Advertisement

அத்தியாயம் 2

“கார்த்திகேயா உனக்கு அறிவே இல்லடா. இப்போ எதுக்கு நீ அவள உன் கூட வச்சிக்க பாக்குற? நீ வேணாம் என்று போனவ அவ புருஷன் கூட கொஞ்சிக் குலாவுறத உன் கண்ணால வேற பார்க்கணுமா? இது தேவையா உனக்கு?” தன்னையே நொந்தவாறு சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார்த்திகேயனின் நினைவுகள் கயல்விழியை சந்தித்த நாட்களை நோக்கி பயணித்தது.

கண்கள் ரெண்டும் நீரிலே

மீனை போல வாழுதே

கடவுளும் பெண் இதயமும்

இருக்குதா அட இல்லையா

ஓஹோ நானும்

இங்கே வலியிலே நீயும்

அங்கோ சிரிப்பிலே

காற்றில் எங்கும் தேடினேன்

பேசி போன வார்த்தையை

இது நியாயமா

மனம் தாங்குமா என்

ஆசைகள் அது பாவமா

கனவே கனவே……..

கரங்கள் ரணமாய்…………

நினைவே நினைவே

அறைவதேனோ எனது

உலகம் உடைவதேனோ

கார்த்திகேயனின் பூர்வீகம் கோயம்புத்தூர். அன்னை தெரேசா மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் தான் கார்த்திகேயனின் தந்தை ஸ்டேஷனரி கடை வைத்திருந்தார்.

கல்லூரியில் மூன்றாமாண்டில் படித்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் விடுமுறை நாட்களில் தந்தைக்கு உதவியாக கடையில் வந்து நிற்பான்.

“அம்மா இவன் அப்பாக்கு ஹெல்ப் பண்ண போறான்னு பெருமையா சொல்லி என்ன மட்டம் தட்டுறியா? இவன் ஸ்கூல் பொண்ணுங்கள சைட் அடிக்கத்தான் கடைக்கு போறான்” கார்த்திகேயனின் சின்ன அண்ணன் பார்த்தீபன் தான் தந்தைக்கு உதவி செய்வதில்லையென்று அன்னை பொருமுவதை கேட்க பொறுக்க முடியாமல் காய்ந்தான்.

“என் பையன பத்தியா தப்பா பேசுற?” கனகவள்ளி பார்த்தீபனின் காதை திருகினாள்.

கனகவள்ளி-சிவபாலன் தம்பதியினருக்கு மூன்று புதல்வர்கள். மூத்தவன் தினகரன் ஆசிரியராக பணிபுரிகிறான். தினகரனுக்கு சொந்தத்தில் திருமணமாகி வீட்டில் தான் இருக்கின்றான். இரண்டாவது பார்த்திபன் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கின்றான்.

“டேய் இன்னக்கி உன் பொறந்தநாள் டா கோவிலுக்கு போயிட்டு போடா…”

எதையுமே காதில் வாங்காது கடைக்கு கிளம்பி சென்றான் கார்த்திகேயன்.

கார்த்திகேயன் பாடசாலை செல்லும் நாட்களில் தந்தையின் கடைக்கு வந்தது என்னவோ வித, விதமான ஸ்டிக்கர்ஸை சேகரிக்காவென்றால் இப்பொழுது வருவதும் தனக்கு பிடித்தமான நடிகர் கமலஹாசன் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் புகைப்படங்களை சேகரிக்கத்தான்.

“அண்ணா பேனா கொடுங்க”

“அண்ணா புக்கு கொடுங்க”

“அது கொடுங்க இது கொடுங்க” என்று யார் வந்து எதை கேட்டாலும் எடுத்துக் கொடுப்பவன் அவர்களின் முகத்தை கூட ஏறெடுத்தும் பாராமல் காசை வாங்கி கல்லாவில் வைப்பான்.

“டேய் கவனத்தை கடையில வைடா. காச கல்லால வைடா. எங்கடா உன் கவனத்தை வச்சிருக்க? இப்படி போனா நீ வியாபாரத்த கத்துக்க முடியுமா? என்னடா பண்ணுற? உருப்புடுற வழிய பாருடா”

தந்தை திட்டுவதெல்லாம் அவன் கண்டுகொள்ள மாட்டான். சிவபாலனும் திட்டி திட்டி பார்த்து விட்டு அவன் வேலையை ஒழுங்காக பார்ப்பதை புரிந்து கொண்டபின் திட்டுவதை விட்டு விட்டார்.

கடைக்கு வரும் மாணவிகளை கவனிக்காமல் இவன் பாட்டுக்கு சச்சின் தெண்டுல்காரை பற்றி வந்த நாளிதழ் செய்தியை படித்துக் கொண்டிருந்தான்.

“க்உம்…க்உம்” தொண்டையை கனைக்கும் சத்தம் கேட்டு தலையை உயர்த்திப் பார்த்த கார்த்திகேயன் சீருடையில் ஒருத்தி இருக்கவே அவள் முகத்தை கூட ஒழுங்காக பார்க்காமல் பொருள் வாங்க வந்திருப்பாளென்று என்ன வேண்டும் என்று கேட்டவாறே தான் வாசித்துக் கொண்டிருந்த நாளிதழின் மேல் பார்வையை செலுத்தினான்.

“விஷ யு எ ஹாப்பி பர்த்டே”

“யார் இவள் தனக்கு வாழ்த்து சொல்பவள்” வெள்ளை சீருடையில் அவன் கண்களுக்கு அவள் தேவதையாக தெரிந்தாலோ என்னவோ கண் சிமிட்டாமல் பார்த்திருந்தான்.

“க்உம்…க்உம்” அவள் மீண்டும் தொண்டையை கனைக்கவே சுதாரித்தவன், அவளை ஏறிட மீண்டும் அவளோ “விஷ யு எ ஹாப்பி பர்த்டே” என்றாள்.

அவளது வாழ்த்து அவனுக்கு வியப்பாக இருக்க “யார் நீ…” என்று கேட்டான்.

“என் பேர் கயல்விழி. இங்கதான் ப்ளஸ் டூ படிக்கிறேன். ரெண்டு வருஷமா உன்ன பாத்துகிட்டு இருக்கேன். நானும் சச்சின் பேன் தான். ஆனா எனக்கு சூபஸ்டார் தான் பிடிக்கும். அதனால உனக்காக இத ரெடி பண்ணேன். பர்த்டே கிப்ட்டா” என்றவாறே பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தாள். .

அதை வாங்கிப் பார்த்தவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. நடிகர் கமலஹாசனின் புகைப்படங்களும், அவரை பற்றி தகவல்களும், சினிமாவில் அவர் படைத்த சாதனைகள், முயற்சிகள் என்று செய்தித்தாள்களில் வந்த அனைத்து செய்திகளையும் சேகரித்து கத்தரித்து ஒட்டியிருந்தாள்.

இரண்டு வருடங்களாக தன்னை ஒருத்தி கவனித்துக் கொண்டிருக்கின்றாள் என்பதே அதிர்ச்சி. இவள் தனக்காக இதை செய்தாளா? என்ற பேரதிர்ச்சியில் அவள் பெயரை மீண்டும் ஒருமுறை கூறிப் பார்த்துக் கொண்டான். அவள் முகமும் தான் கல்லில் செதுக்கிய சிலையாய் அவன் நெஞ்சில் பதிந்து போனது. பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் அவளது முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தான் கார்த்திகேயன்

பார்த்த முதல்

நாளே உன்னைப் பார்த்த

முதல் நாளே காட்சிப் பிழை

போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை

போலே ஓர் அலையாய் வந்து

எனை அடித்தாய் கடலாய் மாறி

பின் எனை இழுத்தாய் என் பதாகை

தாங்கிய உன்முகம் உன்முகம்

என்றும் மறையாதே….

கார்த்திகேயன் கனவில் மிதந்துக் கொண்டிருக்க கயல்விழி கிளம்பியிருந்தாள்.

“கயல்… விழி… ஏய் நில்லு நில்லு” கடையை விட்டு வெளியே வந்தவன் அவளை பின் தொடரவும் முடியாமல், கடையை விட்டு செல்லவும் முடியாமல் அங்கேயே நின்றான்.

கயல்விழி சென்ற திசையையே பார்த்தவாறு யோசித்துக் கொண்டிருந்த கார்த்திகேயனுக்கு அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது.

“இரண்டு வருடங்களாக இவள் என்னை கவனித்துக் கொண்டிருக்கிறாளே ஏன் வந்து என்னிடம் பேசவில்லை. இத்தனை நாட்கள் ஏன் காத்திருந்தாள். போன வருடம் கூட என் பிறந்தநாள் வந்ததே அப்பொழுது ஏன் வந்து வாழ்த்து சொல்லவில்லை.

நாளை கடைக்கு வருவாளோ? வந்தால் அவளிடமே கேட்டறிந்துக் கொள்ளலாம். வராவிட்டால்? வராவிட்டால் என்ன செய்வது?” இரவு தூக்கத்தை தொலைத்தவாறு புலம்பினான் கார்த்திகேயன்.

அடுத்து வந்த நாட்கள் கார்த்திகேயன் கடையில் காத்திருந்தது மாத்திரமல்லாது பாடசாலையின் நுழைவாயில், பஸ் தரிப்பிடம் என்று கயல்விழிக்காக காத்திருந்தான். ஆனால் அவளை தான் பார்க்க முடியவில்லை.

பொதுத் தேர்வு நடைபெறுவதால் தான் கயல்விழி கடைக்கும் வரவில்லை. தேர்வு நடைபெறாத நாட்களில் பாடசாலைக்கு வராததால் கார்த்திகேயனால் அவளை சந்திக்க முடியவில்லை.

அவளுக்காக காத்திருந்து காத்திருந்து கார்த்திகேயன் கல்லூரிக்கு சென்று விட்டான். அவள் ஞாபகங்கள் மட்டும் அவனை விட்டு நீங்கவே இல்லை.

கல்லூரி விடுமுறை நாட்களில் கார்த்திகேயன் கயல்விழியை காண பாடசாலைக்கு வந்தால் தேர்வு முடிவடைந்ததால் கயல்விழியோ பாடசாலைக்கு வரவில்லை. அவளை பார்க்க முடியாமல் இவன் தவிக்க அவள் எங்கு சென்றாள் என்று இவனுக்கு தெரியவில்லை. நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்க அவள் ஞாபகங்களோடு இவனும் நாட்களை கடத்தினான். 

கார்த்திகேயன் கல்லூரியில் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்தான். அப்பொழுது கல்லூரிக்கு முதலாமாண்டு மாணவர்கள் வந்து சேர்ந்தனர். சீனியர்கள் அவர்களை ராக்கிங் செய்ய கார்த்திகேயனும் அவர்களோடு இணைந்து கொண்டான்.  

“ஓ நீ இங்க இந்த வேலை தான் பாத்துட்டு இருக்கியா? அப்போ படிக்க வரல” சிரிப்பு சத்தத்தை கேட்டு திரும்பி பார்த்தான் கார்த்திகேயன். அங்கு கயல்விழி அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

“இவளா? இவள் எங்க இங்க? எக்ஸாம் முடிஞ்சிருச்சு. அதான் ரிசல்ட் வந்துருச்சு கல்லூரி சேர்ந்திருக்காளா? அதுவும் என் கல்லூரிக்கு. நல்லதா போச்சு” சந்தோசமா புன்னகைத்தான்.

கார்த்திகேயன் எண்ணியது போல் அவனால் கயல்விழியோடு பேசி பழக முடியவில்லை. கல்லூரி முடிந்த பின்பு இவன் கிழக்கே சென்றால் அவளோ மேற்கே சென்றாள். அது கூட பிரச்சினை இல்லை. பஸ்ஸில் அவளை பின்தொடர்வதற்கு யார் தடை சொல்வது? ஆனால் அவளோ செல்வது மகளிர் பஸ்ஸில். பார்வையாலேயே அவளை தொடர்ந்து கொண்டிருந்தவன் இறுதியாண்டில் படித்துக் கொண்டிருப்பதால் எட்டனின்றே அவளை காதலித்துக் கொண்டிருந்தான். கயல்விழி அவனைப் பார்த்து புன்னகைப்பதோடு சரி இவனிடம் வந்து பேச முயற்சிக்கவே இல்லை.

வெட்கப்படுகிறாளா? அச்சப்படுகிறாளா? என்று புரியாமல் கார்த்திகேயனும் அவளைப் பார்த்து புன்னகைப்பான்.

உண்மையில் அவனுக்குத்தான் அவளிடம் பேச அச்சம். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை எல்லாம் பெண்களுக்கு மட்டுமே உரித்தான குணாதிசயங்களா? காதலிக்கும் பெண்ணிடம் காதலை கூறுவது என்றால் ஆண்களுக்கும் அச்சமும், கூச்சமும் வந்து ஒட்டிக் கொள்ளும் குணங்களே. ஏதோ அவனுக்கு பிடித்த நடிகரின் புகைப்படங்களையும் தகவல்களையும் கொண்டு வந்து கொடுத்தாள். அதற்காக அவள் அவனை காதலிக்கிறாள் என்று கூறிட முடியுமா? அதை சாக்காக வைத்துக் கொண்டு அவளிடம் பேசிட முடியுமா? காதலிப்பதாக கூறிட முடியுமா? அவளிடமிருந்து விலகியே நின்றான் கார்த்திகேயன்.

கார்த்திகேயனின் கல்லூரி படிப்பு முடியும் போது இந்த கண்ணாமூச்சிக்கான முடிவு காலமும் கிட்டியது. கல்லூரியை விட்டு செல்லும் முன் கயல்விழியிடம் பேசியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்தான் கார்த்திகேயன் ஆனால் காலம் தான் கூடி வரவில்லை.

கல்லூரியை விட்டு செல்லும் நாளும் வந்தது. கயல்விழியை தேடி ஓடி வந்தவன் அவள் அவனுக்காக மரத்தடியில் காத்திருப்பதை பார்த்ததும் புன்னகைத்தான். இவனைப் பார்த்ததும் எழுந்து கொண்ட அவளோ கண்டு கொள்ளாது நடக்க “கயல் கயல் நில்லு” என்று அழைத்தான் கார்த்திகேயன்.

“என்ன” என்பது போல் பார்த்தவள், அவன் முகம் பார்த்து அவன் என்ன கூற விளைகிறான் என்று புரிந்து கொண்டாள்.

மெல்ல மெல்ல அவன் இவள் புறம் அடி எடுத்து வைக்க “என்ன லவ்வா முதல்ல போய் உருப்படியாகுற வழியை பாரு என்றவாறு திரும்பி நடந்தவள் மீண்டும் அவன் புறம் திரும்பி நின்று “சண்டேயானா அந்த லைப்ரரில தான் இருப்பேன். பேசணும் என்றால் வா” என்று விட்டு நடப்பவளை சிரித்தவாறு பார்த்து கொண்டே  இருந்தான் கார்த்திகேயன்.

கயல்விழி புன்னகைப்பாளே ஒழிய காதலிப்பதாக எந்த ஒரு குறிப்பையும் காட்டாதது தான் கார்த்திகேயனை அவளை நெருங்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. மறைமுகமாக அவள் கொடுத்த சம்மத்தில் மனம் குளிர்ந்தான்.

அவளும் தன்னை காதலிக்கின்றாள். படிப்பு முக்கியம் என்று எண்ணுகிறாள். அதனால் தான் பாடசாலை செல்லும் பொழுது தன்னிடம் வந்து பேசாமல் தூர நின்ற தன்னை பார்த்திருந்தாள். கல்லூரியிலும் அதைத்தான் செய்கின்றாள். இந்த ஒரு செயலால் கார்த்திகேயன் கயல்விழியை புரிந்து கொண்டான். அவள் மீது இன்னும் காதல் பொங்கவே “சரி உருப்படியாகிட்டு வரேன்” என்று கத்தினான்.

சண்டே ஆனால் லைப்ரரியில் தான் இருப்பேன் என்று கயல்விழி கூறினாலும் படிப்பின் காரணமாக கார்த்திகேயனால் அவளை வந்து சந்திக்க முடியவில்லை. கயல்விழி அவன் வரவேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அவன் வருவான் என்று எதிர்பார்த்து காத்திருக்கவில்லை.

“க்உம்…க்உம்” தொண்டையை கனைக்கும் சத்தம் கேட்டு நூலகத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த கயல்விழி தலையை உயர்த்திப் பார்த்தாள். அவள் எதிரே இருந்து இருக்கையில் இரண்டு கைகளையும் ஊன்றியவாறு அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான் கார்த்திகேயன்.

எதிர்பார்க்காத நேரத்தில் வந்து நின்றவனை ஆனந்தமாக பார்த்து விழிகளை அகல விரித்தாள் கயல்விழி.

“என்ன இந்த பக்கம்?” கையை ஆட்டியவாறு மெதுவாக கேட்டாள்.

அங்கிருந்தவர்களும் இவர்களை கவனிக்க “இங்க பேச முடியாது வா வெளியே போலாம்” சைகையாலே அவளை அழைத்தான். படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி பையில் போட்டுக் கொண்டு அமைதியாக அவனோடு நடந்தாள்.

கார்த்திகேயன் கயல்விழியை அழைத்துச் சென்றது அருகில் இருந்த காபி ஷாப்பிற்கு. இருவரும் அமர்ந்து கொண்ட நொடி கயல்விழி “என்ன பேச வேண்டும்?” என்பது போல் அவனை பார்த்தாள்.

“கயல்விழி என்று பெயர் வைத்ததற்கு கண்ணாலேயே பேசுறா இவ வாயைத் திறந்து பேசவே மாட்டாளா?” புன்னகையோடு அவளை பார்த்தவன் “கொஞ்சம் பணம் வேணும். யாருகிட்ட கேக்குறது என்று தெரியல. உன் ஞாபகம் வந்துருச்சு கிளம்பி வந்துட்டேன்” என்றான்.

“அப்போ நீ என்ன பார்க்க வரல” குறும்பாக சிரித்தாள் கயல்விழி.

பணியாள் வந்து நிற்கவும் தனக்கு பிடித்ததையும், அவனுக்கு பிடித்ததையும் சேர்த்தே ஆடர் செய்தாள் கயல்விழி. “இவளுக்கு தன்னை பற்றி இன்னும் என்னவெல்லாம் தெரியும்?” என்று அவளை ஆச்சரியமாக பார்த்தான் கார்த்திகேயன்.

உன்னை பார்க்கத்தான் வந்தேன் என்று சொல்வதில் கார்த்திகேயனுக்கு எந்த பிரச்சினையுமில்லை. ஏன் இத்தனை நாட்களாக வரவில்லை என்று கேட்டால் என்ன சொல்வான்? 

சென்னையில் சட்டக்கல்லூரியில் சேர்ந்ததால் ஊருக்கே வருவதில்லை. வீட்டுக்கு வந்தால் அன்னை அவனை வெளியே செல்ல விடுவதில்லை.

அலைபேசி அலைபாவது விடுத்து அவளிடம் பேசியிருக்க வேண்டும். அவளது எண்ணை கூட வாங்காமல் சென்றது தனது மடத்தனம்.

“உன்ன பார்க்கத்தான் கிளம்பினேன். ஒரு ப்ரெண்டுக்கு ஆக்சிடன்ட் என்று போன் வந்தது ஆபரேஷனுக்கு பணம் ஏற்பாடு பண்ண முடியுமான்னு கேட்டாங்க அதான் உன் கிட்ட கேட்டேன்” என்றான்.

வீட்டை விட்டு அன்னை எங்கும் செல்ல அனுமதிக்காத போது நண்பன் ஒருவன் விபத்துக்குள்ளான சேதி வரவே அதை சாக்காக வைத்து கயல்விழியை காண கிளம்பி வந்து விட்டான்.

கயல்விழியிடம் என்ன பேசுவது? எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று புரியாமல் தான் பணம் வேண்டும் என்று கேட்டிருந்தான். எதோ ஒரு வேகத்தில் தான் கேட்டான்.

விபத்து என்றதும் சற்றும் யோசிக்காமல் தனது கழுத்தில் இருந்த தங்கமாலையை கழற்றி அவன் கையில் கொடுத்திருந்தாள் கயல்விழி.

“ஹேய் என்ன பண்ணுற இதெல்லாம் வேண்டாம்” கார்த்திகேயன் அதை வாங்க மறுக்க, கயல்விழி பலவந்தமாக மாலையை அவன் கையில் வைத்தாள்.

“இது என் அம்மாவோட மால. அவங்க ஞாபகமா என்கிட்ட இருக்கிறது இது ஒன்று மட்டும்தான். ஒரு உசுர விட தங்கம் ஒன்னும் பெருசில்லையே. நீ சம்பாதிக்கும் போது எனக்கு வாங்கித் தர மாட்டியா என்ன?” என்று கண்சிமிட்டி புன்னகைத்தாள்.

கயல்விழியை பற்றி கார்த்திகேயனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. இதில் அவள் குடும்பத்தை பற்றி அறிந்திருக்கவா போகிறான். கயல்விழியின் அன்னை இறந்து விட்டாள் என்பதையே இப்பொழுதுதான் அறிந்து கொண்டான்.

இப்பொழுது அவன் அவளை பற்றி கேட்பானா? அவள் குடும்பத்தை பற்றி கேட்பானா? அல்லது அவளது மாலையை திருப்பிக் கொடுப்பதை பற்றி பேசுவானா?

“எனக்கு உன்ன பத்தி ஒண்ணுமே தெரியாது. முதல்ல நீ என்ன லவ் பண்ணுறியா என்று கூட சரியா தெரியல. உருப்படியாகிட்டு வான்னு சொன்ன நான் தான் வெட்டியா இருக்கேனே” படிப்பை முடித்து ஒரு வேலையில் சேரவில்லை என்பதைத்தான் அவ்வாறு கூறினான்.

காதலிக்கிறேன் என்று கூறாவிடினும் கயல்விழி தன்னை காதலிப்பது கார்த்திகேயனுக்கு தெரியாதா? என்ன? அதை அவள் சொல்லக் கேட்க வேண்டும் என்பது தானே அவன் ஆசை. அதற்காகத்தான் இப்பொழுது இப்பேச்சை எடுத்தான்.

“இப்போ நான் லவ் பண்ணுறேன்னு சொல்லனுமா? இல்ல எப்போல இருந்து உன்ன கவனிக்க ஆரம்பிச்சேன்னு சொல்லனுமா?” குறும்பாக சிரித்தாள் கயல்விழி.

அவளை ஆயாசமாக பார்த்தவன் முறைக்க முடியாமல் அமைதியாக வெறித்தான்.

ஆம் இந்த இரண்டு கேள்விகளுக்குமே கார்த்திகேயனுக்கு பதில் தேவைபட்டிருந்தது. இரண்டில் ஒன்றை தான் கூறுவேன் என்று தெனாவட்டாக அமர்ந்திருப்பவளை அறைய வேண்டும் போல் இருந்தாலும் சத்தியமாக அது அவனால் முடியாத காரியம்.

“என்ன இவ்வளவு யோசிக்கிற?”

“நீயே முடிவு பண்ணு” கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்திருக்க முறைத்தான்.

“முதல்ல நீ சாமியாராகப் போகப் போறியொன்னு தான் நினச்சேன். அவனவன் கேர்ள்ஸ் ஸ்கூல் வாசல்ல இருந்து சைட் அடிக்க தவமாய் தவம் கிடக்கிறானுங்க. நீ என்னடான்னா கடையை போட்டுக்கிட்டு புக்ஸ் படிக்கிற” அவனை பார்த்து சிரித்தாள்.

“காலேஜ் பொண்ணுங்கள சைட் அடிப்பேன். ஸ்கூல் பொண்ணுங்கள அப்படி பார்க்கத் தோணல” என்று முணுமுணுத்துக்  கொண்டவன் அடுத்து அவள் சொல்லப் போவதை கேட்க ஆர்வமானான்.

“அப்படி என்னதான் படிக்கிற என்று எட்டிப் பார்த்தேன் கிரிக்கட் மேகஸின். எனக்கு ரொம்ப பிடிச்ச சச்சின் உனக்கும் பிடிச்சதுனால எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சது. ஆனா உனக்கு கமல்ஹாசன் தான் பிடிக்கும் எனக்கு ரஜினி தான் பிடிக்கும். நமக்குள்ள ஒற்றுமையும் இருக்கு வேற்றுமையும் இருக்கு.

நமக்குள்ள என்ன ஒற்றுமை இருக்கு என்ன வேற்றுமை இருக்குன்னு தெரிஞ்சுக்கவே உன்ன கவனிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் உன்னுடைய பிறந்தநாள் எப்பன்னு தெரிஞ்சிகிட்டேன். முதல் வருஷம் எப்பன்னு தெரியல அதனால விஷ் பண்ண முடியல. இரண்டாவது வருஷம் தான் தெரிஞ்சிகிட்டேன். அதனால உனக்கு பிடிச்ச கமல்ஹாசனோட தகவல்கள திரட்டி கிஃப்ட் பண்ணேன். அதெல்லாம் சேகரிக்க எனக்கு ஒன்னரை வருஷம் ஆச்சு. தெரியுமா? அது இன்னமும் உன்கிட்ட இருக்கா இல்ல தூக்கி போட்டுட்டியா” அவள் என்னமோ சாதாரணமாக தான் அதை கேட்டாள்.

அவள் கொடுத்ததை அவன் தூக்கிப் போடுவானா? அது அவளது இதயம் அல்லவா. பொக்கிஷம் போல் பாதுகாத்து வைத்திருக்கிறான்.

“என் ரூமுக்கு நீயே வந்து இருக்கா இல்லையான்னு பார்த்து தெரிஞ்சிக்க” அவள் மட்டும் தான் குதர்க்கமாக பதில் பேசுவாளா என்னாலேயும் தான் முடியும் என்று கார்த்திகேயனும் குதர்க்கமாகவே பதில் சொன்னான். 

“ஓ எப்ப கூட்டிட்டு போவ அப்பா அம்மா வீட்ல இல்லாத நேரத்துல பார்த்து கூட்டிட்டு போவியா? இல்ல அப்பா அம்மா சம்மதத்தோட கூட்டிட்டு போவியா?” கேட்டு விட்டு சத்தமாக சிரித்தாள்.

“ஆமா… லவ் பண்ணுறேன்னு சொல்லவே இல்ல. இதுல அப்பா, அம்மா இல்லாத நேரம் கூட்டிட்டு போய் என்னத்த புடுங்க?” முணுமுணுத்தவன் “ஏய் நீ இப்போ என்ன சொன்ன? அப்பா, அம்மா சம்மதத்தோடவா?” தான் காதலிக்கிறியா என்று கேட்டுக் கொண்டிருந்தாள் இவள் கல்யாணத்தை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறாளா?

அவளை கொஞ்ச வேண்டும் போல் மனம் துடித்தாலும் “இப்படித்தான் இண்டிரெக்ட்டா… சுத்தி வளைச்சி சொல்லுவியா? நேரடியா ஐ லவ் யு என்று சொல்ல மாட்டியா?” செல்லமாக முறைத்தான்.

“ஓஹ் சார் மட்டும் டைலி ஆயிரம் தடவ ஐ லவ் யு என்று மெஸேஜ் அனுப்புறீங்க பாருங்க. காலேஜ்ல பேசவே பயந்த டவுசர் பையன் தானே நீ. நான் மட்டும் உன்கிட்ட வந்து கொளஞ்சி, கொளஞ்சி பேசணுமா?” சிரித்தாள் கயல்.

அவள் கிண்டல் செய்ததில் கார்த்திகேயனின் ஆண்மை சீர்கொண்டு எழுந்தது. “நீ தானே முதல்ல காதலிக்க ஆரம்பிச்ச. அப்போ நீ தான் முதல்ல சொல்லணும், முதல்ல பேசணும்” பிடிவாதமாக சொன்னான்.

“நான் சொல்லலைனா நீ சொல்ல மாட்டியா? அப்போ வீட்டுல பாக்குறவள கட்டிக்க” கோபமாக முறைத்தாள்.

“ஏய் என்ன நீ… என்ன பேசினா என்ன சொல்லுற?”

 “சொன்னதுக்கே கோபப்படுற. உங்கண்ணன் பார்த்தீபன் காதலிச்ச பொண்ண விட்டுட்டு உங்கம்மா பார்த்த பொண்ண இல்ல கட்டிக்கிட்டான். உங்கண்ணன் கல்யாணத்துக்கு என்ன கூப்பிட்டு உன் குடும்பத்துக்கு அறிமுகப்படுத்தி வைப்ப என்று நினச்சேன். ஆனா நீ எந்த முயற்சியும் எடுக்களையே ஏன்?”

“எனக்கு தோணல. சத்தியமா எனக்கு அப்போ தோணல. ஆனா அவ என்ன விட்டுட்டு இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்கிட்டா. ஆரம்பத்துலையே அவ திட்டம் அதுதான். அதனாலதான் என்ன குத்தம் சொல்லிக்கிட்டு இருந்தா” நினைவுகளிலிருந்து மீண்டவன் கயல்விழியை வசைபாடலானான். 

Advertisement