Advertisement

அத்தியாயம் 3

கயல்விழி கார்த்திகேயனை ஊடகங்களினூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றாள். இன்று நேரில் பார்த்ததில் அவள் மனமும் கடந்தகால வாழ்க்கையை அசைபோட்டுக் கொண்டிருந்தது.

கார்த்திகேயன் கயல்விழியை பார்த்த உடன் காதல் கொண்டு விட்டான். ஆனால் கயல்விழியோ அவனை பார்த்து பார்த்தே, அறிந்து, தெரிந்து கொள்ளும் பொழுதுதான் அவன் மீது காதல் வயப்பட்டாள். 

அதை அவனிடம் கூறமுடியாமல் அவளை தடுத்தது தந்தைக்கு அவள் செய்து கொடுத்த சத்தியம் தான்.

கயல்விழியின் தந்தை ஆண்டனி ராஜும், அன்னை தேன்மொழியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இரண்டு சமுகத்தின்ர் என்பதால் இரண்டு குடும்பத்தாரும் இருவரையும் ஒதுக்கி வைத்து விட்டனர்.

தேன்மொழி கயல்விழியை சுமந்த பொழுது ஆண்டனி ராஜுக்கு தொழிலில் அபிவிருத்தி ஏற்பட, புதிதாக வீடும் கட்டி குடியேறினார்கள்.

ஆனால் பிரசவத்தில் கயல்விழியை பெற்று ராஜின் கையில் கொடுத்த தேன்மொழிதான் கண்காணாத தூரம் சென்று விட்டாள்.

“தாயை முழுங்கி விட்டு பிறந்தவள். பொட்ட புள்ளையா வேற போய்ட்டா. இவள தலமுழுகிட்டு நம்ம இனத்துல நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்க. உனக்கென்ன வயசாகுது” ராஜின் குடும்பத்தார் அவனிடம் பேச கடுப்பானான் ராஜ்.

“எப்போடா என் பொண்டாட்டி சாவா. என் பொண்ணையும் கொல்லலாம். என் சொத்தை ஆட்டைய போடலாம் என்று காத்துகிட்டு இருந்தீங்களா? என் பொண்டாட்டி செத்தப்போவே நானும் செத்துட்டேன் என்று என்னையும் தலமுழுகிடுங்க. எனக்கும் என் பொண்ணுக்கும் நீங்க யாரும் வேணாம். கிளம்புங்க. என் வாசலை மிதிச்சீங்க மரியாதை கெட்டுடும்” ராஜை வசைபாடியவாறே அவர்கள் கிளம்பி சென்றிருந்தனர்.

“மாப்புள… ஐயோ என் பொண்ணு போய்ட்டாளே… இந்த பிஞ்ச இனி யாரு பார்த்துபா” அழுதவாறே வந்த தேன்மொழியின் அன்னை அடுத்து வந்த நாட்களில் ஆட்ச்சி செய்யவும், அதிகாரம் செய்யவும் ஆரம்பித்தாள்.

வேடிக்கை பார்த்திருந்த ராஜ் அவளை அழைத்து. “தேன்மொழியோட அம்மா எங்குறதால பொறுமையா இருந்தேன். தேன்மொழி பிரேக்னன்ட்டா இருந்தப்போ வந்து பார்த்தீங்களா? அவ உங்க கூட இருந்தப்போ கூட அவள ஒழுங்கா பாதுகல. இப்போ இங்க வந்தது அவ பெத்த பொண்ண பாதுகாவா என்ன? என் சொத்துல சுகம் அனுபவிக்கத்தானே.

நீங்க குழந்தைய பார்த்துகிற லட்சணம் தான் தெரியுதே. எனக்கு என் குழந்தைய பார்த்துக்க தெரியும். இனி ஒரு நிமிஷம் நீங்க என் வீட்டுல இருக்கக் கூடாது.

நானி… நானி இந்தம்மாக்கு வாசல் கதவை காட்டுங்க.

வாட்ச்மன் இந்தம்மா வந்தா வீட்டுக்குள்ள விடாதீங்க” கழுத்த பிடித்து தள்ளுங்க என்று சொல்லாமல் சொன்னான் ராஜ். 

கயல்விழியை கண்ணுக்குள் வைத்து வளர்த்தான் ராஜ். அறிவுரை சொல்லும் பொழுது தந்தையாகவும், அன்பு காட்டும் பொழுது அன்னையாகவும் இருந்தான்.

கயல்விழிக்கு ராஜ் தான் உலகம் தேன்மொழி மற்றும் ராஜின் காதல் கதையை கேட்டவாறுதான் தினமும் தூங்குவாள் கயல்விழி.

“நான் காதலிக்க மாட்டேன் …ப்பா… கடைசி வரைக்கும் உங்க கூடவே இருந்துடுறேன்” தந்தையை கட்டிக்கொண்டாள்.

“மனுசனா பொறந்த ஒவ்வொருத்தங்களும் காதலிக்க செய்வாங்க. காதல் செய்யலைன்னா அவனுக்கு வேற எதோ பிரச்சினை என்று அர்த்தம். அப்படித்தான் சயன்ஸ் சொல்லுது.

என்ன காதல் யார் மேல எப்போ வரும் என்று யாருக்கும் சொல்ல முடியாது.

இவ்வளவு எதிர்ப்பு வரும் என்று தெரிஞ்சிருந்தா நானும், உன் அம்மாவும் அன்னக்கி சந்திக்காம வீட்டோட இருந்திருக்க மாட்டோமா என்ன? நம்ம விதி சந்திக்கணும், காதலிக்கனுமென்று இருந்தது.

நம்ம ரெண்டு பேரோட குடும்பமும் நம்மை ஏத்துக்கிட்டு இருந்தா… இன்னைக்கு தேன்மொழி எங்க கூட இருந்திருப்பா. நம்ம கூட யாருமே இல்ல என்ற கவலையில் தான் அவ போய் சேர்ந்தா.

சில காதல் கல்யாணத்துல முடியும். சில காதல் சேராமலையே போகும். ஆனா வாழ்க்கை யாருக்காகவும் நிக்காது. அது பாட்டுக்கு போய்கிட்டே இருக்கும்.

நீ யாரை காதலிச்சாலும் எனக்கு பிரச்சனை இல்லை காதலுக்கு ஜாதி, மதம், இனம், மொழி எதுவுமே கிடையாது. நீ காதலிக்கிற பையன் நல்லவனா, நம்பிக்கையானவனா, நேர்மையானவனா, இருக்கணும். அதே போல அவன் குடும்பத்தாரும் உன்னை ஏத்துக்கணும். இல்லன்னா எனக்கு பிறகு நீ தனிமரமா நிற்ப. சொந்த பந்தங்களோட நீ சந்தோஷமா வாழனும் அதுதான் என்னுடைய ஆசை.

“சரிப்பா… நான் உங்களுக்கு சத்தியம் பண்ணிக் கொடுக்குறேன். நல்ல பையனா, நல்ல குடும்பமா பார்த்து லவ் பண்ணுறேன்” என்று சிரித்தாள் கயல்விழி.

கார்த்திகேயனை பார்த்த போதே பிடித்த போதிலும், பாடசாலை செல்லும் வயதில் காதலா? சரியா? தவறா? புரியாமல் ராஜிடம் வந்து நின்றாள் மகள்.

“இந்த வயசுல வர்றதெல்லாம் இன்பேசுவேஷன். பாசிங் க்ளவுட்ஸ் போல கடந்தும் போகும். இல்ல நிலவு போல தொடர்ந்தும் வரும்” அர்த்தத்தோடு சிரித்தான் ஆண்டனி ராஜ்.

“அப்பா… ஒன்னு இருக்குனு சொல்லுங்க. இல்லனா இல்லனு சொல்லுங்க. இருக்கு ஆனா இல்லனு எஸ்.ஜெ சூர்யா மாதிரி உளறாதீங்க” தந்தையை ஏகத்துக்கும் முறைத்தாள் மகள்.

“ஒரு கை தட்டினா ஓசை வராதே. அந்த பையன் என்ன நினைக்கிறான்னு தெரியுமா?”

“அவன் என்ன பார்க்க ஸ்கூல் கேட்டுல நிக்குறத பார்த்து நான் சுவரேறி குதிச்சி பஸ் ஸ்டண்ட் வரேன்” சங்கடமாக பதில் சொன்னாள்.

காதல் வந்ததும்

கன்னியின் உள் காதலை

யாருக்கும் சொல்வதில்லை

புத்தகம் மூடிய மயில் இறகாய்

புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை

சத்தமாக சிரித்த ராஜ் “அவனை பிடிக்கலையா? பயப்படுறியா?”

“பிடிச்சிருக்கு. கொஞ்சம் பயமா இருக்கு. நான் ஸ்கூல் போறேன். அவன் காலேஜ் போறான். தடிமாடு” மனதில் இருக்கும் அச்சத்தை எவ்வாறு சொல்வதென்று புரியாமல் கார்த்திகேயனை திட்டினாள். 

இது தான் உன் பிரச்சினையா? அப்போ நீயும் காலேஜ் போ. அப்பாவும் அவனுக்கு உன் மேல இன்டெரெஸ்ட் இருந்தா பார்க்கலாம்” இந்த வயதில் இவ்வாறான எண்ணங்கள் உருவாகுவது சகஜம் தானே அதை அனுபவிக்கவும், கடந்து வரவும் வேண்டுமென்று மகளை சமாதானப்படுத்தினான்.

காலேஜ் சேர்ந்த முதல் நாளே கார்த்திகேயனை சந்தித்ததை பற்றியே பேசலானாள் கயல்விழி.

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

மனம் விரும்புதே உன்னை… உன்னை

மனம் விரும்புதே

உறங்காமலே கண்ணும் கண்ணும்

சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா

நெஞ்சில் உன் முகம்தானடா

“சரி அந்த பையனுக்கு இன்டரஸ்ட் இருக்கானு பார்க்கலாம்” ராஜுக்கு மகளின் சந்தோசம் முக்கியம் தான். ஆனாலும் அவள் வாழ்க்கையில் காதல் தோல்வி என்றால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும் என்று எண்ணினான்.

இருந்தாலும் கார்த்திகேயனை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணி அவனைப் பற்றி தேடிப்பார்த்தான்.

அப்படி தேடிப் பார்த்ததில் கார்த்திகேயனும் கயல்விழியை விரும்புவதை கண்டு கொண்டான். கார்த்திகேயனின் குடும்பத்தை பற்றியும் அறிந்து கொண்டான். கயல்விழியும் கார்த்திகேயனும் சந்தித்து பேசாமல் இருந்த பொழுதும் ராஜும் சிவபாலனும் சந்தித்து கொண்டு தோழர்களாக இருந்தனர் இது கயல்விழியும் கார்த்திகேயனும் அறிந்திருக்கவில்லை.

காலேஜ் படித்துக் கொண்டிருந்த கயல்விழிக்கு தன் காதலனோடு கைகோர்த்து ஊர் சுற்ற வேண்டும் சினிமாவுக்கு போக வேண்டும் என்றெல்லாம் ஆசை இருந்தது. ஆனால் அவள் ஆசையை நிறைவேற்ற வேண்டிய கார்த்திகேயனோ அவளை விட்டு தொலைதூரத்தில் இருந்தான். குறைந்தபட்சம் அவளோடு அலைபேசியிலாவது உரையாடினானில்லை.

இந்த நேரத்தில் தான் கார்த்திகேயன் சின்ன அண்ணன் பார்த்திபனின் திருமணம் நிகழ்ந்தது. திருமணத்திற்கு தன்னை கார்த்திகேயன் அழைப்பான். அழைத்து செல்வான் என்று கயல்விழி பெரிதும் நம்பினாள். ஆனால் கார்த்திகேயன் அவளை சந்திக்க வரவே இல்லை.

சென்னை சென்றவன் தன்னை மறந்து விட்டானோ வேறு பெண்ணே விரும்புகிறானோ என்றெல்லாம் எண்ணங்கள் தோன்றி குழம்ப ஆரம்பித்தாள்.

பார்த்திபனின் திருமணமும் நடந்து முடிந்திருந்தது. அவன் காதலித்த பெண்ணை விட்டுவிட்டு அன்னை பார்த்த பெண்ணை திருமணம் செய்ததாக செவி வழி செய்தி கயல்விழிக்கு எட்டியது.

அன்னை சொன்னால் கார்த்திகேயனும் தன்னை விட்டு விடுவானோ என்று கோபத்தில் தான் கார்த்திகேயனிடம் வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினாள்.

அவனும் தான் என்ன செய்வான் கூடப்பிறந்த சகோதரிகளும் கிடையாது. சகோதரிகள் இருந்தாலாவது கயல்விழியின் எண்ணங்களையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டிருப்பான். கயல்விழியை அவன் காதலிக்கிறான். அவளுக்கும் அவன் மீது விருப்பம் இருக்கிறது என்பதை தவிர அவளோடு பேசி பழக சந்தர்ப்பம் அமையாததால் அவள் என்ன நினைக்கிறாள் என்றும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியவில்லை.

அவனுடைய சொந்த அண்ணன் பார்த்திபன் யாரோ ஒரு பெண்ணை காதலித்தான் என்பதே கயல்வழி கூறி தான் கார்த்திகேயனுக்கு தெரியும். இதில் அன்னை அவனை எவ்வாறு திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தாள் என்பது இவனுக்கு எப்படி தெரியும். “தெரியாது” என்றால் கயல்விழி கார்த்திகேயனை முறைத்தாள்.

“இப்பவே சொல்லிட்டேன் என்னால உன் கூட ஓடி எல்லாம் போக முடியாது. உங்க வீட்ல சம்மதம் சொன்னா உன்ன கல்யாணம் பண்ணிப்பேன் இல்லன்னா பண்ணிக்க மாட்டேன். புரிஞ்சுதா?” அவள் மிரட்டிய தொணியில் சத்தமாக சிரித்தான் கார்த்திகேயன்.

பாவம் அவனுக்குத் தெரியவில்லை அவள் அவளது தீர்மானத்தில் எவ்வளவு உறுதியாகவும் பிடிவாதமாகவும் இருப்பாள் என்று.

கார்த்திகேயன் வீட்டில் அவனது திருமணத்திற்கு அவசரப்படவேயில்லை. முதலில் அவன் வேலையில் அவனை பொருத்திக் கொள்ளட்டும் என்றிருந்தாள் கனகவள்ளி.

ஆனால் கயல்விழியை அவசரமாக திருமணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் ஆண்டனி ராஜ். ஆண்டனி ராஜுக்கு 4 வது நிலையில் தான் நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அறிகுறி இருந்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டான்.

தனக்கு மரணம் நெருங்கி விட்டது என்றதும் தான் சிவபாலனிடம் திருமணத்தை பற்றி பேச வேண்டும் என்றான் ராஜ்.

“அப்பா இப்போ உங்களுக்கு ஓய்வு தேவ. டாக்டர் உங்கள பெட்ட விட்டு இறங்க கூடாது. ஹாஸ்பிடல்லிலேயே இருக்கணும் என்று சொல்லி இருக்காரு. நான் கார்த்திகேயன் கிட்ட பேசுறேன்”

தந்தையிடம் கூறியபடியே கயல்விழி அலைபேசி வழியாக கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தாள். பதறி துடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்த கார்த்திகேயனும் தான் பார்த்துக்கொள்வதாக ராஜுக்கு வாக்குறுதி அளித்தான்.

வீட்டுக்குச் சென்ற கார்த்திகேயனோ தான் கயல்விழியை காதலிப்பதாக கூற கனகவள்ளி குதிக்கலானாள். மனைவியை சமாதானப்படுத்திய சிவபாலன் கயல்விழி ஆண்டனி ராஜின் மகள் என்று அறியாமலேயே கார்த்திகேயனுக்கு அவளை அழைத்து வருமாறு கூறினான்.

கயல்விழி கார்த்திகேயனின் வீட்டுக்கு வரும் பொழுது சிவபாலனை தவிர, கார்த்திகேயனின் குடும்பத்தார் அனைவருமே வாசலில் தான் இருந்தனர்.

வந்தவளை யாரும் வாவென்று என்று அழைத்து உபசரிக்கவில்லை. கனகவள்ளி அவளை முறைத்துக் கொண்டிருக்க, தன் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத அன்னை எங்கே தம்பியின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து விடுவாளோ என்று பார்த்திபன் தான் சத்தம் போடலானான்.

“ஏய் கொஞ்சம் வாய மூடுரியா. நான் கயல கூட்டிகிட்டு வந்தது அப்பா, அம்மா கிட்ட பேச. நீ உன் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு உள்ள போ” கார்த்திகேயன் கோபப்பட

“என்னடா பேச வேண்டியிருக்கு? என்ன பேச வேண்டியிருக்கு? பையன பெத்து, வளர்த்து, படிக்க வச்சி என் இஷ்டத்துக்கு கல்யாணம் கூட பண்ணி வைக்க முடியாதா? என் பையன் நாளைக்கு பெரிய வக்கீலாவான். பெரிய குடும்பத்துல சீதனத்தோட மருமக வருவான்னு எதிர்பார்த்தா… எவளோ ஒருத்திய கூட்டிக்கிட்டு வந்து நிக்குற. இவள எல்லாம் என்னால மருமகளா ஏத்துக்க முடியாது” கனகவள்ளி கார்த்திகேயன் வேலையில் சேரும் வரை காத்திருந்தது கொழுத்த சீதனத்தைப் பெற்றுக்கொள்ள என்பது அவளது பேச்சில் தெளிவாக புரிந்து.

மாமியாரின் பேச்சில் மருமகள்கள் முகம் சுழித்தனர். சொந்தத்தில் பெண் எடுக்கிறேன் என்ற பெயரில் அவர்களை மாமியார் எப்படியெல்லாம் சுரண்டினாள் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியுமல்லவா.

மூத்தவனாக பிறந்த தினகரன் பிறக்கும் பொழுதே வாயில்லா பூச்சி. அன்னை சொன்ன பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளைப் பெற்ற பின்னும் அன்னைக்கு மகனாகவே இன்று வரையில் வீட்டில் வாழ்ந்து கொண்டிருப்பவன் அன்னையை எதிர்த்து பேசுவானா அமைதியாகவே நின்றிருந்தான்.  

மூவரிலும் கார்த்திகேயன் தான் கனகவள்ளிக்குச் செல்லம். தனது காதலை எதிர்த்த அன்னை தம்பியின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவாளென்று எண்ணியே பார்த்தீபன் கோபத்தில் பேசினான்.

ஆனால் தங்களை பெற்றவளோ பசங்களின் சந்தோசத்தை விட, அவள் மருமகள் கொண்டு வரும் பணத்தின் மீது குறியாக இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டபின் தம்பிக்கும் தனக்கேற்பட்ட நிலைமை தான் என்று எண்ணுகையில் சோகமானான் பார்த்தீபன்.

“எனக்கு இவள பிடிக்கல. வேற ஜாதியிலையே பொண்ணு எடுக்க மாட்டேன். நீ வேற மதத்து பொண்ண காதலிக்கிறேன்னு வந்து நிப்பியா?

நம்ம குடும்ப அந்தஸ்து என்ன? கௌரவம் என்ன? எவளோ ஒருத்தி எனக்கு மருமகளா?” காட்டு கத்து கத்தினாள் வள்ளி.

“அப்பா எங்க?” அவளை கண்டு கொள்ளாது தினகரனை ஏறிட்டான் கார்த்திகேயன்.

வீட்டுக்குள் வந்த கயல்விழி அமராமல் அங்கு தான் நின்று வேடிக்கை பார்த்திருந்தாள். தனது அன்னைக்கும், தந்தைக்கும் எந்த மாதிரியான எதிர்ப்புக்கள் வந்திருக்கக் கூடும் என்று அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.

வாசலில் அவ்வளவு சத்தம். கனகவள்ளி கீச்சுக்க குரலில் கத்திக் கொண்டிருக்கிறாள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பொறுமையாக சிவபாலன் குளியலறையிலிருந்து வந்தான். வரும் பொழுதே மனைவியை கண்களால் அதட்ட வேறு செய்தான். அதில் வள்ளி அமைதியாக, அவர்களின் பார்வை பரிமாற்றத்தை வைத்தே அங்கே என்ன நடக்கும் என்று கயல்விழியால் ஊகிக்க முடிந்தது. 

“உக்காரும்மா…” கயல்விழியை பார்த்து சிவபாலன் கூற,

“பரவால்ல இருக்கட்டும் அங்கிள்” என்றாள் கயல்விழி. அங்கே அனைவரும் நின்று கொண்டிருக்க அவள் மட்டும் அமர்வது அநாகரீகம் என்று தான் மறுத்தாள்.

“பரவால்ல. உனக்கு இங்கிதம் தெரிஞ்சிருக்கு. உன் அப்பா உன்ன நல்லா தான் வளர்த்திருக்காரு. ஆனா பாரு ஒரு பையன் கூப்ட்டான்னு அவன் கூட கிளம்பி வந்திருக்க, அப்படியெல்லாம் போகக் கூடாது என்று மட்டும் உங்கப்பா சொல்லி கொடுக்க மறந்துட்டாரு” எடுத்த எடுப்பிளையே கயல்விழியின் வளர்ப்பு தப்பானது என்றதோடு, அவளை பெற்றவரை பற்றியும் தப்பாக பேசினான் சிவபாலன்.   

“பொண்ணு கேட்டு மாப்புள வீட்டாளுங்கதான் படியேறி வரணும். பொண்ணே மாப்புள வீடு தேடி வரக் கூடாது. அது அநாகரீகம்” கயல்விழியை பற்றி விசாரிக்காமல் அவளுக்கு பாடமெடுக்கலானான்.

தந்தை எந்த மாதிரியான சூழ்நிலையில் மருத்துவமனையில் கிடக்கிறார். இவர்களுக்கு தெளிவாக அதை பற்றி எடுத்துரைக்க வேண்டாமா? அதை விட்டு விட்டு எதற்காக என்னை இங்கே அழைத்து வந்தான் என்று தந்தையை பற்றி தவறாக பேசியதும் கடுப்பான கயல்விழி கார்த்திகேயனை தான் முறைத்தாள்.

“அப்பா நான் உங்க கிட்ட என்ன சொன்னேன். நீங்க என்ன பேசிகிட்டு இருக்கிறீங்க?” கார்த்திகேயனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“இங்க பாருடா வயசு கோளாறுல கண்டவளுங்க பேச்சுளையும், அழகுளையும் மதி மயங்கத்தான் செய்யும். அதெல்லாம் கொஞ்சம் காலம். என்ன இப்போ இவ வயித்துல புழு, பூச்சி ஏதாச்சும் வந்திருச்சா? ஒன்னும் பிரச்சினை இல்ல எனக்கு தெரிஞ்ச க்ளினிக் இருக்கு அங்க போய் வயித்த கழுவிடலாம். பணம் வேணும் என்றாலும் கொடுத்துடலாம்டா… அம்மா இருந்து வளர்ந்திருந்த ஒருவேளை இப்படியெல்லாம் நடந்திருக்காதோ என்னவோ, அப்பா வளர்த்த பொண்ணு தானே அதான் ஊரு மேயிறா.   

“அப்பா…” இதுவரையில் கண்டிராத தந்தையின் முகத்தை பார்த்தவனுக்கு அதிர்ச்சியில் அடுத்து என்ன பேச வேண்டும் என்று வார்த்தை கூட வரவில்லை.

“இவளெல்லாம் ஒரு அழகு என்று நீ இவ பின்னாடி சுத்துற. அதான் அனுபவிச்சிட்டியே. கைகழுவி விடு” ஒரு தந்தை மகனுக்கு எந்த மாதிரியான அறிவுரைகளை சொல்லக் கூடாதோ அந்த மாதிரியான அறிவுரைகளை வாரி வழங்கினான் சிவபாலன்.

கார்த்திகேயன் கோப்பட்ட அளவுக்கும், வெறுப்படைந்த அளவுக்கும் கூட கயல்விழி முகத்தில் கூட சிறு சலனமில்லாமல் பார்த்திருந்தாள்.

கயல்விழியின் முகத்தை பார்ப்பதற்கே கார்த்திகேயனுக்கு சங்கடமாக இருந்ததது. ஆத்திரத்தை அடக்கியவனின் கண்கள் சிவந்து, குளம் கட்டி அவள் விம்பம் கூட தெளிவில்லாமல் தெரிந்தது.

சிவபாலன் பேசி முடித்ததும் “என்ன அசிக்கப்படுத்தனும் என்று என்னவெல்லாம் பேசிட்டீங்க. என்ன அவமானப்படுத்துறதா நினைச்சி நீங்க உங்க பையனைத்தான் அவமானப்படுத்திட்டீங்க. வார்த்தைக்கு வார்த்தா என் அப்பா என்ன தப்பா வளர்த்துட்டாரு. அம்மா இல்லாதவ என்று சொன்னீங்களே. அம்மா, அப்பா ரெண்டு பேர் இருந்தும் உங்க பையன் எனக்கு அனாதையா தான் தெரியிறான்.

என்ன சொன்னீங்க? எங்கப்பா என்ன ஊருமேய விட்டிருக்காரா? நான் வீட்டை விட்டு கிளம்பும் பொழுது எங்க போறேன். யாரை சந்திக்க போறேன் என்று சொல்லிட்டுதான் போவேன். அப்பாவுக்கு தெரியாம திருட்டுத்தனமா எதையும் செய்ய வேணும் என்ற எந்த அவசியமும் எனக்கு கிடையாது. நான் இங்க வந்தது கூட அப்பாக்கு தெரியும். அவர் ஹாஸ்பிடல்ல இருக்குறதால அவரால வர முடியல. நல்லவேளை அவர் இங்க வரல.

என் பொண்ணு தப்பான முடிவு எடுக்க மாட்டான்னு எங்கப்பாக்கு ரொம்ப நம்பிக்கை. நீங்க பேசினது கேட்ட பிறகும்,  உங்க பையன தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நான் பிடிவாதம் பிடிப்பேனோனு பயந்து அவர் நம்பிக்கை ஆட்டம் கண்டிருக்கும்.

நான் ஆண்டனி ராஜோட பொண்ணு தப்பான முடிவு எடுக்க மாட்டேன். வார்த்தையை கொட்டினா அல்ல முடியாது மிஸ்டர் சிவபாலன்” அங்கிள் என்றவரை ஒரே நொடியில் அந்நியன் ஆக்கினாள் கயல்விழி.

“உன் குடும்பத்தாரோடு முடிவு என்னனு தெளிவா புரிஞ்சிருச்சில்ல கார்த்திகேயன். இனிமேல் நாம சந்திக்க வேண்டியதில்ல” கார்த்திகேயனை நேருக்கு நேராக பார்த்து கூறிய கயல்விழி அங்கிருந்து கிளம்ப, கயல்விழியின் பின்னால் ஓடியவனை இழுத்து அறைந்து அறையில் வைத்து பூட்டினான் சிவபாலன். 

மருத்துவமனைக்கு வந்த கயல்விழியின் நெஞ்சம் முழுக்க எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்தாலும் தந்தைக்காக கார்த்திகேயனை தூக்கியெறிந்தவள் கண்களை துடைத்துக் கொண்டு தந்தையை காண வந்தாள்.

கார்திகேயனையும், அவன் குடும்பத்தாரையும் காணாது கேள்வியாக மகளை ஏறிட்டாலும் அங்கே என்ன நடந்திருக்கும் என்று ஆண்டனி ராஜால் ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடிந்தது.

சிரித்தவாறே “கார்த்திகேயன் சண்டை போட்டாலும் அவன் வீட்டாளுங்க சம்மதிக்கலப்பா. அவன் கிட்ட பேசி பிரிஞ்சிட்டேன். உங்க சந்தோஷத்துக்காக நீங்க சொல்லுற பையன நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்பா…” என்றாள் கயல்விழி.

அவள் பேச்சில் இருந்த தெளிவை பார்த்தே நிம்மதியடைந்த ஆண்டனி ராஜ் தன்னுடைய வழக்கறிஞ்சரான பரசுராமை அழைத்து அடுத்த முகூர்த்தத்தில் கயல்விழிக்கு திருமணம் நிகழ வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, அடுத்த மூகூர்த்திலையே கயல்விழியின் திருமணம் நடந்தேறியது.

கயல்விழியை தேடி வந்த கார்த்திகேயன் அவளுக்கு திருமணமானதை பார்த்து அதிர்ந்து நின்றதோடு அவளோடு பேச முயன்றால் அவளோ இவனை யாரென்றே தெரியாதவள் போல் கணவனோடு கிளம்பி சென்று விட்டாள்.

வீட்டார் மேலிருந்த வெறுப்பையும் தாண்டி கயல்விழியின் மேல் கடும் கோபம் கொண்டான் கார்த்திகேயன்.

Advertisement