Advertisement

அத்தியாயம் 25

குழந்தைகளை தத்தெடுத்து மூன்று நாட்களுக்கு பின் வீட்டார் அனைவரும் குலதெய்வ பூஜைக்காக கோவிலுக்கு வேன் பிடித்து கிளம்பினர்.

குழந்தைகளை தத்தெடுக்கக் கூடாது என்று அடம் பிடித்த வள்ளி தான் முதலாளாக பூஜைக்கு தயாரானாள். மருமகள்களை ஏவி அதை எடுத்து வை, இதை எடுத்து வை. எதையும் மறந்து விடாதே என்று நேற்று மாலையிலிருந்து பாடாய்படுத்தி விட்டு வண்டியில் ஜம்பமாக அமர்ந்திருந்தாள்.

எல்லாம் பார்த்தீபனின் குழந்தைகள் செய்த மாயம்.

வரும் வழியிலேயே வீட்டில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று புகைப்படத்தோடு அறிமுக படலத்தை நடத்தியிருந்தான் கார்த்திகேயன் அதன் பயனாக வீட்டுக்கு வந்த குழந்தைகள் வள்ளியை பார்த்ததும் “அப்பத்தா…” என்று கட்டியணைத்திருக்க, அவளால் சட்டென்று குழந்தைகளிடம் முகத்தை திருப்ப முடியவில்லை.

எங்கே மாமியார் குழந்தைகளிடம் சத்தம் போட்டு, தள்ளி விடுவாளோ என்று பதறிய கண்மணி “கண்ணா, பவி அம்மா கிட்ட வாங்க” என்று அழைத்தாள்.

 “அக்கா” என்று கண்மணியை கயல்விழி தடுக்க நினைக்கையில்

குழந்தையும் தெய்வமும் ஒன்று. இறந்து போன தன்னுடைய அண்ணனே குழந்தையாக பிறந்தது போல் கண்ணனை பார்த்த உடன் தோன்றியிருக்க “கண்ணப்பா… எங்கண்ணனே பொறந்து வந்துட்டான்” என்றவாறு கண்ணனை தூக்கி முத்தமிட்ட வள்ளி, தன்னையே பார்த்திருந்த குட்டி பவித்ராவை பார்த்து “உன் பேரென்ன” என்று கேட்டாள்.

அதன்பின் அங்கே கண்ணன் மற்றும் பவித்ராவின் பேச்சு சத்தம் குறையவே இல்லை.

வைஷ்ணவியும், வைபவும் வள்ளியை ஆச்சரியமாக பார்த்திருந்தனர்.

எப்பொழுதும் புலம்பிக் கொண்டிருக்கும் அப்பத்தா, அம்மாவையும், சித்தியையும் திட்டிக் கொண்டே வேலை வாங்கும் அப்பத்தா, சித்தப்பாவோடு மட்டுமல்லாது தங்களுடைய அன்னை வழி சொந்தங்களோடு குரலை உயர்த்தி பேசும் அப்பாத்தாவை பார்த்திருக்கிறார்கள். அவள் சத்தம் போடும் பொழுது அன்னை வேறு இவர்களை அறையில் வைத்து பூட்டி விடுவாள். வெளியே சென்றால் எங்கே தங்களை அடித்து விடுவாளோ என்று இவர்களும் அறையிலையே இருந்து விடுவார்கள்.

பாசத்தை கூட அதிகாரமாக காட்டும் அப்பத்தாவை பாத்திருந்தவர்களுக்கு இப்படிக்கு கூட பாசம் காட்டுவாளா என்று இவர்கள் ஆச்சரியம் குறையாமல் பார்த்திருந்தனர்.

“என்னப்பா அங்கேயே நின்னுட்டிங்க? பக்கத்துல வாங்க” என்று அழைத்த வள்ளி குழந்தைகள் பேசுவதை ரசித்தவாறே குழந்தைகளுக்கு உன்ன சிற்றுண்டிகளை செய்யுமாறு மதியழகியையும், கண்மணியையும் விரட்டினாள்.

அப்போ மருமகள்களை விரட்ட ஆரம்பித்தவள் இதோ குலதெய்வ கோவிலுக்கு செல்லும் வரையில் விரட்டிக் கொண்டிருந்தாள்.

“உங்கம்மா சோடா பாட்டில் போல கோபத்தை காட்டினாலும், பாசத்தை பூரா பலா பழம் போல உள்ளேயே வச்சிருக்காங்க” ஒரு காதில் ஜிமிக்கியை அணிந்தவாறு கூறினாள் கயல்விழி.

“விடிஞ்சா, அந்திபட்டா எங்கம்மாவ பத்தி பேசுற. அம்மா பெத்த இந்த பையன பத்தியும் கொஞ்சம் பேசேன்” என்றவாறு அவள் பின்னாலிருந்து அணைத்தான் கார்த்திகேயன்.

அவன் தொடுகையும், அணைப்பையும் ஏன் கன்னத்தில் வைக்கும் முத்தத்தை கூட தயக்கமின்றி ஏற்றுக் கொண்டிருந்தாள். அவள் கொடுத்தது தான் இவன் திருப்பிக் கொடுக்க ஆரம்பித்து அதுவே தொடர்கதையானது.

கயல்விழியின் மனதில் கார்த்திகேயன் காதலன் என்ற இடத்தில் தான் இன்னும் இருக்கின்றான். கணவன் என்ற இடத்தை அவனுக்கு அவள் கொடுக்க நினைக்கவுமில்லை. முயற்சி செய்யவுமில்லை.

அவளுக்குள் இருக்கும் அச்சத்தை உடைத்தெறிந்து அவளே வெளியே வரவேண்டும் என்று காத்திருந்தால் அவளோ தன்னை பற்றி எண்ணி, தன்னை சந்தோசமாக வைத்துக்கொள்ள முடியாமல் போய்விடுமே என்று குழம்பி தன்னை விட்டு விலகுவதாக பேசிக் கொண்டிருக்கிறாள். அதுவும் சில நேரம் தான். நான் இல்லாமல் அவளால் இருந்துட முடியுமா? முடியாது என்று அவள் உணர வேண்டும் என்பதற்காக வேண்டியே சதா அவளை தொட்டு, அணைத்து, முத்தமிட்டு சில்மிஷம் செய்யலானான்.

“கோவிலுக்கு போக உங்கம்மா பட்டுப்புடவையை கட்டிட்டு வர சொல்லி உத்தரவு போட்டிருக்காங்க. கஷ்டப்பட்டு நீட்டா கொசுவம் வச்சிருக்கேன். கட்டிப் பிடிக்கிறேன் என்று புடவைய கசக்கி, கொசுவத்தை கழட்டிடாத. தள்ளு” முழங்கையால் அவன் இடுப்பில் குத்தியவாறே மறு காதில் ஜிமிக்கியை மாட்டலானாள்.

“கலஞ்சா கட்டிக்கலாம்டி புடவை தானே” என்றவாறு அவள் தோள்பட்டையில் நாடியை வைத்து மேலும் அவளை தன்னுள் இறுக்கிக் கொண்டு மூக்கால் உரசி அவள் ஜிமிக்கி ஆட்டுவித்தான்.

அவன் மூச்சுக்காற்று காது மடல் உரசி, அவள் மேனி எங்கும் புதுவித மின்சாரம் பாய்ந்தது. மொத்தமாக அவன் புறம் சாயும் அவளது மேனியை கால்களின் பெரு விரல்களை ஊண்டி தடுத்தவாறே “சொன்னா கேளு கார்த்தி” குரல் உள்ளே போனவளாக சிணுங்கியவளோ, அவனை தள்ளி விடத்தான் இல்லை. அந்த பொழுது நீண்டு விடாதா என்று அவள் மனம் ஏங்க, அந்த நொடி அவளுக்கு பிடித்திருந்தது. மனதுக்குள் இனம் புரியாத ஒரு பரவசம் இம்சிக்க, பட்டு வேட்டி சட்டையில் தயாராக நின்றிருந்த கார்த்திகேயனை கண்ணாடி வழியாக ரசிக்கலானாள்.

“கயல், கார்த்தி இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? சீக்கிரம் வாங்க. அத்த வண்டியில் ஏறிட்டாங்க” படிகளிலிருந்து மாடியை எட்டிப் பார்த்தவாறே குரல் கொடுத்தாள் கண்மணி.

“வரோம்…கா…” என்றவாறே திரும்பியவளின் இதழ்கள் கார்த்திகேயனின் இதழ்களை தீண்டியது மட்டுமல்லாது அவள் நெற்றியும் அவன் நெற்றியில் மோத திகைத்தவள், வலியில் முகம் சுணங்கினாள்.

தென்றல் தீண்டியது போல் அவள் இதழ்கள் பட்டும் படாமலும் உரசி சென்றதை ஏக்கமாகப் பார்த்தவனின் சிந்தனை அவள் இதழ்களை முற்றுகையிடலாமா? வேண்டாமா? என்று இருக்க, அவள் அடுத்து பேசியதில் முகம் கோப சாயலை பூசிக்கொள்ள மௌனமாக பல்லை கடித்தான்.

“டேய் மூக்கொலியா தள்ளி நில்லுடா. வலிக்குது. எப்ப பார்த்தாலும் ஒட்டிக்கிட்டு நிக்கிற நீ. காதலிக்கும் போது தான் கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிக்கிட்டு இருப்பேன்னு சொன்ன சொன்னபடி செஞ்சுகிட்டு இருக்கியா? மூக்கொலியா” வலியோடு அவனை வம்பிழுக்கலானாள்.

“மூக்கொலியன்” அவனை பிடிக்காதவர்கள் அவனின் பிடரிக்குப் பின்னால், ஊடகங்களின் வாயிலாக அவனை மூக்கொலியன் என்று அழைப்பது அவன் நன்கறிவான். யாரோ முகம் தெரியாதவர்கள் அழைத்த பொழுது உள்ளுக்குள் கனன்றாலும் பொறாமையில் பொசுங்குவதாக விட்டு விட்டவனுக்கு தன்னுடையவள் அப்பெயரை அழைத்த பொழுது கட்டுக்கடங்காத கோபம் வந்தது.

“கயல் வேணாம். அப்படி கூப்பிடாதே” என்று இவன் எச்சரிக்க,

அவளோ “மூக்கொலியயா மூக்கொலியா” என்று கிண்டல் செய்து சிரித்தாள்.

“சொன்னா கேக்க மாட்டியா? அவளை நகரவிடாது தன் கைக்குள் அடக்கிக் கொண்டது மட்டுமில்லாது பேசும் அவள் இதழ்களையும் தன் இதழ்களால் சிறை எடுத்தான்.

பூமியெங்கும் பூ பூத்த பூவில்

நான் பூட்டி கொண்டே இருப்பேன்

பூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால்

நான் காற்று போல திறப்பேன்

மேகம் உள்ளே

வாழ்ந்திருக்கும் தூறல்

போலவே நானும் அந்த

மேகம் அதில் வாழ்கிறேன்

காற்றழுத்தம் போல வந்து

நானும் உன்னை தான்

முத்தம் இட்டு முத்தம் இட்டு

போகிறேன்

ஒருவரை ஒருவர்

அடிக்கடி தேடி ஆனந்த

மழைதனில் நனைந்திட

நனைந்திட

துளி துளியாய்

கொட்டும் மழை துளியாய்

என் இதயத்தை இதயத்தை

நனைத்து விட்டாய் பார்வையிலே

உன் பார்வையிலே ஒரு வேதியல்

மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

ஒளி ஒளியாய்

வெட்டும் மின்னல் ஒளியாய்

என் ரகசிய ஸ்தலங்களை

ரசித்துவிட்டாய் ரசித்ததையே

நீ ரசித்ததையே என் அனுமதி

இல்லாமல் ருசித்து விட்டாய்

பூவென நீ இருந்தால்

இளம் தென்றலை போல்

வருவேன் நிலவென நீ

இருந்தால் உன் வானம்

போலிருப்பேன்

தன்னவள் தன்னை சீண்டினாள் என்ற சீற்றத்தில் ஒன்றும் கார்த்திகேயன் அவளை முத்தமிடவில்லை. அக்கணம் அவள் முகபாவனைகள் அவன் காதல் நெஞ்சில் தீயை பற்ற வைத்திருக்க, அவள் மனநிலையோ, அவள் கடந்த காலமோ நினைவில் வரவில்லை. அவன் காதலி கயல்விழி மாத்திரம் தான் கணமும் நின்றாள். தனக்குள் பெருகிய காதலை அவளுக்குள் கடத்த முத்தமிட்டான்.

அவன் முற்றுகையிட்டதும் அதிர்ந்த கயல்விழி தன்னையே மறந்து மெல்ல மெல்ல அவனுள் தொலைந்து கொண்டிருந்தாள். அவள் மனதில் இருந்த அச்சத்தின் சுவடு கூட அங்கில்லை. படபடத்த இதயம் மெல்ல அடங்க, அவளும் அவனுள் பந்தமாக அடங்கிப் போனாள்.

மூச்சு விட அவள் சிரமப்படுவதை உணர்ந்த பின் அவளை தன்னிடமிருந்து கார்த்திகேயன் மெதுவாக பிரித்து விலக்க,

“கயல்” என்று மீண்டும் குரல் கொடுத்தாள் கண்மணி.

மிட்டாய் பறித்த குழந்தையாய் கண்களை திறந்தவளுக்கு கண்மணியின் குரல் காதில் பாய்ந்ததும் கார்த்திகேயனை தள்ளி விட்டு கீழே ஓடியிருந்தாள்.

“கயல் நில்லு” அவள் நிலையறிந்தும் அவள் அனுமதியில்லாமல் தான் அவளிடம் இவ்வாறு நடந்து கொண்டு விட்டோமே என்று பதறியவன், அவன் அழைத்தும் அவள்  நிற்காமல் சென்றது தான் நடந்து கொண்ட முறை அவளுக்கு பிடிக்கவில்லை என்றதனால் தான் என்றெண்ணியவாறே அவள் பின்னால் ஓடினான்.

இவன் கீழே வருவதற்குள் கயல்விழி கண்மணியோடு சென்று வண்டியில் அமர்ந்திருந்தாள்.

எல்லோரும் வண்டியில் ஏறி இருக்க கார்த்திகேயன் கடைசியாகத்தான் வந்தான். முன்னாடி ஓட்டுனரோடு தினகரன் அமர்ந்திருக்க, அதற்கு பின்னால் வள்ளி அமர்ந்திருந்தாள். வள்ளி கார்த்திகேயனை அவளோடு அமர்த்திக் கொண்டாள்.

என்ன மனநிலையில் அவள் இருக்கின்றாளோ. அவளோடு பேசியேயாக வேண்டும் என்று கார்த்திகேயன் அவளை திரும்பி திரும்பி பார்க்க, கயல்விழியோ அவனை ஏரெடுத்தும் பார்க்கவில்லை.

அவள் கோபமாக இருக்கிறாள் என்று புரிகிறது. அவளை எவ்வாறு சமாதானப்படுத்த வேண்டும் என்றும் அவனுக்குத் தெரியும். ஆனால் அவள் இருக்கும் மனநிலையில் அவள் என்ன செய்வாளோ என்று அச்சம் தான் அவனுக்குள் இருந்தது. அவள் அருகில் அமர்ந்திருந்தால் ஏதாவது பேசி அவளை சமாதானம் செய்திருப்பான். அதற்கும் வழியில்லாமல் வள்ளி ஏதேதோ பேசிக் கொண்டே வந்தாள்.

அன்னை பேசுவது எதுவுமே அவன் கவனத்தில் இல்லை அவன் சிந்தனை முழுவதும் கயல்விழியே நிறைந்திருந்தாள்.

“ஏம்பா தல ரொம்ப வலிக்குதா?” அன்போடும், அக்கறையோடும் கேட்டாள் வள்ளி.

“இல்ல” என்று ஒத்தை வார்த்தையில் பதில் சொன்னவன் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

தான் மனம் வருந்தக் கூடாதென்று மகன் பொய் சொல்வதாக எண்ணிய வள்ளி அவனை பாவமாக பார்த்து விட்டு அமைதியானாள்.

வண்டி கோவிலை சென்றடையும் வரையில் குழந்தைகளின் சத்தம் மட்டும் வண்டியை நிறைத்திருந்தது.

கோவிலுக்கு சென்றிறங்கியதும் மீண்டும் வள்ளி மாமியார் அவதாரம் எடுத்து மருமகள்களை ஏவலானாள்.

“பார்தி எங்கடா உன் மாமனார் குடும்பம்? காது குத்த தாய்மாமன் வருவானா? மாட்டானா? உன்ற அப்பன் சொன்னாரு என்று வராம இருந்திடப் போறாங்க”

கண்மணி தன்னுடைய சொந்த தம்பியின் மகள். சாத்திர சம்பா சம்பிரதாயங்களில் தம்பி என்று பார்க்க மாட்டாள். இவள் அலைபேசி அழைப்பு விடுக்காமல், மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுத்து தானேயாக வேண்டும் என்று பார்த்திபனை பார்க்கச் சொன்னாள். மரியாதை கொடுக்காவிட்டால் உண்டு இல்லை என்று செய்து விடுவாள் அது வேறு கதை.

“வந்துகிட்டே இருக்காங்க. பயப்படாதீங்க” என்றான் பார்த்திபன். சிவபாலனால் எந்த குழப்படியும் நடந்து விடக்கூடாது என்பது தானே அனைவரினதும் வேண்டுதல்.

இவர்கள் ஆசிரமம் கிளம்பி செல்லும் பொழுது சிவபாலன் வீட்டிலில்லை. வரும் பொழுதும் வீட்டிலில்லை. குழந்தைகளை பார்த்து முகம் சுளித்தவன் செருப்பை கழற்றிய வேகத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக பறந்தது.

“உங்க அப்பா வீட்டுக்கு வந்தா என்ன செய்வாரோ” என்று வளமை போல் புலம்ப ஆரம்பித்தாள் வள்ளி.

“ஏன் நீ சமாளிக்க மாட்டியா?” என்று அன்னையை கார்த்திகேயன் வம்பிழுத்தாலும், பார்த்திபனிடம் என்ன செய்யலாமென்று பேசியிருந்தான்.

வீட்டுக்கு வந்த சிவபாலன் “வள்ளி” என்று கத்த “அம்மா” என்று கத்தியிருந்தான் பார்த்தீபன்.

புதல்வர்களிடம் பேசினால் தானே எதிர்த்து பேசுகிறார்கள் என்று சிவபாலன் வள்ளியை சத்தம் போட வீட்டுக்கு வந்ததும், வராததுமாக அவளை அழைத்தான்.

“அம்மா… என் பிள்ளைகளுக்கு இந்த வீட்டுல இடம் இல்லனா நான் தனிக்குடித்தனம் போய்டுவேன்” தந்தை பேசும் முன் முந்திக் கொண்டு கூறினான் பார்த்திபன்.

கார்த்திகேயன் கயல்விழியை பார்க்க, அவனை புரிந்து கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்று விட்டாள். 

“டேய் என்னடா” என்று வள்ளி கேட்க,

“என்னங்க?” என்று பதறினாள் கண்மணி.

“டேய் என்னடா நீ தனிக்குடித்தனம் போறான்னு சொல்லுற? நான் தனிக்குடித்தனம் போலாம் என்று இருக்கேன். எனக்கு ப்ரோமோஷன் கிடைச்சுடும். வேல பாக்குற இடத்துக்கே குடும்பத்த கூட்டிட்டு போலாம்னு நான் யோசிச்சுகிட்டு இருக்கேன். பசங்கள வேற ஸ்கூல் மாத்த வேண்டி இருக்கும். நீ இருக்கேன்னு தான் நான் தனிகுடித்தனத்தை பத்தியே யோசிச்சேன்” என்றான் தினகரன்.

“டேய் நீயுமாடா?” என்று வள்ளி ஆதங்கமாக கேட்க,

“என்ன இவர் ஒன்னும் சொல்லாம இப்படி முடிவெடுத்திருக்காரு. ஆமா எப்போ சொல்லிட்டு செஞ்சிருக்காரு” என்று மதியழகியின் மனம் நொடித்துக்கொள்ள, தினகரன் பேசும் அழகை பார்த்திருந்தாளே ஒழிய குறிக்கிடவில்லை. ஆம் ரசிக்கத்தான் செய்தள். இந்த வீட்டில் அவன் என்று இவ்வாறு எல்லாம் பேசி இருக்கிறான்? இதோ இது இரண்டாவது முறை அல்லவா. தன்னுடைய கணவனுக்கு இவ்வாறெல்லாம் பேசத் தெரியுமா என்று ஆச்சரியம் ஒரு புறம் அவன் பேசுவதை கேட்க ஆசை ஒருபுறம் என்று பார்த்திருந்தாள்.

“என் பசங்கள பேசினா… என்ன பார்த்துகிட்டு நிக்க சொல்லுறியா? என் பசங்க வேணாம்னா நான் வீட்டை விட்டு போறேன். எனக்கு என் பொண்டாட்டி, புள்ளைங்க தான் முக்கியம்” என்றான் பார்த்தீபன்.

அண்ணன் தம்பி மூவரும் சேர்ந்து பேசி நாடகமாடுவது புரியாமல் பெண்கள் பதறியவாறு நின்றிருக்க, கார்த்திகேயன் எதுவும் பேசாமல் பார்த்திருந்தான்.

“ஐயோ ஐயோ ஐயோ என் குடும்பம் பிரிய போகுதே” நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினாள் வள்ளி.

கார்த்திகேயன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்னையில் தான் வசிக்கிறான் என்பதை வசதியாக மறந்து போனாள்.

தன் இரத்தம் தன்னையே மிஞ்சுவதை பார்த்த சிவபாலன் தான் ஏதாவது பேசினால் இவர்கள் இன்றே இப்பொழுதே தனிக்குடித்தனம் செல்வது மட்டுமல்லாது நாளையே சொத்தையும் பிரித்துக் கொடுக்கும்படி கூறுவார்கள். கூறுவார்கள் என்ன? வக்கீல் நோட்டிஸே அனுப்புவார்கள். அதற்கென்று இங்கே ஒருத்தன் இருக்கிறானே என்று கார்த்திகேயனை முறைத்தவன் “கூட இவன் பொண்டாட்டி வேற” என்று முணுமுணுத்து விட்டு “யாரும் எங்கயும் போக்க கூடாது. யாராவது தனிக்குடித்தனம் போறேன். வீட்டை விட்டு போறேன் என்றா அப்படியே போக வேண்டியது தான். சொத்துல ஒரு நயா பைசா தர மாட்டேன்” உங்களுக்கெல்லாம் நான் அப்பன்டா என்ற தோரணையோடு அறைக்குள் சென்று மறைந்தான்.

அண்ணன் தம்பி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொள்ள, பெண்கள் நிம்மதி பெருமூச்சு விட்டவாறு நகர்ந்திருந்தனர்.

“மாமா கோவிலுக்கு வரல” வண்டியில் வரும் பொழுது சோகமாக கேட்டிருந்தாள் கண்மணி.

“அவர எல்லாத்துக்கும் எதிர்பார்த்தீனா நீங்க சந்தோஷமாக இருக்க முடியாது” என்று வள்ளி அவள் வாயை அடைத்திருக்க, கோவிலுக்கு வந்த உடன் கண்மணியின் குடும்பத்தை காணவில்லை என்றதும் கணவன் ஏதாவது பேசி வைத்தாரோ என்று பதறினாள்.

கார்த்திகேயன் கயல்விழியோடு பேசிவிடலாமென்று அவள் முகம் பார்க்க, அவளோ மதியழகியோடு பொங்கல் வைக்க ஆயத்தமானாள். 

அடுப்பு மூட்ட அங்கிருந்த செங்கற்களை சுமந்து வந்து தினகரன் மதியழகியின் முன் வைக்க, “ஆ” வென அவனை பார்த்தவளை “கொசு புகுந்துட போகுதுடி” என்று விட்டு சென்றான்.

அவளுக்கு அது கூட புரியவில்லை. “இந்த நேரத்துல, இங்க கொசு இருக்கா?” என்று கயல்விழியிடம் கேட்டாள்.

தினகரன் பேசியதில் புன்னகை வரவே முகத்தை மறைத்த கயல்விழிக்கு மதியழகியின் அப்பாவித்தனமான பேச்சில் சிரித்தே விட்டாள்.

அவள் சிரிப்பது புரியாமல் மதியழகி அவளிடமே விளக்கம் கேட்க கயல்விழியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சத்தமாக சிரித்தவளின் பார்வை கார்த்திகேயனின் முகத்தில் நிற்க, அவள் சிரிப்பும் சட்டென்று நின்றது.

கண்மணியின் குடும்பத்தாரோடு பேசியவாறு அவளையே பார்த்திருந்தவனுக்கு அவள் சிரிக்கவும் எந்த பிரச்சினையுமில்லை என்று தோன்றியது. அவனை பார்த்ததும் அவள் சிரிப்பு நின்றதும் நொந்து விட்டான்.

மற்றவர்களோடு சிரித்துப் பேசுபவள் தன்னை பார்த்ததும் சிரிப்பை தொலைத்தாள் என்றால் என்ன அர்த்தம்? தான் அவளிடம் அத்து மீறியதாக அவள் தன் மேல் கோபமாக அல்லவா இருக்கிறாள். அவளை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்ற சிந்தனையிலையே வேலை பார்த்தவனுக்கு அங்கே என்னவெல்லாம் நடந்தது என்று கேட்டால் “தெரியாது” என்று ஒத்தை வார்த்தையில் பதில் சொல்லியிருப்பான். 

பூஜையும் நிறைவடைந்து, குழந்தைகளுக்கு மொட்டையும் போட்டு, காதும் குத்தி வந்தவர்கள் விருந்தே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள், வீட்டு மருமகளாக கயல்விழி வந்தோரை கர்மசிரத்தையாக கவனித்துக் கொண்டிருந்தாளே ஒழிய கணவனை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

பாவம் கார்த்திகேயன் அவள் கோபமாக இல்லை அவளுக்குள் ஏற்பட்டிருக்கும் புதுவித வெட்கத்தால் தான் அவள் முகம் பார்க்க தயங்குகிறாள் என்று அவனுக்குத்தான் புரியவில்லை. கோபமாக இருப்பவள் அவனுடைய சொந்த பந்தங்களோடு ஒன்று கூடி இருப்பாளா? அவர்களுக்கு சேவகம் செய்வாளா? கொஞ்சமாவது அவன் யோசித்துப் பார்க்க வேண்டாமா? அவள் அவன் மீது கோபப்பட்டிருந்தால் அவளுக்கு அவன் மீது வெறுப்பாக இருந்தால் அந்த இடத்தில் இருந்திருப்பாளா? அந்த இடத்தில் என்ன அவன் கண் முன்னால் கூட இருந்திருக்க மாட்டாளே. அவள் நிலை என்னவோ என்று அவனுக்குள் இருந்த பதட்டத்தால், அக்கணம் அவன் சிந்திக்க தவறினான்.

தலை தொடும்

மழையே

செவி தொடும்

இசையே

இதழ் தொடும்

சுவையே

இனிப்பாயே

விழி தொடும்

திசையே

விரல் தொடும்

கணையே

உடல் தொடும்

உடையே

இணைவாயே

யாவும் நீயாய்

மாறிப் போக

நானும் நான்

இல்லையே

மேலும் மேலும்

கூடும் காதல்

நீங்கினால் தொல்லையே

தெளிவாகச் சொன்னால்

தொலைந்தேனே உன்னால்

என் அன்பே நானும்

நீயின்றி நானில்லை

என் அன்பே

யாவும் நீயின்றி

வேறில்லை

நான் உன்னில்

உன்னில் என்பதால்

என் தேடல்

நீங்கிப் போனதே

என்னில் நீயே என்பதால்

என் காதல் மேலும் கூடுதே

காண வேண்டும் யாதும்

நீயாகவே மாற வேண்டும்

நானும் தாயாகவே

கயல்விழிக்குள் பிரளயமே நிகழ்ந்து கொண்டிருந்தது. அச்சம் அச்சமென்று கார்த்திகேயனிடமிருந்து அவள் விலகி நிற்க முயன்றால், அவளின் நாடி நரம்பெல்லாம் அவனுக்காக ஏங்கிக் கொண்டிருப்பதை அவன் கொடுத்த ஒற்றை முத்தத்தில் அவள் நன்றாகவே உணர்ந்து கொண்டிருந்தாள். அவன் முத்தமிட்ட போது அவளுக்கு அச்சமோ, அருவருப்போ ஏற்படவில்லை.

ஏன் அவன் தன்னை விலக்கினான் என்று புரியாமல் இவளே அவனே முத்தமிடப் போக, கண்மணியின் குரலில் திடுக்கிட்டவள், வெட்கப்பட்டு தான் அங்கிருந்து ஓடியிருந்தாள்.

அவன் தன்னை கண்டு கொண்டானோ, கேலி செய்வானோ என்ற ஒருவித பதட்டம் தான் அவனின் முகம் பார்க்க தயங்கினாள். அக்கணம் அவளுக்கு அவள் வாழ்க்கையில் நடந்த எதுவுமே ஞாபகத்தில் இல்லை. கார்த்திகேயன் மட்டும்தான் அவள் நினைவில் நின்றிருந்தான்.

இவள் கோபமாக இருப்பதாக எண்ணி கார்த்திகேயன் பேச வரும் ஒவ்வொரு கனமும் இவளின் இதயம் தடதடக்க இவளோ நாணத்தால் அவனை விட்டு விலகி ஓடிக்கொண்டிருந்தாள்.

வாழ்க்கையில் சில விடயங்கள் தடைபடுவது கூட நல்லது தான். கார்த்திகேயன் கயல்விழியோடு பேச வேண்டும் எண்ணிய பொழுது தடைபட்டது கூட நல்லது தான். அவன் வந்து பேசி மன்னிப்பு கோரி இருந்தால், கயல்விழியின் வாழ்க்கையில் நடந்ததை அவள் மறக்க நினைத்தாலும், கார்த்திகேயன் மறக்க மாட்டான் என்ற எண்ணம் அவள் மனதில் வந்திருக்கும். இறுதிவரை அவள் அவனை ஏற்றுக் கொள்ளாமல் கூட போயிருக்கலாம்.

நாம் அதிகமாக நேசிப்பவரை நன்றாக புரிந்து வைத்திருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் தருவாயில் நாமே அவர்களை காயப்படுத்தி விடுவதுமுண்டு. கார்த்திகேயன் மட்டும் கயல்விழியிடம் பேசியிருந்தால் அதுதான் நேர்ந்திருக்கும்.

அவள் அனுபவித்த துன்பங்கள் போதும் இனி அவள் அவனோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதான் விதி போலும். அதனால் கூட அவன் அவளிடம் பேசுவது தடைப்பட்டு இருக்கலாம். இருவரின் கண்ணாமூச்சிக்கும் விடிவு காலம் வேண்டாமா.? இறுதிவரை கோவிலிலேயே இருந்திட முடியுமா? வீட்டுக்கு செல்லும் நேரமும் வந்தது அனைவரும் வீட்டுக்கு கிளம்பினர். வீட்டுக்கு சென்று பேசலாமென்று கார்த்திகேயன் நினைக்க, அங்கே சிவபாலன் ருத்ர மூர்த்தியாக நின்றிருந்தான்.

Advertisement