Advertisement

அத்தியாயம் 7

காதலிக்கும் பொழுது திருமணத்திற்கு பின் காதலியை எவ்வாறெல்லாம் பார்த்துக் கொள்வேன் என்று காதலன் காதலியிடம் கூறுவதும், வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பதும் சகஜம் தான். ஆனால் நிதர்சன வாழ்க்கையில் எல்லோரும் அவ்வாறு பார்த்துக் கொள்வதுமில்லை. அதற்கு முக்கிய காரணம் அவன் கொடுக்கும் வாக்குறுதிகள் அநேகமானவை கவிதை வரிகள் போல் கற்பனை கலந்தவையே. நிதர்சனத்தில் யாராலும் செய்ய முடியாதவைகளே.

ஆனால் சராசரியான கணவனிடம் மனைவியும், மனைவிடம் கணவனும் எதிர்பார்ப்பது அன்பும், அக்கறையும், ஆறுதலும், ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பதேயாகும்.

கயல்விழி சென்னை வந்தது அவளது கணவனின் சம்மதமில்லாமலா? என்ற சந்தேகம் கார்த்திகேயனுக்கு வரவில்லை. வந்திருந்தால் அப்படித்தானே கேட்டிருப்பான்.

அவன் காதல் கொண்ட மனமோ! தான் எவ்வாறெல்லாம் இவளை பார்த்துக்கொள்வதாக கூறியிருந்தேன். என்னை விட்டு விட்டு இவளது அப்பா சொன்னதற்காக யாரோ ஒருவனை திருமணம் செய்து கொண்டாளே ஏன் அவன் இவளை பார்த்துக்கொள்ள மாட்டானா? என்ற கோபத்தோடு, இவள் என்னை விட்டு சென்றாலே என்ற கோபமும் சேர்ந்துகொள்ள “ஏன் உன் புருஷன் வீட்டு வேலையில உனக்கு ஹெல்ப் பண்ண மாட்டானா?” என்று கேட்டான்.

வீசி வரும் தென்றலை கிழித்து

ஆடைகள் நெய்து தருவேனே

பூத்து நிற்கும் பூக்களை செதுக்கி

காலடி செய்து தருவேனே

வானவில்லின் ஒரு நிறம் பிரித்து

உதட்டுக்கு சாயம் தருவானே

மின்னல் தரும் ஒளியினை உருக்கி

வளையலும் செய்து தருவேனே

நீ கேட்டால் போதுமடி

என் உயிரை பரிசளிப்பேன்

நீ கேட்டால் போதுமடி

என் உயிரை பரிசளிப்பேன்

நீ வா நீ வா என் அதிசய பூவே வா

நீ வா நீ வா என் அழகிய தீவே வா

ஒரு நொடி கார்த்திகேயனை ஆழ்ந்து பார்த்தாள் கயல்விழி. 

கணவன் என்று ஒருவன் கூடவே இருந்திருந்தால் உதவி செய்திருப்பான். தொலை தூரத்தில் இருக்கின்றான் என்றால் உதவி செய்ய அவன் அருகில் இல்லையே, அவன் எவ்வாறு உதவி செய்வான் என்று சிலாகித்து கூறியிருக்கலாம். இல்லாத கணவனை பற்றி என்ன சொல்வாள்?

என்ன சொல்வது என்று கயல்விழி திகைக்க “ஏய் விழி பசிக்கலயா? எனக்கு செம்ம பசி. வா சாப்பிடலாம்” என்றவாறே வந்தான் விக்னேஷ்.

தன்னை காக்க வந்த தெய்வமாக கயல்விழி விக்னேஷை பார்க்க, விக்னேஷை வாய்க்குள்ளையே வையலானான் கார்த்திகேயன்.

கயல்விழி கார்த்திகேயனுக்கு எந்த பதிலையும் கூறாமல் அந்த இடத்தை விட்டு அகல, கலந்தாலோசிக்கும் அறையின் திரைசீலைகளை ஏற்றியவாறே அவர்களை பார்த்தான் கார்த்திகேயன்.

விக்னேஷ் எதோ கூறுவதும், கயல்விழி மறுப்பதுமாக இருக்கா, விக்னேஷ் அவள் கையை பிடித்து இழுக்க, அவன் தோளில் அடித்தவள் அவனோடு சென்றாள்.

திரு வந்து கார்த்திகேயனை சாப்பிட அழைக்க “என்ன வாங்கிட்டு வந்த?” என்று கேட்டவாறே சாப்பாட்டறைக்குள் நுழைய, விக்னேஷும் கயல்விழியும் உணவுகளை கடைபரப்பியவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

“ஆஹா… ஆஹா… வாசனை தூக்குதே. எந்த கடையில் வாங்கினீங்க?” என்றவாறே திருக்குமரன் அமர, தன் மனதில் எழுந்த கேள்வியை கேட்டான் என்ற பார்வையோடு கார்த்திகேயனும் கயல்விழிக்கு எதிரே அமர்ந்தான்.

“கடையா? நான் என் கையால சமாச்சத்து சார்”

“நீயா?” பெருமையாக சொன்ன விக்னேஷை வினோதமாக பார்த்தான் கார்த்திகேயன். ஆக வெளியே சாப்பிட போகிறேன் என்ற கயல்விழியின் கையை பிடித்து இழுத்து வந்து உணவு பரிமாறுகிறான் என்று புரிந்து கொண்டான்.

“நீங்களா சமச்சீங்க. உங்களுக்கு சமைக்க கூட தெரியுமா? நான் மேடம் சமச்சத்தாக இல்ல நினச்சேன்” திரு ஆச்சரியமாக கேட்க,

“நான் ஆஸ்ரேலியால தனியா இருக்கும் பொழுது கத்துக்கிட்டேன். எத்தனை தடவ நான் கயலுக்கு சமைச்சி கொடுத்திருக்கேன்” என்றான் விக்னேஷ்.

“அப்போ நீ கல்யாணத்துக்கு பிறகு ஆஸ்ரேலியால தான் இருந்தியா? அமெரிக்கால இருந்ததாக இல்ல சொன்னாங்க”

கார்த்திகேயன் சாணக்கியனாக இருப்பதினால் தான் இத்தனை வழக்குகளை கையாண்டு வெற்றியை மட்டும் ஈட்டுகிறான். வார்த்தைகளால் விளையாடும் வக்கீலான அவனுக்கு எதிரே இருப்பவர் பேசுவதை வைத்து அதன் அர்த்தம் என்னவென்று தெரியாதா?

விக்னேஷ் ஆஸ்ரேலியாவில் தனியாக இருந்ததினால் தான் சமைத்தான். இங்கே அவன் சொந்த வீட்டில் பெற்றோறோடு இருக்கும் பொழுது சமைக்க வேண்டிய அவசியம் இல்லையே என்று கண்டு கொண்டவன், கயல்விழி அமெரிக்காவில் இல்லை ஆஸ்ரேலியாவில் இருந்ததை தெரிந்து கொண்டான். அவள் திருமணமாகி எங்கே சென்றால் என்று கூட தனக்கு தெரியவில்லை என்று எண்ணுகையில் நொந்து விட்டான்.

விக்னேஷும், கயல்விழியும் பால்ய சிநேகிதர்கள். அவர்களின் நட்பு ஆஸ்ரேலியாவிலும் தொடர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட உறவை ஏன் என்னிடம் மறைத்தாள்? யோசனையாக கயல்விழியை பார்த்தான் கார்த்திகேயன்.

“நீங்களும் எடுத்துக்கோங்க சார்” திருவுக்கு கொடுத்து விட்டு கார்திகேயனையும் சாப்பிட அழைத்தான் விக்னேஷ்.

விக்னேஷுக்கு கார்த்திகேயன் “ஆஸ்ரேலியாவிலா இருந்தாய்” என்று கயல்விழியிடம் கேட்டது சந்தேகத்தை உண்டாக்கவில்லை. கயல்விழியும், தானும் இவனிடம் வேலைக்கு சேரும் முன் விசாரித்திருப்பான் என்று தான் எண்ணினான். சந்தேகப்பட்டிருந்தால் கார்த்திகேயனை குடைந்திருப்பான்.

“ஆமா விக்னேஷ். மேடனும் நீங்களும் நல்ல ப்ரெண்ட்ஸ் இல்லையா? அவங்க ஹஸ்பன் எப்படி? பிரென்டலி டைப்பா?” விக்னேஷ் நெற்றியை தடவ “இல்ல நீங்க சமைச்சி எடுத்துக்கிட்டு வந்திருக்குறீங்க. மேடத்தோட ஹஸ்பன் அவங்களுக்காக சாப்பாடு எடுத்துட்டு வருவார் என்று எதிர்பார்த்தேன்” என்றான்.

கயல்விழிக்கும் அவளது கணவனுக்கும் இடையில் என்ன மாதிரியான உறவு இருக்கும் என்று நண்பனான விக்னேஷுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அவன் சொல்வதை வைத்து கண்டு கொள்ளலாம் என்று காத்திருந்தான் கார்த்திகேயன்.

அவள் விக்னேஷோடு சிரித்துப் பேசினாலும், மனதில் எதோ ஒரு இறுக்கத்தோடு இருப்பது போலவே கார்த்திகேயனுக்கு தோன்றியது. தன்னை பார்த்ததினாலா? என்று எண்ணியவன் அவள் குடும்ப வாழ்க்கை எத்தகையது என்று அறிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணினான். அது அவன் கடமை என்று வேறு எண்ணினான். அவள் சந்தோசமாக இல்லையென்றால் தான் எவ்வாறு நிம்மதியாக இருபதாம்? என்று மனதுக்கு ஆறுதல் வார்த்தைகள் வேறு கூறிக் கொண்டான். சற்று முன்தான் தன்னை விட்டு சென்றவள் என்று அவளை வசை பாடினான். அவள் எக்கேடு கேட்டாலும் எனக்கென்ன என்று விட வேண்டியது தானே. அவன் காதல் கொண்ட மனம் அவனை அவ்வாறு யோசிக்க விடவில்லை.   

விக்னேஷ் புன்னகைத்தவாறே கயல்விழியை பார்க்க, “அவர் அமெரிக்கால இருக்காரு. நான் தான் அங்க போகணும்” என்றாள். 

சென்னைக்கு வர மாட்டேன். கார்திகேயனிடம் வேலைக்கு சேர மாட்டேன் என்ற கயல்விழி ராதாவுக்காக, அவளின் குழந்தை தாராவுக்காக சென்னை வந்தாலும் இறுகியே இருந்தாள். விக்னேஷும் வக்கீல் தானே காலையில் காரணமில்லாமல் கயல்விழி கார்திகேயனிடம் சொந்த விஷயங்களை பேச வேண்டாமென்று கூற மாட்டாள் என்று தான் கார்த்திகேயனுக்கு நீயே பதில் சொல்லு எனும் விதமாக பார்த்தான்.

ஐந்து வருட ஒப்பந்தம் போடும் பொழுது கயல்விழி அவள் அமேரிக்கா செல்ல வேண்டும் என்பது கார்த்திகேயனின் ஞாபகத்தில் வரவே “சரி தான்” என்று தலையசைத்தான்.

“அப்போ நீங்க ரெண்டு பேரும் ஒண்ணாகவா இருக்கிறீங்க?” சாப்பாட்டை பற்றி யோசித்த திரு கேட்டிருக்க,

“டேய் என்னடா பேசுற?” கார்த்திகேயன் கடுப்பாகி திருவை முறைக்க,

“இவன் என் எதிர் வீடுதான்” கார்த்திகேயன் கோபப்பட்டான் என்று கூறினாளோ, தனக்கும் விக்னேஷும் இடையில் தப்பான உறவு இல்லையென்று தெளிவு படுத்த கூறினாளோ சாதாரணமாக கூறியவள் “தாரா கேஸ்ல எனக்கு சில டவுட்ஸ் இருக்கு மிஸ்டே கார்த்திகேயன் நீங்க சாப்பிட்டு வாங்க” என்று எழுந்து கையை கழுவ செல்ல முயன்றாள்.

“என்ன விழி வர வர ஒழுங்கா நீ சாப்பிடவே மாட்டேங்குற?” அவள் கையை பிடித்து தடுத்த விக்னேஷ் அமருமாறு பணிக்க, பல்லை கடித்தான் கார்த்திகேயன்.

கார்த்திகேயனை பார்த்தவாறே விக்னேஷின் கையை எடுத்து விட்டவள் “எனக்கு போதும்” என்று புன்னகைத்தாள்.

“மேடம் டயட்ல இருக்காங்க போல. நமக்கு சோறு தான் முக்கியம்” என்று திரு பாத்திரங்களை தன் பக்கம் நகர்த்திக் கொண்டான்.

“நீங்க போங்க. நான் வரேன்” விக்னேஷிடமிருந்து அவளை பிரித்து அனுப்பியிருந்தான் கார்த்திகேயன்.

கயல்விழி கார்த்திகேயனை மற்றும் திருவை சுற்றி தான் கை கழுவ செல்ல வேண்டும். அறையை விட்டு வெளியேற மீண்டும் அவர்களை தாண்டி வர வேண்டும். இவள் கை கழுவி விட்டு வரும் நேரம் கார்த்திகேயனின் மேசையிலிருந்த தொலைபேசி சிணுங்கவே இருக்கையை தள்ளியவாறு எழுந்து கொண்டான்.  அவனருகே வந்திருந்த கயல்விழி இதை எதிர்பாராமல் அவன் மேல் மோத, அவள் விழுந்து விடாதபடி இடது கையால் அணைத்து அவளை நிறுத்திய கார்த்திகேயன் தொலைபேசி அழைப்புக்காக விரைந்திருந்தான்.

திரு இவர்களை கவனிக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருக்க, கார்த்திகேயன் ஒரு வார்க்கஹாலிக் என்பதினால் இவ்வாறு நடந்து விட்டதாக விக்னேஷும் அதை பெரிதாக நினைக்காமல் கை கழுவ எழுந்து வந்தான்.

அவன் தொட்டதில் கயல்விழி திகைத்து அங்கேயே நின்றிருந்தாள்.

“என்னாச்சு விழி” கொஞ்சம் பதட்டத்தோடு விக்னேஷ் கேட்க

“இல்ல ஒண்ணுமில்ல” என்று சுயநினைவுக்கு வந்தவள் போல் தலையசைத்தாள்.

“ஆர் யு ஓகே?” ஆஸ்ரேலியாவில் நடந்த சம்பவத்தால் ஒருவாறு மீண்டு வந்து விட்டாள். எங்கே மீண்டும் அதன் தாக்கத்தால் தன்னுள் இறுகிக் கொள்வாளோ என்று தான் பதறினான் விக்னேஷ்.

“ஐம் ஓகே” என்று புன்னகைத்த கயல்விழி தலையை உலுக்கியவாறு சென்றாள்.

விக்னேஷ் அச்சப்பட்டது போல் அவளுக்கு அவளது திருமண வாழ்க்கையில் நடந்த சம்பவங்க ஞாபகத்தில் வந்து அவள் தடுமாறி நிற்கவில்லை. கார்த்திகேயன் என்ற ஒருவன் மீண்டும் அவள் வாழ்க்கையில் வந்ததில் ஏற்பட்ட மாற்றம் என்று அவனிடம் யார் சொல்வது?

கயல்விழியும் அதை பற்றித்தான் சிந்தித்தாள். கார்திகேயனிடம் உதவி கேட்டு அவளாகத்தானே வந்தாள். அவள் விட்டுச் சென்றாள் என்ற கோபத்தில் அவன் ஏடா, கூடமாக பேசுவான். சண்டை போடுவான் என்று தெரிந்தே தானே வந்தாள். இது போன்ற எதிர்பாராத சம்பவங்கள் கூட நிகழும் என்று அறிந்தே தானே வந்தாள். இப்பொழுது மனதை அலைபாய விட்டாள் சரியா? எந்த காரணத்தைக் கொண்டும் அவனுக்கு தன்னை பற்றி எதுவும் தெரியக் கூடாது என்று புன்னகைத்தவள் அவனை பார்க்க, தொலைபேசியில் உரையாடியவாறே அவனும் இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.  

கண்கள் எழுதும் இரு கண்கள்

எழுதும் ஒரு வண்ணக் கவிதை

காதல் தானா

ஒரு வார்த்தை இல்லையே

இதில் ஓசை இல்லையே

இதை இருளிலும் படித்திட முடிகிறதே

பேச எண்ணி சில நாள்

அருகில் வருவேன்

பின்பு பார்வை போதும்

என நான் நினைத்தே நகர்வேனே

மாற்றி

கண்கள் இரண்டால்

உன் கண்கள் இரண்டால்

என்னை கட்டி இழுத்தாய்

இழுத்தாய் போதாதென

சின்ன சிரிப்பில்

ஒரு கள்ளச் சிரிப்பில்

என்னை தள்ளி விட்டு

தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

ஒரு இடத்தில் நிற்காமல் கம்பியில்லா தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவன் சற்ரென்று கயல்விழியை பார்த்ததில் கயல்விழிக்கு வியர்க்கவே ஆரம்பித்தது. அவளை சைகையாலையே கலந்தாலோசிக்கும் அறைக்கு வருமாறு அழைத்த கார்த்திகேயன் தொலைபேசியோடு உள்ளே நுழைந்தான்.

கீழ் தளத்தில் தொலைபேசியினூடாக வரும் வழக்குகளை விசாரித்து, அதை கார்த்திகேயனுக்கு கொடுத்தால் மட்டும் தான் அவனது தொலைபேசி அடிக்கும் என்று திரு கூறியிருந்ததால் புதிதாக ஒரு வழக்கு வந்திருப்பதாக புரிந்துகொண்ட கயல்விழி அவன் பின்னால் ஓடினாள்.

கலந்தாலோசிக்கும் அறைக்குள் வந்த கார்த்திகேயன் தொலைபேசியை ஸ்பீக்கர் மூடில் போட்டு விட்டு அமர்ந்துகொள்ள, கயல்விழியும் அவனெதிரே அமர்த்தாள்.

“சொல்லுடா. என் கிட்ட என்ன சொன்னியே திரும்ப சொல்லு. உன் கேச பார்க்க போற வக்கீலாம்மா இங்கதான் இருக்காங்க” என்று கார்த்திகேயன் கூற, பார்த்தீபன் பேசலானான்.

“வணக்கம் வக்கீலாம்மா” என்று ஆரம்பித்தவனுக்கு தெரியவில்லை அவன் பேசிக் கொண்டிருப்பது கயல்விழியிடம் என்று. பதில் வணக்கம் சொன்ன கயல்விழிக்கும் தெரியவில்லை அது கார்த்திகேயனின் அண்ணன் பார்த்தீபன் என்று.

“சொல்லுங்க” என்று கயல்விழியின் குரல் கேட்டதும் பார்த்தீபன் பேச ஆரம்பித்தான்.

“எனக்கு கல்யாணமாகி ஐஞ்சு வருஷத்துக்கு மேலாகுது. குழந்தை இல்ல. டாக்டர் கிட்ட போனா என் மனைவிக்கு தான் பிரச்சினை ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லுறாங்க”

“என்ன இப்போ வைப்ப டிவோர்ஸ் பண்ணனுமா?” கார்த்திகேயனை முறைத்தவாறே கேட்டாள் கயல்விழி.

“முதல்ல அவன் என்ன சொல்லுறான்னு கேளு” அவள் கோபத்தை ரசித்தான் கார்த்திகேயன்.

“பிரச்சினை நானோ என் வைப்போ இல்ல மேடம். என்ன ஆச்சுன்னா நான் ஏற்கனவே ஒரு பொண்ண லவ் பண்ணேன். அத தெரிஞ்சிகிட்ட என் அப்பா  எனக்கு அவசர அவசரமா அம்மாவோட சொந்தத்துல ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிகிட்டாங்க.

காதலிச்ச பொண்ண கல்யாணம் பண்ண முடியாததற்கு காரணம் என் பெத்தவங்க மட்டுமில்ல, என் பொண்டாட்டியும் என்று அவ மேலையும் எனக்கு கோபம் இருந்தது. அவளை புரிஞ்சிகிட்டு அவளோட குடும்பத்தையும் ஏத்துக்கிட்டு அவளோட வாழ ஆரம்பிக்கவே எனக்கு ரெண்டு வருஷம் ஆகிருச்சு.

வேலை தேட மனமில்லாம சுத்திகிட்டு இருந்த எனக்கு அப்பாவையோட ஸ்டேஷனரி கடைய கொடுத்தாரு. இத்தனை வருஷமா நான் தான் கடைய பார்த்துக்கிட்டேன். சொல்ல போனா முன்னேற்றியிருக்கேன். இன்னும் ஒரு கடைய திறந்தேன்.

என் பொண்டாட்டிக்கு பிரச்சினை என்று தெரிஞ்சதும் என் அம்மா என் பொண்டாட்டிய டைவோர்ஸ் பண்ண சொல்லி டாச்சர் பண்ணுறாங்க. பொண்டாட்டிய டைவோர்ஸ் பண்ணலைனா கடைய விடச் சொல்லி அப்பா மிரட்டுறாரு.

பிரச்சினை எனக்குனா? என் பொண்டாட்டி என்ன விட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிப்பாளா? ஏன் இவங்க யோசிக்க மாட்டேங்குறாங்க. நான் காதலிச்ச பொண்ணா இருந்து இவங்க இப்படி நடந்துக்கிறாங்க என்றா கூட இவங்கள மன்னிச்சிருந்திருப்பேன். கண்மணி இவங்க பார்த்து கட்டி வச்ச பொண்ணு தானே, அதான் என் அப்பா அம்மாவ மன்னிக்க முடியல.

எனக்கு என் கண்மணியும் வேணும் கடையும் வேணும். என் அண்ணன் கடைக்கு சண்டை போட மாட்டான். தம்பிய கேட்டு சொல்லுங்க மேடம்” என்று சத்தமாக சிரித்தான் பார்த்தீபன்.

“எனக்கொண்ணும் அந்தாள் சொத்து வேணாம் நானே சம்பாதிக்கிறேன்” என்று கார்த்திகேயன் சொன்ன பிறகு தான் தான் இவ்வளவு நேரமும் பேசிக் கொண்டிருந்தது கார்த்திகேயனின் அண்ணன் பார்த்திபனிடம் என்று அறிந்து கொண்டாள் கயல்விழி.

“என்டா காதலிச்ச பொண்ண விட்டுட்டு கண்மணிய கல்யாணம் பண்ணதே தப்பு. கடவுளா பார்த்து உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்காரு. கண்மணியும் வேணாம், கடையும் வேணாம் என்று நீ காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணி செட்டில் ஆகியிருக்க வேணாமா? ஐடியா இல்லாத பய” கயல்விழியை பார்த்தவாறே கூறிச் சிரித்தான் கார்த்திகேயன்.

“ஏன்டா உனக்கு தோணினது எனக்கு தோணாத? அப்பாவையும், அம்மாவையும் ஒரு வழி பண்ணவே அப்படி கூட பண்ணலாமான்னு கூட தோணிருச்சு. சொல்லப் போனா கண்மணியோட சம்மதத்தோட பத்மாவை கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கூட தோணிருச்சு. அப்பொறம் கண்மணிய நினைச்சி வேணாம் என்று விட்டுட்டேன்” என்றவன் “நான் போய் நின்னா மட்டும் பத்மா என்ன ஏத்துப்பாளா? அடிச்சி துரத்த மாட்டாளா?” என்று சிரித்தான்.

“பத்மாக்கு கல்யாணம் ஆகிருச்சு என்று சொல்லு. அத விட்டுட்டு ஏத்துக்க மாட்டான்னு சொல்லாத. பசங்கதான் பொண்ணுங்கள நினைச்சி காதலிச்சவள மறக்காம கல்யாணம் பண்ணிக்காம இருப்பாங்க. ஆனா பொண்ணுங்க ரொம்ப உசார் அப்பா சொன்னாரு, ஆட்டுக்குட்டி சொன்னாரு என்று அவளுங்க வாழ்க்கை பார்த்துகிட்டு போய்டுவாளுங்க” சிரிப்பை தொலைத்த கார்த்திகேயன் கயல்விழியை முறைத்தான்.

“அங்க சுத்தி, இங்க சுத்தி, எங்க சுத்தினாலும் இவன் வந்து என் கிட்டயே முட்டி நிக்கிறானே” பதிலுக்கு அவனை முறைத்த கயல்விழி “மிஸ்டர் பார்த்தீபன் நீங்க உன்ன பேரன்ட்ஸ் மேல கேஸ் கொடுக்க போறீங்களா?” கார்த்திகேயனை விட்டு கண்களை அகற்றாமல் கேட்டாள்.

“ஒப்கோர்ஸ்” நக்கலடித்தான் பார்த்தீபன்.

“இப்படி பட்ட என் அம்மா, அப்பாவுக்காகத்தான் ஒருத்தி என்ன விட்டுட்டு போய்ட்டான்னு நினைக்கும் போது தான் எனக்கு கடுப்பா இருக்கு” கயல்விழியை மீண்டும் முறைத்தான் கார்த்திகேயன்.

“பார்த்தீபன் நான் கயல்விழி பேசுறேன். நிஜமாலுமே நீங்க உங்க அப்பா, அம்மா மேல கேஸ் பைல் பண்ண முடிவு பண்ணிட்டீங்களா”

“ஹேய் கயல் நீயா? பாத்தியா பயபுள்ள எப்படி கோர்த்து விடுகிறான் னு” தம்பி என்ன திட்டம் போடுகிறான் என்று புரியாமல் தான் கேட்டுமிருந்தான்.

“இல்ல என்னால உங்க கேஸ எடுக்க முடியாது” கார்த்திகேயனை பார்த்தவாறே மறுத்தாள்.

தனது பெற்றோர் தப்பானவர்கள் அவர்களுக்கு பாடம் புகட்டவும் வேண்டும், கயல்விழி அவர்கள் தப்பானவர்கள் என்று அறிய வேண்டும் என்று தான் கார்த்திகேயன் பார்த்திபனின் கேஸை அவளிடம் ஒப்படைக்க முனைந்தான். அவள் மறுத்ததில் “ஏன்” ஒற்றை வார்த்தையில் கேள்வியை கேட்டு, நியாயமும் கேட்டான்.

பார்த்தீபன் இருக்கும் நிலை போன்றதொரு நிலையில் தான் கயல்விழியும் இருக்கின்றாள்.

சூழ்நிலை காதலித்தவனை விட்டு வேறொருவனை திருமணம் செய்து கொண்டாள், இன்று விவாகரத்துமாகி விட்டது. அவளை காதலித்த கார்த்திகேயனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவளுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்று அறிந்து கொண்டால் அவன் முடிவு என்னவாக இருக்கும்?

தன்னை பெற்றவர்கள் தப்பானவர்கள் என்று நிரூபிக்க நினைக்கும் கார்த்திகேயன் தன்னை வைத்தே அதை சாதித்துக் கொண்டால், அதையே காரணமாக வைத்து மீண்டும் அவன் தன் வாழ்வில் நுழைய முனைவான்.

அவன் என் இறந்தகாலம். மீண்டும் அவனை நோக்கி செல்ல முடியாது. அது தவறு. கூடாது என்ற மனநிலையில் இருக்கும் கயல்விழி பார்த்தீபனுக்காக வாதாட சம்மதிப்பாளா?

“ஏற்கனவே உங்கள பெத்தவங்களுக்கு என் மேல நல்ல அபிப்ராயம். இதுல நான் உங்கண்ணன் கேஸ வாதாடினா? விளங்கிடும்” அவனை போலவே பதில் சொல்லி மறுத்தாள்.

“அவங்க உன்ன பேசினத்துக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது அவங்கள வச்சி செய்வான்னு நினச்சேன். மன்னிச்சிட்டியா? என்னால முடியாது. நான் அந்தளவுக்கு நல்லவன் கிடையாது” உன்ன என்னால மன்னிக்க முடியாது என்பதை தான் சொன்னான்.

“பிரச்சினை என்று வரும் பொழுது வக்கீலா மட்டும் பார்க்காதீங்க மிஸ்டர். கார்த்திகேயன். பெத்தவங்களுக்கு மகனாகவும், அண்ணனுக்கு தம்பியாகவும் கொஞ்சம் யோசீங்க” அவனுக்கு குட்டு வைத்தாள்.

“ஹலோ ஹலோ நான் இன்னமும் லைன்ல தான் இருக்கேன்” பார்த்தீபன் கத்த,

“உங்க பிரச்சினையை நான் தீர்த்து வைக்கிறேன்” என்ற கயல்விழி பார்த்திபனிடம் தீவீரமாக பேச, கார்த்திகேயன் அவளையே பார்த்திருந்தான். 

Advertisement