Advertisement

அத்தியாயம் 5

டிவியில் கார்த்திகேயனோடு கயல்விழியை பார்த்த நாளிலிருந்து வள்ளிக்கு தூக்கம் பறிபோனது.  

“அமெரிக்கா போய் செட்டில் ஆனவ, திரும்ப எதற்காக இங்கு வந்தா? என் பையன் கூட என்ன பண்ணுறா திரும்ப என் பையனுக்கு வலை வீசுகிறாளோ?” என்று புலம்பலானாள்.

பார்த்திபனும், சிவபாலனும் சமாதானப்படுத்தியும் சமாதானமாகாதவள், திட்டம் போட்டு கார்த்திகேயனை ஊருக்கு வரவழைத்து திருமணம் செய்து வைக்கலாம் என்று கணவனிடம் கூறினாள்.

வளமை போலவே அவள் திட்டம் கார்த்திகேயனிடம் பழிக்கவில்லை என்றதும் கோபமாக கயல்விழியை தேடிச் சென்றாள். அவள் கார்த்திகேயனை சந்திக்க சென்னை சென்றிருக்கிறாள் என்று அறிந்ததும் மேலும் கொதித்தாள்.

உடனே சென்னைக்கு கிளம்பி வந்தவள் கார்த்திகேயனின் காரியாலைய வாசலில் வைத்தே கயல்விழியை பிடித்துக் கொண்டாள்.

வள்ளியை அங்கு பார்த்ததும் கார்த்திகேயனை சந்திக்க வந்திருப்பாள் என்று கயல்விழி கடந்து போக தான் எண்ணினாள். ஆனால் அவளை தடுத்து நிறுத்திய வள்ளியோ கண்டபடி பேசலானாள்.

“ஏன்டி உனக்கு ஒரு புருஷன் பத்தாதா? என் பையன் வேற கேக்குதா? வந்துட்டா மினிக்கிகிட்டு என் பையன வளைச்சி போட”

அன்று சிவபாலன் அவ்வளவு பேசியும் அமைதியாக இருந்த கயல்விழி எப்படிப்பட்டவள் என்று வள்ளிக்குத்தான் தெரியவில்லை. அன்றே தனக்கும் கார்த்திகேயனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று முடிவெடுத்து தெளிவாக கூறி விட்டு சென்று விட்டாள். வள்ளியின் இப்பேச்சுக்களுக்கு அஞ்சுவாளா? சலனமே இல்லாமல் பார்த்தாள்.

 “என்னடி முறைக்குற? என் பையன் கோடி கோடியா சம்பாதிக்கிறான். அவன் கூட வந்து ஒட்டிக்கலாமென்று திட்டம் போடுறியா?”

“யாரோ பைத்தியம் போல. மெண்டல் ஹாஸ்பிடல்ல இருந்து தப்பிச்சு வந்திருக்காங்க. போன் போட்டு பிடிச்சிக்க கொடுங்க” கார்திகேயனோடு வேலை பார்க்கும் திரு எனும் திருக்குமாரனுக்கு கூற, அவன் திரு திருவென முழித்தான்.

கயல்விழியை வழியனுப்பி வைக்க கார்த்திகேயன் தான் வந்து கொண்டிருந்தான். முக்கியமானதொரு அலைபேசி அழைப்பு வரவும் அலைபேசியை அவன் கையில் கொடுத்த திரு கயல்விழியோடு பேசியவாறு வெளியே வந்து வள்ளியிடம் மாட்டியிருந்தான்.

“யாரை பார்த்து பைத்தியம் என்று சொல்லுற?” எகிறிக் கொண்டு வந்த வள்ளி கார்த்திகேயன் வெளியே வருவதை கண்டதும் அவனிடம் ஓடிச் சென்று குற்றப்பத்திரிக்கை வாசிக்கலானாள்.

“சார் அது எதோ மேடம் உங்க அம்மா என்று தெரியாம வக்கீலாம்மா பேசிட்டாங்க”

கார்த்திகேயனுக்கும் அவன் வீட்டாளுங்களுக்கும் இடையே எதோ ஒரு பிரச்சினை பல வருடங்களாக ஓடுவது திரு அறிந்துதான் இருந்தான். அதற்காக அன்னையை யாரென்றே தெரியாத கயல்விழி பேசினால் விட்டுக் கொடுப்பானா? கயல்விழியோடு கார்த்திகேயன் வேலை பார்க்கப் போகிறான் இந்த நேரத்தில் வீணான பிரச்சினை வேண்டாமென்று தான் விளக்கினான்.

“தெரியாம சொல்லல திரு. தெரிஞ்சே தான் சொன்னா…” என்று கார்த்திகேயன் கயல்விழியை பார்க்க அவள் கிளம்பியிருந்தாள்.

“ஓஹ் நீ தான் அவளுக்கு இப்படி பேச சொல்லிக் கொடுத்தியா?” பெற்ற மகனை எத்தனை மாதங்கள் கடந்து பார்க்கின்றாள் என்று கூட சிந்தனையில்லாமல் சண்டை போடலானாள் வள்ளி.

“அவளும் வக்கீல் தான். என்ன போல வாய் கிழிய பேசுவா. நான் என்ன அவளுக்கு சொல்லிக் கொடுக்க இருக்கு?” கயல்விழி எந்த மாதிரியான பெண்? அவள் குடும்பம் எத்தகையது என்று எதையுமே விசாரிக்காமல் மாற்று மதம் என்ற ஒரே காரணத்தால் அவளை வேண்டாம் என்றியே அவளும் என்னை போல் படித்து நல்ல நிலையில் தான் இருக்கின்றாள் என்று கூறியவன்

“அவ உன்ன பைத்தியம் என்று சொன்னா. ஆனா நீ ஒரு பணப்பைத்தியம். ஜாதி பைத்தியம். கௌரவ பைத்தியம், அந்தஸ்து பைத்தியம். விளக்கமா சொல்லாம போய்ட்டா. கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்” என்ற கார்த்திகேயன் திருக்குமாரனை பார்த்து “பினாயில் போட்டு ஆபீஸ கழுவ சொல்லு”  என்றான்.

வள்ளி பத்ரகாளியாகி கார்த்திகேயனை அடிக்க கையோங்க “இதுக்குத்தான் உன்ன இங்க வராதே என்று சொன்னேன். கேட்டியா? வந்து அவமானப்படுறதும். வீட்டுக்கு போய் புலம்புறதும். உன் தொல்லை தாங்கல” தம்பியை பார்த்து புன்னகைத்தவாறே அன்னைக்கு அறிவுரை சொன்னான் பார்த்தீபன்.

கயல்விழியை தான் பார்க்க செல்கிறேன் என்று கூறாமல் தான் பார்த்தீபனை அழைத்து சென்றிருந்தாள் வள்ளி.

“அம்மா இங்க என்ன பண்ணுற?” தம்பிக்கு தகவல் சொன்னால் அவன் வேறு குதிப்பானே என்று யோசிக்கையில்,  கயல்விழியை பார்க்க சென்றவள் அப்படியே பார்த்திபனோடு கிளம்பி சென்னைக்கு வந்து விட்டாள்.

வரும் வழியில் குறுஞ்செய்தி மூலம் தான் தம்பிக்கு தகவல் கொடுத்திருந்தான். அலைபேசி அழைப்பு விடுத்தால், அதை வள்ளி கேட்டிருப்பாளே. தம்பி சமாளிப்பான் என்று தான் அவனை பார்த்த்து புன்னகைத்தான் பார்த்தீபன்.

“என்ன அடிச்சிடுவியா? அம்மானு கூட பார்க்க மாட்டேன் உள்ள தள்ளுவேன்” கார்த்திகேயன் மிரட்ட

வழமையாக கார்த்திகேயன் மிரட்டுவான் என்பதால் “டேய்….” என்றதோடு நிறுத்திக் கொண்டான் பார்த்தீபன். சொல்லுறியே ஒழிய செய்ய மாட்டெங்குறியே என்றானா தெரியவில்லை.

“பார்த்தியாடா? இவன பெத்து வளர்த்துக்கு என்னையே ஜெயில்ல போடுறேன்னு சொல்லுறான். தான் பாசம் வைத்த சின்ன மகன் தன் சொல் பேச்சு கேட்பதில்லை என்ற ஆதங்கத்தை நடுவில் பிறந்தவனிடம் கொட்டித் தீர்த்தாள்.  

“பின்ன பணத்துக்காக பசங்கள சீதனம் என்ற பேர்ல விக்கிற. உன் மருமக்களுங்க மட்டும் கேஸ் கொடுக்கட்டும். உன்ன வச்சி செய்வேன்” என்றான்.

அவன் பேச்சில் அவன் குடும்பத்தார் மீது வெறுப்பு மட்டுமே தெறித்தது.

அண்ணனான தினகரன் சுயமாக எந்த முடிவையும் எடுக்க மாட்டான். எதை செய்வதென்றாலும் தந்தையிடம் வந்து நிற்பான். அவனுக்கே இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் இன்னும் அவன் விஷயத்தில் முடிவெடுக்கத் தெரியாமல், பெற்றோரிடம் வந்து நிற்க, இவர்களோ அவன் மனைவியின் விஷயத்திலும் மூக்கை நுழைகின்றனர்.

தினகரனின் மனைவி மதியழகி சொந்த அத்தை மகள் தான். சிவபாலனின் தங்கை மகள் என்பதால் அம்மாவுக்காக வள்ளியை பொறுத்துப் போகிறாள்.

அவர்களுக்கு கல்யாணமாகி பலவருடங்கள் இந்த எல்லா விஷயமும் கார்த்திகேயனின் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியவில்லை. கயல்விழி என்ற ஒருத்தி காதல் என்ற ஆழிப்பேரலையை அவன் இதயத்தில் சுழற்றியடித்த பின் பாசமென்ற திரை விலக, வீட்டாரின் சுயரூபத்தோடு உண்மையான முகங்களை கண்டு கொண்டான்.

இவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வள்ளி இன்னுமே நடித்துக் கொண்டு இருப்பதால் கார்த்திகேயனின் வெறுப்பும், அவர்கள் மீதிருக்கும் கோபமும் கொஞ்சம் கூட குறையவில்லை.

“நான் பார்த்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்த மருமகளுங்க தங்கமானவளுங்க. என் பேச்சுக்கு ஒருத்தியாவது மறு பேச்சு பேசுறாளுகளா? அந்த சிறுக்கி மக போல இல்ல. புருஷன வச்சிக்கிட்டு உன்ன தேடி வந்திருக்கா. அவளெல்லாம் நல்ல குடும்பத்து பொண்ணா?” கயல்விழியை பேசுவதில்லையே குறியாக இருந்தாள் வள்ளி. பெற்ற மகனின் வாழ்க்கையல்லவா?

“ஓஹ்… அதான் நீ தலைதெறிக்க ஓடி வந்தியா? உன் பையன் மேல உனக்கு எம்புட்டு நம்பிக்க? அவ சொன்னது சரிதான். நீ அவள அவமானப்படுத்துறதா நினைச்சி என்னதான் அவமானப்படுத்துற.

யாரோ பெத்த பொண்ணு தானே வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுற. நீயும் ஒரு பொம்பள தானே. இப்படியெல்லாம் பேசக் கூடாது என்று உன் புத்திக்கு தெரியலையா?

அவ வந்தது என் கூட வேல பார்க்க, குடும்பம் நடாத்த இல்ல. பெத்த பையன் மேலயே நம்பிக்க இல்ல. அவன் லவ் பண்ணுற பொண்ணு மேல மட்டும் உனக்கு நம்பிக்க வந்துடுமா? இந்த ஜென்மத்துல நீ பாக்குற பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். எனக்கு பிடிச்ச பொண்ண நான் பார்க்கும் போது கல்யாணம் பண்ணிப்பேன். இப்போ கிளம்பு. உன் முகத்துல முழிக்கிறதே பாவம்” நிற்காமல் வெளியே சென்று விட்டான் கார்த்திகேயன்.

தான் என்ன தவறு செய்தோம் என்று புரியாமலையே புலம்பியவாறு பார்த்திபனோடு ஊருக்கு கிளம்பினாள் வள்ளி.

கயல்விழியை தன்னிடம் வரவழைத்தது தான் செய்த தவறோ? தன் குடும்பத்தால் அவள் நிம்மதி கெட்டு விடுமோ?  அவள் கணவனிடம் அவளுடைய கடந்தகால வாழ்க்கையை பற்றி கூறியிருக்கிறாளோ என்னவோ? என் குடும்பத்தார் இதே போல் அவள் கணவனின் முன் பேசி அதனால் அவள் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் வருமோ? வண்டியில் சென்றவாறே யோசிக்கலானான் கார்த்திகேயன்.

“இல்லை அவள் எனக்கு விளக்கம் கொடுக்க வேண்டும். கொடுத்த பின் பார்த்துக்கொள்ளலாம்”

வந்தவளை வேண்டாம் திரும்ப போய் விடு என்று கூறுமளவுக்கு கார்த்திகேயன் நல்லவன் கிடையாது. சுயநலமாகவே சிந்தித்தான்.

அழகான நேரம்

அதை நீதான் கொடுத்தாய்

அழியாத சோகம் அதையும்

நீதான் கொடுத்தாய்

கண் தூங்கும் நேரம் பார்த்து

கடவுள் வந்து போனது போல்

என் வாழ்வில் வந்தே போனாய்

ஏமாற்றம் தாங்கலையே

பெண்ணை நீ இல்லாமல்

பூலோகம் இருட்டிடுதே

போகாதே போகாதே

நீ இருந்தால் நான் இருப்பேன்

போகாதே போகாதே

நீ பிரிந்தால் நான் இறப்பேன்

உன்னோட வாழ்ந்த காலங்கள்

யாவும் கனவாய் என்னை மூடுதடி

யாரென்று என்று நீயும்

என்னை பார்க்கும் போது

உயிரே உயிர் போகுதடி

கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று

வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி

வள்ளி வந்து பேசி விட்டு சென்றதை எண்ணியெல்லாம் கயல்விழி வருந்தவில்லை. சென்னையில் வீடு பார்த்து குடியேறினாள். அவளுக்கு துணையாக விக்னேஷும் வந்து விட்டான். வரமாட்டேன் என்ற கயல்விழியே வந்து விட்டாள் அவன் வராமல் இருப்பானா? அவள் எந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பார்த்தாலோ அதற்கு எதிர் வீடு தான்.

“ஒரே இடத்துக்கு வேலைக்கு போறோம். ஒரே ஆள் கிட்ட வேலைக்கு போறோம். ஒரே வீட்டுல தங்கினா என்னவாம்?” என்றவனை கயல்விழி முறைத்துப் பார்க்க “அம்மா தாயே சமையல் வேல, க்ளீனிங் எல்லாம் நான் பாத்துக்குறேன் என்று சொல்லுறேன் உனக்கு என் கையால சமச்சத்தை சாப்பிட கொடுத்து வைக்கல. சரி போ… ஒரே வண்டில போலாம்ல பெட்ரோல் செலவு மிச்சம்” ஒருவாறு பேசி அவனை சம்மதிக்க வைத்திருந்தான் விக்னேஷ்.

கயல்விழி தன் முடிவை தெளிவாக கூறி விட்டாள். விக்னேஷ் அவளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றதோடு அவளை தொல்லை செய்யவில்லை. அவளை புரிந்து கொண்டு தான் நடந்துகொள்கிறான். அவளை விட்டு விலகியிருந்தால் அவள் மனம் மாறுமா? அவளோடு இருந்தாள் தானே அவள் தன்னை புரிந்துகொள்வாள் என்று அவளோடு இருக்க முயற்சி செய்கிறான்.

கயல்விழியை பொறுத்தவரையில் விக்னேஷ் நல்ல நண்பன். அதை தாண்டி அவனிடம் அவள் எதையும் எதிர்பார்க்கமாட்டாள்.

கயல்விழியும், விக்னேஷும் சிரித்தவாறே வண்டியில் வந்திருங்குவதை மாடியிலிருந்து காப்பியருந்தியவாறு கவனித்தான் கார்த்திகேயன்.

“என்ன இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா வராங்க. இவன் தான் இவ புருஷனா?” ஒரு கணம் அன்று கயல்விழியின் கணவனாக நின்றிருந்தவனின் முகத்தை ஞாபகத்தில் கொண்டு வர சரியாக ஞாபகத்தில் வரவில்லை.

“இல்லையே லாயர் பரசுராமன் பையன் என்று அறிமுகப்படுத்திய நேரம் கயலை மருமகள் என்று சொல்லலையே. கயல்விழியின் கணவன் விக்னேஷ் இல்லை என்று மட்டும் புரிந்தது.  “இவன கூட வச்சிக்கிட்டு எதுக்கு இவ சுத்துறா? இவ புருஷன் என்ன? ஏது? என்று கேட்க மாட்டானா?” கயல்விழியை சந்தேகம் கொண்டு ஒன்றும் கார்த்திகேயன் அவ்வாறு நினைக்கவில்லை. பொறாமையில் தான் கொதித்தான்.

“வண்டியை விட்டு இறங்கிய கயல்விழி “விக்னேஷ்” என்று அவனை அழைக்கவும் அவளுக்கு சேவை செய்யவே பிறந்தவன் போல் அவளருகில் ஓடி வந்தவன் அவள் கையிலிருந்த கோப்புக்களை பெற்றுக்கொண்டான்.

அதை பார்த்த கார்த்திகேயனுக்கு புரையேறியது. “இவங்ககுள்ள அப்படியென்ன உறவு? இவ இவன மிரட்டி அடிமையா வச்சிருக்காளோ?”

விக்னேஷை முறைத்தவாறே கோப்புகளை பெற்றுக்கொள்ள கையை நீட்டிய கயல்விழி “உன் கிட்ட எத்தனை தடவ சொல்லி இருக்கேன் செல்ப் ரெஸ்பெக்ட் ரொம்ப முக்கியம் என்று. நான் கூப்பிட்டது அதுக்கில்ல. மிஸ்டர் கார்த்திகேயன் கிட்ட கேஸ தவிர பெர்சனல் விஷயம் எதுவும் பேச வேணாம்”

அவளை யோசனையாக பார்த்தாலும் விக்னேஷ் அவளிடம் எதுவும் கேட்கவுமில்லை. கோப்புக்களை அவளிடம் கொடுக்கவுமில்லை.

அவர்கள் பேசியது எதுவும் கார்த்திகேயனுக்கு கேட்கவில்லை. ஆனால் அவர்களின் நெருக்கத்தை பார்த்த பின் எதுவோ சரியில்லை என்று கார்த்திகேயனின் மனம் இடித்துரைத்தாலும் ஆராய்ச்சி செய்ய நேரமில்லாமல் கயல்விழியை வரவேற்க அமைதியாக சென்று அவனிடத்தில் அமர்ந்தான்.

விக்னேஷ் எதோ சொல்ல, கயல்விழி சிரித்தவாறு பதில் கூறிக் கொண்டு வர, கார்த்திகேயனுக்கு பற்றியெரிந்தது.

“ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல. நிறைய பேருக்கு வாழ்க்கைல இந்த சந்தோசம் மட்டும் கிடைக்க மாட்டேங்குது” வந்த உடனே கயல்விழியை குத்திக் பேச ஆரம்பித்தான் கார்த்திகேயன்.

“ஐஞ்சு வருஷம் உன் கிட்ட வேலை பார்ப்பேன் என்று எக்ரிமெண்டுல சைன் பண்ணதுக்கு நீ என்னவெல்லாம் பேசுவ நான் அமைதியா நிற்கணுமா?” அவனை முறைத்தவாறே “ஏன் சார் உங்க வைப் உங்கள டாச்சர் பண்ணுறாங்களா?” என்று கெட்டு சத்தமாக சிரித்தாள்.

ஊடகங்களினூடாக அவனை பார்ப்பவளுக்கு அவனுக்கு திருமணம் ஆகிவிட்டதா? இல்லையா? என்று தெரியாதா? அவன் கூடிய சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தான் இவ்வாறு கேட்டாள்.

“ஐயோ மேடம் சாருக்கு இன்னும் கல்யாணமே ஆகல” திரு தான் குறுக்கிட்டான்.

“ஏன் காதல் தோல்வியா?” கார்த்திகேயனை நேருக்கு நேராக பார்த்தே கேட்டாள்.

கடுகடுவென கார்த்திகேயனின் முகம் இருக்க, விக்னேஷ் கயல்விழியின் கையை பற்றி “என்ன இது?” என்பது போல் பார்த்தான். அதை பார்த்து கார்த்திகேயனுக்கு மேலும் எரிந்தது.

“வாங்க மேடம் எங்க டீமை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்” என்று திரு அழைக்க “வா விக்னேஷ்” என்று விக்னேஷை அழைத்தவள் திருவோடு நடந்தாள். செல்லும் அவளை முறைத்தான் கார்த்திகேயன்.

தேன்மொழி பூங்கொடி

வாடி போச்சே என் செடி

வான்மதி பைங்கிளி

ஆசை தீர வாட்டு நீ

உன்ன நெனச்சொன்னும் உருகல போடி

சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி

கெத்து காட்டிட்டு அழுவுரனே

அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே

நெஜமா நா செஞ்ச பாவம்

முழுசா உன் மேல வெச்ச பாசம்

நெழலும் பின்னால காணோம்

அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்

“மேடம் இந்த பில்டிங் சரோடது தான். மூணாம் மாடில சாரோட வீடு. முதல் மாடியும் ரெண்டாவது மாடியும் ஆபீஸ்”

“ரெண்டு ப்ளோர்ல ஆபீஸ் போடுற அளவுக்கு கேஸ் இருக்கா?” அதிர்ச்சியாகத்தான் கேட்டான் விக்னேஷ்.

“நான் பாக்குற கேஸ் அப்படி. கீழ் ப்ளோர்ல என்ன சந்திக்க வர அகியூஸ்ட், விக்டம், விசிட்டார்ஸ் வந்து சந்திச்சீட்டு போவாங்க. அவங்களுக்கு செகண்ட் அண்ட் தேர்ட் ப்ளோர் நோட் அவுட்” என்றவாறே கயல்விழியின் பின்னால் வந்து நின்றான் கார்த்திகேயன். 

“ஆமாம் நான் வந்தப்போ கூட உங்கள அங்கே தான் சந்தேச்சேன்” என்று இவள் திரும்ப அவன் மேல் மோதி நின்றாள்.

“ஏய் பார்த்து…” கயல்விழியை இழுத்து தன்பக்கம் நிறுத்தினான் விக்னேஷ்.

கார்த்திகேயனின் முகம் சிவக்க, கயல்விழி மெதுவாக விக்னேஷின் கையை தன் தோளிலிருந்து எடுத்து விட்டாள்.

விக்னேஷ் அவளை தொட்டுப் பேசாமலில்லை. கார்த்திகேயனின்  பார்வையை அவளை இம்சிக்க அனிச்சையாக அவன் கையை எடுத்து விட்டிருந்தாள். விக்னேஷுக்கு அது சாதாரண செயல். அவன் அதை சாதாரணமாக பார்த்து புன்னகைத்தான். 

“இந்த ப்ளோர்ல சாப்பிட ரூம் இருக்கு, வீட்டுல இருந்த சமைச்சி எடுத்துட்டு வாங்க. நாங்களும் வீட்டு சாப்பாடு சாப்பிட்டது போல இருக்கும்” என்றான் திரு.

 “ஏன் சாரோட கேர்ள் ப்ரெண்ட் வந்து சமைச்சி கொடுக்க மாட்டாங்களா?” கயல்விழி கிண்டலடித்தாள்

“ஆபீஸ் ஸ்டாப்புக்கு என் வீட்டுக்கு வர அனுமதியில்லை” என்று கார்த்திகேயன் கயல்விழியை வெறித்தவாறு கூறும் பொழுதே

“இத்தனை வருஷத்துல அப்படி ஒருத்தங்களை நான் பார்த்ததே இல்ல” என்ற திரு, கார்த்திகேயன் முறைக்கவும் “வாங்க மத்த ஸ்டாப அறிமுகப்படுத்தி வைக்கிறேன்” என்று அழைத்து சென்றான்.

தகவல் திரட்டும் குழு மற்றும் வழக்குகளை கவனிக்கும் குழு என்று இரண்டு குழுக்கள் கார்திகேயனிடம் வேலை பார்க்கின்றனர்.

தகவல் திரட்டும் குழுவில் பன்னிரண்டு பேர் இருக்க, எட்டு பேர் வெளியே வேலை செய்யவும், நான்கு பேர் கணினியி வேலை பார்க்கின்றனர். அவர்கள் இரண்டாம்மாடியில் இருக்க, அவர்களுக்கு தனியறை கொடுக்கப்பட்டதோடு கார்திகேயனையும் திருவையும் தவிர யாரும் அங்கு செல்ல அனுமதியில்லை.

வழக்குகளை கவனிக்கும் குழுவில் பத்து பேர் வேலை பார்க்கின்றனர். நான்கு பேர் முதலாம் மாடியில் இருந்து புதிதாக வரும் வழக்குகளை கவனிப்பதோடு, இரண்டு பேர் அலைபேசிவழியாக வரும் வழக்குகளை கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டிருக்க, மற்றவர்கள் கார்திகேயனோடு இணைத்து வேலை பார்ப்பதோடு வழக்குகளையும் வாதாடுகின்றனர். இதில் தான் விக்னேஷும் கயல்விழியும் சேர்ந்திருந்தனர்.

வெளியே சென்றவர்களை தவிர, எல்லோரையும் தனித்தனியாக சந்தித்து அறிமுகப்படலத்தை முடித்துக் கொண்டு கயல்விழி வரும் பொழுது அவளுக்காக மேசை கார்த்திகேயனுக்கு அருகே போடப்பட்டிருந்தததை பார்த்து அவனை முறைத்தாள்.

“உக்காருங்க மிஸிஸ் கயல்விழி. வேலைய ஆரம்பிக்கலாம்” அவள் முறைப்பதை கண்டுகொள்ளவா அவன் அவளை அவனிடம் வேலைக்கு அமர்த்தினான்.

“என்ன என்னைய தூக்கி எங்கியோ மூலைல போட்டுட்டு விழிய உங்க பக்கத்துல வச்சிகிட்டீங்க. செல்லாது செல்லாது” விக்னேஷ் குழந்தை போல் அடம்பித்தான்.

“இவ புருஷன் கூட கேட்க மாட்டான் போல இவன் ஏகத்துக்கும் துள்ளுறான்” என்ற பார்வையோடு “உங்க அப்பாவோட முதல் கண்டிஷன் உங்களையும் கயலையும் பிரிச்சி வைக்கிறது தான். அது மட்டுமில்ல ரெண்டு பேருக்கும் ஒரே கேஸ கொடுக்க மாட்டேன். மிஸிஸ் கயல்விழி தாராவோட கேஸ பார்க்கணும். நானும் அவங்க கூட அத பத்தி நிறைய டிஸ்கஸ் பண்ண வேண்டியிருக்கு அதான் பக்கத்துக்கு, பக்கத்துல” என்றவன் விக்னேஷை சென்று அமர்ந்து வேலையை கவனிக்குமாறு சைகையாலையே பணித்தான்.

அவன் பேசும் பொழுது விக்னேஷ் சமாதானமடைந்தான். ஆனால் கயல்விழி சந்தேகமாகவே பார்த்தவாறு அவள் இருக்கையில் அமர்ந்தாள்.  

“தாராவோட பைலை எடுத்து கிட்டு மீட்டிங் ரூமுக்கு வாங்க மிஸிஸ் கயல்விழி” அவளை அழைத்த கார்த்திகேயன் கலந்தாலோசிக்கும் அறைக்குள் நுழைந்தான்.

“எதுக்கு இங்க வந்து பேசணும்? இது ஒன்னும் சீக்ரட்டான கேஸ் இல்லையே” அவன் பின்னால் வந்த கயல்விழி அவன் கதவை சாத்தியதும் கேள்வியாக ஏறிட்டாள்.

“உனக்கு என் கிட்ட சொல்ல ஒண்ணுமே இல்லையா?” கதவில் சாய்ந்து கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு அவன் கேட்ட தொனியில் “நீ பதில் சொல்லியேயாக வேண்டும்” என்றிருந்தது

எல்லா அறைகளும் கண்ணாடி தடுப்பாலானது தான். உள்ளே என்ன பேசுவார்கள் என்று வெளியே கேட்க மாட்டாது.  ஆனால் என்ன நடக்கிறது என்று வெளியில் இருந்து பார்த்தாலே தெரிந்து விடும். கார்த்திகேயன் தான் முன்கூட்டியே திரைசீலைகளை இறக்கி விட்டிருந்தானே. வெளியே இருப்பவர்களுக்கு இவர்கள் உள்ளே என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்க நேரமில்லாதபடி வேலை கொடுத்து விட்டு தான் கயல்விழியை அழைத்து வந்தான் கார்த்திகேயன்.

“தனக்கு விவாகரத்தானது பற்றி இவனுக்கு தெரிந்து விட்டதா?” யோசனையாக கயல்விழி அவனை ஏறிட

“எதுக்கு என்ன தூக்கி எறிஞ்சிட்டு இன்னொருத்தன் கல்யாணம் பண்ண?” கர்ஜனை குரலில் சீறினான் கார்த்திகேயன்.

“நான் தான் உன் கிட்ட தெளிவா சொன்னேனே. என்னால உன் கூட ஓடி எல்லாம் போக முடியாது. உங்க வீட்ல சம்மதம் சொன்னா உன்ன கல்யாணம் பண்ணிப்பேன் இல்லன்னா பண்ணிக்க மாட்டேன் னு. நான் சொல்லியும் நீ உன் வீட்டாளுங்க சம்மதத்தை வாங்க எந்த முயற்சியும் எடுக்கல. இப்போ நடந்து முடிஞ்சது பத்தி பேசவா என்ன இங்க வரவழைச்ச?” கோபமாக கயல்விழி அடிக்குரலில் சீறினாள்.

“அப்போ உங்கப்பா பார்க்குற மாப்பிளையை தான் கல்யாணம் பண்ணுவேன்னு வீட்டோட இருந்திட வேண்டியது தானே. எதுக்கு என் கண்முன்னால் வந்து லவ் பண்ணுறேன்னு சொல்லி ஆச காட்டின?” அவள் கழுத்தை பிடித்து நெறித்தான்.

“பெற்றவர்கள் எதிர்த்தால் விட்டு செல்வாளா? இதற்கு எதற்காக காதலிக்க வேண்டும்? கோபம் கோபம் கோபம் மட்டுமே அவன் கண்களில் தெறித்தது.

Advertisement