Advertisement

அத்தியாயம் 16

திருமணம். அவனுக்கும் அவளுக்குமான திருமணம். பெரியார் வழியில் தாலி, தாம்பூலம் எதுவுமின்றி ஊரறிய மைக்கில் உறுதி மொழி கூறி மாலை மட்டும் மாற்றி வீட்டார் சம்மதத்தோடு சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் இருவரும் தீர்மானித்து வைத்திருந்தனர்.

சட்டத்தில் அனுமதி இருக்க இணையேற்று விழாவாக சிறப்பாகவே செய்ய வேண்டும் என்பதுதான் இருவரின் ஆசையாக இருந்தது. ஆனால் காலமும் கை கூடவில்லை. காதலும் கை சேரவில்லை. அவர்களின் ஆசையும் நிராசையாகவே போயிருந்தது.

இன்று இருக்கும் சூழ்நிலையில் சுயமரியாதை திருமணத்தைப் பற்றி எல்லாம் அவனால் சிந்தித்துப் பார்க்க இயலாது. அதனால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தான்.

கயல்விழியை தன்னோடு இருத்திக்கொள்ள திருமணம் ஒன்றுதான் தீர்வு. பலவந்தமாக அவள் கழுத்தில் தாலி கட்டினால், அவள் அதை பிய்த்து தன்னுடைய முகத்தில் எறிந்து விட்டு செல்வாள். அப்படி செய்யக் கூடியவளும் கூட. தன்மீதே வழக்குத் தொடர்ந்தால் கூட ஆச்சரியம் இல்லை. புகழ் புகழ் என்று புகழை தேடி அலைந்த நான் ஒரு பெண்ணை பலவந்தமாக திருமணம் செய்து கொண்டதற்காக புகழின் உச்சியை அடைந்திருப்பேன்.

இந்த காலத்தில் போய் தாலி சென்டிமென்ட் பேசி அவளை தன்னோடு இருத்திக்கொள்வது சாத்தியமன்று. “தனக்கு ஒன்று என்றால் மட்டும்தான் அவள் தன்னோடு இருப்பாள். அதற்கு மனைவி என்ற உரிமை அவளுக்கு வேண்டும். அதற்கு திருமணம் என்று ஒன்று நமக்கு நடக்கணும். அதற்கு என் பெற்றோர்கள் சம்மதிக்க வேண்டும்” என்று தான் வெற்றிமாறன் கூறிய திட்டத்திற்கு சம்மதம் கூறி இருந்தான் கார்த்திகேயன்.

அவன் உயிருக்கு ஒன்றென்றால் நிச்சயமாக அவன் பெற்றோர்கள் இறங்கி வருவார்கள் என்று கார்த்திகேயனுக்கு தெரியும். கயல்விழி ஒத்துக்கொள்வாளா? அவன் நினைத்தது போல் அவள் மறுக்க வேறு வழி இல்லாமல் தான் தாலியை அணிவித்திருந்தான். சாக கிடக்கும் அவனை கஷ்டப்படுத்துவாளா? நிச்சயமாக தாலியை கழட்டி அவன் முகத்தில் விட்டெறிய மாட்டாள் என்ற தைரியத்தில் தான் அணிவித்திருந்தான்.

“டேய் என்னடா பண்ண?” வள்ளி கத்திவிட்டு மகன் பதட்டப்படக் கூடாது என்று வாயை இறுக மூடிக் கொண்டாள்.

“டேய் என்னடா இப்படி பண்ண? அதான் நாம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டோமே” கார்த்திகேயன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்காத சிவபாலன் கோபத்தை அடக்கியவாறு கூறினான்.

மருத்துவர் கூறியதை கேட்டு மகன் மீது பாசம் தலைதூக்கியது என்னவோ உண்மைதான். அவன் சொல்வதெல்லாம் செய்வதாக கூறுவதும் உண்மைதான். அதற்காக செய்துவிட சிவபாலன் ஒன்று முட்டாள் இல்லையே.

பிள்ளை பாசத்தில் தாலியை எடுத்து வள்ளி கொடுத்து விடக்கூடும். ஆனால் சிவபாலன் அவ்வாறு செய்து விடமாட்டான். நிதானமாகத்தான் செயல்படுவான். அதுவும் கார்த்திகேயனுக்கு தெரியும். காலம் கடந்தால் தந்தை ஏதாவது திட்டமிட்டு திருமணத்தை நடக்க விடாமல் செய்துவிடுவார் அதற்கு ஆயிரம் காரணங்கள் தான் இருக்கின்றனவே. அதனால் தானே அவசர அவசரமாக கயல்விழியின் கழுத்தில் தாலியை அணிவித்திருந்தான்.

“இல்ல கயல் எனக்கு கிடைக்க மாட்டாளோ என்று ஒரு பயம், அதான் சட்டுனு இப்படி பண்ணிட்டேன்” என்றவன் பார்த்திபனை பார்த்து “நாளைக்கு எனக்கும் கயலுக்கும் கல்யாணம் நடக்கணும் ஏற்பாடு பண்ணு” என்றான்.

“என்ன அவசரம் கார்த்தி? முதல்ல நீ ஹாஸ்பிடல்ல இருந்து குணமாகி நல்லபடியாக வீட்டுக்கு வா” என்றாள் கயல்விழி.

அவள் திருமணத்தை மறுக்கிறாள் என்று குழந்தை ஒன்று அங்கிருந்தால் கூட புரிந்துகொள்ளும். வள்ளிக்கும், சிவபாலனுக்கும் புரியாதா என்ன?

“ஏன் இவள் மறுக்கிறாள்? என் பையன் செத்துடுவான் என்று மறுக்கிறாளா?” வள்ளிக்கு கோபம் வந்தது “ஏம்மா இங்க வா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள் வள்ளி.

“இப்போ என்ன கயல் கிட்ட பேச இருக்கு?” கார்த்திகேயன் உள்ளுக்குள் பதறினாலும் வெளியே முறைத்துக் கொண்டு நின்றான்.

“என்னப்பா என் மருமக கிட்ட நான் பேச கூடாதா?” வள்ளி மகனை சமாதானப்படுத்தினாள். என்னதான் வள்ளி கூறினாலும், கார்த்திகேயன் கயல்விழியை வள்ளியோடு பேச விட விரும்பாமல் அவளை தன்னோடு இருத்திக் கொண்டான்.

“என்னடா தாலியைத்தான் கட்டிட்டியே திரும்ப என்ன கல்யாணம் பண்ண இருக்கு?” பார்த்திபன் தம்பியை முறைக்க முடியாமல் கேட்க,

“அது கிறிஸ்டியன் தாலி, நம்ம முறைப்படி கோவில்ல கல்யாணம் பண்ணனும்.  இல்லன்னா அம்மா அப்பாவும் நடந்தது கல்யாணமே இல்லைன்னு சொல்லிடுவாங்க” என்றான் கார்த்திகேயன்.

குடும்பத் தாலியைத் தான் போட்டிருந்தான். மறதியால் உளறுகிறான் என்று “கபாலத்துல பட்ட அடி, சும்மா நச்சுன்னு பட்டு இருக்கு போல. எப்படி எல்லாம் நீ யோசிக்கிற” சிரித்தான் பார்த்திபன். 

“நான் ஏதாவது உதவி செய்யணுமா?” கார்த்திகேயன் முன்னால் வந்து நின்றான் விக்னேஷ்.

“நீ கயலோட பிரண்டு தானே. நீ அவள் கூடயே இரு” என்றான்.

“விடிஞ்ச உடனே கல்யாணம். அவ உங்களுக்கு அடிபட்டது என்று தெரிந்ததிலிருந்து ஒன்றுமே சாப்பிடல. அழுதுகிட்டே இருந்தா. நைட்டு பூரா உங்க கூடவே இருந்தா மயக்கம் போட்டு கூட விழ சான்ஸ் இருக்கு. இப்படியே விட்டுட்டு போகவா? இல்ல நானும் பசி தூக்கம் மறந்து கூடவே இருக்கவா” கொஞ்சம் நக்கலாகத்தான் கேட்டான் விக்னேஷ்.  கார்த்திகேயன் நடிப்பதை அவன் சரியாகக் கண்டு கொண்டிருந்தான்.

தன்னை பற்றி மட்டும் யோசித்தோமே கயல்விழிக்கு ஏதாவதாகி விட்டால்? ” என்ன நீ ஒன்னும் சாப்பிடாம இருக்குறியா?” கயல்விழியை ஏறிட்டவன் “முதல்ல போ… போய் சாப்பிடு” கோபமாக இருப்பது போல் காட்டிக் கொண்டான்.

“நான் பாத்துக்குறேன்” என்று கார்த்திகேயனின்  தலையணையை சரி செய்வது போல் அவன் புறம் குனிந்து “ரொம்ப நடிக்காதீங்க சார். மாட்டிக்க போறீங்க. கயல அவ பாட்டுல விடுங்க. கல்யாணத்துக்கு நான் கூட்டிட்டு வாரேன்” என்று கூறினான் விக்னேஷ்.

“சாப்பிட்டு வீட்டுக்குப் போ. போய் நல்லா தூங்கு. எந்திரிச்சு கல்யாணத்துக்கு ரெடியாகி வா. வராம வீட்டிலேயே இருந்துடாத. அப்புறம் என்ன உசுரோட பார்க்க முடியாது” மிரட்ட வேறு செய்தான். அது அவளுக்கு மட்டுமல்ல அவன் பெற்றோருக்கும் சேர்த்து தான்.

“ரொம்ப மிரட்டாத” அவனிடம் கோபத்தை காட்ட முடியாமல் என்ன பேசுவதென்றும் புரியாமல் விடைபெறறாள் கயல்விழி.

வெளியே வந்த கயல்விழி பத்தடி கூட நடந்து இருக்க மாட்டாள் அங்கேயே தொப்பை என்று அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.

அவளை சமாதானப்படுத்திய விக்னேஷ் “என்ன விழி கார்த்திகேயனை உனக்கு பிடிக்கலையா? நீ அவர லவ் பண்ணுற தானே. அவரோட பெத்தவங்க பிரச்சனை பண்ணுவாங்க என்று நினைக்கிறியா? அதான் அவங்க சம்மதம் கிடைச்சிருச்சே”

அன்று வெற்றிமாறன் வந்த பொழுது கார்த்திகேயன் மற்றும் விக்னேஷின் பேச்சு தடைபட்டது என்னவோ உண்மை தான். அதன்பின் இருவரும் பேசியிருக்க, கார்த்திகேயன் தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் கூறியிருந்தான். என்ன உதவியென்றாலும் நான் செய்கிறேன் என்று விக்னேஷ் கூறியிருந்தாலும் கார்த்திகேயன் அவனை தன்னுடைய திட்டத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை.

உதவி செய்கிறேன் என்ற பெயரில் பதட்டத்திலோ, ஆர்வக்கோளாரிலோ விக்னேஷ் சொதப்பிவிடக் கூடாது என்றுதான் அவனிடம் எதுவும் கூறாமல் இருந்தான். ஆனால் கார்த்திகேயன் அவசரப்பட்டதை பார்த்தே நடிப்பதை புரிந்து கொண்டவன் கயல்விழியை திருமணத்திற்கு மனதளவில் தயார்படுத்த முயன்றான்.

“நான் கார்த்தியை லவ் பண்ணேன். அப்பாக்கு சத்தியம் பண்ணி கொடுத்ததால் அப்பா பார்த்த மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா இன்னைக்கு வரைக்கும் நான் கார்த்தியை மறக்கல, அவன மட்டும் தான் காதலிக்கிறேன். என் வாழ்க்கைல நடந்த எதுவுமே அவனுக்கு தெரியாது. தெரிஞ்சா அவன் தாங்க மாட்டான்.  எனக்கு அவனோட சந்தோஷம் ரொம்ப முக்கியம். நான் அவன் கூட இருந்தா ஒரு நாள் இல்ல ஒரு நாள் கண்டிப்பா அவனுக்கு உண்மையை எல்லாம் தெரிஞ்சிடும். ரொம்ப வருத்தப்படுவான். என்னால் அவன் நிம்மதி இல்லாம கஷ்டப்படுறத பார்த்துகிட்டு இருக்க முடியாது. நான் அவனுக்கு வேணாம். இந்த கல்யாணம் நடக்கக்கூடாது கூடாது” என்றாள்.

உன்னை நீங்கி எந்நாளும்

எந்தன் ஜீவன் வாழாது

உந்தன் அன்பில் வாழ்வதற்கு

ஜென்மம் ஒன்றுப் போதாது

உன்னை எண்ணும் உள்ளத்தில்

வேறு எண்ணம் தோன்றாது

காற்று நின்றுப் போனாலும்

காதல் நின்றுப் போகாது

எங்கெங்கோ தேடிய வாழ்வை

உன் சொந்தம் தந்தது இங்கே

சந்தங்கள் தேடிய வார்த்தை

சங்கீதம் ஆனது இங்கே

ஆசைக் காதல்

கைகளில் சேர்ந்தால்

வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்

காற்றினில் சாரல் போலப் பாடுதே

பூக்களில் தென்றல் போலத் தேடுதே

நீ வரும் பாதையில்

கண்களால் தவம் இருப்பேன்

என்ன மாதிரியான அன்பு இவர்களுடையது. கார்த்திகேயன் என்னவென்றால் கயல்விழிக்கு நடந்ததை எண்ணி அவளை மீட்டெடுக்க அவளுக்காக துடிக்கிறான். இவளோ அதையே காரணம் காட்டி அவனுக்காக வருந்துகிறாள். வாயடைத்துப் போன விக்னேஷ் தான் கயல்விழி கார்த்திகேயன் கூட சேர்வது தான் சரி என்று எடுத்த முடிவை எண்ணி பெருமிதம் கொண்டான்.

“நீ நினைக்கிறது தப்பு விழி. கார்த்திகேயனுக்கு அடிபட்டும், அவர் உன் நினைப்பாகவே தான் இருக்காரு. எங்க உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாமல் போகுமோ என்றுதான் பயப்படுறாரு. நீ அவர் கூட இல்லைனா தான் அவர் வருத்தப்படுவார். நீ அவர் கூட இரு. அதுதான் உனக்கும் நல்லது. அவருக்கும் நல்லது” கார்த்திகேயன் நடிப்பதை அறிந்தும் அவள் நலனில் அக்கறை கொண்டு உண்மையை மறைத்தான்.

இத்தனை வருடங்களில் விக்னேஷ் சொன்னால் கயல்விழி கேட்பாள். அதை பற்றி யோசிப்பாள். சரி என்று தலையை ஆட்டினாள்.

“சரி வா முதல்ல சாப்பிடு. நல்லா தூங்கி ரெஸ்ட் எடு. நாளைக்கு கல்யாணத்துல சிரிச்ச முகமா, பிரெஷா இருக்கணும் இல்ல” கிண்டல் செய்தவரே அவளை அழைத்து சென்றான் விக்னேஷ்.

கார்த்திகேயன் இறந்து விடுவான் என்று அறிந்து தான் கயல்விழி திருமணத்தை மறுக்கிறாள் என்று நினைத்து அவளை திட்டுவதற்காக அவள் பின்னால் வந்த வள்ளியோ கயல்விழி பேசியதை கேட்டு அங்கேயே நின்று விட்டாள்.

கயல்விழியின் வாழ்க்கையில் இவ்வளவு ஒரு கொடூரம் அரங்கேறி இருக்கும் என்று வள்ளி நினைக்கவில்லை. ஏதோ கணவன் அடித்திருப்பான் அதனால் விவாகரத்து வாங்கி இருப்பாள் என்று தான் எண்ணினாள். இந்த காலத்து பெண்கள் தான் கணவன் சண்டை போட்டாலும், அடித்தாலும் விவாகரத்து பெற்றுக் கொள்கிறார்களே என்று எண்ணம் தான் வள்ளிக்கு.

தன்மகன் இவளை எவ்வளவு நேசித்திருந்தாள் அவன் வருந்தக் கூடாது என்று இவள் அதைக் கூட சொல்ல விரும்பாமல் திருமணத்தை மறுக்கிறாள். என் மகனுக்கு சாவு கிட்டியதை அறிந்து கொண்டால் நிச்சயமாக இவள் அவனை கைவிடமாட்டாள் என்று வள்ளிக்கே நன்றாக புரிந்து. அவன் தலைவிதி எப்படி இருக்கிறதோ அதன்படி தான் நடந்து தீரும் என்று எண்ணியவள் இருவரையும் திருமணம் செய்து வைக்க தீர்மானித்தாள். அதற்கு முக்கிய காரணமும் கார்த்திகேயன் ஜாதகம் அமைந்திருந்தது.

தான் பாசத்தை கொட்டி வளர்த்த மகன் தன் சொல்பேச்சு கேட்பதில்லை என்ற ஆதங்கத்தில் தான் ஜோசியரை நாடி இருந்தாள். அவனுக்கு இப்பொழுது நேரம் சரியில்லை என்றும், கண்டம் இருக்கிறது என்றும் அவனை அவன் போக்கில் விட்டு விடும் படியும், அதனால் பிரிந்தவர்கள் கூட ஒன்று சேர வாய்ப்பிருக்கு என்று சில பரிகாரங்களை கூறியிருந்தார்.

பரிகாரத்தை செய்ய முன் அவன் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்க வள்ளி கயல்விழியை கார்த்திகேயனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தாள். ஆனால் சிவபாலன் திருமணத்தை எவ்வாறு நிறுத்துவது என்று தான் யோசித்துக் கொண்டிருந்தான்.

தந்தையின் முகத்தைப் பார்த்து அவர் என்ன நினைக்கிறார் என்று புரிந்து கொண்ட கார்த்திகேயனுக்கு சிரிப்பாக இருந்தது. “பார்த்தி நீங்க சாப்பிடலையா? அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சாப்பாடு வாங்கிட்டு வா. எனக்கு தல ரொம்ப வலிக்குது. நான் தூங்கணும்” என்றான்.

உண்மையிலேயே அவன் தலை வலித்தது. நாளை எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்று நினைக்கையில் தலை ஒரு புறம் வலித்தது என்றால், வெற்றிமாறன் கட்டையால் அடித்த அடியும் வலித்தது. ஆம் வெற்றிமாறன் கார்த்திகேயன் தலையில் பலமாக அடித்து இருந்தான்.

“டேய் ஏன்டா அடிச்ச?” என்று கார்த்திகேயன் வலித்ததில் வெற்றிமாறனை ஒருமையிலேயே பேசியிருந்தான்.

அதையெல்லாம் கண்டு கொள்பவனா வெற்றிமாறன்? “கனவு என்றாலும் நியாயம் வேண்டாமா என்று கேட்கும் ஊரு நம்ம ஊரு. அடிபட்டா காயம் வேணாமா? நடிப்பென்றாலும் உண்மையாக இருக்க வேண்டும் அல்லவா. காயம் எங்கே என்று கேட்டால் என்ன சொல்வது? அதுக்குத்தான் இந்த அடி” என்றான்.

நான்கு தையல் போட்டு இருக்க, மருந்தின் வீரியம் குறைய தலை வலிக்க ஆரம்பிக்கவே படுத்துக்கொண்டான்.

மனதில் நின்ற

காதலியே மனைவியாக

வரும்போது சோகம் கூட

சுகமாகும் வாழ்க்கை இன்ப

வரமாகும்

உன் வாழ்வில்

செல்வங்கள் எல்லாம்

ஒன்றாகச் சோ்ந்திட

வேண்டும் பூவே உன்

புன்னகை என்றும்

சந்தோஷம் தந்திட

வேண்டும்

ஆசைக் காதல்

கைகளில் சோ்ந்தால்

வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆனந்தம் ஆனந்தம்

பாடும் மனம் ஆசையில்

ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

இந்த ஞாபகம் பூமழை தூவும்

காற்றினில் சாரல்

போல பாடுவேன் காதலைப்

பாடிப் பாடி வாழ்த்துவேன்

நீ வரும் பாதையில்

பூக்களாய்ப் பூத்திருப்பேன்

கார்த்திகேயன் கண் விழிக்கும் பொழுது காலை எட்டு மணியாகி இருந்தது. அறையில் வள்ளி மட்டும் தான் இருந்தாள் சிவபாலனும் பார்த்திபனும் வெளியே சென்றிருந்தனர்.

“பார்த்தியும், அப்பாவும் எங்க?” என்று கேட்டவாறு எழுந்தமர்ந்தான் கார்த்திகேயன்.

“சாப்பாடு வாங்க கேண்டின்கு போய் இருக்காங்க” என்று வள்ளி சொன்னதும் கட்டிலை விட்டு இறங்கிய கார்த்திகேயன் கழிவறைக்குள் நுழைந்தான்.

அவன் முகம் மட்டுமல்ல உடலையும் கழுவி துணியையும் மாற்றிக் கொண்டு வெளியே வர கப்பில் அவனுக்கு தேநீரை ஊற்றி வள்ளி கொடுக்க, அமைதியாக அதே பருகியவன் அலைபேசியில் திருவை அழைத்து பேசிவிட்டு, விக்னேஷ் அழைத்துப் பேசினான்.

வள்ளி அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாலே ஒழிய எதுவும் பேசவில்லை. சிவபாலனும் பார்த்திபனும் சாப்பாடோடு வர கார்த்திகேயன் அமைதியாக அதை வாங்கி உண்டான்.

கார்த்திக்கு எனக்குத்தான் தலையில் அடிபட்டு அடிக்கடி அவன் சொல்வதையே மறந்து விடுகிறானே என்ற எண்ணத்தில் “அப்பா கார்த்தி நீ இப்ப இருக்கிற நிலைமையில கல்யாணம் அவசியமா? அவசரம் இல்லையே. மெதுவா பண்ணிக்கலாமே” என்று மெதுவாக சிவபாலன் பேச்சை ஆரம்பித்தான். கார்த்திகேயன் அவன் கூறியதை மறந்து விட்டால் யாருக்கு கல்யாணம் என்று கேட்டு அவனே கல்யாணத்தை நிறுத்தி விடுவான் என்ற ஒரு நப்பாசை தான்.

பார்த்திபனிடம் திருமண வேலைகளை பார்க்குமாறு கார்த்திகேயன் கூறியது சும்மாதான். எந்த வேலையும் அவனிடம் ஒப்படைக்கவும் இல்லை. செய்ய சொல்லவும் இல்லை. சிவபாலன் என்ன செய்ய போகிறான் என்று அறிந்து கொள்ளவே பார்த்திபனிடம் அவ்வாறு கூறினான்.

சொந்த ஊர் என்றால் சிவபாலன் ஏதாவது செய்திருப்பானோ என்னவோ. இந்த ஊரில் என்ன செய்வது என்று புலம்பத்தான் முடிந்தது. வள்ளியிடம் புலம்பினால் வள்ளியோ இந்த முறை மகனுக்கு பக்கபலமாக இருந்து விட்டாள். பார்த்திபனை சொல்லவே வேண்டாம் தம்பி இருக்கும் நிலைமையில் அவனை கஷ்டப்படுத்த முடியுமா? அவன் போக்கில் விட்டு விடும்படி கூறிவிட சிவபாலன் நினைத்தது நடக்கவில்லை என்றதும் கார்திகேயனிடமே பேசிப் பார்கலானான்.

தந்தையின் அன்பான பேச்சுக்கு அசருபவனா கார்த்திகேயன்? அவரை ஏறெடுத்தும் பார்க்காமல் அமைதியாக சாப்பிட்டு முடித்தவன், திரு வரவும் அவன் கொண்டு வந்திருந்த வேட்டி சட்டையை அணிந்து கொண்டு “நான் திருவோட ரெஜிஸ்டர் ஆபீஸ் கிளம்புறேன் நீங்க வண்டியில வந்துடுங்க. வண்டி டிரைவரோட கீழ நிக்குது”

” என்ன” என்று வள்ளி கேட்பதும்

 “டேய் நில்லுடா” என்று பார்த்திபன் சொல்வதும்

 “கார்த்தி நில்லுப்பா” என்று சிவபாலன் சொல்வதும்

எதையுமே காதில் வாங்காது எதற்குமே பதில் சொல்லாது கார்த்திகேயன் திருவோடு கிளம்பி சென்று விட்டான். 

உனக்கு உடம்பு முடியாது. உன்னை தனியாக விட முடியாது என்று ஏதாவது காரணம் கூறி அவனை மருத்துவமனையில் இருத்திக் கொள்ளத்தான் பார்ப்பார்கள். திருமணத்தை தள்ளி போட முடியாது. அவர்களோடு வாக்குவாதம் செய்து கொண்டிருக்க நேரமில்லை. கயல்விழி வந்து கொண்டிருக்கிறாள் அவள் வருவதற்குள் அங்கே தான் நிற்க வேண்டும் என்று தான் கிளம்பி விட்டான்.

இப்பொழுது அவனுக்கு எல்லாவற்றையும் விட எல்லாரையும் விட அவள் தான் முக்கியம். அவள் மட்டும் மாட்டேன், முடியாது என்று விட்டால் அவனுடைய திட்டம் எல்லாமே வீணாகிவிடும். தாலியை மட்டும் அணிவித்தால் போதுமா? பதிவுத் திருமணம் செய்து கொண்டால் தானே யாராலயும்.. ஏன் அவள் நினைத்தால் கூட அவனை விட்டு பிரிந்து செல்ல முடியாது. கொஞ்சம் சுயநலமாகத்தான் யோசித்தான் அதுவும் அவளுக்காக. அவன் காதலுக்காக.

மருத்துவமனையை விட்டு கயல்விழி சென்றால் எங்கே மனம் மாறிவிடுவாளோ என்று தான் கார்த்திகேயன் அவளை செல்ல விடாது கையை பற்றியவாறு தன்னிடம் அமர்த்திக் கொண்டிருந்தான்.

தான் தூங்கிய பிறகு கயல்விழியிடம் தந்தை ஏதாவது பேசி அவளை துரத்திவிட்டு இருக்கவும் கூடும். விக்னேஷ் என்ற ஒருவனால் தான் தங்களுக்கு திருமணமே நிகழப் போகிறது என்று கார்த்திகேயனுக்கு புரிய அவனுக்கு எவ்வாறு நன்றி சொல்வது என்று யோசித்தான்.

நடந்த எல்லாவற்றையும் சிந்தித்தவாறு கார்த்திகேயன் வந்து சேர கயல்விழியும் விக்னேஷும் வண்டியில் இருந்து இறங்கி கொண்டிருந்தனர்.

அவளைப் பார்த்து இவன் புன்னகைக்க அவளோ வண்டியில் இருந்து வேறு யாரும் இறங்கவில்லையா என்று தான் பார்த்தாள்.

அவள் பார்வையை படித்தவனோ “எல்லாரும் பின்னாடி வந்துகிட்டு இருக்காங்க” என்றான்.

பதில் எதுவும் பேசாமல் அவனோடு உள்ளே நடந்த கயல்விழி ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டாள். அவள் முகமோ தெளிவில்லாமல் இருக்க, “வந்துடுவாங்க” என்று அவள் கையை தன் கையேடு கோர்த்துக் கொண்டான் கார்த்திகேயன்.

கயல்விழிக்கு படபடவென்று வந்தது அது என்ன உணர்வென்று அவளுக்கு புரியவில்லை. நடப்பது எல்லாம் சரியா? தவறா? என்று புரிந்து கொள்ளும் மனநிலையிலும் அவளில்லை. ஆனால் ஒன்றை மட்டும் அவள் தெளிவாக உணர்ந்து கொண்டிருந்தாள். அது கார்த்திகேயனை விட்டு விலகி இருப்பது மட்டும் சாத்தியமன்று என்பதுதான்.

விக்னேஷும் திருவும் தான் அவர்களை அழைக்கும் வரை ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா? தேவையான எல்லாம் கொண்டு வந்திருக்கிறோமா? என்று சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.

கார்த்திகேயனை பொறுத்தவரையில் என்று அவன் கயல்விழியை காதலிக்க ஆரம்பத்து விட்டானோ அக்கணமே அவளை மனைவியாக நினைக்க ஆரம்பித்து இருந்தான். அதனால் தான் இன்று வரை அவனால் அவளை மறக்க முடியவில்லை.

சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் மற்றவர்களுக்காக. அவனுக்கு அதெல்லாம் தேவையில்லை. சட்டப்படி திருமணம் செய்தால் போதும் என்று நினைப்பவன் அவன். சுயமரியாதை திருமணம் கூட கயல்விழுக்காக ஒத்துக் கொண்டிருந்தான்.

அதற்காக சாத்திர, சம்பிரதாயங்களை மதிக்காதவனும் அல்ல. நம் முன்னோர்கள் காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள் என்று பேசுபவன்.

இப்பொழுது அவன் செய்வதெல்லாம் கயல்விழி என்ற ஒருத்திக்காக. அவள் மன நிம்மதிக்காக. எல்லாம் முறைப்படி நடக்க வேண்டும் என்பதற்காக.

இவர்களே உள்ளே அழைக்கும் நேரத்தில் பார்த்திபனோடு வள்ளியும், சிவபாலனும் வந்து சேர பாதையை பார்த்தவாறு அமர்ந்திருந்த கயல்விழியின் முகம் தெளிந்தது.

கயல்விழிக்கு விக்னேஷ் சாட்சி கையொப்பமிட, கார்த்திகேயனுக்கு திரு சாட்சி கையொப்பமிட்டான். ஏற்கனவே பொன் தாலி பூட்டியதால் மாலைகளை மட்டும் மாற்றிக் கொண்டனர். முறைப்படி எல்லாம் இனிதே நிகழ்ந்தது.

“சார் உங்களுக்கு கல்யாணமானத மீடியாக்கு சொல்லணும் இல்ல” கேட்டது திரு தான்.

பலருடைய அந்தரங்க வாழ்க்கையை எட்டிப் பார்க்கும் கார்த்திகேயனின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வென்றால் சும்மா விடுவார்களா? கயல்விழி யார்? என்ன? என்று தோண்டி துருவி அவள் வாழ்க்கை வரலாற்றையே கதை பேசி கார்த்திகேயனை தியாகியாக்கி விடுவார்கள்.

கயல்விழியின் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் அவன் பெற்றோர்கள் அறிந்து கொண்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாய் மல்லுக்கு நிற்பார்கள். அவர்களை கூட அவன் ஒதுக்கி வைத்து விடுவான். கயல்விழியை சமாளிக்க முடியுமா? அவன் எதற்காக அவளை மணந்தனோ, அதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

“கயல் ஒரு பெரிய கேசை முடிக்கட்டும். என் வைஃப் என்று நானே சொல்லிக்கிறேன். கயல்விழி பார்த்து கண் சிமிட்டியவன் “ஆபீஸ்ல இருக்குறவங்களுக்கு லஞ்ச் மட்டும் ஏற்பாடு பண்ணிடு” என்று விட்டு, பெற்றோரை பார்த்து “நீங்க எல்லோரும் லஞ்சுக்கு வரீங்களா? இல்ல இப்படியே ஊருக்கு கிளம்புறீங்களா?” என்று கேட்டான்.

அவர்கள் வரவேண்டும் என்று கயல்விழிக்கு எண்ணம் இருந்தாலும் “யார் வீட்டுக்கு யாரை அழைக்கிறாய்” என்று கேட்டு விடுவார்களோ என்று அமைதியாக நின்றிருந்தாள்.

அவளுக்குத் தெரியவில்லை. கார்த்திகேயன் அழைக்கும் முதல் முறை இதுதான் என்று.

“இல்லப்பா நாங்க இப்படியே கிளம்புறோம்” சிவபாலனுக்கு இருக்கவே பிடிக்கவில்லை. பட்டென்று சொல்லிவிட்டான். ஊருக்கு வா என்று கூட அழைக்கவில்லை.

ஆனால் வள்ளிக்கு மனம் கேட்கவில்லை. “என்னங்க பேசுறீங்க? வீட்ல நடக்க வேண்டிய சாத்திர, சம்பிரதாயங்கள் இருக்கே. இந்த பொண்ணுக்கு என்ன தெரியும்”

“அம்மா திரும்ப ஆரம்பிச்சிடாத” பார்த்திபன் அதட்டினான்.

“இல்லடா…”

“அத அவங்க பார்த்துப்பாங்க” அவனே எத்தனை நாள் உசுரோட இருக்கப் போறானோ, இதுல சாத்திர, சம்பிரதாயம் ரொம்ப முக்கியம் என்று மனைவியை முறைத்த சிவபாலன் வலுக்கட்டாயமாக வள்ளியை அழைத்துக்கொண்டு கிளம்பி இருந்தான்.

அதற்கெல்லாம் கவலைப்படுபவனா கார்த்திகேயன்? “வீட்ல என்ன ஏற்பாடு செய்யணுமோ சொல்லு செஞ்சிடுறேன்” என்று கயல்விழியை பார்த்து கூற அவனை பார்த்து புன்னகைத்தாள் அவள்.

Advertisement