Advertisement

அத்தியாயம் 8

ஒரு வாரம் கழித்து கார்த்திகேயனும் கயல்விழியும் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் பயணம் செய்தனர்.

“இப்போ எதுக்கு ஊருக்கு போகணும், நானும் வருவேன்” என்ற விக்னேஷை

“ஒன்னும் பயப்படாதீங்க உங்க பிரண்ட நான் பத்திரமா பாத்துக்குறேன். இந்த ஒரு வாரமா எந்த பிரச்சினையும் வரலையே” கொஞ்சம் நக்கலாகத்தான் சொன்னான் கார்த்திகேயன்.

கார்த்திகேயனை முறைத்தவாறே கேஸ் விஷயமாக போவதாக சமாளித்து கிளம்பியிருந்தாள் கயல்விழி.

அவளை தனியாக விட விக்னேஷுக்கு மனமே இல்லை. அரைமனதோடு சம்மதித்தான்.

காலையிலையே விமானத்தில் பயணித்து கோயம்புத்தூரை அடைந்தவர்கள் காரில் ஏறிய நொடி “இப்போ நாம எங்க தங்க போறோம்” என்று கேட்டான் கார்த்திகேயன்.

அவனை புரியாத பார்வை பார்த்த கயல்விழியோ “நாம எதுக்கு கோயம்புத்தூரில் தங்கணும்? நேராக உங்க வீட்டுக்கு போறோம் பார்த்திபன் கிட்ட பேசுறோம். உங்க அப்பா அம்மா கிட்ட பேசுறோம். திரும்ப சென்னைக்கு போக போறோம்”  என்றாள்.

அவளை ஆழ்ந்து பார்த்த கார்த்திகேயன் “நீ பேசின உடனே என் வீட்டு ஆளுங்க கேட்டுப்பாங்களா? முதல்ல உன்ன உள்ள விடுவாங்களான்னு தெரியல. இதுல நீ பேசினா கேட்டுபாங்கன்னு நீ நினைக்கிற. சரி இன்னைக்கு நீ பேசி அவங்க கேட்கலைன்னா அப்படியே கிளம்பி சென்னை போய்டுவியா? கோயம்புத்தூருல தங்கி நாளைக்கு ட்ரை பண்ணி பாக்க மாட்டியா?”

அவன் பேசிய பின் தான் நிதர்சனம் உணர்ந்தவள் “சரி அப்போ நாம ஹோட்டல்ல தங்கிக்கலாம்” என்றாள்.

“எதுக்கு நாம ஹோட்டல்ல தங்கனும்? அதான் உன் வீடு இருக்கே ஏன் உன் வீட்டில் தங்க உன் புருஷன் கிட்ட அனுமதி கேட்கணுமா? இல்ல நான் எக்ஸ் லவ்வர் என்று அறிமுகப்படுத்த கஷ்டமா இருக்கா? நீ எனக்கு கீழ வேலை பாக்குற, நான் பாஸ் மறந்துடாத” இவள் கணவன் இவளை எவ்வாறு நடத்துகிறான் என்ற சந்தேகத்தில் தான் கேட்டான்.

இல்லாத கணவனிடம் அனுமதி கேட்பதா கயல்விழிக்கு இருக்கும் பிரச்சினை? வீட்டுக்கு அழைத்துச் சென்றால் கார்த்திகேயன் வீட்டை அலசுவான்.

அவளது வீட்டு சுவரில் அவளது சிறுவயது புகைப்படங்கள். பெற்றோரின் திருமண புகைப்படங்கள் என்று நிறைய புகைப்படங்கள் இருக்க, அவளது திருமண புகைப்படம் மட்டும் இருக்காது. அதைப் பார்த்து அவன் எங்கே உன் திருமண புகைப்படங்கள் என்று கேட்க மாட்டானா? சந்தேகப்பட மாட்டானா? அதனாலேயே அவனுக்கு உண்மைகளை கூற நேரிடும் என்று தலையசைத்து மறுத்தாள்  கயல்விழி.

“என்ன” என்று கார்த்திகேயன் அவளை பார்க்க “வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறேன்” என்றாள்.

எக்காரணத்தைக் கொண்டும் கார்த்திகேயன் தனது வீட்டுக்கு செல்ல போவதில்லை. அதனால் “அப்போ ஹோட்டல்ல தங்க வேண்டியது தான்” என்றான்.

அதே நேரம் வக்கீல் பரசுராமன் அழைத்து விக்னேஷ் பேசியதாக கூறி, வீட்டுக்கு வருமாறு அழைத்தார். “இல்ல அங்கிள் நான் வேலை விஷயமாகத்தான் வந்தேன் வேலை முடிஞ்ச உடனே கிளம்புறேன்” என்றாள்.

“என்ன வீட்டுக்கு வர சொல்றாரா” என்று கேட்ட கார்த்திகேயனுக்கு பதில் கூறாது “முதல்ல நம்ம ஹோட்டல் போறோமா? இல்ல உங்க வீட்டுக்கு போலாமா?” என்று கேட்டாள் கயல்விழி.

பார்த்திபனை அலைபேசியில் பிடித்து விசாரித்ததில் சிவபாலன் வீட்டில் இருப்பதாக தகவல் கூறு முதலில் வீட்டுக்கே செல்லலாம் என்றான் கார்த்திகேயன்.

நேரடியாக வீட்டுக்கே வண்டியை விடாமல் எதிரே வண்டியை நிறுத்திய கார்த்திகேயன் கயல்விழியை மாத்திரம் வீட்டுக்கு செல்லுமாறு கூறினான்.

“நீங்க வரலையா?” என்று கயல்விழி கேட்க

“நமக்கு என்ன கல்யாணமா ஆயிருச்சு ரெண்டு பேரும் மாலையும் கழுத்துமா ஒன்னாக போய் வீட்டுக்கு முன்னாடி நிக்க? நாம ஒண்ணா போனா அவ்வளவுதான் அம்மா திட்ட ஆரம்பிச்சிடுவா. நீ போய் உன் கேஸ பாரு” என்றான்.

அவனை முறைத்து விட்டு இறங்கிச் சென்றாள் கயல்விழி.

வலியென்றால் காதலின்

வலிதான் வலிகளில் பெரிது

அது வாழ்வினும் கொடிது

உன்னை நீங்கியே

உயிர் கரைகிறேன்

வான் நீளத்தில்

என்னை புதைகிறேன்

இதயத்திலே தீபிடித்து

கனவெல்லாம் கருகியதே

உயிரே நீ உருகும்முன்னே

கண்ணே காண்பேனோ

இலை மேலே

பனித்துளி போல்

இங்கும் அங்குமாய்

உலவுகின்றோம்

காற்றடித்தால்

சிதறுகின்றோம்

பொன்னே பூந்தேனே

காதல் என்னை

பிழிகிறதே

கண்ணீா் நதியாய்

வழிகிறதே

நினைப்பதும் தொல்லை

மறப்பதும் தொல்லை

வாழ்வே வலிக்கிறதே

கயல்விழி அனுமதியெல்லாம் கேட்டுக் கொண்டு நிற்கவில்லை. உள்ளே நுழைந்து அங்கிருந்த சோபாவில் காலுக்கு மேல் காலை போட்டு அமர்ந்தாள்.

அவள் வரவுக்காக காத்திருந்த பார்த்தீபன் “நீ இங்க என்ன பண்ணுற?” என்று கத்த, வீட்டில் இருந்த அனைவருமே அங்கே கூடினர். அவன் கத்தியது அனைவரையும் வரவழைக்க தானே.

“ஏய் நீ எதுக்கு என் வீட்டுக்கு வந்த? இங்க என்ன பண்ணுற? போ வெளிய” வள்ளி கத்த ஆரம்பிக்க,

வக்கீல் உடையில் தோரணையாக அமர்ந்திருந்த கயல்விழியை பார்க்கையில் அவள் காரணமில்லாமல் வீட்டுக்கு வந்திருக்க மாட்டாளென்று புரிய மனைவியையும், மகனையும் அடக்கிய சிவபாலன் “சொல்லுங்க வக்கீலாம்மா என்ன விஷயமா வந்திருக்குறீங்க” என்று கேட்டவாறே அவள் எதிரே அமர்ந்தான்.

உனக்கு என் வீட்டுக்கு வர அனுமதி இல்லை. மரியாதையும் கொடுக்க மாட்டேன். நீ அணிந்திருக்கும் ஆடையினால் தான் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொன்னான்.

அது கயல்விழிக்கு புரியாமல் இல்லை அதனால் தானே திமிராக அமர்ந்திருந்தாள்.

“நான் வந்தது மிஸ்டர் பார்த்தீபன் கிட்ட பேச, அவருக்கு எதிரா பத்மா கேஸ் கொடுத்திருக்காங்க. பேசிப் பார்த்ததுல இது குடும்ப விஷயம். சரி சுமூகமான பேசிப்  பார்க்கலாம் என்று வந்தேன். என்ன மிஸ்டர் பார்த்தீபன் பேசலாமா?”

“பத்மா யாரு?” சிவபாலன் மற்றும் வள்ளி வாய் விட்டே மகனிடம் கேட்டிருக்க, கண்மணி அமைதியாக இருக்க, தினகரனும் மதியழகியும் பார்த்தீபனை கண்களால் கேட்டிருந்தனர்.

“பத்மா எதுக்கு என் மேல கேஸ் கொடுத்தா?” யாரையும் கண்டு கொள்ளாது கயல்விழியை முறைத்தான் பார்த்தீபன். நடிப்பதாக இருந்தால் தத்ரூபமாக நடிக்க வேண்டாமா?

“பத்மாவ கல்யாணம் பண்ணிக்கிறதாக நீங்க டாச்சர் பண்ணுறீங்களாம். நீங்க அவங்கள ஏற்கனவே காதலிச்சு கைவிட்டதுனால மன உளைச்சலுக்கு ஆளாகி ட்ரீட்மென்ட் எடுத்து இருக்காங்க. இன்னமும் அவங்களுக்கு கல்யாணமாகல என்று தெரிஞ்சிக்கிட்டு நீங்க அவங்கள டார்ச்சர் பண்றீங்க அப்படித்தானே. அவங்க உங்க மேல கேஸ் கொடுக்க என்கிட்ட வந்தாங்க. நான் தான் பேசிப் பார்க்கிறேன் என்று இங்க வந்தேன்”

கயல்விழி பேசியதை வைத்து பத்மா யார் என்று புரிந்து கொண்ட சிவபாலன் “டேய் என்னடா சொல்லுறா இவ” என்று பார்த்திபனை கேட்டான்.

கயல்விழி அணிந்திருந்த ஆடைக்காகவும் அவள் பார்க்கும் தொழிலுக்காக வேண்டியும் அவளுக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்று சிவபாலன் எண்ணவில்லை. மரியாதை கொடுத்துப் பேசி அவளை அந்நியமாக கருத வேண்டும் என்று எண்ணினான். அப்படி இருந்தும் மகன் செய்த காரியத்தில் கயல்விழியை ஒருமையில் பேசி இருந்தான்.

“பின்ன என் பொண்டாட்டிக்கு தான் குழந்தை பிறக்காது என்று டாக்டர் சொல்லிட்டாங்க. என்ன ரெண்டாவது கல்யாணம் பண்ண சொல்லி நீங்க டார்ச்சர் பண்றீங்க. நான் எனக்கு புடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்க வேணாமா? அதுக்கு தான் இப்படி பண்ணினேன். அதுக்கு நான் என் பத்மாவ தேடி போனேன்” என்றான் பார்த்திபன்.

“டேய் அதுக்காக நீ அவள எதுக்குடா தேடி போற நாங்களே உனக்கு நல்ல பொண்ணா பாத்து கட்டி வைக்க மாட்டோமா” என்றாள் வள்ளி.

இவர்கள் இப்படித்தான் கூறுவார்கள் என்று அறிந்த பார்த்திபன் யாரும் அறியாமல் கயல்விழியை பார்த்து புன்னகைத்தான்.

“ஒரு நிமிஷம் மிஸ்டப் பார்த்திபன் உங்க வைப்புக்கு எந்த பிரச்சினையும் இல்ல. அதற்கான டாக்டர் சர்டிபிகேட் இதோ. பிரச்சனை எல்லாம் உங்க ஒருத்தருக்கு தான். உங்களுக்கு மட்டும் தான். பிரச்சனை உங்களுக்கு என்று மறைச்சி, பிரச்சனை உங்க வைப்புக்கு என்று கொண்டு வந்து, நீங்க பத்மாவ கல்யாணம் பண்ணிக்க திட்டம் போடுறீங்க. உங்களுக்குத்தான் பிரச்சினை என்று டாக்டரோட ரிப்போர்ட் இங்க இருக்கு என்று ஒரு கோப்பை காட்டினாள்.

கண்மணி பார்த்திபனின் கையை இறுகப்பற்றிக் கொள்ள, “டேய் இவ என்னடா… என்னென்னமோ சொல்லுறா?” பதறினாள் வள்ளி.

மனைவியை கண்களால் அதட்டிய பார்த்திபன் “ஆமா பிரச்சனை எனக்கு தான் என்று நான் மறச்சு கண்மணிக்குத் தான் பிரச்சனை என்று சொன்னேன். அவளை விவாகரத்து பண்ண தான் அப்படி சொன்னேன். நானா விவாகரத்து பண்றேன்னு சொன்னா விடுவாங்களா இவங்க? பிரச்சினை கண்மணிக்கு என்றால் தானே விவாகரத்து பண்ண விடுவாங்க. அப்போதானே நான் காதலிச்ச பத்மாவ என்னால கல்யாணம் பண்ணிக்க முடியும். எனக்கு குழந்தை பிறக்காதுன்னு சொன்னாலும் பத்மாவுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. அவளுக்கு நான் குழந்தை, எனக்கு அவ குழந்தை. அப்படியே வாழ்ந்துட்டு போறேன். பிடிக்காது பொண்டாட்டியை விட காதலிக்கிற பொண்ணோட வாழ்ந்துட்டு செத்துடலாம்” என்றான் பார்த்திபன்.

“அத நீங்க சொல்லக்கூடாது அதை பத்மா சொல்லணும். உண்மையை மறைச்சதே முதல் தப்பு. இதுல நீங்க போய் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி பத்மாவ டார்ச்சர் பண்ணி இருக்கீங்க. பத்மா கிட்ட கூட நீங்க உண்மைய சொல்லல. இதுக்கே உங்கள உள்ள வைக்கலாம்” பார்த்திபனை மிரட்டினாள் கயல்விழி.

“ஏன்டா இவள் சொல்றதெல்லாம் உண்மையா பிரச்சனை உனக்கு தானா?” சிவபாலன் பதறியவாறே கேட்டான்.

“ஆமா அதுக்கு இப்ப என்ன?” தெனாவட்டாக பதில் சொன்னான் பார்த்திபன்.

“அதுக்காக பொண்டாட்டிக்கு தான் பிரச்சனை என்று பொய் சொல்லுவியா?” பார்த்திபனை அடிக்கலானாள் வள்ளி.

தனக்கு தனது மனைவியும் முக்கியம். கடையும் வேண்டும் என்று பார்த்திபன் தீவிரமாக கூறியதும் கயல்விழி கூறிய ஆலோசனை பிரச்சினை கண்மணிக்கு இல்லை பார்த்திபனுக்கு என்ற வீட்டில் கூற வேண்டும் என்பதுதான். வீட்டில் கூறினால் அவர்கள் நம்புவார்களா? ஒத்துக் கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்தது. ஆதாரங்களை முன் வைத்தால் நம்பிதானேயாக வேண்டும். பிரச்சினை பார்த்திபனுக்குத்தான் என்று ஒரு மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை கார்த்திகேயன் செய்திருந்தான்.

பத்மாவை இதற்குள் இழுக்க வேண்டுமா என்று பலவாறு யோசித்தான் பார்த்திபன்.

ஒரு பெண்ணுடைய சம்மதம் இல்லாமல் அவளை உள்ளே கொண்டு வருவதில் தனக்கும் இஷ்டமில்லை என்று முதலில் அவள் எங்கே இருக்கின்றாள்? அவளுக்கு திருமணம் ஆகி விட்டதா? என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் அதன் பின் தான் அவளை இதற்குள் கொண்டு வரலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்ய முடியும் என்று கயல்விழி கூற, ஆமோதித்தான் கார்த்திகேயன்.

பத்மா எங்கே இருக்கிறாள்? என்ன செய்து கொண்டிருக்கிறாள்? திருமணமாகி விட்டதா என்றெல்லாம் கண்டுபிடிக்க நான்கு நாட்கள் எடுத்திருந்தது.

பத்மாவின் குடும்ப பிரச்சனையால் அவளுக்கு இன்னமும் திருமணமாகி இருக்கவில்லை. அவளிடம் பார்த்திபனின் பிரச்சினையை கூறி கார்த்திகேயன் உதவி கோர பார்த்திபனுக்கு உதவி செய்ய அவளும் சம்மதித்தபடியால் கயல்விழியால் பார்த்திபனின் பிரச்சனைக்குள் பத்மாவை கொண்டுவர முடிந்தது.

இதற்கு கண்மணியை சம்மதிக்க வைப்பது தான் பார்த்திபனுக்கு இருந்த பெரிய பிரச்சினை.

“இப்ப நீ என்ன சொல்ல வர நான் பத்மாவ கல்யாணம் பண்ணிக்கவா? இல்ல எங்க அப்பா, அம்மா, பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கவா? யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நான் சந்தோஷமா இருக்க போறதில்ல.

கல்யாணம் பண்ண உன்னையே என்னால சந்தோஷமா பாத்துக்க முடியல. இதுல வேற இன்னொருத்திய எப்படி நான் சந்தோஷமா பாத்துக்க முடியும்? சொல்லு. அப்படியே நான் பத்மாவ கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்க அப்பா அம்மா என்ன சந்தோஷமா இருக்க விடுவாங்களா? அதையும் நீயே சொல்லு. குழந்தை தான் பிரச்சனைனா நாம தத்து எடுத்துக்கலாம். எனக்கு பிரச்சினைன்னா நீ என்ன முடிவு எடுப்ப? நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிடுவியா?”

“ஐயோ மாமா” கண்மணி பதறினாள்.

ஏதோ பேசி கண்மணியை சம்மதிக்க வைத்து விட்டான் பார்த்திபன். கயல்விழி வந்து பேசவும் என்ன நடக்குமோ என்று அஞ்சி தான் பார்த்திபனின் கையைப் பற்றி இருந்தாள்.

வள்ளி அடித்த அடி பார்த்திபனுக்கு மட்டுமல்லாது கண்மணியின் மீதும் விழுந்தது.

“அத்த அவர அடிக்காதீங்க, அத்த அவர அடிக்காதீங்க” அடுத்து உண்மையை உளறி இருப்பாளோ என்னவோ வள்ளி பேசியதை கேட்டு திகைத்து நின்றாள் கண்மணி.

“ஏன்டா பிரச்சனை உனக்கு என்று தெரிஞ்சும் நீ, அது உன் பொண்டாட்டிக்கு என்று கொண்டு வந்தது கூட பிரச்சினை இல்லடா. போயும் போயும் எவளையோ கல்யாணம் பண்ண முடிவு பண்ண பாரு அங்க தான் நீ தப்பு பண்ண. எங்ககிட்ட வந்து உண்மைய  சொல்லி இருந்தா அதுக்கு என்ன பண்ணனும்னு நாங்க சொல்லி இருப்போமா மாட்டோமா?

இப்ப பாரு உன் பொண்டாட்டிக்கு உண்மை தெரிஞ்சு போச்சு நீ இவ முன்னாடி அசிங்கப்பட்டு நிற்கணுமா? எங்க உண்மை தெரிஞ்சா இவ உன்ன விட்டுட்டு போவான்னு நீ காதலிச்ச பொண்ண தேடி போனியா? இவ எல்லாம் உன்ன விட்டுட்டு போக மாட்டா. விட்டுட்டு போனா இவ குடும்பத்தை சந்தி சிரிக்க வைக்க மாட்டேன்” என்றாள் வள்ளி.

ஆக பிரச்சினை பார்த்திபனுக்கு இருந்தாலும் சரி, கண்மணிக்கு இருந்தாலும் சரி வள்ளிக்கு கவலை இல்லை.

“என் புள்ளைய விட்டுட்டு இவ வேற ஒருத்தன போய் கல்யாணம் பண்ணி புள்ளைய பெத்து வாழ்ந்துடுவாளா? அதையும் தான் பார்க்கலாம். கயல்விழியை பார்த்தவாறு கூறினாள்.

கயல்விழி மீண்டும் கார்த்திகேயனின் வாழ்க்கைக்குள் வந்துவிட்டாள். எங்கே கார்த்திகேயன் மீண்டும் கயல்விழியின் புராணம் பாட ஆரம்பித்து விடுவானோ! கயல்விழி கணவனை விட்டு கார்த்திகேயனுடன் சேர்ந்து விடுவாளோ என்று அச்சம் வள்ளிக்குள் இருக்க, அவளுக்கும் புரியும்படி பேசினாள்.

அதை சரியாக புரிந்து கொண்ட கயல்விழி “என்ன கண்மணி உங்க புருஷனுக்கு எதிரா கேஸ் கொடுக்குறீங்களா?அவர விவாகரத்து பண்ண வேண்டுமா?” சிரித்தவாறு கேட்டாள்.

“ஐயோ மாமாவ விட்டு நான் போக மாட்டேன்… மாட்டேன்” கண்மணி பதறினாள்.

தான் மிரட்டியதால் தான் கண்மணி அச்சப்படுகிறாள் என்று வள்ளி நினைக்க,

“எனக்கு தான் பிரச்சனை என்று அவளுக்கு ஏற்கனவே தெரியும். மௌனமா தான் இருந்தா. எங்க வீட்டு ஆளுங்க என்ன பேசியும் அமைதியாக தான் இருக்கா. அவ அப்படித்தான் இருப்பா. என் பொண்டாட்டிய என்கிட்ட இருந்து பிரிக்க நீ யாரு? முதல்ல நீ வீட்டை விட்டு வெளியே போ. பத்மா கிட்ட பேசி கேஸ வாபஸ் வாங்க வைக்கிறேன்” என்றான் பார்த்திபன்.

“நான் பிரச்சினையை சுமூகமா பேசி முடிக்க தான் வந்தேன். நீங்க பத்மா கிட்ட பேசுறதா இருந்தா எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. உங்க வைஃப் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க முதல்ல அவங்கள புரிஞ்சுக்க பாருங்க” பார்த்திபனுக்கு அறிவுரை கூறுவது போல் எழுந்து கொண்டள் கயல்விழி.

“ஒரு நிமிஷம் இனிமே எதுவானாலும் வீட்டுக்கு வராதீங்க போன் பண்ணி சொல்லுங்க. நாங்க பார்த்துக்கிறோம்” கயல்விழியின் முகத்தில் முழிப்பதே பாவம் என்பது போல் பேசிய சிவபாலன் வள்ளியை ஏறிட்டு “வீட்டுக் கதவை பூட்டி வை கண்ட கண்ட நாயெல்லாம் வீட்டுக்குள்ள நுழையிது முதல்ல வீட்டை நல்லா கழுவு” என்றான்.

இப்படி எல்லாம் பேசுவார்கள் என்று அறிந்து தானே கயல்விழி அனுமதி வாங்காமல் உள்ளே நுழைந்தாள். “ஆமா ஆமா நல்லா கழுவுங்க முதல்ல உங்க மனசுல இருக்குற அழுக்கு போக கழுவுங்க. அதனால உங்க பசங்க வாழ்க்கை தான் நாசமாகுது என்று விட்டு வெளியேறினாள்.

“என்ன சொல்லிட்டு போறா? கார்த்திகேயனுக்கு இவளை கட்டி வைக்காததுனால அவன் வாழ்க்கை நாசமா போச்சுன்னு சொல்லிட்டு போறாளா?” வள்ளி கணவனை ஏறிட்டாள்.

“அவ கெடக்குறா விடு” என்று சிவபாலன் என்னமோ சொல்ல ஆரம்பிக்க அதை காதில் வாங்காமல் விறு விறுவென வெளியே வந்த கயல்விழி வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

அவள் கதவை சாத்திய மறுநொடியே கார்த்திகேயன் அவளை இறுக அணைத்து “தேங்க்ஸ்” என்றான்.

அதை சற்றும் எதிர்பார்க்காத கயல்விழி மேனி நடுங்கி விதிர் விதிர்த்துப் போனாள்.

தன்னிலை மறந்து உணர்ச்சிப் பெருக்கில் கார்த்திகேயன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.  தன் ஏக்கம் தீர்க்கும் காதலி கைகளில் கிடைத்ததில் மதி மயங்கினான் கார்த்திகேயன். அவளை முத்தமிடும் வேலையில் வேகமாக இவன் இறங்க அலறிவிட்டாள் கயல்விழி.

அவள் அலறியதில் சுயநினைவுக்கு வந்த கார்த்திகேயன் அவளை விட்டு விலகி நின்று “சாரி” என்றான்.

தான்தான் இவளிடம் இவ்வாறு நடந்து கொண்டோமா? ஒரு நொடி என்ன நடந்தது என்று கார்த்திகேயனுக்கு புரியவில்லை.

தன்னை பார்த்தவாறு வெட வெடவென நடுங்கும் கயல்விழியை பார்த்தவன் “கயல்… ஐம் சாரி. ஐம் சாரி. ஐம் சாரி” என்றான் அவளை பார்க்கவே அவனுக்கு சங்கடமாக இருந்தது.

அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கயல்விழி சுய நினைவுக்கு வந்தவளாக துப்பட்டாவை எடுத்து அவளை போர்த்திக் கொண்டாள்.

தான் தொட்டதினால் தான் அவள் அவ்வாறு நடந்து கொள்வதாக எண்ணிய கார்த்திகேயன் தன்னையே நொந்து கொண்டான்.

“ஐம் சாரி கயல் இனிமே இப்படி எல்லாம் நடக்காது” என்றவன் அமைதியாக வண்டியை கிளப்பினான்.

மெல்ல மெல்ல தன்னிலை மீட்டுக்கொண்ட கயல்விழியின் கண்களில் இருந்து கரகரவென கண்ணீர் வழிந்தோடியது. அதை கார்த்திகேயன் கண்டு கொள்ளாமல் மறைக்க வெளியே வேடிக்கை பார்க்கலானாள்.

அவள் விசும்பும் சத்தம் கேட்டு அவள் அழுவதை புரிந்து கொண்ட கார்த்திகேயனுக்கு கோபம் வந்தது. தெரியாமல் நடந்து விட்டது. மன்னிப்பும் கேட்டாற்று எதற்காக இவள் அழ வேண்டும்?

“கயல் என்னை பாரு? அதான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டேனே? எதுக்கு அழுற? என்ன அசிங்கப்படுத்திரியா” கோபத்தை அடக்கியவாறு கேட்டான்.

“வண்டியை நிறுத்துறியா?” விசும்பியவாறு கயல்விழி கேட்க

“எதுக்கு இறங்கி ஓட போறியா?” அவளை முறைதான்.

“எனக்கு குளிருது நான் உன்னை ஹக் பண்ணிக்கவா?” அவனை பாராமல் இவள் கேட்க 

“என்ன” அதிர்ச்சியில் வண்டியை நிறுத்தி இருந்தான் கார்த்திகேயன்.

அவன் வண்டியை நிறுத்திய மறு நொடி கயல்விழி அவனே இறுக அணைத்து கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். முதுகை நீவி விட்டவாறு அவளை ஆறுதல் படுத்திய கார்த்திகேயனுக்கு சுத்தமாக ஒன்றுமே புரியவில்லை.

சற்று நேரத்தில் தானாக சமாதானமடைந்த கயல்விழி ஹோட்டல் அறைக்கு போகலாம் என்று கூற அவள் முகத்தைப் பார்த்த கார்த்திகேயனுக்கு எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவளாக கூறுவாள் என்று அவள் முகத்தை பார்த்தவாறு வண்டியை ஓட்ட அவளோ ஒன்றுமே பேசவில்லை.

தன்னை நினைத்து அழுதாளா?

தங்களுடைய கடந்த கால வாழ்க்கையை நினைத்து அழுதாளா?

அல்லது இப்பொழு அவள் வாழும் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினையா?

கேட்டால் சொல்வாளா?

ஏதோ ஒன்று என்னை

தாக்க யாரோ போல உன்னை பார்க்க

சுற்றி எங்கும் நாடகம் நடக்க

பெண்ணே நானும் எப்படி நடிக்க

காலம் முழுதும்

வாழும் கனவை கண்ணில்

வைத்து தூங்கினேன் காலை

விடிந்து போகும் நிலவை

கையில் பிடிக்க ஏங்கினேன்

பெண்ணே உந்தன்

ஞாபகத்தை நெஞ்சில்

சோ்த்து வைத்தேனே

உன்னை பிரிந்து போகையிலே

நெஞ்சை இங்கு தொலைத்தேனே

Advertisement