Advertisement

அத்தியாயம் 18
இந்த பத்து நாட்களாக வாணனுடைய வாழ்க்கை வசந்தமாக மாறி இருந்தது. நிலாவிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று வாணனுக்கு எண்ணம் இருந்த போதிலும் அவள் இப்பொழுது இருக்கும் நிலையில் எதுவும் பேச வேண்டாம் பிரவசம் நல்ல முறையில் நடந்து குழந்தை பிறக்கட்டும் பேசி அவள் பதட்டமடைந்து பிபி அதிகரித்து பிரவசத்தில் சிக்கல் ஏற்படலாம் என்று லேகா வலியுறுத்தி கூறியதில் வாணனும் நடந்த எதையும் பற்றி பேச முயற்சிக்கவில்லை.
நிலாவும் அவனோடு நல்ல முறையில் நடந்துகொண்டாலும் கொஞ்சம் குழம்பிய மனநிலையில் இருந்தாலும் ஏன் அவன் அவளிடம் பழிவாங்கவென்றுதான் திருமணம் செய்தான் என்று சொன்னதை கேட்கவுமில்லை. அறியமுயற்சிக்கவுமில்லை.
நிலா அவனை விரும்புகிறாள் என்று அவனுக்கு ஏற்கனவே! தெரிந்த விஷயம் தானே! நிலா அவனை நன்றாக புரிந்து வைத்திருக்கின்றாள். அன்னையை போல் நிலாவும் ரொம்பவும் பொறுமையானவள் என்று எண்ணலானான் வாணன்.
தனது முட்டாள்  தனத்தால் கையில் கிடைத்த சொர்க்கத்தை இழக்க பார்த்தேனே! என்று தன்னையே! நொந்து கொண்டான் வாணன். எல்லா குழப்பங்களும் தீர்ந்து தங்களது வாழ்க்கை இனி சந்தோசமாகவும் நிம்மதியாகவும் பயணிக்கும் என்று வாணன் நினைக்கும் பொழுதுதான் அவன் அந்த குழந்தைகளின் பொருட்களை வாங்கும் கடையில் பவானியை கண்டான்.
அன்றய பொழுது எவ்வளவு இனிமையாக கழிந்தது என்று மனைவியோடு பேசி மகிழ்ந்து அவள் தூங்கிய பின் குழந்தை பிறக்க மருத்துவர் குறித்துக்கொடுத்த திகதிக்கு இன்னும் நான்கு நாட்கள் தான் இருக்கின்றன என்று சிந்தித்தவாறே கண்ணயர முற்பட்டவனுக்கு மின்னலடித்தது போல் பவானியின் முகம் நியாபகத்தில் வர எழுந்து அமர்ந்து விட்டான்.
“அவங்க அவங்க… நிலாவோட அம்மா இல்ல. நிலா அம்மா ஹாஸ்பிடல்ல இறந்துட்டதா சொன்னாளே!” குழம்பியவன் நிலாவின் முகம் பார்க்க அவள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.
“என்ன நடக்கிறது? நிலாவுக்கு பழசெல்லாம் மறந்து விட்டதா? மறந்து விட்டாலும் பெத்த தாயை மறப்பாளா? மறந்தாலும் அவங்க இவளை வேறொருத்தருக்கு தத்து கொடுப்பங்களா?” வாணனுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவனுடைய கேள்விகளுக்கு யாரிடம் பதில் கேற்பது என்று யோசித்தவனுக்கு லேகாவின் முகம்தான் நியாபகத்தில் வந்தது. “ஆம் அத்த எதற்காக பவனி அம்மாவை பார்த்து கலவரமடைந்தாங்க? அவங்க நிலாவை பார்த்து விடக் கூடாது என்றா? நிலா அவங்கள பார்த்து விடக் கூடாது என்றா? அல்லது நான் அவங்கள பார்த்து விடக் கூடாது என்றா?
அம்மா… அம்மாவும் அங்கதான்! இருந்தாங்க ஏன் அம்மாக்கு அவங்கள அடையாளம் தெரியல. இல்ல. இல்ல… அம்மாக்கு அவங்கள அடையாளம் தெரிய வாய்ப்பில்ல. அம்மா படீல விழுந்து மயக்கத்துக்கு போன பிறகுதான் பவானி அம்மா வீட்டுக்குள்ள வந்தாங்க. அம்மா பேரன்ட்ஸ் டீச்சர் மீட்டிங்க்கு கூட வர மாட்டாங்க, வந்தாலும் பவானி அம்மாவ சந்திக்க வாய்ப்பு அமையாது. அதனால அவங்கள தெரிஞ்சிக்க வாய்ப்பில்ல. அத்த எதையோ! மறைக்கிறாங்க. அவங்க கிட்ட போய் உண்மைய கேட்டா சொல்வாங்களா? சந்தேகம்தான்” என்ன செய்யலாம் என்று யோசனையிலையே! தூங்கியும் போனான் வாணன்.
காலையிலையே! கிளம்பி பவானியை காணச் சென்றான் வாணன். அவனுக்கு பவானியை எங்கு சென்று தேட வேண்டும் என்ற குழப்பம் எதுவுமில்லை. அந்த கடை கண்டிப்பாக பவானியினுடையதாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணினான். அப்படியே! பொருள் வாங்க வந்திருந்தாலும் அவள் அலைபேசி எண்ணை கொடுத்திருப்பதால் அதை வைத்து கண்டு பிடிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் கடைக்கு சென்றான்.
தன்னை பார்த்த உடன் பவானி அடையாளம் கண்டுகொள்ள கூடாதென்று கூலரை கழட்டாது கடைக்குள் நுழைந்தவனுக்கு அவன் நினைத்தது போல் பவானி அங்குதான் அமர்ந்திருந்தாள். தான் நிலா படித்த  பாடசாலையில்தான் படித்ததாக தன்னை அறிமுகம் செய்துகொண்டவன் நிலா நலமாக இருக்கிறாளா? என்று கேக்க பவானி சொன்னதைக் கேட்டவன் அதிர்ந்து அடித்துப் பிடித்து காரியாலயத்துக்கு சென்றவன் நிலா இன்டர்வீவ்யூக்காக கொடுத்திருந்த பெர்சனல் டீட்டைலை தேடி எடுத்துக் பார்க்க அதில் இளைய நிலா சண்முகவேல் என்று தந்தையின் பெயர் இருக்கவே! மேலும் அதிர்ச்சிக்குள்ளானான்.
அவளுடைய புகைப்படத்தையும் நிலா என்ற பெயரையும் கண்ட மாத்திரத்தில் வேறு எதையும் பார்க்காமல் தான் தேடுபவள் தன் காலடிக்கு வந்து விட்டதாக நினைத்த தன் முட்டாள் தனத்தை என்ன வென்று சொல்வது.
லேகா எந்த உண்மையை மறைக்கிறாள் அதை தெரிந்துகொண்டே ஆக வேண்டும் என்று கோபமாக லேகாவை தேடி வீடு வந்தான் வாணன்.  
“அத்த… அத்த…” என்று வாணன் கத்தியவாறு வீட்டுக்குள் வர
“என்ன டா இன்னக்கி ஆபீஸ் போகலையா?” சுசிலா மகனை வழி மறைக்க
“அத்த எங்க?” கலவையான உணர்ச்சிகள் அவன் முகத்தில் தாண்டவமாடிக் கொண்டிருந்தன.
“சந்த்ரம்மா ஊருக்கு கிளம்பி போய்ட்டாங்க” என்று சுசிலா சொன்னதும்
“என்னது? என்ன அவசரம்” வாணனுக்கு சந்தேகம் தான் வந்தது
“போன் வந்தது. அவசரமா கிளம்பிட்டாங்க. ரெண்டு நாள்ல வரேன்னு சொன்னாங்க” சுசிலா சாதாரணமாக சொல்ல வாணனுக்கு லேகாவை அப்பொழுதே! சந்தித்து பேச வேண்டும் என்ற உணர்வு.
“சரி நானும் அப்போ ஊருக்கு கிளம்புறேன். நீங்க ரெண்டு பேரும் பத்திரமா இருங்க” என்றவன் மாடிப்படிகளில் தாவி ஏற
“டேய் டேய்… பிரசவ நாள் வேற நெருங்குதுடா… நான் தனியா இங்க என்ன செய்வேன்” சுசிலா கத்தியவாறே பின்னால் வரலானாள். 
அப்பொழுதும் அக்கறையாக “படீல பார்த்து ஏறுமா…” என்றவாறு தான் வாணன் ஏறி இருந்தான்.   
“இந்த அக்கறைக்கு ஒன்னும் குறைச்சலில்ல. வயசான காலத்துல என்ன பார்க்குறத விட்டுட்டு. உன் பொண்டாட்டிய கவனி” என்ற சுசிலாவின் குரலில் பாசம்தான் கொட்டிக்கிடந்தது.   
வாணன் அறைக்குள் வரவும் நிலா வயிற்றை பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க, பின்னால் வந்த சுசிலா “என்ன நிலாம்மா… என்ன பண்ணுது? ஒரு மாதிரி இருக்க?” என்று கேக்க
“விட்டு விட்டு வலிக்குது அத்த. சாதாரண வலியா இருக்கும்னு நினச்சேன். இப்போ ரொம்ப வலிக்குது. என்னனு தெரியல. பயமா இருக்கு” கண்கள் கலங்கியவாறு நிலா சொல்ல
“அடக்கடவுளே! பிரசவ வலி ஆரம்பிச்சிருச்சுனு கூட தெரியல. துகிலா முதல்ல ஹாஸ்பிடல் போய்டலாம்” பதட்டமடைந்தாள் சுசிலா.
“டிலிவரி டேட்டுக்கு இன்னும் நாலு நாட்கள் இருக்கு அத்த” நிலா புரியாது பேச
“டாக்டர் என்ன கடவுளா… அவங்க சொன்ன தேதிக்கு குழந்தை பொறக்க, வா போலாம்” என்றவாறு சுசிலா ஏற்கனவே! மருத்துவமனைக்கு செல்ல எடுத்து வைத்திருந்த பையை தூக்கிக்கொள்ள, வாணனும் எல்லாவற்றையும் மறந்து நிலாவை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு படியில் பத்திரமாக இறக்கி அழைத்து வந்து வண்டியில் அமர்த்த,  சுசிலா வந்து பின்னாடி அமர்ந்ததும் வண்டியை மருத்துவமனைக்கு கிளப்பி இருந்தான் வாணன்.
மருத்துவமனைக்கு செல்லும் பொழுதே! நிலாவுக்கு வலி அதிகமாக இருக்க, பொறுக்க முடியாமல் நிலா கத்த ஆரம்பித்தாள்.
“கொஞ்சம் பொறுமையாக இரு நிலாம்மா இதோ! ஹாஸ்பிடல் வந்திடும்” என்று சுசிலா அவளை சமாதானப்படுத்தியவாறே மருத்துவமனைக்கும் வந்து சேர வாணன் அலைபேசியில் மருத்துவரோடு உரையாடியபடியே! வந்ததால் மருத்துவமனைக்குள் நுழைந்த உடனே! நிலா சக்கர நாட்காலியில் அமர்த்தப்பட்டு பிரசவ அறைக்கு கொண்டு செல்லப்பட்டாள்.   
சுசிலா நிலாவோடு செல்ல வாணன் சில காகிதங்களில் கையொப்பமிட வேண்டும் என்று வேறு பக்கம் செல்ல “அம்மா பாத்து… சீக்கிரம் வந்துடுறேன்” என்றவாறே ஓடி இருந்தான்.
வாணன் வந்து சேரும் பொழுது சுசிலா கடவுளை வேண்டியவாறே! இருக்க நிலா கத்தும் சத்தம் மட்டும் தான் கேட்டது.
வாணனுக்கு பதட்டமாகவே! இருந்தது. கைகள் இரண்டையும் ஒன்று சேர்த்து வாயையும் மூக்கையும் மூடியவாறு, கால்களை இரண்டையும் வேகமாக ஆட்டியவாறு அமர்ந்திருந்தவனுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனைக் கூட தோன்றவில்லை.
இவ்வளவு வலியோடுதான் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுக்கின்றாளா? சட்டென்று அன்னையை திரும்பிப் பார்த்தவன் சுசிலாவின் கையை பிடித்துக்கொண்டான்.
“என்ன டா துகிலா  உன் கை இவ்வளவு சில்லுனு இருக்கு. பயப்படாதடா நல்லபடியா குழந்தையை பெத்தெடுத்து நிலா வந்துடுவா” சுசிலா மகனின் கையை ஆருதகால பிடித்துக்கொள்ள
“நீயும் இந்த மாதிரிதான் கத்தினியா? ரொம்ப வலிச்சதா? நான் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா?”  கண்கள் கலங்கியவாறே கேக்க
“என்ன டா துகிலா…  குழந்தையை முகத்தை பார்க்கும் போது ஒரு அம்மாக்கு இந்த வலியெல்லாம் ஒரு வலியே இல்ல. வலி கூட மறந்து போகும். சுகமான உணர்வும், சந்தோஷமும் மட்டும் தான் டா நெஞ்சம் முழுக்க நிறைஞ்சி இருக்கும்” என்று புன்னகைக்க
“நிஜமாவா சொல்லுற?”
“ஆமா நிலா கிட்ட கேட்டு பாரேன் அவளும் அதைத்தான் சொல்லுவா” என்ற சுசிலாவின் முகத்தில் விரிந்த புன்னகை.
இவ்வளவு நேரமும் பதட்டத்தோடு இருந்த வாணனின் முகம் இறுக, கேக்கலாம்மா…” என்றான் கவலையாக
“டேய் சந்த்ராம்மாக்கு போன் போடுடா… நிலா ஹாஸ்பிடல்ல சேர்த்ததை சொல்லு. கோபிச்சிக்க போறாங்க” சுசிலா பதற
“ஆமா கண்டிப்பா கோப பாடுவாங்க” என்றவன் சந்திராவை அழைத்து நிலா அனுமதித்திருப்பதைக் மட்டும் கூற உடனே! வருவதாக கூறினாள் லேகா.
 அன்னை மற்றும் மகனின் நீண்ட சம்பாஷணையை நிலாவின் சத்தம் அடங்கியதை கவனிக்கவில்லை. தாதி வந்து நிலாவுக்கு நல்ல முறையில் பிரசவம் ஆகியதை மட்டும் கூறி விட்டு செல்ல இருவரும் நிம்மதியாக அமர்ந்திருந்தனர்.  
ஒரு மணித்தியாலம் கடந்திருக்க, நிலாவை அடுத்த வழியாக வேறு அறைக்கு மாற்றியதாக தாதி வந்து நிலா இருக்கும் அறைக்கு அழைத்து சென்றார்.
வாணனும், சுசீலாவும் சந்தோஷமும், கொஞ்சம் பதட்டமும் அடைந்தவர்களாக தாதியின் பின்னால் ஓட்டமும் நடையுமாக விரைந்து நிலா இருக்கும் அறையை அடைய நிலா உறங்கிக் கொண்டிருக்க அங்கே இரண்டு தொட்டில்களை கண்டு வாணனும் சுசீலாவும் விரைந்து பார்க்க இரண்டு ஆண் குழந்தைகள் தொட்டிகளில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
“துகிலா உங்க அப்பா மாதிரியே! நீயும் ரெட்டை புள்ளய பெத்திருக்கடா… எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு” என்று மகனைக் கட்டிக்கொள்ள
“என்னமா சொல்லுற?” வாணன் புரியாது கேக்க
“உங்க அப்பா ரெட்டை குழந்தைகள்ல ஒருத்தர் ப்பா… கூட பொறந்தவரு அஞ்சு வயசாகும் போது மஞ்சக்காமால வந்து இறந்ததா சொன்னாங்க. நீ உண்டாகி இருக்கும் போது ரெட்டை குழந்தைதான் பிறக்கும்னு நினைச்சுகிட்டு இருந்தோம் ஆனா ஒத்த பிள்ளையா போயிட்ட. ஆனாலும் உனக்கு ரெட்டை குழந்தை பிறந்து இந்த வம்சா வழில இதுவும் ஒரு இயல்புன்னு நிரூபிச்சிட்ட” சுசிலா சாதாரணமாக சொல்ல
யோசனைக்குள்ளானவன் “ஒரு வேல அப்படியும் இருக்குமோ! அதை லேகாதான் சொல்ல வேண்டும்” மனதுக்குள் சொல்லிக்கொண்டவனுக்கு லேகாவை சந்தித்து என்ன நடந்தது என்று கேட்க வேண்டும் என்ற வெறி வந்தது.
நிலா கண்விழித்த பின் சுசிலா நிலாவை கவனித்துக்கொள்ள, வாணனால் அவளோடு இயல்பாக பேசக் கூட முடியவில்லை. குற்ற உணர்ச்சியில் அவள் முகம் பார்ப்பதையே! தவிர்கலானான்.
லேகா காலையில் கிளம்பி சென்றிருந்ததால் பாதி தூரம் கூட கடந்திருக்கவில்லை. மதியத்துக்குள் வந்து விட, லேகாவை காணும் பொழுதெல்லாம் வாணனால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மருத்துவமனையில் வைத்து எதுவும் பேச முடியாததால் வீட்டுக்கு சென்ற பிறகு பேசலாம் என்று பார்த்தால் நிலாவோடு இரவில் லேகா தங்கிக் கொண்டாள்.
சரியான சந்தர்ப்பத்துக்காக வாணனும் காத்திருக்க, நிலாவுக்கு சுகப்பிரசவம் ஆனதால் இரண்டு நாட்களிலையே! வீடு வர அன்றிரவே! பேசி விடுவதென்ற முடிவுக்கு வந்திருந்தான் வாணன்.
கீழேயே உள்ள அறையில் நிலாவோடு குழந்தைகள் சுசிலா, லேகா என இருவரும் தூங்க வாணன் மேலே உள்ள அறையில்தான் தங்கி இருந்தான். அனைவரும் தூங்கச் செல்ல “அத்த உங்க கிட்ட முக்கியமான டீடைல் கொஞ்சம் கேக்கணும் மேல வாரீங்களா?” என்று கையேடு அழைத்து சென்றான் வாணன்.
“என்ன வாணா ஏதும் பிரச்சினையா? என்ன டீடைல்ஸ் வேணும்?” லேகா புரியாது கேக்க
“எனக்கு உண்மை மட்டும்தான் வேணும்” எனற வாணன் அவளை தீர்க்கமாக பார்க்க
“என்ன கேக்குற?” என்ற லேகாவின் முகத்தில் பதட்டம் தொற்றிக்கொண்டது
“நிலாவோட அம்மா பவானி அம்மாவை சந்திச்சேன். அவங்க எல்லா உண்மையையும் சொல்லிட்டாங்க. ஆனா எனக்கு முழு உண்மையும் வேணும். என் மனைவி நிலாவ நீங்க தத்தெடுத்ததா சொன்னீங்க, அவ நீங்க பெத்த பொண்ணுதானா? சொல்லுங்க” மிரட்டும் குரலில் அத்தையை நோக்க
இதற்கு மேலும் எதையும் மறைக்க முடியாது என்று புரிந்துக்கொண்ட லேகா ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“எங்க இருந்து ஆரம்பிக்கிறதுனு தெரியல வாணா எல்லாம் என் முட்டாள் தனத்தால் வந்த வினை” என்றவள் அன்று நடந்ததை கூற ஆரம்பித்தாள்.
விரோசனன் சுசீலாவை திருமணம் செய்துகொள்ளும் பொழுது லேகா காலேஜில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தாள். அவள் சென்னையில் தங்கி படிப்பதால் அவள் எந்த குடும்பத்தை சேர்ந்தவள் என்பது கூட படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. லேகாவும் எந்த பந்தாவுமில்லாமல் அவர்களோடு சாதாரணமாகத்தான் பழகி வந்தாள்.
அன்னை சுசீலாவை ஏற்றுக்கொள்ளாத கோபம், அண்ணனை வீட்டை விட்டு அனுப்பிய கோபம் லேகாவை விபரீதமான முடிவை எடுக்க வைத்திருந்தது. அது தானும் காதலித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்பதே!
ஆனால் லேகா கண்மூடித்தனமாக காதலில் விழ வில்லை. உண்மையான அன்பை மட்டும் எதிர்பார்க்கும் ஒருவனுவுக்காக காத்திருந்தாள். கல்லூரியில் இறுதி வருடத்தில் படித்துக்கொண்டிருந்த ஈஸ்வருக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல பெயரும், மதிப்பும் இருந்தது. பெண்களை மதிப்பவன், கண்ணியமானவன் என்று எல்லா பெண்களும் அவனை புகழ பெண்களின் பார்வை அவன் புறம் இருந்தது.
அப்படிப்பட்ட ஈஸ்வர் வந்து லேகாவிடம் தன் காதலை சொல்லவும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் கொண்டாள் லேகா. 
லேகாவுக்கும் ஈஸ்வரின் மீது நல்லெண்ணம் இருந்தது. அந்த வயதில் அதிகம் யோசிக்காமல் இப்படி ஒரு நல்லவனை, அதுவும் தன்னை காதலிப்பவனை திருமணம் செய்வது தான் சரி என்று லேகாவுக்கு தோன்ற ஈஸ்வரனின் காதலுக்கு சம்மதமும் தெரிவித்திருந்தாள்.
“லேகா நாம காதலிக்க ஆரம்பிச்சு ஆற மாசத்துக்கும் மேல ஆகாகுது. நீ என் கூட வெளிய எங்கேயுமே! வர மாட்டேங்குற” ஈஸ்வரன் குறைபட
“இன்னும் மூணு மாசத்துல உங்களுக்கு பைனல் எக்ஸாம் வருது. இதுக்கு நடுவுல ஊரு சுத்தணுமா? போய் படிங்க ஈஸ்வர்” என்று லேகா அவனை துரத்தலானாள்.
லேகா நல்லவன் என்று நம்பிய ஈஸ்வரின் உண்மை முகம் பெண்களை ஏமாற்றும் கயவன் என்று பாவம் அவள் அறிந்திருக்கவில்லை.
லேகா ராஜவம்சம், பணக்கார வீட்டு பெண் என்று அறிந்திருந்தால் ஈஸ்வர் லேகாவை ஏமாற்ற ஒருகாலமும் நினைத்திருக்க மாட்டான். அவளின் எளிமையான அழகு மட்டும் அவனை ஈர்க்க அவளை அடைந்தே! தீர வேண்டும் என்ற வெறி காதல் என்ற பெயரில் நெருங்கி இருக்க, லேகா அவனோடு எங்கும் வெளியே! வராதது ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இப்படியே! சென்ற இவர்களது காதல் வாழ்க்கை ஈஸ்வரின் கல்லூரி வாழ்க்கையோடு முடிவடைந்தது. கல்லூரியை விட்டு சென்ற ஈஸ்வர் லேகாவை வந்து பார்க்கவே! இல்லை. லேகாவும் ஈஸ்வருக்கு என்ன ஆனதோ! என்று கலக்கத்துலையே! கல்லூரியையும் முடித்திருந்தாள்.
கல்லூரியை முடித்த ஈஸ்வர் பவானியின் தாத்தாவின் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததுமில்லாது பவானியை காதலித்து திருமணமும் செய்த்து வாழ்க்கையில் செட்டில் ஆகி இருந்தான்.
இதை எதையும் அறியாத லேகா ஈஸ்வரின் வரவுக்காக காத்திருக்கலானாள். அதே! போல் அன்னையிடம் கெஞ்சிக் கூத்தாடி மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று சென்னையில் தங்கி இருந்த லேகா ஒரு ஹோட்டலில் ஈஸ்வரை பார்த்து ஓடிச்சென்று பேச அங்கு யாரையோ! சந்திக்க வந்த ஈஸ்வருக்கு லேகாவை அங்கு சந்திக்க கிடைத்தது பெரும் ஆச்சரியம்.
அவளை பேசி சம்மதித்து அறைக்கு அழைத்து சென்றவன் அவளை நெருங்க முயற்சி செய்ய தாலியை எடுத்து நீட்டி அதை அவள் கழுத்தில் கட்ட சொல்லி இருந்தாள் லேகா.
ஈஸ்வருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அடுத்த கணம் அறைக்குள் கட்டினால் யாருக்கு தெரிய போகிறது என்று லேகாவின் கழுத்தில் தாலியையும் கட்டி அவளை கைகளில் ஏந்தி இருந்தான்.
ஒரு வாரமாக அவளோடு அன்னியோன்யமாக இருந்த ஈஸ்வர் திடிரென்று மாயமாய் மறைந்து விட கணவனை காணாது தேடி அலையலானாள்  லேகா.
லேகா சாதாரணமான உடல்வாகுடையவள். ஐந்து மாதங்கள் கடந்து வயிறு கொஞ்சம் தெரிய ஆரம்பிக்கும் பொழுதுதான் அவள் கருத்தரித்துப்பதையே! அவள் அறிய நேர்ந்தது. அப்பொழுதும் ஈஸ்வர் அவளை ஏமாற்றி இருக்கக் கூடும் என்று அவள் எண்ண வில்லை. எதோ! ஒரு காரணத்துக்காகத்தான் கணவன் தலைமறைவாக இருக்கின்றன் என்று எண்ணிக்கொண்டிருந்தாள் லேகா.
ஒரு நாள் மருத்துவமனைக்கு சென்று வரும் பொழுதுதான் ஈஸ்வரன் பவானியோடு மின்தூக்கியில் செல்வதை பார்த்தாள்.
முடிந்த மட்டும் வேகமாக படியில் ஏறி ஈஸ்வரன் சென்ற தளத்துக்கு சென்று அவனை கண்டு பிடித்தால் லேகாவின் தலையில் இடியை இறக்கினான் ஈஸ்வரன். 
“என்னங்க எங்க போனீங்க? யாருங்க அந்த பொண்ணு?” மகப்பேறு மருத்துவரின் அறைக்கு முன்னால் அமர்ந்திருந்த ஈஸ்வரனிடம் லேகா கேக்க அங்கிருந்தவர்கள் ஈஸ்வரனை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்திருந்தனர்.
நிறைமாத வயிற்றை சுமந்துக்கொண்டிருந்த பவானி கணவனின் கைகளை பிடித்துக்கொண்டு “என்னங்க யாரு இவங்க?” என்று அச்சத்தோடு கேக்க
தன் முன்னால் வந்து நின்ற லேகாவை சாதாரணமாக பார்த்த ஈஸ்வரன் “ஆமா யார் நீ? யாருனு நினைச்சி என் கிட்ட பேசிக்கிட்டு இருக்க?” என்று விசாரித்தான் ஈஸ்வர்.
“ஈஸ்வர் விளையாடாதீங்க. என்ன கல்யாணம் பண்ணிட்டு எங்க போய்ட்டிங்க. இப்போ நான் அஞ்சி மாசம் முழுகாம இருக்கேன்” லேகா வயித்தை பிடித்தவாறு சொல்ல அவள் வார்த்தையிலும், குரலிலும் அப்பட்டமான வேதனை மட்டும்தான் மிஞ்சி இருந்தது.
“ஏன் மா உன் புருஷன் உன்ன விட்டு போனதுக்கு ஊருல உள்ள எல்லா ஈஸ்வரனையும் உன் புருஷன்னு சொல்லுவியா? இந்த பொண்ணுக்கு புத்தி பேதலிச்சு போல” ஈஸ்வரன் சத்தமாக சொல்ல அங்கிருந்தவர்களுக்கு குசுகுசுவென பேச ஆரம்பித்திருந்தனர்.
தாதி வந்து பவானியை அழைக்க “நீ உள்ள போம்மா நா இந்த பொண்ண அனுப்பிட்டு வரேன்” என்று பவானியை இன்முகமாக அனுப்பி வைத்த ஈஸ்வர் லேகாவின் கையை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு வந்து யாருமில்லாத இடத்தில் விட்டவன்
“சும்மா பார்க்க தளதளன்னு இருக்கேனு காதல் வசனம் பேசி கவுக்க பார்த்தேன். மசியாவே! இல்ல. சரி போகட்டுன்னு விட்டுட்டேன். நீயா வந்து சிக்கினா விட்டுடுவேனா… அதான் ஒரு வாரம் உன் கூட இருந்தேன். சந்தோசமா வச்சிக்கிட்டேன்ல. இருந்துட்டு போவியா” தன் உண்மையான முகத்தை லேகாவிடம் காட்டி இருக்க அதிர்ந்தாள் லேகா.
“அப்போ நீ கட்டின தாலி? அதுக்கு என்ன பதில் சொல்ல போற?” லேகா தாலியை வெளியே பிடித்து இழுத்தவாறு கேக்க
“தாலியா? நான்தான் கட்டினேன்னு சாட்ச்சி இருக்கா? இல்லல. ஊரறிய நான் தாலி கட்டின பொண்டாட்டி பவானி ஒருத்திதான். எப்பேர்ப்பட்ட கோடீஸ்வரி தெரியுமா? இண்டலீஸ்ட் வேதாச்சலத்தோட ஒரே பேத்தி. அவளுக்கும், சொத்துக்கும் ஒரே உரிமையாளன் நான்தான்” என்று ஈஸ்வரன் பெருமையாக சொல்ல சத்தமாக சிரிக்கலானாள் லேகா.
லேகா யார்? என்ன? என்று எதுவும் அறியாமல் பவானியை திருமணம் செய்த ஈஸ்வரன் லேகா யார் என்று அறிந்துக்கொண்டால் பவானியை விட்டு விட்டு அவளின் காலடியில் கிடப்பான் என்று நினைத்த பொழுதுதான் லேகாவுக்கு அந்த சிரிப்பே வந்தது.
“கேவலம் பணத்துக்காக ஒரு பொண்ண ஏமாத்தி கல்யாணம் பண்ணதும் இல்லாம, உன் வெறிக்காக பல பெண்களை ஏமாத்தியும் இருக்க, இதுக்கு நான் உனக்கு தண்டனை கொடுக்காம இருக்க மாட்டேன். என் வயித்துல இருக்கும் உன் புள்ளய வச்சே! உனக்கு வைக்கிறேன் டா வேட்டு” என்று ஆவேசமாக லேகா அங்கிருந்து கிளம்பி சென்றிருக்க, ஈஸ்வரன் லேகா யாரு என்ன என்று அறியாததால் அது எதையும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் லேகா நினைத்தது போல் எதுவும் நடக்காது என்று லேகாவுத்தான் தெரியவில்லை. நீண்ட நாட்களாக அன்னையோடு பேச முடியவில்லை. இருக்கும் மனநிலையில் பேசினால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று எண்ணி வீட்டுக்கு அழைத்தால் அன்னை குளியலறையில் இருப்பதாக கூறி அலைபேசியை வேலையாள் கொண்டு சென்று மேசையின் மீது வைத்திருப்பான் போலும் அன்னையின் குரலுக்காக காத்திருந்தவளுக்கு கேட்டது சித்தியின் குரல்தான்.
“புஷ்பா… உன் பொண்ண படிக்க அனுப்பினா… அவ அங்க வயித்த தள்ளி கிட்டு நிக்கிறதா கேள்விப்பட்டேன்” என்று சித்தி சொல்ல
அலைபேசியில் லேகா இருப்பதை மறந்து அன்னையும் “என்ன பேசுற நீ என் பொண்ண பத்தி எனக்கு தெரியாதா? என்று கேட்க
“கண்ணால பார்த்த சாட்ச்சி இருக்கு. பையன்தான் இப்படி போய்ட்டான். பொண்ணும் உன் பேச்சு கேக்காம இப்படி பண்ணிட்டாளே! தேடி கண்டு பிடிச்சி கருவை கழச்சிடு. சீ.. சீ.. இந்த அவமான சின்னம் எல்லாம் எங்க குடும்பத்துக்கு வேணாம்” என்று சித்தி பேச
“நீ சொல்லுறது மட்டும் உண்மையாகட்டும். அவ வயித்துல இருக்குறத மட்டும் இல்ல. என் வயித்துல பொறந்ததையும் சேர்த்து அழிச்சிடுவேன்” என்றாள் புஷ்பலேகா.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த லேகாவுக்கு ஆறுதலுக்காக கூட அன்னை மடி கிடைக்காது என்று புரிய குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று ஒரு தோழியின் உதவியோடு வேறு இடம் சென்று விட்டாள். அந்த ஊரில் உள்ள மருத்துவமனையில்தான் லேகாவுக்கு குழந்தையும் பிறந்தது. ஆனால் லேகா மயக்கம் தெளிந்து கண்விழிக்கையில் குழந்தை காணாமல் போய் இருந்தது.
தனது அன்னைதான் தன் குழந்தையை தன்னிடமிருந்து பிரித்து விட்டதாக கருதிய லேகா ஊருக்கே! செல்லவில்லை. எப்படியாவது குழந்தையை தேடி கண்டு பிடிக்க வேண்டும் என்று அலைந்தவள் ஒருவழியாக ஈஸ்வர் தான் அவள் குழந்தையை கடத்திக்கொண்டு போய் இருக்கின்றான் என்பதை கண்டு பிடித்து அவனை தேடி சென்றாள்.
தன்னை பழிவாங்க ஈஸ்வரன் தண்குழந்தையை கடத்தி விட்டானா என்று விசாரிக்க, பவானியும் ஈஸ்வரனும் சென்ற வண்டி விபத்துக்குள்ளானதில் பவானியின் குழந்தை இறந்ததுமில்லாது, இனிமேல் பாவனையால் தாயாக முடியாது என்ற உண்மையை அறிந்த ஈஸ்வர் லேகா சுமப்பது தன் குழந்தை என்பதால் லேகாவை கண்டு பிடித்து குழந்தையை கடத்தி வளர்த்து வந்திருக்கின்றான்.
“அவன் செய்த பாவம் அவனுக்கு வாரிசு இல்லாமல் போய் விட்டது. அதற்காக அவன் என் குழந்தையை கடத்துவானா?”  ஈஸ்வரனை கொல்லும் வெறியில்தான் லேகா தேடித் சென்றாள்.
குழந்தை ஈஸ்வரனிடம்தான் இருக்கிறது என்று அறிந்துகொண்ட லேகா அங்கு சென்ற பொழுது அவளுக்கு காணக் கிடைத்தது அவள் சுமந்து பெற்ற செல்ல மகள் கோமாவில் இருப்பதைத்தான். ஈஸ்வரனின் சட்டையை பிடித்து உலுக்கி சண்டை போடலானாள் லேகா.
அப்பொழுதுதான் பவானிக்கு எல்லா உண்மையும் தெரிய வர பவானி ஈஸ்வரனை விட்டு பிரிந்து சென்று விட்டாள். கோமாவில் இருந்த நிலாவின் அருகில் இருந்த லேகா நிலா இறந்த பின் ரொம்பவும் மனமுடைந்து போனாள்.
இது எல்லாம் பவானி வாணனுக்கு ஏற்கனவே! சொன்னவைகள்தான் “அப்போ இங்க இருக்கும் நிலா யாரு? என் மனைவி யாரு?” ஒன்றும் புரியாமல் கத்தினான் துகிலவாணன் மௌரி.

Advertisement