Advertisement

அத்தியாயம் 14

காமினியின் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வெற்றிமாறனின் உதவியால் காமினியின் வழக்கின் குற்றவாளிகளை பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த முடிந்தது.

பணத்துக்காக மட்டுமன்றி, புகழுக்காகவும் வழக்குகளை பார்த்து பார்த்து தேர்வு செய்பவன் கார்த்திகேயன். யாருக்காக புகழை சம்பாதித்தானோ, அவன் எதை அவளிடம் ஒப்புவிக்க துடித்தானோ அவள் அந்த கயல்விழியே அவனருகில் இருக்கும் பொழுது புகழின் போதை தெளிந்து விட்டது. அதை விட அவளுக்கு நடந்த கொடுமைகளை அறிந்த பின் பாலியல் வன்கொடுமை புரிவோரை உயிரோடு எறித்துக் கொல்லுமளவுக்கு கோபம் தலைக்கேறி, தப்பித்த குற்றவாளிகளை உள்ளே போடும் முயற்சியில் இறங்கினான். முடிக்கப்படாத பழைய வழக்குகளை கூட விடாமல் தேடித்தேடி படித்துக் கொண்டிருந்த பொழுது தான் காமினி அவனிடம் வந்து சேர்ந்தான்.

பழைய வழக்குகளில் சாட்ச்சிகளையும், ஆதாரங்களையும் திரட்டுவது மிகவும் சிரமம். சமீபத்தில் காமினிக்கு நடந்த சம்பவத்திலிருந்து குற்றவாளி தப்பிக்க முடியாதபடி ஆதாரங்களை திரட்ட வேண்டும். இல்லையாயின் ஆதாரங்களை கலைத்து விடக் கூடும் என்று முடிந்த அளவு கார்த்திகேயன் ஆதாரங்களை சேகரித்திருந்தான். அப்படியிருந்தும் காமினிக்கு இந்த கொடுமையை இழைத்தவர்கள் யார் என்று அறிய முடியவில்லை.

திரு கொடுத்த சீசீடிவி காட்ச்சிகளில் சண்முகம் ஆடிஷன் மேற்கொண்ட அறையை விட்டு வெளியே வரவேயில்லை. அப்படியிருக்க, காமினி வந்ததே அவனுக்கு தெரியவில்லை என்றிருந்தான்.

அறையில் அமர்ந்திருந்தவர்களை விசாரித்ததில் அவர்களும் ஆடிஷனுக்கு வந்ததாக கூறியிருக்க, அவர்களை காமினியை அமர வைத்தவன் மாத்திரமன்றி ஒரு பெண் கூட அமரும்படி கூறியதாக கூறினர்.

ஒட்டு தாடியும், விக்கும் அணிந்து காமினியை பக்கத்து அறையில் அமர வைத்தவன் பிரேம். ஒருவாறு அவனை பிடித்து விசாரித்ததில் அவனும் ஆடிஷனுக்கு வந்தவனாம். ஆடிஷன் நடக்கும் அறைக்கு வெளியே நின்று கொண்டு நிற்க முடியுமா? என்ன செய்வது என்று யோசிக்கையில் பக்கத்து அறையில் சத்தமாக பேசுவதை கேட்டு எட்டிப் பார்த்திருக்கிறான். ஒரு பெண் ஆடிஷனுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாள்.

அவள் சுஜாதா. இவனை பார்த்த அவளோ “ஆடிஷனுக்கா வந்தீங்க உள்ள வாங்க” என்று அழைத்திருக்க இருவரும் சேர்ந்து பயிற்சி எடுக்கலாயினர்.

கதவு திறந்தே இருந்தபடியால் வருபவர்கள் எல்லோரும் இந்த அறை ஆடிஷனுக்கு வருபவர்கள் அமர்ந்திருப்பதற்காக ஏற்பாடு செய்த அறை என்று எண்ணி அமர்ந்திருக்க, பிரேமும் அனைவரையும் சகஜமாக அங்கே அமர வைத்தான். அப்படித்தான் அவன் வெற்றிமாறனிடமும் ,கார்த்திகேயனிடமும் வாக்குமூலம் கொடுத்திருந்தான்.

அந்த அறை சுஜாதாவின் பெயரில் இருந்தது. சுஜாதாவை அழைத்து விசாரித்ததில் சுஜாதாவும் ஆடிஷனுக்கு வந்ததாகத்தான் கூறினாள். பூனேவில் இருந்து வந்ததால் முதல் நாளே வந்து அறை எடுத்து தங்கியதாக கூறியவள், ஆடிஷனை முடித்துவிட்டு ஊர் சுற்ற சென்றதாகவும்,  பாரில் சந்தித்த ஒருவனோடு குடித்துவிட்டு அவனோடு அவன் வீட்டுக்கு சென்றதாக கூறினாள். இரவில் அறையில் தங்காததால் காமினிக்கு என்ன நடந்தது என்று தனக்கு தெரியவில்லை என்றிருந்தாள்.

“யேன்ம பூனேல இருந்து வந்தன்னு சொல்லுற. கைல துணிப்பை, பொருள் கொண்டு வந்திருப்பியே. அதெல்லாம் அப்படியே ரூம்ல விட்டுட்டு போய்டியா?” சந்தேகமாக பார்த்தான் கார்த்திகேயன்.

“ரெண்டு செட் துணி தான் சார் கொண்டு வந்தேன். எந்த பொருளும் காஸ்டலியானது இல்ல. காணாம போனாலும் பிரச்சினை இல்ல” சிரித்தவாறே தான் கூறினாள் சுஜாதா.

குளிர்பானம். குளிர்பானம் குடித்ததனால் தானே காமினி மயங்கி விழுந்தாள். அப்படியாயின் அந்த குளிர்பானத்தை யார் கொடுத்தார். அதை பற்றி விசாரித்தால் எல்லோருக்கும் தான் குளிர்பானம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை சண்முகம் தான் ஏற்பாடு செய்திருந்தான். ஆனால் அதை அவன் கொடுக்கவில்லை. கொடுத்தது மேன்ஷனில் வேலை பார்ப்பவர். காமினிக்கு கொடுத்ததில் மட்டும் எப்படி மயக்க மருந்து கலக்கப்பட்டு இருக்கக்கூடும்? உண்மையில் கலந்தது மயக்க மருந்து அல்ல போதை மருந்து.

மேன்ஷனில் எந்த போதை மருந்தும் பாவணையில் இல்லை. அப்படி இருக்க வேலை பார்ப்பவர்களிடம் போதை மருந்து வர வாய்ப்பு இல்லை. அதை தரவாக விசாரித்து விட்டான். அவ்வாறு இருக்க யார் காமினிக்கு போதை மறந்து கொடுத்திருக்க முடியும்? அங்கிருந்த யாரோ ஒருவர் தான் கொடுத்திருக்க வேண்டும். அறையின் உள்ளே எந்த சீசீடிவிகளும் இல்லையே. எவ்வாறு கண்டுபிடிப்பது? அது யார் என்று கார்த்திகேயனுக்கு புரியவில்லை.

கார்த்திகேயன் இந்த வழக்கால் நிம்மதியை தொலைத்தான். சீசீடிவி காட்சிகளை யாரும் மாற்றி அமைக்கவும் இல்லை. அந்த அறைக்கு உள்ளே வர வேறு வழிகளும் இல்லை. காமினிக்கு பாலியல் பலாத்காரம் நடந்திருக்கிறது. ஆனால் சீசீடிவியில் யாரும் அறைக்குள் வந்ததாக எந்த காட்சிகளும் பதிவாகி இருக்கவில்லை. காமினி பொய் சொல்கிறாளா? இல்லையே மருத்துவ அறிக்கை அவளுக்கு பாலியல் பலாத்காரம் நடந்தேறி இருக்கிறது என்றுதானே கூறுகிறது. நாட்கள் கடந்து அவள் வழக்கு தொடர்ந்திருந்தால் மருத்துவ அறிக்கை கூட தவறாக இருந்திருக்கும். அவள் பொய் சொல்வதாக கூட கூறியிருப்பார்கள்.

யாருமே வராத அறைக்குள் எவ்வாறு பாலியல் பலாத்காரம் நடக்க முடியும்? கார்த்திகேயனுக்கு சுத்தமாக ஒன்றுமே புரியவில்லை குழம்பி போய் இருந்தான்.

கார்த்திகேயனின் வெற்றியே தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் அமைந்திருக்கிறது. இது நாள் வரை கை கொடுத்த தொழில்நுட்பம் அவனுக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காண்பிக்கும் பொழுது அவன் குழம்பித்தானே போவான். .

தவறு எங்கே நடந்தது? எப்படி நடந்தது? காமினிக்கு சுயநினைவு இல்லாத பொழுது நடந்ததால் அவளாலும் யாரையும் அடையாளம் காட்ட முடியவில்லை. இந்த நிலையில் யாரை குற்றவாளியாக்குவது கார்த்திகேயனுக்கு சுத்தமாக புரியவில்லை.

வெற்றி பெற முடியாத, இது போன்ற வழக்குகளில் கையை வைக்காமல் விலகி விடுவது தான் கார்த்திகேயன் வளமையாக செய்வது.  ஆனால் கயல்விழிக்கு நேர்ந்த கொடுமையால் இந்த வழக்கில் வெற்றி பெற்றே தீர வேண்டும். குற்றவாளியை கண்டுபிடித்தேயாக வேண்டும் என்பதுதான் அவன் இறுதி முடிவு.

ஆனால் எந்த பக்கம் சென்றாலும் முட்டுச்சந்தாக இருக்க எந்த வழியில் செல்வது என்று தெரியாமல் தடுமாறி நின்றான் கார்த்திகேயன்.

அந்நேரத்தில் தான் வெற்றிமாறன் கார்த்திகேயனை அழைத்திருந்தான்.

வெளியுலகத்துக்கு மணிமாறனாக வாழ்ந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் டி.எஸ்.பியாக இருந்தாலும் அவனுக்கென்று தனியாக சட்டதிட்டங்களை வகுத்து வாழ்பவன். குற்றவாளிகளை அவன் வகுத்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தண்டனை வழங்குபவன்.

சமீப காலமாக சென்னையில் ஒரு கும்பல் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்வதாக தகவல். எந்த புகாரும் அவனுக்கு நேரடியாக வரவில்லை. ஆதாரங்களோ சாட்சியங்களோ இல்லை.

யார் இவர்கள் பெண்களை எப்படி குறி வைக்கிறார்கள்? எவ்வாறு கண்டுபிடிப்பது? என்ற குழப்பத்தில் தான் வெற்றிமாறன் இருந்தான். அந்த நேரத்தில் தான் காமினியின் வழக்கு கார்த்திகேயனின் கையில் வந்து சேர்ந்தது.

பார்ப்பதற்கு இலகுவான வழக்கு. இதோ அடுத்த கணமே குற்றவாளியை கண்டு பிடிக்க முடியும் என்ற தோற்றம். வெற்றிமாறன் மேலோட்டமாக விசாரிப்பது போல் காட்டிக் கொண்டாலும் அவனது இரகசிய கூட்டணியை வைத்து தேடுதல் வேட்டையை ஆரம்பத்து தான் இருந்தான்.

குற்றவாளிகளை கண்டுபிடித்து அவன் பாணியில் மரண தண்டனை கொடுக்க வெற்றிமாறன் எண்ணியிருக்கையில் அவனுக்கு கார்த்திகேயன் காமினியின் வழக்கை கையில் எடுத்திருப்பதை அறிந்து கொண்டான். கார்த்திகேயனை பற்றி விசாரித்ததில் அவனுக்கு கயல்விழியை பற்றியும் அறிய நேர்ந்தது. கயல்விழியின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என்பதையும் அவன் அறிந்து கொண்டிருந்தான்.

சந்தோஷும், ஹிமேஷும் கடல் கடந்து ஜெயிலில் சொகுசாக வாழ்கிறார்களா? கூடாதே என்ற எண்ணம் தான் வெற்றிமாறனின் எண்ணங்களில் ஓடலானது. கயல்விழி யாரோ ஒருத்தி அவளுக்கு என்ன நடந்தால் என்றெல்லாம் வெற்றிமாறன் நினைக்கவில்லை. குற்றம் நடந்தால் தண்டனை கொடுப்பதுதான் அவன் வேலை. குற்றவாளி கடல் கடந்து இருந்தால் என்ன? இங்கே இருந்தால் என்ன? பாதிக்கப்பட்டவர் இங்கே அல்லவா இருக்கிறார்.

ஆனால் அவனுக்கு கார்த்திகேயன் என்ன நினைக்கிறான் என்று அறிய வேண்டி இருந்தது. அதற்காக வேண்டி கார்த்திகேயனுக்கு அவன் கேளாமலேயே உதவ முன்வந்தான்.

 “சொல்லுங்க சார் காமினி கேஸ்ல குற்றவாளிய கண்டு பிடிச்சிட்டீங்களா?” போலீசின் கடமை குற்றவாளியை கண்டு பிடிப்பது தானே, இவன் அதை சரியாக செய்தானா? காமினிக்கு நியாயம் கிடைத்து விடுமா? என்ற எண்ணத்தில் தான் கார்த்திகேயன் வெற்றிமாறனை ஏறிட்டான்.

“முதல்ல நான் சொல்லுறத கேளுங்க அப்புறம் குற்றவாளி என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணலாம்” என்றான் வெற்றிமாறன்.

அவனது காரியாலயத்துக்கு அழைக்காமல் நகரத்துக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் பழைய குடோனுக்கு எதற்காக அழைத்திருப்பான் என்று யோசனையாகவே கார்த்திகேயன் வந்திருக்க, மறுப்பேச்சின்றி வெற்றிமாறன் பேசுவதை கேட்கலானான்.

“வாழ்க்கையில முன்னேறனும் என்று நினைக்கிற இளைஞர்கள். நான் சொல்றது பொண்ணுங்க மட்டும் இல்ல பசங்களையும் தான். அவங்க பயன்படுத்துறது ஷார்ட் ரூட் சோஷியல் மீடியா தான். தங்களோட திறமையை வெளிப்படுத்தனும் என்று ஏதோ பண்ணி சோசியல் மீடியால போட்டுக்கிட்டு வராங்க.

அதுல சில பேருக்கு வாய்ப்புகள் அமைஞ்சிருக்கு, சில பேர கழுவி ஊத்துறோம் என்ற பெயரில் மக்களே வளர்த்து விட்டிருக்காங்க. இதெல்லாம் ஒரு பக்கம் நடந்துகிட்டு இருக்க, வாய்ப்பே கிடைக்காம இருக்குற பொண்ணுங்களையும், பசங்களையும் பாலியல் தொழிலுக்கு இழுக்க ஒரு கூட்டமே காத்துகிட்டு இருக்கு.

இதுல ஆசை வார்த்தை காட்டி ஒரு சிலர இழுத்து விட்டிருந்தா, ஒரு சிலர மிரட்டி கூட இந்த தொழில்ல இழுத்திருக்கலாம். ஒரு தடவ விழுந்தா அதுல இருந்து மீளுறது எவ்வளவு கஷ்டம். நாமளும் தான் எத்தனை பேரை காப்பாத்துறது சொல்லுங்க?”

“இவன் சொல்லுறதுக்கும் காமினியின் வழக்குக்கும் என்ன சம்பந்தம்?” என்ற பார்வையோடு அமைதியாக வெற்றிமாறன் கூறுவதையெல்லாம் செவி சாய்த்துக் கொண்டிருந்தான் கார்த்திகேயன்.

“இப்போ புதுசா ஒரு கும்பல் அழகான பொண்ணுங்கள மட்டுமில்ல பசங்களையும் டார்கட் பண்ணி பெரிய, பெரிய பணக்காரங்களுக்கு வித்துக்கிட்டு இருக்கானுங்க”

“நீங்க என்ன சொல்லுறீங்க?” “இப்படி கூடவா நடக்கும்?” அதிர்ச்சியாக அவனை ஏறிட்டான்.

“காமினி கேஸ்ல எந்த பக்கம் போனாலும் முட்டு சந்து இல்லையா? காமினி கண்ணு முழிச்சதும் உங்க கிட்ட வந்துட்டா. அங்கதான் இவனுங்களுக்கு மொத அடி விழுந்தது.

முதல்ல என்ன நடக்கும் என்று சொல்லுறேன். அப்புறம் காமினி உங்க கிட்ட வந்ததுனால என்ன நடந்ததுன்னு சொல்லுறேன்.

காமினி இருந்த ரூமுக்கு யாருமே வரல அது உண்மைதான். அப்படின்னா எப்படி பாலியல் பலாத்காரம் நடந்தது என்று நினைக்குறீங்க?

அவனுங்க உள்ள வந்ததே விண்டோ வழியாக. கஸ்டமர் கூட விண்டோ வழியாகத்தான் கூட்டிட்டு வந்துருக்காங்க. வந்தவங்க கஸ்டமர விட்டுட்டு வெளியே போய், கஸ்டமர் வெளியே போன பிறகு, இவனுங்க உள்ள வந்து ரேப் பண்ணி, அத வீடியோவா எடுத்திருக்கானுங்க. அது எதுக்குன்னா காமினிய மிரட்ட. இப்படித்தான் இவனுங்க எல்லா பசங்க கிட்டயும், பொண்ணுங்க கிட்டயும் பண்ணுவானுங்க. கஸ்டமர் மிரட்ட மாட்டானுங்க. கஸ்டமர் சட்டிஸ்பெக்ஷன் இவங்களுக்கு ரொம்ப முக்கியம். இவனுங்க ஹய்ட் அவுட்ட அலசினதுல கஸ்டமரோட எந்த வீடியோவுமே சிக்கல அதனாலதான் சொல்றேன்.

காமினி இப்போதைக்கு கண் முழிக்க மாட்டா என்று இவங்க வெளியே போயிருக்கானுங்க. அங்க தான் இவங்க தப்பு பண்ணிட்டாங்க.

காமினிக்கு கொடுத்த ஜூஸ் அவ குடிச்சிருக்கா. ஆனா வாஷ்ரூம் போன நேரத்துல ஜூஸ் ஒத்துக்காம அத அவ வாந்தி எடுத்திருக்கா. இது தெரியாம இவனுங்க வெளியே போன நேரத்துல இவ கண் முழிச்சி இருக்கா. கண் முழிச்சவ நேரடியா உங்க கிட்டத்தட்ட உங்கள தான் தேடி வந்து இருக்கா”

“ஜன்னலால வந்தா இதெல்லாம் பண்ணானுங்க? நான் கூட ஜன்னல செக் பண்ணினேனே சாதாரணமான ஒருத்தனால உள்ள வர முடியாதே” என்றான் கார்த்திகேயன்.

ஸ்லைட்டா தள்ளக் கூடிய விண்டோவ். குண்டான ஒருத்தனால உள்ள வர முடியாது”

“ஆனா ஜன்னலுக்கு தான் கம்பி போட்டிருந்ததே” யோசனையாக கூறினான் கார்த்திகேயன்.

“ஸ்லைட் விண்டோஸ்க்கு வெளியால தான் கம்பி போடுவான். அதை ஈஸியா கழட்டி பிக்ஸ் பண்ண கூடிய விதமாகத்தான் வெச்சிருக்கானுங்க.  அந்த வழிய தான் வந்துட்டு போயிருக்காங்க.

கண் முழிச்சதும் காமினி உங்கள தேடி வந்துட்டா. இவனுங்களால காமினிய மிரட்ட முடியல. போலீஸ் கம்ப்ளைன்டும் ஆச்சு. அதனால கமுக்கமா இருந்துட்டாங்க. எத்தனை பொண்ணு? எத்தனை பசங்களோட வாழ்க்கையை நாசம் பண்ணி இருக்காங்க தெரியுமா சார்” கோபத்தை அடக்கியவாறு கூறினான் வெற்றிமாறன்.

“யார் சார் அவனுங்க? முதல்ல உங்க கன்ன குடுங்க. நானே என் கையால அவங்கள போட்டு தள்ளிடுறேன்” கார்த்திகேயனாலும் கோபத்தை அடக்க முடியவில்லை.

புன்னகைத்த வெற்றிமாறனோ கையில் துப்பாக்கி கொடுத்து “அதோ அந்த அறையில் தான் இருக்காங்க” என்றான்.

“என்ன ஒரு கோபத்துல சொன்ன பொசுக்குன்னு கன்ன கொடுத்துட்டான்” என்று வெற்றிமாறனை துணுக்குற்று பார்த்து கார்த்திகேயன் துப்பாக்கியோடு அந்த அறைக்குள் நுழைந்தான்.

அந்த அறையில் சண்முகம், பிரேம், சுஜாதா மற்றும் இன்னும் இருவர் இருந்தனர். ஒருவன் காமினியை விலை பேசியவன், மற்றவன் அன்பு மேன்ஷன் உரிமையாளரின் மகன். அவர்களை பார்த்து “இவர்களா குற்றவாளிகள்?” திகைத்த கார்த்திகேயன் பின்னால் வந்த வெற்றிமாறனை ஏறிட்டு “சார் நீங்க தப்பா சொல்லுறீங்க இவங்க குற்றவாளியா இருக்க முடியாது. நான் தரவா விசாரிச்சிட்டேன்” என்றான்.

“வெப் சைட்டுல டார்க் வெப் சைட் என்று ஒன்னு இருக்கு தெரியுமா கார்த்திகேயன்? இவனுங்களும் அது மாதிரி தான். தான் செய்யுற குற்றத்த யாரும் கண்டு பிடிக்கக் கூடாது என்று தெளிவா இருக்கானுங்க. இவனுங்களுக்குள்ள எந்தவிதமான போன் கண்டாக்கும் கிடையாது. சோஷியல் மீடியா கண்டாக்கும் கிடையாது. பெரிய மிலிட்டரி ஆபிஸர்ஸ் இவனுங்க, நேர்ல சந்திச்சு கோட் வர்ட்ல தான் பேசிப்பானுங்க. சீசீடிவி இல்லாத இடமா பார்த்து மீட்டிங் பாயிண்ட் ஃபிக்ஸ் பண்றதுல இவனுங்க கில்லாடிங்க”

“என்ன இவன் இவனுங்கள புகழுறான்” என்று கார்த்திகேயன் பார்க்கும் பொழுதே வெற்றிமாறனின் கண்ணசைவில் அங்கிருந்த மூவர் ஐவர் மீதும் எதோ ஒரு திரவத்தை வீசியிருந்தனர்.

எரிச்சலில் அவர்கள் அலறுவதை பார்க்க கார்த்திகேயனுக்கு பரிதாபம் வரவில்லை, மாறாக அவர்களின் அச்சத்தை வைத்து அவர்கள் தான் குற்றவாளிகள் என்று கண்டு கொண்டான்.

இவர்களா? எப்படி? எப்படி கண்டு பிடித்தான்? என்று வெற்றிமாறனை ஏறிட்டதுமில்லாமல் கேட்டிருமிருந்தான் கார்த்திகேயன்.

“ரேப் அந்த ரூம்ல தான் நடந்தது. அன்னைக்கு அங்க வந்து யாரோ ஒருத்தங்க இதுல சம்பந்தப்பட்டிருக்கனும் என்று எல்லாரையும் கண்காணிச்சேன். அப்படி என் கண்ணுல சிக்கினது ப்ரேமும், சண்முகமும் மீட் பண்ணது.

அது எதுவோ எதேச்சையாக நடந்திருக்கலாம். ஆனால் புதுசா சீசீடிவி பிக்ஸ் பண்ணது  தெரியாம இவங்க ரொம்ப நாள் தெரிஞ்ச, ரொம்பவே நெருங்கிய பிரெண்ட்ஸ் போல் சிரிச்சி பேசியது தான் எனக்கு உறுத்தியது.

இவனுங்கள தனித்தனியா பாலோ பண்ணதுல எல்லாம் கூட்டுக் களவாணிங்க என்று கண்டு பிடிச்சேன். இங்க தூக்கிட்டு வந்தேன்.

“போலீஸ் ஸ்டேஷன் போகாம எதுக்கு இங்க?” என்று கார்த்திகேயன் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே

“சொல்லுடா சண்முகா… எந்த சன் நீ… எஸ்.ஓ.என் சன்னா?  எஸ்.யு.என் சன்னா?  நீ தானே கேங் லீடர். நீ இப்ப வாய தொறக்கல உச்சா போற இடத்துல உனக்கு கரண்ட் ஷாக் கொடுப்பேன் பார்த்துக்க” என்று அவனை சரமாரியாக அடிக்கலானான் வெற்றிமாறன்.

எரிச்சலுக்கான திரவம் ஊற்றப்பட்டதில் தோல் எரிந்துக் கொண்டிருக்க, அடி ஒவ்வொன்றும் இடியாய் விழுவதால் அலறிய சண்முகம் வெற்றிமாறனின் மிரட்டலில் மிரண்டு வாய் திறந்து “சொல்லிடுறேன் சார் என்ன விட்டுடுங்க, விட்டுடுங்க” என்று அலறினான்.

இளைஞ்சர்களை தங்களது வலையில் சிக்க வைப்பது ஒன்றும் அவ்வளவு இலகுவான காரியமில்லை. ஒருசிலரே பணத்தை பார்த்து சரி என்பார்கள். ஆனால் அவர்களுக்கு பணத்தை கொடுத்தால், தங்களுக்கு என்ன மிஞ்சும் என்று மிரட்டுவதையே தொழிலாக வைத்திருக்கும் கும்பல் இவர்கள்.

பண முதலைகளுக்கு ஆணோ, பெண்ணோ யார் பிடித்திருக்கிறார்கள் என்று இவர்களிடம் ஆன்லைனில் ஆடர் செய்வது போல் செய்து விடுவார்கள். இவர்கள் அவர்கள் விருப்பப்படி ஏற்பாடு செய்து கொடுத்து விடுவார்கள்.

இதில் சாகசம் செய்ய விருப்பமா? த்ரில்லர் விரும்பியோ நீங்க? என்று மரத்தில் அல்லது ஏணியில் ஏறி மாடியில் குதிப்பது, காமினியின் அறைக்கு ஜன்னலினூடாக நுழைந்தது, போன்ற காரியங்களை மேற்கொள்வார்கள்.

பணமுதலைகளுக்கு இது ஒரு சாகசம். ஆனால் இவர்கள் அதை திட்டமிட்டு செய்கிறார்கள். அன்பு மேன்சன் போன்ற இடங்களில் சீசீடிவியை அனைத்தால் சந்தேகம் வராதா? நாளை பின்ன போலீஸ் கம்பளைண்ட் என்று வந்தால் கூட போலீஸ் தீவிரமான விசாரணையில் இறங்கி விடுவார்கள்.

இவர்கள் முகமூடியணிந்து மிரட்டுவதால் தன்னை யார் பலாத்காரம் செய்தது? யார் மிரட்டியது என்று கூட தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் பலர் போலீசில் வழக்கு தொடரவே அச்சப்படுவார்கள். அப்படியே யாராவது தைரியமாக போலீசில் வழக்கு தொடர்ந்தால் சீசீடிவி காட்சிகளும் இருந்து, எந்த ஆதாரமும் கிடைக்கவில்லையென்றால்? காலம் கடந்த நிலையில் விக்டம் சொல்வது பொய் என்று ஆகிவிடுமல்லவா? போலீஸ் வழக்கு தொடராமல் விட்டு விடுவார்கள் என்பது தான் அவர்களின் எண்ணம். சுஜாதா போன்ற பெண்களின் பெயரில் அறை எடுப்பதும் போலீசை திசை திருப்பவே.

இதுவரையில் இவர்களால் பாதிக்கப்பட்ட யாருமே போலீசில் புகாரளிக்கவில்லை. ஆனால் இவர்களின் கெட்ட நேரம் கண்விழித்த காமினி ஆர்ப்பாட்டம் செய்யாமல் கார்த்திகேயனை தேடிச் சென்றது தான். ஆர்ப்பாட்டம் செய்திருந்தால் தான் இவர்கள் அவளை மிரட்டி அடக்கி இருப்பார்களே.

எங்கே பாலியல் வழக்குகள் பதிவாகும் என்று கண்கொத்திப் பாம்பாய் காத்திருந்த வெற்றிமாறனுக்கு காமினியின் வழக்கு தான் தேடிக் கொண்டிருந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க பாதையை வழிவகுத்துக் கொடுத்திருந்தது.

“டெக்னாலஜிய வச்சு நாம குற்றங்கள எப்படி தடுக்கலாம் என்று யோசிச்சா, இவனுங்க அதே டெக்னாலஜிய வச்சு எப்படி எல்லாம் குற்றம் செய்யலாமென்று யோசிக்கிறானுங்க. இவனுங்கள இங்கேயே கொன்னு புதைச்சிடலாம் சார்” கோபத்தில் கொதித்தான் கார்த்திகேயன்.

“என்னது கொன்னு புதைக்கவா? எதுக்கு பல வருஷம் கழிச்சு இவனுங்க டெட் பாடிஸ் வெளியே வந்து அதுக்கு ஒரு டீம் வேலை பார்த்து, குற்றவாளி கண்டுபிடிக்கவா? இவனுங்க எல்லாத்தையும் எரிச்சி சாம்பலை மரத்துக்கு உரமா போடணும்” என்றான் வெற்றிமாறன்.

“என்ன இவன் நான் கோபத்தில் பேசினால் இவன் சீரியஸா பேசுறான். நான் சீரியஸா பேசினா, இவன் காமெடி  பண்றான்” என்று கார்த்திகேயன் வெற்றிமாறனை ஏறிட வெற்றிமாறன் பார்வையோ தீவிரமாகத்தான் இருந்தது.

கார்த்திகேயனுக்கு தெரியவில்லை, வெற்றிமாறன் ஒன்றும் கேலி செய்யவில்லை. அவன் செய்வதை தான் சொல்லிக் கொண்டிருந்தான் என்று.

“என்ன கார்த்திகேயன் நீங்க இவனுங்கள போட்டு தள்ளுறீங்களா? இல்ல நானே இவனுங்கள போட்டு தள்ளவா?” என்று வெற்றிமாறன் தீவிரமான முகபாவணையில் கேட்ட பொழுது தான் அவன் கேலி செய்யவில்லை என்பதை உணர்ந்து கொண்டான் கார்த்திகேயன்.

கார்த்திகேயனுக்கு அவர்களை கொல்லும் அளவிற்கு கோபம் இருந்தாலும் இவர்களைப் போன்றவர்கள் இன்னும் சமூகத்தில் இருக்கின்றார்களே சட்டப்படி இவர்களை தண்டித்தால் தானே அவர்களும் இவர்களைப் பார்த்து அஞ்சுவார்கள் என்ற எண்ணம் தோன்ற “இல்ல இல்ல டி.சி.பி சார் இவங்கள சட்டப்படிதான் தண்டிக்கணும்” என்றான்.

என்ன இவன் இவ்வாறு சொல்கிறான் நமது வேலைக்கு சரிப்பட்டு வர மாட்டானோ என்று வெற்றிமாறன் யோசிக்க, தான் எடுத்த முடிவுக்கான காரண காரியங்களை கூறினான் கார்த்திகேயன். அதை ஏற்றுக் கொண்டதாக வெற்றிமாறன் தலையசைத்தான்.

“ஒரு போலீஸா இருந்து இப்படி சொல்றேன்னு நினைக்காதீங்க. எனக்கு இவனுங்கள ஜெயில்ல போட்டு காலத்துக்கும் சோறு போடுறது பிடிக்கவே இல்லை” என்று சிரித்தான் வெற்றிமாறன்.

அதை பெரிதாக கார்த்திகேயன் கண்டு கொள்ளவில்லை அதன்பின் அவர்களை காமினியின் வழக்கின் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள்.

வெற்றிமாறன் மிரட்டிய பொழுது ஒத்துக் கொண்டவர்கள் நீதிமன்றத்தில் ஒத்துக் கொள்வார்களா? அவர்களின் குடும்பத்தை கொன்றுவிடுவதாக மிரட்டித்தான் வெற்றிமாறன் அவர்களை நீதிமன்றத்திலேயே நிறுத்தியிருந்தான். அதனால் அவர்களே தாங்கள் செய்த குற்றங்களை நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டிருந்தார்கள்.

எவ்வாறு இவர்கள் சந்தித்துக் கொண்டார்கள், எவ்வாறு இவர்கள் பேசிக்கொள்வார்கள் முதல் கூறியவர்கள், எவ்வாறு இவர்கள் இளைஞர்களை குறி வைக்கிறார்கள் என்பது வரை கூறி இருக்க, நீதிபதியே அதிர்ச்சிக்குள்ளானார்.

அவர்களே குற்றங்களை ஒப்புக்கொண்டதால், தீர்ப்பு வழங்கும் நாள் அறிவிக்கப்பட்டு அதுவரை குற்றவாளிகளை சிறையில் அடைக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க, அவர்களை அழைத்துக் கொண்டு சிறைச்சாலைக்கு சென்று கொண்டிருந்தான் வெற்றிமாறன். முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கார்த்திகேயனையும் அழைத்து இருக்க கார்த்திகேயனும் அவனோடு தான் பயணம் செய்து கொண்டிருந்தான். யார் என்றே தெரியாத ஒரு கும்பல் அவர்களை சுற்றி வளைத்து தாக்கலாயினர். அதில் காயமுற்ற கார்த்திகேயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

Advertisement