Advertisement

அத்தியாயம் 19
நிலாவுக்கு ஸ்கேன் எடுத்த போதே! நிலாவுக்கு இரட்டை குழந்தைகள் தரித்திருப்பதை லேகா அறிந்துக்கொண்டிருந்தாள். தனது வம்சாவழியில் வந்த எல்லா இரட்டையர்களிலும் ஒருவர் எதோ ஒரு காரணத்துக்காக இறந்து போனதால் நிலா வயித்தில் இருக்கும் குழந்தை இரட்டை என்று நிலாவிடமே! லேகா சொல்லவில்லை.
குழந்தை உண்டானதையே! அறிந்திருக்காத வாணனுக்கு அது இரட்டை குழந்தை என்று தெரிய சந்தர்ப்பமும் அமையவில்லை. அவன் தான் நிலாவை ஒரு தடவையாவது மருத்துவரிடம் அழைத்து சென்றிருக்கவில்லையே!
சுசிலா தனக்கும் இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று ஆவலாக காத்திருந்ததாக கூற அப்பொழுது வாணனுக்கு புரியாத ஒன்று லேகா பேசும் பொழுதுதான் புரிந்தது. தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள அத்தையிடமே! கேள்விகளை தொடுத்தான் வாணன்.
“இளையநிலா… நிலாவோட ரெட்டையா? நம்ம குடும்பத்து ஆண்களாலதான் ரெட்டை குழந்தை பிறக்குதுனு நினைச்சுகிட்டு இருக்காங்க ஆனா அது அப்படி இல்ல. வெளில திருமணம் செஞ்சு பொண்ணுகளோட மரபணுனாலதான்னு நீங்க நிரூபிச்சிட்டீங்க, அப்படித்தானே!” லேகாவிடம் தெளிவாகவே! கேட்டிருந்தான் வாணன்.
“ஆமாம்” என்று தலையசைத்து லேகா “எங்க வம்சத்துல யாரும் வெளில பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்ததா சரித்திரமே! இல்ல. விஞ்ஞானமே! வளர்ச்சியடையாத காலத்துல இருந்து நம்பப்பட்டது எல்லாம் ஆண்கள் கைலதான் இருக்கு என்பது மட்டும்தான். இரட்டை குழந்தைகள் பிறக்கிறது வரம்னுதான் நினைச்சாங்க, ஆனா பிறக்கும் குழந்தைகள்ல ஒரு குழந்தை இறந்தும் போகுது. எதோ! சாபம்னு சொன்னாங்க. என்னனு தெரியல. பூஜை பரிகாரம்னு எல்லாம் பண்ணி பார்த்தாச்சு ஒரு பலனும் இல்ல. நான் பெத்த பொண்ணு வர நடந்திருச்சு” என்ற லேகா விசும்பலானாள்.  
அத்தையை சமாதானப்படுத்தும் எண்ணமெல்லாம் வாணனுக்கு தோன்றவே! இல்லை. “என் பசங்களுக்கு ஒன்னும் ஆகாது” என்ற வாணனுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் ஆட்டம் காணத்தான் செய்தது. 
மனதை திடப்படுத்திக் கொண்டவன் “உங்களுக்கு பிறந்தது ஒரு குழந்தைனு சொன்னீங்க? அதை ஈஸ்வரன் எடுத்துக்கொண்டு போனதா சொன்னீங்க? அப்போ இரட்டை குழந்தை எப்படி வந்தது?” வாணனுக்கு என்னதான் நடந்தது என்று இன்னும் புரியவில்லை. 
“நான் உண்டானது எனக்கு எப்படி தெரியலையே! என் வயித்துல இருக்குறது ரெட்டை குழந்தைனு கூட தெரியாம இருந்துட்டேன். எங்க அம்மா என்ன கண்டு பிடிச்சி குழந்தையை கொன்னுடுவாங்களோ! என்ற அச்சத்துலையே! மறஞ்சி வாழ முயற்சி செஞ்சதுல ஒழுங்கா செக்கப்புக்கு கூட போகல. குழந்தை பிறந்த அழும் சத்தம் மட்டும் கேட்டது அப்பொறம் மயக்கத்துக்கு போய்ட்டேன். கண்முழிச்சா குழந்தையை காணோம். பிறந்தது பெண் குழந்தைனு மட்டும் தெரிஞ்சிகிட்டேன். அப்போ இருந்த மனநிலைல அம்மாதான் என் குழந்தையை ஏதாச்சும் பண்ணி இருப்பாங்கனு தேடி அலைஞ்சேன்.
அவங்க எதுவும் பண்ணலன்னு கண்டுபிடிக்கவே! எனக்கு ரெண்டு வருஷம் ஆச்சு. அப்பொறம் என் குழந்தைக்கு என்னதான் ஆச்சுன்னு கண்டுபிடிக்க ரெண்டு வருஷம் போச்சு. ஈஸ்வரன்தான் கடத்திட்டான்னு கண்டு பிடிச்சதும் அவனை தேடினா அவன் இருக்குற சொத்தெல்லாம் வித்துட்டு அந்த ஊர விட்டு போய்ட்டான்.
பவானியோட தாத்தா உயில்படி பவானிக்கு ஏதாவது ஆகிட்டாளோ! பவானி ஈஸ்வரனை பிரிஞ்சி போனாலோ! சொத்து முழுக்க பவானிக்கு மட்டும் சொந்தம். இல்லனா ஆஸ்ரமத்துக்கு போயிடும்னு எழுதி இருக்குறாரு. அதனால ஈஸ்வரனால பவானிய டிவோர்ஸ் பண்ண முடியல. எக்சிடன்டுல பவானியால குழந்தை பெத்துக்க முடியாம போச்சு. பவானி ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம்னு சொல்லி இருக்கா போல, யாரோ! பெத்த ஊரு, பேர் தெரியாத குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஈஸ்வரனுக்கு இஷ்டமில்ல. சொத்தும் வேணும். வாரிசும் வேணும். அதனாலயே! என்ன தேடி கண்டு பிடிச்சி என் குழந்தையை கடத்தி இருக்கான்.
இதுல வேடிக்கை என்னனா? நான் பொண்ணு பொறந்தா என் பேருக்கு ஏத்தா மாதிரி இளையநிலானு பேர் வைக்கணும், பையன் பொறந்தா அண்ணன் பேருக்கு ஏத்தா மாதிரி ஆதவன்னு பேர் வைக்கணும் என்றும் ஆசபட்டேன். அத ஈஸ்வர்கிட்டயும் ஒருதடவை சொல்லி இருக்கேன். அதே பேர அவன் என் பொண்ணுக்கு வச்சிருக்கான்”
“என்ன சொல்லுறீங்க?” வாணனுக்கு எதோ! புரிவது போல் இருக்க
“ஆமா வாணா… நீ சின்ன வயசுல சந்திச்சது ஈஸ்வர் வளர்த்த இளையநிலாவதான். உருவத்துல மட்டுமல்ல பெயருளையும் ரெண்டு பேரும் பங்கு போட்டுக்கிட்டாங்க.
“அப்போ என் மனைவி நிலா…?”  என்று வாணன் கேட்கும் பொழுதே! அவன் குரல் நடுங்கித்தான் ஒலித்தது. அன்று அவன் அன்னையை காப்பாற்ற வேண்டும் என்று நிலா எனும் இளையநிலாவை தள்ளி விட்டதால்தான் அவள் தலையில் அடி பட்டு கோமாவுக்கு சென்று இறந்து விட்டாள். 
யாரை பழிவாங்க வேண்டும் என்று இத்தனை வருடங்களாக காத்துக் கிடந்தானோ! அவளை எட்டு வயது சின்ன பெண்ணாக இருக்கும் பொழுதே! கொன்றே! விட்டான். அவள் வேறு யாருமில்லை அவனுடைய சொந்த அத்தை மகள். இரத்த சொந்தம் என்பதால் தானோ! அவளை காணும் பொழுது அவனை அறியாமல் ஒரு  ஈர்ப்பு அவனுள் எழுந்து அவளின் பக்கம் இழுத்து சென்றது. அது அவள் மீதான பாசம். அவள் செய்கைகளால் பாசம் போய் வாணனின் கோபம் தலை தூக்கி அவளை மாய்த்தே! விட்டதே!  அது மட்டுமல்லாது  உயிரோடு இருக்கும் இளையாவை கூட…. கண்மண் தெரியாத கோபத்தால் என்னவெல்லாம் செய்து விட்டேன். என்னவெல்லாம் பேசி விட்டேன். 
இதனால்… இதனால்தான் உயிரோடு இருக்கும் இளையா இறந்து போன நிலா.. என்று நான் நினைத்தாலும் பரவாயில்லை அத்தை உண்மையை சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். பெத்த மகளுக்கு இவ்வளவு கஷ்டத்தை கொடுத்துட்டுத்தேனு தெரிஞ்சும் எப்படி இவங்களால என் மேல பாசம் காட்ட முடிஞ்சது. என்னால்தான் பெத்த மகளை தத்தெடுத்ததாக கூறினார்களா? ஏன் லேகா பவானியை பார்த்து கலவரமடைந்தாள் என்று இப்பொழுது வாணனுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது. 
பவானி அம்மா நிலாவை பார்த்தாலும் எந்த பாதிப்பும் இல்லை. நிலா பவானி அம்மாவை பார்த்தாலும் எந்த பாதிப்பும் இல்லை. நான் பார்த்தால்தான் இந்த உண்மை எல்லாம் வெளியே! வரக் கூடும் என்று என்னை நினைத்துதான் அத்தை அச்சம் கொண்டிருக்கிறார்கள். எனக்காத்தான் யோசித்திருக்கிறீர்கள். மனமுடைந்தவனாக அமர்ந்து விட்டான் வாணன். 
வாணனின் மனதில் நடக்கும் போராட்டங்களை அறியாமல் லேகா இளையாவை பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.
“இளையநிலா எனக்கு பொறந்தா என்பது கூட எனக்கும் தெரியல, அவள வளத்தவங்களுக்கும் தெரியல. அவளுக்கும் தெரியல. என் வயித்துல கிடந்த பாவத்துக்காக கஷ்டத்தை மட்டுமே! பார்த்துட்டா. நீ இல்லனா அவள நான் கண்டு பிடிச்சிருக்கவே! முடியாதே! இல்ல. இல்ல. நீதான் அவள கண்டு பிடிச்சு என் கிட்ட சேர்த்துட்ட” என்ற லேகா வாணனை பார்த்து புன்னகைக்க,
அத்தையை ஏறிட்டவன் “என்ன சொல்லுறீங்க? நானா இளையாவ கண்டு பிடிச்சேன்?” லேகா என்ன சொல்கிறாள் என்று வாணன் புரியாது பார்க்க லேகா சொல்ல ஆரம்பித்தாள். 
நிலாவை நீ திருமணம் பண்ணது ஜெகன் மூலம் தெரிந்து கொண்ட போது எந்த மாதிரியான பொண்ண நீ கல்யாணம் பண்ணி இருக்கானு தேடிப்பார்க்க வேண்டிய பொறுப்பும், கடமையும் எனக்கு இருந்தது. அதுக்காகவே! அவள பத்தி தேடச் சொன்னேன். அவ போட்டோ பார்த்தப்போவே! நிலா வளர்ந்தா இப்படித்தான் இருப்பான்னு என் மனசுல ஒரு படபடப்பு. காரணமே! இல்லாம மனசு அடிச்சுக்கிட்டே இருந்துச்சு. இதற்கு முன்னாடியும் அப்படி ஆகி இருக்கு ஆனா எதனாலன்னுதான் தெரியல” என்ற லேகா அதற்கான காரணத்தை வாணனுக்கு சொல்ல விளையவில்லை. அவன் முகம் பார்த்து விட்டு சற்று நேரம் அமைதியானாள்.
வாணனுக்கு புரிந்தது இளையாவுக்கு வாணனால் நேர இருக்கு கொடுமைகளை முன் கூட்டியே! லேகாவுக்கு தெரிந்திருக்கிறது. அதே! போல் அவள் வளர்ப்பு தந்தை சொத்துக்கள் இழந்த போதும், பிறைநிலா இறந்த பொழுதும் அன்னையாக துடித்திருப்பாள்.
“இளையநிலா யாரு என்னனு விசாரிச்சப்போதான் அதிர்ச்சியான ஒரு விஷயம் என் பார்வைக்கு கிடைச்சது. அது அவ நான் நிலா பிரசவிச்ச அதே! ஹாஸ்பிடல்ல பிறந்திருக்கிறா என்பதுதான். எங்கயோ! தப்பு நடந்திருக்கிறது. இளையநிலா என் பொண்ணாதான் இருக்கணும்னு என் மனசு அடிச்சு சொல்லிகிட்டே இருந்தது. அத பத்தி விசாரிக்க, இளையநிலாவை வளர்த்தவங்களும் இப்போ உயிரோட இல்ல. அதனால ஹாஸ்பிடல் போய் விசாரிச்சேன்.
எனக்கு பிரசவம் பார்த்த யாருமே! இப்போ இந்த ஹாஸ்பிடல்ல இல்லனு தெரிஞ்சதும் அவங்கள தேட ஆள் ஏற்பாடு செஞ்சேன். ஆனாலும் என் நல்ல நேரம் ஒரு நர்ஸ் கிடைச்சாங்க. அவங்க சொன்னது எனக்கு மேலும் சந்தகத்தை உண்டு பண்ணிருச்சு”
“அப்படி என்ன சொன்னாங்க?” வாணனுக்கு இந்த மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும்வரையில் பொறுமையில்லை.
அவங்க அன்னக்கி டியூட்டில இல்லையாம். ஆனாலும் டாக்டரும் ஒரு பெர்சன்ட்டோட ஹஸ்பண்டும் பேசிகிட்டு இருந்தது அவங்க காதுல விழுந்ததாம். “அந்த பொண்ணு தனக்கு பொண்ணு பொறந்தா இளையநிலானு பேரு வைக்கணும்னு ஆசபட்டா…னு டாக்டர் சொல்ல அவரு என் மனைவி பெயர் பிறைநிலா ஒன்னும் பிரச்சினை இல்ல. நான் பாத்துக்கிறேன்னு சொல்லி இருக்கிறார். அந்த நர்ஸுக்கு இத்தனை வருஷம் கழிச்சியும் சரியா அவங்க பேசியதும், பெயர்களும் நியாபகத்துல இருந்தது நான் பண்ண புண்ணியம்”
“இதுல என்ன சந்தேகிக்கும்படியா இருக்கு?” என்று யோசித்த வாணனுக்கு சகலவும் புரிவது போல் இருந்தது.
“அது மட்டுமல்ல… அந்த நேரத்துலதான் ஈஸ்வர் பதுங்கி பதுங்கி என் ரூமுக்கு போய் இருக்கான். அதையும் இந்த நர்ஸ் பாத்திருக்காங்க, யாருனு கேட்டதுக்கு என் மனைவிதான். கோபிச்சு கிட்டு போய்ட்டா… கண்முழிச்சா கத்துவானு வேற சொல்லி இருக்கான் ராஸ்கல்”
“அப்போ நீங்க நிலா தேடும் பொழுது ஏன் இந்த நர்ஸ் இத உங்க கிட்ட சொல்லல” வாணன் சந்தேகமாக கேக்க
“என் கெட்ட நேரம் ஈஸ்வரன் குழந்தையை தூக்கிட்டு போகத்தான் வந்திருக்கானு தெரியாம அந்தம்மாக்கு வந்த போன் கால எடுக்கத்தான் அவங்க போய் இருக்காங்க. போன்ல அவங்க அம்மாக்கு எக்சிடண்ட் ஆகிருச்சுனு செய்தி வரவும் உடனே! கிளம்பி போனவங்க ஆறு மாசம் கழிச்சுத்தான் வேலைக்கே! வர வேண்டிய சூழ்நிலையாம். கணவனுக்கு வேற ஊர்ல மாற்றல் கிடைச்சதும் இவங்களும் அங்க போய்ட்டாங்களாம். இப்போ ஒரு ஐஞ்சு வருஷமாத்தான் சொந்த ஊருல இருக்காங்களாம்” விதி எவ்வாறெல்லாம் சாதி செய்திருக்கிறது என்று நொந்தவாறே பேசினாள் லேகா.
வாணனுக்கு என்ன சொல்வதென்றே! தெரியவில்லை. ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையே! நரகமாவது என்பது இதுதானா? காதலித்து கட்டிய கணவன் கயவன் என்று அறிந்துகொள்கிறாள். அறிந்துகொள்ளும் பொழுது அவன் குழந்தையை சுமந்துகொண்டிருக்கிறாள். அவன் குழந்தை என்று வெறுக்காமல் பாசமாக அதை கையில் எந்த காத்திருந்தாள் இரண்டு குழந்தைகளை பெற்று இரண்டையும் ஒரே நாளில் தொலைத்து. பெற்ற குழந்தை ஒன்றல்ல இரண்டு என்று கூட அறியாமல் இருந்திருக்கிறாள்.
ஆறுதலாக தோள் சாய தந்தையுமில்லை. அரவணைக்க, அண்ணனும் இல்லை. அன்பாக அக்கறையாக பேச அன்னைக்கு மனம் இல்லை.
 பெற்ற பெண்ணை தேடி எட்டு வருடகால கழித்து கிடைத்த உடன் அந்த குழந்தை கண்முன் இறந்து போகிறாள். எவ்வளவு கஷ்டங்களை இந்த அத்தை தாங்கிக் கொண்டிருப்பாள். பலவருடங்கள் கழித்து கிடைத்த மகளிடம் தான் தான் உன்னை பெற்ற அன்னை என்று சொல்ல முடியாதபடி பாசம் வைத்த அண்ணன் மகன் செய்த்து வைத்திருக்கும் காரியம் அவளை தடுத்துக் கொண்டிருந்திருக்கிறது. வாணனின் கண்களின் ஓரம் கண்ணீர்த்துளி எட்டிப்பார்க்க அழுவதற்கான நேரம் இது அல்ல என கனத்த இதயத்தையும், அடைத்த தொண்டையையும் கனைத்து சரி செய்துகொண்டான்.             
 “அந்த நர்ஸ் சொன்னதை வச்சி பார்த்தா எனக்கான பதில் அந்த டாக்டர் கிட்டாதான் இருக்கும்னு அந்த டாக்டரை தேடினேன். அவர் அமெரிக்கால செட்டில் ஆனதா கேள்விப்பட்டு அமேரிக்கா போக கூட ஏற்பாடு செஞ்சேன். ஆனா அவரே! இங்க வரார் என்றதும் உடனே! போய் சந்திச்சேன். அவருக்கு என்ன பார்த்ததும் அடையாளம் தெரிஞ்சிருச்சு. செஞ்ச பாவம் அவ்வளவு சுலபத்துல மறக்குமா? என்ன?” வெறுமையான புன்னகையை சிந்திய லேகா டாக்டருடனான சம்பாஷணையை வாணனிடம் கூறினாள்.
லேகாவை பார்த்து டாக்டர் பழனிச்சாமி அதிர்ந்த முகபாவனையை கொடுக்க “வணக்கம் டாக்டர் என்ன பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டீங்க போல” என்றவாறு அவரின் முன் இருந்த இருக்கையில் அமர,
லேகாவின் உடை, நடை, தோரணையிலிருந்த மாற்றத்தைக் கண்டு அன்று பார்த்த ஏழை வீட்டுப்பெண் இவளா? என்று கூர்ந்து பார்த்தவர் “எப்படிம்மா? இருக்க? எத்தனை குழந்தைகள் இருக்காங்க? கணவன் என்ன செய்யிறாரு?” என்று விசாரித்தார்.
கேலியாக புன்னகைத்த லேகா “என்னோட தோற்றத்தை பார்த்து என்ன காதலிச்சு கட்டிக்கிட்டவன் நான் ஒரு ஏழைப் பெண்ணு நினைச்சி குழந்தையை கொடுத்துட்டு ஒரு பணக்காரிய கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்ட்டான். போனவனுக்கு அந்த பொண்ணால வாரிச பெத்து கொடுக்க முடியாது, டிவோர்ஸ் பண்ணாலோ! அவளை தீர்த்து கட்டினாலோ! சொத்து போயிடும்னு என் குழந்தையை கடத்திக் கொண்டு போய் வளர்த்துக்கிட்டு வந்தான். அந்த குழந்தையும் எட்டு வயசுல இறந்து போச்சு”  என்று சொல்ல
“என்னமா சொல்லுற?” அதிர்ந்த டாக்டர் பழனிச்சாமிக்கு வியர்க்க ஆரம்பித்திருந்தது.
“என்ன பண்ணுறது டாக்டர் என் தோற்றத்தை பார்த்து நான் ஒரு ஒண்ணுமில்லாதவனு பாக்குறவங்களே! முடிவு பண்ணிக்கிறாங்க, அப்படி நீங்களும் முடிவு பண்ண போய் தானே! எனக்கு பொறந்த ரெட்டை குழந்தைல ஒன்ன எனக்கு தெரியாமலே! தத்து கொடுத்தீங்க?”  என்றவள் குரலில் சீற்றம் மட்டுமே! இருந்தது.
ஆடிப்போன டாக்டர் பழனிச்சாமி என்ன சொல்வதென்று தடுமாற “இங்க பாருங்க டாக்டர் இப்போ கூட உங்கள கோட் கேஸ்னு இழுத்து சந்தி சிரிக்க வைக்க முடியும். ஆனா நீங்க பண்ண காரியத்தால் என் பொண்ணு உசுரோட இருக்காளோனு எனக்கு தோணுது. அதனாலயே! உங்கள மன்னிச்சி விட்டுடுறேன். நடந்த உண்மைய மட்டும் எனக்கு சொல்லிடுங்க” என்று மிரட்டும் தொனியில் பேச டாக்டர் பழனிச்சாமி வாய் திறந்தார்.
பிறைநிலாவுக்கு இருக்கும் மரபணு கோளாறால் ஒரு குழந்தையை சுமப்பது அவள் உயிரையே! கொல்லும் என்று மருத்துவர் கூறி இருந்த நிலையில் பிடிவாதமாக கர்ப்பம் தரித்திருந்தாள் அவள்.
குழந்தைக்கு ஏதாவது ஆகிவிட்டால் தானும் உயிரோடு இருக்க மாட்டேன் என்று கணவன் சண்முகவேலை மிரட்டித்தான் கர்ப்பத்தை கலைக்க விடாமல் பத்திரமாக பாதுகாத்தாள்.
தனக்கு எல்லாமே! அந்த குழந்தைதான். தன் உயிர்மூச்சே! அந்த குழந்தைதான் என்று வாழலானாள் பிறைநிலா. ஆனால் பிரசவத்தில் பிறைநிலா பெற்ற ஆண்குழந்தை இறந்தே! பிறந்திருக்க, நண்பன் சண்முகவேலிடம் அதை எவ்வாறு சொல்வதென்று கலங்கியவாறே வந்து நின்றார் மருத்துவர் பழனிச்சாமி.
“பிறை எப்படி இருக்கா? அவளுக்கு ஒண்ணுமில்லேல? வலிப்பு எதுவும் வரல இல்ல” மனைவிக்கு இருக்கும் பிரச்சினையால் அவளுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது என்று வேண்டாத தெய்வமே! இல்லை. நண்பனைக் கண்டதும் மனைவியை பற்றித்தான் முதலில் விசாரித்தார் சண்முகவேல்.
“ம்ம்.. அவங்களுக்கு ஒண்ணுமில்ல நல்லா இருக்காங்க” என்ற பழனிச்சாமி நண்பனின் முகம் பார்க்க மறுக்க
“என்ன டா… என்ன பிரச்சினை” என்று நண்பனை உலுக்கலானார் சண்முகவேல்.
“என்ன மன்னிச்சுடு டா உன் குழந்தையை என்னால காப்பாத்த முடியல டா..”  கண்கள் கலங்கி நின்றார் மருத்துவர். 
“ஐயோ பிறை… இத அவகிட்ட நான் எப்படி சொல்வேன்? அதிச்சில உசுரையே! விட்டுடுவாளே!” என்ற சண்முகவேல் அங்கேயே! அமர்ந்து அழ ஆரம்பித்திருக்க, நண்பனை சமாதானப்படுத்த முடியாமல் அருகில் அமர்ந்திருந்தார் மருத்துவரான பழனிச்சாமி.
சிறிது நேரத்தில் லேகா பிரவேச அறைக்குள் அழைத்துச் செல்லப்பட பழனிச்சாமி விரைந்தார்.
வலியிலும் லேகா “டாக்டர் எனக்கு பொண்ணு பொறந்தா இளையநிலானு பேர் வைக்கணும், பையன் பொறந்தா ஆதவன்னுதான் பேர் வைக்கணும், நான் மயக்கமடையக் கூடாது வலிய தங்கிப்பேன்” என்று கத்தியவாறே வர அவளை சமாதானப்படுத்துவது அங்கிருந்தவர்களுக்கு பெரும்பாடானது.
அவளுடைய பேச்சிலையே! அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது ஏழைவீட்டுப் பெண் ஒருவனிடம் ஏமாந்து போய் இருக்கிறாள். மனவேதனையில் அவனை பழிவாங்கத் துடிக்கிறாள் என்பது மட்டுமே!
லேகா இரட்டைக் குழந்தையை பிரசவித்து மயக்கத்துக்கு சென்றதும் டாக்டர் பழனிச்சாமிக்கு அந்த விபரீதமான யோசனை தோன்றியது. லேகாவின் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை தூக்கிக் கொண்டு நண்பனிடம் ஓடோடி வந்தவர்
“வேலு பிறைக்கு இனிமேல் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. பிறந்த குழந்தையும் இறந்து போயிருச்சுனு சொன்னா ரொம்ப கஷ்டப்படுவா…. நான் சொல்லுறத கேளு இந்த குழந்தைதான் பிறைக்கு பிறந்த குழந்தைனு சொல்லு” என்று நண்பனின் கையில் கொடுக்க
சண்முகவேலுக்கு நிலாவை கையில் ஏந்திய பொழுது நெஞ்சமெல்லாம் நிறைந்து போனது “இந்த குழந்தையோட அம்மா…” ஒரு அன்னையிடமிருந்து குழந்தையை பிரிப்பது மகா பாவம் என்று அறிந்திருந்த அந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதர் உடனே! கேட்டிருக்க,
நண்பனை பற்றி அறிந்திருந்த பழனிச்சாமியும் “அனாதை பொண்ணுதான். இறந்து போச்சு.  அந்த பொண்ணு தனக்கு பொண்ணு பொறந்தா இளையநிலானு பேரு வைக்கணும்னு ஆசபட்டா” என்று சொல்ல
நிம்மதி பெருமூச்சுவிட “என் மனைவி பெயர் பிறைநிலா ஒன்னும் பிரச்சினை இல்ல. நான் பாத்துக்கிறேன்” என்றார்.
“என் ஆசைப்படி, நீங்க சொன்னபடியும் அதே! பெயரைத்தான் என் பொண்ணுக்கு அவங்க வச்சிருக்காங்க போல” என்று லேகா கேட்க
நண்பனின் குழந்தையின் பெயரிடும் விழாவுக்கு சென்றதால் பழனிச்சாமிக்கு அது தெரியும் என்பதால் “இது… இது… எப்படி உனக்குத் தெரியும்?” என்று அதிர்ச்சியடைய
“என்ன டாக்டர் நான் பெத்த பொண்ணு பெயர் கூட நான் தெரிஞ்சிக்க கூடாதா? ஆமா உங்க நண்பன் குடும்பம் எப்படி இருக்காங்க?” என்று லேகா கேக்க
“அவனுக்கென்ன பணக்காரன் நல்லாத்தான் இருப்பான். நான் அமேரிக்கா போனதுல சந்திக்க முடியல. உன் பொண்ணு ராணி மாதிரி இருப்பா. இப்போ கல்யாணம் கூட ஆகி இருக்கும். குழந்தை குட்டின்னு சந்தோசமா இருப்பா… பெத்த அம்மானு நீ போய் நின்னு குட்டையை குழப்பாத” கொஞ்சம் கூட தான் செய்ததில் தவறு இல்லை என்பது போல் பேச
“உங்க நண்பன் நம்பக் கூடாதவங்கள நம்பி தொழிலை இழந்து இறந்ததும் உங்களுக்கு தெரியாது. அந்த ஷாக், ஜெனடிக் டிசோடர்னு பிறைநிலா இறக்கும்வரைல கட்டில்ல இருந்ததும் உங்களுக்கு தெரியாது. என் பொண்ணு அனாதை போல ஆசிரமத்துல வளர்ந்ததும், ஒரு நேரம் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டதும், ஒழுங்கான துணிகூட இல்லாம கஷ்டப்பட்டதும் உங்களுக்கு தெரியாது. இது எதுவும் தெரியாம, என் கிட்டயே! என் மக ராணி மாதிரி வாழறானு சொல்றீங்களா? நான் யார்னு உங்ககளுக்கு முதல்ல தெரியுமா? மௌரிய வம்சம் எங்க வம்சம்” அதற்கு மேல் எதுவும் லேகா தன் குடும்பத்தை பற்றி பறை சாற்ற வேண்டி அவசியம் இருக்கவில்லை.
“என்ன வேல் இறந்துட்டானா?” காலுக்கு மேல் காலை போட்டுக்கொண்டு பேசிக்கொண்டிருந்த டாக்டர் பழனிச்சாமியின் கால் தானாக இறங்கியது. அது மௌரி என்ற பெயருக்கு உண்டான மரியாதை அல்ல அந்த வம்சத்தில் வந்தவர்கள் வாழ்ந்த முறைக்கு கிடைத்த மரியாதை. நாட்டுக்காகவும், ஊர் மக்களுக்காகவும் செய்தவைகளுக்காக கிடைக்கும் மரியாதை.
அது ராஜபரம்பரையானாலும் என்ன? சத்ரிய வம்சமானாலும் என்ன? அந்த வம்சத்தில் பிறந்தவன் என்று பெருமை பாடுவது அல்ல அழகு. தான் என்ன செய்து இருக்கின்றோம் என்பதுதான் பெருமை. லேகா என்ன மாதிரியான உதவிகளை ஊரு மக்களுக்காக செய்து கொண்டிருக்கின்றாள் என்பதை அறிந்த பின் தான்  பழனிச்சாமிக்கு அவள் மீது மரியாதை வந்தது. அதற்கு அவள் கூறியது தான் இந்த வம்சம் என்று மட்டுமே! காரணம் அந்த வம்சத்தில் வாழ்ந்தவர்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருந்தார்கள். அது மக்களுக்காக வாழ்வதுதான். 
“அந்த நேரத்துல நண்பனுக்கு உதவி செய்யணும்னு உங்க நோக்கம் இருந்திருந்தாலும். நீங்களும் ஒரு சுயநலம் பிடிச்ச மனிதர் தான் டாக்டர்” என்ற லேகா அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.       
“உண்மை என்னானு தெரியாம அவசரப்படக் கூடாது, எந்த முடிவுக்கும் வரக் கூடாதுனு இருந்தேன். அதே! மாதிரி நிலாவ வளர்த்தவங்க மேல எந்த தப்பும் இல்லனு தெரிஞ்சி போச்சு” என்றாள் லேகா.
“அதான் உங்க பொண்ணு உங்க கிட்ட வந்து சேர்ந்துட்டாளே! அத்த அவகிட்ட உண்மைய சொல்லுங்க. நீங்கதான் அவள பெத்த அம்மானு சொல்லுங்க. எனக்காக தான் நீங்க இத்தனை நாளா எல்லா உண்மையையும் மறச்சி வச்சீங்கனா? இன்னக்கி எல்லா உண்மையையும் நான் தெரிஞ்சிகிட்டேன்.
என் அவசர புத்தியால. உங்களோட ஒரு பொண்ண இன்னக்கி நீங்க இழந்து நிக்கிறீங்க, என்னால இன்னொரு பொண்ணையும் இழக்க பாத்தீங்க? எப்படி அத்த உங்களால என்ன மன்னிக்க முடிஞ்சது. ஒரு வார்த்த என்கிட்டே சொல்லி இருக்கலாம்ல? என்ன மன்னிச்சிடுங்க அத்த. அம்மா இதுக்குதான் பழிவாங்கக் கூடாது தப்புனு சொல்லுறாங்க. கடைசில நிலா உங்க பொண்ணாகிட்டாளே!” இவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகையை லேகாவின் கையை பிடித்துக்கொண்டு இறக்கி வைத்திருந்தான் வாணன்.
“நிலாவோட விதி அவ அப்பா கூட இருந்து கெட்டவளா வாழ்ந்து மறையணும்னு இருந்திருக்கு. அந்தாளு கூட இருந்தா அவன் புத்திதானே! வரும். நீ என் அண்ணன் பையன் வாணா… பார்க்க ஒரே மாதிரி, பேர் கூட இளையநிலானு இருந்தா நீயும்தான் என்ன செய்ய?  நீ தெரியாம பண்ண தப்புக்கு உனக்கு தண்டனை கொடுக்க என்னால முடியாது. என் பொண்ணு கூட நீ சந்தோசமாக வாழணும்னு தான் என்னோட ஆச. நடந்த எதையும் நினைக்காம நிலாவோட சந்தோசமா வாழப்பாரு. இது எதுவும் நிலாக்கு தெரிய வேணாம்” என்று லேகா சொல்ல
“இல்ல… அத்த அவ உங்க பொண்ணுதான்னு நீங்க அவ கிட்ட சொல்லித்தான் ஆகணும்” வாணன் உறுதியாக சொல்ல லேகா மறுத்தாள்.
“ஏன் மா… பெத்த பொண்ண விட உன் அண்ணன் மகன் மேலதான் உனக்கு பாசம் அதிகமா?” என்றவாறு அவர்கள் முன்னால் வந்து நின்றாள் இளையநிலா.
“இவள் எப்பொழுது வந்தாள்? எப்பொழுதிலிருந்து இவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கின்றாள் என்று அதிர்ச்சியாக மனைவியின் முகம் பார்த்தான் துகிலவாணன் மௌரி.

Advertisement