Advertisement

அத்தியாயம் 22

கயல்விழி வக்கீல் கயல்விழியாக கார்த்திகேயனிடம் வந்த பின் வேலையை தவிர்த்து வேறு எந்த பேச்சு வார்த்தையும் வளர்க்க விரும்பாதவள், திருமணமான பின் அவனோடு அளந்து அளந்து தான் பேசினாள்.

ஊருக்கு வந்தபின் அவள் வாய் பூட்டு அகன்றிருந்தது. கண்மணியிடமும் மதியழகியிடமும் உரிமையாக வம்பிழுத்தாள்.

“நீ போய் உன் புருஷன் கூட இரு கயல். நாங்க சமையல் வேலை எல்லாம் பார்த்துக்கிறோம்” என்று இவர்கள் சொல்ல

“இது நல்ல கதையாக இருக்கே. நான் என் அத்தைக்கும், மாமாவுக்கும் சமச்சி கொடுக்க வேண்டாம்” என்று வள்ளியை காக்கா பிடித்தாள்.

“உனக்கு சமைக்க தெரியுமா?” என்று மதியழகியும், கண்மணியும் ஒரே நேரத்தில் கேட்டிருக்க,

“அவளுக்கு சமைக்க தெரியாம கடையிலையா வாங்கி சாப்பிடுவாங்க?” என்று வந்து நின்றாள் வள்ளி.

கண்மணியை பார்த்திபன் திருமணம் செய்து வந்து கொண்டதும், இனி இந்த வீட்டில் தனக்கு இவள் துணையாக இருப்பாள் என்று கண்மணி மதியழகியிடம் நட்புக் கரம் நீட்டி இருக்க, அதட்டும் மாமியாரோடு தனியாக இருந்தவளுக்கு கண்மணியிடம் பேச பிடித்திருந்தது.

இருவரும் ஒன்றாக துணி துவைக்க போனார்கள். இருவரும் சேர்ந்து சமைத்தார்கள். வீட்டை மதியழகி பெருக்கினால், கண்மணி முற்றத்தை பெருக்கினாள். ஒன்றாக துணி காய போட்டு, மொட்டை மாடியில் மடித்துக் கொண்டு எடுத்து வந்தார்கள். பேச்சும் சிரிப்பும் இரண்டு நாட்கள் தான்.

மருமகள்களின் ஒற்றுமை மாமியாரின் கண்ணை உறுத்தி இருக்க வேண்டும் “அங்க என்னங்கடி குசு குசு என்று பேசுறீங்க? என் பசங்கள முந்தானை முடிச்சு, தனிக்குடித்தனம் போலாம் என்று பேசுகிறீர்களோ? பேசுற நாக்க அறுத்து உப்பு, மிளகா போட்டு உங்க குடும்பத்துக்கே கறி விருந்து சமைச்சு போட்டு விடுவேன் பாத்துக்கோங்க” என்று வள்ளி மிரட்டி இருக்க, அதன் பின் சாப்பிட மட்டும் தான் வாய் திறந்திருந்தார்கள் கண்மணியும், மதியழகியும்.

ஆனால் கயல்விழியிடம் வள்ளியின் பாட்ஷா பலிக்குமா? “எனக்கு சமைக்க தெரியலைன்னா, கார்த்தியே சமச்சிருப்பான். அவனுக்கு தான் நல்லா சமைக்க தெரியுமே. எனக்கு சமைக்க தெரியும் என்று சமையல் கட்ட கட்டிக்கிட்டு என்னால இருக்க முடியுமா? ரெண்டு பேரும் சேர்ந்து எல்லா வேலையையும் ஒண்ணா பார்க்கணும். கூட மாட ஒத்தாசையா இருந்தா தானே ஆபீஸ் வேலையையும் நேரத்துக்கு பாத்துட்டு, குடும்பத்தையும் பார்த்துக்க முடியும்” என்றாள்.

அவள் சொன்னது வள்ளிக்கு உவப்பாக இல்லை. என்ன இவள் என் பையன வேலை வாங்குகிறாள் என்றுதான் எண்ணினாள். என் கண் முன்னாடி மட்டும் என் பையன வேல வாங்கட்டும் பாத்துக்குறேன் என்று கருவிகொள்ள வேறு செய்தாள். ஆனால் அடுத்து வந்த இரண்டு நாட்களிலேயே அவள் கூறிய அர்த்தம் வள்ளிக்கு புரிந்தது.

அன்று மாலை கார்த்திகேயன் மொட்டை மாடியில் நின்று அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தான். அவனிடம் வந்த வள்ளி குலதெய்வ கோவிலுக்கு சென்று பூஜை செய்ய வேண்டும் என்பதை பற்றி பேசலானாள், அமைதியாக அதைப்பற்றி அன்னையோடு பேசியவன் கீழே செல்லும் பொழுது கயல்விழி மற்றும் அவனுடைய துணிகள் காய்ந்து கொண்டிருப்பதை பார்த்து அவற்றை எல்லாம் எடுக்கலானான்.

அதை பார்த்து பதறிய வள்ளி “எதுக்கு நீ இந்த வேலையெல்லாம் பண்ற? அதுக்கு தான் ஒருத்திய கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தியே” என்றாள்.

கயல்விழியை திருமணம் செய்ய முன் இருந்த கார்த்திகேயன் என்றால் சூடாக பதில் சொல்லி இருப்பானோ, என்னவோ. அவன் நினைவில் நின்றவள் தான் அவன் கண் முன்னாடி நிற்கின்றாளே. அவளுக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றம் அவன் கண்களுக்கும் தெரிகின்றது அல்லவா. அதனால் அவன் கோபமும், வீட்டார் மீது இருந்த வெறுப்பும் கரைந்தோடியே போயிருந்தது.

அன்னையைப் பார்த்து புன்னகைத்தவன் “ஏம்மா அவதான் அண்ணிங்களோடு கீழே இருக்கா. இப்ப நான் அவள கத்தி கூப்பிட்டு துணி எடுக்க சொல்லணுமா? நாமதான் கீழே போறோமே. போறப்போ எடுத்துட்டு போனா தான் என்ன” என்று கேட்டதோடு “அவள் என் வீட்டுக்காரி. வேலைக்காரி இல்ல” என்றும் சொன்னான்.

“ஏன் மகாராணிக்கு மாடியேறி வர முடியாதா? உனக்கு வேற உடம்பு முடியல” என்று வள்ளி குத்தலாக கேட்டாள். தன் மகனுக்கு உடம்பு முடியவில்லை. மருமகள் பார்த்து கேட்டு எல்லா வேலையும் செய்ய வேண்டாமா? என்று ஆதங்கம் தான் அவள் வார்த்தைகளில் இருந்தது.

“எது இந்த துணியை சுமந்துகிட்டு போறதால, எனக்கு ஏதாவது ஆயிட போகுதா? புள்ளைய கட்டிக் கொடுத்து, சண்டை போடாம அந்நியோன்யமாக வாழுங்கடான்னு சொல்லுறீங்க. வாழ்ந்தால் ஏண்டா இப்படி இருக்குன்னு கேக்குறீங்க. போம்மா. போம்மா. உன் மருமகள் பண்ற அலும்பு பத்தாது என்று நீ வேறயா?” என்று கயல்விழியை விட்டுக் கொடுக்காமல் பேசினான்.

இவர்கள் கீழே வரும் பொழுது கயல்விழி மாடியேறிக் கொண்டிருந்தாள். கார்த்திகேயனின் கைகளில் துணிகளை பார்த்ததும் “நீ மொட்டை மாடியில் இருக்கிறதா பார்த்தி மாமா சொன்னாரு. சரி நானும் உன்கிட்ட பேசிக்கொண்டே துணி எல்லாம் மடிச்சு, கீழே எடுத்துட்டு வரலாம் என்று பார்த்தேன் அதுக்குள்ள நீயே எடுத்துட்டு வந்தியா” சிரித்தாள்.

மகனிடம் வேலை வாங்குகிறாளே என்று மாமியார் என்ன நினைப்பாலோ என்று எண்ணாமல், கயல்விழி பேசியதை கேட்ட வள்ளிக்கு இவர்களின் வாழ்க்கையே இவ்வாறு தான் செல்கிறது என்று புரிந்தது. அந்நியோன்யமான வாழ்க்கை என்று மகன் சொன்னது இதுதானோ என்று மகனை பார்த்தாள்.

அவனும் “என்னடி பேசணும்?” என்றவாறு துணிகளை அவள் கைகளில் வைத்திருந்தான்.

சோபாவில் துணிகளை போட்டு அமர்ந்தவாறே பேசலானாள் கயல்விழி. அவளருகில் அமர்ந்து கொண்டான் கார்த்திகேயன். அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு கீழே இறங்கி சென்றாள் வள்ளி.

முதல் முதலாய் ஒரு

மெல்லிய சந்தோஷம் வந்து

விழியின் ஓரம் வழிந்தது இன்று

முதல் முதலாய் ஒரு

மெல்லிய உற்சாகம் வந்து

மழையை போலே பொழிந்தது இன்று

உயிருக்குள் ஏதோ

உணர்வு பூத்ததே

அழகு மின்னல் ஒன்று அடித்திட

செவிக்குள் ஏதோ

கவிதை கேட்குதே

இளைய தென்றல் ஒன்றை

என்னை மெல்ல தொட

தீயும் நீயும் ஒன்றல

எந்த தீயும் உன் போல

சுடுவதில்லை

என்னை சுடுவதில்லை

வேண்டாம் வேண்டாம் என்றாலும்

விலகி போய் நான் நின்றாலும்

விடுவதில்லை

காதல் விடுவதில்லை

அடி இளமையின் தனிமை

அது கொடுமையின் கொடுமை

எனை அவதியில் விடுமோ

இந்த அழகிய பதுமை

கண்ணே என் காதலை காப்பாற்று

சாப்பிடும் பொழுது கார்த்திகேயன் கொஞ்சம் இருமினாலே போதும், தலையில் தட்டி, அவனுக்கு தண்ணீர் புகட்டி, ஊட்டியும் விட்டாள். இதில் என்ன இருக்கிறது? அவள் கணவனுக்குத் தானே அவள் செய்கிறாள்.

சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வேலையை பார்க்க வேண்டும் என்று அவசர அவசரமாக சாப்பிட்டு இப்படி அடிக்கடி தொண்டை அடைப்பது கார்த்திகேயனுக்கு வழக்கமான ஒன்று. அவன் சாப்பிட வந்த உடன் கயல்விழி தண்ணீர் இருக்கிறதா? என்று தான் முதலில் பார்ப்பாள். அதை கவனித்த கண்மணி கேட்டிருக்க, கயல்விழி கொடுத்த விளக்கத்தை வள்ளியும் கேட்டிருந்தாள்.

கார்த்திகேயன் கயல்விழியை தன் பார்வை வட்டத்துக்குள் வைத்துக் கொண்டிருப்பதாக எண்ணினால், அவளோ அவன் மாத்திரை போட்டானா? என்று கேட்டு தண்ணீரோடு வந்து கொண்டு வந்து கொடுப்பாள். அவன் குளித்துவிட்டு வந்ததும் காயத்துக்கு களிம்பு பூசினானா என்று பார்த்து, அவன் வள்ளியோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களை தொந்தரவு செய்யாமல் கடமை தவறாத மனைவியாய் பூசி விட்டு செல்வாள்.

தன்மகனை கவனித்துக் கொள்பவளை வள்ளிக்கு வெறுக்கவும் முடியவில்லை. அவளிடம் முகம் திருப்பவும் முடியவில்லை. அன்னை இல்லாமல் வளர்ந்தவள் என்பதால் “அத்த, அத்த” என்று அவளிடம் செல்லம் கொஞ்ச வேறு செய்தாள் கயல்விழி.  

கயல்விழி உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசுபவளல்ல. எதையும் முகத்துக்கு நேராக பேசி விடுபவள். பொய்யாக நடிக்க மாட்டாள். யாருக்கும் அச்சப்பட மாட்டாள். கண்ணாடி போன்றவள். பாசத்தை காட்டினால், திருப்பிக் கொடுப்பவள் என்று வள்ளி புரிந்து கொள்ள இந்த இரண்டு நாட்களே போதுமாக இருந்தது.

அதனால் கார்த்திகேயன் கயல்விழியோடு திரும்ப சென்னை செல்லும் வரை எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது என்று சிவபாலனை வாங்கு வாங்க என்று வள்ளி சத்தம் போட்டிருந்தாள்.

“ஏற்கனவே உடம்பு முடியாத பையன். அவனுக்கு ஏதாவது ஆகினால் நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று மிரட்ட வேறு செய்தாள்.

“உடம்பு முடியாத பையன். நாளைக்கு செத்துடுவானு சொன்னியே, அவன் மாத்திர, மருந்து போடுறத நீ பார்த்தியா?”

“அவன் சின்ன குழந்தை பாருங்க. அம்மா தண்ணி கொடுங்க மாத்திரை போடணும் என்று என் முந்தானைல தொங்க. அவனைப் பார்த்துக்க தானே அவன் பொண்டாட்டி இருக்கா. நீங்க உங்க வாய மூடிக்கிட்டு இருந்தாலே என் பையன் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருப்பான்” என்றாள் வள்ளி.

சிவபாலனுக்கு மனம் ஆறவில்லை. தன்னுடைய ஜாதியில் தன் மகன் திருமணம் செய்யவில்லையே என்ற கோபத்தை விட, தன் பேச்சைக் கேட்கவில்லையே என்ற கோபம்தான் சிவபாலனுக்குள் இருந்தது.

ஜாதி தான் பெரிது என்றால் பெற்ற மூன்று பிள்ளைகளையும் ஜாதி வெறியை ஊற்றி வளர்த்திருக்க முடியாதா? ஆண்பிள்ளைகள் என்பதால் பாசத்தை கொட்டி வளர்த்தால் கெட்டுப் போய் விடுவார்கள் என்று கொஞ்சம் கட்டுப்பாடோடு வளர்த்திருந்தான். அதற்குக் காரணம் சொந்த தங்கை தமிழ்ச்செல்வி ஓடிப்போனது தான். பெண் பிள்ளை அவளே ஓடிப் போனால் ஆண் பிள்ளைகள் இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று அச்சம்தான். 

தங்களைப் பெற்றவர்கள் தங்களை பாசத்தை கொட்டி தானே வளர்த்தார்கள். தமிழ்ச்செல்வி மட்டும் அவர்கள் சொல் பேச்சு கேளாமல் குடும்பத்தை அவமானப்படுத்திவிட்டு ஓடி போனது சிவபாலனின் மனதில் ஆறாத வடுவாக பதிந்து போனது. அதனாலேயே தன்னுடைய பிள்ளைகளை கண்டிப்போடு வளர்க்கலானான் சிவபாலன். அத்தோடு தன் பிள்ளைகள் தன் பேச்சைக் கேட்க வேண்டும் பிடிவாதமும் இருந்தது. அந்த பிடிவாதம் தான் பார்த்திபன் தங்களுடைய ஜாதிப் பெண்ணை காதலித்தாலும் காதலுக்கு எதிரியானான்.

காதலுக்கு தான் எதிரி. ஜாதிக்கில்லை. கார்த்திகேயனின் காதலை எதிர்க்க காரணம் வேண்டாமா? மதம் வந்து முன்னாடி நின்றது. கூடவே கயல்விழி அம்மா இல்லாத பொண்ணு வேறு. திருமணம் பேச அவளே வீட்டுக்கு வந்தது போதாதா? பேசக்கூடாதெல்லாம் பேசி விட்டான். ஜாதி தான் பிரச்சனை என்றால் குடும்பத்தாரை அழைத்து பிரச்சினையை பெரிதாக்கி இருக்க மாட்டானா சிவபாலன்.

அவளும் கார்த்திகேயன் வேண்டாம் என்று வேறு திருமணம் செய்து கொண்டு சென்று விட்டாள். அத்தோடு கார்த்திகேயன் அவளை மறந்து விட்டு தன் பேச்சை கேட்பான் என்று நினைத்தால்? அவனோ அவளை மறக்காமல் மீண்டும் அவளையே திருமணம் செய்து கொண்டு தன்னுடைய வீட்டுக்கே அழைத்து வந்தால் கோபம் வருமா? வராதா? உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்த சிவபாலனுக்கு மகனுக்கு உடம்பு முடியாமல் இருப்பது எல்லாம் ஞாபகத்தில் இருக்கவில்லை. மனைவி கூறுகையில் தான், அதை மறுக்க மாத்திரை போட்டானா? அது? இது? என்று கேட்டிருந்தான்.

இதில் கார்த்திகேயன் நடிப்பது மட்டும் தெரிந்திருந்தால் சிவபாலன் ருத்ர தாண்டவமே ஆடியிருப்பான்.

சிவபாலன் போன்ற வீண் பிடிவாதம் பிடிப்பவருக்கு எல்லாம் கார்த்திகேயனின் பாணியில் தான் பதிலடி கொடுக்க வேண்டும் போலும்.

கயல்விழியை விட்டு கார்த்திகேயன் எங்கேயுமே செல்லவில்லை. அவள் சமையலறையில் பெண்களோடு என்ன பேசிக்கொண்டிருக்கிறாள் என்று கேட்டவாறு இவன் கணினியில் வேலை பார்ப்பான். அல்லது தொலைக்காட்சி பார்ப்பான். அல்லது பழைய செய்தி நாளிதழை மீண்டும் படிப்பான்.

எங்கே அவன் வெளியே சென்றால் வெளியே சென்றிருக்கும் அவன் தந்தை வீட்டுக்கு வந்து கயல்விழியை தேவையில்லாமல் பேசி விடுவாரோ என்று அச்சம் தான் அவனை அவளை விட்டு நகர விடாமல் செய்தது என்றால் பொய்யில்லை.

பார்த்திபன் கூட “வாடா கடைக்கு போயிட்டு வரலாம். அப்பா, ஸ்டேஷனரி கடைய நான் எப்படி வச்சிருக்கேன் என்று பார்க்க மாட்டியா?” என்று அழைத்தான்.

“போடா” ஒத்தை வார்த்தையில் அண்ணனை துரத்தி விட்டான் கார்த்திகேயன்.

 “சரியான பொண்டாட்டி தாசன்” என்று தம்பியை கேலி செய்தவாறு செல்வான் பார்த்திபன்.

ஊர் காலநிலையும் காதலிக்க ஏத்ததாக இருந்தது போலும், கயல்விழியே கார்த்திகேயனை நெருங்கினாள். மாலையானால் மாடியேறி சென்று படிகளை எட்டிப் பார்த்து மதியழகியை அல்லது கண்மணியை அழைத்து “அக்கா கார்த்தி என்னை தேடினா, நான் மொட்டை மாடில இருக்கிறேன் என்று சொல்லிடுங்க” என்பாள்.

கார்த்திகேயன் வாசலில் தான் அமர்ந்திருப்பான். இவள் சொல்வது அவனுக்கு கேட்காதா? அவனுக்கு கேட்க வேண்டும் என்று தான் இவள் கத்தி சொல்வாள். இவனும் சிரித்தவாறு மாடியேறி சென்று விடுவான். அது அவர்களுக்கான பொழுது. யாரும் இடையூறு செய்து விடக் கூடாது என்பதற்காக வேண்டி தான் சத்தமாக சொல்வாள்.

“ஏண்டி மானத்தை வாங்குற” என்று பொய்யாய் முறைப்பான் கார்த்திகேயன்.

இவன் வந்தவுடன் அவனை கட்டியணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு பின்பு தான் இவள் பேசவே ஆரம்பிப்பாள். அவள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள் என்று அவள் முகமே காட்டிக் கொடுக்கும். இதில் அவள் வார்த்தையாக வேறு அவனிடம் சொல்ல வேண்டுமா? சொல்வதை கேட்டுக் கொண்டிருப்பான். அவள் மனம் விட்டு பேசுவதை ரசித்தான். அவன் காதலி கயல்விழி பேசுவதை தான் நேரில் நின்று அவனால் பார்க்க முடியவில்லை. இன்று அவன் மனைவி காதலியாக அவனோடு பேசுவதை ரசிக்கலானான்.

குடும்பம் அவள் எதிர்பார்த்த குடும்பம் அவளுக்கு கிடைத்த மகிழ்ச்சி அவள் வார்த்தைகளில் கொட்டி கிடக்கும்.

“ஏண்டா உன் அண்ணி இப்படி இருக்காங்க? இப்படி இருந்தா எப்படிடா?” என்று சிரித்தாள்.

“யாரு? என்ன பண்ணாங்க” அவள் இடையோடு கைகோர்த்துவன் கதை கேட்கலானான்.

“வேற யாரு மதி அக்கா தான். உங்க அண்ணன் டெய்லி வேலைக்கு போய் வரும் போது மல்லி பூ வாங்கிட்டு வராரு. இவங்க என்னடான்னா அத சாமிக்கு சாத்திட்டு, பூக்காரம்மா கொண்டு வர்றத வாங்கி தலையில் வச்சிக்கிறாங்க. உங்க அண்ணனும் ஒன்னும் சொல்றது இல்ல” என்று சிரித்தாள்.

“டெய்லி வாங்கிட்டு வரான்னு உனக்கு எப்படி தெரியும்? அதுவும் அவங்க அவன் வாங்கிட்டு வரத வைக்காமல் பூக்கார அம்மா கிட்ட வாங்கி வைக்கிறது உனக்கு எப்படி தெரியும்? நான் தான் உனக்கு மல்லிப்பூவே வாங்கிட்டு வர்றதில்லையே” எந்தப் பெண்ணுக்குத்தான் பூ வைப்பது பிடிக்காது. தன்னை பூ வாங்கி வரச் சொல்லி சொல்லத்தான் அவர்களின் கதையை சொல்கிறார்களோ என்றுபோட்டு வாங்க பார்த்தான்.

“ஆமா நான் மல்லிப்பூ வெச்சிக்கிட்டு வேலைக்கு போனா பாக்குறவங்க சிரிப்பாங்க. குறுக்க பேசாதே கார்த்தி” என்று அவனைத் திட்ட, இவனோ அவள் கன்னத்தில் முத்தம் வைத்து சமாதானம் செய்தான்.

“கூசுது கார்த்தி. உன் மீசை குத்துது கார்த்தி” என்றவளோ அவனை விட்டு விலகத்தான் இல்லை.

அவள் அதை ரசிக்கிறாள் என்றதும் கார்த்திகேயன் அவளோடு தனிமையில் இருக்க விரும்பி சென்னைக்கு செல்லலாமா என்று கேட்பான். இன்னும் குழந்தைகளை தத்தெடுக்கவில்லையே என்று அவனை திட்டுவாள் இவள்.

அவளை சமாதானப்படுத்த அவள் பேசிக் கொண்டிருந்த கதையை எடுத்துக் கொடுப்பான். இன்றும் மல்லிப்பூ கதையை ஞாபகப்படுத்தினான்.

“உங்க அண்ணன் ரெண்டு நாளா மல்லிகைப்பூ வாங்கி வர்றது நானே என் கண்ணால பார்த்தேன். அவங்க என்னடான்னா கனகாம்பரம் வச்சிருக்காங்க. என்னக்காணு கேட்டேன் அப்போ மதி அக்காவே டெய்லி வாங்கிட்டு வர்றரு என்று சொன்னாங்க” என்று கயல்விழி சொல்ல

“பார்டா எங்க அண்ணனும் ரொமான்ஸ் பண்ணுறாரு”  என்று சிரித்தான்.

“நீதான் உன் அண்ணன மெச்சிக்கனும். வாய தொறந்து சொன்னாதான் என்ன? பூ உனக்கு தான் வாங்கிட்டு வந்தேன் என்று” கார்த்திகேயனை முறைத்தாள் கயல்விழி.

“அவன் சின்ன வயசுல இருந்தே அப்படித்தான் பேசமாட்டான். ஏன் கார்த்தி கண்மணியை கூட்டிகிட்டு வீட்டை விட்டு போறேன்னு தானே சொன்னான். வீட்டை விட்டும் கடையை விட்டும் போகாம இருக்கணும்னா கடை அவன் பேர்ல எழுதி கொடுக்கணும், குழந்தைகளை தத்தெடுக்க சம்மதிக்கனும்னு என்று ஒரு கண்டிஷன் போடவும் தானே அப்பாவும் அம்மா அடங்கினாங்க.

கடைய எனக்கு கொடுக்கறதால வீட்ட தினகரனுக்கு கொடுக்கலாம் என்று பார்த்தி சொன்னான். எனக்கும் அதுதான் சரின்னு பட்டது. அவன்கிட்ட பேசினா அவனால எந்த பிரச்சனையும் வர வேணாம் என்று சொல்லி மறுத்துட்டானே. அவன் அப்படித்தான்” என்றான் கார்த்திகேயன்.

“உன் அண்ணன் தான அப்படி உங்க அண்ணியாச்சும் கொஞ்சம் ரொமான்டிக்கா இருக்க வேணாம். சரியான மரமண்டை” என்று சிரித்தாள்.

“ஏன் நீ பாடம் எடுக்க போறியா? என்று இவன் கயல்விழியை வம்பு இழுக்க,

“ஏன் மாஸ்டர் எனக்கு இன்னும் கத்து கொடுக்கல” என்று இவள் கார்த்திகேயனை கிண்டல் செய்வாள்.

கத்துக் கொடுக்க அவன் காத்துக் கொண்டுதான் இருக்கின்றான். ஆனால் இதற்கு மேல் அவனால் அவளை நெருங்க அச்சமாக இருந்தது. தடையை உடைத்து அவளாகவே நெருங்கி வரவேண்டும் என்று காத்திருந்தான்.

அவளின் அச்சத்தை பற்றியோ, அவனின் காத்திருப்பை பற்றியோ, அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியோ அவன் அவளிடம் பேசுவதில்லை. அன்றைய பொழுதைப் பற்றியும், அன்றைய நடப்புகளை பற்றிய மட்டுமே அவளிடம் பேசி அவளை அனைத்தவாறு கன்னத்தில் முத்தமிட்டு விட்டு தூங்கிவிடுவான்.

நீ மலரா மலரா

மலரானால்

எந்தன் பேரே

பூவாசம்

நீ மழையா மழையா

மழையானால்

எந்தன் பேரே

மண்வாசம்

ஒரே சுவாசமே

ஜோடி ஜீவன் வாழுமே

உயிரே உயிரே

பிறந்தாயே

எனக்காய்

பிறந்தாயே

நீ கூட

எனக்கும்

ஒரு தாயே

வாழாமலே வாழ்ந்த

நாள் எந்த நாளோ

பார்க்காமல் நாம்

இருவரும் இருந்த நாள்

அட காதல்

என்பதென்ன இன்ப

சிகிச்சை

இது இரண்டு நபர்

ஒன்றாய் எழுதும்

பரீட்சை

தினம் உன் பேரயே

நான் கூறியே

உயிர் வாழ்கிறேன்

ம்ம் காற்றோடு

நான் ஈரமாய் சேர்கிறேன்

மரமாகி நான்

ஈரத்தை ஈர்க்கிறேன்

என் அந்தபுரம் எங்கும்

சாரல் அலைகள்

என் நந்தவனம் எல்லாம்

ஈர இலைகள்

ஒரு மழையோடு தான்

வெயில் சேர்ந்ததே

நம் காதலே

Advertisement