் கயல்விழி.

“ஏன் இப்படி எல்லாம் பேசுற கார்த்தி. இப்படியெல்லாம் பேசாதே” என்று விசும்பினாள்.

“கண்ண கசக்குறத விட்டுட்டு முதல்ல கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு” என்று அதட்டினான் அவன்.

“மாட்டேன்” என்று தலையசைத்திருந்தாள் இவள்.

“என்ன பொறுத்த வரைக்கும் இரண்டுமே விபத்து தான் கயல். நான் படுத்த படுக்கையாக இருந்தா என்னைக்காவது நான் கண் விழிப்பேன் என்று நீ காத்திருக்க மாட்டியா? உனக்காக நான் போராடி வந்திருக்க மாட்டேனா? இந்த விபத்தில் இருந்தும் நீதான் உன்ன மீட்டெடுக்க வேணும். நீ தான் இதிலிருந்து வெளியே வரவேணும்” என்றவன் இதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை என்பது போல் அவளை ஒரு பார்வை பார்த்து வைத்தான்.

ஒரு விபத்து நேர்ந்தால் அதில் உயிர் பலியானால் அந்த நேரத்தில் அந்த இடத்துக்கு போயிருக்கக் கூடாது என்று கதறுவார்கள். அதே விபத்திலிருந்து தப்பிவிட்டால், நல்லவேளை செல்லவில்லை என்று கூறுவார்கள். அது அவர்களின் விதி. விதிப்படிதான் நடக்கும். நடப்பதை யாராலும் தடுக்க முடியாது. இப்படி நடந்திருக்கக்கூடாது. இப்படி நடந்து விட்டது என்று நினைப்பதெல்லாம் மடத்தனம். நடந்ததை கடந்து வருவது தான் புத்திசாலித்தனம். அதைத்தான் கார்த்திகேயன் அவள் மனதில் பதிய வைக்கலானான்.

நடந்த சம்பவத்தால் அவள் மீண்டும் தன் கூட்டுக்குள் ஒடுங்கி இருப்பாள் என்று கார்த்திகேயன் எண்ணியிருக்க, அவள் பேச பேச அவள் தெளிவை பார்த்து வியந்தவன் மேலும் அவளை அவனுள் இறுக்கிக் கொண்டான்.

கயல்விழி அவளை விட்டு விலக முயற்சி செய்ய “ஏண்டி” என்றவனோ அவளை விட்டு விலக மனமில்லாமல் கோபப்பட்டான்.

“முதல்ல குளிச்சிட்டு சாப்பிடு கார்த்தி. இன்னும் தூங்கணும்னு என்றா தூங்கு. இல்ல கீழ வந்து வேலை பாரு” என்று சிரித்தாள்.

யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே

தூங்கும் என் உயிரை தூண்டியது

யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே

வாசம் வரும் பூக்கள் வீசியது

தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்

மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்

முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே

நிலவாக உன்னை வானில் பார்த்தேன்

அலையாக உன்னை கடலில் பார்த்தேன்

சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே

மானாக உன்னை மலையில் பார்த்தேன்

தேனாக உன்னை மலரில் பார்த்தேன்

மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

ஓ பேச சொல்கிறேன் உன்னை

நீ ஏசி செல்கிறாய் என்னை

வீணை தன்னையே மீட்டிக் கொண்டதாய்

எண்ணிக் கொள்கிறேன் அன்பே

காலம் என்பது மாறும்

வலி தந்த காயங்கள் ஆறும்

மேற்கு சூரியன் மீண்டும் காலையில்

கிழக்கில் தோன்றி தான் தீரும்

உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா?

எந்நாளும் மறவாத நாளாகி போகாதா?

இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா ?

Advertisement