Advertisement

அத்தியாயம் 9

கயல்விழி கார்த்திகேயனின் வீட்டுக்குள் நுழைந்த நொடியே பார்த்தீபன் கார்த்திகேயனுக்கு அலைபேசி அழைப்பு விடுத்திருந்தான். அதனால் வீட்டில் நடந்த அனைத்தையும் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுதானிருந்தான்.

சிவபாலன் “அவ கெடக்குறா விடு” எனும் பொழுது கயல்விழி வெளியே வந்து விட்டாளே. ஆனால் அவள் தலை மறைந்ததும் “வள்ளி அமைதியா இரு. தப்பு நம்ம பையன் மேல. கோட்டு கேஸு என்று நம்மள இழுத்து நம்மள சந்தி சிரிக்க வைக்காம பேச்சு வார்த்தைக்கு வந்தாளே, அதுவே பெரிய விஷயம். பொண்ணு நல்ல பொண்ணுதான். என்ன மாற்று மதத்துல பொறந்துட்டா. அவ கூட எந்த மாதிரியான சுமூகமான உறவும் கூடாது என்றுதான் அப்படி பேசி அனுப்பினேன்” என்ற சிவபாலன்  அடுத்து பார்த்திபனிடம் பேசலானான்.

ஆக கயல்விழி தப்பான பெண்ணில்லை என்று அறிந்தும் அவளை ஒதுக்குகிறார்கள். பிரச்சினை அவளில்லை அவள் மதம் தான். என்ன மனிதர்கள் இவர்கள்? என்றெண்ணியவாறே அலைபேசி தொடர்பை துண்டித்திருந்தான் கார்த்திகேயன்.

கயல்விழி வருவதை பார்த்தவன் “இவளுக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்திதான். எப்படியோ பேசி சமாளித்து வந்து விட்டாளே” அவளின் மீது பார்வை விழ அவளை காதலித்த நாட்களும், நினைவுகளும் மனதில் பசுமையாக ஏறிக்கொள்ள அவள் வண்டியில் ஏறியதும் அணைத்து நன்றி கூறினான்.

தான் தொட்டதால் அவள் அலறியதாக இவன் மன்னிப்பு கேட்க, அவளோ இவனையே அணைத்துக் கொண்டு அழுது தீர்த்திருந்தாள்.

அடுத்த கணம் எதுவும் நடக்காதது போல் ஹோட்டலுக்கு செல்லலாம் என்றவள் சென்றிறங்கியதும் “பசிக்குது” என்றாள்.

சற்றும் முன் நடந்த நிகழ்வுகளால் கார்த்திகேயனின் பசி பறந்தோடியிருந்தது. கயல்விழிக்காக அவளை அழைத்துக் கொண்டு அமைதியாக சென்று உணவருந்தலானான்.

அவளையே பார்த்திருந்த கார்த்திகேயனுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. “இவளிடம் எதுவோ ஒன்று சரியில்லை. அதை இவள் என்னிடம் மறைகிறாள்”

“என்ன?” தன்னையே பார்த்திருந்தவனை ஏறிட்ட கயல்விழி “உன் வீட்டுக்கு போனதுல பழைய ஞாபங்கள் வந்திருச்சு” என்று தான் அழுததிற்கான காரணத்தை கூறினாள்.

மறுக்காமல் தலையசைத்தவன் சாப்பிடுமாறு அவளை பார்த்து புன்னகைத்தான்.

சாப்பிட்டு முடித்து தங்களுக்கான அறைக்கு வரும் வரையில் இருவருக்குமிடையில் எந்த விதமான பேச்சு வார்த்தையும் இருக்கவில்லை.

கயல்விழி கார்திகேயனிடம் பேச முனைய அவனோ எதையோ சிந்தித்தவாறு அவனது அறைக்குள் நுழைய இவளும் அவளது அறைக்குள் நுழைந்து கதவை சாத்தியிருந்தாள்.

கதவில் சாய்ந்த கயல்விழிக்கு பட படவென வந்தது. “கார்த்திகேயன் அணைத்ததில் ஆஸ்திரேலியாவில் நடந்த அனைத்தும் ஞாபகத்தில் வந்து நான் அலறியதும், அழுததும் என்னவோ உண்மைதான். ஆனால் மீண்டும் காத்திகேயனின் நெஞ்சில் சாய்ந்து அழுதிருக்கக் கூடாது. தன்னை பற்றி அவன் என்ன நினைத்திருப்பான். தன்னிடம் அவன் ஒன்றுமே கேட்கவில்லை. பழைய ஞாபகங்களால் தான் அழுதேன் என்றதை நம்பியிருப்பானா? நம்பியிருப்பான். சந்தேகப்பட்டிருந்தால் கேள்விகளால் குடைந்திருப்பானே” தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டவள் கார்த்திகேயன் தன்னை சந்தேகம் கொள்ளவில்லை என்ற நிம்மதியில் கட்டிலில் விழுந்தாள். விழுந்த மறுநொடி நிம்மதியாக தூங்கியும் போனாள்.

மனசில் எதையோ

மறைக்கும் கிளியே

மனசைத் திறந்து

சொல்லடி வெளியே

கரையைக் கடந்து நீ

வந்தது எதற்கு

கண்ணுக்குள்ளே ஒரு

ரகசியம் இருக்கு

மனசைத் திறந்து

சொல்லடி வெளியே

என் இதயத்தை

என் இதயத்தை

வழியில்

எங்கேயோ மறந்து

தொலைத்துவிட்டேன்

உன் விழியினில்

உன் விழியினில்

அதனை

இப்போது கண்டு

பிடித்து விட்டேன்

இதுவரை எனக்கில்லை

முகவரிகள்

அதை நான் கண்டேன்

உன் புன்னகையில்

வாழ்கிறேன்

நான் உன் மூச்சிலே

ஆனால் கார்த்திகேயனோ அவள் நினைத்ததற்கு மாறாக கட்டிலில் அமர்ந்து நடந்ததை ஓட்டிப் பார்த்தான். “நிச்சயமாக கயல்விழிக்கு எதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. தான் இயல்பாக இருப்பதாக காட்டிக் கொள்ளத்தான் பசிப்பதாக கூறி உண்ண முடியாமல் உண்டு முடித்தவள், நான் கேட்காமலே காரணம் வேறு கூறியது சந்தேகமாக இல்ல இருக்கு.

அவள் கணவனோடு சந்தோசமாக வாழ்வதாயின் தன்னை கட்டிக் கொண்டு அழ வேண்டிய அவசியமில்லை. அப்படியே பழைய நினைவுகளின் தாக்கத்தால் அழுதிருந்தால் இவ்வளவு கண்ணீர் வடித்திருக்க மாட்டாள். கயல்விழி அவ்வாறு கண்ணீர் வடிக்கும் பெண்ணில்லை. தான் இயல்பாக இருப்பதாக காட்டிக்கொள்ளவே “பசி” என்றாள். எதற்கிந்த நாடகம்? எதற்காக என்னை ஏமாற்றப் பார்க்கின்றாள்.

அவள் கணவன் வேறு அமெரிக்காவில் இருப்பதாக கூறினாளே. கணவனை பிரிந்து இவள் ஏன் இங்கே தனியாக இருக்க வேண்டும்? என்ன பிரச்சினை என்று கேட்டால் நிச்சயமாக அவள் சொல்ல மாட்டாள். எவ்வாறு அறிந்து கொள்வது? யாரிடம் கேட்பது? விக்னேஷிடம் கேட்டால் சொல்வானா?

அன்று சாப்பாட்டறையில் வைத்து சாமர்த்தியமாக விக்னேஷிடம் கயல்விழியின் கணவனை பற்றி விசாரித்தேனே, அவன் கூட பதில் கூறாது கயல்விழியை பேச வைத்தானே.

அப்படியென்றால் அவனுக்கு கயல்விழியின் பிரச்சினை என்னவென்று தெரிந்திருக்கு, அவளுடைய சொந்த விஷயத்தில் தலையிடக் கூடாது என்று பேசாமல் இருந்திருக்கிறான். அப்படிப்பட்டவனிடம் கேட்டு பிரயோஜனமில்லை. வாயை திறக்க மாட்டான்” என்ன செய்வது என்று அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன் அலைபேசியை எடுத்து திருவை அழைத்தான்.

“திரு ஆஸ்ரேலியால நம்ம பசங்க யார் இருக்காங்க”

“என்ன விஷயம் பாஸ்?”

“அங்க இருக்குற ஒருத்தர பத்தி விசாரிக்கணும்” யார் என்று சொல்ல விரும்பாமல் தான் கேட்டான்.

வழக்கை தவிர கார்த்திகேயனுக்கு வேறு சிந்தனை இருக்காதே. எதோ ஒரு வழக்குக்காகத்தான் கேட்கிறானென்று “நம்ம ஷாஹுல் ஹமீத் இருக்கானே. அவனுக்கு போன் போடுங்க” என்றான்.

“அட ஆமா” என்ற கார்த்திகேயன் ஷாஹுல் ஹமீதை அலைபேசியில் அழைத்தான்.

“சொல்லுங்க சார் என்ன எங்க ஞாபகம் எல்லாம் உங்களுக்கு வருது”

“ஹமித் எனக்கு உன் மூலமா ஒரு காரியமாகனுமே”

“சொல்லுங்க சொல்லுங்க எதுவானாலும் பண்ணலாம்”

“ஆஸ்திரேலியா இருந்த ஒருத்தன பத்தி தெரியணும். எனக்கு பேரு தெரியல. அவன் அமெரிக்கால இருக்கிறதா சொல்றாங்க. உண்மையிலேயே அவன் அமெரிக்கால இருக்கானா? இல்ல இப்பவும் ஆஸ்திரேலியால இருக்கானான்னு எனக்கு தெரியல”

“என்ன பாஸ் நீங்க பேரு தெரியலன்னு சொல்றீங்க, எப்படி தேடுறது. சரி பரவால்ல தேடலாம். ஏதாவது ஒரு துப்ப கொடுங்களேன்” இதுதானே தன்னுடைய வேலை என்று சிரித்தான் ஹமீத்.

கயல்விழிக்கு எப்பொழுது திருமணமானது என்று கார்த்திகேயனுக்கு தெரியுமல்லவா அதை வைத்து அவள் எப்பொழுது ஆஸ்திரேலியா சென்றாள் என்று கண்டுபிடித்து அந்த தகவலை ஹமீதுக்கு அனுப்புவதாக கூற, “இது போதும் பாஸ் மத்த  டீடைல் எல்லாம் நான் உங்களுக்கு தரேன் என்றான் ஹமீத்.

ஹமீதிடம் பேசி முடித்த போது கார்த்திகேயனை அழைத்த பார்த்திபனோ ஒருவாறு வீட்டார் சமாதானம் அடைந்தது போல் தான் இருக்கிறது என்று கூறி இருந்தான்.

அப்படியாயின் இன்று மாலையே சென்னை கிளம்ப நேரிடும். கோயம்புத்தூரில் இருப்பதனால் கயல்விழியை பற்றி தகவல் சேகரிக்க வேண்டும் என்று எண்ணினான்.

அவனுக்கு தெரிந்ததெல்லாம் கயல்விழியின் தோழியான ராதா ஒருத்தியை மட்டும் தான்.

இன்று கார்த்திகேயனுக்கு ராதாவின் உதவி தேவைப்பட்டதும் அவளை அலைபேசியில் அழைத்திருந்தான். கார்த்திகேயன் தான் பேசுவதாக அறிந்ததும் “என் குழந்தையை கண்டுபிடித்து விட்டீங்களா?” என்று கேட்டிருந்தாள்  ராதா.

கூடிய சீக்கிரம் உங்கள் குழந்தையை நான் கண்டுபிடித்து கொடுத்து விடுறேன். எனக்கு உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும் ராதா. கேட்கலாமா? அனுமதியோடு அவளிடம் கயல்விழியை பற்றி விசாரித்தான்.

“அ அவ நல்லா பழகுவா. ஆனா சொந்த விஷயங்கள் அதிகமா பகிர்ந்துகொள்ள மாட்டா. ஒரு தடவ அவ வீட்டுக்கு கிளாஸ்மேட் எல்லோரும் போயிருந்தோம் ரொம்ப பெரிய வீடு தான். வசதியான பேமிலி. அம்மா இல்ல. அப்பா மட்டும்தான்” ராதா சொன்ன எல்லா தகவலுமே கார்த்திகேயன் அறிந்தது தான். அவள் சொன்ன முக்கியமான விஷயமே கயல்விழி அவளது கணவனை விட்டுப் பிரிந்து இருக்கிறாள் காரணம் தெரியவில்லை என்பதுதான் .

கார்த்திகேயன் நினைத்தது சரிதான் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது. அதனால்தான் ஆறுதலுக்காக அவள் தன் நெஞ்சின் மீது சாய்ந்து அழுதாள். காரணத்தை தன்னிடம் கூற மறப்பது தான் அவனுடைய முன்னாள் காதலன் என்பது என்று கார்த்திகேயனால் புரிந்துகொள்ள முடிந்தது. “அவள் என்னை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் சந்தர்ப்பம் கிடைத்தவுடன் அவளை அடைய முயற்சி செய்வேன் என்று எண்ணுகிறாளா?” கார்த்திகேயனுக்கு கோபம் வந்தாலும் தன்னால் அவளுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா? சமூகமான பேச்சு வார்த்தையில் இருவரையும் சேர்த்து வைக்க முடியுமா? என்று தான் யோசித்தான்.

ஆனால் அவளுக்கு விவாகரத்தாகி இருக்கும் என்று அவன் சற்றேனும் யோசித்துப் பார்க்கவில்லை.

கயல்விழி தன்னை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறியதோடு கார்திகேயனையும் தன் வீட்டுக்கு அழைத்தாள். தன் தந்தையை வந்து சந்திக்குமாறு பல தடவை கூறி இருந்தாள். ஆனால் கார்த்திகேயனுக்குத்தான் கயல்விழியை சந்திக்க சந்தர்ப்பம் சரியாக அமைவதில்லை. இதில் அவன் அவளது தந்தையை சந்திக்க சந்தர்ப்பம் அமைந்து இருக்குமா? அமைந்திருந்தால் கயல்விழியை பற்றி கார்த்திகேயன் இன்னும் நன்றாக அறிந்து வைத்திருப்பானே!

கயல்விழியின் தோழிகளிடம் விசாரித்து பிரயோஜனம் இல்லை அவர்களும் ராதாவை போன்று தான் இருப்பார்கள்.

யாரிடம் விசாரிப்பது என்று கார்த்திகேயன் யோசிக்கையில்” பரசுராமன் தனது தந்தையின் வக்கீல்” என்று கயல்விழி கூறியது ஞாபகத்தில் வந்தது.

வக்கீல் பரசுராமனிடம் அலைபேசியில் விசாரிப்பது முறையன்று. நேரடியாகச் சென்று பேசுவது தான் உசிதம். கயல்விழிக்கு தான் உதவி செய்வதாகக் கூறினால் நிச்சயமாக வக்கீல் பரசுராமன் வாய் திறப்பார் என்று எண்ணினான் கார்த்திகேயன். தான் வெளியே செல்வதாக கயல்விழிக்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டி விட்டு பரசுராமனை பார்க்க கிளம்பிச் சென்றான்.

கார்த்திகேயனை பார்த்ததும் “வாங்க வாங்க” என்று இன்முகமாகவே வரவேற்றார் வக்கீல் பரசுராமன். நல விசாரிப்புகளுக்குப் பின், சென்னையில் கயல்விழியும் விக்னேஷும் கார்த்திகேயனோடு வேலையில் பொருந்தி விட்டார்களா என்று கேட்டறிந்து கொண்டார்.

பொதுவான பேச்சு வார்த்தைக்கு பின், தான் எதற்காக வந்ததாக பரசுராமரிடம் நேரடியாக கூறினான் கார்த்திகேயன்.

கயல்விழி சென்னை சென்ற ஒரே வாரத்தில் அவள் சோகமாக இருப்பதை பார்த்து புரிந்து கொண்டானா? அல்லது அவள் பேச்சில் புரிந்து கொண்டானா? சாணக்யனான கார்த்திகேயன் கயல்விழிக்கு எதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்று கண்டு கொண்டானே என்று வியந்த வக்கீல் பரசுராமன்  நிச்சயமாக கார்திகேயனால் கயல்விழிக்கு உதவ முடியும் என்று நம்பி எந்த விஷயம் கார்த்திகேயனுக்கு தெரியாக் கூடாது என்று கயல்விழி நினைத்தாளோ அந்த விஷயத்தை போட்டுடைத்தார்.

“கயலோட அப்பா ஆண்டனி ராஜோட லீகல் லாயர் நான். என்ன அவர் ரொம்ப நம்பினாரு. அவரு மரண படுக்கைல இருக்கு போது கயலுக்கு மாப்புள பார்க்க சொன்னாரு. அப்போ டாக்டர் மோகன சுந்தரம் அவரோட பையனுக்கு பொண்ணு தேடிகிட்டு இருந்தாரு. அவருக்கும் நான்தான் லீகல் லாயர். கயலுக்கு இதைவிட நல்ல சம்பந்த கிடைக்குமா என்று அவரோட பையன் சந்தோஷ பேசி முடிச்சேன். ஆண்டனி ராஜோட நிலமையாள உடனே கல்யாணம் நடந்தது. சந்தோஷ் மூணே நாள்ல ஆஸ்ரேலியா போய்ட்டான். கயல் ஆண்டனி ராஜ பார்த்துகிட்டு இங்க தான் இருந்தா. கல்யாணம் நடந்து பத்து நாள்ல ஆண்டனி ராஜ் மூச்சை நிறுத்திக்கொண்டார்.  மோகன சுந்தரமும், நானும் அவளை சமாதானப்படுத்தி ஆஸ்ரேலியா அனுப்பி வச்சோம்.

என் பையனும் அங்க தானே இருக்கான் அடிக்கடி போய் கயல பார்த்துக்க சொன்னேன். என் பையன் வரும் போது கயல கூட்டிகிட்டு வந்தான். கயலுக்கு விவாகரத்து ஆச்சு என்றான்”

“என்னது விவாகரத்தா?” அதிர்ந்தான் கார்த்திகேயன்.

“ஆமா” என்று விக்னேஷ் சுருக்கமாக சொன்ன சில விஷயங்களை பரசுராமன் மேலும் சுருக்கி சொல்ல கார்த்திகேயனின் இரத்தம் கொதித்தது.

“சரி சார் நான் பாத்துக்கிறேன்” என்று பரசுராமரிடம் விடைபெற்று வண்டியில் அமர்ந்த கார்த்திகேயனின் மனம் ஆறவேயில்லை.

ஓ ஓ உந்தன் நெற்றி மீதிலே

துளி வேர்வை

வரலாகுமா

சின்ன தாக நீயும்தான்

முகம் சுளித்தால்

மனம் தாங்குமா

உன் கண்ணிலே

துளி நீரையும்

நான் சிந்தவும்

விட மாட்டேன்

உன் நிழலையும்

தரை மீதிலே

நடமாடவும்

விட மாட்டேன்

ஒருமுறை பிறந்தேன்

ஒருமுறை பிறந்தேன்

உனக்கென உயிரையும்

நான் கொடுப்பேன்

மனதினில் உன்னை

சுமப்பதினாலே

மரணத்தை தாண்டி

வாழ்ந்திருப்பேன்

என் கண்ணில்

உன்னை வைத்தே

காட்சிகளை பார்ப்பேன்

ஒரு நிமிடம் உன்னை மறக்க

முயன்றதில்லை தோற்றேன்

நீயே என் இதயமடி நீயே

என் ஜீவனடி

வக்கீல் பரசுராமரை சந்தித்ததில் கார்த்திகேயனுக்கு பல தகவல்கள் கிடைத்ததில் உடனே ஹமீதை அழைத்து சந்தோஷ் என்ற பெயரோடு அவன் ஒரு மருத்துவன் என்றும் இப்பொழுது அவன் ஆஸ்ரேலியா ஜெயிலில் இருப்பதாகவும் அவனுக்கும் அவன் மனைவிக்கும் விவாகரத்தாகியிருக்கு. என்ன காரணம் என்பதை தான் அறிந்தவரையில் கூறியவன், உண்மையில் என்ன நடந்தது என்று தனக்கு விளக்கமாக அறியத்தருமாறு கூறினான்.

“பாஸ் இந்த கேஸ நான் ஏற்கனவே கேட்ட மாதிரி இருக்கு. சரி டீடைலா சொல்லுறேன். டோன்ட் வொர்ரி” என்ற ஹமீத் அலைபேசியை துண்டித்தான்.

“ஏன்டி என் கிட்ட மறைக்கணும் என்று நினைக்குற? உன் கஷ்டத்துல நான் பங்கு போடக் கூடாதா? உனக்கொன்னுனா நான் எப்படிடி நிம்மதியா இருப்பேன்?” மனதுக்குள் புலம்பியவாறே ஹோட்டல் அறையை அடைந்தவன் ஒரு நொடி நின்று கயல்விழியின் அறைக்கதவை வெறித்தான்.

“கதவை தட்டலாமா? தன்னால் தான் இவள் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கிறாளோ. இல்ல கயலை இப்படியே விடக் கூடாது” என்று இவன் அறைக்கதவை தட்ட முனைய, அக்கணமே கயல்விழி கதவை திறந்திருந்தாள்.

அவன் அனுப்பிய குறுஞ்செய்தியை அவள் தான் பார்த்திருக்கவில்லையே. அவளும் கார்த்திகேயன் என்ன செய்கிறான் என்று பார்க்கலாமென்று தான் வெளியே வந்திருந்தாள். 

சட்டென்று அவளை பார்த்தவனின் மனதுக்குள் பூகம்பமே வெடித்தது. அவளை இறுக அணைத்தவன் அறைக்குள் தள்ளி கதவை காலினால் சாத்தியிருந்தான்.

காருக்குள் அவன் அணைத்த போது அலறிய கயல்விழியோ இப்பொழுது அவன் அணைத்து சாதாரணமாகத்தான் ஏற்றுக் கொண்டிருந்தாள். அவளுக்கான மருந்து அவன்தான் என்று அவள் உணர்ந்து  கொள்வாளா? 

“கார்த்தி என்ன ஆச்சு?” அவன் கண்களில் இருந்த பரிதவிப்பை பார்த்த உடன் காதலிக்கும் பொழுது அவனை எப்படி அழைத்தாளோ தன்னை அறியாமல் அவ்வாறு அழைத்திருந்தாள் கயல்விழி.

அவளது அழைப்பில் மேலும் அவளை தன்னுள் இறுக்கிக் கொண்டவன் “உனக்கு நான் இருக்கேன் கயல்” என்றான்.

சிரமப்பட்டு அவனை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தி “இப்போ என்ன ஆச்சென்று இப்படி பிகேவ் பண்ணுற?” என்று அவனை ஏகத்துக்கும் முறைத்தாள்.

இவளிடம் தாழ்ந்து போனாள் ஏறி மிதித்து விடுவாள். எகிறினால் தான் சரி என்று தோன்ற மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு “உனக்கு விவாகரத்தானத பத்தி ஏன் என் கிட்ட சொல்லல?” பதிலுக்கு அவளை முறைத்தான்.

“தெரிஞ்சி போச்சா? எல்லாமே தெரிஞ்சி போச்சா? எப்படி?” என்று ஒரு நொடி அவனை அதிர்ச்சியாக பார்த்தவள் அவன் முகத்தில் தவழ்ந்த புன்சிரிப்பை பார்த்து விவாகரத்தானத்தை தவிர வேறெதுவும் தெரியாது என்று நினைத்து “அதுக்கு இப்போ என்ன? நமக்குள்ள தான் எல்லாமே முடிஞ்சு போச்சே” முறைத்தவாறு கூறினாள்.

 “இதோ இதுதான் கயல்விழி. இதுதான் இவளின் சுயரூபம். இறங்கி வரவே மாட்டாள்” உள்ளுக்குள் புன்னகைத்த கார்த்திகேயன் “சொல்லியிருந்தா நாம இப்போ கல்யாணம் பண்ணி ஹனிமூன் போயிருக்கலாமே” கயல்விழி முறைக்க முறைக்க சத்தமாக சிரித்தான்.

“உனக்கும் எனக்கும் இடையில் இருந்து எல்லாமே முடிஞ்சு போச்சு. ஏன் முடிஞ்சு போச்சு என்று மறந்து போச்சா? திரும்ப நான் ஞாபகப்படுத்த வேணுமா? எனக்கு டைவர்ஸ் ஆயிருச்சு என்று உனக்கு சொன்னா நீ திரும்ப லவ்வு கிவ்வு ஆரம்பிச்சிடுவியோனு தான் நான் சொல்லல. இதோ ஆரம்பிச்சிட்டியே.

இன்னைக்கு உன் வீட்ல என்ன நடந்திருச்சுன்னு பார்த்த இல்ல. இத்தனை வருஷமாகியும் அவங்க என்ன மனுஷியா கூட ஏத்துக்கல. இந்த ஜென்மத்துல உங்க விட்டாலுங்க உனக்கு என்ன கட்டி வைக்க மாட்டாங்க. சோ கனவு காணாத.

காதலிக்கும் போதே கட்டி வைக்கல. ஏற்கனவே கல்யாணமான பொண்ணுக்கா கட்டி வைப்பாங்க” உன் பெற்றோர் ஒரு காலமும் சம்மதிக்க மாட்டாங்கள் என்று நக்கலாக கூறுவதைப் போல் யதார்த்தத்தை கூறியவள்

“எனக்கு டைவர்ஸ் ஆனது தெரிஞ்சு இதோ நீ இப்ப குதிக்கிறியே. முடிஞ்சு போன உறவ ஒட்ட வைக்க துடிக்கிறியே. இதனால தான் நான் எனக்கு டைவர்ஸ் ஆனது பத்தி உன்கிட்ட சொல்லல.

என்ன பத்தி கவலைப்படாத. நிச்சயமாக நான் இன்னொரு கல்யாணம் பண்ணிப்பேன். ஆனா அது நீ இல்ல” கோபமாகவே கூறினாள்.

“ஆம் இவள் சொல்வது உண்மைதான். இவள் என்னை விட்டு செல்ல முக்கியமான காரணமே என் பெற்றோர்கள் தான். அவர்கள் இவளை ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை. திருமணத்திற்கு சம்மதம் சொல்லப் போவதுமில்லை. ஆனால் அவர்களின் எண்ணமும் சிந்தனையும் தவறானது என்று ஏன் இவள் புரிந்துகொள்ள மறுக்கிறாள். அவர்களுக்காக நாம் நமது சந்தோஷத்தை இழக்க வேண்டுமா? ஏன் இவள் இதை புரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் இம்சை செய்கிறாள்”

ஆயாசமாக அவளை பார்த்தவன் “காதலுக்காக பெத்தவங்களையோ பெத்தவங்களுக்காக காதலையோ விட்டுட கூடாது. பெத்தவங்க தான் முக்கியம் என்றால் காதலிக்கவே கூடாது. அது தான் நீ பண்ணு தப்பு. காதல பெத்தவங்க எதிர்க்கிறார்கள் என்றால் அதற்கு சரியான காரணம் இருக்கணும். என் அம்மாவும் அப்பாவும் சொல்லுற காரணம் உனக்கு சரியா படுதா? இவங்களுக்காக நீ என்ன தூக்கி எறிஞ்சிட்டு போனியே. நீ சந்தோஷமா இருக்கிறியா? இல்ல நான் தான் சந்தோசமா இருக்கிறேனா?” கார்த்திகேயன் கோபப்படவில்லை பொறுமையாக புரிய வைக்கவே முயன்றான்.

“உன் அப்பா அம்மா எப்படிப்பட்டவங்க, அவங்க ஆசை என்ன? உன் குடும்பம் எப்படிப்பட்ட பாரம்பரிய குடும்பம் என்று தெரிஞ்சிக்காதது உன் தப்பு. காதல் யாருக்கு யாருமேல எப்பொழுது வரும்மென்று தெரியாதே உனக்குள்ளும் வந்திருச்சு.

என்ன உன் வீட்டில அறிமுகப்படுத்த சொல்லி நான் தான் படிச்சு படிச்சு சொன்னேனே கேட்டியா? அறிமுகப்படுத்தியிருந்தா உங்க வீட்டில காதலுக்கு சம்மதம் சொல்வாங்களா? மாட்டாங்களா? என்று தெரிஞ்சிருக்கும். கொஞ்சமாச்சும் போராடியிருக்கலாம். என் சூழ்நில நான் என் அப்பாவுக்காக முடிவெடுக்க வேண்டியதா போச்சு. அந்த முடிவு கூட நான் அப்பாக்கு செய்து கொடுத்து சத்தியத்துக்காக எடுத்த முடிவு என்றவள் ஆண்டனி ராஜின் ஆசையை கூறினாள்.

 சத்தியத்தைப் பற்றி கூறாவிட்டாலும் அப்பாவின் ஆசையும், தனது ஆசையும், குடும்பத்தோடு வாழ்வது என்று  கூறியிருக்கிறாள்.  தனக்கே தன் குடும்பம் வேண்டாம் என்று தோணுகையில் இவளுக்கு எதற்கு? கார்த்திகேயனுக்கு கோபம் வர பேசும் அவளின் இதழ்களை சிறை எடுக்க எண்ணி இரண்டடி அவள் புறம் எடுத்து வைத்தான்.

அவன் எண்ணத்தை உணர்ந்தாலோ என்னவோ கண்களில் மிரட்ச்சியோடு கயல்விழி நான்கடி பின்னால் சென்றாள்.

அதை பார்த்தவனுக்கு இதயத்தில் இரத்தமே வந்தது. அவள் அச்சம் தனது பெற்றோர் மட்டுமல்ல என்று நன்றாகவே புரிந்து கொண்டான்.

Advertisement