Advertisement

அத்தியாயம் 7
“ஹலோ” கம்பீரமான பெண் குரல் ஒலிக்க
“ஹலோ மேம் மௌரி சார் பிகேவியர்ல ஏதோ சேஞ்சஸ் தெரியுது” தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றியும் முற்றியும் பார்த்தவாறு ஜெகன் கவனமாக பேச
“என்ன சேஞ்சஸ்” கணீர் குரலில் ஒலித்தது அக்குரல்.
“அவர் வைப் நிலாவ பத்தி தப்பான ரூமர் ஆபீஸ்ல கிளம்பி இருக்குனு அவர் கிட்ட போய் சொன்னா நான் பார்த்துகிறேன் நீங்க போங்கன்னு சொன்னாரு. ஆனாலும் எந்த எக்சனும் எடுக்கல. எனக்கென்னமோ! அவர்தான் இந்த ரூமரையே! கிளப்பி விட்டிருக்கணும்னு தோணுது” ஜெகன் பவ்வியமாக பேச
“நீங்க தானே! அவங்க ரெண்டு பேரும் தீவிரமா லவ் பண்ணுறாங்க, பார்த்து ரொம்ப நாள் ஆகுறதால உடனே! கல்யாணம் பண்ண முடிவு பண்ணிகிட்டதாக சொன்னீங்க. அதுவும் அந்த பொண்ண பத்தி நான் உங்கள விசாரிக்க சொன்னேன். நீங்கதான் இது காதல் அது இதுனு பேசுனீங்க. கல்யாணம் என்றதும் நானும் சரினு விட்டுட்டேன். எனக்கு மௌரி எந்த தப்பும் பண்ண கூடாது. புரியுதா.. இப்போவாவது அந்த பொண்ண பத்தி விசாரிங்க? ” என்று அந்த பெண் குரல் கட்டளையிட்டு அலைபேசியை துண்டித்திருந்தது.
குரலில் எந்த வித கோபத்தையும் காட்டியிருக்கவில்லை. வார்த்தைகளில் நீ சொன்னதை நான் முழுமையாக நம்பி இருந்தேன். நீதான் பொறுப்பு என்று அழுத்தம் இருந்ததை ஜெகன் நன்கு உணர்ந்தான். இதுதான் வாணன் என்று தான் ஒரு விம்பத்தை உருவாக்கி இருக்க, நிலாவை சந்தித்த பின் இருக்கும் வாணன் வேறு மாதிரி இருப்பதாக ஜெகனுக்கு தோன்றியது.
அலைபேசியை அனைத்த ஜெகனும் தனது அறையில் வாணன் என்ன செய்துகொண்டு இருக்கின்றான் தான் இரகசியமாக பொருத்தி இருந்த கேமரா வழியாக பார்க்க வாணன் தனியாக பால்ரூம் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தான்.
பார்க்கிறவர்களுக்கு வாணனின் மூளை குழம்பிப்போய் பைத்தியம் பிடித்து விட்டதாக எண்ணத் தோன்றும். ஆனால் ஜெகனுக்கு அவ்வாறு தோன்றவில்லை. அவனின் முகபாவங்களில் அவனுக்கு கிடைத்த வெற்றியின் களிப்பில் ஆடிக்கொண்டிருப்பதாகத்தான் தோன்றியது.
ஜெகனுக்கு ஒரு விஷயம் இப்பொழுதான் புலப்பட்டது. உண்மையிலயே! வாணன் நிலாவை காதலித்திருந்தால் ஊரைக் கூட்டி திருமணம் செய்திருப்பான். வாணன் ஒரு வளர்ந்து வரும் தொழிலதிபர் அவன் நினைத்திருந்தால் மீடியா மூலம் தனது காதல் திருமணத்தை ஊருக்கு தெரியப்படுத்தி இருக்க முடியும். குறைந்த பட்சம் ஆபீசில் வேலைப் பார்ப்பவர்களை அழைத்து ஒரு பார்ட்டி கொடுத்து நிலா என் மனைவி என்று அறிமுகப் படுத்தி இருப்பான். இதில் எதையும் வாணன் செய்யவில்லை. அவ்வாறாயின் நிலாவை திருமணம் செய்ததற்கான நோக்கம்தான் என்ன? அது என்னவாக இருந்தாலும் அவனின் பிரச்சினையில் தன்னால் தலையிட மட்டும் முடியாது என்று நன்கு உணர்ந்திருந்தமையால் நிலாவை பற்றி விசாரிக்கலானான்.
வாணனால் சிரிப்பைக் கட்டுப்படுத்தவே! முடியவில்லை. ஆண்கள் என்ன தப்பு செய்தாலும் அவன் ஆண் தானே! பெண்ணுக்கு எங்கு போச்சு புத்தி என்றுதான் பேசுவார்கள். பணம் இருந்தால் சொல்லவே! வேண்டாம் அவன் எதையும் செய்யலாம். எந்த பெண்ணையும் விலை பேசலாம். எந்த குடும்ப பெண்ணின் மானத்தையும் சுக்குநூறாகி அபாண்டமாக அவளை விபச்சாரி என்று முத்திரையும் குத்தலாம்.
அப்படித்தான் ஈஸ்வரன் பேசினான். வாணனின் அன்னையை பேசினான். சுசிலா ஒரு விபச்சாரி என்றும் தன் மகனை அழைத்துக்கொண்டு தன்னிடம் வந்தவள் என்றும் அம்மாக்கு இருக்கும் வெறியும், கொழுப்பும்தான் பையனுக்கும் இருக்கும் அதான் என் பொண்ண நாசம் பண்ண பார்த்தான் என்று அந்த பன்னிரண்டு வயது பையனின் மேல் பலி சொன்னான்.
இரத்த வெள்ளத்தில் அன்னையை கண்டு வாணன் கதறிக்கொண்டிருக்க வீட்டுக்கு வந்த தன் மனைவியிடம் “டொனேஷன் கேட்பது போல் உள்ளே வந்து இவன் நிலாவிடம் தப்பாக நடந்துகொள்ள பார்த்தான். அதே சமயம் இவள் பலான தொழில் செய்யும் தப்பான பெண் என்று ஈவு இரக்கமே! இல்லாமல் இரத்த வெள்ளத்தில் இருந்த சுசீலாவை பார்த்து கூறியது மட்டுமல்லாது என் பொண்ண கடத்திட்டு போகப் பார்த்தாள் நடந்த கைகலப்பில் இப்படி ஆகிருச்சு” என்று வாய் கூசாமல் சொன்னார் ஈஸ்வரன். 
அன்று ஈஸ்வரன் பேசிய வார்த்தைகளின் அர்த்தங்கள் கூட வாணனுக்கு முழுசாக புரியவில்லை. மயக்கத்துக்கு செல்லும் பொழுது அந்த வார்த்தைகள் சுசிலாவின் காதில் விழுந்து மனதில் ஈட்டியாய் பாய்ந்து இருக்கும். சில நேரம் துகிலனிடம் “ராட்சசன் வரான். அவன் நம்ல சும்மா விட மாட்டான். உன்ன என் கிட்ட இருந்து பிரிச்சிடுவான்” என்பாள். சில நேரம் “ஐயோ நான் அப்படி பட்டவ இல்ல…” என்றும் கதறுவாள். மருத்துவரிடம் விசாரித்ததில்தான் சுசீலாவுக்கு மனநலம் பாதிக்கக் காரணம் தலை மோதுண்டது மட்டுமல்ல, இந்த வார்த்தையும்தான் என்று வாணனுக்கு புரிந்தது.
“என் அம்மாவையா விபச்சாரி என்றாய்? என்னை பார்த்தா  உன் பெண்ணை நாசம் பண்ண வந்தவன் என்றாய்? “ஆமா உன் பொண்ணுக்கு என் கையாலதான் நாச காலம். பார்த்தியா உன் பொண்ணுக்கு எப்பேர்ப்பட்ட பேர வாங்கிக் கொடுத்திருக்கேன். நான் நினச்சா மட்டும்தான் அந்த பேர ஒன்னும் இல்லாமலாக்க முடியும்” கைகளை விரித்து சர்வ அதிகாரமும் தன்னிடம் மட்டும் என்பது போல் செய்கை செய்தவன்
“ஆனா பாரேன் உன் பொண்ணு என் காதலியா இருப்பான்னு இங்க இருக்கிறவங்களுக்கு எண்ண தோணல. அதுதான் பெரிய ட்விஸ்ட். ஏன்னா அவளோட பின் புலம் பக்கபலமா இல்ல. என்ன சந்திக்க வர்ரவ பெரிய கோடிஸ்வரன் ஈஸ்வரனின் மகளாக இருந்திருந்தால் என் காதலி என்று சொல்லி இருப்பார்கள். ஒண்ணுமில்லாத உன் மகள் அன்னக்கி போட்டுக்கிட்டு வந்த ட்ரெஸ்ஸும், இன்னக்கி அவ போட்டிருக்கிற ட்ரெஸ்ஸும் அவ வாழ்க்கை தரத்தை மட்டும் மாத்தல. அவ கேரக்டரையும் சேர்த்து மாத்தி இருக்கு. உடல் உழைப்பால் வந்து இல்ல. ஹாஹாஹா அது என்னவோ! உண்மைதானே! மிஸ்டர் ஈஸ்வர் உன் மகள் எனக்கு கீப் தான்”  சத்தமாக சிரித்த வாணன் அங்கு ஈஸ்வரன் அமர்ந்திருப்பது போல் கற்பனை பண்ணி பேசினான். அவன் மனம் கொஞ்சம் சமன் பட்டது.
ஜெகன் வந்து சொல்லவில்லையென்றாலும் வாணனுக்கு தெரியாதா? நிலா வரும் பொழுதும் செல்லும் பொழுதும் ஆபீஸ் ஊழியர்கள் அவளை பார்க்கும் பார்வையை வைத்தே! நிலாவின் மீதான அவர்களின் கருத்தை வாணன் புரிந்துக்கொண்டிருந்தானே!
“என் ஆபீஸ்ல வேல பாக்குறவங்கள பத்தி எனக்கு தெரியாதா? யாரு என்ன பேசுவாங்க? எத பத்தி பேசுவாங்கனு. அதான் நீ வர்ர நேரம் பார்த்து அந்த மேனேஜரை ரிசப்ஷனுக்கு அனுப்பினேன். இல்லனா அந்தாளுக்கு அந்த நேரத்துல அங்க என்ன வேல. அந்த பியூன் வரும் போது அப்படி ஒரு வார்த்த சொல்லைனா இன்னக்கி உனக்கு சத்தியமா இந்த பட்டம் கிடைச்சிருக்காது” நிலாவோடு ஆடுவதாக எண்ணி பேசினான் வாணன்.
தன்னை பற்றி தன் முதுகுக்குப் பின்னால் பேசுவதை பற்றி எதையும் அறியாத நிலா இரண்டு மாதங்களாக வாணனின் காரியாலயத்துக்கு வந்து சென்றுகொண்டுதான் இருந்தாள். தினமும் காதல் கணவனைக் காணக் கசக்குமா என்ன?
ஆனால் எல்லாவற்ரும் ஒரு முற்றுப்புள்ளி என்ற ஒன்று இருக்குமல்லவா…
வளமை போல் நிலா வணனனுக்காக உணவு தயாரித்துக்கொண்டிருந்தாள் அவள் அலைபேசி அடிக்கவே! கணவன்தான் அழைக்கின்றானோ! யார் அழைக்கிறார்கள் என்றும் பார்க்காமல் ஆசை ஆசையாய் இயக்கி காதில் வைக்க, மறு முனையில் கூறப்பட்ட செய்தியில் கதறி அழலானாள் நிலா.
அவள் யாருக்காக வாணனை திருமணம் செய்ய முடிவு செய்தாளோ! அந்த உயிர் உலகத்தை விட்டு நிம்மதியாக விடைபெற்று சென்று விட்டதாம்.
நிலாவால் கண்ணீரை கட்டுப்படுத்தவே! முடியவில்லை. அழுது கரைந்தவள் கணவனுக்கு அழைக்க அவன் அலைபேசி எடுக்கப்படவே! இல்லை.
என்ன செய்வது என்று புரியாமல், வாணன் தான் அவளுக்கு இருக்கும் ஒரே பற்றுக்கோளாக அவனுக்கே! அழைத்துக் கொண்டிருந்தாள் நிலா. ஓய்ந்து போய் அலைபேசியை வைத்ததும் அது அவளை திருப்பி அழைத்தது. மிஸ்ட் காலை பார்த்து வாணன் தான் தன்னை அழைக்கின்றானோ! என்று நிலா
“ஹலோ.. வாணன் அம்மா..” என்று கதற
“நிலாம்மா.. நான் சதாசிவம் பேசுறேன் மா… நான் வந்துட்டேன் மா… நீ பத்திரமா வாம்மா…” என்று சொல்ல கண்களை துடைத்துக்கொண்டவளுக்கு உடலில் புது தெம்பே வந்தது.
கொஞ்சம் தெளிவாக யோசித்து ஜெகனுக்கு அழைத்து விஷயத்தை கூறி வாணன் எங்கு எனக்கேட்க
“சார் ஒரு மீட்டிங்காக வெளிய போய் இருக்காரு மேடம். அதான் மொபைல் சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்காருனு நினைக்கிறேன். நான் உடனே! வரேன்” என்ற ஜெகன் நிலாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.
பிறைநிலா இன்முகமாக தூங்கிக் கொண்டிருந்தாள். ஆம். அவள் இறந்து விட்டாள் என்று நிலாவால் நம்ப முடியவில்லை. தூங்குவது போல்தான் இருந்தாள். அன்னையை கட்டிக்கொண்டு “தூங்கினது போதும் மா… எந்திரிச்சு வாம்மா…” குழந்தை போல கதறலானாள் நிலா.
“ரொம்ப நாள் உடம்பு முடியாம இருந்தவங்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ! அவ்வளவு சீக்கிரம் ஈமைக்கிரிகைகளை பண்ணுறது நல்லது” டாக்டர் சதாசிவத்திடம் சொல்லிவிட்டு செல்ல வாணனுக்கு அழைத்தவாறே ஜெகன் எல்லா ஏற்பாடுகளையும் கவனிக்கலானான்.
ஆயிற்று பிறைநிலாவை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று தகனம் செய்தாயிற்று ஆனால் வாணன் மட்டும் வரவே! இல்லை.
நிலா அழுதுகொண்டே இருந்தாள். அன்னை இறக்கும்வரை இதே! நிலைதான் என்று மருத்துவர் சொல்லியதுதான். அவளுடைய கடைசி காலம்வரை அவளை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டும்தான் நிலாவின் எண்ணமாக இருக்க, சற்றும் யோசிக்காமல் வாணனை மணந்திருந்தாள்.
இரண்டே! இரண்டு மாதங்கள் அவளால் அன்னையை பார்த்துக்கொள்ள முடிந்தது. கட்டிலில் உணர்வற்று படுத்திருந்தாலும் அன்னை என்று சொல்ல ஒருத்தி இருந்தாள் இன்று அவளும் இல்லை. துக்கம் நெஞ்சம் அடைத்துக்கொள்ள ஆறுதலாக தோள் சாயாவும் கணவனைக் காணாது வெறுமையாக உணர்ந்தவள் விம்மியவாறே வீடு வந்து சேர்ந்தாள்.
வீட்டுக்கு வந்தும் கட்டிலில் விழுந்தவள் அன்னையுடனான அவளது நியாபகங்கள் மனதினில் அலைக்கழிக்க அழுவதை மட்டும் நிறுத்தவே! இல்லை. அழுது அழுது ஓய்ந்தவள் ஒருகட்டத்துக்கு மேல் மயங்கினாளா? தூங்கினாளா? என்று அறியாத நிலையில் இருந்தாள்.
அவள் இடையில் ஊரும் கையை உணர்ந்தவள் “வாணன் வந்துடீங்களா? எங்க போனீங்க?” என்றவள் அவன் புறம் திரும்ப அவளை அடுத்த வார்த்தை பேச விடாது ஆட்கொள்ள ஆரம்பித்திருந்தான் வாணன். 
தான் அவனின் வரவுக்காக காத்திருந்தது எதற்காக? அன்னை இறந்த செய்தி இவனுக்கு தெரியாதா? மனம் சுனாங்க. அவனை தடுக்கும் முயற்சியில் தான் இறங்கி இருந்தாள் நிலா.
“நிலா… அடம் பிடிக்காத கொலை வெறியில இருக்கேன்” குளறியவாறே அவள் ஆடைகளை கலைய
“வாணன் குடிச்சிருக்கீங்களா? எங்க போனீங்க? அம்மா…அம்மா” என்றவளுக்கு துக்கம் தொண்டையடைக்க அடுத்த வார்த்தை பேச முடியாமல் விம்மியவையாறு கண்ணீர் வடிக்கலானாள்.
வாணனுக்கு அவள் விசும்புவதும் தெரியவில்லை. அவள் கண்ணீரும் புரியவில்லை. அந்த நேரத்தில் அவள் கிடைத்தால் போதும் என்ற வெறி மட்டும் தான்  அறை முற்றாக இருட்டில் இருந்தமையால் அவனிடமிருந்து விடுபட போராடியவள் மின் குமிழை ஏரியாவிடலாம் என்று எண்ண அடுத்த கணமே! அவள் கன்னம் சுளீரென வலிக்க ஆரம்பித்திருந்தது.
என்ன நடக்கிறது என்று யோசிக்கும் முன் நிலாவின் கன்னத்தில் மாறி மாறி அறைந்திருந்தான் வாணன்.
அப்பொழுது கூட குடித்திருந்தமையால்தான் கண்மண் தெரியாமல் நடந்துகொள்வதாக எண்ணிய நிலா பொறுமையாக பேச
“பேசாத…” என்றவாறு அவளை இழுத்து முத்த மிட ஏற்கனவே! அன்னையை இழந்த மனக்கவலையில் அழுது கரைந்து சோர்ந்து போய் இருந்தவள் பகலும் உண்ணாமல் இரவும் உண்ணாமல் அடித்த அடியிலும் துவண்டு வாணனின் கைகளிலையே சரணடைந்தாள்.
நிலா எவ்வளுவு நேரம் தூங்கினாள் என்று தெரியாது கண் விழிக்கையில் அறை இருட்டாகத்தான் இருந்தது. கன்னம் தீ சுட்டது போல் எரிய உடல் வலியும் பொறுக்க முடியாமல் நிலாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. தட்டுத்தடுமாறி அறையின் மின் குமிழை எரிய விட வாணனை அறையில் காணவில்லை. தன் தேவையை தீர்த்துக்கொண்டு வளமை போல் காரியாலய அறைக்கு தூங்க சென்று விட்டானா?
ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. வேறு நாட்களாக இருந்தாள் “வேலை இருக்கு நிலா. நீ தூங்கு நான் வரேன்” என்று விட்டு செல்லும் பொழுது “சரி” என்று விடுவாள். இடையில் விழிப்பு தட்டினாலும் வாணன் அறைக்கு வந்திருக்க மாட்டான். அப்படி என்ன வேலை என்று கதவை தட்டினால் வேலை செய்தவாறே தூங்கி விட்டதாக கூறுவான். அதனாலயே நிலா அவனை தொந்தரவு செய்ய மாட்டாள் ஆனால் விடியும்வரை அவன் அறைக்கு திரும்புவதே! இல்லை. ஒழுங்காக தூங்குகிறானா? என்ற கவலையும் நிலாவை தொற்றிக்கொள்ளும். ஆனால் அவன் இன்று மிருகமாக நடந்துகொண்டதுமட்டுமில்லாது இன்று அவள் அன்னை இறந்த நாள் அவள் சொல்ல வருவதையும் கேட்காமல் அவன் தேவைதான் பெரிதென்று நடந்துகொண்டதை எண்ணி கண்ணீர் முட்டிக்கொண்டு வர கையில் கிடைத்ததை அணிந்த்துக்கொண்டவள் வாணனின் அறை கதவை தட்டலானாள். 
நிலா எவ்வளவு தட்டியும் கதவு திறக்கவே! இல்லை. வயிறு வேறு பசிக்குது என்னை கொஞ்சம் கவனி என்று கூச்சலிட அவள் மேனியும் ஆட்டம் கண்டது. தளர்வான நடையில் சமையலறையை அடைந்தவளுக்கு சமைத்து உன்னவெல்லாம் உடம்பில் தெம்பில்லை. பச்சையாக உண்ணக் கூடிய எல்லாவற்றையும் சாப்பிடலானாள்.
வயிறு நிரம்பிய பின்தான் உடலின் நடுக்கம் நின்றது. வாணனை திருமணம் செய்யும் முன் ஒருவேளை கூட சாப்பிட்டு அன்றைய நாளை கழித்திருக்கிறாள். “இது என்ன? பகல் மட்டும்தான் சாப்பிட வில்லை. அதற்கா இப்படி உடல் நடுங்குவது. வர வர மூன்று வேலையும் நன்றாக சாப்பிட பழகியதில் சாப்பிடாவிட்டாலும் பசிக்க ஆரம்பிக்க்கிறது” என்று எண்ணிய நிலா மீண்டும் சென்று வாணனின் அறைக் கதவை தட்டினாள்.
“வாணன் கதவை திறங்க.  என்ன நினைச்சி கிட்டு இருக்கீங்க உங்க மனசுல. இப்போ நீங்க கதவை திறக்க போறீங்களா? இல்லையா?” 
அப்படி என்னதான் செய்கிறான். என்ற கோபம் தலை தூக்க ஜன்னலின் புறம் சென்று பார்க்க திரை சீலை போடப்பட்டிருப்பதால் அவளால் உள்ளே பார்க்க முடியவில்லை. அறையில் மின்குமிழ்கள் எரிவதற்கான அறிகுறிகளும் இல்லை. 
சோர்ந்து போனவளாக தனது அறைக்கு வந்து கட்டிலில் விழுந்தவள் கண்களில் பட்டது கடிகாரம் அது ஏழுமணியை நெருங்கிக் கொண்டிருப்பததாகக் காட்ட திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள். அப்பொழுதுதான் தான் நிலாவுக்கு ஒரு நாள் முழுக்க தூங்கியது புலப்பட்டது.
“இவ்வளவு பலவீனமாகவா இருக்கின்றோம். ஒருவேளை சாப்பிடவில்லையென்று ஒருநாள் முழுக்க தூங்கும் அளவுக்கு” என்று நினைத்தவளுக்கு அப்பொழுதுதான் ஒன்று உரைத்தது. அவளது காதல் கணவன் அவளை அம்போ  என்று விட்டு விட்டு சென்றது மட்டுமல்லாது அவள் என்னவானாள் என்று தேடிப்பார்த்திருக்கவுமில்லை.
அவள் அன்னை இறந்தது நேற்று அவனுக்கு தெரிந்து இருக்காது என்று எடுத்துக்கொண்டாலும், இன்று ஆபீஸ் சென்றவனுக்கு ஜெகன் தகவல் சொல்லி இருக்கக் கூடும். மனைவிக்கு ஆறுதலாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன் அவளை தேடி வந்திருப்பானா? மாட்டானா? வந்திருந்தால் அவள் நிலைமையை பார்த்து பதறி இருப்பானே!
அப்படி என்றால் அவன் வரவில்லை. அவனுக்கு அவள் கவலை ஒரு பொருட்டில்லை. அவனுக்கு தேவையெல்லாம் அவள் உடல் மட்டும்தான். நினைக்கும் பொழுதே! உடல் கூசியது.
இந்த இரண்டு மாதங்களில் ஒரு தடவையாவது படுத்த படுக்கையாக இருக்கும் அவள் அன்னையை பார்க்க வரவுமில்லை. எவ்வளவு ஆசையாக எதிர்பார்த்திருப்பாள். தினமும் நிலாவிடம் “எங்க உன் பிரின்ஸ் இன்னைக்கும் வரலையா? எப்போ காட்ட போற?” நிலாவின் கண்கள் கலங்கின. 
வண்டி வரும் சத்தம் கேட்கவே! கோபமாக வெளியே சென்றாள். வண்டியை பூட்டி விட்டு ஏதோ ஒரு சிந்தனையில் தனது குடிலுக்கு சென்று கொண்டிருந்தான் வாணன். பல்லைக் கடித்த நிலா பின்னாலிருந்து அவனை திருப்ப “என்ன நிலா” என்றவன் நொடியில் முகத்தில் புன்னகையை கொண்டுவர
சட்டென்று  மாறிய அவன் முகத்தை கண்டு நொடியில் திகைத்த நிலா “எங்க போயிட்டு வரீங்க?” அவனை உறுத்து விளிக்கலானாள்.
“ஒரு க்ளிண்ட்ட பார்க்க போனேன் கொஞ்சம் டென்ஷன்” என்றவன் மீண்டும் புன்னகைக்க
“ஆபீஸ் போனீங்களா?”
“ஆமா”
“இன்னக்கி நான் லன்ச் கொண்டு வரல ஏன் போன் பண்ணி கேக்கல”
“நீ தூங்கி கிட்டு இருப்ப எதுக்கு உன்ன டிஸ்டப் பண்ணனும்னு இருந்துட்டேன் நிலா” எனறவன் முத்தமிட முயல.
“பொய் சொல்லுறீங்க வாணன். அது மட்டுமில்ல சிறப்பா நடிக்கிறீங்க. நேத்து என் அம்மா இறந்துட்டாங்க. ஏன் வரல” நிலா கேட்டதும் நெற்றியை தடவியவன் என்ன பதில் சொல்வதென்று யோசிக்க
“தெரியாதுன்னு மட்டும் சொல்லாதீங்க. தெரிஞ்சே தான் வரல. உங்களுக்கு வர பிடிக்கல. ஏன்னா நீங்க என்ன காதலிக்கல. உங்களுக்கு தேவைப்பட்டெல்லாம் என் உடம்பு மட்டும்தான். ஏன் இப்படி பண்ணினீங்க” என்று அவன் சட்டையை பிடித்து உலுக்க
உதடு வளைத்து “இத இப்போதான் கண்டு பிடிச்சியா?” என்று குரூரமாக சிரிக்கலானான் துகிலவாணன் மௌரி.

Advertisement