Advertisement

அத்தியாயம் 11

சந்தோஷ் தனது கணவன். தனக்கும் அவனுக்கும் திடீரென்று திருமணம் நடந்ததால், அவனுக்கும் ஹிமேஷுக்கும் இடையே இருக்கும் உறவை பற்றி என்னிடம் கூற சங்கடப்பட்டிருப்பான். ஆனால் ஹிமேஷ் என்னிடம் நன்றாக தானே பழகினான் அவனாவது கூறி இருக்கலாமே.

அவர்கள் கூறாமல் நானாக சென்று விசாரிப்பது சரியா? முறையா? புரியாமல் குழம்பியவாறு இருந்தாள் கயல்விழி.

எவ்வாறு சொல்வது என்று தான் அவர்களும் புரியாமல் இருக்கிறார்கள் போலும். தான் அறிந்து கொண்டதை சென்று விசாரிப்பதில் என்ன இருக்கிறது என்று ஒரு நாள் ஞாயிறு காலை இருவரும் வீட்டில் இருக்கும் வேளை இருவரிடமும் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றாள்.

கயல்விழி பேச்சை ஆரம்பிக்கும் வரையிலே அவர்கள் பற்றிய உண்மை கயல்விழிக்கு தெரிந்து விட்டது என்று அவர்கள் நினைக்கவில்லை.

“இப்ப அதுக்கு என்ன?” சீற்றமாகவே கேட்டது இத்தனை நாட்களாக அவளிடம் அன்பாக பேசிய ஹிமேஷ்.

அப்படி ஒரு சீற்றத்தை அவனிடம் கயல்விழி எதிர்பார்க்கவில்லை.  அவனுடைய துணையான சந்தோஷை தனக்கு விட்டுத் தருமாறு கேட்டு விடுவேனோ என்று நினைத்தானோ! தெரியவில்லை.

“ஹிமேஷ் கொஞ்சம் பொறுமையாக இரு. அவ என்னதான் சொல்லுறான்னு பார்க்கலாம்” வளமைக்கு மாறாக ரொம்பவே பொறுமையாக பேசினான் சந்தோஷ்.

நடப்பது கனவா? நனவா? என்று கூட கயல்விழிக்கு ஒரு கணம் புரியவில்லை. ஆனால் பிரச்சினையை பேசி தீர்த்தாக வேண்டுமே.

“உங்க உறவை பத்தியோ அது சரி, தவறு என்று பேசுவதற்காக நான் உங்ககிட்ட பேச வரல. சந்தோஷுக்கும் எனக்கும் நடந்த திருமணம் திடீரென்று நடந்தது. அதை பத்தி சந்தோஷ் சொல்லி இருப்பானே. அதனால தப்பு அவனுடையதும் இல்லை. என்னுடையதும் இல்லை. உங்க ரெண்டு பேருக்கு நடுவுலயும் நான் வர நினைக்கல. எனக்கு சந்தோஷ் கிட்ட இருந்து டிவோஸ் வேணும். அவ்வளவுதான்” சொல்லி விட்டாள். தெளிவாக சொல்லி விட்டாள் இதைவிட தெளிவாக விளக்க யாராலயும் முடியாது.

அவளுடைய அப்பாவின் ஆசை. அப்பா பார்த்த மாப்பிள்ளை என்றெல்லாம் அவள் கூறவில்லை. அப்பா தான் இறந்துவிட்டாரே. அவர் பார்த்த மாப்பிள்ளை எப்படிப்பட்டவன் என்று அவர் அறிந்துகொள்ளப் போவதுமில்லை. கவலை அடையப் போவதுமில்லை. அதுவே தனக்கு நிம்மதி. மரணப் படுக்கையில் இருந்து தந்தை மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்ட நிம்மதியில் சென்றுவிட்டார் அதுவே போதும்.

தந்தைக்காக கார்த்திகேயனை விட்டு சந்தோஷை மணந்து கொண்டேன். ஆனால் சந்தோஷம்தான் வாழ்க்கையில் இல்லை. சந்தோஷோடு எவ்வாறு வாழ்வது என்ற கவலை இனி இல்லை. கயல்விழியின் மனதுக்குள் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு விதமான இதம் பரவியது.

மென்னகை செய்த சந்தோஷ் “ஆனா கயல் என்னால உனக்கு டிவோர்ஸ் கொடுக்க முடியாது. உனக்கு டிவோர்ஸ் வேணும் என்றா, நமக்கு ஒரு குழந்தையை பெற்றுக் கொடுத்துட்டு தான் நீ டிவோர்ஸ் வாங்கிட்டு போகணும். அப்போ கூட இவன் விருப்பப்பட்டா மட்டும் தான் என்னால உனக்கு டிவோர்ஸ் கொடுக்க முடியும்” என்று விட்டு சத்தமாக சிரித்தான்.

கயல்விழிக்குப் புரியவில்லை. அவன் சொன்னது சுத்தமாக புரியவில்லை. தனக்கு டிவோர்ஸ் கொடுக்க ஹிமேஷ் எதற்கு சம்மதம் சொல்ல வேண்டும்? குழந்தையைப் பற்றி எதற்காக பேச வேண்டும்? நமக்கு குழந்தை பிறந்தால் நாம் சேர்ந்துதானே வாழ வேண்டும். இப்படிப்பட்ட ஒருவனோடு தான் இனிமேலும் சேர்ந்து வாழ வேறு நினைப்பானா? என்ன நினைக்கிறான் இவன்? என்று புரியாமல் அவனை ஏறிட்டவள் “நமக்கு எதற்கு குழந்தை” என்று கேட்டாள்.

“ஐயோ நமக்கு என்றா நமக்கு மட்டும் இல்ல” என்று தன்னையும் அவளையும் ஆள்காட்டி விரல் கொண்டு மாறி மாறி காட்டிய சந்தோஷ் “நமக்கு” என்று ஹிமேஷை தோளோடு அணைத்துக் கொண்டான்.

அப்பொழுது கூட கயல்விழிக்கு புரியவில்லை. “என்ன சொல்லுற? புரியல” என்றாள்.

“மக்கு பொண்டாட்டி. ஆம்பளைங்க நாங்க புள்ள பெத்துக் முடியுமா? உன்னால தானே புள்ளைய பெத்து கொடுக்க முடியும். அதான் எங்களுக்கு ஒரு புள்ளைய பெத்துக் கொடுத்துடேன்” என்ற சந்தோஷ் மறந்தும் விவாகரத்து கொடுப்பதாக கூறவில்லை.

“என்ன?” கயல்விழிக்கு அதிர்ச்சியில் மயக்கமே வரும் போலிருந்தது. இதற்கே அதிர்ந்தாள் எப்படி அடுத்து சொல்வதை கேட்டால் அவள் உயிரோடு இருப்பாளா?

“பைத்தியமா நீங்க ரெண்டு பேரும்? குடும்பம்னா அப்பா, அம்மா குழந்தைகள். ரெண்டு அப்பா வளக்குற குழந்தைகள் எப்படி நல்ல சமூகமாகும்?” இவர்களிடம் வளரும் ஆண் குழந்தையின் மனநிலை இவர்களை போல் இருக்காதா? பெண் குழந்தையின் மனநிலை என்னாவது? இது போன்ற உறவையே தான் வெறுக்கிறேன். இதில் இவர்களுக்கு குழந்தை ஒரு கேடு என்று அவர்களை ஏகத்துக்கும் முறைத்தாள்.

இருவரும் இத்தனை நாட்களாக இதற்காகத்தான் இவளிடம் நடித்திருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஹிமேஷ் இவளிடம் ரொம்பவே பொறுமையாக நடந்து கொண்டதோடு, பொறுமையை கையாளும் சந்தோஷ் இவளிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை.

“குழந்தையை பெத்துக் கொடுத்தா மட்டும் போதாது. வளர்க்க வேண்டிய பொறுப்பும் உன்னுடையது. நம்ம பாப்பாக்கு நீ அம்மா நாங்க ரெண்டு பேரும் அப்பா. எப்படி?” என்றான் சந்தோஷ்.

“அதுக்கு நீ வேறாளப் பாரு” இவர்களுக்கு குழந்தை தான் வேண்டும் என்றால் இந்த நாட்டு சட்டத்துக்கு உட்பட்டு குழந்தையை தத்தெடுக்கலாம். அல்லது வாடகை தாயை ஏற்பாடு செய்து கொள்ளலாம். தான் இவர்களுக்கு குழந்தையை வேறு பெற்றுக் கொடுத்து வளர்க்க வேறு வேண்டுமா கோபத்தில் கொந்தளித்தாள் கயல்விழி.

சத்தமாக சிரித்த சந்தோஷ “ஆனா இவனுக்கு உன்னைத்தான் பிடிச்சிருக்காம்” என்று ஹிமேஷை பார்த்து கண்சிமிட்டினான்.

“என்ன பைத்தியக்காரத்தனமாக பேசிகிட்டு இருக்க” இவனுக்குத் தான் உன்ன பிடிச்சிருக்கே என்று முறைத்தாள்.

“உனக்கு புரியல. எனக்கு பசங்கள மட்டும் தான் புடிக்கும். ஆனா இவனுக்கு பொண்ணுங்களையும் புடிக்கும். இவன் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன கைவிட்டுட்டக் கூடாதில்லையா. நான் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி அவனுக்கு தாரைவார்த்து கொடுக்க முடிவு பண்ணேன். அப்படி நமக்கு கிடைச்ச பொக்கிஷம் தான் நீ. உனக்கு இருந்த ஒரே உறவு உன் அப்பா அவரும் செத்துட்டாரு. எந்த உறவுமே இல்ல இல்லாத ஒரு அனாத நீ. எங்க பேச்ச கேட்டுக்கிட்டு அடங்கி ஒடுங்கி இருக்க மாட்டியா?  நாம மூணு பேரும் ஒண்ணா ஒரே  வீட்டுல சந்தோஷமா இருக்கலாம் இல்லையா? ஆனா நீ டைவோர்ஸ் கேட்டு நிக்கிற” சந்தோஷ் சொல்லி முடிக்கையில் அவனை அறைந்திருந்தாள் கயல்விழி.

ஹிமேஷ் அவளை பிடித்து அருகில் இருந்த இருக்கையில் அமர்த்தி அவள் துப்பட்டாவை கொண்டே கட்டிப் போட்டான்.

“பாரின் வந்த உடனே அவளவளுங்க மார்டன் ட்ரெஸ் போட ஆரம்பிச்சிடுவாளுக. இவ மட்டும் கண்ணகி வம்சாவழி வந்தவ போல துப்பட்டாவ விடாம இருக்கா” கயல்விழி எதை செய்தாலும் அது தங்களுக்கு உதவியாகத்தான் இருக்கும் என்று அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தான் சந்தோஷ்.

என்னதான் ஹிமேஷ் நட்பாக பழகினாலும் ஏதோ ஒன்று சரி இல்லை என்று கயல்விழியின் உள்ளுணர்வு கூறவே அவன் முன்னாடி துப்பட்டாவோடு நடமாடினாள். அவள் உள்ளுணர்வு பொய்த்துப் போகவில்லை.

“இது தாண்டி உன் கிட்ட பிடிக்காத விஷயம். ஓவரா பத்தினியா இருக்க. இங்க வந்து நாலு மாசம் ஆகிருச்சு. இவன் கூட எத்தன நாள் தனியா இருந்த? ஒரு நாள் கூட இவன் மேல ஆச வரல. நான் கூட உங்க ரெண்டு பேரையும் இன்னைக்கு ஒண்ணா பார்த்துடலாம்ன்னு எத்தனை நாள் ஆசையாசையாய் வீட்டுக்கு வந்திருப்பேன்” இன்னும் என்னவெல்லாம் பேசியிருப்பானோ கயல்விழிக்கு கொலை வெறியே வந்தது.

சந்தோஷின் முகத்தில் காரி உமிழ்ந்த கயல்விழியோ “கட்டின பொண்டாட்டிய கூட்டி கொடுக்கிற மாமா பைய நீ, உன்ன பார்த்தேன் எனக்கு ஆசை வரல, கூட இருக்கு இவன் மேல வருமா?” என்று கேட்க, சந்தோஷுக்கு அசிங்கமாக இருக்கவே கயல்விழியை அறைந்தான்.

“டேய் அடிக்காதடா… பொண்ணுங்க பூ மாதிரி. இத்தனை நாள் நான் பொறுமையா இருந்ததே இவ சம்மதத்தோட இவள அடையானும் என்று. நான் நினைச்சிருந்தா இவள பலாத்காரம் பண்ணியிருக்க மாட்டேனா?” என்றான் ஹிமேஷ். கயல்விழிக்கு புரிய வேண்டும் என்று வேண்டுமென்றே ஆங்கிலத்தில் தான் கூறினான்.

எப்படியொரு ஆபத்தில் சிக்கியிருக்கிறோம் என்று நினைக்கையில் விதிர்விதிர்த்து போனாள் கயல்விழி.

இவர்களிடமிருந்து எப்படி தப்புவது? எப்படியாவது தப்பி செல்ல வேண்டும் என்ற சிந்தனையில் கயல்விழி இருக்க,

“குழந்தைக்கு இப்ப என்ன அவசரம் என்று இவள விட்டு வச்சா, இவ டைவர்ஸ் கேட்டுடு போவாளாம் நாம கையைக் கட்டி பார்த்துகிட்டு நிக்கணுமா? டேய் ஹிமேஷ் இவளோட பீரியட் சர்க்கிள் எப்போ” என்று சந்தோஷ் கேட்க கயல்விழி திகைத்து விழித்தாள்.

ஷாப்பிங் செல்லும் பொழுதெல்லாம் சானிடரி நாப்கின் வேண்டுமா? என்று சாதாரணமாக கேட்பது போல் ஹிமேஷ் கேட்டது எல்லாம் நட்பாக இல்லை திட்டத்தோடு தான் என்று இப்பொழுது உணர்ந்து கொண்டாள் கயல்விழி.

ஆரம்பத்தில் அசௌகரியமாக இருந்தாலும் அவன் ஒரு மருத்துவன் என்பதால் அதை கண்டு கொள்ளாமல் இருந்தது தனது தவறு என்று மனதுக்குள் வெம்பினாள்.

எல்லாமே திட்டமிட்டு செய்தவர்கள் தன்னை விடமாட்டார்கள் என்று புரிய கயல்விழிக்குள் அச்சம் பரவ ஆரம்பித்தது.

இந்த காலனியில் வேலை நாட்களில் வீடுகளில் யாரும் இருப்பதில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை அல்லவா அக்கம் பக்கம் இருக்கிறவர்களுக்கு கேட்க கூடும் என்று முயன்ற மட்டும் கத்தினாள்.

சட்டென்று அவள் வாயை அடைத்த ஹிமேஷ் சந்தோஷிடம் அவளை தூக்கிக்கொண்டு மாடிக்கு செல்லலாம் அங்கே கட்டிப் போடலாம் என்றான்.

கயல்விழி திமிரத் திமிர அவள் கைகளையும் கால்களையும் கட்டிலின் இருமுனைகளிலும் கட்டிப் போட்டவர்கள், அவளை பார்த்து சிரித்தனர்.

கயல்விழிக்கு அடுத்தது நடந்ததோ வார்த்தைகளால் சொல்ல முடியாது கொடுமைகள். கட்டிய கணவன் பார்த்திருக்க ஹிமேஷ் அவளது துணிகளை உருவலானான்.

கயல்விழியால் கத்தக் கூட முடியவில்லை. அவளை நிர்வாணமாக்கி விட்டு அவள் முன்னால் இவர்கள் கலவியில் ஈடுபட, வாயில் அடைத்திருந்த துண்டையும் மீறி வாந்தியெடுத்தாள்.

“என்னடா இவ இப்படி அசிங்கப்படுத்துறா? இவ எல்லாத்துக்கும் சரிப்பட்டு வருவான்னு தானே இவள கட்டிக்கிட்டு வந்தேன். நம்மள பார்த்து ஆச படுவான்னு சொன்ன? இப்போ பாரு. என் மூடே போச்சு” சந்தோஷ் கோபமாக வெளியேறியிருந்தான்.

“இது கூட திட்டமா?” அருவருப்பாக அவர்களை பார்த்தாள்

“நான் பார்த்துகிறேன்” என்ற ஹிமேஷ் அவளை சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் சில்மிஷம் செய்யலானான்.

பெண்ணின் சம்மதம் இல்லாமல் கணவனானாலும் தொடக் கூடாது. ஆனால் இங்கே கணவனின் முன்னிலையில் ஒரு கயவன் கயல்விழியின் கற்பை சூறையாடிக் கொண்டிருந்தான்.

எத்தனை இரவு எத்தனை பகல் கடந்தது என்று தெரியவில்லை. அந்த அறை இருட்டாகவே இருந்தது. அவளை கவனித்துக் கொண்டது, உணவு கொடுத்தது கழிவறைக்கு அழைத்து சென்றது எல்லாமே ஹிமேஷ் தான். சந்தோஷ் அவளை நெருங்க மாட்டான்.

ஹிமேஷால் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட கயல்விழி மனஉளைச்சலுக்கு பெரிதும் ஆளாகி இருந்ததால் தப்பிக்க வேண்டும் என்பதையே மறந்து போயிருந்தாள்.

அந்த எண்ணம் அவளுக்கு வரக்கூடாது என்று தான் சில்மிஷம் செய்து மனஉளைச்சலையே அவளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான் ஹிமேஷ். அப்படி இருந்தும் கயல்விழிக்கு சில சமயம் சுயநினைவு திரும்பும் பொழுது சில நேரம் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். தட்டுத்தடுமாறி அறையை விட்டும் வெளியே வந்து விடுவாள். சந்தோஷ் அல்லது ஹிமேஷ் விடும் அறையில் மயங்கி சரிவாள்.

அவள் கர்ப்பமடைந்தால்தான் இந்த சித்திரை வதையே நிறுத்துவார்கள் என்று தோன்ற கயல்விழிக்கே தான் கர்ப்பமடைந்தால் போதும் என்றிருந்தது.

“இல்லை. இல்லை. செத்தால் கூட ஒரு காலம் அவர்கள் நினைப்பதை செய்யக்கூடாது. இங்கிருந்து தப்பிச்செல்ல முடியாவிட்டால் உயிரை விடுவது தான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தாள் கயல்விழி.

படிகளிலிருந்து உருண்டு விடலாமா? அல்லது மாடியிலிருந்து குதித்து விடலாமா? என்றெல்லாம் எண்ணங்கள் தோன்றியது. உயிர் போகாமல் கை, கால் முறிந்து நடைபிணமானால் என்ன செய்வது? இறப்பது என்று முடிவு செய்து விட்டால் இவர்களை கொலை செய்து விட்டு இறந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.

ஆனால் அவள் விதி எது நடக்கக் கூடாது என்று நினைத்தாளோ அது நடந்து விட்டது. ஆம் கயல்விழி கற்பமடைந்திருந்தாள்.

“நோ…” என்று இவள் கத்த, அதை பொருட்படுத்தாமல் சந்தோஷும், ஹிமேஷ்க்கும் குதூகலத்தில் பார்ட்டி கொண்டாடலானார்கள்.

“இந்த குழந்தை இந்த உலகத்தில் பிறக்கக் கூடாது. தான் உயிரோடு இருந்தால் தானே பிறக்கும். இவர்களை கொல்ல முடியாவிட்டால் என்னுடைய உயிரையாவது மாய்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினாள் கயல்விழி.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க ஹிமேஷ் கிளம்பிச் சென்றிருக்க, சந்தோஷ் தான் கயல்விழியோடு இருந்தான்.

இவள் என்ன செய்து விடப் போகிறாள்? என்ற அலட்ச்சியம் சந்தோஷுக்கு எப்பொழுதுமே இருக்கும். ஆப்பிளை வெட்டிக் கொண்டிருந்தவன் வீட்டின் அழைப்பு மணி அடிக்கவே யார் வந்திருப்பார்கள் என்று முணுமுணுத்தவாறே கத்தியை வைத்து விட்டு கீழ் தளத்தை நோக்கி நகர்ந்தான்.

சட்டென்று கத்தியை கையில் எடுத்த கயல்விழி தான் இறக்கும் முன் இவனை கொன்றால் என்ன என்ற எண்ணம் தோன்ற சந்தோஷை பின்னாலிருந்து தாக்க முயல, கண்ணாடி கதவில் கயல்விழியின் விம்பம் விழுந்ததில் சுதாரித்தவன் அவளை பிடித்துக்கொள்ள, அவனோடு போராடிய அவள் அவனோடு சேர்ந்து மாடியிலிருந்து கீழே விழுந்தாள்.

இருவருக்குமே நல்ல அடி.

வெளியே சென்ற ஹிமேஷ் வரும் வரையில் இருந்திருந்தால் என்னவாகி இருக்குமோ? அந்த நேரத்தில் கயல்விழியை தேடி வந்த விக்னேஷ் சத்தம் கேட்டு கதவை உடைத்துக்கு கொண்டு உள்ளே வந்தவன், அவசர எண்ணிற்கு அழைத்திருந்தான்.

கயல்விழி கொடுத்த வாக்குமூலத்தின்படி போலீசார் ஹிமேஷை உடனே கைது செய்திருக்க, சிகிச்சை முடிந்த பின் சந்தோஷை கைது செய்திருந்தனர்.

மாடியிலிருந்து விழுந்ததில் கயல்விழியின் கரு கலந்திருந்தது. அதை பற்றி அவள் கொஞ்சம் கூட கவலையடையவில்லை.

கயல்விழிக்கு தான் செய்த கொடுமைகளை ஹிமேஷ் வீடியோ வேறு எடுத்திருந்தால் அவனால் போலீசாரிடம் உண்மையை மறைக்க முடியவில்லை.

சந்தோஷ் குழந்தைக்காகத்தான் இவ்வாறு நடந்து கொண்டதாகவும், தாங்களே வீட்டில் வைத்து கயல்விழிக்கு பிரசவம் பார்க்க இருந்ததாகவும் போலீசில் கூறியிருந்தான்.

மருத்துவமனையில் கயல்விழி சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்க, வழக்கை விக்னேஷ் தான் கவனித்துக் கொண்டிருந்தான். விக்னேஷை கூட அறைக்குள் அனுமதிக்காமல் கயல்விழி ஆர்ப்பாட்டம் செய்ய, அவள் மனநிலையை புரிந்து அவளிடம் மெதுவாக நெருங்கினான் விக்னேஷ்.

“காலேஜ் விஷயமா பேச இரண்டு மூணு தடவ நான் உன் வீட்டுக்கு வந்தேன். நீ வீட்ல இல்லைன்னு சொல்லி அந்த ஹிமேஷ் சொன்னான். உனக்கு காலேஜ்ல சீட் கிடைச்சிடுச்சு என்று சொல்லி சந்தோஷ் சொன்னான். எந்த காலேஜ் என்று கேட்டதற்கு ஏதோ ஒரு காலேஜ் பேர சொன்னான். எதுக்கும் உன்னை நேரில் சந்தித்து விசாரிக்கலாம் என்று அந்த காலேஜுக்கு போனேன். அங்கு அப்படி ஒரு ஸ்டுடென்ட் டே இல்லன்னு சொன்னாங்க. எனக்கு சந்தேகமாக இருந்தது. உனக்கு போன் பண்ணா போன் கூட எடுக்கல. அதான் கிளம்பி வீட்டுக்கு வந்தேன். வந்தபோதுதான் இப்படி நடந்துருச்சு.  நான் கொஞ்சம் ஏர்லியா வந்திருந்தா, உன்னை ஏர்லியாவே காப்பாற்றி இருப்பேன்” என்றான் விக்னேஷ்.

கயல்விழி விக்னேஷை சந்தித்த அன்று தான் சந்தோஷ் முதல் முதலாக ஹிமேஷிடம் கோபப்பட்டான். தான் யாரையும் சந்திக்கக் கூடாது என்று இவர்கள் நினைத்திருக்கிறார்கள் என்று இப்பொழுது தான் கயல்விழிக்கு புரிந்தது. தன்னுடைய அலைபேசியையும் இவர்கள்தான் ஏதோ செய்திருக்கிறார்கள். யாரையும் தொடர்புகொள்ள கூடாது என்றும் நினைத்திருக்கிறார்கள். என்னவெல்லாம் திட்டம் தீட்டி இருக்கிறார்கள். “படித்த முட்டாள்” என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.

கயல்விழிக்கு மருத்துவ ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் பாதிக்கப்பட்டவளாக நீதிபதியின் முன் நின்றாள். அங்கிருந்த ஹிமேஷையும், சந்தோஷையும் பார்த்து அவள் அலறியதை கண்டு நீதிபதியே ஒரு கணம் பயந்து விட்டார்.

எந்த அளவுக்கு சந்தோஷும், ஹிமேஷும் அவளை துன்புறுத்தியிருந்தால் அவள் இவர்களை பார்த்து அஞ்சி இருப்பாள் என்று புரிந்து கொண்டு அந்நாட்டு சட்டத்துக்கு உட்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கியிருந்தார்.

கயல்விழி முற்றாக குணமடையும் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறியிருக்க, அவளும் விக்னேஷோடு மெல்ல மெல்ல நட்பாக பழக ஆரம்பித்தாள்.

பேசிக் கொண்டிருப்பவள் திடீரென்று கையில் கிடைப்பதை கொண்டு அவனை அடிப்பதும், தண்ணீரை முகத்தில் அடிப்பதும், கத்தி அவனை வெளியே துரத்துவதும், தன்னை தானே காயப்படுத்த முயற்சி செய்வதுமாக பல விதமான இன்னல்களை அனுபவித்தாள்.

எல்லாவற்றையும் பொறுமையாக கையாண்டு விக்னேஷ் அவளை மீட்டுக் கொண்டு வந்து, தைரியமூட்டி அவளுக்கு பிடித்தமான படிப்பையும் படிக்க வைத்து இன்று அவளை வக்கீலாகவும் தன் கண்மூன்னால் நிறுத்தியிருக்கின்றான்.

வக்கீல் பரசுராமன் சுருக்கமாக கூறியதை கேட்டே கார்த்திகேயனின் இதயத்தில் இரத்தம் வழிந்தது. ஹமீத் விலாவரியாக கூறியதை கேட்டு அடக்கமாட்டாமல் அழுது தீர்த்தான்.

“என்ன கட் பண்ணிட்டாரு? சிக்னல் கட்டாகிருச்சா?” ஹமீத் பல தடவை அழைத்தும் கார்த்திகேயன் அலைபேசியை எடுக்காததால் குறுஞ்செய்தியை குரலாக மாற்றி அனுப்பி வைத்தான்.

“சார் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? டாக்டர் மோகன சுந்தரம் தன்னோட பையன் கேஸ எடுக்க சொல்லி சொன்னதாக, நீங்க கூட என்ன கேஸ் என்று ஆஸ்ரேலியால என்ன விசாரிக்க சொன்னீங்களே. அது இந்த கேஸ் தான். கேஸ் டீடைல் கேட்டுட்டு நீங்க கூட இந்த கேஸ நீங்க எடுக்கலைனு சொல்லிடீங்க” என்றிருந்தான்.

தன்னை கட்டுக்குள் கொண்டு வந்திருந்த கார்த்திகேயன் ஹமீத் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை கேட்ட பின் நொந்து விட்டான்.

சந்தோஷ் போன்ற கேடு கெட்டவனுக்கு தான் உதவி செய்யக்கூடாது என்று முடிவு செய்து ஆஸ்திரேலியா செல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவனால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவி செய்ய எண்ணியிருக்கலாமே. ஏன் தனக்குத் தோணவில்லை. சென்றிருந்தால் கயல்விழியை அன்றே சந்தித்திருக்கலாமே. அவளை தன்னோடு அழைத்து வந்திருக்கலாமே. அவளை தன் பாதுகாப்பில் வைத்திருக்கலாமே.

“அவள் தன்னை விட்டு வேறொருவனே திருமணம் செய்து கொண்டு சென்று விட்டாள் என்ற கோபத்தில் அவளுக்கு காண்பிப்பதற்காக புகழைத் தேடி அலைந்தேன். அவளுக்கு உதவி செய்ய அந்தப் புகழ் கைகொடுத்தும் என்னால் அவளுக்கு உதவி செய்ய முடியவில்லை. இத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு இவள் எப்படித்தான் இருந்தாளோ” கயல்விழியை பார்த்து கண்ணீர் வடித்தான் கார்த்திகேயன்

யாருக்கு யார்

சொந்தம் ஆவதென்று

தேவதைகள் வந்து

சொல்வதில்லை

விதியென்ற காட்டிலே

திசை மாறும் வாழ்க்கையே

போகிற போக்கில் பாதைகள்

கண்டு விடு

உருவங்கள் தாண்டியும்

உள்ளங்கள் வாழுமே

அண்டம் மறையும்

அன்பே நித்தியமே

ரோஜாவின் கண்ணீா்

தானே அத்தராய் வாசம் கொள்ளும்

கண்ணோடு பொறுமை காத்தால்

காலம் பதில் சொல்லும்

ஒவ்வொரு பாடலிலும்

ஒவ்வொரு நினைவிருக்கு

உள்ளுக்குள் வலியிருக்கு

நெஞ்சே இசை நெஞ்சே

காதலின் கனவுகளை

கண்ணீாரின் நினைவுகளை

பாடல்கள் சுமந்துவரும்

நெஞ்சே இசை நெஞ்சே

மருந்தை வாங்கிக் கொண்டு வந்த விக்னேஷ் இந்த முறை கதவை தட்டாமல் அழைப்பு மணியை அடித்திருந்தான். பதட்டமாக இருந்தால் என்ன செய்வது என்றுதான் மனித மூளை சிந்திக்காதே.

கார்த்திகேயன் கதவை திறந்து விட்டதுமில்லாமல் கயல்விழிக்கு எவ்வளவு பெரிய உதவியை செய்து இருக்கிறான் இவனை போய் முறைத்துக் கொண்டு திரிந்தோமே என்று விக்னேஷுக்கு வழி விட்டு நின்றான்.

மருந்தை கார்த்திகேயனின் கையில் கொடுத்து விட்டு விக்னேஷ் செல்லலாமென்று நினைக்க, “உள்ள வா” என்று அழைத்தான் கார்த்திகேயன்.

சதா தன்னை முறைக்கும் கார்த்திகேயனுக்கு இன்று என்ன ஆச்சு என்று புரியாமல் விக்னேஷ் மறுக்க முனைய கண்விழித்த கயல்விழியோ விக்னேஷை தேடி கத்தினாள்.

Advertisement