Advertisement

அத்தியாயம் 12

கயல்விழி “விக்னேஷ் விக்னேஷ்” என்று அலறுவதைக் கேட்டு “விழி” என்றவாறு பதட்டமாக விக்னேஷ் அவளிருக்கும் அறைக்குள் ஓடி இருந்தான்.  அவனைப் பார்த்ததும் வலி  நிவாரணியை பார்த்தது போல் இறுக அணைத்திருந்தாள் கயல்விழி.

அதை பார்த்து கார்த்திகேயனின் இதயம் சில்லுசில்லாய் உடையலானது. “என்ன பத்தி கவலைப்படாத. நிச்சயமாக நான் இன்னொரு கல்யாணம் பண்ணிப்பேன். ஆனா அது நீ இல்ல” என்று கயல்விழி சொன்னது ஏனோ அவன் காதுக்குள் ஒலித்தது.

தன்னிலை மறந்து பழைய நினைவுகளில் அவள் ஏதேதோ புலம்ப “ஒண்ணுமில்ல விழி நீ சேப்பா தான் இருக்க” அவளை முயன்ற மட்டும் சமாதானப்படுத்திய விக்னேஷ் முதுகை நீவி விட்டான்.

“அந்த பொண்ணுக்கு ரொம்ப வலிச்சிருக்குமில்ல” அந்த குரல் கம்பீரமான வக்கீல் கயல்விழியின் குரலன்று. காயம்பட்டு, பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அச்சத்தோடு இருந்த கயல்விழியின் குரல்.

“எவ்வளவு சிரமப்பட்டு இவளை மீட்டெடுத்தேன். தன்னை போல் பாதிக்கப்ப ஒருத்தியை பார்த்த உடனே இப்படி துவண்டு போய் விட்டாளே. என்ன தான் செய்வது?” கண்கள் கலங்கினான் விக்னேஷ்.

விக்னேஷை அணைத்தவாறே தான் எங்கே இருக்கிறோம் என்று பார்த்த கயல்விழி கார்த்திகேயன் நிற்பதை பார்த்து தாவி சென்று அவனை அணைத்துக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

அதோ அதோ ஓர் பூங்குயில்

இதோ இதோ உன் வார்த்தையில்

அதோ அதோ ஓர் பொன்மயில்

இதோ இதோ உன் ஜாடையில்

யார் இந்த குயிலை

அழ வைத்தது

மலர்மீது தானா

சுமை வைப்பது

அன்னை தந்தையாக

உன்னைக் காப்பேனம்மா

அன்பு தந்து உன்னில்

என்னைப் பார்ப்பேனம்மா

ஆகாச வாணி நீயே என் ராணி

சோஜா சோஜா சோஜா

தாய் போல நானே தாலாட்டுவேனே

சோஜா சோஜா சோஜா

ஓ ப்ரியா உயிருக்கு அருகினில்

இருப்பது நான் தானே

ஓ ப்ரியா இதயத்தின் சிகரத்தில்

இருப்பவள் நீ தானே

கண்ணீர் ஏன் ஏன் ஏன்

என் உயிரே

கார்த்திகேயனுக்கு கண்ணீர் முட்டிக்கு கொண்டு வந்தது. கயல்விழியின் முன் அழுதுவிடக் கூடாதென்று பிடிவாதமாக நின்றிருந்தவன் அவளை சமாதானப்படுத்தலானான். உள்ளுக்குள்ளோ சந்தோஷையும், ஹிமேஷையும் கொல்லும் கோபத்தில் இருந்தான்.

கார்த்திகேயனின் குரல் காதில் விழுந்ததும் சுயநினைவுக்கு வந்தவள் அவனை விட்டு விலகி நின்று அவனை முறைத்தாள்.

“இப்போ எதுக்கு முறைக்கிறா?” என்று கார்த்திகேயன் அவளை புரியாது பார்த்தான்.

உண்மை என்னவென்று அறியாமல் இருந்திருந்தால் கார்த்திகேயன் அவனை பார்த்து புன்னகைத்திருப்பானோ என்னவோ. அவளுக்கு நடந்த கொடுமைகளை அறிந்தவனால், சட்டென்று அவளுக்குள் ஏற்பட்ட மாற்றத்தை ரசிக்க முடியாமல் சிரிப்பை தொலைத்து அவளை வெறித்தான்.

“எதோ உடம்புல காயத்தோட ஒரு பொண்ண பார்த்ததும் பயத்துல மயங்கிட்டேன். முன்ன பின்ன நான் இப்படி பார்த்ததில்லையே அதனால பயந்துட்டேன். காலையில ஒழுங்கா சாப்பிடல மதியம் கூட சாப்பிடல மயக்கம் வராமலா இருக்கும்? நான் மயங்கிட்டேன்னா ஹாஸ்பிடல் தூக்கிட்டு போக வேண்டியது தானே.  இது தான் சாக்கென்று என்ன உன் வீட்டுக்கு தூக்கிட்டு வந்தியா? இங்கே என்ன அடைச்சு வச்சு, உன் கட்டுப்பாட்டுல என்ன வச்சிக்கலாமென்று நினைக்கிறியா? ஆபீஸ்ல இருந்தா தான் லவ் டார்ச்சர் கொடுக்குற. இப்ப வீட்ல வச்சு கொடுக்க பாக்குறியா? நீ நினைக்கிற எதுவுமே நடக்காது. ரெண்டு நாள் எனக்கு லீவ் வேணும். நான் ஆபீஸ் வரல. வா விக்னேஷ் போகலாம்” திமிராக அவனை மிரட்டியவள், விக்னேஷை இழுத்துக் கொண்டு சென்றாள்.

காமினியை பார்த்ததில் தனக்கு நடந்தவைகள் ஞாபகத்தில் வந்து கூறினாலோ என்னவோ, இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் இருப்பவள் போல் மாறி மாறி பேசினாள் கயல்விழி. அதை கார்த்திகாயனாலும் உணர்ந்து கொள்ள முடிந்தது. விக்னேஷாலும் புரிந்து கொள்ள முடிந்தது.

சட்டென்று அவள் பழைய நிலைக்கு மாறியது கார்த்திகேயனுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் நிம்மதியை கொடுக்கவில்லை. தனக்கு எந்த உண்மையும் தெரியக் கூடாதென்று அவள் நடிக்கிறாளோ, என்று தோணுகையில் நிம்மதியை இழந்தான்.

உண்மை எதுவுமே அறிந்திருக்காவிட்டால் கார்த்திகேயன் அவளுக்கு கூறி இருக்கும் பதில்களே வேறாக இருந்திருக்கும். தான் அவ்வாறு அவளிடம் பேசும் பொழுது அவள் மனம் எவ்வாறு பாடுபட்டு இருக்கும் என்று நினைக்கும் பொழுது கார்த்திகேயனுக்கு வேதனையாக இருந்தது.

தனக்கு எந்த உண்மையும் தெரிந்து விடக் கூடாதென்று ஏன் இவள் நினைக்கிறாள்? கார்த்திகேயனுக்கு புரியவேயில்லை.

என்னை விட்டு வேறொருவனை திருமணம் செய்து கொண்டு சென்றதற்காக அவள் மீது கோபப்படும் நான் உண்மையை அறிந்து கொண்டால், அவளை கேலி கிண்டல் செய்யப் போவதுமில்லை. மனதளவில் துன்புறுத்தப் போவதுமில்லை என்று அவளுக்கு நன்றாகத் தெரியுமே. பிறகு ஏன் அவள் நான் எந்த உண்மையையும் தெரிந்து கொள்ளக் கூடாது என்று நினைக்கிறாள்.

அதை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தவனின் கண்களுக்குள் சற்றென்று கயல்விழி விக்னேஷை அணைத்துக் கொண்டு அழுதது வந்து நின்றது.

அவர்களுக்கு இடையே எந்த மாதிரியான உறவு இருக்கிறது என்று இப்பொழுது புரிந்து கொண்டாலும், விக்னேஷுக்கு கயல்விழியின் மேல் இருப்பது காதல்தான் என்று என்று உணர்ந்து கொண்டான்.

அன்று தானும் கயல்விழியும் கலந்தாலோசிக்கும் அறையில் திரைச்சீலைகளைப் பூட்டியவாறு பேசிக் கொண்டிருக்கும் பொழுது, பதட்டத்தோடு விக்னேஷ் கதவை திறந்தது ஞாபகம் வந்தது.

ஒரு பெண்ணின் மனது ஒரு பெண்ணுக்குத்தான் புரியும் என்பார்கள். ஏன் ஒரு ஆணின் மனது ஒரு ஆணுக்குத் தெரியாதா?

விக்னேஷின் அன்பு, அக்கறை, பதட்டம், பரிதவிப்பு எல்லாமே கயல்விழியின் மீது இருக்க, அவளை தனியாக விட கூட அவன் விரும்புவதில்லை. அவ்வளவு துடிக்கிறானே. அன்று கோயம்புத்தூருக்கு போகும் பொழுது தானும் வருவேன் என்று எவ்வளவு அடம் பிடித்தான். அது கயல்விழியின் மீது இருக்கு அக்கறையினால் மட்டுமின்று காதலாலும் தான்.

மருத்துவமனையில் அவள் அனுபவித்த இன்னல்களை அருகில் இருந்து பார்த்தவனல்லவா. மீண்டும் அவளுக்கு அந்த கதி வந்து விடக் கூடாது என்று பதறுவது வாஸ்தவம் தான்.

பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம் கூறி ஒதுக்கும் கூட்டத்துக்கு மத்தியில் விக்னேஷ் போன்ற நல்ல உள்ளங்களும் அவர்களை புரிந்து கொண்டு தோள் கொடுக்கவும், துணையாக நிற்கவும் முன் வருவது வரவேற்கத்தக்கது.

“ஆனால் நான் அவளை காதலிக்கிறேன். இதுவரையில் அவளுக்காக ஒன்றுமே செய்ததில்லை. அவள் என்னிடம் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். என் குடும்பத்தாரின் சம்மதத்தோடு அவளை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது மட்டும் தான். அதைக் கூட என்னால் செய்ய முடியவில்லை. எப்படிப்பட்ட காதலன் நான். அவளை காதலிக்கவே நான் தகுதியற்றவன்” தன்னையே தூற்றலானான் கார்த்திகேயன்.

தன்னை விட விக்னேஷ் தான் கயல்விழிக்கு பொருத்தமானவன் என்ற முடிவுக்கு வந்தான் கார்த்திகேயன்.

அன்பே அன்பே

என் கண்ணே நீதானே

மூச்சு காற்றாய் நான் வந்து

வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே

என் கண்ணே நீதானே

மூச்சு காற்றாய் நான் வந்து

வெளியே சென்றேன் சரிதானே

காதல் ஒரு பரீட்சை தானே

எழுதிடவே நானும் வந்தேன்

இன்னொருவர் பேரில்தானே

தேர்வெழுதி சென்றேனே

ரயில் பயணம் தானே காதல்

நானும் அதில் பயணம் செய்தேன்

இறங்க சொல்லி காதல் கேட்க

நான் இறங்கி சென்றேனே

அழைப்பு மணி அடிக்கவே கார்த்திகேயன் சோர்வாக சென்று கதவை திறக்க திரு நின்றிருந்தான்.

“பல தடவை போன் பண்ணேன் போன் எடுக்கல. அதனால நானே மேலே வந்துட்டு திரு சாதாரணமாக பேச,

“சரி வா கீழ போய் பேசலாம்” கார்த்திகேயன் முயன்று சாதாரணமாக பேசினாலும் எதோ ஒன்று சரியில்லை என்று திருவுக்கும் புரிந்தது.

வேறு யாருக்குமே அனுமதியில்லாத கார்த்திகேயனின் வீட்டில் கயல்விழிக்கு மட்டும் அனுமதி கொடுத்தது, அவளுக்கான அவனது கலக்கம், துடிப்பு என்று எல்லாவற்றையும் பார்த்திருந்தாலும் திரு எதையுமே கேட்கவில்லை. சொந்த விஷயங்களில் கார்த்திகேயன் பகிர்ந்து கொள்ளவும் மாட்டான். கேட்டாலும் சொல்லவும் மாட்டான்.

 “நீ லஞ்ச் சாப்பிடல இல்ல. நான் உனக்கு சாண்ட்விச் வாங்கிட்டு வந்தேன். டீயும் போட்டு இருக்கேன்” இரண்டையும் கொடுத்தவாறே காமினியை பற்றி கூறலானான் திரு.

கார்த்திகேயன் கயல்விழியை விட்டு நகரவில்லை. இதற்கிடையில் விக்னேஷும் கயல்விழிக்கு மருந்து வாங்க வெளியே சென்று இருக்க, திருவும் வக்கீல் லதாவும் தான் காமினியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருந்தனர்.

“காமினி ரொம்ப தைரியமான பொண்ணு தான்” வக்கீலான கயல்விழிக்கு இல்லாத தைரியம் அந்த பெண்ணுக்கு இருப்பதாக சொல்லாமல் சொன்ன திரு “போலீஸ்கிட்ட கூட போகாம, தனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருச்சு என்று தெரிஞ்ச உடனே உன்னை தேடி வந்துட்டா புத்திசாலி பொண்ணும் கூட”

கயல்விழிக்கு நடந்த எதுவுமே திருவுக்கு தெரியவில்லை. கூறும் எண்ணமும் கார்த்திகேயனுக்கு இல்லை. ஏதோ அவள் காமினியின் உடம்பில் இருந்த காயங்களை பார்த்து மயங்கி விட்டாள் என்று தான் திரு எண்ணினான்.

“அந்த அன்பு மேன்சன்ல போய் விசாரிச்சியா? அத பத்தி சொல்லு. வேண்டாத விஷயத்தை பற்றி பேசாதே” கொஞ்சம் கடுப்பாகத்தான் சொன்னான் கார்த்திகேயன்.

“டேய் எதுடா வேண்டாத விஷயம்? முக்கியமான விஷயம் தான் நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்” கார்த்திகேயன் எதற்காக கோபப்பட்டான் என்று புரியாமல் முழித்த திரு “சரி அத விடு” என்று அவன் கேட்டதற்கு பதில் கூறலானான்.

“முதல்ல அன்பு மேன்ஷன்ல போய் உண்மையிலேயே ஆடிஷன் நடந்ததா என்று விசாரிச்சேன். அதுக்கு பிறகு அங்கு இருக்கிற சீசீடிவி எல்லாம் செக் பண்ணேன். அங்க உண்மையிலேயே ஆடிஷன் நடந்திருக்கு. அதெல்லாம் சீசீடிவில பதிவாக இருக்கு. காமினி சொன்னது போல நாலு நாற்பத்தி அஞ்சுக்கு உள்ளே போய் இருக்கா. ஆனா அந்த சண்முகத்த பிடிச்து விசாரிச்சா. பக்கத்து ரூம அவன் புக் பண்ணவே இல்லன்னு சொல்லுறான். அவன் புக் பண்ணாம ஆடிசனுக்கு வந்தவங்கள அந்த ரூம்ல யாரும் உட்கார வச்சாங்க என்று மேஷன்ல இருக்கிறவங்களுக்கும் தெரியல”

“பக்கத்து ரூம் யார் பேர்ல புக்காகி இருக்குன்னு செக் பண்ணியா? ஆடிஷனுக்கு வந்தவங்கள, யாரோ ஒருத்தன் தான் அங்க உட்கார வச்சிருக்காங்க. அப்படின்னா அன்னைக்கு ஆடிஷன் நடக்கிறது தெரிஞ்சிருக்கு. அத தெரிஞ்சுக்கிட்டு யாரோ ஒருத்தங்க காய் நகர்த்தி இருக்காங்க. வித்தியாசமா நீ என்ன கண்டுபிடிச்ச?  சந்தேகம் படும்படியா நீ யாரைப் பார்த்த?” யோசனையாகவே திருவிடம் ஒவ்வொரு கேள்வியாக கேட்டான் கார்த்திகேயன்.

 “நீ இப்படியெல்லாம் கேள்வி கேட்ப என்று எனக்கு நல்லா தெரியும். அதனால நான் என்னெல்லாம் பார்த்தனோ அதெல்லாம் வீடியோவா எடுத்துட்டு வந்தேன். ஓடியாவா ரெக்கார்டும் பண்ணிட்டு வந்தேன். அதுபோக சீசீடிவி புட்டேஜ் அதையும் எடுத்துட்டு தான் வந்திருக்கேன். நீயே பார்த்துக்க” இவனிடமிருந்து தப்பினால் போதும் என்று திரு தான் கொண்டு வந்து எல்லாவற்றையும் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தான்.

“இதையெல்லாம் கொடுத்தா உன் வேல முடிஞ்சிடுமா? ஹாஸ்பிடலுக்கு போன காமினிக்கு என்ன ஆச்சு? அத பத்தி நீ இன்னும் ஒண்ணுமே சொல்லல” திருக்குமரனை முறைதான்.

“டேய் அதைத்தானேடா முதல்ல சொல்ல வந்தேன். எங்க நீ சொல்ல விட்ட? அது முக்கியமில்லை என்கிறது போலயே சொன்னியே” கார்த்திகேயன் முறைக்கவும் “சரி சரி சொல்லுறேன் முறைக்காதே” என்றான் திரு.

“இப்போ காமினி போலீஸ் பாதுகாப்புல ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருக்கா. கூட்டு பலாத்காரம் நடந்திருக்குன்னு டாக்டர் ரிப்போர்ட் கொடுத்துட்டாங்க. டி.எஸ்.பி மணிமாறன் {வெற்றிமாறன்} நேரடியாகவே வந்து காமினி கிட்ட வாக்குமூலம் எடுத்துட்டு போனாரு”

 “டி.எஸ்.பி மணிமாறனா? அவரே நேரடியாக வந்தாரா? காமினிக்கு தெரிஞ்சவரா?” கார்த்திகேயன் யோசனையாக கேட்க,

 “அது… தெரியல” திரு முழித்தான்.

{காதலா? சாபமா?} வெற்றிமாறன் எனும் மணிமாறன் ஏ.சி.பியாக இருக்கும் பொழுதே அவனைப் பற்றி ஊடகங்களில் வரும் செய்திகளை கார்த்திகேயன் படித்திருக்கிறான், பார்த்திருக்கிறான். யாருக்கும் அஞ்சாத அடிபணியாத நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவன். இப்பொழுது டி.எஸ்.பியாக இருப்பவன் எப்படி இருப்பான் என்று தெரியவில்லை. காமினிக்கு உதவி செய்ய அவளை சந்தித்திருப்பானோ, அல்லது குற்றவாளிகளை காப்பாற்ற காமினியை சந்தித்திருப்பானோ தெரியவில்லை.

கார்த்திகேயன் சென்றிருந்தால் முக்கியமாக அதை பற்றி விசாரிப்பான் தனக்கு அனுபவம் பத்தவில்லை என்று திருவுக்கே புரிந்தது.

“சரி ரிப்போர்ட் கொடுத்த டாக்டர் யாரு?” திருவை ஏறிட்டான் கார்த்திகேயன்.

{என்னை மறந்தவளே}  “டாக்டர் பிரியா தான் கொடுத்தாங்க. சைக்காட்ரிக் ட்ரீட்மென்ட் அவங்களோட ஹஸ்பண்ட் டாக்டர் தேவ் பார்த்துபாரு” தான் எல்லாவற்றையும் சரியாக பார்த்துவிட்டு தான் வந்ததாக சொல்லாமல் சொன்னான் திரு.

“டாக்டர் பிரியா எந்த மாதிரியான டைப் காச வாங்கிட்டு குற்றவாளிக்கு ஹெல்ப் பண்ற டைப்பா அத பத்தி விசாரிச்சியா?” நீ விசாரிக்கிற லட்சணம் தான் எனக்குத் தெரியுமே என்கிறது போல் திருவை பார்த்தான் கார்த்திகேயன்.

பிரியாவின் அழகிய வதனத்தை கண்ணுக்குள் கொண்டு வந்தவன் “சே.. சே.. அப்படிப்பட்டவங்க இல்ல” என்றான்

“என்ன டாக்டர் ரொம்ப அழகா இருக்காங்களா?” திருவின் முகத்தைப் பார்த்து கேலி செய்தான் கார்த்திகேயன்

அசடு வழிந்த திருவோ “இல்ல இல்ல டாக்டர் நல்லவங்க தான்” என்று சர்டிபிகேட் கொடுத்தான்.

“ஏதாச்சும் சொதப்பிரிச்சி மவனே அப்புறம் உன்னை கவனிச்சிக்கிறேன்” திருவை மிரட்டிய கார்த்திகேயன் தனக்கு வேலை இருப்பதாக அவனை அனுப்பி வைத்தான்.

அடுத்து வந்து இரண்டு நாட்களும் கயல்விழி கூறியது போல் காரியாலயம் வரவில்லை. கார்த்திகேயன் அவளுக்கு அலைபேசி அழைப்பு விடுத்து ஏன் வரவில்லை என்று கேட்கவும் இல்லை. அவளின் நலம் விசாரிக்கவும் இல்லை. அவளை காதலோடு பார்த்துக்கொள்ள தான் விக்னேஷ் இருக்கிறானே. மனம் வேதனை அடைந்தாலும் ஆறுதல் கூறிக் கொண்டான். அவளுக்கு திருமணமான பின் அவள் தனக்கு சொந்தம் இல்லை என்று பிரிந்து தானே இருந்தான். இன்று அவள் நலனுக்காக அவளை பிரிந்து இருக்க மாட்டானா? 

ஆனால் விக்னேஷ் கார்த்திகேயனை அழைத்து கயல்விழியின் நிலைமையை அவ்வப்போது கூறிக் கொண்டே இருந்தான். அமைதியாக கேட்டுக் கொள்பவன் எந்த பதிலும் கூறவில்லை.

அவளை பார்க்க வேண்டும் போலிருக்க அவளின் குடியிருப்பு வரை சென்று காத்திருந்தவன்,  வீட்டுக்கு செல்லாமல் திரும்பி வந்து விட்டான்.

அவளுடைய மனநிலையை சரியாக புரிந்து வைத்திருப்பவன் விக்னேஷ் ஒருவனே. அவனால் மட்டுமே அவளை சமாதானப்படுத்த முடியும். பாதுகாக்க முடியும். புரிந்து கொள்ள முடியும். காதலிக்க முடியும். என்று எண்ணினான் கார்த்திகேயன். தான் அவளிடம் இருந்து தள்ளியே இருப்பது தான் அவளுக்கு நல்லது. அவளுக்கு எது நல்லதோ அதை செய்வதுதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தான்.

நதிகளில் மீன்கள்

நீந்துதம்மா அதில்

நதிக்கொரு வலியும்

இல்லையம்மா

உன் நினைவுகள்

இதயத்தில் நீந்துதம்மா

அதில்

எனக்கொரு வலியும்

இல்லையம்மா

நீ இருந்தால்

என்ன பிரிந்தால் என்ன

காதல் எனக்கு போதுமம்மா

என் காதல் எனக்கு போதுமம்மா

எங்கே அந்த

வெண்ணிலா

கல்லை கனி ஆக்கினாள்

முள்ளை மலர் ஆக்கினாள்

எங்கே அந்த வெண்ணிலா

இரண்டு நாள் கழித்து விக்னேஷ் அழைத்த கார்த்திகேயன் கயல்விழி மேலும் இரண்டு நாட்கள் என்ன ஒரு வாரமே ஆனாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளட்டும். உடம்பு நன்றாக தேறிய பின் வந்தால் போதும் என்றிருந்தான். அவளை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும் கூறினான்.

கார்த்திகேயன் அழைத்ததாக விக்னேஷ் கயல்விழியிடம் கூறிய பொழுது “ஏன் அவன் எனக்கு போன் பண்ண மாட்டானா? உனக்கு தான் போன் பண்ணுவானா?” என்று கோபப்பட்டவள், எதற்காக அழைத்தான் என்று கூறிய பொழுது “என்ன நான் நோயாளியா என்னை  வீட்டிலேயே இருக்க வச்சுடுவான் போலயே. தாரா கேஸ் என்னாவது?” விரலை கடித்தவாறு குறுக்கும் நெடுக்கும் நடந்தவள் தனக்கு ஒன்றும் இல்லை என்று காரியாலயம் கிளம்பினாள்.

கயல்விழி காரியாலயம் வரும் பொழுது கார்த்திகேயன் அங்கில்லை. காமினியின் வழக்குக்காக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான். அவன் அங்கிருந்தால் அவனை உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ண வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் உள்ளே நுழைந்திருந்தாள். காமினியின் பெயரை கேட்டதும் அவள் உடல் ஆட்டம் காண விக்னேஷின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டாள்.

“நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க மேடம் அது ரொம்ப தைரியமான பொண்ணு” திரு அவளை சமாதானப்படுத்த முயல, “நான் பாத்துக்குறேன்” என்று கயல்விழியை அழைத்துக் கொண்டு உள்ளே வந்து ஆசுவாசப்படுத்தினான் விக்னேஷ்.

“நான் ரொம்ப வீக்காக இருக்கேன் இல்லையா விக்னேஷ். இத்தன வருஷமாகியும் என்னால அந்த சம்பவத்திலிருந்து மீள முடியல பார்த்தியா?” என்றாள் கயல்விழி.

அவளை புன்னகையோடு பார்த்த விக்னேஷோ “இந்த மாதிரி எத்தனை ரேப் கேசஸ்ஸ நீ மீடியாலையும், சோசியல் மீடியாலையும் பார்த்திருப்ப. அப்ப நீ இந்த மாதிரி  பதட்டப்படலையே சாதாரணமாக தானே பார்த்து கவலைபட்ட.  காமினிய நேர்ல பார்த்ததினால் தான் நீ இவ்வளவு பதட்டப்படுற. அவள பார்த்ததில உனக்கு நடந்தது எல்லாம் உன் கண் முன்னால வந்ததுதான் காரணம். நீ அதிலிருந்து தான் மீளனும்.

விக்டம நேரில பார்க்கணும். அவங்க கிட்ட பேசணும். நீ உனக்கு நடந்தது அவங்க கிட்ட பகிர்ந்துக்கிட்டாலும் சரி இல்லனாலும் சரி, அவங்களுக்கு உறுதுணையாக நிக்கணும். அவங்களுக்கு வழிகாட்டியா நிக்கணும். தைரியம் ஊட்டனும். அப்படி இருந்தால்தான் உன்னுடைய மனசுல இருக்குற காயங்கள் ஆறும். நீயும் மீண்டு வருவ” என்றான்.

“என்னால முடியுமா?” அவனையே கேட்டாள்.

“ஏன் முடியாது? முயற்சி செஞ்சா முடியாது என்று ஒன்றுமே இல்லையே” சோகமாக சொன்னவளை கண்டு கொள்ளாது சிரித்தான் விக்னேஷ்.

இவர்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கார்த்திகேயன் உள்ளே நுழைந்தான். கயல்விழியை அங்கே எதிர்பார்க்காதவனோ அவளது உடல்நிலை தேறி விட்டதா என்று ஆராய்ச்சி பார்வையை வீசினான்.

“என்ன உத்து உத்து பாக்குற? எனக்கு உடம்பு முடியலன்னு லீவு போட சொல்லிட்டு நீயும் ஆபீஸ்ல இல்லாம எங்க போயிருந்த? எல்லாருக்கும் லீவு கொடுத்துட்டு ஊரு சுத்த கிளம்பிட்டியா? கேஸ் எல்லாம் யாரும் பாக்குறது? கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல.  தாரா கேஸ் என்ன ஆச்சு? உருப்படியா ஏதாவது டீடைல் கிடைச்சதா? சீசீடிவி புட்டேஜ் கிடைச்சதா?” சம்பந்தமே இல்லாமல் அவனை திட்டினாள்.

என்ன ஆச்சு இவளுக்கு என்று கார்த்திகேயன் பார்த்தாலும் கயல்விழியின் கோபமும் வேகமும் அவள் சாதாரணமாக இருப்பதாகத்தான் அவனுக்குத் தோன்றியது.

கயல்விழி இரண்டு நாட்களிலே மீண்டு வந்து விட்டாளா? நடிக்கிறாளா? என்று புரியாவிட்டாலும் அவளை நோயாளி போல் நடத்தக் கூடாது என்ற முடிவிலிருந்து கார்த்திகேயன் “நான் ஒன்னும் சும்மா வெளியே ஊரு சுத்தல காமினி கேஸ் விஷயமா தான் போயிருந்தேன்” என்றான்.

“காமினியோட கேஸ் மட்டும்தான் கேஸா? தாராவோட கேஸ் என்ன ஆச்சு?” கோபமாக அவனை முறைத்தாள்.

சற்றுமுன் திரு காமினியின் பெயரை கூறிய பொழுது கலங்கி நின்றவளா இவள் என்று ஆச்சரியப்படும் அளவுக்கு கார்த்திகேயனோடு வாக்குவாதம் செய்யலானாள் கயல்விழி.

சட்டென்று மாறும் காலநிலை போல் கயல்விழியிடம் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்திருந்த விக்னேஷுக்கு அவளை எவ்வாறு மீட்டெடுப்பது என்று புரிந்து போனது.

விக்னேஷ் தங்களையே பார்த்திருப்பதை பார்த்த கார்த்திகேயன் கயல்விழியோடு வாக்குவாதம் செய்வதை நிறுத்திவிட்டு, விக்னேஷோடு தனியாக பேச வேண்டுமென்று கலந்தாலோசிக்கும் அறைக்குள் அழைத்து சென்றான்.

இருவருக்கிடையில் வாக்குவாதம் முற்றிப்போக, விக்னேஷ் பேசியதில் கோபமடைந்த கார்த்திகேயன் அவனின் கழுத்தைப் பிடித்திருந்தான்.

Advertisement