Advertisement

அத்தியாயம் 16
சுசிலா பிறக்கும் பொழுதே! அன்னை இறந்து விட்டதால் தந்தையோடு அரண்மனையில்தான் அவள் வாழ்க்கை ஆரம்பமானது. கைக்குழந்தையோடு அண்ணன் கஷ்டப்படுவதை பார்த்து சுசிலாவின் அத்தை அண்ணன் முத்துவிடம் மறுமணம் கூட செய்துகொள்ள சொல்லி கெஞ்சிப் பார்த்து விட்டார் ஆனால் முத்து மறுத்து விட்டு சுசிலா மட்டும் போதும் என்று இருக்கலானார்.
சுசிலாவின் அத்தை கீதா கூட அரண்மனையில் சமையல் வேலை பார்ப்பதால் முத்து வெளியே செல்லும் பொழுது கீதா சுசீலாவை பார்த்துக்கொள்ளலானாள்.
அரண்மனையில் உள்ளவர்களுக்கு சேவகம் செய்து பழகியவர்களுக்கு சுசீலாவை படிக்க வைக்க வேண்டும் என்ற சிந்தனையெல்லாம் இல்லை. ஐந்து வயதாகும் பொழுதே! சிறு சிறு வேலைகளை செய்விக்க ஆரம்பித்திருந்தாள் கீதா.
சுசீலாவை விட மூன்று வயது சிறியவள்தான் சந்திரலேகா. சத்ரலேகாவோடு விளையாடுவதுதான் சுசீலாவுக்கு பிடித்தமான வேலையாக இருந்தது. ஆம். அது அவளது வேலைகளில் ஒன்றாகத்தான் பார்க்கப்பட்டது.
அரண்மனைக்குள் குறிப்பிட்ட எல்லையை தாண்டி எந்த வேலையாளுக்கும் செல்ல அனுமதி இருக்காதாபொழுது சந்தராவோடு விளையாடுவதால் சுசீலாவுக்கு அந்த எல்லைகள் தகர்க்கப்பட்டிருக்க, அவள் சுதந்திரமாக அந்த அரண்மனைக்குள் வலம்வரலானாள். அத்தோடு மற்ற வேலையாட்கள் போல் இல்லாது அவள் உடையும் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது சந்திராவின் கட்டளையாக இருக்க நல்ல துணிமனைகளும் சுசீலாவுக்கு கிடைத்தன.
விளையாடும் நேரம் தவிர சுசிலா சந்திராவோடு இருக்கக் கூடாது அதுதான் சந்திராவின் அன்னை புஷ்பலேகாவின் கட்டளை. சுசீலாவும் அந்த கட்டளையை மீற நினைத்ததில்லை. சந்திராவும் மீற நினைத்ததில்லை. சந்திராவுக்கு பாடசாலை விட்டு வீடு வந்தால் விளையாட ஒரு தோழி இருக்கிறாள் என்பதே! அந்த வயதில் போதுமானதாக இருக்க வேறு எதுவம் சிந்திக்க தோன்றவில்லை. ஆனால் குழந்தை என்றுமே! குழந்தையாக இருப்பதில்லையே! சந்திரா பன்னிரண்டு வயதில் அடியெடுத்து வைத்திருந்தாள்.
புஷ்பலேகா மகள் மனதில் ஏற்றத்தாழ்வை புகுத்த முயன்றாலும், உயிருக்கு உயிராக பழகும் தோழியிடம் அதை காண்பிக்க லேகாவுக்கு மனம் வரவில்லை அன்னை என்ன செய்ய விளைகிறாள் என்று புரிந்துகொண்ட மகள் சுசீலாவிடமே! “ஏன் பாடசாலைக்கு செல்வதில்லை. ஏன் படிக்க மாட்டேன்கிறாய்? நான் உனக்கு சொல்லித்தருகிறேன்” என்று பாடம் நடாத்த சுசீலாவுக்கு அது எதுவும் மண்டைக்குள் ஏறவே! இல்லை. எதேச்சையாக இதை பார்த்த புஷ்பலேகா கொதித்து சுசிலா இனிமேல் அரண்மனைக்குள் வரக்கூடாதென்று தடை உத்தரவு போட்டு விட்டாள்.
தினமும் சந்திக்கும் தோழியை காணாமல் சந்திரா பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தாள். யாருடனும் பேசவில்லை. உணவு கூட சரியாக உண்ணவில்லை. யார் என்ன கேட்டாலும் எரிந்து விழ ஆரம்பிக்க அவளை சமாதானப்படுத்துவது புஷ்பலேகாவுக்குத்தான் பெரும் பாடாகிப்போனது.
மகள் கணவனுக்கு மட்டும்தான் அடங்குவாள் என்று கணவனிடம் முறையிட “உன் பொண்ணு உன்ன மாதிரிதான் இருப்பா..” என்று லேகாவின் தந்தை மகளை சமாதானப்படுத்த முடியாமல் கழன்றுகொள்ள
“நான் பேசுறேன்” என்று விரோசனன் தங்கையை காண சென்றான்.
“யாருக்காக உன் கோபத்தை வீட்டாளுங்க கிட்ட காட்டிக்கிட்டு இருக்க? ஒரு வேலைக்கார பெண்ணுக்காக. அர்த்தமில்லாதது லேகாம்மா..” பத்தொம்பது வயதான விரோசனன் தங்கையிடம் நேரடியாகவே! கேட்க
“அவ என் பிரெண்டு” அண்ணனின் முகம் பார்த்து தீர்க்கமாகவே! பதில் சொன்னாள் லேகா.
“சரி. ஆனாலும் அந்த பொண்ணு நம்ம வீட்டுல வேலை செய்யுற பெண் இல்லையா? ஒரு எல்லைக்குள்ளேதான் நாம அவங்களோட பழகணும் இத நீ ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குற? இன்னும் நீ சின்ன பொண்ணு இல்ல” அண்ணனும் தங்கையை நேருக்கு நேராக பார்த்து பேச
“ப்ரெண்ட்ஸ்னா அதெல்லாம் பார்க்க கூடாது. நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன். அவளுக்கு எழுத வாசிக்க தெரியாது சொல்லிக் கொடுத்தேன். அதுக்காக அவளை இங்க வரக் கூடாதுனு சொல்வாங்களா?”
நியாயமான கேள்விதான். விரோசனனும் பாடசாலை செல்லும்வரை தான் யார்? தனது வம்சம், பரம்பரை, குலம், கோத்திரம் என்று அன்னை சொன்னவைகளை பிடித்துக்கொண்டு தொங்கியவன்தான். கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தபின் அவன் மனமும் மாற ஆரம்பித்திருக்க, நம்ம அரண்மனையில் இருக்கும் பெண்ணுக்கு அடிப்படை கல்வியை கூட கொடுக்காதது மகா தவறு. அதை இவள் செய்ய நினைத்ததற்காக இந்த தண்டனை அனாவசியம் என்றுதான் தோன்றியது.
“உனக்கு ஒன்னு தெரியுமா அண்ணா உன் கூட, அப்பா கூட, ஏன் அம்மா கூட இருந்தத விட அதிக நேரம் நான் அவ கூட இருந்திருக்கேன். அவ என்ன அம்மாவ விட நல்லா பாத்துகிறா. இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது” என்றவள் கண்கள் கலங்கி இருக்க தங்கையின் கண்களில் கண்ணீரை கண்டதும் விரோசனனால் தாங்க முடியவில்லை.
“அது சரி அந்த பொண்ணத்தானே! இங்க வரக்கூடாதுன்னு அம்மா சொன்னாங்க. நீ அங்க போக்கலாம்ல. அரண்மனைக்கு பின்னாடி இருக்குற நம்ம இடத்துக்கு போக உன்ன யாரு தடுப்பாங்களாம்” என்று விரோசனன் கேக்க
“அண்ணா..” என்றவாறு கட்டிக்கொண்டவள் “இது எனக்கு தோணவே! இல்ல. தேங்க்ஸ்” என்று சிட்டாக பறந்திருந்தாள்.
இவ்வளவு பெரிய அரண்மனையில் சுசிலா சிறு வயதில் சந்திராவோடு விளையாடும் பொழுது பார்த்ததோடு சரி அவள் வயதுக்கு வந்த பிறகு விரோசனன் அவளை இரண்டு தடவைதான் பாத்திருக்கின்றான். ஒருதடவை அவன் சந்திராவை சந்திக்க அறைக்கு வரும் பொழுது மற்றுமொரு கதவின் வழியாக சுசிலா வெளியேறிக்கொண்டிருந்தாள்.
அவன் உள்ளே வருவதற்கும் அவள் வெளியே செல்வதற்கும் சரியாக இருக்க, அது அவள்தான் என்று அறிந்துக்கொண்டானே! தவிர சரியாக பார்க்கக் கூட இல்லை. இரண்டாவது தடவை சந்திராவை காண வந்தவள் அறைக்குள் விரோசனன் இருப்பதைக் கண்டு உள்ளே வராமல் ஓடி இருந்தாள்.
“நான் என்ன பேயா? பிசாசா? இந்த ஓட்டம் ஓடுறா?” என்று எண்ணிக்கொண்டவன் சாதாரண ஒரு வேலைக்கார பெண் என்று எண்ணினானே! ஒழிய அவளை பற்றி அறிந்துக்கொள்ள முனையவில்லை.
அப்படி என்ன அந்த வேலைக்கார பெண்ணிடம் இருக்கிறது என்று தங்கை அவளிடம் இவ்வளவு அன்பு செலுத்துகிறாள் என்று விரோசனனுக்கு அறிந்துகொள்ளும் ஆவல் பிறக்க தங்கையை பின் தொடர்ந்தான்.
சந்திரா சமயலறைக்கு சென்று சுசீலாவை தேட அங்கு அவளை காணாததால் கீதாவிடம் விசாரிக்க, சுசிலா தோட்டத்தில் இருப்பதாக கீதா சொன்னதும் சந்திராவின் கால்கள் ஓட்டம்மெடுக்கலானது.
விரோசனனும் வேக எட்டுக்களை எடுத்து வைத்து தங்கையை குறிப்பிட்ட இடைவெளியியில் அடைந்திருந்தான். அங்கு அவன் கண்டது ஓடி வந்த சந்திரா மூச்சு வாங்கி “சுசி..” என்று அழைத்ததும் மல்லிகை பந்தலுக்குள் இருந்து எட்டிப் பார்த்து பூவாய் சிரித்த சுசீலாவைத்தான்.
கள்ளம் கபடமாட்ட சிரிப்பு. குழந்தை முகம் மாறாது இருந்த அவள் முகம் அப்படியே! விரோசனைன் மனதில் பதிந்து போனதையும் அறியாமல் அவன் தங்கையை ஏறிட
“என்ன சந்திராமா இப்படி ஓடி வரீங்க? விழுந்துட போறீங்க… முதல்ல இப்படி வந்து உக்காருங்க” என்று சுசிலா அவளின் கையை பிடித்து அழைத்து வந்து தோட்டத்திலுள்ள பெஞ்சில் அமர்த்த அவளின் வார்த்தைகளில் மட்டுமல்லாது செய்கையிலும் சந்திராவின் மீதான பாசத்தைக் கண்டு வியந்தான் விரோசனன்.
சந்திராவை விட மூன்று வயது பெரிய பெண்ணாக இருப்பாள். எந்த சுகத்தையும் வாழ்க்கையில் அனுபவித்திருக்க மாட்டாள். சந்திராவை பார்த்து பொறாமைகொள்ளாமல் இப்படியும் பாசமாக பேச முடியுமா? நடந்து கொள்ளத்தான் முடியுமா? தாயுள்ளம் கொண்ட ஒருத்தியால் மட்டும்தான் இப்படி இருக்க முடியும்.
விரோசனன் வந்ததையோ! அவர்களை பார்த்திருப்பதையோ! அறையாமல் சுசிலா அவள் பறித்து வைத்திருந்த பூக்களை லேகாவுக்கு சூடி அழகு பார்க்க லேகாவும் சுசீலாவுக்கு சூடலானாள். விரோசனனும் அவர்களை தொந்தரவு செய்யாது அவ்விடத்தை விட்டு புன்னகையினூடாகவே!  தங்கை மற்றும், சுசிலாவின் உறவை பற்றி பேசி அதற்கு ஒரு முடிவை காண  அன்னையை காண சென்றான்.
அதன்பின் விரோசனன் தன்னை அறியாமலே! தங்கையை சந்திக்கும் பொழுது சுசீலாவை பற்றி விசாரிக்க மறக்கவில்லை. லேகாவும் அதை சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டு அன்றைய நாளில் அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்று ஒப்புவிக்க ஆரம்பித்திருந்தாள்.
நாட்கள் செல்ல செல்ல இது தொடரவே! திடிரென்று சந்திரா விரோசனனிடம் “அண்ணா நீயே சுசிய கல்யாணம் பண்ணிக்கிறியா? அப்போ சுசி நம்ம கூட நம்ம அரண்மனையிலையே! இருப்பா… நானும் அவள பிரிய வேண்டியதில்லை” என்று சொல்ல
திடுக்கிட்ட விரோசனன் “லேகாம்மா… என் கிட்ட பேசினது போல அந்த பொண்ணுகிட்ட போய் பேசி வைக்காத. இது அம்மா காதுல விழுந்தா அந்த பொண்ண இங்க இருந்து அனுப்பிடுவாங்க. அப்பொறம் நான் பேசி எந்த பிரயோஜனமும் இல்ல. பாத்துக்க” தங்கை எதோ புரியாமல் பேசுவதாக எண்ணிய விரோசனன் அச்சுறுத்துவது போல் சொல்லி விட்டு சென்றான்.
அடுத்து விரோசனன் சுசீலாவை பார்த்தது அவனின் தந்தையின் இறந்த நாளின் பொழுது. அழுதவாறு அங்கும் இங்கும் ஓடியாடி வேலைதான் செய்துகொண்டிருந்தாள்.
கல்லூரிப் படிப்பை முடித்து மேற்படிப்புக்காக லண்டன் சென்ற பொழுதுதான் தன் மனதை உணர்த்துக்கொண்டிருந்தான் விரோசனன். ஊருக்கு வரும் பொழுதே! தங்கையை அழைத்தது “பல வருடங்களுக்கு முன்பு கேட்டது இன்னமும் உன் எண்ணத்தில் இருக்குதா?” என்று கேட்க ஆனந்த அதிர்ச்சிக்குள்ளானாள் சந்திரலேகா.
அதன்பின்தான் அரண்மனையையே! கலவரத்துக்குள்ளாகி சுசீலாவை கைப்பிடித்தான் விரோசனன். சந்திரா கேட்டு முடியாது என்று சொல்ல முடியாததால் சுசீலாவால் மறுப்பு தெரிவிக்கவும் முடியவில்லை.
தலையை நிமிர்த்தி விரோசனை பார்க்கவே! அஞ்சினாள். தன்னை திருமணம் செய்ததால்தான் அவன் இப்படி ஒரு குடிசையில் வந்து கஷ்டப்படுவதாக அழுது கரையலானாள்.
அழும் மனைவியை சமாதானப்படுத்தும் வழி விரோசனனுக்கு புரியவில்லை. “ஒருவேளை நான் மட்டும்தான் இவளை விரும்பி திருமணம் செய்து கொண்டு விட்டேனோ! என் மீது துளியளவும் விருப்பமில்லாமல் திருமணம் செய்ததால்தான் அழுது கரைகிறாளோ!” என்று குழம்பிப் போனான் விரோசனன்.
“ஏய்.. சுசி முதல்ல அழுறத நிறுத்து. நிறுத்துன்னு சொல்லுறேன் இல்ல” கட்டளையாக விரோசனைன் குரல் ஒலிக்க சுசிலாவின் கண்ணீர் சட்டென்று நின்றது.
“அட… மிரட்டினால் தான் அடங்குவா போலயே!” ஓரளவுக்கு சுசீலாவையும் அவள் மனநிலையும் புரிந்துகொண்ட நடந்துகொள்ள முயற்சிக்கலானான் விரோசனன்.
விரோசனன் என்தான் தனது காதலை புரிய வைக்க முயற்சி செய்தாலும் சுசிலா ஒதுங்கியே இருக்க, அவளை புரிந்துக் கொண்டு தன்னை புரிய வைத்து வாழ்க்கையை தொடங்க நினைத்தால் சுசிலா அவனை புரிந்துக்கொள்ள முயற்சிப்பதுமில்லை. கடைசிவரைக்கும் இப்படியே வாழ்ந்து விட முடியாதே!
அன்று இரவு பூ, அல்வா என்று வாங்கிச் சென்றவன் அதிரடிதான் சரிவரும் என்று வாழ்க்கையை ஆரம்பித்திருக்க, அதன்பின்தான் சுசீலாவும் அழும் நிலையிலிருந்து வெக்கிச் சிவக்கும் நிலைக்கு மாறி இருந்தாள்.
காசு, பணம் இல்லை என்பதை தவிர அவர்களது வாழ்க்கையில் எந்த குறையும் இருக்கவில்லை. சுசீலாவுக்கு படிப்பறிவு இருக்காவிட்டாலும் சித்தியோடு சந்தைக்கு சென்று காய்கறிகள், மளிகை சாமான்கள், பொருட்கள் என எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு வருந்திருக்கிறாள். அந்த அனுபவத்தில் வீட்டு நிருவாகத்தை அவளால் தனியாக கவனித்துக்கொள்ள முடிந்தது. விரோசனனும் அவளை செலவு செய்ய விட்டு கண்காணிப்பான். அவள் ஒழுங்காகவும், சரியாகவும் செய்வதையும் கண்டு பெருமிதம் கொண்டான்.
“எனக்கு நீ உனக்கு நான்” என்று இருவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக வாழும் பொழுதுதான் சுசிலா வாணனை சுமந்தாள். அவளால் தனியாக எல்லா வேலைகளையும் செய்ய முடியாதென்று விரோசனன் அத்தனை வேலைகளிலும் பங்கெடுப்பான். மசக்கையில் அவதியுற்ற போதிலும் சரி, வாணனை பெத்தெடுத்து வீடு வந்த போதும் சரி விரோசனன் தான் அருகில் இருந்து பார்த்துக்கொண்டான்.
“இந்த வேலைகளையெல்லாம் நீங்க பார்க்கணுமா?” என்று சுசிலா கடிந்து கொண்ட போதிலும் “நம்ம குழந்தைக்கு நாம தான் செய்யணும் அப்போதான் நம்ம மேல பாசம் வரும்” என்பான்.
அதே! போல்தான் வாணனும் அவர்கள் மீது உயிராய் இருந்தான். அதனால்தான் இவ்வளவு பழிவெறி அவன் நெஞ்சில் எரிந்துக்கொண்டிருக்கிறதோ! என்னவோ!
கஷ்டப்படும் காலமெல்லாம் வாணன் படித்து முன்னேறி சொந்த காலில் நின்று விடுவான் என்ற நம்பிக்கை சுசீலாவுக்கு இருந்தது. இன்று அதை கண்கூடாக பார்த்து விட்டாள்.
சுசீலாவுக்கு மகன் மாடமளிகை கட்டி வாழ்வதை விட கல்யாணம் பண்ணி குழந்தை, குடும்பம் என்று இருப்பதைக் கண்டுதான் ரொம்பவும் சந்தோஷமடைந்தாள்.
சட்டென்று வாணன் அவன் மேலே உள்ள அறையில் தூங்குவதாகவும், நிலா சந்திராவோடு தங்கி இருப்பதாகவும் கூற தாயுள்ளம் பலவாறு சிந்திக்கலானது.
“என்ன வாணா நீ… இப்படி சொன்னா அம்மா பயந்துடுவாங்க இல்ல” என்றவாறே வந்த லேகா “அது வந்து அண்ணி டிலிவரி டேட் வேற நெருங்குது இல்ல. படியெல்லாம் ஏற முடியாது மூச்சு வாங்குது. நைட்டுல அடிக்கடி வாஷ்ரூம் வேற போறா அதான் என் கூட இருக்கா” என்று லேகா சொல்லி சமாளிக்க
“இதெல்லாம் ஒரு காரணமா? நானும், அவரும் தனியாத்தான் இவன வளர்த்தோம். இவனுக்கு இவன் பொண்டாட்டிய பாக்குறத விட என்ன வேல இருக்கு? ஏன் தொரைக்கு கீழ தூங்க முடியாதாமா?” என்று மகனை முறைக்க,
“அதில்லாமா… ஒழுங்கா தூங்கலானா காலைல ஆபீஸ் போய் வேல பார்க்க முடியாது அதான்” என்று வாணன் இழுக்க
“போட்டேனா வை…” என்று மகனை அடிக்க கையை ஓங்கிய சுசிலா “உங்க அப்பா நாள் முழுக்க டாக்சி ஓட்டுறவரு அவர் என்னையும், உன்னையும் பாத்துகிட்டு டக்சியும் ஓட்டுவாரு. உன்னால கொஞ்சம் நேரம் தூக்கம் முழிக்க முடியாதோ! உன் பொண்டாட்டிக்காகவும், புள்ளைக்காகவும் இதுகூட பண்ண மாட்டியா? கொழந்த பொறக்குறவரைக்கும்தானே! அதுக்கு பிறகு நான் பாத்துக்கிறேன்” என்ற சுசிலா கட்டளையாக சொல்ல வாணன் அப்படியும் இப்படியும் தலையை அசைத்து வைத்தான்.
அவனுக்கும்! அவன் மகவின் அசைவை உணர்ந்தபின் மீண்டும் ஒருமுறை நிலாவின் வயிற்றை தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற பேராவல் உள்ளுக்குள் எழத்தான் செய்தது. அதை அவளிடம் சொல்லவும் முடியாது.
அவளோடு ஒரே அறையில்லையா? என்று நினைக்கும் பொழுது வேப்பங்காயாக கசந்தது. அன்னை சொல்லை தட்டவும் முடியாது. எல்லாவற்றுக்கும் மேல் அவனோடு ஒரே அறையில் தங்க நிலா சம்மதிக்க வேண்டும் என்ன நடக்கப் போகிறதோ! என்று கலவரமடைந்தான் வாணன்.
இரவு உணவின் பொழுது வாணன் வந்து அமரவும் “எங்க டா உன் பொண்டாட்டி” என்று சுசிலா வாணனை கேக்க
உஷாரானவன் “அத்த கூட்டிகிட்டு வருவாங்க ம்மா…” என்றான்.
“அறிவிருக்கா உனக்கு? இந்த மாதிரி நேரத்துலதான் முன்ன விட ரொம்ப அக்கறையாவும், பாசமாகவும் பாத்துக்கணும். நீ பாட்டுக்கு வந்து உக்காருற. போ… போய் அவள கூட்டிட்டு வா… இந்த மாதிரி நேரத்துல ஒழுங்கா சாப்பிட கூட மாட்டா. ஊட்டி விடு” என்று விரட்ட நொந்தவாறே வாணன் எழுந்து சென்று லேகாவின் அறைக் கதவை தட்டலானான்.
“கூடவே! இல்லனா எப்படி வளர்ந்து நிக்குறான். கொஞ்சம் கூட பொறுப்பில்லாம” அம்மாவாக அவதாரம் எடுத்திருந்தாள் சுசிலா.
லேகா வந்து என்ன? ஏது? என்று விசாரிக்க, அன்னை உணவுண்ண அழைத்ததாக கூறியவன் அங்கேயே! நிற்க,
“சரி வரேன் நீ போய் சாப்பிடு” என்று லேகா சொல்ல
“நான் மாட்டேன். என் பொண்டாடி இல்லாம போனா.. என் அம்மா சோறு போட மாட்டேன்னு சொல்லிட்டாங்க. இதுல நான் அவளுக்கு ஊட்டி வேற விடணுமாம்” நிலா எங்கே எனப்பார்த்தவாறு வாணன் பேச
சத்தமாக சிரித்த லேகா “என்ன டா வாணா உனக்கு வந்த சோதனை. பொண்டாட்டியே! இல்லனு சொன்ன இப்போ பாத்தியா. அம்மா ரூபத்துல ஆப்பு வந்திருக்கு”
“அட போங்க அத்த. உங்களுக்காக அவள பொண்டாட்டியா ஏத்துக்கிட்ட எனக்கு. அம்மாக்காக இதெல்லாம் செய்ய முடியாத என்ன?” அசால்டாக வாணன் சொல்ல
“அப்படியே உனக்காகவும் அவளோட குடும்பம் நடாத்து” என்ற லேகா லேசாக சிரிக்க குளியலறை கதவு திறந்துக் கொண்டு நிலா வரவும் மூவரும் உணவு மேசையை நோக்கி நடந்தனர்.
வாணன் உணவு மேசையில் நிலா மீது பாச மழையை பொழிந்தவாறு உணவூட்ட, என்ன நடக்கிறது என்று புரியாமலே! அவன் கையால் உணவு உண்ணலானாள் நிலா.
சந்திராவும் வற்புறுத்த,  சுசிலா இருப்பதால் மறுக்கவும் முடியவில்லை. ஆனால் நடப்பது எல்லாம் நாடகம் என்று மற்றும் புரிய மனம் வெம்பியவளின் கண்களின் ஓரம் ஈரமானது. அதை மறைக்க முடியாமல் கண்ணீர் துளி உருண்டு விழ,
“என்ன நிலாம்மா காரம் அதிகமா?” என்று லேகா பதறியவாறு தண்ணீர் குவளையை நகர்த்த
“இல்லையே! காரம் கொறச்சிதானே! போட்டேன்” என்ற சுசிலா மகனை முறைத்தவாறு “என்ன டா ஊட்டுறவன் பாத்து ஊட்ட மாட்டியா? பச்சை மொளகா இருந்த எடுத்து ஓரமா போட்டு ஊட்டு. மருமகள் கண்ணுல தண்ணி வர வச்சிட்டியே! பொறுப்பில்லாத பய” என்று திட்ட
கடுப்பான வாணன் “அம்மா நீ எனக்கு அம்மாவா? இல்ல இவளுக்கு அம்மாவா? வந்ததுல இருந்து வேண்டாத மருமக மாதிரி என்ன கரிச்சி கொட்டிக்கிட்டே இருக்க” என்று அன்னையை முறைக்க,
“ஏன் டா சொல்ல மாட்ட? வந்ததுல இருந்து நானும் பாத்துகிட்டு தானே! இருக்கேன். அவ ஒரு பக்கமா இருக்கா, நீ ஒரு பக்கமா இருக்க, புள்ளய மட்டும் பெத்துக்கிட்டா போதுமா?” மகனை பதிலுக்கு முறைத்தாள் சுசிலா.
“என்னமா நீ வந்து ஒருநாள் கூட ஆகல. அதுக்குள்ள என்னமோ! நாங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு பிரிஞ்சி இருக்கற மாதிரி பேசுற? நாங்க என்ன சண்டை போட்டு பிருஞ்சா  இருக்கோம்” என்று நிலாவையே! கேக்க வாணனை நன்றாக முறைத்தாள் நிலா.
லேகாவுக்கு சிரிப்பாக இருந்தது. “என்ன அண்ணி நீங்க நேத்துதான் அவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணி வந்தோம் அந்த டயட் கூட இன்னும் போகல. அதான் நாங்க ஒவ்வொரு பக்கமா இருக்கோம். உங்களுக்கு வித்தியாசமா தெரியுது. மனச போட்டு குழப்பிக்காதீங்க. என் பொண்ணு உங்க பையன நல்லா பாத்துகிறா. உங்க பையனும் என் பொண்ண தாங்கு தாங்குனு தாங்குறான். இல்லையா நிலா” என்று நிலாவை இழுக்க
வேறு வழியில்லாமல் “ஆமாம் அத்த. சும்மா கண்டதையும் யோசிச்சு. மனச போட்டு குழப்பிக்காதீங்க. சந்த்ராமா.. அந்த சீமந்த கேசட்டை அத்தைக்கு போட்டு காட்டுங்க” என்று விட்டு நிலா அமைதியாக
“என்னவோ! சொல்லுறீங்க” தலையசைத்தவாறு சுசிலா உண்ண ஆரம்பித்தாள்.        
  உண்டு முடித்த உடன் “வா நிலா நாம நம்ம ரூம்லயே! தூங்கலாம். இத்தனை நாளும் என் கூடன் என் ரூம்ல தூங்கின. அத்த வந்தா அவங்க உண்ண பாத்துகிறதா சொல்லி அவங்க ரூம்க்கு கூட்டிகிட்டு போறாங்க அது என் அம்மாக்கு பிடிக்கல” நிலாக்கு புரிய வைக்க வேண்டியே! வாணன் பேச
நிலாவுக்கு அது தெளிவாக புரிந்திருந்தாலும் “உங்களுக்கு எதுக்குங்க சிரமம். நான் சந்த்ரம்மா கூடவே! தூங்குறேன்” என்று நிலா நழுவ
“நல்ல புருஷன் நல்ல பொண்டாட்டி. இப்படி இருந்தா புள்ள சந்த்ரம்மா மேலதான் பாசமா இருப்பாங்க, உங்க ரெண்டு பேர் மேலையும் பாசமா இருக்க மாட்டாங்க” என்று சுசிலா சொல்ல  லேகாவுக்கு இவர்களை ஒன்று சேர்க்க இதுதான் சரியான வழி என்று தோன்ற
“அதுக்கு என்ன அண்ணி.. குழந்தையை நான் வளத்துகிறேன். இதுக்கா ரெண்டத்தையும் திருப்ப ஹனிமூன் அனுப்பிடலாம்” என்று விட்டு சிரிக்க
“அம்மா…: என்று நிலா லேகாவை ஏறிட வாணன் என்ன செய்வது என்று பெண்களை மாறிமாறி பார்கலானான்.
“போமா.. போ.. உன் புருஷன் கூட போய் தூங்கு. நான் இன்னக்கி என் சுசி கூட தூங்குறேன். வா சுசி..” என்று சுசிலாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றதுமில்லாது கதவை சாத்தி இருந்தாள் லேகா.
“ஏன் லேகா உண்மையிலயே! இவங்க ரெண்டு பேருக்கிடையிலும் எந்த பிரச்சினையுமில்லேல” சுசிலா கவலையாக கேக்க
“நிலாவை ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டேன் சுசி… அவ என் முந்தானைய பிடிச்சிகிட்டே! தொங்குவா.. எல்லாத்துக்கும் நான் வேணும். அதான் எல்லா பிரச்சினைக்கும் காரணம் நீ அவள விரட்டு. நான் வாணன விரட்டுறேன். எல்லாம் சரியாகும்” என்று லேகா சொல்ல சுசீலாவும் சம்மதமாக தலையசைத்தாள். 
“சரி வா நாம போலாம்” என்ற வாணன் நிலாவின் கையை பிடிக்க போக
“ஒன்றும் தேவ இல்ல” என்று அவன் கையை உதறியவள் படியில் ஏற அவள் பின்னாடியே! ஏறினான் வாணன்.
அறைக்கு வந்ததும் வராததுமாக நிலா கட்டிலில் அரண் போல் தலையணைகளை அடுக்குவதைக் கண்டு கடுப்பானவன். “இவள் இருக்கும் நிலைமைக்கு நான் இவள் மேல் பாஞ்சிடுவேனா? ரொம்ப ஓவராதான் பண்ணுறா?” முணுமுணுத்தவாறு குளியலறைக்குள் புகுந்தவன் வெளியே வர நிலா வயிற்றின் மேல் தலையணையை வைத்துக்கொண்டு தூங்குவதைக் கண்டு “ஓஹ்.. பில்லோவ் அரண் நமக்குள் இல்லையா? பாப்பாகா” உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன் கட்டிலின் மறுபுறம் வந்து படுத்துக்கொண்டு நிலா தூங்கி விட்டாளா என்று பார்க்க சீரான மூச்சுக்கு கற்று அவளிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.
“தலையை வச்சதும் நிம்மதியா தூங்குறா. எதிரியோடு கோட்டைக்குள் இருக்கோம்னு கொஞ்சம் கூட பயம் இல்ல” வசனம் பேசி சிரித்தவனின் எண்ணம் முழுவதும் வயிற்றில் இருக்கும் சிசுவின் மீது இருக்க, குழந்தை துடிக்கிறதா என்று தொட்டுப்பார்க்க மனம் தூண்டியது.
கைவைத்தால் நிலா எழுந்துகொள்வாளோ! என்ற அச்சம் வேறு வர நிலாவின் அருகில் கையை கொண்டு செல்வதும்,  பின் இழுப்பதுமாக போராடிய வாணன் மெதுவாக அவளை நெருங்கி இருக்க, நிலா நன்றாக அவன் புறம் திரும்பி இருந்தாள்.
“இப்படி படுத்தா வயித்துல இருக்குற குழந்தைக்கு அடிபடாதா? அவளை கொஞ்சம் நகர்த்தும் முயற்சியில் இறங்கியவனுக்கு தோல்விதான் மிஞ்சியது. நிலாவை அசைக்க முடியவில்லை.
அவள் தூங்கும் பொழுது எத்தனை தடவை அசால்டாக சுமந்து இடமாற்றம் செய்திருப்பான். ஏன் தன்னால் இப்பொழுது மட்டும் செய்ய முடியவில்லை என்று யோசித்தவனுக்கு வயிற்றில் அடிபடும் என்ற அச்சம்தான் காரணம் என்று புரிந்தது.
அவளை தொட்டு நகர முயற்சித்ததில் அச்சம் நீங்கி இருக்க, வயிற்றின் மீது கையை வைத்து தன் மகவோடு பேச ஆரம்பித்தான் துகிலவாணன் மௌரி.

Advertisement