Advertisement

அத்தியாயம் 18

“என்ன முழிக்கிற? நான் ஒன்னும் தப்பா கேட்கலையே” கயல்விழி கார்த்திகேயனை முறைத்தாள்.  

“நீ தப்பா கேட்கல. ஆனா நான் சில விஷயங்களை சொல்லணும். அத நீ பொறுமையா கேட்கணும்”

“சரி சொல்லு” அப்படி என்ன சொல்லப் போகிறான் என்று யோசித்தாள் கயல்விழி.

“அத இங்க சொல்ல முடியாது. உன்ன கட்டிபிடிச்சிகிட்டே சொன்னாதான் நீ அடிக்க மாட்ட. நாம ரூமுக்கு போலாமா? பேசிக்கிட்டே தூங்கலாம்” என்றான்.

“அப்போ நீ எதோ பண்ணி இருக்க” இவ்வளவு நேரம் பேசிய இணக்கமான பேச்சில் கயல்விழிக்கு அறைக்கு செல்ல அச்சமாக ஒன்றும் இருக்கவில்லை. அவனை புன்னகைத்தவாறே முறைத்தாள்.

“இங்க பாரு கயல். உன் பயம் என்னனு எனக்கு புரியுது. எந்த சூழ்நிலையிலும் நான் உன்ன கஷ்டப்படுத்த மாட்டேன். உன் அனுமதியில்லாம, உன் விருப்பம் இல்லாம நமக்குள்ள எதுவும் நடக்காது. ஆனா கட்டிபிடிக்க கூட வேணாம்னு சொல்லிடாத ப்ளீஸ்” என்றான்.

அவன் பார்வையால் கூட கெஞ்சவில்லை. அவனை அணைத்துகொள்ள கயல்விழிக்கு அச்சமோ, தயக்கமோ இல்லை. இருந்திருந்தால் கோயம்புத்தூர் சென்றிருந்த பொழுது அவனை அணைத்துக்கொள்ளவா என்று கேட்டிருக்க மாட்டாளே. அது கார்த்திகேயனுக்கு புரிந்ததால் தான் அவளிடம் சாதாரணமாகவே கேட்டிருந்தான்.

காதலியாக அவளை தனிமையில் சந்தித்தது இல்லை. அப்படி இருந்தும் அவளை தொட்டுப் பேசும் சாக்கில் கன்னத்தில் முத்தம் வைத்திருக்கிறான். இன்று மனைவியானவள் நெருக்கத்தில் இருக்கும் பொழுது தன்னால் அவளை முத்தமிடாமல் இருக்க முடியுமா? உன்னை முத்தமிட “அனுமதி தா” என்று கேட்டால் அவள் அச்சம் கொள்வாளா? வெட்கம் கொள்வாளா? என்று எண்ணிகையில் மனம் வெம்பினான் கார்த்திகேயன்.

அவனை ஒரு நொடி பார்த்தவள் “சரி” என்று தலையசைத்திருக்க புன்னகைத்த கார்த்திகேயன் அவளை அறைக்கு அழைத்து சென்றான்.

தான் அவளிடம் எல்லை மீற மாட்டேன் என்று அவளுக்கு இருந்த நம்பிக்கையில் தான் அவள் சரி என்று கூறினாள் என்று கார்த்திகேயனுக்கு புரியாமல் இல்லை.

என்ன தான் நம்பிக்கை இருந்தாலும் அவளுக்குள் இருக்கும் அச்சம் அவன் தொடும் பொழுது மேலெழுந்து அவனை பயப்பார்வை பார்த்து வைத்திடக் கூடாதே. அவனை தள்ளி விடக் கூடாதே. மனதிலிருக்கும் அச்சத்தை தூக்கியெறிந்து அவளாகவே அவனை நெருங்க வேண்டும். அவளது நம்பிக்கை அவன் முழுதாக பெற வேண்டும். காதலை மீட்டெடுக்க வேண்டும் என்றெண்ணியவாறே தலையணையில் தலை வைத்தான்.

“என் பிலோவ் எங்க?” கட்டிலில் சாய்ந்தவாறு கேட்டாள் கயல்விழி.

திருமணத்தை ஏற்பாடு செய்தவனுக்கு அவள் வீட்டுக்கு வந்தால் அவளுக்கு என்னவெல்லாம் தேவைப்படும் என்று தெரியாதா? சில பொருட்களை அவன் வாங்கி இருந்தாலும், சில பொருட்களை அவள் வந்த பின்பு வாங்கிக் கொள்ளலாம் என்றிருந்தான்.

திட்டமிட்டு அவளது தலையணையை அப்புறப்படுத்தியவனோ “அதான் கட்டிப்பிடிச்சி பேசிக்கிட்டே தூங்கலாம்னு சொன்னியே வா” என்று கைகள் இரண்டையும் விரித்து காட்டினான்.

கயல்விழி மறுக்கவில்லை. பயப்படவுமில்லை. அவன் தோளில் தலை வைத்து “சொல்லு” எனும் விதமாக அவன் முகம் பார்த்தாள்.

“கண்ணால பேசியே கவுக்குறாளே” அவள் நாடியை பிடித்து ஆட்டியவன், அவளை முத்தமிட துடிக்கும் மனதை அடக்கி விட்டு பேசலானான்.

அவளை தன் கை வளைவுக்குள் அடக்கிக் கொண்டாலும் கார்த்திகேயன் அவன் கால்களை அவள் மேல் போடவில்லை. அவள் அதை விரும்புவாளோ, மாட்டாளோ தெரியவில்லை. அசௌகரியமாக உணர்வாளோ தெரியவில்லை. அவனுக்காக பொறுத்துக் கொள்வாளோ அல்லது அலறுவாளோ என்றெல்லாம் அவன் மனதுக்குள் சட்டென்று வந்து போக, ஆசைகளை அடக்கி கொண்டான்.

“எனக்கு அடிபட்டது நிஜம். ஆனா ஒரு குட்டி பொய் சொல்லி அம்மாவையும், அப்பாவையும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வச்சேன். அவங்க ஏதாவது காரணம் சொல்லி கொடுத்த சம்மதத்தை வாபஸ் வாங்கிடுவாங்களோ என்ற பயத்துல தான் உன் கழுத்துல தாலிய போட்டேன்.

அப்பா அம்மா சம்மதமில்லாம தாலி கட்டினா நீ கழட்டி என் மூஞ்சி மேலயே விட்டெறிய மாட்டியா” என்று அவள் முகம் பார்க்க, கண்களாளேயே “ஆமாம்” என்றாள்.

“உன்னை தெரியாதா? எனக்கு” என்று சிரித்தவன் பெற்றோரிடம் என்ன பொய் சொன்னான் என்றும், அவளை திருமணம் செய்ய அவன் போட்ட திட்டத்தையும் மெதுவாக கூற, தன் கை வலிக்கும் வரையில் அவனை மொத்தியெடுத்தாள்.

அவனோ அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டு அவளை பார்த்து நகைத்துக் கொண்டிருந்தான்.

“ஆமா உன் அப்பாவும் அம்மாவும் உண்மையிலயே ஜாதி, மதம் காரணமாகத்தான் நம்ம காதல ஏதுக்காமல் இருந்தாங்களா? அப்படிப்பட்டவங்க உனக்கு ஒன்னு என்றதும் இவ்வளவு சீக்கிரத்தில கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்களே” வேற ஏதாவது காரணம் இருக்குமா? என்ற சந்தேகத்தில் தான் கேட்டாள்.

“ஓஹ்… அதுவா…. அதுவும் ஒரு காதல் கதை தான்”

“யாரோட காதல் கதை? சொல்லு கேட்போம்” ஆர்வமானாள் கயல்விழி.

“நீ கண்ண விரிச்சி ஆவலா கேட்க இது ஒன்னும் சங்ககால காதல் கதை இல்ல கயல்” அவளை கேலி செய்ய, எதோ நினைவில் அவன் தோள்பட்டையை கடிக்கப் போனவள் முகம் புதைத்து, இருமி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தாள்.

“என்ன கதை சொல்ல முன்னவே தூங்கிட்டியா?” அவள் உணர்ச்சிகளை மறைப்பது புரியாமல் கார்த்திகேயன் மீண்டும் கேலி செய்தான்.

தான் சோகமானால் அவன் தங்கமாட்டானென்று “யாரு தூங்கிட்டா? நீ சொல்லு” என்று முறைத்தாள்.

கார்த்திகேயனுக்கு சொல்ல பெரிதாக விருப்பமில்லை என்றாலும் அதை கூறினாலாவது தனது பெற்றோர் வீம்பு பிடிப்பதை இவள் புரிந்து கொள்வாளே என்ற ஆதங்கத்தில் கூறலானான் கார்த்திகேயன்.

“எங்கண்ணி மதியழகி எங்க அத்த பொண்ணு என்று சொல்லி இருக்கேனே ஞாபகம் இருக்கா?” கயல்விழி கண்களாலேயே பதில் சொல்ல புன்னகைத்தவாறு தொடர்ந்தான் கார்த்திகேயன்.

“எங்க அப்பாக்கு இரண்டு தங்கைகள். ஒருத்தங்க அண்ணி மதியழகியோட அம்மா. இன்னொருத்தங்க பேரு… பேரு…. சரி அதை விடு. அவங்க பேரு கூட எங்க வீட்ல சொல்ல மாட்டாங்க”

“ஏனாம்”

“அவங்க தான் காதலிச்சு வீட்டை விட்டு ஓடி போயிட்டாங்களே” சிரித்தான்.

“என்ன சொல்லுற? முழுசா சொல்லு” என்றாள் கயல்விழி.

“அம்மா அப்பாவோட அத்த பொண்ணுதான். எங்க அம்மாவோட அண்ணனுக்கும் அப்பாவோட மூத்த தங்கச்சிக்கும் தான் கல்யாணம் பேசி  முடிச்சிருக்காங்க. கல்யாண நாளன்று அவங்க காதலிச்சவங்களோட ஓடி போயிட்டாங்க. கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடு செஞ்சதுனால இப்படி ஆயிடுச்சு என்று வேற வழியில்லாமல் அன்னைக்கு எங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும் கல்யாணத்தை பண்ணி வச்சிருக்காங்க”

“என்ன சொல்லுற? பொண்ணு ஓடிப் போயிட்டா மாப்பிள்ளைக்கு வேற பொண்ண கல்யாணம் பண்ணி வைப்பாங்க. இது என்ன புதுசா? உங்க அம்மாவும், அப்பாவும் விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணதால தான் இவ்வளவு கோபப்பட்டு நம்ம காதல எதிர்த்தாங்களா?”

“அப்படித்தான் பண்ணியிருக்கணும்” என்றவன் அவள் இறுதியாக கூறியதை கேட்டு சத்தமாக சிரித்தவாறே “ஆமா விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணித்தான் சிங்கக்குட்டி போல மூணு பயண பெத்துக்கிட்டாங்க” என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டினான். அதன்பின் அவள் முகம் மாறுகிறதா என்று வேறு பார்க்கலானான்.

அவனை கயல்விழி முறைக்க முறைக்க “அவங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இருந்திருக்கு. அதனாலதான் வீட்டுல சொன்ன உடனே எங்கம்மா அண்ணன பத்தி கூட யோசிக்காம அப்பாவ கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஆக்சுவலி மாமாக்கு அண்ணியோட அம்மாவ கட்டி வச்சிருக்கணும். அவங்களுக்கு வேற ஒரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் பண்ணதால வீட்டாளுங்க இவங்களுக்கு கல்யாணத்தை பண்ணிட்டாங்க” என்றான்.

“அவங்க விஷயத்துல ஹேப்பி என்டிங் தானே எதுக்காக அவங்க காதல இவ்வளவு எதிர்க்குறாங்க” புரியாமல் கேட்டாள் கார்த்திகேயனின் மனையாள்.

“இவங்க கல்யாணம் பண்ண பிறகு மாமா சூசைட் பண்ணிக்கிட்டாரு”  கயல்விழி அவனை அதிர்ச்சியாக பார்க்க “ஆமா அவரை கல்யாணம் பண்ணிக்காம அத்த ஓடிப்போனதால சூசைட் பண்ணிக்கிட்டாரு. அதனாலதான் எங்க அம்மாவும் அப்பாவும் காதல இவ்வளவு எதிர்க்கிறாங்க. காதல மட்டும் இல்ல ஜாதி மதம் எல்லாத்தையும் தான். சுத்த முட்டாள்தனமா இல்ல” என்றான்.

“அவங்க நிலையிலேயே யோசிச்சா… அவங்க கோபம் நியாயமானது தானே” மாமியாருக்கும் மாமனருக்கும் வக்காலத்து வாங்கினாள் கயல்விழி.

“என்ன வக்கீலம்மா புருஷன எதிர்த்து வாக்குவாதம் பண்ணுறீங்களோ” அவளை சீண்டினான்.

அவன் மேல் மெதுவாக காலை தூக்கிப் போட்டவாறே “நான் வாக்குவாதம் பண்ணல. அவங்க பக்கத்துல இருந்து கொஞ்சம் யோசிக்க சொல்லுறேன்” என்றாள்.

“அவங்க எங்கள பத்தி யோசிக்க மாட்டாங்க. நாங்க மட்டும் அவங்களும் பத்தி யோசிச்சு, அவங்கள புரிஞ்சுக்கணும் அப்படித்தானே” கார்த்திகேயனுக்கு கோபம் எட்டி பார்த்தாலும், கயல்விழியின் நிலை அறிந்து சிரித்தவாறு கூறினான்.

அவனுக்கு ஒன்று மட்டும் நன்றாகவே புரிந்தது. பிரச்சினை என்று வரும் பொழுது கயல்விழி அவள் பக்கம் இருந்து மட்டும் அல்லாது எதிர்வாதியின் பக்கம் இருந்தும் யோசிப்பாள். அடுத்தவர் மனதை புண்படுத்த நினைக்க மாட்டாள். அவள் தன்னை விட்டுச் செல்ல காரணம் அவள் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியம் என்று அவள் கூறினாலும், உண்மையிலேயே அவள் அவளுடைய தந்தை மீது வைத்த அன்பு தான் காரணம். மரண படுக்கையில் இருக்கும் அவருடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று அவள் அவ்வாறான ஒரு முடிவை எடுக்க தூண்டப்பட்டிருந்தாள்.

திருமணத்தை மறுத்ததற்காக என்னுடைய தந்தை பேசிய பேச்சுக்களை கேட்டு அப்பொழுது வேண்டுமானால் அவள் கோபப்பட்டு இருக்கலாம், ஆனால் என் பெற்றோருடைய சூழ்நிலை எதுவாக இருக்குமோ என்று கருத்தில் கொண்டு அவர்களை மன்னித்து விட்டிருந்தாள்.

எனக்காக ஒன்றும் அவள் அவர்களை பொறுத்துப் போகவில்லை. மருத்துவமனையில் வீண் பிரச்சனை வேண்டாம் என்றுதான் அமைதியாக இருந்தாள். அக்கணமும் அவர்களை யோசித்து அவர்களின் சம்மதம் வேண்டுமென்று அவர்களுக்கு மரியாதை கொடுத்து, முன்னுரிமை கொடுத்து தான் முடிவெடுத்திருந்தாள். அதை அவர்கள் தான் புரிந்து கொள்ளவில்லை. இதோ இப்பொழுது கூட அவர்களை விட்டுக் கொடுக்காமல் தான் பேசிக் கொண்டிருக்கிறாள்.

கேட்டால் எனக்காக என் பெற்றோர்கள் என்பதனால் என்பாள். ஆனால் அது உண்மை இல்லை. அவளது குணமே அப்படித்தான். என்னையும் விட்டுக் கொடுக்க மாட்டாள். அவர்களையும் விட்டுக் கொடுக்க மாட்டாள். அதனால் தானே இவள் மீது எனக்கு இத்தனை காதல். இத்தனை வருடங்களாகியும் குறையாமல், வற்றாமல் அவளைத் தாண்டி எதையும் சிந்திக்க விடாமல் வைத்திருக்கிறாள். அவள் என் நினைவில் நின்றவள்.

ஏராளம் ஆசை

என் நெஞ்சில் தோன்றும்

அதை யாவும் பேச

பல ஜென்மம் வேண்டும்

ஓ ஏழேழு ஜென்மம்

ஒன்றாக சோ்ந்து

உன்னோடு இன்றே

நான் வாழ வேண்டும்

காலம் முடியலாம்

நம் காதல் முடியுமா

நீ பார்க்க பார்க்க

காதல் கூடுதே

ஓ… ஓ……. ஓ…… ஓ…

உன்னாலே எந்நாளும்

என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம்

என் மூச்சில் சேருதே உன் கைகள்

கோர்க்கும் ஓா் நொடி என் கண்கள்

ஓரம் நீா்த்துளி உன் மார்பில்

சாய்ந்து சாகத்தோணுதே

ஓ….. ஓ…….. ஓ…….. ஓ……

“பெத்தவங்க எதிரியா பாக்குற மொத ஆளு நீ தான்” அவன் சிரித்ததில் கயல்விழியும் சிரித்தாள்.

“எங்களை சேர்த்து வைக்க தான் நீ இருக்கியே” என்று அவளை தன்னுள் இறுக்கிக் கொண்டான்.

“கார்த்தி நான் ஒன்னு கேட்டா கோபப்பட மாட்டியே” கொஞ்சம் அவனை விட்டு விலகி அவன் முகம் பார்த்து நின்றாள்.

காதலிக்கும் காலத்திலும் இப்படித்தான் ஆரம்பிப்பாள்.

அவளை பார்த்து புன்னகைத்தவன் அன்று கூறிய அதே பதிலை கூறினான் “இப்படி பாவமா மூஞ்ச வச்சிக்கிட்டு கேட்டா கோவம் வருமா? கொஞ்ச தான் தோணும். நீ சொல்லு செல்லம். மாமா கோவப்பட மாட்டேன்”

அவள் என்ன கேட்க நினைத்தாளோ அதற்கு இந்த பதிலே போதுமானது. இவனுக்கு தன்மேல் இவ்வளவு காதலா? என்று கண்கள் மின்னியவள் மறுநொடி இவனை விட்டு வேறு ஒருவனை திருமணம் செய்தோமே. அதனால் தான் எனக்கு இந்த தண்டனை என்று முகம் சுருங்கினாள்.

அவள் முக மாற்றத்தை கவனித்த கார்த்திகேயனுக்கு தான் என்ன தப்பாக சொன்னோம் என்று புரியவில்லை. அதனால் அவளது காயங்கள் எவ்வாறு மீண்டும் கீறப்பட்டு விட்டது என்றும் புரியவில்லை.

“நீ என்னமோ கேட்கணும் என்ற. நான் பழைய மாதிரி பேசினது உனக்கு பிடிக்கலையா?” தன்மையாகத்தான் கேட்டான். தன்னால் இவள் காயப்பட்டுவிடக் கூடாதே என்ற அச்சம் அவன் வார்த்தையில் பொதிந்து கிடந்தது.

“என் கேள்விக்கு பதில் கிடைச்சிருக்கு. உன்ன விட்டு போன எனக்கு தண்டனையும்…” என்றவளை மேற்கொண்டு பேச விடாது விரல்கள் கொண்டு அவள் உதடுகளை பிடித்து தடுத்தவன் “அடுத்த தடவ இப்படி பேசினா விரலால தடுக்க மாட்டேன். லிப்ஸ்ஸால தான்” என்று மிரட்டுவது போல் அவள் முகம் நோக்கி குனிய, அவள் மேனியில் மின்சாரம் பாய்ந்தது போல் சிலிர்த்தாள்.

அவளை அணைத்துக் கொண்டிருந்தவனும் அதை உணர்ந்துகொள்ள, சட்டென்று தன் முகத்தை விலக்கிக் கொண்டாலும், கைகளை அவளை விட்டு நீக்கினானில்லை.

தன்னை கட்டுக்குள் கொண்டவளோ “உனக்கு என் மேல கோவம் இருந்தது எனக்கு தெரியும். அதனால தானே நீ நான் இங்க வந்தப்போ அந்த பேச்சு பேசின”

“இப்போ என்ன? உன்ன பேசினத்துக்கு என்ன அடிக்க போறியா? நான் வேணா கன்னத்தை காட்டவா? அடிக்கிறதா இருந்தா வீட்டுல வச்சி அடிடி. தப்பித்தவறி ஆபீஸ்ல வச்சி அடிச்சிடாத, மானம், மரியாதை போய்டும். கெத்தா சுத்திகிட்டு இருக்கேன். ஒரு பய மதிக்க மாட்டானுங்க” அதட்டுவது போல் ஆரம்பித்து பயந்தவன் போல் முடித்தான்.

கயல்விழி சிரிக்கவில்லை. அவள் இருக்கும் மனநிலையில் என்ன செய்வாளென்று அவளுக்குத்தான் தெரியவில்லையே.

“ஜோக்குமா ஜோக்கு சிரிக்க மாட்டியா? ஓஹ்… பழைய ஜோக்கா” என்று அவள் முறைப்பை பெற்றுக் கொண்டான்.

“சரி சொல்லு உனக்கு பதில் கிடைச்ச கேள்வி தான் என்ன?”

“லாயர் சார் விடமாட்டீங்களே” அவன் கேட்ட விதத்தில் சிரித்தாள் கயல்விழி.

“பதில் கிடைச்சதுல கேள்வியே மறந்து போச்சு” கார்த்திகேயன் கிண்டல் செய்ய,

“நான் மறக்கல. என் மேல இருந்த கோபத்துல நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணி இருப்பான்னு நினச்சேன். ஏன் பண்ணிக்கல” என்று கேட்டு விட்டு நாக்கை கடித்துக்  கொண்டாள்.

திருமணமாகி சென்றவள் திரும்பி வருவாளென்று கார்த்திகேயன் நிச்சயமாக எதிர்பார்த்து கார்த்திருக்க மாட்டான். ஆனால் அவனுக்கென்றொரு வாழ்க்கை இருக்கிறதே. கடைசிவரை திருமணம் செய்யாமல் இருந்திட கூட அவன் நினைக்கலாம். ஆனால் கோபத்தில் எடுக்கும் முடிவு வேறொரு பெண்ணை திருமணம் செய்வது தானே. அப்படியொரு முடிவை அவன் எடுக்காமல் இருக்கக் காரணம் அவன் பெற்றோர்கள் அல்லவா.

அவர்களால் தான் கயல்விழி தனக்கு கிடைக்கவில்லை என்பது அவன் மனதில் ஆழப்பதிந்து போனதால் அவன் அவர்கள் கொண்டு வந்த எந்த சம்பந்தத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அவர்கள் மீதிருந்த வெறுப்புதான், திருமணத்தின் மீதும் வந்திருந்தது. அதற்காக அவன் வேறு பெண்களையும் நாடவில்லையே. கயல்விழியை தவிர வேறொரு பெண்ணை அவனால் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை என்பது தான் உண்மை. அவன் நினைவில் நின்றவள் அவளன்றோ.

எந்த உறவு நம்மை விட்டு பிரிந்தாலும் தேற்றிக்கொள்ளும் நாம்… காதலனோ, காதலியோ பிரிந்தால், இறந்தால் மட்டும் தற்கொலை செய்யக் கூட துணிந்து விடுகிறோம். எல்லா வலிகளையும் விட காதலின் வலிதான் கொடியது. தங்க முடியாத வேதனை காதலின் பிரிவு தான்.   

கயல்விழி கேள்வியை கேட்டுவிட்டு கார்த்திகேயன் கோபப்படுவானோ என்று நாக்கை கடித்து அவன் முகம் பார்த்து நின்றாள். ஆனால் அவனோ புன்னகைத்தான்.

“அப்போ வக்கீல் ஐயா கிட்ட பதில் இருக்கு” என்று இவளும் மென்னகை செய்தாள்.

“நாம ஒருத்தங்களை லவ் பண்ணுறோம். சூழ்நிலையால் வேற ஒருத்தங்களை கல்யாணம் பண்ணிக்கிறோம். நாம லவ் பண்ணவங்கள விட நாம தேர்ந்தெடுத்தவங்க நம்மள நேசிச்சா, பார்த்துக்கிட்டா நம்ம டிசிஷன் கரெக்ட் என்று நாம சந்தோஷமா வாழ்ந்துட்டு போயிடுவோம்.

அதுவே கொஞ்சம் முரடனாக, கோபக்காரனாக, ஏன் குடிகாரனாக இருந்தா கூட நம்ம தலையெழுத்து என்று பொறுத்துகிட்டு வாழுறோம்.

சந்தேகபுத்தி உள்ளவங்களா, கொடுமைகாரங்களா இருந்தா, டிவோர்ஸ் வாங்கிட்டு போறோம், அதுலயும் சில பேர் குழந்தைகளுக்காக அனுசரிச்சு வாழ்ந்துகிட்டு தான் இருக்காங்க. அதுலயும் சிலபேர் வேறெங்கேயோ அன்ப தேடி அலையுறாங்க” கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்கிறார்கள் என்பதை கொஞ்சம் நாகரீகமாக கூறினான். 

“நான் கேட்டது வக்கீல் ஐயா ஏன் கல்யாணம் பண்ணிக்கல” என்று. அவன் கூறிய காரணங்கள் சரிதானே. சந்தோஷ் நல்லவனாக இருந்திருந்தால், அவள் வாழ்க்கை அவனோடு நல்லமுறையில் அமைந்திருக்கும்.

அவள் வாழ்க்கை இப்படியாகிருச்சே என்று கயல்விழி கார்த்திகேயனை தேடி வரவில்லை. அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தானே எண்ணினாள். அதனால் தானே அவளுக்கு நடந்த எதுவும் அவன் அறிந்து விடக் கூடாது என்றும் எண்ணினாள்.

“ம்ம்… அதே தான். நாம ஒருத்தங்களை லவ் பண்ணுறோம் என்றா, அத மறக்கிற அளவுக்கு நம்மள ஒருத்தங்க லவ் பண்ணனும். அப்படி யாரையும் நான் சந்திக்கல” என்றான்.

“ஆனா மீடியால அப்படி சொல்லல” அவனை பற்றி வரும் செய்திகளையும், அவனை சுற்றி பெண்கள் கூட்டம் அலை மோதுவதும் அவளுக்குத் தெரியாதா?

“புகழ், பணம் இருந்தா…. இந்த மாதிரி புருஷன் நமக்கு இருந்த நல்லா இருக்கும் என்று பொண்ணுங்க ஆசைப்படுறது சகஜம். ஆனா திருமணத்திற்கு பிறகு அந்த உறவை தக்க வைச்சிக்க, வேவு கூட பார்ப்பாங்க” என்று சிரித்தான்.

அவனிடம் வந்து எத்தனை ஜோடிகள் தங்களுடைய இணையை சந்தேகப்பட்டு வேறு உறவில் இருக்கிறார்களா? என்று கண்டு பிடித்து தருமாறு கேட்டிருப்பார்கள்.

அது தானே அவன் வேலை. இலவசமாக அவன் வேலை பார்ப்பதற்கு பணத்தை பெற்றுக்கொள்ளவது அவனுக்கு கசக்குமா? அநேக பிரபலங்கள் பொறாமையில் சந்தேகப்படுவார்கள். சிலர் இந்த உறவு நீடிக்குமா? என்ற அச்சத்தில் சந்தேகப்படுவார்கள். சிலரின் நடத்தையே சந்தேகப்படுவது போல் தான் இருக்கும். பணம் இருப்பதால் மட்டும் அவர்கள் வேறு உறவை நாடி செல்வதில்லை. கணவன், மனைவிக்கிடையில் காதல் இருந்தாலும் நல்ல புரிதலில்லை.

இருவரும் அமர்ந்து மனம் விட்டு பேசிக் கொண்டாலே பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். அதற்குத்தான் பல பேருக்கு நேரமில்லை. புரிதலில்லாமையால் காலம் கடக்கும் பொழுது காதலும் கரைந்தோடிப் போய் விடுகிறது என்பதை எத்தனையோ சந்தேக வழக்குகளிலிருந்து கண்டு கொண்டிருந்தான் கார்த்திகேயன்.

அவனுடைய அனுபவங்களை அவளோடு பகிர்ந்துகொள்ள, “உன்ன பேத்த லாயர் என்று நினச்சேன். நீ இந்த மாதிரி கேஸத்தான் பாத்தியா?” கயல்விழி அவனை கேலி செய்யலானாள்.

உன்ன எதிர்பார்த்து தான்

என் இதயம் வாழ்ந்ததோ

தன்னை அறியாமலே உன்னை

அது சோ்ந்ததோ

இல்லை இனி ஏதும் என்று

வாடி நின்ற போதிலே

முத்துமணி தேரில் என்னை

ஏற்றி வந்த வள்ளலே

ஒரு வார்த்தையில்

என்னை உருவாக்கினாய்

உன் உறவென்பது யுக யுகங்களை

கடந்தது தானே

உன்ன போல ஒருத்தர

நா பார்த்ததே இல்ல

உன் ஒசரம் பாத்து வானம் கூட

குறுகுமே மெல்ல

சாமி போல வந்தவனே

கேட்கும்முன்னே தந்தவனே

நான் வணங்கும் நல்லவனே

நல்ல உள்ளம் கொண்டவனே

என் ஒட்டுமொத்த

ஜென்மத்துக்கும் சொந்தம் நீ தானே

Advertisement