Advertisement

அத்தியாயம் 17
வாணனுக்கு சுசிலாவின் மனநிலையும், அவளின் எதிர்பார்ப்பும் நன்றாகவே! புரிந்தது. அவள் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம் விரோசனன்.
எப்படியோ வாழ வேண்டிய விரோசனன் தன்னை திருமணம் செய்துக் கொண்டு கஷ்டப்படுவதாக சுசிலா நினைப்பதை மாற்றி தான் வேறு யாரையாவது திருமணம் செய்திருந்தால்தான் மனநிம்மதி இல்லாமல் வாழ்க்கையை இழந்து இருப்பேன் என்று சுசீலாவுக்கு தெளிவாக புரிய வைத்திருந்தான் விரோசனன்.
சுசிலா என்னதான் இப்பொழுது குணமடைந்தாலும் இன்னமும் அவள் மனதில் தன் கணவனை புரிந்துக்கொண்டு காதல் வாழ்க்கை வாழ ஆரம்பித்து மகனோடு வாழ்ந்த அந்த நாட்கள்தான் பசுமையாக பதிந்து போய் இருக்க, அதிலிருந்து வெளி வர முடியாமல் மகனில் கணவனை தேட முயற்சிக்கின்றாள்.
கணவன் தன்னை கவனித்து பார்த்துக் கொண்டது போல் மகன் இல்லையென குறை கூறுவதோடு அவனை சரி செய்ய முயற்சியும் செய்கிறாள்.
மருத்துவர் சொன்னதுதான். “அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் அதே! சமயம் வாணன் நீங்க உங்க அப்பா இல்ல என்பதால் எதிர்க்கவும் வேண்டும் அப்பொழுதான் உங்க அம்மா இந்த காலத்தை புரிஞ்சிப்பாங்க”
“ஆக மொத்தத்துல அவங்க சொல்லுறத கேட்கணும்” வாணன் புருவங்களை உயர்த்த
“ஆமா அம்மா சொல்லுறத கேக்குறதுல என்ன தப்பு” என்ற மருத்துவர் சிரித்து விட்டு சென்றிருக்க அது இந்த மாதிரியான விபரீதங்களை வாணனுக்கு ஏற்படுத்தும் என்று அவன் நினைக்கவில்லை.
லேகாவும் இதை பயன்படுத்தி இவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதிலையே! குறியாக இருக்க சந்தர்ப்பம் அமையும் பொழுதெல்லாம் சிக்சர் அடிக்கலானாள்.
வாணனுக்கு நிலாவை பிடிக்காவிட்டாலும் அவன் குழந்தையின் மீது பாசம் இல்லாமல் போகாது. அவன் பின்பற்றுவது தந்தையின் வழியல்லவா? எட்டு மாதங்களுக்கு முன்பாகவே நிலா கர்ப்பமாக இருப்பது தெரிந்திருந்தால் அவளை காண கண்டிப்பாக வந்திருப்பான். அவன் மகவை கண்டிப்பாக பிரிந்திக்க மாட்டான்.
வாணன் வயிற்றில் இருக்கும் பொழுது சுசிலா என்ன சாப்பிட்டாள். என்னவெல்லாம் பார்த்தாள். என்ன மாதிரியான புத்தகங்களை விரோசனன் அவனுக்காக வாசித்தான். என்றெல்லாம் சொல்லி இருக்க, தனது குழந்தையை எவ்வாறெல்லாம் வளர்க்க வேண்டும் என்ற ஆசை வாணனுக்குள்ளும் உருவாகி இருந்தது.
நிலாவின் வயிற்றில் கையை வைத்தவாறு நலம் விசாரிக்க தான் இருப்பதை தந்தைக்கு அசைவின் மூலம் தெரிவிக்கலானது சிசு.
“அம்மா தூங்குறாங்க லைட் போட்டா முழிச்சிக்குவா… சோ இப்போ புக் எல்லாம் வாசிக்க முடியாது. வாசிக்காம கத சொல்ல எனக்கு தெரியாதே! அம்மா உனக்கு நிறைய புக்ஸ் வாசிச்சு காட்டுறாங்க இல்ல” காணொளியில் பார்த்த நியாபகத்தில் வாணன் பேச சிசு அசைந்தது. அதை “ஆமாம்” என்பதாக எடுத்துக் கொண்டவன் நிலாவை ஏறிட கொஞ்சமாக உதடு பிரிந்து இருக்க நிர்மலான முகத்தோடு தூங்கிக் கொண்டிருந்தாள் அவள்.
வாணனுக்கு சற்று ஆச்சரியமாகவும் இருந்தது. எந்த கவலையுமில்லாமல், பதட்டமும் இல்லாமல் நிம்மதியான ஒரு தூக்கம் நிலா தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று அவள் முகத்தை பார்த்தால் புரிந்துகொள்ள முடிந்தது. இது எப்படி சாத்தியம். அவன் அவளுக்கு இழைத்த கொடுமைகளுக்கு அவனருகில் இருக்கவே! அவள் அச்சம் கொள்ள வேண்டும். ஆனால் வந்த உடன் தூங்கியும் விட்டாள்.
அன்று இவளோடு பேசிய பொழுது கூட இவள் நன்றாகத்தான் பேசினாள். நான் கோபமாக பேசிய பின்தான் இவள் கோபப்பட்டாள். இவள் தன்னையும், தன் கோபத்தையும் கண்டுகொள்வதில்லையா? அதனால்தான் இயல்பாக இருக்கிறாளா? என்னதான் இவள் மனதில் இருக்கிறது? என்னை வெற்றிகொண்டு விட்டதாக நினைக்கிறாளா? ஒருவேளை இவளுக்கு பழசெல்லாம் நியாபகத்தில் வந்திருக்குமோ! அதனால் நான் அறியாமல் என்னை வீழ்த்த சிறப்பாக நடிக்கிறாளோ! “ம்ம்… இருக்காது” தலையை உலுக்கிக் கொண்டான் வாணன்.
பாவம் நிலா நேற்று அவ்வளவு தூரம் பயணம் செய்தது, இன்று ஷாப்பிங் என்று நடந்தது, போதாததற்கு அவள் உட்கொள்ளும் மாத்திரைகளின் காரணமாக தலையை வைத்ததும் உறங்கி இருக்க அதை புரிந்துகொள்ள வாணனால் முடியவில்லை.    
தன் மகவோடு பேசி நிலாவின் வயிற்றுக்கு முத்தமும் கொடுத்து விட்டு வாணன் தூங்க முயற்சி செய்ய நிலா விழித்துக்கொண்டு இருட்டினில் தடுமாற, மின்விளக்கை எரிய விட்ட வாணன் என்னவெனக் கேக்க கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றவள் சென்று விட்டு வந்து மீண்டும் தூங்க ஆயத்தமாகி அந்த பக்கம் இந்த பக்கம் என்று புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை.
“என்ன பிரச்சினை?” என்று அவள் புறம் திரும்பி வாணன் கேக்க
“தூக்கம் வர மாட்டேங்குது. வியர்க்குது” என்றாள் நிலா.
ஏசியை கொஞ்சம் அதிகரித்தவன் அவள் தூங்க ஏதுவாக தலையணைகளை வைக்க நிலா கண்களை மூடிக்கொண்டு தூங்க முயற்சித்தாள். ஒன்பதாம் மாதம் நிறைவடையும் தருணம் என்பதால் பாதங்கள் இரண்டும் வீங்கி இருக்க, இன்று நடந்ததில் வலிக்க ஆரம்பித்திருந்தது. சந்திரா அம்மாவிடம் சொன்னால் தைலம் தேய்த்து விடுவார்கள் அல்லாது கொஞ்சம் பிடித்து விடுவார்கள். இவனிடம் சொல்ல முடியுமா? வலது காலால் இடது காலையும், இடது காலால் வலது காலையும் மாறி மாறி  தேய்த்து விட்டவள் திரும்பி படுத்துக்கொள்ள வாணன் எழுந்து அவள் கால்களை பிடித்து விடலானான்.
அதிர்ச்சியடைந்த நிலா தலையை தூக்கி “என்ன பண்ணுறீங்க?” என்று கேக்க
“பார்த்தா தெரியலையா? என் பொண்டாட்டி கால பிடிக்கிறேன். கால் வலிக்குதுனா சொல்ல மாட்டியா? ஏன் இவ்வளவு வீங்கி இருக்கு. டாக்டர் கிட்ட ஒழுங்கா செக்கப்புக்கு போறியா?”
எட்டு மாதமாக அவள் எங்கு இருந்தாள் என்று கூட தேடாதவன். வளைகாப்புக்கு அழைத்தபின் வந்ததும் வராததுமாக குழந்தையை பிரித்து விடுவேன் என்று மிரட்டி விட்டு அக்கறையாக செக்கப்புக்கு போறியா? மாத்திரை போடுறியா? என்று கேட்டால் நிலாவுக்கு கோபம் வராமல் இருக்காதா? தூங்க வேண்டிய நேரத்தில் பேசி சண்டை பிடிக்கும் மனநிலையில் அவள் இல்லை. கால் வலி வேறு படுத்த “அதெல்லாம் சந்த்ராம்மா ஒழுங்கா கூட்டிட்டு போறாங்க” நிலா முறைத்தவாறே சொல்ல
நிலா முறைக்கவும் கடுப்பானவன் “உனக்காக ஒன்னும் இதெல்லாம் செய்வதாக கர்வம் கொள்ளாத, எல்லாம் உன் வயித்துல இருக்குற நம்ம பாப்பாக்காக தான் செய்யிறேன்” என்றவன் அறியவில்லை நிலாவை தூர நிறுத்த முயற்சி செய்தாலும் குழந்தையோடு சொல்லும் பொழுது அவனை அறியாமளையே! இணைத்துதான் சொல்லி இருந்தான் என்பதை.
வாணனின் கை பட்டதும் வலி குறைய நிலாவுக்கு பேசுவதை விட தூங்குவதுதான் முக்கியமாக பட “நான் தூங்கணும்” என்றவள் அவன் மேல் காலை போட்டு விட்டு கண்களை மூடிக்கொள்ள  
“ம்ம்.. சரி தூங்கு” என்றவன் மேற்கொண்டு பேசாமல் காலை இதமாக பிடித்து விட நிலா தூங்கி இருந்தாள்.
வாணன் காலையில் கண்விழிக்கையில் நிலா இன்னும் தூங்கிக் கொண்டிருக்க, அவளை தொந்தரவு செய்யாது கீழே செல்ல அன்னையும், அத்தையும் வாசலில் அமர்ந்து பத்திரிக்கை வாசித்தவாறு தேநீர் அருந்துவதைக் கண்டு அவனும் ஐக்கியமானான்.
“நிலா இன்னுமா தூங்குறா?” லேகா கேக்க
“நைட்டெல்லாம் கால் வலிக்குதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தா… கால பிடிச்சி விட்ட பின்தான் தூங்கினா” வாணன் அதை சாதாரணமாகத்தான் சொன்னான்.
சுசிலா லேகாவை பார்த்து நிம்மதியாக புன்னகைத்து விட்டு “இந்தா துகிலா டீ சாப்பிடு” என்று கப்பை கொடுக்க வாணனும் அதை பெற்றுக்கொண்டான்.
நிலா தூங்குவதால் இதுதான் சந்தர்ப்பம் என்று புரிந்துக்கொண்ட லேகா “ஏன் அண்ணி… அன்னக்கி அந்த வீட்டுக்கு போனீங்க, படீல விழுந்தீங்க, அதனாலதான் உங்களுக்கு இப்படியெல்லாம் ஆகிருச்சு. உங்களுக்கு அந்த ஆள் மேலையும் அந்த பொண்ணு மேலையும் கொஞ்சம் கூட கோபம் வரலையா? அவங்கள பத்தி ஒண்ணுமே! கேக்கல” என்று பேச்சை ஆரம்பிக்க
“எதுக்கு அத்த இப்போ அவங்கள நியாபகப்படுத்துறீங்க?” என்று வாணன் கலவரமடைந்தான்.
மருத்துவமனையிலிருக்கும் பொழுதும் சரி வீட்டுக்கு வந்த பின்னும் சரி சுசிலா ஈஸ்வரனை பற்றியோ! நிலாவை பற்றியோ! ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. வாணனுக்கும் அவர்களை பற்றி பேசி எங்கே! சுசிலா மீண்டும் பழைய நிலைக்கு சென்று விடுவாளோ! என்ற அச்சம் மனதின் ஓரம் நெருஞ்சி முள்ளாய் குத்த எதுவும் பேசவில்லை.   
பெருமூச்சு விட்ட சுசிலா “ரெண்டு நாளா இவன் ஒழுங்கா சாப்பிடாம, இனிமேல் ஸ்கூல் போக முடியாதுனு அழுதுகிட்டே இருந்தத என்னால பாத்துக்கொண்டு இருக்க முடியாமத்தான் ஸ்கூலுக்கு போனேன். அந்த பிரின்சிபல் அந்த வீட்டு விலாசத்தை கொடுத்த போது கொஞ்சம் கூட யோசிக்காம அவர் இல்லாம நான் அந்த வீட்டுக்கு போய் இருக்கவே! கூடாது. போனதும் போனேன் அந்த வீட்டம்மா இல்லனதும் திரும்பி இருக்கணும். வந்தது வந்தாச்சு பேசிட்டு வந்துடலாம்னு உள்ள போய் இருக்கக் கூடாது. விதி இப்படியெல்லாம் ஆகிருச்சு. அந்த கேடு கெட்ட ஆளாலதான் எல்லாம் ஆச்சு அவன் மேல கோபம் இருக்கு. இல்லனு சொல்ல மாட்டேன்” என்ற சுசிலா பேச்சை முடிக்கவில்லை.
“நீ ஒரு வார்த்த சொல்லு சுசி அவன் தலையை வெட்டி உன் காலடில கொண்டு வந்து போடுறேன்” என்று லேகா வாணனை பார்த்தவாறு பேச
“என்ன பேசுறீங்க சந்த்ராமா? இப்படி பேசாதீங்க? ரொம்ப தப்பு” சுசிலா பதற, லேகாவுக்கு அவள் தோழி சுசியை தெரியாதா? இதற்காகத்தான் இந்த பேச்சை ஆரம்பித்தாள்.
“என்ன தப்பு? என்ன தப்புனு கேக்குறேன். எனக்கு வர ஆத்திரத்துக்கு அவனையும் அவன் பொண்ணையும் வெட்டி வீசி இருப்பேன். ஆனா அவங்களுக்கு அப்படி பட்ட சாவு வரக் கூடாது” என்று வாணன் சொல்லி முடிக்கும் பொழுது சுசிலா மகனை அறைந்திருந்தாள்.
அதிர்ச்சியாக கன்னத்தில் கைவைத்திருந்த வாணன் அன்னையை பாத்திருக்க, “உனக்கும் இருக்குறது இவங்க குடும்ப ரெத்தமில்லையா? அதான் எப்போ பார்த்தாலும் சூடாகவே! அலையுற. நல்லா கேட்டுக்க, தப்பு பண்ணுறவங்கள தட்டிக் கேக்க நாங்க ஒன்னும் பரமாத்மா இல்ல. அவங்கள கடவுள் பாத்துப்பாங்க” மகன் செய்து வைத்திருக்கும் குளறுபடிகளை அறியாமல் சுசிலா பேச 
சத்தமாக சிரித்த வாணன் கையை தட்டியவாறு “நீ சொல்லுறது சூப்பர் கத. அப்போ போலீஸ் எதுக்கு? கோர்ட் எதுக்கு? கடவுள் பாத்துப்பார்ன்னு எல்லாத்தையும் இழுத்து மூடிடலாமா? ஜனாதிபதிக்கும், ப்ரைமினிஸ்டருக்கும் மனு அனுப்பிடவா? எங்கம்மா கருணை தேவதை சொல்லுறாங்கனு. அட போம்மா” கடுப்பானான் வாணன்.
“நான் அப்படி சொன்னேனா? அந்தாள் பண்ணதுக்கு காரணமே! இல்லாம வருஷக் கணக்கா நான் வேதனையை அனுபவிச்சேன். என் புருஷன் கூட சந்தோசமா கடைசிவரை வாழவும் முடியல. என் பையன் வளருறத கூடவே! இருந்து பார்க்கவும் முடியல. இதெல்லாம் கோர்ட்டுல கேஸ் போட்டு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது. அவனை கடவுள் பார்த்துப்பான்”
“அப்போ மன்னிச்சு விட்டுடலாம்னு சொல்லுறியா?” அன்னையை முறைக்க
“அதான் கடவுள் பார்த்துப்பார்ன்னு சொன்னேனே!” மகனை தீர்க்கமாக பார்த்தாள் சுசிலா.
அன்னை மகனின் சம்பாஷணையில் லேகா பங்கேற்கவில்லை. இருவரையும் பேச விட்டு ரசித்து. ருசித்து தேநீரை அருந்திக்கொண்டிருந்தாள். 
“சரி உனக்கு நடந்த எல்லாத்துக்கும் அப்பா காரணம். எனக்கு நடந்த எல்லாத்துக்கும் பொண்ணுதானே! காரணம். என்னால அவள மன்னிக்க முடியாது. என்ன பண்ணலாம் சொல்லு” ஆவேசமாக கத்தினான் வாணன்.
“அவ சின்ன பொண்ணு டா… தப்பான அப்பாக்கு பொறந்து தப்பா வளந்துட்டா… நான் அப்போவே! அவள மன்னிச்சிட்டேன். கூடாத சகவாசம். கேட்கக் கூடாதவங்க பேச்சைக் கேட்டு வளந்த புள்ள பின்ன எப்படி இருப்பா? என்னதான் முரண்டு புடிச்சாலும் அன்பா ஆதரிச்சு புரிய வச்சா புரிஞ்சிப்பா… இல்லையா வளந்த பின்னால புரிஞ்சிப்பா” என்று சுசிலா பேச முகம் இறுகினான் வாணன்.
“நீ மயக்கத்து போய் ஹாஸ்பிடல்ல இருந்த அந்தாள் என்ன எல்லாம் பண்ணானு உனக்கு தெரியுமா? அந்தாள் பொண்ண நான் நாசம் பண்ண பார்த்தேன்னு என்ன போலீஸ்ல புடிச்சி கொடுத்துட்டான். அப்பா வந்துதான் என்ன வெளிய கொண்டு வந்தாரு”
“என்ன டா துகிலா சொல்லுற?” சுசிலா அதிர்ச்சியடைய
அந்த இன்ஸ்பெக்டர் தன்னை அடித்ததை அன்னையிடம் சொல்லாமல் மறைத்தவன் “அப்பா எப்பேர்ப்பட்ட குடும்பத்துல இருந்து வந்தவர்னு அவரை பார்த்ததும் தெரிஞ்சிருக்கு அதனால விட்டாங்க. இல்லனா சின்ன பையனும் பார்க்காம அந்தாளு கொடுத்த காசுக்கு அந்த போலீஸ்காரர்களும் வேல பாத்திருப்பாங்க” அன்று நடந்தவைகளால் பாதிப்புக்குளானவன் அவன்தானே! இன்று நினைக்கும் பொழுதும் அவனால் அந்த வலியை தாங்க முடியவில்லை.
மகனின் கையை ஆறுதலாக பிடித்த சுசிலா “வாணா விதி என்ற ஒன்று இருக்குடா என்ன நடக்கணும்னு இருக்கோ! அதுதான் நடக்கும். அத நம்மால மாத்தி எழுத முடியாது. உங்க அப்பா எந்த மாதிரி குடும்பத்துல பிறந்தவர் எப்படி வாழ்ந்தாரு. நமக்கு இப்படி ஆகணும்னு விதி. அது அந்த ஆள் மூலம் நடந்தேறி இருக்கு. நீ இன்னமும் நடந்ததையே! நினைச்சுகிட்டு இருக்காத. அத மறந்துட்டு. அந்த பொண்ணையும் மன்னிச்சுடு” என்றாள் சுசிலா. 
இவ்வளவு நேரமும் அமைதியாக அமர்ந்திருந்த லேகா வாயை திறந்தாள் “உண்மைதான் சுசி… யாரும் பண்ண பாவத்துல இருந்து தப்பிக்க முடியாது. அனுபவிச்சுதான் ஆகணும். அந்த பொண்ணு வாழ்க்கைல என்ன கஷ்டங்களை அனுபவிச்சு இருப்பாளோ! ஒருவேளை அந்தாளோட சொத்தெல்லாம் பறிபோய் நடுரோட்டுக்கு கூட வந்திருக்கலாம். அதனால அந்த பொண்ணு திருந்திக் கூட இருக்கலாம். இல்ல…. கடவுளாய் பார்த்து பழசை மறக்கடிச்சு அந்த பொண்ணுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்திருக்கலாம். இப்படி என்ன வேணா நடந்திருக்கலாம். இல்லையா வாணா” என்று லேகா வாணனிடம் கேட்க அவனிடம் பதிலில்லை. 
நிலா எழுந்து கீழே வரவும் லேகா அவளை வரவேற்றவாறே அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளியும் வைத்திருந்தாள்.
இரண்டு நாட்களாக வாணனுக்கு சுசிலா பேசியதும், லேகா சொன்னதும், நிலா நடந்துகொள்ளும் முறைகளும்தான் கண்முன் வந்து நின்றது.
சுசிலா சொல்வதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தப்பு செய்தால் தண்டனையை அனுபவித்தான் ஆக வேண்டும். தப்பு செய்த ஈஸ்வர் இறந்த விட்டார் நிலா மாட்டிக்கொண்டாள்.
லேகா சொல்வது போல் பார்த்தால் நிலா செய்த தப்புக்கு கடவுள் அவளது சொத்துக்களை பறித்து அவளை தண்டித்தும் விட்டார். நிலா எல்லாவற்றையும் மறந்து விட்டாள் புதியதொரு வாழ்க்கையை வாழ்கிறாள். உண்மையிலையே! அவன் சின்ன வயதில் பார்த்த நிலா இல்லை. இவள் முற்றாக மாறு பட்டவள். எவ்வளவு அன்பாக வயிற்றிலிருக்கும் சிசுவிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். இவ்வளவு பொறுமையெல்லாம் சிறு வயது நிலாவிடம் இல்லை.
அவள் எல்லாவற்றையும் மறந்து நல்லதொரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் அவள் விதியோ! தான்தான் வீணாக நிலாவை பழிவாங்கவென்று அவள் மனதை புண்படுத்தி அவளையும் கஷ்டப்படுத்தி, தானும் நிம்மதி இல்லாமல் இருக்கின்றேனோ!
பலவாறு குழம்பிய வாணன். பலதடவை சிந்தித்து “என்ன இருந்தாலும் இப்பொழுது நிலா என் மனைவி என் குழந்தைக்கு தாயாகப் போகிறவள். அவளை கஷ்டப்படுத்துவதால் என் குழந்தையும்தான் வேதனைக்குளாகும். என்னை வெறுக்கக் கூடும். அதனால் நான் பழசை மறந்து நிலாவோடு சுமூகமான வாழ்க்கையை வாழ முடிவெடுப்பதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்திருந்தான் வாணன். 
அந்த முடிவுக்கு வந்த நொடி அவன் மனம் மிகவும் இலேசாக இருந்தது. நிலாவை வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்திருந்தான். அவள் செய்பவைகளையும், பேசுபவைகளையும் ரசிக்க ஆரம்பித்தவன் முயன்ற மட்டும் அவள் பேச்சில் கலந்துகொள்ளலானான். எல்லா வேலைகளையும் சீக்கிரமாக முடித்துக்கொண்டு ஆபிசிலிருந்து வீடு வருபவன் அவளை அழைத்துக்கொண்டு வார்க்கிங் செல்வான். சுசிலா எண்ணியதற்கு மேலாக அவளை நன்றாக பார்த்துக்கொள்ளலானான் வாணன்.  
“என்ன இவனுக்கு காத்து, கருப்பு ஏதும் அடிச்சிருச்சோ! ஓவரா நடிக்கிறான்” என்று நிலா என்னும் அளவுக்கு நிலாவோடு இனிக்க இனிக்க பேசலானான்.
ஒரு வாரகாலமாக மருமகனை கவனித்ததில் அவனிடம் தெரிந்த மாற்றங்கள் லேகாவுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், வாணன் நிலாவிடம் சென்று பேசி ஏதாவது வம்பை வளர்த்துகொள்வானோ! என்று அவனை தனியாக சந்தித்து பேசிய லேகா
“வாணா உன் மனசு மாறிக்கிட்டு வருதுன்னு உன்ன பார்த்தாலே! புரியுது. மன்னிப்பு கேக்குறேன்னு போய் நிலா கிட்ட உளறி வைக்காத. இந்த மாதிரி சமயத்துல ரொம்ப பக்குவமா நடந்துக்கணும். இத பத்தி பேசினா அவ ரொம்பவும் டென்சனாவா? சோ பேசாம அவளுக்கு உன்ன புரிய வை” என்று சொல்ல வாணனும் அந்த முயற்சியில்தான் இறங்கி இருந்தான்.
இருவரும் தனியாக இருக்கும் பொழுது “எதுக்கு இப்போ ஓவரேக்ட்டிங் பண்ணுறீங்க? அதான் உங்க அம்மா இங்க இல்லல” என்று நிலா எரிந்து விழ,
“எனக்கு நடிக்க எல்லாம் வராது நிலா. எதுவானாலும் முகத்துக்கு நேரா பேசிடுவேன்” என்றவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு “குட் நைட்” என்பான்.
நிலாதான் வாணனை மன்னிக்கவும் முடியாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் மனதோடு போராடியபடியே! தவிக்கலானாள்.
“அம்மா… இன்னக்கி நாம எங்கயாச்சும் வெளிய போயிட்டு வரலாமா?” என்றவாறு வாணன் வர
“இவன் ஒருத்தன் பொண்டாட்டிய கூட்டிகிட்டு போகாம எதுக்குடா என்ன கூட்டிக்கிட்டு போக கங்கணம் கட்டிக்கிட்டு அலையுற?” என்று சுசிலா முறைக்க,
“என் பொண்டாட்டி இல்லாம நான் போவேனா? நான் வேற என் பொண்டாட்டி வேறயா? போலாம்னு சொன்னா அவ ரெடியாகப் போறா… இத அவகிட்ட கேட்க்க வேண்டிய அவசியமே! இல்ல. அதான் உன் கிட்ட கேக்குறேன்” வாணன் புன்னகைத்தவாறே சொல்ல
“பார் டா என் பையன” சுசிலா முகவாயில் கைவைக்க
“நீ கலக்கு வாணா…” என்றவாறு வந்த லேகா “குழந்தைக்கு ஒரு குட்டி தொட்டில் வாங்கினா நல்லா இருக்கும் வாணா அரண்மனைல இருக்குறது எல்லாம் ரொம்ப பெருசா இருக்கும்” என்று சொல்ல
“ஆ… வாங்கலாம் அத்த… நிலாக்கு பிடிச்சா மாதிரியே! வாங்கலாம். என்ன நிலா” என்றவன் அவளை கட்டிக்கொள்ள தன்னுடைய விருப்பத்தை மதிக்கிறானா? நிலாவால் நம்ப கூட முடியவில்லை. அதுவும் ஓவர் கொஞ்சல் வேறு. நடிப்பா? நிஜாமா? என்று கூட இன்னும் புரியவில்லை. எல்லாம் குழந்தை பிறக்கும்வரை மட்டும் தானோ! என்ற அச்சம் நிலாவின் மனதை ஆட்கொண்டிருந்தது.
“நான் எதுக்கு சந்த்ராமா… நீங்க போய் வாங்கிட்டு வாங்களேன்” பட்டும் படாமலும் சொல்ல
“இல்ல. இல்ல. நீ தான் வாங்கணும். போய் ரெடியாகு. ஷாப்பிங் பண்ணுறோம். பாப்பாக்கு மட்டுமில்ல. உனக்கும் ஏதாச்சும் வாங்கணும்னா சொல்லு”
“நிலா இதான் சான்ஸ் விடாத. புருஷன் ஷாப்பிங் போலாம்னு அவ்வளவு ஈஸியா கூப்பிட மாட்டான். சீக்கிரம் ரெடியாகு” லேகா நிலாவை துரத்த
“ஷாப்பிங் மட்டுமில்ல. பூங்கா போலாமா? இல்ல பீச் போலாமான்னு டிசைட் பண்ணிக்கோங்க”
சுசிலா பூங்கா என்று சொல்ல லேகா பீச் என்றாள்.
“ஓகே.. டைம் இருந்தா ரெண்டு இடத்துக்கும் போலாம்” என்ற வாணன் நிலாவை தேடிச் சென்றான்.
“என்ன நிலா ஒரு மாதிரியா இருக்க?” அறைக்கு வந்தவள் தயாராகாமல் யோசனையில் மூழ்கி இருப்பதைக் கண்டு  வாணன் கேட்க
“ஒண்ணுமில்ல” என்றவள் அலுமாரியை திறந்து குடையலானாள்.
அவள் கையை பிடித்து அமர்த்தியவன் “நீ ஒண்ணுமில்லன்னு சொன்னா அதுல எதோ! ஒரு விஷயம் இருக்கு. சொல்லு என்ன பிரச்சினை?”
“இல்ல. குழந்தை பொறந்த பின்னாடி குழந்தையை வச்சிகிட்டு, என்ன இங்க இருந்து அனுப்பிட போறீங்களா? அதுக்குதான் இப்படி ஓவரா நடிக்கிறீங்களா?” நெஞ்சம் முழுக்க அச்சம் பரவி இருந்தாலும் அவள் வார்த்தைகளில் கொஞ்சம் கோபமும் எட்டிப் பார்த்திருக்க
பெருமூச்சு விட்டுக்கொண்ட வாணன் “அன்னக்கி எதோ கோபத்துல சொன்னது நிலா. அப்படி எல்லாம் குழந்தையை உன் கிட்ட இருந்து பிரிக்கவும் மாட்டேன். உன்னையும் என்ன விட்டு செல்ல விட மாட்டேன்” இன்று இவ்வாறு சொல்பவன்தான் நிலாவே! பிரிந்து செல்ல வேண்டும் எனும் பொழுது தடுக்கப்போவதுமில்லை. லேகாவிடம் அவளுக்கு வேறு வாழ்க்கை அமைத்துக் கொடுக்கும்படியும் கூறப்போகிறான்.
“இப்போ நான் பண்ணுறதெல்லாம் உனக்கு நடிக்கிறது மாதிரி தெரியறது உன் தப்பு இல்ல. நான் உன் கிட்ட அவ்வளவு மோசமா நடந்துகிட்டு இருக்கேன். “என்ன மன்னிச்சிக்கணு” ஒரே வார்த்தைல கேட்டுடலாம். நீ என்ன மன்னிச்சாலும், மன்னிக்கலைனாலும் உன் மனசுல நீ பட்ட வேதனை மாறாது. அத போக்க ஒரே வழி நான் உன்ன சந்தோசமா வச்சிக்கிறதுதான். என்னால முடிஞ்ச அளவுக்கு நான் உன்ன நல்லா பாத்துப்பேன்” என்று வாணன் சொல்ல அவன் பேச்சில் உறுதி இருந்தைக் கண்டுகொண்டவளின் இதழோரம் மெல்லிய புன்னகை மலர்ந்தது.
பாவம் நிலா எதற்காக என்னை அந்த பாடு படுத்தினாய் என்று ஒருதடவையாவது வாணனிடம் கேட்க அவளுக்கு தோன்றவே! இல்ல. காதல் செய்யும் மாயை போலும்
நிலா தயாராகி வரவே! அனைவரும் ஷாப்பிங் சென்றவர்கள் குழந்தைக்கு தொட்டிலையும் பார்க்க ஊஞ்சல் போன்று இருந்த ஒன்றை தேர்வு செய்திருந்தாள் நிலா. 
“இப்போ எல்லாம் வித விதமா இருக்கு இல்ல சந்த்ராமா.. உங்கள போட்ட தொட்டில் தனி தேக்கு மரத்து பலகையால பண்ணது. எனக்கு இன்னமும் நியாபகம் இருக்கு. நீங்க ஏழு வயசுவரைக்கும் அதுலதான் தூங்குவீங்க. அவ்வளவு பெருசு. அப்பொறம் தான் விழ மாட்டீங்கனு கட்டில் பொருதினாங்க” என்று சுசிலா அன்றைய கதையை சொல்ல
“இங்க பாரேன் சுசி.. ஆறு மாசமானா உக்காந்து விளையாட கூடிய விதமா ஒன்னு இருக்கு” என்று லேகா காட்ட வித விதமாக இருந்த தொட்டில்களை மட்டும் பார்த்து வியந்தாள் சுசிலா.
வாணன் பணம் கட்டும் பொழுது ஒரு பெண்மணி உள்ளே! நுழைய அந்த பெண்மணியை எங்கோ! பார்த்த நியாபகம் வாணனுக்கு இருக்கவே! அது யார்? யார்? என்று அவன் மூளை கேள்வி எழுப்ப நிலா ஏதோ! கேட்டதில் அவன் கவனம் அவள் புறம் தாவியது. பணம் கட்டியவன் அன்னையையும் அத்தையையும் அழைக்கும் பொழுது அந்த பெண்மணி அத்தையிடம் விடைபெறுவது போலவும் லேகாவின் முகம் கலவரமாக இருப்பது போலவும் ஒருநொடி வாணனுக்கு தெரிய அவன் அலைபேசி அடித்ததில் மீண்டும் அவன் கவனம் சிதறியது.
அதன்பின் அவர்கள் திட்டமிட்டது போல் பூங்காவுக்கு சென்று சற்று நேரம் இருந்தவர்கள், பீச்சுக்கு சென்று அலையில் விளையாடி இரவு உணவையும் முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தார்.
அன்றய பொழுது மிகவும் சந்தோசமாக நிலாவோடு கழிந்ததை எண்ணி அவளோடு பேசி மகிழ்ந்தவன் அவளை தன் கைவளைவினில் தூங்க வைத்திருக்க, கடையில் பார்த்த அந்த பெண் யார் என்று நியாபகத்தில் வந்து “பவானி அம்மா… ஈஸ்வரனுடைய மனைவி… நிலாவோட அம்மா” என்றவாறு எழுந்து அமர்ந்தான் துகிலவாணன் மௌரி.    

Advertisement