Advertisement

அத்தியாயம் 20
ஆபீஸ் டைம் முடிஞ்ச பின்னாலும் வாணன் அங்குதான் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தான். வீட்டுக்கு செல்லவே! அவனுக்கு மனமில்லை. சென்றாலும் அவனை வரவேற்கத்தான் அங்கு யாருமில்லையே! பழையபடி அவன் தனிமரமாக மாறிவிட்டான். என்ன ஒன்று அன்று தனியா இருந்த வாணனுக்கும் இன்று தனியாக இருக்கும் வாணனுக்கும் நிறைய வித்தியாசங்களை உணர்கின்றான்.
அன்றிருந்த வாணனுக்கு அன்னை மட்டும்தான் உலகம் ஆபீஸ் வரும் முன் அன்னையை சென்று பார்த்து விட்டு ஆபீஸ் வந்தால், அவன் வேலைகளை முடித்துக்கொண்டு வீடு செல்வது தூங்க மட்டும்தான்.
என்னதான் லேகா அத்தை, தான் ஒரு ராஜ வம்சம் என்று அறிந்திருந்தாலும் அவளோடு பெரிதாக ஒட்டுதல் இருக்கவில்லை. அதற்காக லேகா ஒன்றும் அவனை அடக்கவோ! அவன் மேல் எதையும் திணிக்கவோ! முயற்சி செய்யவில்லை. வாணனின் மனதில் தந்தையை ஒதுக்கி வைத்த குடும்பம் என்ற எண்ணம் கொஞ்சமாக ஒட்டிக்கொண்டிருந்ததுவோ! என்னவோ! லேகாவிடம் ஒட்ட முடியவில்லை. ஆனால் இப்பொழுது லேகா தன் மீது வைத்திருக்கும் உண்மையான அன்பை முழுமையாக உணர்ந்துகொண்டதன் பின்னால் அத்தையோடு இன்னும் நல்லமுறையில் பேசி நேரம் செலவழித்திருக்க வேண்டுமோ! என்று எண்ணலானான்.
தாய்வழி உறவென்று தாத்தாவும் சித்தியும்தான். அன்னையை தந்தை திருமணம் செய்துகொண்ட பின்னும் அவர்கள் அங்குதான் வேலை பாத்திருக்கிறார்கள். புஷ்பலேகா பாட்டி அவர்களை துரத்தவில்லை. அதற்கு காரணமும் தன் மகனோடு இவர்கள் இணைந்து விடுவார்கள் என்ற அச்சம்தான். எல்லாரும் ஒன்றாக கூடி இருந்தால் தானே! பலம். தந்தை அன்னையை விட்டு விட்டு என்றோ! ஒருநாள் வீடு வருவார் என்று பாட்டி எதிர்பாத்திருந்தார்களாம்.
தாத்தா இறந்து விட்டார். சித்திக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. பெண் கொடுத்து பெண் எடுத்து எல்லோரும் இப்பொழுது ஒரே வீட்டில் இருப்பதாக லேகா கூறி இருக்க, வாணனுக்கு போய் பார்க்க வேண்டும் என்றோ! உறவு கொண்டாட வேண்டும் என்றோ! எண்ணம் தோன்றவில்லை. தகவலாக உள்வாங்கிக் கொண்டவன். அன்னை குணமாகி வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டான்.
நிலா… நிலா அவன் வாழ்க்கையில் வந்த பின் தான் எல்லாம் மாறிப்போனது. அவன் வாழ்க்கையும். அவனும்.
அவளுடைய விண்ணப்பப்படிவம் அவன் கண் பார்வைக்கு கிடைத்த பொழுது போட்டோவையும், பெயரையும் பார்த்தவன், தந்தையின் பெயரையும் பார்த்திருந்தால் சண்முகவேல் என்று இருப்பதைக் கண்டு ஈஸ்வரின் மகள் எவ்வாறு சண்முகவேலின் மகளானாள் என்ற கேள்வி எழுந்து விசாரித்து தான் சிறு வயதில் சந்தித்த நிலா இவள் அல்ல என்று கண்டு பிடித்திருப்பான். பழிவாங்கப் போகிறேன். என்று அவளை திருமணம் செய்து கூட இருந்திருக்க மாட்டான்.  
அவன் அவளை திருமணம் செய்யப்போய் தான் லேகா நிலாவை பற்றி ஆராய நிலா அவள் மகள் என்று லேகாவுக்கு தெரிய வந்திருக்கிறது. இல்லையென்றால் இந்த உண்மை கடைசிவரை யாருக்கும் தெரியாமலே! போய் இருந்திருக்கும். கெட்டதிலையும் ஒரு நல்லது நடந்திருக்கிறது.
ஆனாலும் அவன் நிலாவுக்கு இழைத்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு மனைவிக்கு எந்த கணவனும் வாங்கிக் கொடுக்காத பெயரை வாங்கிக் கொடுத்து விட்டான். எல்லாம் முழுக்க முழுக்க திட்டமிட்டு செய்யப்பட்டவைகள்.
அவன் செய்தது அனைத்தையும் அவள் அறியாமல் தானே! செய்தான். அவள் அறிந்துக் கொண்டது கூட அவள் அன்னையின் இறப்பின் பின்னால். அவள் அன்னை இறந்த போது கூட இருந்திருந்தாலாவது பிறைநிலா யாரு? அவங்க எப்படி நிலாக்கு அம்மா ஆனாங்க? பவானி எங்க? என்ற கேள்விகள் ஆரம்பித்து உண்மை வெளிவந்திருக்கும். அன்று வாணன் தன் அன்னையோடு இருந்தபடியால் இருந்த ஒரு வாய்ப்பும் பறிபோய் இருக்க, வாழ்க்கை சிக்கலாக மாறி இருந்தது. அன்றாவது வாணனுக்கு உண்மை தெரிய வந்திருந்தால் எல்லாவற்றையும் மறந்து நிலாவோடு சுமூகமான உறவை ஏற்படுத்தி சந்தோசமாக வாழ முயற்சி செய்திருப்பான்.
இது எதுவுமே! இல்லையென்றாலும் உண்மையை மறைக்காது நிலா செய்தவைகளை அவளிடமே! உடைத்துக் கூறி இருக்க வேண்டும். அவளுக்கு சின்ன வயதில் நடந்தவைகள் மறந்து போய் விட்டது என்று நினைத்து எதையும் கூறாது இருந்தது கூட வாணன் செய்த தவற. நீ இவ்வாறெல்லாம் எனக்கு தீங்கிழைத்தாய் என்று கூறி இருந்தாலாவது நிலா நானறியேன் உன்னை என்று கூறி இருப்பாள்.
வாணனும் விழித்துக்கொண்டு உண்மையை ஆராய்ந்து இந்த நிலா அவன் சிறு வயதில் சந்தித்த நிலவே! அல்ல என்று புரிந்துகொண்ட நானும் உன்னை அறியேன் என்று கூறி இருப்பான். 
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் லேகா வாணனிடம் நிலாவிடம் போய் இதைப்பற்றியெல்லாம் பேசி விடாதே! பேசினால் அவள் உடல்நிலையை பாதிக்கும் என்று தடுத்திருக்க, வாணனும் நிலா அவனிடம் சுமூகமாக நடந்துக்கொள்வதை வைத்து அவனை புரிந்துக்கொண்டுதான் இருக்கிறாள் என்று எண்ணி இருந்தான்.
பாவம் வாணன் அறியவில்லை அவனிடம் பேசியது போல் லேகா தன் மகளிடமும் பேசி இருந்தாள். “சுசீலாவுக்கு இப்படி ஆக காரணம் இளையநிலா என்ற பெண்தான் அதனால்தான் வாணன் அந்த பெயரைக் கேட்டால் சில நேரம் மனப்பிறழ்வுக்கு ஆளாகின்றான். அது நீ இல்லனு அவனுக்கு தெரியும். அதனால்தான் உன் மீது அக்கறையும், பாசமும் வைத்திருக்கின்றான். ஆனாலும் அவனை கட்டுப்படுத்த முடியாத நேரத்துல கோபமா பேசி விடுகின்றான். நீ அவனை விரும்புறேன்னு தெரியும். கொஞ்சம் அவனை புரிஞ்சி, அனுசரணையான நடந்துக்க, அவன் கிட்ட என்ன நடந்ததுன்னு மட்டும் கேட்டுடாத, அவனா சொல்ல முயற்சி செஞ்சாலும் கேக்காத, சொல்லி முடிக்கும் போது வயலண்டாவான். பேச்ச மாத்து” என்று லேகா நிலாவிடம் கூற  
“என்ன சந்த்ராம்மா.. சொல்லுறீங்க? அவருக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்குறது அவருக்கு தெரியுமா? மாத்திரை எல்லாம் கரெக்ட்டா எடுக்குறாரா?” கணவனை நினைத்து கவலை அடைந்தாள் நிலா.
“தெரியாது. ஜெகன் தான் பாத்துக்கிறான். சுசிலா குணமடைஞ்சா படிப்படியா குணமடைவான். நீ ஒன்னும் கவலை படாத” என்று மகளுக்கு ஆறுதல் சொல்லி இருந்தாள்.  
இதனால்தான் நிலா வாணனிடம் “ஏன் என்னை டாச்சர் பண்ணினாய்? பழிவாங்க திருமணம் செய்ததாக ஏன் கூறினாய்?” என்று ஒரு வார்த்தையேனும் கேட்டிருக்கவில்லை.
லேகா கூறியது போலவே! தான் வாணனும் நிலாவிடம் நடந்துக் கொண்டிருந்தான். அவளிடம் நல்ல முறையில் பேசிக்கொண்டிருக்கும் போதே! சட்டென்று கோபமாக பேசுவான். அவளுக்கு வேதனை என்றால் அவனும் துடித்தான். வளைகாப்பின் பின்னும் அதே போலல்லவா நடந்தது. சுசிலா வீடு வந்த பின் வாணனிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக் கண்டு நிலாவும் லேகா சொன்னவைகளை முற்றாக நம்பி இருந்தாள்.
சந்திரலேகா எனும் கயிறு இவர்களை கட்டிப் போடும் முயற்சியில் இருப்பதை அறியாமல் எல்லாம் தங்களுக்குள் சரியாக இருப்பதாக இருவரும் ஒரு மாய உலகத்துக்குள் வாழ்ந்துகொண்டிருக்க, பவானியின் ரூபத்தில் அந்த கயிறு அறுந்திருந்தது.
வாணனும் லேகாவும் மேலேறி சென்ற அடுத்த கணமே! வாணனின் அறையில் இருந்த மேலதிகமான தலையணைகளை எடுப்பதற்காக நிலா படியேறி இருந்தாள்.
“எனக்கு உண்மை மட்டும்தான் வேணும்” என்று வாணன் கூறுவது காதில் விழவும் “எந்த உண்மைய பத்தி இவர் கேக்குறாரு?” என்று அங்கே! நிலா நின்று விட்டாள்.
அடுத்து வாணன் நிலாவின் அன்னை பவானியை சந்தித்ததாகவும், தன் மனைவியை தத்தெடுத்ததா சொல்லுறீங்களே! அவ நீங்க பெத்த பொண்ணா? என்று வாணன் கேக்க முற்றாக குழம்பினாள் நிலா.
“யாரு? பவானி. என் அம்மா பேரு பிறைநிலா. என்ன பெத்த பொண்ணு தத்து பொண்ணுன்னு பேசுறாரு. உள்ள போலாமா? வேணாமா? இல்ல இங்கயே! இருந்து என்ன பேசுறாங்கனு கவனிப்போம்” என்ற முடிவுக்கு வந்திருந்தாள் நிலா.
லேகா போல் ஒருத்தி ஒருவனிடம் ஏமாந்தாள் என்பதை நிலாவால் நம்பக் கூட முடியவில்லை. எல்லாம் காதல் படுத்தும் பாடு. தானும் வாணனை பார்த்த மாத்திரத்தில் காதலில் விழுந்து விட்டதை எண்ணிப் பார்த்தவள் பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.
புஷ்பலேகா மற்றும் சித்தியின் சம்பாஷணையை லேகா சொல்லும் பொழுது “என்ன? சந்த்ராம்மா அம்மா ரொம்ப டெரெர் பீஸா இருந்திருக்காங்க போல. உசுரோட  இருந்திருந்தா அரண்மனைல நமக்கு அடைக்கலம் கிடைச்சிருக்காது போலயே!” தன்னை கொல்லப் பார்த்த தன் சொந்தப பாட்டி என்றறியாமலே! மனதுக்குள் கவுண்டர் கொடுக்கலானாள் நிலா.
வாணன் “இங்கிருக்கும் நிலா யாரு? என் மனைவி யாரு? யாரு?” என்று கத்தவும் “என்ன பைத்தியம்  முத்திருச்சோ! என்று எண்ணியவாறே உள்ளே செல்ல முற்படும் பொழுதுதான் வாணன் “இளையா நிலாவோட ரெட்டையா?” என்று கேட்டிருந்தான்.
“என்ன டா இது புதுக் குழப்பம்” என்று மீண்டு அங்கே! நின்றவள் அவர்களின் பேச்சை செவிமடுக்கலானாள். 
வாணன் பேசியதையும், லேகா பேசியதையும் கேட்ட பின் எதோ! இருக்கு, எதையோ! சந்த்ராமா மறைக்கிறாங்க என்பதையே! அப்பொழுதுதான் நிலா உணரலானாள். இரட்டை குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் என்றதும் கால்கள் ஆட்டம் காண அப்படியே அங்கு அமர்ந்து கொண்டாள் நிலா.
கைகள் சில்லென்று குளிரெடுக்க, படபடவென வந்தது. மூச்சை இழுத்து விட்டுக்கொண்டவள் தன்னை சமநிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்க வாணன் லேகாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த கதையை கேட்கவும் அதில் கவனமானாள்.
லேகா தான் பெற்ற மகளுக்கு இளையநிலா என்று பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக கூறவும் அதிர்ந்த நிலா… அதனால்தான் லேகா தன் மீது இவ்வளவு பாசமாக இருக்கிறாளா? என்று எண்ணினாள்.
அடுத்து லேகா சொன்னதைக் கேட்டு நிலாவுக்கு ஒன்றும் புரியவில்லை. வாணன் “அப்போ என் மனைவி நிலா?” என்று கேட்டதும் “என்ன கேட்கின்றார் இவர்?” என்றுதான் யோசித்தாள்.
“அடுத்தடுத்து லேகா சொன்னவைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றாள் நிலா.
வாணன் லேகாவின் வாழ்க்கையை பற்றி என்ன நினைத்தானோ! அதே! தான் நிலாவும் நினைத்தாள். பெற்ற அன்னையை நினைத்து கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகியது. அதன்பின்தான் நிலாவுக்கு வாணன் தன்னிடம் ஏன் அவ்வாறெல்லாம் பேசினான், நடந்துகொண்டான், சந்தர்லேகா தங்கள் இருவரையும் ஒன்று சேர்க்க முயர்சிற்பதுவரை சகலவும் புரிந்து போனது. 
சண்முகவேல் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக தான் இறந்து விடுவேன் என்று அவருக்கு அசரீயாக புரிந்ததோ! என்னவோ! நிலாவின் தலையில் கைவைத்து. “நீ எப்பேர்ப்பட்ட குடும்பத்துல எப்படி வாழ வேண்டிய பொண்ணோ! தெரியல நிலா.. என் கிட்ட வந்து கஷ்டப்படணும்னு உன் விதி எழுதப்பட்டிருக்கு” என்று கூறி இருந்தார்.
அவர் அன்று சொன்னவைகள் ஒன்றும் நிலாவுக்கு புரியவில்லை. தந்தையின் தோள் சாய்ந்து படுத்துக்கொண்டாள் மகள்.
எல்லா கஷ்டங்களும் துன்பங்களும் கடந்தபின் ஒரு சந்தோசமான வாழ்க்கை இருக்கும் என்பத்தை நம்பும் நிலாவுக்கு லேகா தான் பெற்ற மகளிடம் எந்த உண்மையையும் சொல்லப் போவதில்லை என்றதும் கட்டுக்கடங்காத கோபம் வந்தது.
கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தவள் லேகாவை ஏறிட்டு “ஏன் மா… பெத்த பொண்ண விட உன் அண்ணன் மகன் மேலதான் உனக்கு பாசம் அதிகமா?” என்று கேட்க லேகா அவளை கட்டிக்கொண்டு கண்ணீர் வடிக்க வாணன் அதிர்ந்த முகபாவனையை கொடுக்கலானான்.
“இல்ல டா… நீயும் வாணனும் சந்தோசமா வாழனும் அதனாலதான்…” என்று லேகா பேசுமுன் அவளை தடுத்த நிலா
“நிறுத்துமா… என்ன சந்தோசமா வாழனும்? நான் அவரை பணத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவர் என்ன பழிவாங்க கல்யாணம் பண்ணி கிட்டாரு” என்றவள் வாணனை ஏறிட்டு “நான் என்ன பெறாத அம்மாக்கு வைத்தியம் பார்க்க பணம் தேவ பட்டது அதனால் உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என் தேவ என் அம்மா சாவோட முடிஞ்சது. நீங்க என்ன கல்யாணம் பண்ணகிட்டது பழிவாங்க வாங்கி முடிச்சிட்டீங்களா?” என்று கேக்க
“நிலா…” என்ற வாணனின் தொண்டை அடைத்துக்கொள்ள
“ஆள் மாறிப்போச்சா…. ஒன்னும் கவலைப்பட வேணாம். அவ என் ரெட்டைதான். அவ பண்ண பாவத்துக்கு நான் தண்டனை ஏத்துக்கிறேன். சொல்லுங்க இன்னும் என்னெல்லாம் செய்யணும்” ஒரு கையை கட்டிக்கொண்டிருந்தவள் மறு கையை ஆட்டியவாறே கேட்க
“போதும் நிலா…” என்று லேகா தடுக்க
“நீங்க குறுக்க வராதீங்கம்மா… இவருக்கு எந்த மனநோயும் இல்ல. என் கிட்ட பொய் சொல்லி இவரோட இருக்க வச்சிருக்கிறீங்க அதுக்காகவே! உங்கள நான் மன்னிக்கக் கூடாது. உங்க வாழ்க்கைல ரொம்ப பட்டுடீங்க அதனால உங்கள விட்டுடுறேன்” என்றவள் வாணனை ஏறிட்டு “உங்க கூட வாழ எனக்கு பிடிக்கல நாளைக்கு காலைல என் பசங்கள கூட்டிகிட்டு நான் அம்மா கூட அரண்மனைக்கு கிளம்புறேன்” என்றவள் வந்த வேலையை மறக்காமல் கட்டிலில் இருந்த தலையணைகளில் இரண்டையும் எடுத்துக்கொண்டு நிற்காமல் படியிறங்கி கீழே சென்று விட்டாள்.
“நிலாம்மா… நிலாம்மா.. “என்று லேகா பின்னால் ஓட வாணன் தொப்பென்று கட்டிலில் அமர்ந்து விட்டான்.
அவன் செய்ததற்கு தண்டனையை அவன் அடைந்துதானே! ஆக வேண்டும். 
லேகாவிடம் கேட்டறிந்த உண்மைகளை தாண்டி நிலா தன் வாழ்வில் இனி இல்லை என்ற உண்மை சுட வாணன் எப்பொழுது தூங்கினான் என்று வாணனுக்கே! தெரியவில்லை. அவன் கண்விழிக்கையில் காலை ஒன்பது மணியும் கடந்திருக்க, கட்டிலை விட்டு எழுந்துகொள்ளவே! மனமில்லை.
நிலாவை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துக்காக வாணன் தள்ளி விடவுமில்லை. அவள் படியில் இருந்தபடியால் கால் இடறியது, சமநிலை தவறியது என்று தலை மோதுண்டத்தில் கோமாவில் விழுந்து பின் இறந்து விட்டாள்.
அது ஒரு விபத்து, அந்த வயது வாணனுக்கு தண்டனையும் கொடுக்க முடியாது, அது லேகாவுக்கும் நன்கு தெரியும். வாணனுக்கும் நன்கு தெரியும். ஆனாலும் மனசாட்ச்சி என்ற ஒன்று குத்திக் கிழிக்குமே! அதற்க்கு அச்சப்படாமல் வாழ முடியுமா? அது தினம் தினம் கொல்லுமே! அதனால்தான் லேகா வாணனுக்கு இந்த உண்மை தெரியக் கூடாது என்று எண்ணினாள். ஆனால் விதி வாணனுக்கு எல்லா உண்மைகளும் தெரிய வந்து விட்டது. போதாததற்கு பழிவாங்குவதாக நிலாவின் இரட்டையையும் பாடாய் படுத்தி இருக்கின்றான். அவனுக்கு மன்னிப்பே! இல்லை என்ற உணர்வில் கட்டிலை விட்டு நகராது இருந்தான் வாணன்.   
சுசிலா வந்து அறைக்கதவை தட்டவும் உள்ளே வருமாறு கூறியவன் வந்தது யார் என்று கூட பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டான்.
“என்ன டா துகிலா..? உடம்புக்கு ஏதாச்சும் பண்ணுதா? படுத்துகிட்டு இருக்க? ஆபீஸ் போகலையா?” என்றவாறு மகனின் நெற்றியில் கை வைத்துப் பார்க்க அன்னையின் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டான்.
அன்னையிடம் உண்மையை கூறவும் முடியாது. கூறாமல் இருக்கவும் முடியாது. இயல்பில்லையே! சுசிலா கருணை நிறைந்தவள். நிலாவை மன்னித்து விட்டேன் என்றவள் உண்மையை அறிந்தால் அன்னை தன்னை வெறுத்து விடுவாளோ! என்று அஞ்சினான் வாணன். 
“கொஞ்சம் லேட் ஆகி போகணும் ம்மா… நைட்டு சரியா தூங்கல அதான் விடிஞ்சது கூட தெரியாம தூங்கிட்டேன். நீ என்ன படியேறி வந்திருக்க?” கண்களை திறவாமலே! கேட்க
“ஏன் டா நான் என்னமோ! படீல கால் தவறி விழுந்தா மாதிரி என்ன படியேறக் கூடாதுனு சொல்லுற?” என்ற சுசிலா நாக்கை கடித்துக்கொண்டு அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக “சரி அத விடு லேகாம்மா ஊருக்கு போறாங்களாம். இந்த நிலாவும் அம்மா முந்தானைய பிடிச்சிக்கிட்டு நானும் போவேன்னு ஒரே அடம்பிடிக்குது. ரெட்டை குழந்தையை வச்சிக்கிட்டு தனியா அவளால பாத்துக்க முடியுமா? லேகாம்மாவும் அடிக்கடி வெளிய போக வேண்டி இருக்கும். நானும் போகவா துகிலா….”  மகனிடம் மெதுவாக விஷயத்தை சொல்லி அனுமதி கேட்க
நிலா செல்ல முடிவெடுத்தது அவனுக்கு நேற்றிரவே! தெரிந்த விஷயம்தானே! அவன் குழந்தைகளை பார்த்துக்கொள்ள அன்னையும் கூட இருப்பதுதான் நல்லது என்று தோன்ற “சரிம்மா.. போ…” என்றவன் வேறெதுவும் பேசவில்லை.
“ஆ… துகிலா உன் கிட்ட சொல்ல மறந்துட்டேன். அடிக்கடி அப்பா ஏன் வாணன்னு கூப்பிடுறாரு நீ ஏன் மா… துகிலானு கூப்பிடுறன்னு கேப்பியே!” என்று சுசிலா புன்னகை முகமாக சொல்ல அந்த புன்னகை வாணனையும் தொற்றிக்கொண்டது.
“அப்போ புரியல இப்போ புரியுது. ரெட்டை குழந்தை பொறந்தா வாணன், துகிலன்னு வைக்க பிளான் பண்ணி இருந்தீங்க, ஒத்த புள்ளையா போய்ட்டதுனால துகிலவாணான்னு எனக்கே! பேர் வச்சிட்டீங்க அப்படித்தானே!”
“ஆனாலும் துகிலா உனக்கு இம்புட்டு அறிவு இருக்கக் கூடாது டா… என்ற சுசிலா வாணனின் தலையை தள்ளி விட்டு “நீ சொன்னது உண்மைதான். அப்பா வாணன்னு செலெக்ட் பண்ணாரு, நான் துகிலன். அதே! மாதிரி உன் குழந்தைகளுக்கும் உன் பொண்டாட்டியோட சேர்ந்து பேரு வை” என்றவாறே சுசிலா கிழே சென்றாள்.
செல்லும் அன்னையை ஒரு பெருமூச்சோடு பார்த்தவன் “அந்த பாக்கியமெல்லாம் எனக்கு இல்லமா…” என்று மெதுவாக கூறிக்கொண்டான்.
வாணன் குளித்து தயாராகி கீழே வரும் பொழுது ஊருக்கு செல்ல அனைவரும் தயாராகி நின்றதோடு அனைத்து சாமான்களையும் கூட வண்டியில் ஏற்றப்பட்டிருந்தன.
வாணனுக்கு என்ன சொல்வதென்றே! தெரியவில்லை. நிலாவையே! பாத்திருக்க அவளோ! அவனை சிறிதும் கண்டுகொள்ளாது குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்தாள். அவளோடு பேச அருகில் செல்ல போக அவள் வெடுக்கென்று திரும்பி நின்றுகொண்டாள். அவளிடம் பேச முடியாது என்று புரிய, லேகாவை தனியாக அழைத்தவன் அறைக்குள் செல்ல லேகாவும் அவனை பின் தொடர்ந்தாள்.
“அத்த நிலாவையும் குழந்தைகளையும் நல்லா பாத்துக்கோங்க, அம்மா அங்கேயே! இருக்கட்டும். நிலா என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு நான் கட்டுப்படுறேன். டிவோர்ஸ் வேணும்னு சொன்னாலும் கொடுத்துடுறேன். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுங்க” தொண்டையை கனைத்துக் கொண்டான்.
“டேய் என்ன டா பேசுற? அவ எதோ! கோபத்துல இருக்கா… நான் அவ கிட்ட பேசுறேன்” லேகா பதற
“வேணாம் அத்த… என் அவசர புத்தியால யோசிக்காம ஏதேதோ பண்ணிட்டேன். என்னால அவ நிம்மதி கெட்டுட வேணாம். நீங்க எதுவும் பேசக் கூடாது. என் மேல சத்தியம் பண்ணுங்க” என்று லேகாவை லாக் செய்ய 
“டேய் என்ன நீ பைத்தியம் மாதிரி பேசிகிட்டு இருக்க? ரெண்டு புள்ளய பெத்து வச்சிருக்குறீங்க? அத விடு உன் அம்மாக்கு என்ன சொல்லுவ?” என்று லேகா வாணனை மடக்க
“உண்மையைத்தான் சொல்லணும் அத்த. நேரம் வரும் போது நானே! சொல்லுறேன். அம்மா புரிஞ்சிப்பாங்க” என்ற வாணன் வாசலுக்கு வந்திருக்க நிலா வண்டியில் ஏறி அமர்ந்திருந்தாள்.
சுசீலாவும், லேகாவும் விடைபெற நிலா அவன் முகத்தைக் கூட பார்க்கவில்லை. வாணனின் இதயம் கனத்து, உடல் இறுகியது வண்டி வாயிலை தாண்டும் வரை காத்திருந்தவன் தனது வண்டியை எடுத்துக்கொண்டு காரியாலயம் கிளம்பினான்.
எல்லாருக்கும் ஊருக்கு சென்று இரண்டு வாரங்களாகி இருக்க, வாணனுக்கு வீட்டு செல்லவே! பிடிக்கவில்லை.
தினமும் அலைபேசி வழியாக லேகாவும், சுசீலாவும் பேசுவார்கள். வாணன் கேட்காமலே! குழந்தைகள் இதை செய்தார்கள், அதை செய்தார்கள் என்று குழந்தைகளை பற்றி மட்டும் சுசிலா பேச, லேகா நிலா நன்றாக இருப்பதாக கூறுவாள்.
“நிலா என்னை பற்றி கேட்டாளா?” என்று வாணன் கேட்டால் இல்லை என்றாள் லேகா.
“ஏன் நிலா உனக்கு என் மீது அவ்வளவு வெறுப்பா? நான் எப்படி இருக்கேன்னு கூடவா கேட்க பிடிக்கல?” மனம் நொந்தான் வாணன்.
அதையே! எண்ணியவாறு வீடு வந்தவனுக்கு வண்டி சத்தம் கேட்டதும் வாசலுக்கு வரும் அவனின் அன்புக்குரிய அந்த மூன்று ஜீவன்களின் முகங்களும் கண்முன் தோன்றியது. 
வீட்டின் உள்ளே! செல்லும் பொழுது இன்முகமாக வரவேற்க யாருமில்லை. “என்ன வாணா ரொம்ப களைச்சு போய் இருக்கியா?” என்று அன்பாக கேட்கும் அத்தையுமில்லை. ஓடிப்போய் குடிக்க தண்ணீர் எடுத்து வரும் மனைவியும் இல்லை. “டீ சாப்பிடுறியா? காப்பியா?” என்று கேக்க அன்னை இல்ல. புதிதாய் கேட்கும் குழந்தைகளின் அழு குரல்களும் இல்லை. சிரிப்பு சத்தங்களும், கொஞ்சல் மொழிகளும் இல்லை. பழையபடி தனியாக வீடும் வெறிச்சோடி கிடக்க, அவன் வாழ்க்கையே! சூனியமானது போல் பிரம்மை தோன்ற தூங்க மட்டும் வீடு சென்று வந்துகொண்டிருந்தான்.
கட்டிலில் விழுந்தாலும் நித்திராதேவி ஒன்றும் அவனை அவ்வளவு இலகுவில் தழுவி விட மாட்டாள். அவன் உள்ளமெல்லாம் நிலா நிறைந்திருக்க, அவளை முதன் முதலாக காரியாலயத்தில் சந்தித்தது, அவள் ஏழ்மையை தாண்டிய எளிமை. அப்பாவித்தனம். பொறுமை. சிரிப்பு. பேச்சு ஏன் அவள் சமைக்கும் உணவுகளின் ருசி கூட அவன் நாவில் இன்னும் இருப்பது போல் ஒரு பிரம்மை என்று அவனை பாடாய் படுத்தி எடுக்க தினம் தினம் சித்திரவதையை அனுபவித்த பின்தான் தூங்கலானான்.
தனக்கு பிடிக்காத நிலா என்று இருந்தவளை அவளில்லை என்ற உடன் இவ்வளவு பிடிக்குமா என்று கேட்டால் வாணனுக்கு அந்த உணர்வுக்கு அர்த்தம் புரியவில்லை.
வாணனுக்கு நிலாவோடு இருக்கணும், பேசணும் போல தோன்றினாலும் அவளை தொந்தரவு செய்ய தோன்றவில்லை. அவளை கஷ்டப்படுத்தியது போதும். தன்னால் தாயும் மகளும் சேர்ந்து விட்டார்கள். தான் செய்த பாவங்களுக்கு எதோ! தன்னால் நல்லது நடந்திருக்கிறது என்று முயன்ற மட்டும் விலகி நிற்கவே! முயற்சி செய்யலானான்.
என்னதான் நிலாவை பற்றி நினைக்கக் கூடாது, அவளை பற்றி பேசக் கூடாது என்று வாணன் நினைத்தாலும் தினமும் லேகாவிடம் நிலாவை பற்றி தகவல்கள் சேகரித்துக்கொண்டுதான் இருக்கின்றான். அவனாலும் நிலாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் நினைப்பதை விட, அவர்களை பார்க்க வேண்டும், செல்லம் கொஞ்ச வேண்டும் என்ற ஆவலையும் தாண்டி, நிலாவை பார்த்தே! ஆக வேண்டும் என்று வாணனின் நாடி நரம்பெல்லாம் துடிக்க, தனக்கு நிலாவின் மீது இருப்பது காதல் தான் என்பதை உணர்ந்துகொண்டார் துகிலவாணன் மௌரி.

Advertisement