Advertisement

அத்தியாயம் 2
அது இரண்டு மாடிகளைக் கொண்ட சாதாரண வீடுதான். யார் வீடு என்று கூட நிலாவுக்கு தெரியாது. ஒரு பதைபதைப்போடு வர காவலாளி வாயிலை திறந்து விட்டிருந்தான். வெளியே நின்றிருந்த ஜெகன் உள்ளே செல்லுமாறு கூறி விட்டு கேமராவோடு ஐக்கியமாகி விட்டான்.
வாசலில் ஐயரை தவிர யாருமில்லை. உள்ளே வந்தவளை ஒரு பார்வை பார்த்தவர் அவர் பாட்டில் அவர் வேலையை செய்துகொண்டிருந்தார். நிலாவுக்கு அங்கிருந்த சோபாவில் அமரக் கூட தயக்கமாக இருந்தது ஒரு ஓரமாக நின்றுகொண்டவள் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.
உள்ளே வந்தவளுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. ஒவ்வொருவருக்கும் திருமணம் ஒவ்வொரு விதமாக அமைந்து விடும். காதல் திருமணம், பெற்றோரால் நிச்சயக்கப் பட்ட திருமணம். அந்த திருமணங்களில் நண்பர்கள், உறவினர்கள் என்று யாராவது கூட இருப்பார்கள். இங்கு நிலா, வாணன், வாணனின் பி.ஏ ஜெகன் மற்றும் ஐயரை தவிர யாருமில்லை.
என்னதான் வாணனின் சொத்துக்காக திருமணம் செய்வதாக இருந்தாலும். நிலாவை பொறுத்தவரையில் அது உண்மையான திருமணமல்லவா? வாணன் தான் யாரையும் அழைக்கவில்லை. தானாவது சதாசிவம் ஐயாவை அழைத்திருக்கலாம் என்று எண்ணினாள்.   
அடுத்த கணமே! பணத்துக்காகத்தான் இந்த திருமணம் என்று அவர் அறிந்துக்கொண்டால் அவர் தன்னை பற்றி என்ன நினைப்பார் என்று எண்ணியவள் யாரிடமும் சொல்லாமல் வந்துது கூட நல்லதுதான் என்று எண்ணலானாள். 
மாடியிலிருந்து இறங்கி வரும் காலடி சத்தம் கேட்கவே! நிமிர்ந்து பார்க்க, வாணனும் அவளை பார்த்தவாறுதான் வந்துகொண்டிருந்தான். அவன் அவள் முகத்தை பார்க்கவே! இல்லை. அவள் அணிந்திருந்த பட்டுப்புடவையைத்தான் பார்த்தவாறு இறங்கிக் கொண்டிருந்தான்.
இளம் பச்சை நிறத்தில் எந்த வேலைப்பாடுகளுமின்றிய பட்டுப்புடவை. சிவப்பு நிறத்தில் மெச்சிங் பிளவுஸ் அணிந்திருந்தாள்.
“அப்படி என்னத்த பாக்குறான்?” தன்னை ஆராய்ந்தவளுக்கு நகைகள் போட்டிருக்கவில்லை என்று புரிய “அதான் பார்க்கின்றானா? அதற்கு எதற்கு இப்படி பார்க்கின்றான். முருகா என்ன பார்வடா இது?” மனதுக்குள் புலம்பியவாறு அவனை பார்க்க வெள்ளை வேட்டி சட்டையில் மணமகனுக்கு உரித்தான கம்பீரத்தோடு அவளருகில் வந்து நின்றிருந்தான் வாணன்.
அருகில் வந்தவன் “என்ன விலைல புடவை வாங்கின?” குரலில் அவ்வளவு சீற்றம்.
அவன் கோபத்தை சற்றும் எதிர்பார்க்காத நிலா மிரண்டவளாக “இருபதாயிரம்” என்று திக்கித்திக்கி சொல்ல
பல்லைக் கடித்தவன் அவள் கையை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு படியேற என்ன பிரச்சினை என்றே நிலாவால் உணர முடியவில்லை.
கதவை அறைந்து சாத்தியவன் “உனக்கு ரெண்டு லட்சம் தந்தேன். அட்லீஸ்ட் ஒரு லட்சத்துக்கு புடவை வாங்கி இருக்க வேணாம்” என்று சீற
அவன் கோபம் கூட பின்னுக்கு தள்ளப்பட “ஒரு லட்சத்துக்கா?” வாயை பிளந்தாள் நிலா.
அவளுக்கு இருக்கும் பணத்தேவைக்கு பார்த்துப் பார்த்து செலவு செய்பவள் இருபதாயிரம் ரூபாய்க்கு புடவை எடுக்க வேண்டுமா என்று கூட யோசித்தாள். இவ்வளவு பணம் கொடுத்திருக்கின்றான். திருமணத்துக்கு யாரெல்லாம் வருவார்களோ! இந்த விலையில் கூட எடுக்கவில்லையாயின் நன்றாக இருக்காது என்றுதான் எடுத்திருந்தாள்.
“அவ்வளவு விலையில் எதுக்கு புடவை எடுக்கணும். அதுவும் ஒருநாள் தானே! கட்ட போறேன். அதான்…” என்றவள் மேலும் பேசாது மெளனமாக
“ம்ம்.. நீ சொல்றதும் சரிதான். ஒன்னு பண்ணு நீ என் கூட இருக்குற வரைக்கும். செலவு பண்ணுறது பத்தி கணக்கு பார்க்காத. அது எனக்கு அசிங்கம். நீ போகும் போது எல்லாத்தையும் இங்கயே வச்சிட்டு போ. அப்போ உனக்கு சங்கடமா இருக்காதில்லை” வாணன் மிகமிக சாதாரணமாக சொல்ல
நிலாவின் உள்ளுக்குள் எதோ ஒன்று உடைந்தது. ஆம் அவள் பணத்துக்காகத்தானே! இவனை திருமணம் செய்துகொள்கின்றாள். எந்த உரிமையும் இவனிடத்தில் இல்லை. எதிர்பார்க்கவும் முடியாது. வாடகைக்கு எல்லாவற்றையும் வாங்கலாம் மனைவியையுமா? முகம் சுணங்கினாள் நிலா.
அவள் மனதில் ஓடுவதை புரிந்துகொண்டவன் “உன்ன கஷ்டப்படுத்தணும்னு நான் இத சொல்லல. நீ புடவை கட்டுறது நான் பாக்குறதுக்கு நிலா. என் கூட இருக்கும் போது உன் அடையாளம் என்ன வச்சு தான் இருக்கும். திருமதி இளைய நிலா துகிலவாணன். புரியுதா? பொண்டாட்டிக்கு புடவை கூட எடுத்துக் கொடுக்க மாட்டான் கஞ்சன்னு ஊரே! பேசும். நீ சங்கடப்படக் கூடாதுன்னுதான் சொன்னேன்” என்றான். 
இதென்ன இதை விட உன்னை கஷ்டப்படுத்த காத்திருக்கின்றேன். இது முதல் படிதான் என்று உதடு வளைத்தான் வாணன்.   
மறந்தும் வாணன் மீதிப் பணத்தை என்ன செய்தாய் என்று கேட்கவில்லை. அவன் கேட்டிருந்தால் நிலா விளக்கம் கொடுத்திருந்திருப்பாளோ! அவளுக்கென்ற கொடுத்த காசை கணக்கு பார்க்க்கக் கூடாது என்று கேட்கவில்லையோ! அல்லது அதை கேட்கப்போய் கல்யாணமே! வேண்டாம் என்று சென்று விடுவாளோ! என்று அச்சம் கொண்டானோ! வாணன் பணத்தை பற்றி பேசாது
அங்கிருந்த பீரோவை திறந்து அவள் அணிந்திருந்த சிவப்பு நிற சட்டைக்கு பொருத்தமான நீல நிற பட்டுப்புடவையை கையில் கொடுத்து “இத கட்டிக்க, போட்டோல ரிச்சா தெரிய வேணாமா?” என்று இன்முகமாக பேசியவாறு அவள் கன்னம் தட்ட அவன் மனம் அவளுக்கு புரியவே! அச்சம் நீங்கி மெலிதாக புன்னகைக்கலானாள்.
புடவைக்கு பொருத்தமான நகைகளையும் அவள் கையில் வைத்தவன் “அங்கபாரு மேக்கப் சாமான்கள் கூட உனக்காக வாங்கி வச்சிருக்கேன். உனக்கு பிப்ட்டின் மினிட்ஸ்தான் டைம் சீக்கிரம் ரெடியாகி கீழ வா” என்று விட்டு கதவை சாத்திக்கொண்டு கீழே சென்றான்.
இளைய நிலா துகிலவாணன். அவன் சொன்ன தனது பெயர் நெஞ்சுக்குழிக்குள் ஊடுருவி இனிக்க “என்னது நான் புடவை கட்டுறது அவன் பார்கவா? இது என்ன புதுக்கதையா இருக்கு? என்ன சொல்லிட்டு போறான்?” குழம்பிய நிலா நேரமாவதை உணர்ந்து “சிங்கம் சீறினாலும் பாசக்கார பயதான்” செல்லும் அவனை ரசனையாக பார்த்திருந்தாள் நிலா. வாணனின் பேச்சில் நடப்பது நாடக கல்யாணம் என்பதை நொடியில் மறந்துதான் போனாள்.
நிலா தயாராகி வரும் பொழுது ஜெகன் திருமணத்தை வீடியோ கவரேஜ் எடுத்துக் கொண்டிருக்க, வாணன் மணவறையில் அமர்ந்து மந்திரம் ஓதிக்கொண்டிருந்தான். ஐயர் மந்திரம் ஓதியவாறே அவளை மணவறையில் வந்து அமரும்படி கூற அவளும் வாணனின் அருகில் வந்தமர அவளை பார்த்து மெலிதாக புன்னகைத்தான் வாணன்.
“இனி உன் வாழ்க என் கைல நிலா? என்ன விட்டு நீ போகவும் முடியாது. போகவும் விட மாட்டேன்” என்று கருவிக்கு கொண்டவன் வேதனைகளை பரிசாக வழங்க வேண்டியே! அவளை தன் சரிபாதியாக்கி இருந்தான். 
“உன் சாமானெல்லாம் எங்க?” திருமணத்தை முடித்துக்கொண்டு அந்த வீட்டிலிருந்து புறப்பட தயாரான வாணன் நிலாவை ஏறிட்டு கேக்க திருதிருவென முழிக்கலானாள் அவள்.
“அது சரி தாலி வாங்கிகிட்டு அப்படியே கிளம்பி போய்டலாம்னு நினைச்சிதான் வந்தியா?” என்று சீற
“இல்ல அது வந்து வர்ர பதட்டத்துல மறந்துட்டேன்” அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள் நிலா. 
தான் செய்வது சரியா? தவறா என்ற குழப்பம் ஒரு புறம். வாணனை நம்பி திருமணம் செய்ய எப்படி சம்மதித்தேன்? அவனை நம்பலாமா? கூடாதா? அவன் கொடுத்த விலாசத்துக்கு போலாமா? வேண்டாமா? என்று இந்த இரண்டு நாட்களாக மனதோடு போராடிக் கொண்டிருந்தவள் திருமணத்துக்கு புடவை எடுத்ததே! பெரிய கதையாக இருக்க, அதை உடுத்திக்கொண்டு இங்கு வருவது பெரும் பாடாக இருக்க, இதில் அவள் சாமான்களை வேறு கொண்டு வரும் சிந்தனை அவளுக்கு இருக்குமா?
ஆசிரமத்தில் உள்ளவர்களிடம் தனக்கு வேலை கிடைத்து விட்டது என்று முதல் பொய்யை சொன்னவள். வேலை கிடைத்த இடத்தில் தங்கவும் ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதாக இரண்டாவது பொய்யையும் கூறி இருந்தாள். 
சீமா வேறு புதுப்புடவையில் இத்தனை காலையில் எங்கே செல்கிறாய் என்று துளைத்து எடுக்க வேலை கொடுத்த பெண்மணியின்  வீட்டில் விஷேசம் அவர்கள்தான் புடவை கொடுத்து வர சொன்னார்கள் என்று அடுத்த பொய்யை கூறினாள். 
இதில் இவள் அன்றே பெட்டிபடுக்கையை கட்டி இருந்தால் சந்தேகப்பட்டிருக்க மாட்டார்களா? ஆனால் சீமாவிடம் உண்மையை கூறாமல் ஏன் பொய் கூறினாள் என்று நிலாவால் இப்பொழுது நினைத்தாலும் புரிந்துகொள்ள முடியவில்லை.
கூறி இருந்தால் கண்டிப்பாக இந்த திருமணத்தை தடுத்துதான் இருப்பாள். பணத்துக்காக இப்படியெல்லாம் செய்ய ஒருநாளும் சம்மதிக்க மாட்டாள் என்ற அச்சத்தில்தான் சரளமாக பொய்யுரைத்தாள். ஆனால் தோழியிடம் பொய் கூறுகின்றோம் என்று மனம் உறுத்தவில்லை. அன்னைக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல நிலா தயாராகத்தான் இருக்கின்றாள். இதையெல்லாம் மனம் நினைக்க நிலாவின் கண்களில் வெறுமை குடிகொண்டது. 
அந்த பார்வையில் யாருடைய மனம் வேண்டுமானாலும் இளகி விடும் ஆனால் வாணனின் கல்நெஞ்சு இளகவே! இல்ல.
அவளுடைய நிலையில் இருந்து கொஞ்சமேனும் சிந்தித்து பார்க்காமல் “அது சரி நாலு பழைய துணி. இத்து போன தகர பெட்டில வச்சிருப்ப. அத கொண்டு வந்தா என்ன? கொண்டு வரலைன்னாதான் என்ன? அது கெடக்கட்டும் விடு புதுசு வாங்கிக்கலாம்” என்றவன் அவள் பதிலையும் எதிர்பார்க்காமல் வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டான். 
  
நிலாவின் உள்ளம் ரணமென வலித்தது. தந்தை இருக்கும்வரை இளவரசி போல் வலம் வந்தவள் இன்று இவ்வாறான பேச்சுக்களை கேக்க வேண்டியதாக இருப்பதை நினைத்து கண்கள் கலங்கியது.
“வண்டில ஏறு” கதவை திறந்து விட்டவன் கூற ஏறி அமர்ந்தவள் எதுவும் பேசவில்லை.
“ஜெகன் வண்டிய நேரா சுவர்ணா ஜவுளிக்கு விடு” என்றவன் லப்டோப்பில் மூழ்கி விட நிலா பாதையை வேடிக்கை பார்த்தவாறு இவனோடு தான் என்ன செய்துகொண்டிருக்கின்றேன் என்று சிந்திக்கலானாள்.
சுவர்ணா ஜவுளி ஒன்றும் பெரிய கடையில்லை. சாதாரணக் கடைதான். ஆனால் உள்ளே எல்லாவகையான ஆடைகளும் இருந்தன.
“நீ எந்த மாதிரி ட்ரெஸ் போடுவ?” வாணன் கேக்க அதற்கும் நிலா அவனை பார்க்க “ப்ச்… இன்னைல இருந்து எனக்கு பிடிச்ச மாதிரி போடு” என்றவன் விலையுர்ந்த சுடிதார்களையும், சாரிகளையும் வாங்கிக் குவிக்க,
“எதுக்கு இவ்வளவு வாங்குறான்? மூணு மூணு செட் இருந்தா போதாதா? என்று நினைத்தவள் அதை அவனிடம் சொல்ல
“எதுக்கு தொவச்சி காய போட்டு போட்டு அதையே! உடுத்தி துணியும் மங்கி, சீக்கிரம் பழசாகி கூட்டத்துல உன்ன தனியா தெரியவா? போ.. உள்ளாடைகள் அந்த பக்கம் இருக்கு அதையும் நான்தான் எடுத்து தரணுமா? தேவையானதை போய் எடுத்துக்க. கஞ்சத்தனம் பண்ணாம எடு” என்று அடிக்குரலில் சீற நிலா கப்சிப் என்றானாள்.
சில வருடங்களாகவே! அவள் புதுத்துணி என்று வாங்கியதில்லை. ஆசிரமத்துக்கு தானமாக கிடைக்கும் துணிகளைத்தான் உடுத்துகிறாள். இல்லாதவர்களுத்தான் பணத்தின் அருமையும், பொருளின் அருமையும் புரியும். நிலா மட்டும் விதி விலக்கா என்ன?
இவ்வளவு எதற்கு? வீண் செலவு என்றுதான் எண்ணினாள். அதுவும் அவள் போகும் பொழுது வைத்து விட்டு செல்ல போகிறாள். அதை யார் பாவிப்பார்கள்? நிச்சயமாக வாணன் தூக்கிப்போடத்தான் போகின்றான். அவனோடு இருக்கப் போவது எத்தனை மாதங்களோ! என்று எண்ணியே! பேசி இருக்க, அவன் இவ்வாறு பேசுவான் என்று எண்ணவில்லை. அதுவும் கடைசியாக சொன்ன வார்த்தைகள். அவளை அவனை விட்டு விலகி ஓட வைத்திருந்தது.
“என்ன இவன் இப்படியெல்லாம் பேசுறான். கொஞ்சம் கூட கூச்சமே! இல்லாம” அவனை தாளித்துக்கொண்டிருக்க, அவள் மனமோ! “அவன் சொல்லலனா நீ கேட்டிருப்பியா? இல்ல நீயா போய் எடுத்துதான் இருப்பியா?” என்று கேலி செய்ய
விற்பனை பெண் வந்து “மேடம் இந்த பக்கம் வாங்க. சார் உங்கள கூட்டிட்டு போக சொன்னாங்க” என்று சொல்ல அவனை திரும்பி நிலா பார்க்க முறைக்கலானான் வாணன்.
“சரியான சிடுமூஞ்சி. கொஞ்ச நேரம் யோசனைல விழுந்தா ஆளனுப்புறான்” என்றவாறு நிலா அந்த பெண்ணோடு சென்றிருந்தாள்.
பொறுமையாக வாங்கிய எல்லா சுடிதார்களையும் அணிந்தது பார்க்க சொல்லி அவளுக்கு பொருத்தமாக இருக்கின்றனவா என்று பார்கலானான்.
“ஒன்ன போட்டு பார்த்தா போதாதா? எல்லாம் ஒரே சைஸ் தானே!” திட்டுவானோ நிலா தயங்கியவாறே சொல்ல
“எல்லாம் ஒரே சைஸ் தான் நிலா. எது உனக்கு அழகா இருக்குனு நான் பார்த்து செலெக்ட் பண்ணனும்” என்று சொல்ல நிலா மறு பேச்சின்றி அணிந்தது காட்டலானாள்.
“குட் கேர்ள். இப்படியே நான் சொல்லுறத எல்லாம் கேட்டுகிட்டு இருந்தா போதும்” இரட்டை அர்த்தத்தில் பேச நிலா புன்னகைத்தாள்.
“நிலா உனக்கு சிந்தரெல்லா கத தெரியுமா?” வாணன் திடிரென்று கேக்க
“ஆ படிச்சிருக்கேன். எனக்கு பேண்டஸி கதைனா ரொம்ப பிடிக்கும். கற்பனையா இருந்தாலும் நல்லா இருக்கு. நம்ம வாழ்க்கையும் அது மாதிரி இருக்கக் கூடாதான்னு தோணும். யாராவது நம்மளுக்கு இந்த மாதிரி ஹெல்ப் பண்ண மட்டங்களானு ஏக்கமா இருக்கும். சிந்தரெல்லா ஒரு ஏழ்மையான பொண்ணு. சித்தி கொடுமையால ரொம்பவும் கஷ்டப்படுறா. ஒரு தேவதையோட உதவியோடு அந்த நாட்டுல உள்ள அரச விருந்துக்கு போய் இளவரசனை சந்திக்கிறா. இளவரசனோடு நடனமாடுறா. மூணாவது நாள் அவ கால்ல போட்டிருந்த ஷூ தொலஞ்சி போகுது. அத வச்சி இளவரசன் அவள கண்டு பிடிக்கிறாரு. அப்பொறம் ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து சந்தோசமா வாழறாங்க” என்று புன்னகை முகமாகவே! சொல்ல
“நீயும் அந்த சிந்தரெல்லா மாதிரிதான்” என்றவனின் உதடுகள் கேலியாக வளைந்து இருக்க,
“அப்போ நீங்க இளவரசனா?” என்றவள் வாய் விட்டு சிரிக்கலானாள்.
துணிகளை வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறியதும் “ஜெகன் ஒரு நல்லா ஹோட்டலா பார்த்து வண்டிய நிறுத்து முதல்ல சாப்பிடலாம். காலைலயும் சரியா சாப்பிடல” என்று வாணன் சொல்ல 
அவ்வளவு பெரிய வீட்டில் இருக்கின்றவன் ஒழுங்காக சாப்பிட கூட இல்லையா? தானும் ஆசிரமத்தில் இருந்து வரும் பொழுது மோர் மட்டும் சாப்பிட்டு வந்ததை மறந்து அவனை கவலையாக பார்த்தாள் நிலா.
ஜெகன் வண்டியை ஒரு ஹோட்டலின் முன் நிறுத்த வாணனும், நிலாவும் மட்டும் உள்ளே சென்றனர்.
“அவர் வரல” ஜெகனை பற்றி நிலா கேக்க
“அவனுக்கு இங்கிதம் தெரியும் நிலா வா நாம சாப்பிடலாம். உனக்கு என்ன வேணும் சொல்லு” என்றவன் மெனு கார்டை அவளிடம் கொடுக்க
அதை புரட்டிக் கூட பார்க்காமல் “இந்த மாதிரியான இடத்துக்கெல்லாம் நான் வந்து ரொம்ப வருஷமாச்சு. இங்க என்ன மாதிரியான சாப்பாடு கிடைக்கும்னு அடிக்கடி வர்ர உங்களுக்குத்தான் தெரியும். நீங்களே! ஆடர் கொடுங்க” என்றாள்.
“அதான் வந்துட்ட இல்ல. உனக்கு பிடிச்சதை இன்னக்கி சாப்பிடலாம். கல்யாண விருந்து என் மனைவி கையாள” என்றவன் கண்சிமிட்ட நிலாவின் கண்கள் கலங்கின.
“என்ன ஆச்சு நிலா”
“தேங்க்ஸ்”
“எதுக்கு?”
“எல்லாத்துக்கும்”
“அத வேறொருநாள் சொல்லு. இப்போ சாப்பிடலாமா?” அவன் அவளுக்கு செய்ய போகும் எல்லாவற்றுக்கும் சாபத்தை அள்ளி தெளிப்பாளே! ஒழிய நன்றியா சொல்லப் போகிறாள்?  அவள் வரவழைத்த உணவுகளை அவளுக்கே! ஊட்டி விட்டவாறு அவள் கையால் தானும் உண்டு. நிலாவுக்காகவே! பிறந்தவன் போல் நடந்துகொண்டான்.
சாப்பிட்டு முடித்து பில் கட்ட சென்ற போது ஜெகனும் வந்து சேர அவனிடம் பிள்ளை கொடுத்து விட்டு வண்டி சாவியை பெற்றுக்கொண்டு வண்டிக்கு சென்றனர் நிலாவும், வாணனும்.
ஜெகன் வந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்ததும் “ஜெகன் நகைக் கடைக்கு வண்டிய விடு” என்று வாணன் சொல்ல
அவனை திரும்பிப் பார்த்த நிலா “நகை எதுக்கு வேண்டாமே!” மிகமிக மெதுவாகத்தான் கூறி இருந்தாள்.
அவன் வாங்கிக் கொடுக்கும் துணிகளை உடுக்கவே! உறுத்தும். இதில் நகைகளை போட்டால் எதோ! ஒரு பாரத்தை சுமந்துகொண்டு இருப்பதாக தோன்றும். அதனால் மிகத் தாழ்மையாக ஜெகனின் காதில் விழாதவாறு மறுத்தாள் நிலா.
அவளை தீர்க்கமாக பார்த்தவன் “என்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட பின் நீ என் சொத்து நிலா. நான் என்ன சொல்லுறேனோ! அதைத்தான் நீ செய்யணும். எதுக்கு இப்படி சங்கட படுற?” என்று அவள் கையை பிடித்து ஒவ்வொரு விரலாக சொடக்கிட நிலாவின் உடலில் மின்சாரம் பாய கூசி சிலிர்த்தாள்.
வாணன் காதலால் கசிந்துருகி “உனக்காக எதையும் செய்வேன்” என்று சொல்லவில்லை. “நான் என்ன சொல்கின்றேனோ! அதை மட்டும்தான் செய்ய வேண்டும்” என்று கட்டளைதான் இட்டிருந்தான்.
வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த ஜெகன் கண்ணாடி வழியாக வாணனின் செய்கையை கண்டு வாயை பிளந்தவன் “பாஸுக்குள்ள இப்படியொரு காதல் மன்னன் இருக்கானு இவ்வளவு நாள் கூட இருந்த எனக்கு கூட தெரியாம போச்சே” என்று முணுமுத்துக்கொண்டான்.
வாணன் கையை பிடிப்பான் என்று எதிர்பார்காதவள் அதிர்ச்சியடைய அவனது செய்கையில் நிலா முகம் சிவந்தவாறு தலை குனிந்துக் கொண்டாள்.  
வாணனின் செய்கைகளும், நடத்தையும் அவளை காதலிப்பது போல் தெரிய “ஒருவேளை இவன் என்ன காதலிக்கின்றானோ! அதனால்தான் கல்யாணம் பண்ணிகிட்டானோ! நேரடியாக கேட்டால் மறுத்து விடுவேன்னு பணத்தை காரணம் காட்டி கல்யாணம் பண்ணிக் கொண்டானோ! சிந்தரெல்லா கதையெல்லாம் சொல்லுறான். எங்க பாத்திருப்பான்” என்று நிலா கற்பனை உலகத்தில் மிதக்க, அவள் இடையில் கைபோட்டு தன் அருகில் இழுத்து அமர்த்திக் கொண்டவன் மறுகையை கோர்த்துக்கொண்டு அவள் தோள்பட்டையில் முகம்வைத்தவாறு பயணிக்க, நிலாதான் கிறங்கி நின்றிருந்தாள்.
நகைக்க கடைக்கு சென்று நகைகளை வாங்க நிலா மறுக்கவில்லை. மந்திரத்துக்கு கட்டுண்டவள் போல் மயங்கியே அவன் சொல்வதற்கு தலையசைக்கலானாள்.
விண்ணப்ப படிவத்தில் நிலாவின் புகைப்படத்தை பார்த்த நொடியே! அவளை அடையாளம் கண்டு கொண்டிருந்தான் வாணன். பலபேருக்கு வேலைக்கு கொடுக்க வேண்டியவள் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறாள் என்பதே! ஆச்சரியம். வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று வேண்டுமென்றே தான் அவளை காத்திருக்க வைத்து கடைசியாக அறைக்குள் அழைத்திருந்தான்.
அவள் காத்திருந்த நேரம் சீசீடிவியினூடாக அவளை கண்காணித்தவனுக்கு அவள் உடையும், தோற்றமும் வியப்பைத்தான் கொடுத்தது. அவள் சொத்தை பறித்து நடு வீதிக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தவனுக்கு பெரிய ஏமாற்றம்.
சொத்து இல்லா விட்டால் என்ன? அவள் கற்பை விலை பேசு? அவன் மூளை சொல்ல, கேட்பதை பற்றியெல்லாம் அவனுக்கு கவலையுமில்லை. பொருட்டுமில்லை. அவள் சம்மதிக்க வேண்டும். அதுவும் அவளுக்கு காரணமும் வேண்டும் என்றது அவன் மனம்.
காரணம் இருந்தாலும் சம்மதிப்பாளா? மறுமனம் கேள்வி எழுப்ப? “இந்த காலத்து பெண்கள் எதற்கும் துணிந்தவர்கள் இதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள் வாணா” என்று அவனை கேலி செயலானது அவன் மனம்.
“என்ன செய்வது?” என்று சிந்தித்தவாறே வந்தவனுக்கு கேமராவில் சிறு உருவமாக பார்த்ததை விட நேரில் மிக அருகில் அவள் வறுமையும், பணத் தேவையும் கண்ணில் பட என்ன செய்ய வேண்டும் என்பதை நொடியில் முடிவு செய்திருந்தான்.
கல்லால் அடிப்பதை விட சொல்லால் அடிப்பதுதான் வலிக்கும் என்பார்கள். அது மனதில் ரணத்தை உண்டு பண்ணுவதால் அவ்வாறு கூறப்படுவது. மனவேதனை. அதை நிரந்தரமாக அவளுக்கு கொடுக்கக் கூடியது காதல் மட்டும்தான். காதலிக்கிறேன் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டாள். அதற்கு இந்த நாடக கல்யாணம் உதவும். தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற வலியை விட பெரிய வலி இந்த உலகத்தில் இல்லை. என்று எண்ணினான்.
நகைகளை போட்டுப்பார்த்து அவனுக்கு காட்டியவள் புன்னகைக்க “சிந்தரெல்லாக்கு ராஜ வாழ்க கிடைச்சது யோகம். உனக்கும் அப்படிதான். எல்லாம் கிடைச்சிருச்சு. உன்ன கொண்டு போய் கோபுரத்துல உக்கார வைப்பேன். நீ சந்தோசத்தின் உச்சில இருக்கும் போது திரும்ப உன்ன தெருக்கோடிக்கு இழுத்து வீசுவேன்” என்று நினைத்தவாறு அவளை வெறித்தவன் 
நிலா “என்ன?” என்று சைகையால் கேட்கும் நேரம் “ஒன்றுமில்லை” என்று தலையசைத்து புன்னகைத்தான் துகிலவாணன் மௌரி.  

  

 

Advertisement