Advertisement

அத்தியாயம் 4

கார்த்திகேயன் பதின்ம வயதில்லையா இருக்கிறான்? காதலித்ததற்காக வீட்டில் அடைத்து வைத்து, அடித்து அவனை வழிக்கு கொண்டு வர? கதவை உடைத்தவாறு வெளியே வந்தான்.

“என்ன நினைச்சுகிட்டு இருக்கிறீங்க உங்க மனசுல. கயலோட அப்பா இப்போவோ, அப்பாவோ என்று ஹாஸ்பிடல்ல படுத்துக் கெடுக்குறாரு. அவர் கண் மூட முன்னாடி பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று ஆசைப்படுறாரு. வாங்க போய் அவர பார்த்துட்டு வரலாமென்று சொல்லி உங்கள கூப்பிட்டா, கல்யாண விஷயம் ஆசுபத்திரில பேச முடியுமா? பொண்ண வீட்டுக்கு வர சொல்லு என்று கயல வரவழைச்சு அசிங்கப்படுத்திட்டீங்க.

அவள அசிங்கப்படுத்தி, அவங்கப்பாவ அவமானப்படுத்தினா… அவ கோபப்பட்டு, உங்கள திட்டுவா, அத பார்த்து நான் அவ கழுத்த நெறிப்பேனென்று நினைச்சீங்களா?

அவ பொறுமையா இருந்து ஒரே வார்த்தையில உங்களுக்கு ஆப்பு வச்சது இல்லாம, என்னையும் வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டா. இப்போ உங்களுக்கு சந்தோசமா?

இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோங்க. கயல்விழிதான் என் பொண்டாட்டி. அவ தான் இந்த வீட்டு மருமகள். அவ வேணாம்னா… உங்க பையனும் உங்களுக்கு இல்ல” கத்தி விட்டு கார்த்திகேயன் கயல்விழியை தேடிச் சென்றான்.

அவளுக்கு அலைபேசி அழைப்பு விடுத்தால், அவள் அலைபேசியோ அனைத்து வைக்கப்பட்டிருப்பதாக கணினிக் குரல் கூறியது. கயல்விழியின் வீடு எங்கே என்று தெரியாமல் ஆண்டனி ராஜ் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்றால் அங்கே ஆண்டனி ராஜ் இல்லை. நேற்று இருந்தவர் எங்கே என்று புரியாமல் குழம்பிய கார்த்திகேயனின் காதுக்குள் தந்தை கூறியது தான் ஒலித்தது.

“டேய் எல்லாம் நடிப்புடா… உன் தலைல மொளகா அரைக்கப் பாக்குறாங்க. நான் அப்படி பேசினது அவ உண்மையாகவே உன் மேல அன்பு வச்சிருக்காளா? இல்ல நடிக்கிறாளான்னு தெரிஞ்சிக்கத்தான். அமைதியா போனா அவ நல்ல பொண்ணா? அவ சுயரூபம் இனிமேல் உனக்குப் புரியும்”

மனம் குழம்பும் பொழுது உண்மை எது? பொய் எது? என்று சிந்திக்க முடியாதபடி மூளை சிந்திக்கும் திறனை இழந்து விடும். கார்த்திகேயனுக்கும் அது தான் நடந்தது. கயல்விழியின் அலைபேசியும் எடுக்கப்படாததால் அவள் தன்னை ஏமாற்றி விட்டாலோ என்று குழம்பினான்.

அவன் நினைத்தது போல் அவளும் திருமணம் செய்து கொண்டு கணவனோடு சென்றதில் தன்னை விட வசதியான ஒருவன் வந்ததும் தன்னை ஏமாற்றி விட்டாள் என்று முடிவு செய்தான்.

அதற்குப் பின் கார்த்திகேயன் கயல்விழியை சந்திக்கவே இல்லை. அவனால் அவளை சந்திக்கவும் முடியவில்லை. அவன் அவளை சந்திக்க எண்ணவும் இல்லை. அவள் மீது கோபமும் வெறுப்பு மட்டுமே அவனுக்கு இருந்தது.

அன்பே உன் புன்னகை எல்லாம்

அடி நெஞ்சில் சேமித்தேன்

கண்ணே உன் புன்னகை

எல்லாம் கண்ணீராய் உருகியதேன்

வெள்ளை சிரிப்புகள்

உன் தவறா

அதில் கொள்ளை போனது

என் தவறா

பிரிந்து சென்றது

உன் தவறா

நான் புாரிந்து கொண்டது

என் தவறா

ஆண் கண்ணீா் பருகும்

பெண்ணின் இதயம்

சதையல்ல கல்லின் சுவரா

கவிதை பாடின கண்கள்

காதல் பேசின கைகள்

கடைசியில் எல்லாம் பொய்கள்

என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?

எங்கே கார்த்திகேயன் கயல்விழியை திருமணம் செய்து கொண்டு வந்து விடுவானோ என்று வள்ளி அச்சப்பட்டு புலம்பி கொண்டு இருந்தாள்.

“அம்மா அந்த பொண்ணுக்கு கல்யாணமாகி அமெரிக்காக்கோ, ஆஸ்திரேலியாகோ போய் செட்டில் ஆயிட்டா. அவ வரமாட்டா நீ உன் பையன பத்தி வீணா பயப்படாம இரு” என்றான் பார்த்திபன்.

“ஆமாம்” என்று சிவபாலனும் கூறிய பின் தான் வள்ளி அமைதியானாள்.

இதனால் கார்த்திகேயனுக்கு நிம்மதியாக அவன் படிப்பை முடித்து வேலையிலும் சேர முடிந்தது. கயல்விழி தன்னை விட்டு செல்ல காரணமே பணமும் வசதியும் தான் என்று எண்ணிய கார்த்திகேயன், பணத்தை சம்பாதித்தது மட்டுமல்லாது புகழையும் சம்பாதித்தான்.

புகழை சம்பாதித்தது எதற்கென்றால் கண்காணாத தூரத்தில் இருக்கும் கயல்விழிக்காக. அவள் அவனை பார்க்க வேண்டும் என்பதற்காக. பார் பார் நன்றாக பார். நீ இல்லை என்று நான் உன்னை நினைத்துக் கொண்டு தேவதாசன் ஆகிவிடவில்லை. நீ இல்லாமல் நான் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் தான் இருக்கிறேன் என்று பறைசாற்றாகவே புகழைத் தேடி அலைந்தான். இப்படிப்பட்ட ஒருவனை இழந்து விட்டேனே என்று அவள் ஏங்க வேண்டும், துடிக்க வேண்டும் என்று எண்ணினான். இன்று கயல்விழியையும் சந்தித்தான்.

அவளை காதலித்த நாட்களை விட அவள் பிரிந்து சென்ற பின் அவள் ஞாபகங்கள் அவனை பாடாய் படுத்த அவளை மறக்க முடியாமல் திண்டாடினான்.

அவளை வசைபாடவென்றே தினமும் அவள் புகைப்படங்களை பார்ப்பவன் அவளோடு பேசலானான். 

அவளை நேரில் சந்தித்த நொடி முக்கியமாக அவனுக்கு அவளிடம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இருந்தன. உண்மையிலேயே அவள் அவனை காதலித்தாளா? அல்லது காதலித்து ஏமாற்றினாளா? கயல்விழியின் தந்தை ஆன்டனி ராஜ் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் படுத்திருந்ததை அவன் கண்ணால் பார்த்தது பொய் இல்லையே.

உண்மையிலேயே அவள் தன்னை காதலித்திருந்தால் எதற்காக தன்னை விட்டு வேறொருவனை திருமணம் செய்து கொண்டாள்? தன்னுடைய வீட்டில் நடந்த பிரச்சனையால் அவள் இந்த முடிவுக்கு வர வேண்டிய அவசியம் இல்லையே தான் அவளை கைவிடுவதாக கூறவே இல்லையே. அவள் இதற்கு பதில் சொல்லியேயாக வேண்டும்.

தானாக சென்று அவளிடம் விளக்கம் கேட்க வேண்டுமா? அவளாகவே தன்னிடம் வர வேண்டும் அதற்காகத்தான் பரசுராமிடம் அவ்வாறு பேசிவிட்டு வந்தான்.

இவன் அழைத்தால் கயல்விழி வந்து விடுவாளா?

காத்திருந்தான் கார்த்திகேயன்.

“சார் செம்ம நியூஸ் ஒன்னு மாட்டி இருக்கு”

“என்ன திரு அந்த கே.எல்.சி. கிரிக்கெட் டீம் லீடர் கேஸ் தானே? அந்த மாடல் அழகியோடு அவன் கூத்தடிக்கிறது ஊரு பூரா நாறுது. வீடியோ வேற லீக்காச்சு. ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணுவாங்களோ என்னமோ பாக்கலாம் என்ன நடக்குதுன்னு”

கார்த்திகேயனின் அலைபேசி அடிக்கவே பேசிக் கொண்டிருந்த படியால் யார் என்று கவனிக்காமலேயே எடுத்து காதில் வைத்திருந்தான் பேசியது அவன் தந்தை சிவபாலன் தான்.

“டேய் கார்த்திகேயா அம்மாக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணி இருக்கேன் டா சீக்கிரம் வாடா” பதட்டமாகவே பேசினான் சிவபாலன்.

கார்த்திகேயன் எந்த பதிலும் பேசாமல் அலைபேசியை துண்டித்து விட்டான்.

கயல்விழி தனக்கு இல்லை என்றதும் இதற்குக் காரணம் தன்னுடைய குடும்பத்தார் என்று கோபத்தில் சென்னைக்கு சென்ற கார்த்திகேயன் வீட்டுக்கு வரவே இல்லை அலைபேசி தொடர்பில் மட்டும் தான் இருந்தான்.

அவன் வேலையில் சேர்ந்து கொஞ்சம் பணம் சம்பாதிக்க ஆரம்பித்த நொடியே இது போன்று தான் வள்ளி மயங்கி விட்டாள் என்று சிவபாலனிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. அன்னைக்கு ஒன்றென்றதும் அன்னை மீதி இருந்த பாசத்தில் பதறியவாறு கார்த்திகேயனும் சென்னையிலிருந்து புறப்பட்டான்.

இவன் கிளம்பி அரை மணித்தியாலத்தில் பார்த்திபனிடமிருந்து இவனுக்கு அழைப்பு வந்தது. “டேய் தம்பி அம்மாவுக்கு ஒன்னும் இல்லடா. கொஞ்சம் பிபி கூடிப்போச்சு. அவ்வளவுதான் வேற ஒண்ணுமே இல்ல. டாக்டர் வீட்டுக்கு போலாம்னு சொல்லியும் இல்ல நான் ஹாஸ்பிடல் தான் இருப்பேன்னு உன்னை இங்க வர வைக்க சும்மா சீன் கிரியேட் பண்ணுது.

உனக்கு ஒரு பணக்கார சம்பந்தம் வந்து இருக்கு அத பேசி முடிக்கத்தான் உன்ன வர வைக்க பாக்குது. எனக்கு என்ன ஸ்கெட்ச்சு போட்டதோ, அச்சு பிசகாம அதே ஸ்கெட்ச்சை போடுது. இங்க பாருடா நீ காதலிச்ச பொண்ணையே நினைச்சுகிட்டு காலம் பூரா இப்படி இருக்கணும் என்று நான் சொல்ல வரல, நீயும் கல்யாணம் பண்ணனும் ஆனா உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ. அம்மா பார்க்கிற பொண்ண எல்லாம் கல்யாணம் பண்ணாத புரிஞ்சுதா” அவன் வாழ்க்கையில் நடந்ததை தடுக்க யாருமில்லை. தம்பியின் வாழ்க்கையில் தவறு நடக்க விட்டுடுவேனா என்று பெற்றவர்களின் முதுகுக்குப் பின்னால் தம்பிக்கு உதவிக் கொண்டிருந்தான் பார்த்தீபன்.

பார்த்திபன் பேசிய பின்பு மீண்டும் கார்த்திகேயன் சென்னைக்கு திரும்பி சென்றான். சிவபாலன் அழைத்து அழைத்துப் பார்த்தும் கார்த்திகேயன் அலைபேசியை எடுக்கவே இல்லை.

அதற்குப் பின்னரும் வள்ளி பல தடவை கார்த்திகேயனை அழைத்துப் பார்த்தாள் கார்த்திகேயன் அவளிடம் பேசவே இல்லை. பார்த்திபனை எவ்வாறு மிரட்டினாலோ அவ்வாறு கார்த்திகேயனையும் மிரட்டி பணிய வைக்கலாம் என்று வள்ளி எண்ணினாள். ஆனால் கார்த்திகேயனிடம் அவளின் தந்திரங்கள் பலிக்கவில்லை.

சென்னைக்கு வந்து அவர்கள் இவனை சந்திக்க முயன்ற போது வக்கீல் கார்த்திகேயனாக மாறி அவர்களை மிரட்டி துரத்தி அடித்தான்.

அதற்குப் பின் வீட்டில் இருந்து வரும் அலைபேசி அழைப்புகளை அவன் ஏற்பதே இல்லை. இன்று கவனிக்காமல் தான் ஏற்றிருந்தான் சிவபாலன் பேசியதை கேட்டு விட்டு அலைபேசியை துண்டித்து விட்டான்.

வளமை போல் சில கணங்களுக்கு பிறகு பார்த்திபன் அழைத்து “நீ கோயம்புத்தூருக்கு வர்றத டீவி நிவ்ஸ்ல வந்தது. நான் வீட்டுல சொல்லல. வந்துட்டு போன பிறகு தான் வீட்டுல எல்லாரும் பார்த்துட்டு நீ வீட்டுக்கு வரலன்னு கோபப்பட்டாங்க. அதுவும் உன் பக்கத்துல கயல்விழியை பார்த்து அதிர்ச்சியாகிட்டாங்க” இதுவும் வள்ளியின் நடிப்பு என்று கூறினான்.

“திருந்தவே மாட்டாங்க போலயே” என்றவனின் கண்ணுக்குள் கயல்விழி வந்து நின்றாள்.

பரசுராமனிடம் யோசித்து கூறுமாறு சொல்லிவிட்டு வந்து ஒரு வாரமாகிவிட்டது இன்னமும் அவரிடம் இருந்து அலைபேசி அழைப்பு வரவில்லை. கயல்விழியின் முடிவு என்ன என்று அவனால் புரிந்துகொள்ள முடிந்தது அதற்காக அவன் அமைதியாக இருப்பானா? புன்னகைத்தான்.

கார்த்திகேயன் நினைத்தது சரிதான். பரசுராமன் தன்னுடைய மகனின் எதிர்காலத்தை எண்ணி கயல்விழியையும் கார்திகேயனிடம் சென்று சேர்ந்து வேலை பார்க்குமாறு கேட்டுக்கொள்ள, கயல்விழி ஒரேயடியாக மறுத்து விட்டாள்.

“இல்லமா… இடமாற்றம் மனமாற்றத்த தரும். இங்க இருந்தா பழைய சம்பவங்களால் நீ சோர்ந்து போய் இருக்குற. சென்னைக்கு போனா கொஞ்சமாச்சும் உனக்கு ரிலீபா இருக்குமில்ல”

பரசுராமன் சொல்வது உண்மை தான். ஆனால் யாரை சந்திக்கக் கூடாதோ, அவனிடமே சென்று நிற்க முடியுமா?

“இல்ல அங்கிள். எனக்கு கோயம்புத்தூர் தான் பிடிச்சிருக்கு. நான் இங்கயே இருக்கேன். விக்னேஷ் மட்டும் போகட்டும்” என்றாள்.

“ஏன் கோயம்புத்தூர்ல கேஸே இல்லையா? உலகத்துலயே சிறந்த லாயர் கார்த்திகேயன் மட்டும் தான் எங்குறது போலயே பேசுறீங்க. இங்க இருக்குற பெட்டிக்கேஸே எனக்கு போதும். நான் இங்கயே இருக்கேன்” கயல்விழியை பார்த்தவாறே கூறினான் விக்னேஷ்.

கயல்விழிக்கும் விக்னேஷுக்கும் ஒரே வயது தான் கயல்விழியின் மீது அவனுக்கு இருக்கும் விருப்பத்தை நேரடியாகவே கூறி விட்டான்.

“இல்ல விக்னேஷ் உன் மேல எனக்கு அந்த மாதிரியான எந்த எண்ணமும் இல்ல. இப்போ நான் இருக்குற மனநிலைல இன்னொரு கல்யாணமும் பண்ணிக்க முடியாது. என்ன மன்னிச்சிடு” தன்னுடைய முடிவை உடனே கூறிவிட்டாள்.

“மேடு பள்ளம் போல மனித வாழ்க்கைல இதெல்லாம் சகஜம். நீயும் கடைசிவரைக்கும் இப்படியே இருந்துட முடியாதே. நான் உனக்காக காத்துகிட்டு இருக்கேன்” என்றான்.

அப்படிப்பட்டவன் கயல்விழியை விட்டு சென்னை செல்ல சம்மதிப்பானா?

ஆனால் சென்னை செல்ல மாட்டேன். கார்திகேயனிடம் வேலையில் சேர மாட்டேன் என்றவள் அடுத்த மாதமே அவன் முன் சென்று நின்றாள். 

“சொல்லுங்க மிஸிஸ் கயல்விழி. மிசிஸ் தானே? சொல்லுங்கள். எதுக்காக என்ன பார்க்க வந்திருக்கீங்க” அவளை யாரென்றே அறியாதவன் போல் பேசினான் கார்த்திகேயன்.

அவன் கோபம் கயல்விழிக்கு புரியாமலில்லை. ஆனால் அவளோ சூழ்நிலையை எடுத்துக் கூறி தானே அவனை வீட்டில் பேசுமாறு அனுப்பி வைத்தாள். வீட்டுக்கு வரவழைத்து அவமாப்படுத்தியதற்கே அவன் குடும்பத்தை உண்டு, இல்லையென்று ஒரு வழி செய்திருக்க வேண்டும். கார்த்திகேயனை எண்ணி விட்டு விட்டாள்.

அவர்களை சொல்லியும் குற்றமில்லை. பார்த்தீபன் தான் காதலித்த பெண்ணை விட்டு விட்டு வள்ளி பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான். உன் குடும்பத்தார் அறிமுகம் கிடைத்தால் அவர்களுக்கு என்னை பிடிக்கும். நாம் காதலிப்பதாக கூறும் பொழுது மறுக்க மாட்டாங்க என்றுதான் சொல்லுறேன். கயல்விழி எடுத்துக் கூறும் பொழுது சந்தர்ப்பம் வரும் பொழுது அறிமுகப்படுத்துகிறேன் என்ற கார்த்திகேயனுக்கு அந்த சந்தர்ப்பம் மட்டும் கிட்டவேயில்லை.

குறைந்தபட்சம் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக வீட்டில் கூறியிருந்தால், காதல் திருமணத்திற்கு அவர்கள் சம்மதிப்பார்களா? மாட்டார்களா? என்று தெரிந்திருக்கும். அவர்களை சம்மதிக்க வைக்க முயற்சி செய்திருக்கலாம். முடியாவிடில் அவர்களின் முடிவை ஏற்று காதலை கடந்து சென்றிருக்கலாம்.

கார்த்திகேயன் எந்த முயற்சியும் எடுக்காமல் காதல் தோல்வியடைந்ததாகவும், அதற்கு தான் தான் காரணம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம் என்று கயல்விழிக்கு கோபம் வந்தாலும், தன்னை யாரென்று தெரியாமல் அவன் பேசியது இருவருக்கும் நல்லது தான் என்று நேரடியாகவே விசயத்துக்கு வந்தாள்.

“எனக்கு ஒரு கேஸுல உங்க உதவி வேணும் மிஸ்டர் கார்த்திகேயன்” என்றவள் அவனை நேருக்கு நேராக பார்த்தாள்.

“திமிர் திமிர் உடம்பு பூரா திமிர். நான் தான் தெரியாத மாதிரி பேசினா, இவ அதுக்கு மேல என்ன தெரியாத மாதிரி பேசுறா. என்ன வேணான்னு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணதுக்கு விளக்கம் கூட கொடுக்கல. இப்போ என் உதவி வேணும்னு வந்து நிக்கிறியா. உன்னை இங்க வர வச்சது நான் தாண்டி” பதில் பார்வை பார்த்தவாறு பேப்பர் வெயிட்டை உருட்டி கொண்டு இருந்தான் கார்த்திகேயன்.

கண் பேசும்

வார்த்தைகள் புரிவதில்லை

காத்திருந்தால் பெண்

கனிவதில்லை

ஒரு முகம் மறைய

மறு முகம் தெரிய

கண்ணாடி இதயம் இல்லை

கடல் கை மூடி

மறைவதில்லை

காற்றில் இலைகள்

பறந்த பிறகும்

கிளையின் தழும்புகள்

அழிவதில்லை

காயம் நூறு கண்ட பிறகும்

உன்னை உள்மனம்

மறப்பதில்லை

ஒரு முறைதான்

பெண் பார்ப்பதினால்

வருகிற வலி அவள்

அறிவதில்லை

கனவினிலும் தினம் நினைவினிலும்

கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

இவன் உதவி செய்வானா? மாட்டானா? பழையதை பேசி கடுப்பேத்துவானா? என்று கயல்விழி அவனை யோசனையாக பார்த்துக் கொண்டிருக்க,

“சொல்லுங்க நான் உங்களுக்கு என்ன பண்ணனும் என்ன மாதிரியான உதவி பண்ணனும்? கல்யாணமாகி இத்தன வருஷத்துல் குழந்தை இல்லையா? அதுக்கு நான் ஏதாவது உதவி பண்ணனுமா?” கேலியாக உதடு வளைத்தான்.

அவனை ஏகத்துக்கும் முறைத்த கயல்விழியோ அவன் கூறியது காதில் விழாதது போல் “ஒரு வித்தியாசமான கேஸ் அதுக்குத்தான் உங்ககிட்ட உதவி கேட்டு வந்திருக்கேன்” என்றவள் விளக்கமாக கூறலானாள்.

ரகு மற்றும் ராதா என்கிறவங்களுக்கு கல்யாணமாகி ஆறு வருஷம் கழிச்சு பொறந்த குழந்தை தான் தாரா. தாராவுக்கு இரண்டு வயசாக இருக்கும்போது தாரா காணாமல் போய் இருக்கா. நாலு வருஷமா அவங்க தேடி ஆறு வயசுல தாரா திரும்ப கிடைச்சிருக்கா. ஒரு வருஷமா தாரா அவங்க கூடத்தான் இருந்திருக்கா. ஒரு வருஷத்துக்கு பிறகு இது எங்க பொண்ணு தாராவே இல்ல. இது வேற யாரோ எங்க பொண்ணு தாராவை தேடி கொடுங்கன்னு திரும்ப போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துத்திருக்காங்க”

அவள் பேச்சில் குறுக்கிட்டவன் “அதான் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்க இல்ல, இதுல என்ன பிரச்சனை?”

“அவங்க குழந்தையோட முதுகுல ஒரு மச்சம் இருந்திருக்கு அத பாத்து தான் அவங்க குழந்தை என்று முடிவு பண்ணி இருக்காங்க”

குழந்தையை கண்டு பிடிச்சா டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க மாட்டாங்களா? எந்த காலத்தில் இருக்காங்க. இப்ப மட்டும் எப்படி தாரா இல்ல என்று சொல்லுறாங்க? டி.என்.ஏ டெஸ்ட் எடுத்துப் பார்த்தாங்களா?”

“பெத்த அம்மாக்கு தெரியாதா இது என் புள்ளையா இல்லைன்னு ஏதோ மனம் சொல்ல டி.என்.ஏ டெஸ்ட் எடுத்ததாக சொல்றாங்க”

“அது சரி, அவன் அவனுக்கு காதலி ஏன் விட்டுட்டு போனானே தெரியல. இதுல பெத்த அம்மாவுக்கு மட்டும் புள்ள இல்லைன்னு தெரியுதா” அவளைக் குத்தி பேச சந்தர்ப்பம் கிடைத்தால் விடுவானா கார்த்திகேயன். எதற்கு எதையோ முடிச்சு போட்டு பேசி விட்டான்.

அவன் கூறியது கயல்விழியின் காதில் தெளிவாக விழத்தான் செய்தது. இவனிடம் வந்தால் இவ்வாறான பேச்சுக்கள் கேட்க வேண்டி இருக்கும் என்று தெரிந்து தானே வந்தா.ள் இதையெல்லாம் கண்டு கொண்டால் இவனிடத்தில் உதவி கேட்க முடியுமா? அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

அவள் அமைதி கூட அவனது கோபத்தை தூண்டியது. ஆனால் அவளிடம் கோபத்தைக் காட்டி அவளை துரத்த முடியாது. அவளை வரவழைத்தது அவன் தானே. பொறுமையாக அவளை ஏறிட்டவன் “சரி இப்ப நான் என்ன உதவி பண்ணனும் னு நீங்க என்கிட்ட எதிர்பார்க்கிறீங்க?” என்று கேட்டான்.

“அதான் குழந்தையை கண்டு பிடிச்சு கொடுத்தாச்சு என்று போலீஸ் கேஸ ஒழுங்கா விசாரிக்காமல் இருக்காங்க. இப்போ இருக்கிற குழந்தையை யாரோ இவங்க கிட்ட ஒப்படைச்சி பணம் வாங்கி இருக்காங்க. அது யார் என்றும் கண்டு பிடிக்கணும். நீங்க இந்த கேஸுக்குள்ள வந்தா தான் உங்க டீம வச்சு இந்த கேஸ தரவா விசாரிக்கலாம் போலீசும் மும்மரம் காட்டுவாங்க”

இது அவனுக்கு தெரிஞ்ச விஷயம் தானே. ராதா யாரோ இல்லை கயல்விழியோடு படித்த அவளுடைய கல்லூரி தோழிதான். அவனிடம் வந்த வழக்கை, அவளிடம் அனுப்பி வைத்ததே இவன் தானே.

“நான் உங்க கூட வேலை பார்க்கிறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல மிஸிஸ் கயல்விழி” அவள் திருமதி என்பதனை அழுத்தமாக கூறலானான் கார்த்திகேயன். அது அவன் அவனுக்கே கூறி ஞாபகப்படுத்திக் கொண்டானா என்பது அவன் மட்டுமே அறிவான்.

“ஆனா நீங்க என் கூட சேர்ந்து வேலை பார்க்கணும் என்றால் சில ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் இருக்கு. அஞ்சு வருஷம் நீங்க என்கிட்ட மட்டும் தான் வேலை பார்க்கணும். அதுக்கு நீங்க சம்மதம் என்றா மட்டும் தான் நான் உங்க கூட சேர்ந்து வேலை பார்ப்பேன்” கராறான குரலில் கூறினான்.

“அஞ்சு வருஷமா?” இவன் என்ன திட்டம் போடுகிறான் என்று சந்தேகமாக அவனைப் பார்த்தாள் கயல்விழி.

“பின்ன என்கிட்ட வேலை கத்துக்கிட்டு எனக்கு எதிராவே நீ கடையை போட்டுடீன்னா அதுக்குத்தான் இந்த அஞ்சு வருஷம் ஒப்பந்தம். அஞ்சு வருஷத்துல ட்ரெண்டு மாறிடும் இல்ல” அவள் பார்த்த பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் சிரித்தவாறு கூறினான்.

அவன் ஒருமையில் பேசியதை கண்டு கொள்ளாது “உஷார் தான்” என்று கயல்விழி முணுமுணுத்துக் கொண்டாலும் ஐந்து வருடங்கள் இவனிடம் வேலை செய்ய வேண்டுமா என்று ஒரு புறம் யோசித்தாள்.

தனக்கு திருமணம் ஆகிவிட்டது அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று இவன் நினைத்துக் கொண்டிருக்கும் வரையில் எந்த சிக்கலும் இல்லை. தனக்கு விவாகரத்தானது இவனுக்கு தெரியவில்லை. வேலையைத் தவிர வேறு எந்த விஷயத்தை பற்றியும் அவனிடம் பேசக்கூடாது என்ற முடிவோடு “அஞ்சு வருஷம் முடியாது மிஸ்டர் கார்த்திகேயன். இரண்டு வருஷம் என்றா ஓகே. நான் அமேரிக்கா போய் செட்டில் ஆகலாம் என்ற முடிவோட இருக்கேன். உங்களுக்கு எதிரா கடைய போட்டுடுவேனோ என்று அஞ்ச வேண்டாம்” கிண்டலடித்தவள் இதற்கு நீ சம்மதித்து தானாக வேண்டும் என்று அவனை பார்த்தாள்.

“நான் இவளுக்கு செக்கு வைக்க பார்த்தா, இவ எனக்கே வைக்கிறாளா? இதோ வரேண்டி” புன்னகைத்தவன் “பொதுவா என் கூட வேலை பாக்குறவங்களோட போடுற எக்ரிமண்ட் தான். நீங்க அமேரிக்கா போறப்போ கேன்சல் பண்ணிக் கொடுக்குறேன் என்றான்.

“ஓகே” என்று ஒற்றை வார்த்தையில் முடித்தாள் கயல்விழி.

அவள் சம்மதிப்பாள் என்று நினைக்காத கார்த்திகேயனுக்கு தலை கால் புரியவில்லை. ஆனந்தத்தை முகத்தில் அப்பட்டமாகவே காட்டினான்.

கயல்விழி அவனை வினோதமாகப் பார்த்தாலும் எதுவும் பேசாமல் கிளம்பி சென்றாள்.

Advertisement