Advertisement

அத்தியாயம் 23

குதிரையில் வந்து பூங்கொத்து கொடுக்கும் திட்டம் சொதப்பி விட்டது என்று வாணன் ஒன்றும் சோர்ந்து போய் விட வில்லை. தினமும் வித விதமான மலர்செண்டுகளை நிலாவின் அறைக்கு அனுப்பிக்கொண்டுதான் இருந்தான். கூடவே! “sorry” என்ற வாசகத்தோடு.
நிலாவுக்கு மலர்களும் பிடித்தித்திருந்தது. வாணன் விடாது தினமும் “sorry” கேட்பதும் பிடித்திருந்தது. தான் இறங்கி வரவில்லையானால் அவன் இன்னும் என்னவெல்லாம் செய்வான் என்ற ஆவல் பிறக்க, மலர்செண்டுகளை குவளையில் இட்டு அழகு பார்ப்பவள் அமைதியாக இருக்கலானாள்.
மலர்செண்டோடு விடாமல் குழந்தைகளோடும் நேரம் செலவிடுபவன், நிலாவோடு சேர்ந்து அவர்களை அழைத்துக்கொண்டு தினமும் மாலையில் தோட்டத்தில் வலம் வருவான். 
நிலாவோடு பேச முயற்சி செய்தாலும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்றுதான் பதில் இருக்க, குழந்தைகளோடு பேசலானான். நிலாவை போலவே! பறவைகளை பற்றியும், தோட்டத்தில் உலாவும் பூச்சிகள், அணில், போன்றவைகள் பற்றியும் விதவிதமான பூக்கள், பூக்களின் நிறங்கள் பற்றியும் பேச நிலாவும் அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பாள். 
என்னமோ! நன்கு வளர்ந்த குழந்தைகளுக்கு விளக்குவது போல் வாணன் தெளிவாக எடுத்துக் கூறுவது நிலாவுக்கு சிரிப்பை மூட்டினாலும் மெல்ல மெல்ல அவள் மனம் அவளறியாமலே! அவன் குரலையும், அவன் கதை சொல்லும் விதத்தையும் ரசிக்க ஆரம்பித்திருந்தது.    
“என்ன நாம அனுப்பும் SORRYக்கு பதிலையே! காணோம்” என்று வாணன் பொறுமை இழந்து நிலாவின் அறைக்கு வந்து மலர் செண்டை பார்த்தால் அது குவளையில் இருந்தாலும் அவன் பொருத்தி இருந்த காகிதம் பிரிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு நிலா அதை பார்க்கவே! இல்லை என்று எண்ணி சோர்ந்து போனான். 
“நிலா கைல கொடுக்க சொன்னா? நீங்களே! கொண்டு போய் குவளைல போடுறீங்களா?” கடுப்பானவன் மலர்ச்செண்டை கொடுத்தனுப்பும் வேலையாளை பிடிப்பிடியென பிடிக்க,
“இல்ல ஐயா அம்மா கைலதானுங்க கொடுக்குறேன். அம்மாதான் குவளைல போடுவாங்க” பயந்தவாறே அந்த அம்மா சொல்ல வாணன் தன் தலைவிதியை நொந்துகொண்டான்.
ஆனாலும் மலர்செண்டு அனுப்புவதை நிறுத்தவில்லை. செண்டில் காகிதத்தை பொருத்தினால் தானே! பார்க்க மாட்டேன் என்கின்றாள் என்று கார்ட் அனுப்பலானான். அதற்கும் எந்த பிரதிபலிப்பும் நிலாவிடமிருந்து வராமல் போகவே!
அவனை மன்னிக்க அவளுக்கு மனமில்லை என்பதை புரிந்துகொண்டான் வாணன். ஒருநாள் இல்லை ஒருநாள் நிலாவின் மனம் மாறும் என்று வாணன் அவன் செய்பவைகளை நிறுத்தவில்லை. இன்னும் என்ன செய்யலாம் என்றுதான் யோசிக்கலானான்.
பெயரிடும் விழானாலும் அழகாக விடிந்திருந்தது. அரண்மனையே! அலங்காரத்தில் மிளிர ஆரம்பித்திருந்தது. அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனைவரும் வருகை தந்துகொண்டிருந்தனர். வாணன் ஒரு இளவரசன் போல் ஆடை அணிந்து வருவோரை வரவேற்றுக்கொண்டிருந்தான்.
கணவனின் ஆடை அலங்காரத்தை திருட்டுத்தனமாக பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் நிலா. நிலாவுக்கு வாணனின் மேல் இப்பொழுது எந்த கோபமும் இல்லை. தன் சகோதரி என்று நினைத்து அவன் கோபத்தில் செய்தவைகளை அவளால் புரிந்துகொள்ள முடிகிறது. அவளது மன்னிப்புக்காக அவன் செய்யும் ஒவ்வொன்றையும் ரசிக்க ஆரம்பித்த அவளது மனமும் கொஞ்சம் கொஞ்சமாக வாணனை மன்னிக்க ஆரம்பித்து விட்டதுவோ! என்னவோ! முறைத்து பார்ப்பதையும், முகம் திருப்புவதையும் முற்றாக நிறுத்தி இருந்தாள்.
வாணன் பேசினால் பதில் சொல்வாள். அவளாக எதுவும் அவனிடம் கேட்கவும் மாட்டாள். பேசவும் மாட்டாள். கோபம் தணிந்தாலும் அவனை நெருங்க ஏதோ ஒன்று அவளை தடுத்துக்கொண்டிருக்க, அது எதுவென்று கூட அவளுக்கு புரியவில்லை. அது என்னவென்று ஆராய்ச்சி செய்யவும் தோன்றவில்லை. வாழ்க்கை இப்படியே! தொடரட்டும் என்று விட்டு விட்டாள். ஆனால் விதி அவர்களை அவ்வாறு விட்டு விடாதே!
“என்ன அம்மா? சந்திரா மட்டும்தான் அவங்களுக்கு அப்பொறம் இந்த அரண்மனை நம்ம குடும்பத்துக்குத்தான் சொந்தம்னு பீத்தினீங்க? இப்போ என்னடானா… அண்ணன் பையன்னு ஒருத்தனையும், சொந்த பொண்ணுனு ஒருத்தியையும் கூட்டிட்டு வந்திருக்கா. அப்போ இந்த அரண்மனை நமக்கு கிடையாதா? போதாதத்துக்கு இரட்டை ஆம்பள பசங்கள பெத்து வச்சிருக்கான். அடுத்த ஜெனரேசனுக்கும் ஆள் வந்தாச்சு. மொத்தமா அரண்மனை கைய விட்டு போச்சு” சித்தி பாலாம்பிகையின் மகன் வாகேஷ் புலம்ப
“அட லூசுப்பயலே! எனக்கென்ன தெரியும் இந்த சந்திரா அவ பொண்ணையும், அண்ணன் மகனையும் கண்டு பிடிச்சி கல்யாணம் பண்ணி வைப்பானு. அண்ணன் பையன மட்டும் இல்ல பொண்ண மட்டுமாவது கூட்டிட்டு வந்திருந்தா நம்ம குடும்பத்துல இருந்து பெண்ணையோ! பையனையோ! கொடுத்து அரண்மனைக்குள்ள நுழஞ்சி இருக்கலாம் முடியாம போச்சு. இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல பேரப்பசங்களை வளைச்சி போடலாம்” பாலாம்பிகை பகல் கனவு கண்டுகொண்டிருக்க
“நீ இப்படியே! திட்டம் போட்டுக்கிட்டு இரு… கடைசிவரைக்கும் ஒன்னும் நடக்கப் போறதில்ல” அன்னையை திட்டித் தீர்க்கலானான் வாகேஷ்.
அரண்மனை வாசலில் பெரிய இரண்டு தொட்டில்கள் போடப்பட்டு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்ததோடு நீலம் மற்றும் வெள்ளை நிற பலூன்களும் தொங்க விடப்பட்டிருந்தன.
“அலங்காரமெல்லாம் தூள் பறக்குது நிறைய செலவழிச்சிருப்பாங்க போல” வாகேஷின் மனைவி சொல்ல
“ஏன் நம்ம வீட்டு பன்க்ஷனும் இப்படி நடக்காதா?” மனைவியை வாகேஷ் முறைக்க,
“நடக்கும் நடக்கும் ஆனா அது வீடு அரண்மனை இல்லையே!” எவ்வளவு செய்தாலும் போதாது என்ற மனப்பாங்குடையவள் வாகேஷின் மனைவி நந்திதா.
லேகா ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு வர, சுசிலா ஒரு குழந்தையை சுமந்துகொண்டு வர, சுற்றி இருந்தவர்கள் குழந்தைகளை பார்க்கவென ஆர்வம் காட்லாலாயினர்.
பட்டாலான வெள்ளைநிற நீண்ட கவுனும் தலைக்கு தொப்பியும், காலுக்கும், கைக்கும் உறையணிந்து பஞ்சுக் குவியல் போல் இருந்த இரண்டு குழந்தைகளினதும் பிஞ்சு முகம் கொஞ்சம்மாக தெரிய மனம் மகிழ்ந்தவர்கள் பலர்.
ஆனால் பாலாம்பிகைக்கு குழந்தைகளை பார்க்கும் ஆவலை விட சுசீலாவை காணக் காண வயிறு எரிந்தது. சுசிலா அணிந்திருந்த புடவையும், நகைகளும் கண்ணை கவர, மேலும் எரிச்சல் அடைந்தவள் வாய் வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல்
“வேலைக்காரிக்கு வந்த வாழ்வப்பாரேன். என் அக்கா உயிரோட இருந்திருந்தா இப்படியெல்லாம் நடக்க விட்டிருப்பாளா? இவளையெல்லாம் இந்த அரண்மனைக்குள்ள சேர்த்திருப்பாளா? வேலைக்கார நாயெல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்காம. அக்கா இல்லனதும் அது அதுங்க அது பாட்டுக்கு ஆட ஆரம்பிச்சிடுதுங்க” பாலாம்பிகை சுசிலாவின் காதுபட சொல்ல அது கூட இருந்த லேகாவின் காதில் மட்டுமன்றி வாணனின் காதிலும் விழுந்திருந்தது.  
வாணன் அத்தையை முறைக்க ஆரம்பித்தான். சொந்தம் சொந்தம் என்று இவர்களை அழைக்க வேண்டுமா? என்று வாணன் கேட்டதுக்கு, “நல்லது கெட்டதுக்கு நாலு சொந்தந்தக்காரங்க வேணும் வாணா..” என்று லேகா கூறி இருக்க,
“வந்தவர்கள் என் அம்மாவை ஏதாவது பேசினா நான் அமைதியா இருக்க மாட்டேன்” என்று வாணன் கூற, “பேச மாட்டாங்க நான் பாத்துக்கிறேன்” என்று லேகா வாக்குறுதி கொடுத்த பின்னும் பாலாம்பிகை சுசீலாவை கண்டபடி பேசி இருக்க வாணன் அன்னையின் தோள் தொட்டு தன்னோடு நிறுத்திக்கொண்டவாறு அத்தையைத்தான் முறைத்தான்.
பாலாம்பிகைக்கு அழைப்பு விடுக்கும் பொழுதே! எதுவும் பேசக் கூடாது என்று மிரட்டல் விடுத்துதான் லேகா அழைப்பு விடுத்திருந்தாள். அப்படி இருந்தும் பேசி வைக்கிறாள் என்றால் அவளை சும்மா விடுவதா?
“என்ன சொல்லியும் உங்க வாய அடக்க மாட்டீங்களா? இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோங்க நான் இன்வஸ் பண்ணி இருக்கும் உங்க மொத்த பேமிலி பிஸினஸ்களிலிருந்தும் நீங்கிக்கிறேன். உடனே! எனக்கு சேர வேண்டிய என் பணத்தை கொடுக்க ஏற்பாடு பண்ணிடுங்க, வக்கீல் நோடீஸ் வந்துடும். என் கம்பனில உங்க பேர பசங்க வகிக்கும் எல்லா பொறுப்புள இருந்தும் அவங்கள நீக்கிடுறேன். இப்போதான் என் மருமகன் வந்துட்டானே! அவன் பாதுபான்” என்று லேகா கறாராக சொல்ல வாகேஷ் கதிகலங்கிப் போனான்.
லேகாவால் தனியாக சமாளிக்க முடியாமல் சொந்தம் என்று இவர்களை நம்பி உள்ளே சேர்த்திருக்க, வாணன் வந்தால் மொத்த பொறுப்பையும் கொடுக்கலாம் என்று எண்ணி இருந்தாள். ஆனால் வாணன் அவனது கனவு தொழிலான கேமிங் தான் செய்வேன் என்று பிடிவாதம் பிடிக்க லேகாவும் குடும்பத்த தொழிலை இவர்கள் பொறுப்பில் விட்டிருந்தாள்.
அந்த மமதையில் தான் இத்தனை பேச்சும், அரண்மனை சகவாசம், தொழில் எங்களது என்று பெரிய பெரிய சம்பந்தங்களை பாலாம்பிகை லேகாவின் முதுகுக்கு பின்னால் வளைத்துப் போட்ட கதையெல்லாம் லேகா அறியாமலில்லை. அறிந்தும் அறியாத மாதிரி இருந்து வந்தாள். இன்று அவள் பேச்சுக்கு மரியாதை என்பதும் இல்லை என்றதும் அவளது கோப எல்லை கடந்திருந்தது.
எத்தனை கோடி ரூபா இன்வஸ் பண்ணி இருக்கிறாள். ஒரேயடியாக மொத்த பணத்தையும் கொடுத்தால் பலமான அடியாக இருக்கும். அது போக அவள் கம்பனியில் வகேஷின் பிள்ளைகள் மற்றும் தங்கையின் பிள்ளைகள் என்று ஆறு பேர் வேலை பார்க்கிறார்கள். சம்பளம் போக, கம்பனியில் கையாடல் பண்ணும் பணம், கம்பனி கார் என்று சொகுசான வாழ்க்கை இதெல்லாம் பறி போய் விடும்.   
“லேகா லேகா அம்மா தங்கச்சி அப்படி பண்ணிடாத… எங்கம்மாக்கு புத்தி சுவாதீனமில்லாம எதோ! பேசுறாங்க , அவங்க பேசாம நான் பாத்துக்கிறேன்” வாகேஷ் மனைவி அவனை கேவலமாக பார்ப்பதையும் பொருட்படுத்தாது கெஞ்ச,
“சரி சரி விழாவை ஆரம்பிப்போம்” என்று லேகா அந்த பேச்சுக்கு முறுப்புள்ளி வைத்திருக்க, சுசிலா அந்த பேச்செல்லாம் கண்டு கொண்டதாக தெரியவில்லை. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது போல் வாணன் மற்றும் நிலா கூடவே! இருக்கலானாள்.    
“அப்பாடா… தப்பிச்சோம்” என்று வாகேஷ் நிம்மதி பெருமூச்சு விட பாவம் அவன் அறியவில்லை லேகா தன் முடிவில் எவ்வளவு உறுதியாக இருப்பாள் என்று.
குழந்தைகளை நிலா மற்றும் வாணனின் கையில் கொடுக்கப்பட வாணனின் கையில் இருந்த குழந்தைக்கு கதிரவன் ஆதித் மௌரி என்றும், நிலாவின் கையில் இருந்த குழந்தைக்கு ஆதவன் ஆதிஷ் மௌரி என்றும் இருவரும் மூன்று தடவை காதில் பெயரை கூறலாயினர்.
குழந்தைகளை தொட்டிலில் வைக்குமாறு கூறிய லேகா வைத்தபின் சீனி கரைசலை தொட்டு சுசிலா குழந்தைகளின் வாயில் வைக்க சிணுங்க ஆரம்பித்திருந்தனர் இருவரும்.
லேகா இரண்டு குழந்தைகளுக்கும் தங்கத்திலான இரண்டு இடுப்பு சங்கிலிகளை அணிவித்து ஆரம்பித்து வைக்க, சுசிலா இருவருக்கும் தங்க மாலைகளை அணிவித்தாள்.
“என்ன டா… வாணா உன் பசங்களுக்கு நீ என்ன போட போற?” சுசிலா ஆவலாக கேட்க நிலாவும் ஆசையாக எதிர்பார்த்திருக்க,
“போடலாம், போடலாம்” என்ற வாணன் புன்னகையினூடாகவே! ஒரு வேலையாளை கண்ணசைவில் அழைக்க அவர் வந்து ஒரு பெட்டியை கொடுக்க அதை கையில் வாங்கிக் கொண்டவன் அதை நிலாவிடம் நீட்ட
“நம்மள போட சொல்லுறாங்களோ!” என்று நிலா புரியாது பார்த்தாள்.
“நிலா நான் உனக்கு எவ்வளவோ! நகைகள் வாங்கி தந்திருப்பேன். இது கொஞ்சம் ஸ்பெஷல். நம்ம ராஜ வம்சத்துக்கு வாரிச பெத்து கொடுத்திருக்க, அதுக்காக இந்த சின்ன கிப்ட்” என்று அதை திறந்து காட்ட வைர கழுத்தணியை கண்டு அனைவரும் வாய் பிளக்க, நிலாவுக்கும் ஆச்சரியம்தான்.
குழந்தைகளின் விழா குழந்தைகளுக்கு வாங்கி வந்திருப்பான் என்று எதிர்பார்த்தால் அவளுக்கு சேர்த்து வாங்கி வந்திருக்க, அவளறியாமலே! மொத்தமாக அவன் பக்கம் சாய்த்திருந்தது அவள் மனது. 
வைரம் போட ஒரு தகுதி வேண்டும், தாராத்திரம் வேண்டும் என்றெல்லாம் பேசியவன் இவனா? எனும் விதமாக லேகா புன்னகைக்க,
“என்ன பாத்துகிட்டு நிக்கிற நீயே! போட்டு விடு” என்று சுசிலா சொன்னதுதான் தாமதம் நிலா மறுக்கும் முன் அதை அவள் கழுத்தில் அணிவிக்கும் வேலையில் இறங்கினான்.
நிலா இதை சற்றும் எதிர் பாத்திருக்கவில்லை. குழந்தைகளுக்கு ஏதாவது போடுவான் என்று நினைத்திருக்க, அத்தனை பேரின் முன்னிலையிலும் தனக்கு மாலையிட்டு கௌரவப் படுத்தி விட்டதாக உணர்ந்தாள்.
“ஆர் யு ஹாப்பி” என்று வாணன் கேக்க நிலாவின் கண்ணோரும் கரித்துக்கொண்டு வர, தலையும் தானாக ஆடியது.
“தேங்க்ஸ் அண்ட் ஐ லவ் யு நிலா” என்று வாணன் அவளை மெல்ல அணைத்து நெத்தியில் முத்தமிட்டு விலக நிலாவின் தேகம் முழுக்க மின்னலென புது ரெத்தம் பாய்ந்தது.
கணவனின் இந்த வார்த்தைக்காத்தான் அவள் மனம் ஏங்கித்தவித்ததுவோ! காத்துக்கிடந்ததுவோ! அதை காதால் கேட்ட நொடி அவள் மனதில் எஞ்சி இருந்த கோபமெல்லாம் கரைந்தோடி இருந்தது.
அவள் வாணனிடம் எதிர்பார்த்தது காதல் ஒன்றரை தவிர வேறென்ன அவன்தானே! அவளுக்கு காதலை காட்டி பின்பு பழிவாங்கத்தான் எல்லாம் செய்ததாக அவள் மனதை உடைத்தவன். அவன் காதல்தான் அவளுக்கு மருந்து அதை அவனும் உணரவில்லை. நிலாவும் உணரவில்லை. கோபத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்தாள்.
உண்மையிலயே! வாணன் உணர்ந்துதான் அந்த வார்த்தையை சொன்னானா? என்று கணவனை ஏறிட அவன் கண்களில் காதலை கண்டுகொண்டவளுக்கு சந்தோசஷம் தாளவில்லை.
நிலாவின் சந்தோசமான முகம் வாணனுக்கு தைரியத்தை கொடுத்திருக்க வேண்டும் “இன்னைக்கின்னு பார்த்து இந்த சாரில செம்மயா இருக்க டி பொண்டாட்டி… பங்க்ஷன் நடக்குதுன்னு பாக்குறேன் இல்லனா உன்ன அப்படியே அந்த ரூம் பக்கம் தள்ளிட்டு போய் இருப்பேன்” என்னு கண்ணடிக்க
“என்ன பேசுறீங்க?” பொய்யாக முறைத்தவள் அவன் பேச்சு சூடேற்றி வெக்கம் பிடுங்கித்தின்ன தலையை தாழ்த்திக்கொண்டாள்.
நிலாவுக்கே! தன்னை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. வாணனின் மேல் எவ்வளவு கோபத்தில் இருந்தாள். சூரியனை கண்ட பனி போல் எல்லா கோபமும் மாயமாய் மறைந்து விட்டது. அது அவன் மேல் இருந்த காதலால் இல்ல. அவன் தன் மீது வைத்திருக்கும் காதலால் அதை சொல்லத் தெரியாமல் தான் மன்னிப்பு கேட்கின்றேன் என்று ஒவ்வொரு தடவையும் சொதப்பி வைக்கின்றான்.
மலர் செண்டில் “SORRY ” என்ற வாசகத்தை எழுதி அனுப்புபவன் அத்தோடு “I LOVE YOU” என்றும் எழுதி அனுப்பி இருந்தால் நிலா என்றோ! அவனை மன்னித்திருப்பாள். அது இந்த வாணனுக்கு புரியவில்லை. நிலா மன்னித்த பின் காதலை சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்திருப்பான் போலும்.
எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருப்பது போல் நிலா வாணனை புரிந்துக்கொள்ளும் நேரம் இதுதான் போலும் என்ன அத்தனை பேர் சூழ இருந்தமையால் அவளால் அவனோடு சரியாக பேச முடியவில்லை. வெக்கம் வேறு புதிதாக ஒட்டிக்கொள்ள, கன்னங்களும் செம்மை பூசிக்கொண்டு நிலாவின் அழகை மேலும் மெருகூட்டிக்கொண்டிருக்க, வாணன் அவளை ரசித்துக்கொண்டிருந்தான். 
அவளின் மனமாற்றம் முகத்தில் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்க காட்ட முகமும் பிரகாசமாக ஜொலிக்க, விரிந்த புன்னகையில் இருந்தவளின் சந்தோசம் லேகா, மற்றும் சுசீலாவையும் தொற்றிக்கொண்டது.
புது வித உட்சாகம் பிறக்க புன்னகையில் காதலோடு கணவனை ஏறிட “வா இந்த காப்ப பசங்களுக்கு சேர்ந்தே போட்டு விடலாம்” என்று வாணன் அழைக்கவும் நிலா மறுக்கவில்லை. லேகாவும், சுசீலாவும் ஆனந்தக் கண்ணீரோடு பார்த்திருக்க, இருவரும் சேர்ந்து இரண்டு குழந்தைகளுக்கும் காப்பு அணிவித்தனர்.
அதன் பின்னர் விருந்தினர்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தைகளை வரிசையில் வந்து பார்வையிட்டு கொண்டு வந்த பரிச பொருட்களை கொடுக்க அதை பெற்று அங்கிருந்த வேலையாட்களிடம் கொடுக்க அவர்கள் அவற்றை ஒரு மேசையில் அழகாக அடுக்கி வைக்கலாயினர்.
தொட்டிலில் ஒரு பக்க தடுப்பை நீக்கி இருந்தமையால் வந்தவர்கள் சுற்றி நின்று குழந்தைகளோடு புகைப்படமும் எடுத்துக்கொள்ள முடிந்தமையால் குழந்தைகளுக்கும் எந்த தொந்தரவும் இருக்கவில்லை.
விருந்து பூப்பே முறையில் வெளியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையால் போட்டோ எடுத்துக்கொண்டவர்களை விருதுக்காக வெளியே அழைத்து செல்லப்பட,  அனைவரும் குழந்தைகளை பார்த்தபின் விருதுக்காக வெளியே சென்றனர்.
அரச விருந்து என்றால் சும்மாவா? வித விதமான உணவுகள் மற்றுமின்றி, மருத்துவ குணமுள்ள உணவுகள் என்று எல்லாம் மண்சட்டிகளில் சமைக்கட்டு பரிமாறப்பட்டிருக்க, வயதானவர்கள், மருந்து சாப்பிடுபவர்கள் என்று வந்திருந்தவர்கள் தங்களுக்கு பிடித்தமானவைகளை தாராளமாக உண்டு மகிழ, நிலாவின் யோசனையை வாணன் பாராட்டினான்.
“வாளைகாப்புக்கு வந்த பாதி பேர் வயசானவங்க, ஒழுங்கா சாப்பிடாமத்தான் போனாங்க, நிறைய சாப்பாடு எஞ்சி அத, ஆசிரமத்துக்கு அனுப்பிட்டோம். ஆசிரமத்துக்கு கொடுக்குறது ஒன்னும் பெரிய விஷயமில்லை, எஞ்சினத்தை கொடுக்குறதுதான் கவலையான விஷயம். இப்போ நிறைய பேர் ஹெல்தியான சாப்பாடுதான் எதிர் பாக்குறாங்க, அதுவும் வயசானவங்க. விருந்து கொடுக்குறது அவங்க வயிறார சாப்பிடணும், மனசு நிறைஞ்சி போகணும்னுதானே! அப்போ! எல்லாருக்கும் ஏத்தா மாதிரி உணவுகளை செலெக்ட் பண்ணி வைக்கணும். நிறைய பேர் ரிச்சான உணவுனு வைப்பாங்க, நிறைய ஆயில், நிறைய கொழுப்பு, ஸ்வீட்ஸ் சாப்பிட ஆசையா இருந்தாலும், சாப்பிட்ட பின் அவஸ்த்தை படணும்னு சாப்பிடாம போவாங்க, விருந்து கொடுத்ததுல அர்த்தமில்லாம போகும், எல்லாருக்கும் ஏத்தா மாதிரி உணவுகளை வச்சா எல்லாரும் சந்தோசமா சாப்பிடுவாங்கல்ல” நிலா விளக்கினாள். 
விருந்துக்குப்பின் விடைபெற்று செல்லும் விருந்தினருக்கு கண்ணாடியிலான இரட்டை குழந்தைகள் தொட்டிலில் தூங்குவது போன்ற நினைவு சின்னங்களை பரிசாக கொடுத்து வழியனுப்பி வைக்க ஆரம்பித்திருந்தனர் வாணன் நிலா தம்பதியினர்.
விடைபெற்று செல்லும் பொழுதுதான் நிலா பிரபாகரனையும் அவன் மனைவி மற்றும் குழந்தைகளை கண்டாள்.
“இவனையும் இன்வைட் பண்ணி இருக்கானா? எதுக்கு?” கரைந்தோடி இருந்த கோபம் மீண்டும் விரைந்து வந்து ஒட்டிக்கொண்டிருக்க, கணவனை பார்த்து முறைக்க ஆரம்பிக்க பிரபாகரனின் மனைவி நிலாவிடம் வந்து பேச ஆராம்பித்தாள்.
“ரொம்ப நன்றி மேடம். உங்களாலதான் இன்னக்கி நான் கணவன் குழந்தைகள்னு சந்தோசமா வாழுறேன். சார் சொன்னாரு. நீங்க சொன்னதாலதான் அவரை சார் மன்னிச்சி விட்டுட்டாராம். சார் உங்கள எவ்வளவு லவ் பண்ணுறதா இருந்தா அவரை மன்னிச்சி விட்டிருப்பாரு. அது மட்டுமில்லாம அவரை சரியான ஒரு மனநல டாக்டர்கிட்ட அனுப்பி முறையா ட்ரீட்மெண்ட் பார்த்ததால் இப்போ அவர் சரியாகிட்டாரு. அந்த ஐடியாவ கூட நீங்க தான் கொடுத்தீங்களாமே! பெரிய மனிசனுங்க பெரிய மனிசனுங்கதான் மேடம். நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கணும், வரேன் மேடம்” என்று விடைபெற ஒருகணம் நிலாவுக்கு அந்த பெண் என்ன சொன்னாள் என்று கூட புரியவில்லை.  குழப்பமாக கணவனை பார்த்தவள் இதை பற்றி பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.
வந்த விருந்தினர்கள் எல்லோரும் விடை பெற்று சென்றிருக்க, நிலா குழந்தைகளை அழைத்துக்கொண்டு அறைக்கு சென்று விட வாணன் எல்லாவற்றையும் ஒதுங்க வைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான்.
நிலா அவனுக்காக காத்துக்கொண்டிருப்பதை அறியாமல் இரவுவரை வேலைகளை இழுத்துப்போட்டு பார்த்து முடித்தவன் உறங்கியும் போய் இருந்தான்.
காலையிலையே! லேகா வக்கீலை வரவழைத்திருக்க, வாணன் அமர்ந்து தனது பரம்பரை சொத்துக்களை ஆராய ஆரம்பிக்க, லேகா கூறியது போல், பாலாம்பிகையின் வீட்டுக்கும், அவள் குடும்பத்தாருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட, அவளின் பேர பசங்களும் அவர்கள் வகிக்கும் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்க, வாணன் அது சம்பந்தமான வேலையில் மூழ்கி இருக்க, கம்பனியில் கையாடல் நடந்துவரை கண்டு பிடித்தவன் அதற்காக அலைவது என நிலாவோடு பேச கூட  முடியவில்லை.
நாள் தவறாமல் மலர்செண்டு மட்டும் அறைக்கு மறக்காமல் அனுப்புவபவன் மாலை அவளை சந்திக்க மட்டும் வருவதில்லை. அவனால் வர முடியாதபடி இந்த ஒரு மாதமாக வேலைகள் அவனை இழுத்துக்கொண்டிருப்பது நிலாவும் அறிந்துதான் இருக்கின்றாள்.
வாணனும், லேகாவும் பேசியவைகளை கேட்டு எதையுமே! யோசிக்காமல் வாணன் மீது நிலா கோபப்பட்டது உரிமையில் என்றால்? அவனின் நிலையறிந்து யோசித்து எதுவுமே!! பேசாமல் மௌனம் காப்பது உறவு நிலைக்க வேண்டும் என்ற ஆசையால்தான்.
இந்த ஒருமாதத்தில் குழந்தைகளை கொஞ்ச கூட அவனுக்கு நேரமில்லை. சுசிலா தூக்கிக்கொண்டு கீழே வந்திருந்தால் தலையை தடவி விட்டு ஒரு முத்தத்தோடு விடைபெற்று சென்று விடுவான்.
காலையிலையே! கிளம்பி செல்பவன், இரவில்தான் வீடு வருகின்றான். லேகாவும் அவன் கூட செல்கிறால்தான். அவள் மாலையில் வந்து விடுவாள். பகல் உணவை சுசிலா மறக்காது கம்பனிக்கு அனுப்பி விடுவாள். இவ்வாறு அவள் பார்க்காவிட்டாலும் அவனை பார்த்துக்கொள்ள அன்னையும், அத்தையும் உறுதுணையாக இருப்பது மகிழ்ச்சியே!
அவள் அவனுக்காக என்ன செய்தாள் என்று யோசித்தால் கோபத்தை காட்டினாளே! தவிர வேறெதுவும் செய்யவில்லை என்றுதான் நிலாவுக்கு தோன்றுகிறது. அவனோடு இருந்தவரைக்கும் அவள் எல்லாம் செய்தாள் தான். உண்மையை அறிந்தபின் எதுவும் செய்யவில்லையே! என்ற மனக்குறை நிலாவை வாட்ட ஆரம்பித்திருந்தது.
மனதில் இருப்பவைகளை சொல்லவும் முடியாமல் வாணனிடம் கேட்க வேண்டியவைகளை கேட்கவும் முடியாமல் ஒரு மாதமாக தவித்தவள் இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று வாணனின் அறையை நோக்கி நடந்தாள்.
அறையின் வாசலுக்கு வந்து விட்டாள். உள்ளே! செல்லலாமா? வேண்டாமா? என்று மனதோடு போராடலானாள் நிலா.
“பர்ஸ்ட் அவன் வீட்டுக்கு வந்துட்டான்னா? தூங்கிட்டானான்னு? கூட தெரியாது கதவுவரைக்கும் வந்துடு யோசிக்குது பாரு” என்று அவளை மனம் கேலி செய்ய கதவின் கைப் பிடியில் கைவைக்கும் பொழுதே! கதவு திறந்து கொண்டது. வாணன்தான் தலையை துவட்டியவாறு கதவை திறந்திருந்தான்.
அப்பொழுதுதான் அரண்மனைக்கு வந்திருப்பான் போலும் நிலாவைக் கண்டு ஆச்சரியமாக புருவங்களை உயர்த்தியவனின் முகம் புன்னகையை தத்தெடுக்க, “ஹேய் நிலா இங்க என்ன பண்ணுற? தூங்கலையா?” என்று விசாரிக்க
அவன் கேள்விக்கு பதில் சொல்லாது நிலா கேட்ட கேள்வியில் திகைத்தான் துகிலவாணன் மௌரி.

Advertisement