Advertisement

அத்தியாயம் 19

திரு காரியாலயம் வரும் பொழுது வழமைக்கு மாறாக திரை சீலைகள் ஏற்பட்டு, கதவுவுகள் திறக்கப்பட்டிருந்ததை பார்த்து புருவம் உயர்த்தினான்.

“சார் டைமுக்கு தானே கீழ வருவாரு. மேடம் பார்த்த வேலையா?”

“குட் மோர்னிங்” என்று கயல்விழி கூற, அவள் பின்னாலிருந்து குட் மோர்னிங்டா” என்றான் கார்த்திகேயன்.

வானை பார்த்து “இல்லையே இன்னக்கி சூரியன் கிழக்குல இல்ல உதிச்சிருக்கான்” என்று கார்த்திகேயனை கிண்டல் செய்த திரு “ஒரே நாள்ல இவ்வளவு மாற்றமா? பூமி தாங்குதோ இல்லையோ, நாம தாங்க மாட்டோம்” என்றான்.

கார்த்திகேயன் நேரங்காலத்தோடு வந்ததுமில்லாமல் காலை வணக்கம் வேறு வைக்கிறான். இந்த நல்ல பழக்கம் எல்லாம் இவனிடம் இல்லையே என்ற நக்கல் திருவின் வார்த்தையில் மட்டுமன்றி முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது.

“போடா போய் வேலையை பாரு” என்று கூறும் பொழுதே மாடிப்படியேறி வந்திருந்தான் விக்னேஷ்.

வரும் பொழுதே திரு பேசியதை கேட்டிருப்பான் போலும் கார்த்திகேயனின் கையை இழுத்துக் கொண்டு தனியாக சென்ற விக்னேஷ் “கொஞ்சம் கூட அறிவிருக்கா? கொஞ்சம் கூட அறிவிருக்கா என்று கேக்குறேன்”

“என்னன்னு தான் சொல்லித் தொலையேன்” வந்த உடனே ஆரம்பித்தவன் மீது கோபம் வந்தாலும் முகத்தில் காட்ட முடியவில்லை.

“உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? நேத்து தான் கல்யாணமாக்கிருச்சு. கொஞ்சம் லேட்டா ஆபீஸ் வர வேணாம். புருஷனும், பொண்டாட்டியும் நேரம் தவறாம வந்து நிக்குறீங்க. அந்த திரு பய துரு துருவென்று வேல பார்த்தாலும் அந்த விசயத்துக்கு சரிப்பட்டு வர மாட்டான். அதனால உங்கள எந்த கேள்வியும் கேட்கல. கீழ இருக்குறவங்க மேல வரமாட்டாங்க என்ற தைரியம். திரு பேசினது என் காதுல விழுந்தது போல அவங்க காதுல விழுந்திருந்தா? இந்த ப்ளோர்ல வேல பாக்குற ஸ்டாப் இன்னும் ஆபீஸ் வரல. வந்தா சந்தேகப்பட மாட்டாங்களா?”

“டேய் போதும் நிறுத்துடா…” என்று கார்த்திகேயன் கூறியும் விக்னேஷ் பேசிக் கொண்டே போனான்.

விக்னேஷின் முதுகில் கோப்பால அடித்த கயல்விழி “இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று கேட்க,

“நீ இல்லாம வீடே வெறிச்சோடி கிடக்கு, வீட்டை ஆபீஸ் பக்கத்துல மாத்தலாம் என்று நினைக்கிறன். நடந்தே வர்ற தூரத்துல வீடு பார்த்து கொடுக்க சொல்லி சார் கிட்ட கேட்டேன்” என்றான்.

“அடப்பாவி” என்று கார்த்திகேயன் மெளனமாக கூற,

“நேத்து தூங்கும் பொது ரொம்ப லேட்டாச்சு. காலையிலையே திவ்யா போன் பண்ணி தாரா கேஸ் விஷயமா பேசணும் எர்லியா வரேன்னு சொன்னா. தூங்க விடு என்ற இவன இழுத்துட்டு வந்தேன். இவன் தூங்கிட்டா தண்ணி தெளிச்சு எழுப்பி விடு” சிரித்தவாறே தாராவின் வழக்கில் என்னென்ன கண்டு பிடித்திருக்கிறார்கள் என்று அலச வேண்டும் என்று புலம்பியவாறே சென்றாள்.

“ஓஹ்… இது தான் நடந்ததா? இது தெரியாம நான் லெக்ச்சர் கொடுத்தேனா?” முறைத்துக் கொண்டிருக்கும் கார்த்திகேயனை பாசமாக பார்த்து வைத்தான் விக்னேஷ்.

“உனக்கு வேற தனியா சொல்லனுமா? போ போய் வேலைய பாரு” என்றான் கார்த்திகேயன்.

திவ்யா கார்த்திகேயனை எழுப்பி விட்டதில் கயல்விழியும் விழித்திருக்க, “இன்னம் கொஞ்சம் நேரம் தூங்குடி” என்று கார்த்திகேயன் அவளை அணைக்க முயன்ற பொழுது

“தயாரா கேஸ் ரொம்ப நாளா இழுத்துகிட்டு இருக்கு. குழந்தையோட நிலைமை என்னான்னே தெரியல. ராதா போன் பண்ணும் பொழுதெல்லாம் எப்படி ஆறுதல் சொல்லப் போறேன்னு புரியாம நான் தவிக்கிற தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும்” புலம்பியவாறே குளியலறைக்குள் சென்றாள்.

அவள் புலம்பல் கூட காலையில் ஒலிக்கும் சுப்ரபாதம் போல் இனிமையாகத்தான் கார்த்திகேயனின் காதில் பாய்ந்தது. இத்தனை நாள் அவள் கூடவே இல்லையே என்ற கோபமும், வெறுப்பும் நெஞ்சில் குடியேறி இருக்க அந்த கோபத்தை கூட அவள் மேல் காட்டியவன் தான். இன்று அவள் அவனை வந்து சேர்ந்ததில் சட்டென்று மாறிய காலநிலையாய் அவன் மாறிப்போய் இருக்க, அவளை ரசிக்க ஆரம்பித்தவன், அவளது ஒவ்வொரு செய்கையையும் ரசிக்கலானான்.

அவள் சொல்வது தானே வேதவாக்கு. “கயல் காலை சாப்பாடுக்கு என்ன ஆடர் செய்யட்டும்” கட்டிலில் படுத்தவாறே குரல் கொடுத்தான்.

“நீ வெளிய சாப்பிடுறது பத்தாதென்று என்னையும் வெளிய சாப்பிட சொல்லுறியா?” குளியலறை கதவை திறந்து கணவனை முறைத்தவள் “வீட்டுல சமைக்க ஒண்ணுமே இல்லையா?” மிரட்டும் தொனியில் கேட்டாள்.

“ஒண்டிக்கட்டமா நான். பகல் நேரம் அநேகமா வெளியேதான். ஆபீஸ்ல இருந்தா திரு வாங்கிட்டு வருவான். வேல பார்த்துட்டு டின்னர் சமைக்கணுமா? என்று வருத்தப்பட்டது இல்ல. கூட சேர்ந்து சாப்பிட யாருமில்லையே என்ற வெறுப்பு. சமைக்க தோணாது. ஆனா பசிக்கும். அதனால வெளில ஏதாச்சும் வாங்கி வைப்பேன். காலைல வீட்டு சாப்பாடு தான். கைய சுட்டுகிட்டு காலேஜ் போறப்போ கத்துக்கிட்டேன்” கடைசி வாக்கியத்தை அவார்ட் கிடைத்தது போல் பெருமையாக கூறினான்.

அவனிடம் வேலை பார்க்க வந்த பின்பு அவனுக்கு ஒருவேளை சமைத்து கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று கூட தனக்கு தோணவில்லையே என்று நொந்துகொண்டவள், நடந்து முடிந்ததை பற்றி யோசித்து என்ன பிரயோஜனம். இப்பொழுதுதான் தான் அவனோடு இருக்கிறேனே என்று முகம் மலர்ந்தாள்.

“இனிமேல் மூணு வேலையும் வீட்டுலையே சாப்பிடலாம்” இவள் ஆசையோடு சொல்ல,

“ஆமா உனக்கு சமைக்காத தெரியுமா?” என்று கேட்டு அவள் முறைப்பை பெற்றுக் கொண்டான் கார்த்திகேயன்.

“எங்கப்பா தனியா சமைக்கிறாரே என்று ஹெல்ப் பண்ண போய் சமைக்க கத்துக்கிட்டவ நான். என்ன ஓட்டுரியா? உன்ன” தலையணையால் அவனை மொத்தியே குளியலறைக்குள் துரத்தி விட்டாள்.

தோசை மாவு குளிர்சாதப்பெட்டியில் இருந்ததால் தோசை வார்த்து, அவனுக்கு பிடித்த தக்காளி சட்னி செய்து கொடுத்தாள்.

“எனக்கு என்ன பிடிக்கும் என்று யோசிச்சு சமைக்காத, உனக்கு என்ன பிடிக்குமோ அத செய். நான் சாப்பிடுறேன்” அவள் தன்னை வருத்திக்கொள்ளக் கூடாதே என்று இவன் பேச

“எப்படி எப்படி சமைக்கிற வேலைய என் தலைல கட்டிட்டு ஐயா ஜம்முனு இருக்கலாம்னு பாக்குறீங்களா? எல்லா வேலையும் பிப்டி பிப்டி. இல்ல பிச்சு, பிச்சு” அடிப்பேன் என்பது போல் கையை முறுக்கினாள்.  

“நான் வெளியவே சாப்பிடுறேன்” அவளுக்கு பழிப்பு காட்டியவன் அவள் முறைக்கவும் “இன்னக்கி லன்ச் சமைக்கிறேன்னு வீட்டுல இருந்துடாத, திவ்யா வரேன்னு சொன்னா” என்று ஞாபகப்படுத்த காலை உணவை உண்டவர்கள் கீழ் தளத்திலுள்ள காரியாலயம் வந்திருந்தனர்.

“ஆபீஸும் வீடும் பக்கத்துக்கு பக்கத்துல இருந்தா எவ்வளவு ஈஸி என்று சொல்லுவாங்க. ஆனா நீ வாழ்ந்தே காட்டுற கார்த்தி” ஒருநாள் அனுபவமே இனிமையாக இருப்பதாக சிலாகித்தாள் கயல்விழி.

“இன்னக்கி தான் நான் இவ்வளவு நேரத்தோட வந்திருக்கேன். இல்லனா திரு வந்த பிறகு தான் வருவேன்” கட்டிடம் தான் தன்னுடையது. ஆனால் வெறுமை தானே குடியிருக்கிறது என்பதை சொல்லாமல் சொன்னான்.

அவன் வார்த்தையால் சொல்லாவிட்டால் கயல்விழிக்கு புரியாதா? நான் தான் இருக்கேனே இப்போ என்பது போல் சட்டென்று அவனை அணைத்துக் கொண்டாள்.

அவள் அணைப்பாள் என்று எதிர்பார்க்காத கார்த்திகேயனுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு சீக்கிரத்தில் இவளிடம் இந்த அளவு முன்னேற்றத்தை அவன் எதிர்பார்த்திருக்கவுமில்லை. அவன் கைகளும் மெதுவாக அவள் இடையை சுற்றிக்கொள்ள அங்கே மௌனம் தான் ஆட்ச்சி கொண்டது.

நீ பேசும்

வார்த்தைகள் சேகரித்து

செய்வேன் அன்பே ஓர்

அகராதி நீ தூங்கும் நேரத்தில்

தூங்காமல் பார்ப்பேன்

தினம் உன் தலைகோதி

காதோரத்தில் எப்போதுமே

உன் மூச்சுக்காற்றின் வெப்பம்

சுமப்பேன் கையோடு தான்

கைகோர்த்து தான் உன்

மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்

வேறென்ன வேண்டும்

உலகத்திலே இந்த இன்பம்

போதும் நெஞ்சினிலே

ஏழேழு ஜென்மம்

வாழ்ந்துவிட்டேன்

அக்கம் பக்கம்

யாருமில்லா பூலோகம்

வேண்டும் அந்திபகல்

உன்னருகே நான் வாழ

வேண்டும்

என் ஆசை

எல்லாம் உன்

இருக்கத்திலே என்

ஆயுள்வரை உன்

அணைப்பினிலே

வேறென்ன வேண்டும்

உலகத்திலே இந்த இன்பம்

போதும் நெஞ்சினிலே

ஏழேழு ஜென்மம்

வாழ்ந்துவிட்டேன்

விக்னேஷை துரத்தி விட்டு கார்த்திகேயன் தனது இருக்கையில் வந்து அமரும் பொழுது அவனது அலைபேசி அடித்தது. அழைத்தது பார்த்திபன்.

“சொல்லு பார்த்தி”

“குழந்தைகள தத்தெடுக்குற விஷயமா உன்கிட்ட சொல்லி இருந்தேனே. அத அடுத்த வாரம் பண்ணலாம்னு இருக்கேன் ஊருக்கு வரியா?”

கண்மணிக்கு எந்த பிரச்சினையுமில்லை. எல்லா பிரச்சினையும் தனக்குத்தான் என்று பார்த்தீபன் வீட்டாரை சமாதானப்படுத்தி இருந்தாலும், கண்மணி பார்த்திபனிடம் புலம்பிக்கொண்டே இருந்தாள். தங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் அவள் குழந்தையை கவனிப்பதிலேயே கவனம் செலுத்துவாள் இந்த விஷயத்தை மறந்து விடுவாளென்று குழந்தையே தத்தெடுக்கும் விஷயமாக கார்த்திகேயனிடம் பேசி இருந்தான் பார்த்திபன். ஒரு குழந்தைக்கு இரண்டு குழந்தையாகவே தத்தெடுக்குமாறு அறிவுரை கூறியிருந்தான் கார்த்திகேயன்.

“அப்பாவும் அம்மாவும் சம்மதிச்சுட்டாங்களா?” ஜாதி, மதம் என்று பேசிக்கொண்டிருக்கும் தங்களது பெற்றோர்கள் இதற்கு சம்மதம் கூறுவார்களா? என்று சந்தேகம் கார்த்திகேயனுக்கு இருந்ததால் அண்ணனை கேட்டான்.

“நம்ம ஜாதில குழந்தை தத்தெடுக்க சொல்லி முட்டாள்தனமா பேசிக்கிட்டு இருக்காங்க. அவங்கள திருத்த முடியாது டா” சிரித்தான் பார்த்திபன்.

“அடுத்த வாரம் தானே சரி நான் ஊருக்கு வரேன்”

“குழந்தை தத்தெடுத்த கையோட காது குத்தி, மொட்டை போடுற எல்லா வேலையும் இருக்குடா. நீ கயலயும் கூட்டிகிட்டு வா” என்று அலைபேசியை அனைத்திருந்தான்.

கயல்விழியும் அவனது பக்கவாட்டில் தானே அமர்ந்திருந்தாள். அவள் காதிலும் கொஞ்சம் கொஞ்சமாக கார்த்திகேயன் பேசியது விழத்தான் செய்தது. என்னவென்று கேட்க ஆவலாக இருந்தாலும் இந்த இடத்தில் கேட்கலாமா? வேண்டாமா? என்று அவள் யோசிக்க, கார்த்திகேயன் பேசினான்.

“பார்த்தி ரெண்டு குழந்தை தத்தெடுக்குறானாம். காது குத்தி, மொட்டை வேற போடுறாங்களம். அடுத்த வாரம் ஊருக்கு வர சொல்லுறன்”

நீயும் வருகிறாயா என்று கேளாமல், நான் மட்டும் செல்கிறேன் என்றும் கூறாமல் விஷயத்தை மட்டும் கூறினான்.

நீயும் வா. வந்தேயாக வேண்டும் என்று அவளை கட்டாயப்படுத்த அவன் விரும்பவில்லை. அவள் என்ன சொல்வாளோ என்று இவன் அவள் முகம் பார்த்து நிற்க,

தன்னை அவன் வீட்டுக்கு அழைத்து செல்ல இவனுக்கு விருப்பமில்லையோ என்று சுணங்கிய முகத்தோடு அவன் முகம் பார்த்தாள் இவள்.

அவள் முகம் சுருங்குவதை பார்த்தே அவள் மனதை படித்தவன் “தாரா கேஸ் ரொம்பநாளா இழுத்துகிட்டு இருக்குனு சொன்னியே, எங்க கூப்பிட்டா வரமாட்டியோ என்று நினச்சேன். உன்னை இங்க தனியா விட்டுட்டு போக முடியாது. நீ இல்லாம நான் தனியா போய் உன்ன பத்தியே யோசிச்சிகிட்டும் இருக்க முடியாது. என்னதான் பண்றது சொல்லு” அவளிடமே கேட்டான்.

அவன் கேட்ட விதத்தில் கொஞ்சம் சத்தமாக சிரித்து விட்டாள் கயல்விழி.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இந்த புரிதல் தான் ரொம்பவும் அவசியம். அதுவும் கயல்விழி இப்பொழுது இருக்கும் மனநிலைக்கு அவளை சரியாக புரிந்து கொண்டு அவள் மனம் கோணாமல் நடப்பது மிகவும் அவசியம்.

கார்த்திகேயனை தவிர அவளை யாரால் சரியாக புரிந்து கொள்ள முடியும். இதோ அவள் முகம் பார்த்து அவள் மனதை படித்து விட்டானே. இல்லை இல்லை அவள் மனதை வென்று விட்டான்.

உயிரே

உன் உயிரென

நான் இருப்பேன்

அன்பே

இனிமேல்

உன் இதழினில்

நான் சிரிப்பேன்

உயிரே

உன் உயிரென

நான் இருப்பேன்

அன்பே

இனிமேல்

உன் இதழினில்

நான் சிரிப்பேன்

இதமாய்

உன் இதயத்தில்

காத்திருப்பேன்

கனவே

கனவாய்

உன் விழிகளைப்

பாத்திருப்பேன்

தினமே

மழையாய்

என் மனதினில்

நீ விழுந்தாய்

விழுந்தாள்

ஒரு விதையென

நான் எழுந்தேன்

சொன்னது போல் திவ்யா சொன்ன நேரத்துக்கு வந்து விட்டாள்.

“வாம்மா….. பத்து நாள்ல கேஸ விசாரிச்சு டீடைல் கொடுக்க சொன்னா ஒரு மாசத்துக்கு பிறகு வந்திருக்க. போ… போ… மேடம் ரொம்ப கோவமா இருக்காங்க” திவ்யாவை பார்த்ததும் தனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அத்தனையும் கயல்விழிக்கும் இருக்கிறது என்று சொல்லாமல் சொன்னான் கார்த்திகேயன்.

“கோவமா இருந்தா ரெண்டு கிஸ்ஸ போட்டு சமாதானப்படுத்த வேணாம். பொண்டாட்டிக்கு பயந்து, அடிபணிஞ்சி தான் போவேன்னா எப்படி?” முணுமுணுத்த திவ்யா திரும்ப, கயல்விழி கையை கட்டிக் கொண்டு நிற்பதை பார்த்து “கங்கிராஜுலேசன் மேடம்” என்று சமாளித்தாள்.

“வேலைய பார்க்கலாமா?” முகத்தில் எதையும் காட்டாமல் கயல்விழி முன்னால் நடக்க,

“அப்பப்பா சாருக்கு ஏத்த ஜோடி தான் என்ன அழுத்தம்” மீண்டும் முணுமுணுத்தவாறே அவள் பின்னால் நடந்தாள் திவ்யா.

“தாராவ கடத்தி பணம் பறிச்சது யாருன்னு கண்டு பிடிச்சிட்டியா? இல்ல ஏதாவது தகவலாவது கிடைச்சதா?” நேரடியாகவே விஷயத்துக்கு வந்தாள் கயல்விழி. 

“ஆதாரத்தோடு கண்டு பிடிச்சிட்டேன் மேடம் அதனால தான் இந்த ஒரு மாசம். மிஸ்டர் ரகுவோட அண்ணன் ஒரு கேம்லர். அதனால அவர் நிறைய பணத்தை இழந்து இருக்கிறாரு. கடனாளியாகவும் இருக்கிறாரு. அவருக்கு நிறைய பணம் தேவைப்பட்டிருக்கு சோ அவர் தான் குழந்தையை தூக்கி இருப்பார் என்று ஒரு சந்தேகத்தில் அவர் பாலோ பண்ண சொல்லி சர் சொன்னாரு. அவர் ஒரு வாரமாக ஃபாலோ பண்ணதுல அவருக்கும் குழந்தை கடத்தினதும் எந்த சம்மதம் இருக்கிறது போல தெரியல. 

ஆனா பணத் தேவை இருக்குற யாரோ தான் குழந்தையை கடத்தியிருக்கணும். குழந்தையை கடத்தி பணத்தையும் எடுத்துட்டாங்களே. அதனால இப்போ பணம் அவசியமில்லாமல் இருக்கலாம். இல்ல பணத்தோட தேவை குறைஞ்சிருக்கலாம்.

நாலு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததால யாரு யாருக்கெல்லாம் பணம் தேவைப்பட்டு இருக்குனு தேடவே எனக்கு ஒரு வாரம் போச்சு” ஒரு வாரம், பத்து நாளில் விசாரித்து கூறுமாறு கார்த்திகேயன் கூறினாலும், இதை விசாரிப்பது ஒன்றும் அவ்வளவு இலகுவான காரியம் இல்லை என்று கயல்விழிக்கும் புரியாமல் இல்லை திவ்யா கூறுவதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தாள். 

அப்படி பணம் தேவைப்பட்டு இன்னொரு ஆள் மிஸ்டர் ரகுவோட ஃபிரண்ட் மிஸ்டர் ஸ்ரீமன். ரெண்டு பேரும் ஒன்னாத்தான் பிசினஸ் ஆரம்பிச்சிருக்காங்க. பிரண்ட்ஸ்க்குள்ள என்ன பிரச்சனைன்னு தெரியல, தாரா பொறக்க முன்னாடியே பிரிஞ்சி தனித்தனியாக பிசினஸ் பண்ணி இருக்காங்க. மிஸ்டர் ரகுவுக்கு பிசினஸ்ல நல்ல முன்னேற்றம் சொத்தெல்லாம் வாங்கி லைஃப்ல செட்டில் ஆகிவிட்டாரு.

ஆனா மிஸ்டர் ஸ்ரீமனோட பிசினஸ் லாஸ் ஆகிருச்சு. கடனாளியாகிட்டாரு. பிரண்ட்ஸ்குள்ள இருந்து ஈகோவா, இல்ல அவங்க வைஃபுகளுக்கு இருந்து ஈகோவான்னு தெரியல அவங்க அவங்களுக்கு இருந்த பிரச்சனையை மிஸ்டர் ரகுகிட்ட சொல்லல. சொல்லாம மறைச்சுட்டாங்க. மிஸ்டர் ஸ்ரீமன் நல்லா இருக்கிறதா மிஸ்டர் ரகு நினைச்சுக்கிட்டு இருக்காரு இன்னமும் அப்படித்தான்.

மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்ரீமன் தான் தாராவ கிட்னாப் பண்ணுது. வீட்டில் இருந்து தான் கிட்னாப் பண்ணி இருக்காங்க. குழந்தை அவங்க கூட வச்சிக்க முடியாது. பணத்தை வாங்கிகிட்டு குழந்தையை மிஸ்டர் ரகு கிட்ட ஒப்படைச்சா, குழந்தை இவங்கள அடையாளம் கண்டு கொள்ளும் இல்லையா, அதனால தான் குழந்தையை ஆசிரமத்துல விட்டிருக்காங்க. இவங்கள ஆஸ்ரமத்துல யாருமே அடையாளம் கண்டுகொள்ள கூடாது என்று ஆசிரமத்து வாசலில் தான் விட்டுட்டு போயிருக்காங்க. ஆனா ஆசிரமத்து வாசல்ல இளநீர் கடை வச்சிருக்கும் ஒருத்தர் இவங்கள அடையாளம் கண்டுக்கிட்டாரு அவர்தான் என்கிட்ட சொன்னாரு” என்றாள்.

“இத்தனை வருஷமாகியும் குழந்தையை கடத்தினது இவங்கதான் என்று அந்த இளநீர் வியாபாரி எப்படி ஞாபகம் வச்சிருக்காரு” சந்தேகமாக கேட்டாள் கயல்விழி. அவள் விசாரிப்பதை கார்த்திகேயன் அங்கிருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தான் அவன் எந்த குறுக்கீடும் செய்யவில்லை. 

“ஓகே தாராவ கடத்தினது ஸ்ரீமன் ஜோடி. கடத்தி ஆஸ்ரமத்தில் விட்டிருக்காங்க. கடத்தின அன்னைக்கே தாராவ வேற யாரோ கடத்திருக்காங்க. சரி ஸ்ரீமன் ஜோடி தான் கடத்தினாங்க என்று ஆதாரங்கள் எல்லாம் இருக்கு. இப்ப அவங்கள நாம என்ன பண்ண போறோம்” கயல்விழி திவ்யாவை பார்த்து கேட்க,

“போனவாரமே அவங்கள போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க” என்றான் கார்த்திகேயன்.

“ஓஹ் முடிஞ்சு போன கல்யாணத்துக்கு தான் பத்திரிகை வைக்கிறியா” என்று அவனை முறைத்தாள் கயல்விழி.

“ஒரு வாரமா ராதா உனக்கு போன் பண்ணவே இல்லையே ஏன்னு யோசிக்க மாட்டியா? போன் பண்ணலன்னா அவங்க உன் மேல கோவமா இருக்குறதா நினைச்சு நீ கேஸ அவசரமா முடிக்கணும். குழந்தையை கண்டு பிடிக்கணும் என்று மும்முரம் காட்டின” சிரித்தான் கார்த்திகேயன்.

தோழி கோபித்துக் கொண்டு விட்டாளோ என்று நினைத்தது ஒரு புறம், குழந்தை கிடைக்காவிட்டால் அவள் ஏதாவது செய்து கொள்வாளோ என்று  அஞ்சியது தான் அதிகம். கணவனுக்கு எந்த பதிலையும் கூறாமல் அவனை முறைத்தாள்.

மனையாளின் அச்சம் அவனுக்கு புரியாதா? நடக்கும் ஒவ்வொன்றையும் கூறினால் அவள் அச்சப்படுவாள். புலம்புவாள். திகைப்பாள் என்று எல்லாவற்றையும் நடத்தி முடித்துவிட்டு அவளிடம் கூறலாம் என்று இருந்தான். இதோ திவ்யா வந்துவிட்டாள் நடந்ததை  கூறிக் கொண்டிருக்கிறாள். மீதியையும் கூறுமாறு சைகை செய்தான் கார்த்திகேயன்.

“மிஸ்டர் ரகு அண்ட் மிஸிஸ் ரகுவோட கடந்த காலத்தை பற்றி விசாரிக்க சொல்லி சார் சொன்னாரு. மிசிஸ் ரகு. அதாவது ராதா அவங்க காலேஜ் போறப்போ நிதிஷ் என்றவர லவ் பண்ணியிருக்காங்க. நிதிஷ் அவங்க மேல ரொம்ப பொஸஸிவ்வாக இருந்ததால அவங்க பிரேக் அப் பண்ணியிருக்காங்க. அப்புறம் தான் ரகுவ கல்யாணம் பண்ணி செட்டிலாகி தாராவை பெத்திருக்காங்க”

“தாரா தன்னோட குழந்தை என்று நிதிஷ் கடத்திட்டாரா?” சட்டென்று குறுக்கிட்ட கயல்விழி திவ்யாவை கேட்டாள்.

“ஆக்சுவலி பிரேக் அப் ஆனதுல நித்திஷ் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டிருக்காரு. அதனால தாரா அவரோட குழந்தை, ராதா அவரோட மனைவி என்று பிணத்திகிட்டு இருந்திருக்காரு”

“குழந்தையை காப்பாத்தியாச்சா?” இப்படிப்பட்ட ஒருவனிடம் மாட்டிக் கொண்டு குழந்தை என்ன நிலைக்களாகி இருக்குமோ என்று அச்சப்பட்டவளாக கார்த்திகேயனை ஏறிட்டாள்.

“தாரா சேஃப் மேம். நிதிஷ காப்பகத்தில் சேர்த்தாச்சு. என்ன பிரச்சினை என்றால் தாரா நிதிஷ அப்பான்னு சொல்லுறா. பெத்த அப்பாவையும், அம்மாவையும் எதிரியா பாக்குறா” கவலையாக கூறினாள் திவ்யா.

தன் தோழியின் நிலைமையை எண்ணிய கயல்விழியின் முகம் சோகமாக, ஆறுதலாக அவள் தோளில் கை வைத்து “கோயம்புத்தூர் போனா ராதாவை பார்த்துட்டு வரலாம்” என்றான் கார்த்திகேயன்.

“நான் அம்மா இல்லாம வளர்ந்தேன் கார்த்தி. எனக்கு அம்மா இல்லையே என்ற கவலை வரக் கூடாது என்று அப்பா ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வாரு. சின்ன வயசுல அப்பாவோட பாசம் மட்டும் தான் தெரியும். வளர்ந்த பிறகு தான் அப்பாவோட எல்லா கஷ்டத்தையும் புரிஞ்சிக்கிட்டேன். எனக்கு ஒரு அம்மா தேவை என்று காரணம் காட்டியாச்சும் அவர் இன்னொரு பண்ணியிருக்கலாம். அவர் தேவையை கூட யோசிக்காமல் எனக்காக தியாகியாகிட்டாரே என்று அவர் கூட சண்டைதான் போட்டேன்”

கயல்விழி பேச ஆரம்பிக்கும் பொழுதே கண்களால் திவ்யாவை வெளியேறுமாறு உத்தரவிட்ட கார்த்திகேயன் “கண்டிப்பாக இவள் அப்படி சொல்லக் கூடியவள் தான். இவளுக்கும், இவள் அப்பாவுக்கும் இடையில் இருக்கும் உறவு சாதாரண தந்தை மகள் உறவா? நண்பர்களையே மிஞ்சுவாங்களே” என்ற பார்வையோடு அவள் சொல்வதை செவி சாய்த்து கொண்டிருந்தான்.

“அப்பாவோட குடும்பத்தார் என்ன தூக்கி எறிஞ்சிட்டு வேற கல்யாணம் பண்ணிக்க சொன்னதால அப்பாக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும் என்ற எண்ணம் வரவே இல்லைன்னு சொன்னாரு”

கார்த்திகேயனுக்கும் திருமணத்தில் விருப்பம் வராமைக்கு காரணம் அதுதானே. அவன் பெற்றோர் தானே.

“ஆமா… உங்க அப்பா உன்ன அவரோட காதல் சின்னமாகவே பார்த்தாரு உன்ன விட்டுட்டு இன்னொரு வாழ்க்கையை பார்க்க சொன்னா அவர் ஒத்துப்பாரா? உன்னையும் ஏத்துக்கிட்டு அவரையும் புரிஞ்சிக்க கூடிய பொண்ணு அமஞ்சிருந்தா கல்யாணத்த பத்தி யோசிச்சிருப்பாரு.

நான் ஏற்கனவே சொன்னது தான். உங்க அம்மாவோட காதல தாண்டி உங்க அப்பாவ நேசிக்கிற பொண்ண அவர் சந்திக்கல. ஒருவேளை சந்தித்திருந்தாலும் அவருக்கு இருந்த வசதியை பார்த்து வந்திருப்பா என்று சந்தேகப்பட்டே விலகி இருந்திருப்பாரு. அதற்கு அவர் குடும்பம் பேசினது தான் காரணம்.

ராதா நிதிஷ விட்டுட்டு ரகுவை சூஸ் பண்ணி சரியான முடிவைத்தான் எடுத்து இருக்கா. ஆனா அவளுக்கு இப்படி ஒரு பிரச்சனை. மனுஷனுக்கு தான் பிரச்சினை டிஷைன் டிஷைனா வருதே” கயல்விழியை தேற்றியவாறு புரிய வைக்க முயன்றான் கார்த்திகேயன். அவள் தன்னை திருமணம் செய்ததை எண்ணி வருந்தக் கூடாதே என்ற ஆதங்கம் அவன் வார்த்தைகளில் கொட்டிக் கிடந்தது.

Advertisement