Advertisement

அத்தியாயம் 21

இனி இரவே

இல்லை கண்டேன் உன்

விழிகளில் கிழக்கு திசை

இனி பிரிவே இல்லை

அன்பே உன் உளறலும்

எனக்கு இசை

உன்னை காணும்

வரையில் எனது வாழ்க்கை

வெள்ளை காகிதம் கண்ணால்

நீயும் அதிலே எழுதி போனாய்

நல்ல ஓவியம் சிறு பார்வைவையில்

ஒரு வார்த்தையில் தோன்றுதே

நூறு கோடி வானவில்

எனதுயிரே எனதுயிரே

எனக்கெனவே நீ கிடைத்தாய்

எனதுறவே எனதுறவே

கடவுளை போல் நீ முளைத்தாய்

நெடுஞ்சாலையில் படும் பாதம்

போல் சேர்கிறேன் வாழும் காலமே

வரும் நாட்களே தரும் பூக்களே

நீளுமே காதல் காதல் வாசமே

கார்த்திகேயன் கயல்விழியோடு வீட்டை சென்றடையும் பொழுது மாலையாகியிருந்தது.

“ஏம்பா இம்புட்டு நேரம். மதியத்துக்கு வந்துடுவீங்கன்னு இல்ல பார்த்தி சொன்னான்” வளமைக்கு மாறாக வள்ளி வாசலுக்கு வந்து இருவரையும் வரவேற்றாள்.

உடம்பு முடியாத மகன் இவ்வளவு தூரம் பயணம் செய்து வர வேண்டுமா? அவசியமா? இப்பொழுதுதான் மருத்துவமனையில் இருந்து வீடு வந்திருக்கிறான். அவன் ஓய்வெடுக்கட்டும் என்று புலம்பியவள், இருவரும் பத்திரமாக வந்து சேரும் வரையில் வாசலை பார்த்து தவம் கிடந்தாள்.

“ரெண்டு பேரும் லவ் பண்ணப்போ ஊரு சுத்தின இடத்த எல்லாம் பார்க்கணும் என்று உன் மருமக சொன்னா, அதான் ஒரு எட்டு கூட்டிட்டு போய் பார்த்துட்டு வந்தோம்” கயல்விழியை கோர்த்து விடுவது போல் ஆரம்பித்தவன் அவள் முறைத்த முறைப்பில் சமாளித்தான்.

பத்து மணித்தியாலயங்கள் வண்டி ஓட்டுவது அவ்வளவு இலகுவான காரியமா? ஓட்டுநராவது வைத்துக் கொள்ளலாம் என்று கயல்விழி கூறியும் பிரைவசி கெட்டு விடும் என்று அவனே வண்டியை ஒட்டி வந்தது மட்டுமல்லாது, கண்ட கண்ட இடத்தில் நிறுத்தி போட்டோ எடுப்பதும், உண்பதும், குடிப்பதுமாக நேரத்தை கடத்தி விட்டு வந்தவன், அவளை பலவந்தமாக அழைத்துக் கொண்டு லைப்ரரிக்கும் சென்று விட்டு தான் வீட்டுக்கு வந்தான். வந்தபின் அவள் அழைத்து செல்லுமாறு கூறியது போல் பேசுபவனை அவள் முறைக்காமல் வேறு என்னதான் செய்வாள்.

கார்த்திகேயனின் பேச்சுக்கு கயல்விழியின் அமைதியை பார்த்து தாமதமானதற்கு காரணமே அவன்தான் என்று புரிந்து கொண்ட வள்ளி “சரி சரி போங்க. குளிச்சிட்டு வந்து சாப்பிடுங்க” என்றாள்.

கார்த்திகேயன்-கயல்விழி திருமணம் முடிந்து ஊருக்கு செல்லும் பொழுது வள்ளி புலம்பியவாறு சென்றதாகவும், ஊருக்கு சென்றும் அவள் புலம்பல்கள் குறையவில்லை என்றும், கயல்விழி கார்த்திகேயனை நன்றாக பார்த்துக் கொள்வாள் என்று அவளை அவளே சமாதானம் செய்து கொண்டதாகவும் பார்த்திபன் கார்த்திகேயனிடம் அலைபேசி வழியாக கூறி இருந்தான். அதனாலே என்னவோ அன்னையிடம் முன்பு போல் சகஜமாக உரையாடி இருந்தான் கார்த்திகேயன்.

சிவபாலன் வீட்டில் இல்லை. கார்த்திகேயன் கயல்விழியோடு வருவது அறிந்தே வெளியே சென்றிருந்தான்.

“டேய் கார்த்தி அப்பா வீட்டை விட்டு ஓடி போய்ட்டாருடா” வரும் வழியில் கார்த்திகேயன் ஏதாவது வாங்கி வர வேண்டுமா? என்று பார்த்திபனை அழைத்த போது கூறியிருந்தான்.

பார்த்திபனின் குரலில் பதட்டம் சிறிதுமில்லை. நக்கல் கொட்டிக் கிடக்க, “எங்க போய்ட போறாரு? நைட்டு வீட்டுக்குத்தானே வரணும்” என்றிருந்தான் இவன்.

வெளியே தண்ணி தொட்டியில் குளித்துவிட்டு வந்தவர்களுக்கு கண்மணியும் மதியழகியும் தேநீரோடு சிற்றுண்டி கொடுக்க சினேகமாக அதைப் பெற்றுக் கொண்டு உண்ணலானாள் கயல்விழி.

“தலை காயம் எப்படி இருக்கு கார்த்தி? இன்னுமே வலிக்குதா? அவன் தலையை தடவியவாறு அவன் அருகில் அமர்ந்து கொண்டாள் வள்ளி.

“ம்… இப்ப பரவாயில்ல. என்ன பாத்துக்க தான் கயல் இருக்காளே” அவளைப் பார்த்து முருவலிக்க அவளோ அவனை பார்த்து லேசாக முறைத்தாள்.

கார்த்திகேயனுக்கு ஒன்றென்றதும் வள்ளி கயல்விழியை ஏற்றுக்கொண்டு இணக்கமாக பேசிக்கொண்டு இருக்கிறாள். தன்னிடம் உண்மையை கூறியது போல் அன்னையிடமும் உண்மையை கூறினால், வள்ளி எவ்வாறெல்லாம் பேசுவாள் என்று நினைக்கையில் கோபம் வரவே அவனை முறைத்தாள்.

பொய்யில் எத்தனை நாள் தான் வாழ முடியும் என்றோ ஒருநாள் உண்மை வெளியே வந்து தானே தீரும் என்பதுதான் கயல்விழியின் எண்ணம். கார்த்திகேயன் பொய் சொன்னதும் அவளுக்காகத்தான் என்று கயல்விழி நன்றாகவே உணர்ந்திருந்தாள். ஆனால் உண்மையை அறிந்தால் எந்த மாதிரி விளைவுகள் வரும் என்று நினைக்கையில் கொஞ்சம் அச்சமாகவும் இருந்தது.

ஆனால் கார்திகேயனோ “நடந்த சம்பவத்தை பற்றி வெற்றிமாறனாக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். இப்பொழுது உனக்கும் தெரியும். அவன் வந்து சொல்ல மாட்டான். நான் சொல்ல மாட்டேன். நீ சொல்லுவியா?” அவளையே மடக்கினான்.

“நான் உளற மாட்டேன். நீ ஓவராக்ட் பண்ணி மாட்டிக்காம இருந்தா சரி” என்று அவன் மூக்கை உடைத்தாள்.  

“வக்கீலாம்மாக்கு பேச சொல்லியா கொடுக்கணும்?” என்று அவன் இவளை வம்பிழுத்தான்.

“கார்த்தி நீ மாடியில் இருக்கிற ரூம்ல தங்கிக்க. போ கயல கூட்டிட்டு மாடிக்கு போ” வள்ளி கூற

“எத்தனை வருஷத்துக்கு அப்புறம் எங்க அம்மா என் கூட அன்பா பேசுறாங்க. இப்ப அவங்க கூட நான் செல்லம் கொஞ்சாம என் பொண்டாட்டி கூட மாடிக்கு போனா, அவங்க மனசு கஷ்ட படாதா? என் பொண்டாட்டி வேற என்ன முறைப்பா. அண்ணி என் பொண்டாட்டிய கூட்டிட்டு மாடிக்கு போறீங்களா?” கண்மணியை பார்த்து கூறியவன் வள்ளியின் மடியில் படுத்துக்கொண்டான்.

மதியழகி அங்கில்லை. இருந்திருந்தால் அவளிடமும் சொல்லியிருப்பான். தினகரன் தான் இவர்களிடம் ஒட்ட மாட்டான் மதியழகி சொந்த அத்தை மகளல்லவா அவளோடு சிறுவயதிலிருந்தே கார்த்திகேயன் சகஜமாக பேசுவான்.

கண்மணிக்கு கயல்விழியிடம் பேச வேண்டியிருக்கவே புன்னகைத்தவாறு முன்னாடி நடந்தாள். கயல்விழிக்கும் கண்மணியிடம் பேச வேண்டியிருக்கவே அமைதியாக கூட நடந்தாள்.

அறையின் வாசலுக்கு வந்த உடனே “நீங்க குளிக்கும் போது உங்க பையெல்லாம் அறையில வச்சிட்டோம்” கண்மணி மெதுவாக பேச்சை ஆரம்பித்து, சட்டென்று கயல்விழியின் கையை பற்றிக் கொண்டவள் “ரொம்ப நன்றி” என்றாள்.

அவள் எதற்காக நன்றி சொல்கிறாள் என்று புரியவே “நன்றி எல்லாம் வேணாம் அக்கா. என்ன உங்க தங்கச்சியா ஏத்துக்கிட்டா அதுவே போதும்” என்று புன்னகைத்தாள் கயல்விழி. கார்த்திகேயனின் குடும்பத்தாரோடு ஒன்றாக, ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது தானே அவளது நீண்ட நாள் ஆசை.

தலையசைத்து மறுத்தவள் “இல்ல அன்னைக்கு மட்டும் நீங்க என் புருஷனுக்கு யோசனை சொல்லலனா நான் மட்டுமல்ல, அவரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பாரு. இன்னைக்கு குழந்தைகளை தத்தெடுக்க முடிவு பண்ணதுல நாங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம். அதுக்கு கார்த்தி தான் காரணம் அவனுக்கும் நன்றி சொல்லணும்” சந்தோஷமாக புன்னகைத்தாள் கண்மணி.

“உங்க புருஷன் உங்க மேல வெச்ச பாசம் தான் நான் யோசனை சொல்ல காரணமே. அவர் மட்டும் வேற மாதிரி முடிவு எடுத்து இருந்தா என்னால ஒண்ணுமே பண்ணி இருக்க முடியாது. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா அதுவே போதும்” என்ற கயல்விழிக்கு பார்த்திபன் கண்மணி மீது வைத்திருக்கும் காதலால் தான் அவளை விட்டு விட முடியாது என்று கூறினான் என்பதும், கார்த்திகேயன் தன்மீது வைத்திருக்கும் காதலால் தான் தன்னை விட்டு விட முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறான் என்பதும் நன்றாகவே புரிந்தது. அது காதலால் மட்டுமல்ல அவர்களின் குடும்ப இரத்தத்தில் வரும் ஒருவித பிடிவாத குணம் போலும். அது அவர்களின் பெற்றோரிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

கணவனின் பாசத்தை பற்றி பேசுகையில் கண்மணியின் முகத்தில் வெக்க சாயல் மெதுவாக படர்ந்து மறைந்தது. “ஆமா இல்லன்னா என்ன போல மலடிய கூடவே வெச்சிக்க அவருக்கென்ன தலையெழுத்தா?” என்ற கண்மணி மேற்கொண்டு பேசும் முன் “தட்” என்று ஏதோ விழுந்த சத்தம் கேட்டது.

மொட்டை மாடியில் காய போட்டிருந்த வடகத்தை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்த மதியழகி இவர்களின் பேச்சைக் கேட்டு திடுக்கிட்டு கையிலிருந்ததை கீழே போட்டிருந்தாள்.

தாங்கள் பேசியதை அவள் கேட்டுவிட்டாள் என்றதும் கண்மணி பதறினாள். வியர்த்து வழிந்தாள். உடல் நடுங்கினாள். மயக்கமே வரும் போல் இருக்க சுவற்றைப் பிடித்துக் கொண்டாள். ஆனால் கயல்விழி எந்த பதட்டமும் இல்லாமல் மதியழகியின் முன்னால் வந்து நின்றாள்.

“என்ன நாங்க பேசின எல்லாத்தையுமே கேட்டுட்டீங்களா? என்ன பண்ண போறீங்க? நேரா போய் அத்தை கிட்ட சொல்ல போறீங்களா? இல்ல மாமா வந்தா அவர்கிட்ட சொல்ல போறீங்களா?” மிரட்டும் தொனியில் கேட்டாள்.

கயல்விழி என்ற வக்கீலுக்கே உரித்தான மிடுக்கு அவளின் பேச்சிலும் தோரணையிலும் வெளிப்பட்டிருந்தது. தன்னுடைய பிரச்சினையிலிருந்து வெளிவர முடியாமல் துவண்டு போய் இருப்பவளுக்கு கார்த்திகேயனின் உதவி தேவை என்பது உண்மைதான். ஆனால் வக்கீல் கயல்விழிக்கு அடுத்தவரின் பிரச்சினை என்றால் தைரியமும், வாள் வீச்சு போன்ற பேச்சும் தானாகவே வந்து விடுகிறது போலும்.

படிகளை எட்டி யாராவது வருகிறார்களா என்று பார்த்த மதியழகியோ கண்மணியிடம் ஓடி வந்திருந்தாள். “எவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சிருக்க. இந்த விஷயம் எல்லாம் இப்படி வாசல்ல இருந்து கிட்டா பேசுவ? முதல்ல உள்ள வா” என்று கண்மணியை இழுத்துச் சென்று கயல்விழி-கார்த்திகேயனின் அறையில் உள்ள கட்டிலில் அமர்த்தியவள் கதவை பூட்ட கயல்விழியும் அவர்களின் பின்னால் வந்திருந்தாள். 

கயல்விழியின் கையை பற்றி கொண்ட மதியழகியோ “ரொம்ப நன்றி இந்த வீட்டில இவள் தினம் தினம் கேட்காத பேச்சே இல்ல. தற்கொலை பண்ணிக்கொள்வாளோ என்ற பயம் எனக்கு இருந்தது. அத்தையை மீறி என்னால் எதுவுமே பேச முடியாது. இவ வாழ்க்கைக்கு ஒரு விடியலை கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. வக்கீல் அம்மா” என்று கண்ணீர் வடித்தாள்.

ஒரே வீட்டில் இருந்தும் கண்மணி-பார்த்திபன் விஷயத்தில் திவாகரோ மதியழகியோ தலையிடுவதில்லை. அவர்கள் விஷயத்தில் இவர்களும் தலையிடுவதில்லை. எங்கே அத்தையிடம் போய் சொல்லி விடுவாளோ என்று அச்சத்தில் கண்மணி நடுங்கி கொண்டிருக்க, மதியழகியின் இந்த பேச்சு அவளுக்கு ஆச்சரியத்தை கொடுக்க, மதியழகியை ஏறிட்டாள் கண்மணி.

“எனக்கு இப்படி ஒரு பிரச்சினை வந்திருந்தா, அத்த பேச்சைக் கேட்டு என் புருஷன் என்னைக்கோ என்ன அத்து விட்டு வேற கல்யாணம் பண்ணி புள்ளயும் பெத்து இருப்பாரு. ஆனா பார்தியும், கார்த்தியும் அப்படி இல்லை. பார்தி வீட்ட சமாளிச்சு கண்மணிய கைவிடாம பார்த்துகிட்டான். கார்த்தி நீங்க தான் வேணும் என்று கட்டிக்கிட்டான்” ஏதோ ஒரு ஆதங்கத்தில் பேசிக் கொண்டிருந்தாள் மதியழகி.

அவள் குரல் இருந்த விரக்தியில் “அப்போ உங்களுக்கும் என் உதவி தேவையா?” என்று சட்டென்று கேட்டிருந்தாள் கயல்விழி. 

உன்னால் எனக்கு என்ன உதவி செய்திட முடியும் என்பது போல் கயல்விழியை பார்த்தவள், கண்மணியிடம் திரும்பி “திரும்பத் திரும்ப இதைப் பத்தி எங்கேயும், யார் கிட்டயும் பேசிகிட்டு இருக்காதே கண்மணி” என்றாள்.

கண்மணி மண்டையை நன்றாக ஆட்டுவித்தாலே ஒழிய எதுவும் பேசவில்லை. இத்தனை வருடங்களாக ஒரே சமயக்கட்டில் ஒன்றாக சமைத்தாலும் இதுவரை சிரித்துப் பேசாதவளிடம் என்னவென்று சொல்ல?

“நானும் உங்களுக்கு தங்கச்சி தான் அக்கா. அவளை மட்டும் அதட்டுறீங்க. என்னை மட்டும் வக்கீல் அம்மா என்று முறைக்கிறீங்க. என் மேல் அப்படி என்ன உங்களுக்கு கோபம்?” கையை கட்டிக்கொண்டு மதியழகியை வம்புக்கு இழுத்தாள் கயல்விழி.

முதல் முறை கயல்விழி வீட்டுக்கு வந்த பொழுது “என்ன தைரியம் இந்த பொண்ணுக்கு? இந்தப் பொண்ண மட்டும் கார்த்தி கட்டிக்கிட்டா, அத்த குடுமி அவ கையில தான்” என்று எண்ணிக் கொண்டாள் மதியழகி. ஆனால் அது அன்று நடக்கவில்லை.

பார்த்திபன்-கண்மணியின் பிரச்சினையை பேச கயல்விழி வீட்டுக்கு வந்திருந்த பொழுது அமர்ந்திருந்த விதமும், பேசிய விதமும் அடிக்கடி கண்களுக்குள் வந்து நிற்க, “அப்பப்பா… வக்கீல் அம்மா வக்கீல் அம்மா தான். இந்த குடும்பத்துல மட்டும் வாக்கப்பட்டு இருந்தா, இந்த குடும்பத்தையே ஆட்டி வெச்சிருப்பாளே.  அதை கண்குளிர பார்க்கும் கொடுப்பினை இல்லாம போச்சே” என்று கவலைப்பட்டாள்.

கயல்விழி வம்பிழுப்பது புரிந்தது. அவளுக்குள் இப்படி ஒரு முகம் இருக்கிறதா? அதனால் தான் கார்த்தி இவளை காதலித்தானா? என்று எண்ணினாலும் இன்று வந்தவளிடம் சட்டென்று உரிமையாக உறவு கொண்டாடுவது எப்படி என்று புரியாமல் முழித்தாள் மதியழகி.

மதியழகியின் இணக்கமான பேச்சில் கண்மணியும் சகஜ நிலையை அடைந்திருந்தாள்.

அறை கதவை திறந்து விட்ட கயல்விழி “அத்தை நம்மள தேடினா பிரச்சினையாகும் அக்காஸ். போங்க கீழ போங்க. போய் வேலை இருந்தா பாருங்க. என் புருஷனை கொஞ்சம் வர சொல்றீங்களா? வந்த உடனே அத்தை கிட்ட செல்லம் கொஞ்சுறாரு. அவரை கவனிக்க வேண்டியது விதத்துல கவனிக்கணும். இல்லன்னா ஓவரா பண்ணுவாரு” என்று சிரித்தாள்.

அவள் பேசிய விதத்தில் அவர்களுக்கும் சிரிப்பு வர சிரித்தவாறு அறையை விட்டு வெளியேறினர்.

அவர்கள் வெளியே வரும் பொழுது கார்த்திகேயன் கையை கட்டிக் கொண்டு பார்த்திருக்க, “ஐயையோ உங்கம்மாவ நாங்க ஒன்னும் சொல்லல” என்பது போல் அவனை பார்த்து சிரித்த மதியழகியும், கண்மணியும் கீழே இறங்கி சென்றனர்.

அவர்கள் பேசியதை அவன் கேட்டு விட்டானா என்பது தெரியாது. ஆனால் தான் பேசியது அவன் கேட்டு விட்டான் என்பது நன்கு புரியவே “என்ன” என்பது போல் அவனை பார்த்தவள் அறைக்குள் நுழைந்தாள்.

அவள் பின்னால் வந்த கார்த்திகேயன் அவளது தோளை தொட்டு திருப்பி “நான் இல்லாத இடத்துல என்ன பத்தி ரொம்ப உயர்வா பேசுற போல” என்று சிரித்தான்.

“என்ன அம்மா கிட்ட செல்லம் கொஞ்சி முடிச்சிட்டீங்களா? இவ்வளவு சீக்கிரமா வந்துட்டீங்க? அம்மா மடியில் படுத்தா பொண்டாட்டிய மறந்துடுவீங்கன்னு நினைச்சேன்” அவனை கிண்டல் செய்யலானாள் கயல்விழி.

வழி நெடுக பழைய ஞாபகங்கள், பசுமையான நினைவுகள் என்று அவனோடு பயணித்த இன்றைய நாள் நாளேட்டில் என்றென்றும் மறக்க முடியாத நாளாக மாறிப் போனதில், அவளுக்குள் இருந்த ஒரு தடை உடைந்து போனது. அது அவனோடு பேச தடையாக இருக்கும் இறுக்கம்.  அந்த இறுக்கம் தளர்ந்ததில் அவன் புறம் ஒரு அடி எடுத்து வைத்திருந்தாள்.  

“எங்க வக்கீலம்மா… பொறாம புடிச்சவனுங்க ரெண்டு பேர் வீட்ல இருக்கும் போது எப்படி செல்லம் கொஞ்சுறது? ஒருத்தன் வார்த்தையாலே வதைக்கிறான். ஒருத்தன் முறைச்சு பார்த்துகிட்டே திரியிறான்” தான் எல்லாவற்றையும் கேட்டு விட்டதை சொல்லாமல் சொன்னவன் அங்கலாய்த்தான்.

ஆம். மேலே பெண்கள் பேசிக் கொண்டிருக்கையில் கீழே அதுதான் நடந்தது. கார்த்திகேயன் வள்ளியின் மடியில் படுத்திருப்பதை பார்த்து பார்த்திபன் கிண்டல் செய்யலானான்.  அதை பார்த்தவாறு உள்ளே நுழைந்த தினகரன் கார்த்திகேயனை முறைத்தவாறு அறைக்குள் நுழைந்தான். அதைத்தான் கார்த்திகேயன் கயல்விழியிடம் இவ்வாறு கூறிக் கொண்டிருந்தான்.

“தேங்க்ஸ் கார்த்தி. எல்லாத்துக்கும்” அவன் பேசிக் கொண்டிருக்க இவளோ அவன் கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்து கன்னத்தில் முத்தமிடலானாள்.

அவளிடம் இதை எதிர்பார்க்காதவனோ புருவங்களை உயர்த்தியவாறு பேச்சை நிறுத்தி, அவள் இடையோடு கைகளை கோர்த்துக் கொண்டவன், அவள் கொடுக்கும் முத்தத்தை ஆழ்ந்து அனுபவிக்கலானான்.

கடவுளின் கனவில்

இருவரும் இருப்போமே

ஓஹோ

கவிதையின் வடிவில்

வாழ்ந்திட நினைப்போமே

ஓஹோ

இருவரும் நடந்தால்

ஒரு நிழல் பார்ப்போமே

ஓஹோ

ஒரு நிழல் அதிலே

இருவரும் தெரிவோமே

ஓஹோ

சிலநேரம் சிரிக்கிறேன்

சில நேரம் அழுகிறேன்

உன்னாலே

ஒருமுறை நினைத்தேன்

உயிர்வரை இனித்தாயே

ஓஹோ

மறுமுறை நினைத்தேன்

மனதினை வதைத்தாயே

ஓஹோ

சிறு துளி விழுந்து

நிறைகுடம் ஆனாயே

ஓஹோ

அரை கணம் பிரிவில்

நரை விழ செய்தாயே

ஓஹோ

நீ இல்லா நொடி

முதல் உயிர் இல்லா

ஜடத்தைப்போல் ஆவேனே

அழகாய் பூக்குதே

சுகமாய் தாக்குதே

அடடா

காதலில் சொல்லாமல்

கொள்ளாமல் உள்ளங்கள்

பந்தாடுதே

ஆசையாய் பேசிட

வார்த்தை மோதும்

அருகிலே பார்த்ததும்

மௌனம் பேசும்

காதலன் கைச்சிறை

காணும் நேரம்

மீண்டும் ஓர் கருவறை

கண்டதாலே கண்ணில் ஈரம்

இரவு உணவுக்கு சிவபாலன் வீடு வந்திருந்தான். மதியழகியும், கண்மணியும் இரவு உணவுகளை மேசையில் எடுத்து வைத்து விட்டு ஒதுங்கிக் கொண்டிருக்க, வள்ளி கணவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள். தினகரன் வந்து அமரவே, மதியழகி வந்து பரிமாறலானாள்.

இது வளமையாக இந்த வீட்டில் நடப்பது தான். பார்த்திபன் இவர்களோடு அமர்ந்து சாப்பிட மாட்டான். காரணம் கண்மணி. அவன் கண்மணியோடு அமர்ந்து தான் சாப்பிடுவான். இருந்த பிரச்சினையில் கண்மணி ஒழுங்காக சாப்பிட மாட்டாள் என்று பார்த்திபன் அவளோடு அமர்ந்து சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொண்டவன் அதை கடைபிடித்து இன்று வரை அதை அமுல்படுத்துகிறான்.

சாப்பிட கயல்விழியை அழைத்துக் கொண்டு கீழே வந்த கார்த்திகேயன் பார்த்திபன் வாசலில் அமர்ந்திருப்பதை பார்த்து “ஏண்டா சாப்பிடாம இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க” என்று கேட்டான்.

“அப்பாவும் அண்ணாவும் சாப்பிட்டுகிட்டு இருக்காங்க அவங்க சாப்பிட்டு போன பிறகு நாம போய் சாப்பிடலாம்” மிகவும் சாதாரணமான பதிலை தான் பார்த்திபன் கூறினான்.

“ஏண்டா அவங்க என்ன ப்ரை மினிஸ்டரா? சீப் மினிஸ்டரா? இந்த பம்மு பம்முற” கார்த்திகேயன் என்னமோ பார்த்திபனை வம்பிழுக்கத்தான் அப்படி பேசினான். 

கார்த்திகேயன் கீழே வந்தது, அவன் ஆரம்பத்திலிருந்து பேசியது எல்லாம் சிவபாலனின் காதில் விழுந்திருக்க தட்டு பறந்தது. பார்த்திபன் கார்த்திகேயனும் பேசிக் கொண்டிருக்க கயல்விழி சமயக்கட்டுக்குள் நுழைந்ததால் அந்த காட்சியை அவள் கண் கொண்டு பார்த்து விட்டாள்.

சட்டென்று நடந்த நிகழ்வால் அதிர்ச்சிக்குள்ளானவள், சுதாரித்துக் கொள்ளும் பொழுதே “என்னாச்சு” என்றவாறு கார்த்திகேயன் ஓடி வந்திருந்தான்.

“கண்டவளையெல்லாம் வீட்டுக்குள்ள விடாதே என்று சொன்னால் கேட்கிறாயா? ஒரு வாய் ஒழுங்கா சாப்பிட முடியுதா? கண்டவளுங்க மூஞ்சில எல்லாம் முழிக்க வேண்டி இருக்கு. இவளெல்லாம் வீட்டுக்கு வரணும் என்று யார் அழுதா?” கார்த்திகேயனை பற்றி ஒரு வார்த்தையாவது பேசவில்லை. கயல்விழியை பற்றிதான் முழுக்க முழுக்க பேசினான். அவளைப் பார்த்து பேசாமல் வள்ளியை பார்த்தே பேசினான் சிவபாலன்.

“கண்டவளா? யார் கண்டவ? ஓ… நான் கண்டெடுத்தவன்னு சொல்ல வரீங்களா?” கோபத்தில் கொந்தளித்தான் கார்த்திகேயன்.

“அப்பா கார்த்தி நீ அமைதியா இருப்பா… கோபப்படாத. கோவப்படாத” அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பதறினாள் வள்ளி.

“அத்த… மாமாக்கு வேறு தட்டு வச்சு சாப்பாடு போடுங்க. சாப்பிட்டது போதும் என்றா மாத்திரை கொடுத்து தூங்க வைங்க. பிபி எகிறிட போகுது” அமைதியாக கூறிய கயல்விழி தான் கண்டவளும் இல்லை. வந்தவளும் இல்லை அவர்களுக்கு மருமகள் என்று சொல்லாமல் சொன்னாள்.

“சபாஷ் அப்படி போடு வக்கீலம்மா வக்கீலம்மா தான்” அவளைப் பார்த்து புன்னகைத்தாள் மதியழகி.

“என்னடா உன் பொண்டாட்டிய பேச வச்சு வேடிக்கை பாக்குறியா?” கார்த்திகேயன் மேல் பாய்ந்தான் சிவபாலன்.

ஊருக்கு வந்தால் வீட்டார் பேசும் பேச்சில் மீண்டும் தன் கூட்டுக்குள் கயல்விழி அடைந்து கொள்வாளோ என்று அச்சத்தோடு வந்தவனுக்கு, அவள் இங்கே வந்ததிலிருந்து மாறிப்போன மாயம் என்னவென்று அறியாமல் அவளை காதலாக பார்த்துக் கொண்டிருக்க பேச்சே வரவில்லை. இதில் தந்தை கேட்டது மட்டும் அவன் காதில் விழுந்திருக்குமா என்ன?

அவன் அருகில் இருப்பதால்தான் அவளுக்கு இத்தனை தைரியம் என்று அவனுக்குத்தான் புரியவில்லை.

“ஏங்க உங்களுக்கு ஒரு வாட்டி சொன்னா புரியாதா என்ன? அவனே உடம்பு முடியாம இருக்கான். அவன் மேல எகிறிக்கிட்டு போறீங்க. போங்க போங்க முதல்ல போய் மாத்திரை போட்டுட்டு தூங்குங்க” சிவபாலனை விரட்டினாள் வள்ளி. இதற்கு மேல் பேசினால் மரியாதை இந்த வீட்டில் கிடைக்காது என்று புரிய மேசையிலிருந்த இன்னும் சில தட்டுகளை சிதற விட்ட பின் அறைக்கு சென்று விட்டான்.  

“அவருக்கு கெடுக்குறாரு. நீங்க வந்து சாப்பிடுங்க” என்றாள் வள்ளி.

“என்ன பாக்குறீங்க பசிக்கலையா?” கயல்விழி கார்த்திகேயனை ஏறிட

“ம்…ம்… பசிக்குது” அவளை முழுங்கும் பார்வை பார்க்கலான் இவன்.

Advertisement