Advertisement

அத்தியாயம் 24
வாணனுக்கு தனது தொழிலை பார்க்கவே! நேரம் பத்தவில்லை. இதில் அவனது குடும்பத் தொழிலையும் பார்ப்பது என்றால் இருபத்தி நான்கு மணித்தியாலமும் போதாது.
அத்தையை புரிந்துக்கொண்ட பின்பு எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி நிற்பது ஆண்மகனான தனக்கு அழகல்ல, அத்தையின் சிரமத்தையும் குறைக்க வேண்டும், நிலாவையும் சமாதானப்படுத்த வேண்டும் என்றுதான் அரண்மனைக்கு குடியேறி இருந்தான் வாணன்.
லேகாவோடு கம்பனிக்கு சென்று வந்தாலும் அவனுக்கு குடும்பத் தொழிலை பற்றி பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. அவன் கற்றுக்கொள்ள வேண்டியவைகளே! நிறைய இருக்க, பாலாம்பிகையின் பேரன்கள் வேறு இவனை கண்டுகொள்ளவில்லை.
நீ ராஜாவாக ஆண்டால் என்ன? நாங்கள் தான் மந்திரிகள் நாங்கள் சொல்லாது இங்கு ஒரு அணுவும் அசையாது என்பது போல்தான் அவர்கள் வாணனிடம் நடந்துக்கொண்டிருந்தனர்.
வாணனுக்கும் தொழிலை பற்றி தெரியாததால் வந்த உடனே! அவர்களை குடைய வேண்டுமா? விட்டுப்பிடிக்கலாம் என்று பொறுமையாக வேலைகளை பார்க்க ஆரம்பித்திருந்தான்.
அதற்குள் லேகா அவர்களை வேலையை விட்டு தூக்கி இருக்க, அவர்களும் சும்மா இருக்கவில்லை. யூனியன் மூலம் சென்று அவர்களை வேலைக்கு சேர்க்கவென வேலை நிறுத்தம்வரை செய்திருக்க, வாணன் அவர்களிடம் இவர்கள் கையாடல் செய்த பணத்தை பற்றி பேசி “அதில் உங்களுக்கும் கூட்டா?” என்று கேட்ட பின்தான் ஊழியர்கள் அடங்கி “எதுக்கு டா நமக்கு பெரிய இடத்து வம்பு” என்று ஒதுங்கியும் கொண்டனர்.
அதன்பின்தான் எல்லா விதமான சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் அவர்கள் மீது எடுக்க முடிந்தது. அவர்களிடமிருந்து எந்த எந்த வழிகளில் பணத்தை மீளப்பெறலாம்  என்று லேகாவோடும் வக்கீலோடும் கலந்ததாலோசித்து அவர்களின் சொத்துக்களை முடக்கி, வங்கிக் கணக்குகளை நிறுத்தி வைத்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து பணத்தை மீட்க்கும் வழியில் இறங்கி இருந்தான் வாணன். 
லேகாவிடம் வந்து பேசிய பாலாம்பிகை லேகா அசைந்துக் கொடுக்காததால் வாணனிடம் பேச “என் அம்மாவ பேசினத்துக்கு நான் உங்க கழுத்த நெரிச்சி கொன்னு இருப்பேன். உசுரு போறத விட இந்த தண்டனை சூப்பர் இல்ல” என்று வாணன் சொல்ல பாலாம்பிகை சாபங்களை அள்ளித்தெளிக்க ஆரம்பித்தாள்.
“உங்கள மாதிரி மனசுல கசடு நிறைஞ்சவங்க சாபமெல்லாம் எங்களை சேராது. அது உங்களைத்தான் திருப்பி அடிக்கும் பார்த்து. யார் விட்ட சாபமோ! அடிக்க ஆரம்பிச்சிருக்கு அதுக்கே! இப்படி இருக்கு” என்று வாணன் சிரிக்க, லேகாவும் சத்தமாக சிரிக்க ஆரம்பிக்க, பாலாம்பிகை கோபமாக அங்கிருந்து சென்று விட்டாள்.
“நான் கூட கோபத்துல முடிவெடுத்துட்டேன், பணத்தை வசூல் பண்ணிட்டு, மன்னிச்சு விட்டுடலாம்னுதான் இருந்தேன். இந்த பேச்சு பேசுது இனியும் விடக் கூடாது ஜெயில்ல களி திண்ணட்டும்” என்று லேகா பொரும,
“என்னது மன்னிச்சு விட்டுடவா? உங்களுக்கு ரொம்பவும் இளகிய மனசு அத்த உங்க பொண்ணையே! கொல்ல ஐடியா கொடுத்த பொம்பள. அத தெரிஞ்சும் இத்தனை வருஷம் கூட வச்சிருந்ததே! தப்பு எப்பயோ! போட்டு தள்ளி இருக்கணும்” என்ற வாணன் புன்னகைக்க, லேகா அவனை யோசனையாக பார்த்தாள்.
ஒருவாறு இன்றுதான் வாணன் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு நிம்மதியாக அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். வந்தவன் குளித்து விட்டு அறையை விட்டு வெளியே! வர நிலா கையை கட்டியவாறு நின்று கொண்டிருப்பதைக் கண்டு “ஹேய் நிலா இங்க என்ன பண்ணுற? தூங்கலையா?” என்று விசாரிக்க
அவன் கேள்விக்கு பதில் சொல்லாது “சாப்பிட்டீங்களா?” என்று நிலா கேக்க திகைத்து விழித்தான் வாணன்.
வாணன் அரண்மனைக்கு வந்ததிலிருந்து முறைத்துக்கொண்டிருந்தவள் சமீபகாலமாகத்தான் அவன் கேட்ட கேள்விகளுக்கு குறுகிய பதில்களை சொல்லிக் கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக மன்னிப்பு வேண்டி மலர்செண்டு அனுப்பிக்கொண்டு இருக்கின்றான் அதற்கு எந்த பிரதிபலிப்பும் நிலாவிடமிருந்து வரவில்லை.  
திடிரென்று நடு இரவில் அவன் அறை வாசலில் வந்து நின்று “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டால் வாணன் அதிர்ச்சியடையாமல் வேறு என்ன ஆவான்.
“என்ன? என்ன கேட்ட?” காதை குடைந்தவன் மீண்டும் கேக்க
நிலாவுக்கு சிரிப்பாக இருந்தாலும் மீண்டும் ” சாப்பிட்டீங்களா?” என்று கேட்டாள். 
“ஆ… இல்ல. இன்னும் இல்ல” திகைப்பு மாறாமலையே! வாணன் சொல்ல
“சரி வாங்க சாப்பிடலாம்” அவன் கையை பிடித்து இழுக்காத குறையாக அழைத்து செல்ல தான் காண்பது கனவா? நனவா? என்று குழம்பி நின்றான் வாணன்.
“நீ சாப்பிட்டியா நிலா?” அமரும் பொழுதே! வாணன் கேட்டிருக்க, நிலா “ஆமாம்” என்றாள்.
நிலா பரிமாற வாணன் நீண்ட நாட்களுக்கு பின் வயிறார உண்ண ஆரம்பித்தான். பசி ருசி அறியாது என்றில்லாமல் நிலா பரிமாறினாள் என்பதற்காக வேண்டியே! வாணன் ரசித்து ருசித்து சாப்பிட நிலா அவனை ரசிக்க ஆரம்பித்திருக்க,
“நீ இப்படி பாத்துகிட்டு இருந்தா எனக்கு வயிறு வலிக்கும் வாய திற” என்று ஊட்டி விட நிலா மறுக்காமல் பெற்றுக்கொள்ள, வாணனுக்கு அடுத்த ஆச்சரியம் அது.
“என்னடா நடக்குது இங்க?” என்று அவன் மைண்ட் வாய்ஸ் கேட்டாலும் நடப்பது நன்மைக்கே! என்று அந்த பொழுதை ரசிக்க ஆரம்பித்தான் வாணன்.
வயிறு நிறைந்த பின் தூக்கம் கண்ணை சொக்க, “குட் நைட் நிலா” என்று அவனது அறைக்கு செல்ல
கணவனை முறைத்த நிலா “நான் உங்க கூட கொஞ்சம் பேசணும்” என்று சொல்ல
“ஆஹா…  வழிய வந்து சாப்பாடு போடும் போதே! தெரிய வேணாம் அடுத்த ஆப்பு ரெடி பண்ணிட்டான்னு” வாணனின் மனம் சிரிக்க
“காலைல பேசலாமா?” என்று நகர முற்பட
அவன் கையை பிடித்து தடுத்தவள் “இல்ல, இப்போவே! பேசணும்” என்றவள் அவளை தாண்டி அவனது அறைக்குள் நுழைந்திருக்க, வாணனும் வேறு வழியில்லாமல் அறைக்குள் நுழைந்தான்.
“என்ன சொல்ல போறாளோ!” அச்சப் பந்து வயிற்றில் உருள வாணன் கதவை சாத்திய அடுத்த கணம் நிலா கணவனை கட்டிக்கொண்டு ஓவென அழ ஆரம்பித்திருந்தாள். 
“ஹேய் நிலா என்ன டா ஆச்சு?” பேச வேண்டும் என்றவள் திடிரென்று எதற்காக அழுகிறாள்? ஒன்றும் புரியாமல் வாணன் குழம்பினாலும் அவன் அச்சம் மட்டும் தீரவில்லை.
“என்ன மன்னிச்சிடுங்க, சின்ன வயசுல உங்க மனசுல பட்ட காயங்கள் ஆராமதான் நீங்க இப்படி மாறிட்டீங்க என்று எனக்கு நல்லா புரிஞ்சிருந்தாலும், உங்கள காதலிச்ச ஒரே காரணத்துக்காக பழிவாங்கத்தான் நீங்க என்ன கல்யாணம் பண்ணி கிட்டீங்கனு சொன்னது எனக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. அது என்னால தாங்க முடியாத. அதனாலதான் உங்க மேல அவ்வளவு கோபமா இருந்துட்டேன்” என்று மேலும் அழ
நிலா அழுவதற்கான காரணம் புரிய ஆசுவாசமடைந்தவன் “நான் தான் நிலா உன் கிட்ட மன்னிப்பு கேக்கணும், உன் அக்கா பண்ண தப்புக்கு நீ காரணமே! இல்ல. எந்த பாவமும் பண்ணாத உனக்கு வார்த்தையாலையும், செய்கையலையும் நிறைய கஷ்டத்தை கொடுத்து துன்புறுத்திட்டேன்.
யோசிச்சு பார்த்தா நிலா செஞ்சது கூட பெரிய தப்பு கிடையாது. ஆனாலும் அம்மாக்கு இப்படி ஆனது என்னால தாங்க முடியல. அப்பா இறந்தது அம்மா இப்படி ஆனதால் என்பது கூட என் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. அம்மாவை பார்க்கும் பொழுதெல்லாம் நிலா மேல இருந்த கோபம் கூடுதே! ஒழிய குறையல.
எல்லாம் விதி என்று சொல்லுவதாணு கூட தெரியல. நீ என்ன சந்திக்க ஆபீஸ் வந்தப்போ கூட உன் அப்பா பேர கேட்டிருந்தா ஒரு நொடி யோசிச்சு, என்ன குழப்பம்னு விசாரிச்சு இருப்பேன். இல்ல உங்க அம்மாவை போய் பார்த்திருந்தாலாவது எல்லா குழப்பமும் தீர்ந்து இருக்கும். நீ அத்தை கூட சேரணும்னுதான் எல்லாம் நடந்திருக்கு போல” பேசியவாறே வாணன் நிலாவின் கண்ணீரை துடைத்து விட
“ஆமா எங்கம்மா இறப்புக்கு கூட வராம அப்படி எங்க போய்ட்டிங்க?” அன்றைய நாள் அவள் அவனை எவ்வளவு எதிர்பார்த்தாள் என்று அவளுக்கு மட்டும்தானே! தெரியும்.
“அன்னைக்கிதான் என் அப்பா, அம்மாவோட கல்யாண நாள்” என்றவன் அன்று நடந்த அனைத்தையும் சொல்ல அன்று இரவு வாணன் தன்னிடம் நடந்து கொண்ட முறைக்கு காரணமும் புரிந்தது, அவன் குடிந்திருந்தபடியால் அன்று நடந்தவைகள் அவனுக்கு நியாபகம் இருக்குமா?
“அன்னக்கி நைட் என்ன நடந்ததுன்னு தெரியுமா?”
“சுத்தமாக நியாபகம் இல்ல. நிலா.. குடிச்சிட்டு வந்ததுல உன் கிட்ட உளறி கூட இருக்கலாம். அதனாலதான் நீ என் கிட்ட சண்டை போட்டிருப்ப” என்று சொன்னான் வாணன்.
அன்று இரவு நடந்தவைகள் எதுவும் வாணனுக்கு நியாபகம் இல்லை என்று புரிந்துக்கொண்ட நிலா அதை பற்றி சொல்லி அவனை கஷ்டப்படுத்த விரும்பாமல் “அந்த பிரபாகரனோட மனைவி குழந்தைகளோட பெயரிடும் விழாவுக்கு வந்திருந்தப்போ ஏதேதோ சொல்லிட்டு போனாங்களே! அந்த பேச்சோட அர்த்தம் என்ன?”
“என்ன சொல்லிட்டு போனாங்க?” வாணனும் அருகில்தானே! இருந்தான். பிரபாகரனோடு பேசிக்கொண்டிருந்தவனின் காதில் அவன் மனைவி பேசியவைகள் கொஞ்சமாக விழத்தான் செய்திருந்தது.
“பிரபாகரனுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்ததாகவும், அதுவும் நான் சொல்லி பார்த்ததாகவும் நீங்க சொன்னீங்களாமே!” நிலா வாணனை செல்லமாக முறைக்க
புன்னகைத்த வாணன் அவள் கையை பிடித்து கட்டிலில் அமரத்தியவாறு “தப்பான ஒருத்தன என் ஆபீஸ்ல வச்சிக்க மாட்டேன். பிரபாகரன் ரொம்ப திறமையானவன். என்ன பொண்ணுகள தொட்டு தொட்டு பேசுவான். பின்னாடி தட்டுவான். அது தவிர எந்த பொண்ணு கூடயும் தகாத உறவு வச்சி கிட்டது இல்ல.
உன்ன பழிவாங்க அவன் யூஸ் பண்ணிக்கலாம்னு யோசிச்சேன்” நிலா முறைக்கவும் “கோபப்படாத நிலா. என் திட்டப்படிதான் எல்லாம் நடந்தது. மத்த பெண்களை அவன் பின்னாடி தட்டுறத நானே! சீசீடிவில பார்த்திருக்கேன். யாரும் கம்பளைண்ட் கொடுக்காததால் பெருசா கண்டுக்கல. அவன் உன் மேல கைவைக்க போனப்போ! எனக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. விட்டிருந்தா அவன் கைய ஒடச்சிருப்பேன்.  
அன்னைக்கே! உன் முன்னாடி என் ஆளுன்னு சொன்னாலும் ஸ்டாப் முன்னாடி என் மனைவி மேலையே! கை வைக்க பார்த்தான் என்றுதான் சொன்னேன். அந்த வார்த்த அப்போ என் மனசுல இருந்து வந்தது நிலா. அத சொல்லும் போது கூட நான் உணர்ந்து சொன்னேனானு எனக்கு தெரியல. ஒரு வேகத்துலசொல்லிட்டேன். கோபத்துல அவங்களையும் உசுப்பேத்தி அவனை நல்லா போட வச்சி ஹாஸ்பிடல் சேர்க்க வச்சேன். அவன் மனைவி வந்து அழுத அழுகையை பார்த்த பின்னால அந்த ரெண்டு குழந்தைகளையும் பார்த்த நொடி என் மனசு மாறிருச்சு.
டாக்டர்தான் சொன்னாரு இது ஒரு மனநோய் முறையான ட்ரீட்மெண்ட் எடுத்தா சரியாவான்னு. ட்ரீட்மெண்ட்டும் எடுத்துகிட்டான். ஒழுங்காக்கிட்டான். உன் மேல அவங்களுக்கு எந்த கோபமும் இருக்கக் கூடாதுன்னுதான் நீ சொல்லித்தான் நான் எல்லாம் செஞ்சேன்னு ஒரு வார்த்த சொல்லி வச்சேன். வேற ஒன்னும் இல்ல” வாணன் அதை சாதாரணமாக சொல்ல தன் மீது எவ்வளவு காதல் இருந்தால் தன்னை பற்றி யோசித்து இப்படியெல்லாம் பேசி இருப்பான் என்று நிலாவுக்கு புரிய வாணனை இழுத்தணைத்து முத்தமிடலானாள்.
வாணனின் இன்றைய அதிர்ச்சிகளில் உச்ச கட்டம் இந்த இதழ் ஒற்றலாகத்தான் இருக்கும்.
அவர்களின் திருமணம் வாணனை பொறுத்தவரையில் பழிவாங்க நடந்த திருமணமாக இருந்தாலும், நிலா வாணனை பார்த்த நொடியிலிருந்தே! காதலிக்க ஆரம்பித்திருந்தாள். ஆனாலும் அவளாக அவனை நெருங்கியதில்லை.
அவன் காதலை உணர்ந்த நொடி எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து நிலா கணவனை ஆட்கொண்டிருந்தாள்.
வாணன் அவளை எத்தனோயோ! தடவைகள் முத்தமிட்டிருக்கின்றான். எல்லை இல்லா கோபத்தோடு அவளை நெருங்கி காமத்தை கரை கடந்துதான் இருக்கின்றானே! தவிர அவளிடம் காதலை தேடியதில்லை.
இந்த இதழ் தீண்டல் அவனது உணர்வுகளையும் தட்டியெழுப்பியதோடு பரவசத்தையும் கொடுத்திருக்க, மெய்மறந்து அனுபவித்தவன் நிலா அவனை விட்டு விலகவும், அவளை விலக விடாது தன்னோடு சேர்த்தணைத்து அவள் இதழ்களை தன் இதழ்களால் கவ்விப்பிடித்திருந்தான்.
அந்த இதழ் யுத்தம் எவ்வளவு நேரம் நீடித்ததோ! அவனது எத்தனை நாட்களின் ஏக்கங்கள் இன்று தீர்த்ததோ! வாணனுக்கு நிலாவை விட மட்டும் மனம் வரவில்லை. அவள் மூச்சுக் காற்றுக்கு தவிக்கும் பொழுது அவளை விட்டவன் “சாரி நிலா” என்று தலை கோத நிலா சிரித்தே! விட்டாள்.
“விட்டா ரெத்தம் வரும்வரைக்கும் கடிச்சி எடுத்துடுவீங்க போலயே! இப்படி நீங்க பண்ணுற எல்லாத்துக்கும் சாரி கேக்க ஆரம்பிச்சிட்டீங்கனா ஆயுசு முழுக்க கேக்க வேண்டியதுதான்” என்று கிண்டல் செய்தவள்  “நான் போறேன் பா.. குழந்தைங்க எந்திரிச்சிடுவாங்க” என்று நிலா அறையை விட்டு வெளியேற
அவளை இழுத்து அணைத்துக்கொண்டு “தேங்க்ஸ் நிலா” என்று மீண்டும் சொல்ல
“நாளை காலைல குளிச்சிட்டு பட்டு வேட்டி சட்டைல வந்துடுங்க” என்றவள் வெளியேறி இருந்தாள்.
நிலா எதற்காக சொன்னாள் என்று வாணனும் கேட்கவில்லை. நிலாவும் சொல்லவில்லை. நிலாவின் கோபம் கரைந்தோடிய மகிழ்ச்சியில் வாணன் உறங்கியும் போனான்.
நீண்ட நாட்களுக்கு பின் நிம்மதியான தூக்கம். சொன்னது போலவே! பட்டு வேட்டி சட்டையில் தயாராகி வந்தவன் நிலா எங்கு என தேட “என்ன வாணா கோவிலுக்கு போறியா?” லேகா யோசனையாக கேக்க
அவன் என்ன பதில் சொல்வான்? “நிலா எங்க?” என்று கேட்கும் பொழுதே! சுசீலாவோடு குழந்தைகளை சுமந்துகொண்டு வந்தாள் நிலா.
அவளும் பட்டுப்புடவையை தயாராக்கி வந்திருக்க, என்ன நடக்குது என்று புரியாது பார்த்தாள் லேகா.
“என்ன விஷேஷம் உங்க கல்யாண நாள் கூட இல்லையே! பிறந்த நாள் கூட இல்லையே!” என்று லேகா யோசனையாகவே! கேட்டிருக்க,
“என்னம்மா.. விசேஷமான நாள்னா மட்டும்தான் கோவிலுக்கு போவாங்களா? அப்படி பார்த்தாலும் இன்னக்கி உங்க மனசுல இருந்த பெரிய குறை தீர்ந்ததுனு நினைச்சுக்கோங்க. உங்க மருமகனும் பொண்ணும் ராசியாகிட்டாங்க” என்று நிலா வெக்கப்பட்டவாறே சொல்ல
“நிஜமாவா?” என்றனர் இரு அன்னையர்களும்.
“ஆமா..” என்ற வாணனின் முகத்தில் புன்னகை மட்டுமே!
“கொஞ்சம் இரு வரேன்…” என்ற லேகா உள்ளே! சென்று மீண்டும் வந்தவள் அனைவரையும் அழைத்துக்கொண்டு அரண்மனையில் இருந்த சிவன் கோவிலுக்கு அழைத்து சென்றாள்.
சிவனை வழிபட்டு கொண்டவர்கள் மனமுருகி வேண்டிக்கொண்ட பின் திருநீறும் பூசிக்கொள்ள,
“வாணா இது எங்க குடும்பத் தாலி இத நிலா கழுத்துல போடு பா..” என்று லேகா கொடுக்க
“ஆமா தாலி பெருக்கு சடங்குனு எதுவும் பண்ணல இல்ல” என்று சுசிலா சொல்ல
வாணனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவன் நிலாவின் கழுத்தில் கட்டிய தாலி பழிவாங்கவென்று கட்டி இருந்தாலும், அவள் மட்டும்தான் மனைவி என்று எண்ணித்தான் கட்டி இருந்தான். அதை கழற்றி விட்டு வேறு கட்டுவதா? நிலா என்ன சொல்வாள் என்று அவளையே! பார்க்க
“அவர் கழட்டி வீசுறது போல தாலி கட்டலயே! தங்கத்துலதான் வாங்கிப் போட்டாரு. அது என் கழுத்துலையே! இருக்கட்டும்மா… வேணும்மா இதையும் போட்டுகிறேன்” என்றவள் பார்வையாலையே! கணவனுக்கு உத்தரவிட ஒரே நேரத்தில் கணவன் மற்றும் அன்னையின் மனதை படித்து மனைவி நடந்துகொண்ட விதம் வாணனுக்கு அவள் மேல் மேலும் காதல் பெருகியது.
“என்னது ரெட்டை தாலி போட்டுக்க போறியா?” சுசிலா என்ன நடக்கப்போகுதோ என்று அஞ்ச
“ரெட்டை குழந்தையே! பெத்துக்கிட்டேன் அத்த. ஒன்னும் நடக்காது” என்று சுசிலாவின் கன்னம் கிள்ளியவள் தலை குனிந்து கணவன் இட்ட தாலியை வாங்கிக் கொண்டவள் அன்னைகளிடம் ஆசிர்வாதமும் வாங்கிக் கொண்டு. குழந்தைகளை அன்னைகளிடம் ஒப்படைத்து விட்டு கணவனை அழைத்துக்கொண்டு தோட்டத்தின் பக்கம் சென்றாள். 
“சொல்லுங்க புருஷா.. ரெண்டாவது தடவையும் கல்யாணம் ஆகிருச்சு.. ஹனிமூனுக்கு எங்க போக போறோம்? மொத தடவைதான் எங்கயும் கூட்டிட்டு போகல, ஊருக்குள்ளேயே! காட்டேஜ் எடுத்து ஹனிமூன் கொண்டாடினீங்க. இந்த தடவ அரண்மனைல இருக்கோம்னு எங்கயும் போக வேணாம்னு தீர்மானம் ஏதும் பண்ணிடீங்களா?”
நிலாவின் கிண்டலான சகஜமான பேச்சே! அவள் நல்ல மனநிலையை எடுத்துக்கூற, வாணனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
“சொல்லுங்க மகாராணி. எங்க போகணும்? நீங்க சொல்லுறதுதான் தாமதம். உங்கள பல்லாக்குள அப்படியே! தூக்கி வச்சி கூட்டிட்டு போக மாட்டேன்னா?” என்று வாணனும் அதே! பாணியில் பேச
“ஏன் மகாராஜா பல்லாக்கில்தான் சுமந்துகொண்டு செல்வீரோ! தாங்கள் இரு கைகளிலும் என்னை ஏந்த மாட்டீரோ!” என்று மிடுக்காகவே! கேட்டிருக்க,
அடுத்த கணம் அவளை கைகளில் ஏந்திக்கொண்டவன் “இதோ! உங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன் மகாராணி” என்று சிரிக்க
“என்ன பண்ணுறீங்க? எல்லாரும் நம்மளாதான் பாத்துகிட்டு இருக்காங்க. கீழ இறக்கி விடுங்க” என்ற நிலா கூறினாலும் சந்தோசமாக சிரிக்கலானாள்.
அவர்களின் சிரிப்பு சத்தம் காற்றோடு கலந்து தோட்டம் முழுவதும் வீச, அந்த சத்தத்துக்கு இணையாக பறவைகளும் இசை மீட்ட, மலர்களும் தலையாட்டின.
வாணன் தான் செய்த தவறை உணர்ந்து கொண்டான். நிலா அவனை மன்னித்து விட்டாள். அது அவர்களுக்கிடையிலான காதலால் தான் சாத்தியமானது.
அவர்களின் இல்லறம் நல்லறமாக வாழ்த்தி விடைபெறுவோமாக

Advertisement