Advertisement

அத்தியாயம் 13
வாணனின் வாரிசை சுமக்க கனவு கண்டு கொண்டிருந்த நிலா வாணனின் அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு அவனை விட்டு வந்த பின் அவள் கருவில் உருவாக்கி இருக்கும் வாரிசை அழிக்க மட்டும் நினைக்கவே! இல்லை. அதற்கு காரணம் பிறைநிலா அவளை வயிற்ரில் சுமந்துகொண்டிருக்கும் பொழுது எவ்வாறெல்லாம் உணர்ந்தாள் என்று சிறு வயதில் நிலாவுக்கு கதை கதையாக சொன்னது ஆழமாக அவள் மனதில் பதிந்து போய் இருந்ததோடு, தானும் தாய்மையடையும் தருணம் தன் குழந்தையை சுமக்கும் பொழுது எவ்வாறெல்லாம் உணருவோம் என்று கற்பனை கதைகளை படித்து வளர்ந்த அவள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்ததும்தான்.  அந்த பாக்கியம் கைகூடியதும் அதை அணுஅணுவாக அனுபவிக்கலானாள் நிலா.  
தனது குழந்தையின் அசைவு தெரிய ஆரம்பிக்கும் முன் இருந்தே! குழந்தையிடம் பேச ஆரம்பித்தவள் நூலகத்தில் அமரும் பொழுதெல்லாம் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்திருக்க,
“இல்ல வேணாம் நீயும் வளர்ந்தா என்ன மாதிரி கற்பனைக் கதைகள் மீது காதல் கொண்டு ஒருவனிடம் ஏமாந்து போவாய். அவ்வாறு நடக்கக் கூடாது. அதனால் நீ வீர சாகசங்கள் நிறைந்த வீரர்களின் கதைகளையும், எதிரியின் சூட்சமங்களை அறிந்து எவ்வாறு தாக்க வேண்டும் என்று எழுதப்பட்ட கதைகளையும்தான் படிக்க வேண்டும்” என்று வீம்புக்கென்றே அவ்வாறான கதைகளையும், இதிகாசங்களையும் படிக்க ஆரம்பித்தாள்.
தனக்கு பிடிக்கா விட்டாலும் தன் குழந்தை இதைத்தான் படிக்க வேண்டும் என்று நிலா தேர்ந்தெடுத்திருப்பதும் அந்த வம்சாவழியின் இரத்தத்தின் உந்துதல் என்று பாவம் அவள் அறிந்திருக்கவில்லை.
அவள் என்ன செய்தாலும்! குழந்தையிடம் பேசிக்கொண்டே! செய்ய லேகாவும் அதை புன்னகையினூடாக பார்த்திருப்பதோடு நிலா அறியாமல் வீடியோவும் எடுத்து வைப்பாள்.
வயிறும் வளர்ந்துக்கொண்டே வர அன்னைக்கும் மகவுக்கும் நல்ல புரிதல் இருக்கும் போலும் நிலாவை அதிகம் தொல்லைக்கு உட்படுத்தாமல் அவள் வேலைகளை செய்ய முடிந்தது. ஆனாலும் இந்த நேரத்தில் இதை செய்ய வேண்டும் என்ற நிலாவின் மனம் உந்திக்கொண்டே இருக்க, அது அவள் மகவின் வேண்டுகோள் என்று புரிந்துக்கொள்வாள்.
சிலநேரம் பூந்தோட்டத்தில் தஞ்சமடைபவள் பூக்களை பற்றியும், வண்ணாத்திப்பூச்சிகளை பற்றியும் ஆராய்ச்சி செய்வதில் மும்முரம் காட்டுவாள். வயிற்றில் இருக்கும் குழந்தை எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும். பெரியவனானால் அவன் விரும்பியதை செய்யட்டும் என்ற எண்ணம் அன்னைக்கு.  
இதற்கு நடுவில் வாணனின் நினைவுகளோடு மனம் போராட, அதை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்துவதும், ஜெகன் மூலம் அவனை பற்றி அறிந்துக்கொள்வதும், பின் முறைப்பதுமாக கணவன் மீது காதலோடு வெறுப்பையும் வளர்த்துக்கொள்ள அது குழந்தையை எந்த விதத்தில் பாதிக்கும் என்ற சிந்தனை வேறு மனதில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.
தன்னை பழிவாங்க நினைக்கும் வாணன் நிலாவின் குழந்தையை உரிமைக் கொண்டாட ஒருகாலமும் நினைக்க மாட்டான் என்றுதான் நிலா எண்ணி இருந்தாள். அவ்வாறு நினைத்துதான் “பார் நீ வேண்டாம் என்ற நான் என் குழந்தையோடு சந்தோஷமாகத்தான் இருக்கின்றேன்” என்று சொல்ல வேண்டும் என்பதுக்காகவேண்டியும், அவனால் ஏற்பட்ட களங்கத்தை அவன்தான் போக்க வேண்டும் என்பதற்காக வேண்டியும் வளைகாப்புக்கு அவனை வர அனுமதி வழங்கி இருந்தாள் நிலா.
ஆனால் வணனோ! குழந்தையை நிலாவிடமிருந்து பிரிக்க எண்ணிக்கொண்டுதான் வருகை தருகிறான் என்று நிலா கிஞ்சத்துக்கும்  நினைத்து பார்த்திருக்கவில்லை.
 வளைகாப்பு நாளும் அழகாக விடிந்திருக்க, அரண்மனையே! விழாக்கோலம் பூண்டிருந்தது. சுவர், படிக்கட்டு, என்று எங்கேயும் விடாமல் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்க, வந்தவர்களை வரவேற்று அமரவைக்கவென்றே ஒரு விசாலமான மண்டபமே பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
“வளைகாப்பை அரண்மனையில்தான் வைக்க வேண்டுமா? விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள் இங்கு இருக்கே! வருபவர்களை நம்ப முடியாதே! ஏதாவது ஒன்றை ஆசைப்பட்டு எடுத்துக்கொண்டு சென்று விட்டால் நஷ்டம் நமக்குத்தானே! ஏதாவது ஒரு மண்டபத்தில் வைத்துக்கொள்ளலாமே!” என்று நிலா லேகாவிடம் தாழ்மையான வேண்டுகோளை விடுத்த போது,
“வரும் கேஸ்ட்டை  சந்தேகப்படுவதே! முதல் தப்பு” என்ற லேகா நிலாவை கூர்மையாக பார்க்க நிலாவின் தலை தொங்கி விட்டது. சத்தமாக சிரித்த லேகா “விலைமதிக்க முடியாத பொருட்களை திருட வேண்டும் என்றே வருபவர்களும் உண்டு. அப்படியும் சில ஈனபுத்தி உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அதை நீ நாசுக்காக ஆசைப்பட்டு எடுத்து செல்வார்கள் என்று ஏன் கூறுகிறாய்? திருடர்கள் என்று நேரடியாகவே! சொல்லலாமே!”
நிலா ஆச்சரியமாக பார்க்க “இது இன்று நேற்றல்ல. காலம்காலமாக நடக்குறதுதானே! விலைமதிக்க முடியாத பொருள் தன்னிடம் இருக்க வேண்டும் என்று திருடும் கூட்டம் ஒரு புறம். அதை திருடி வித்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று எண்ணும் கூட்டம் ஒரு புறம். சோ சீமந்தம் பூங்கால மண்டபம் கட்டி நடைபெறும். பங்க்ஷன் நடந்து கெஸ்ட் எல்லாம் வெளிய போகும்வரைக்கும் யாருக்கும் அரண்மனைக்குள்ள செல்ல அனுமதி கிடையாது” முடிவாக லேகா சொல்ல
“யாராவது நமக்கு தெரியாம போனா? இல்ல வீட்டாளுங்களுக்கே! போக வேண்டிய தேவை எற்பட்டா?”
“பங்க்ஷன் வேற காலைலதானே! எல்லா இடத்திலையும் கேமரா வச்சிருக்கேன். நம்பிக்கையானவங்கதான் நம்ம கூட இருக்காங்க. பொருள் காணாம போகும் என்கிற கவலைய விட்டுட்டு உன் புருஷன எப்படி பேஸ் பண்ணுறதுனு யோசி” லேகா அலுங்காமல் குண்டை தூக்கிப் போட
“நான் எதுக்கு பேஸ் பண்ணனும்? அவர் பாட்டுக்கு வந்து ஒரு ஓரமா நின்னுட்டு போக போறாரு” நிலா கழுத்தை நொடிக்க,
“ஆமா அவ்வளவு தூரத்துல இருக்குறவன வர வச்சது அதுக்குதான் பாரு, அவன்தான் உன் புருஷன்னு வரவங்க முன்னாடி சொன்னா அவன் உனக்கு மஞ்சள், சந்தனம் பூசணும், வளையல் போடணும்” லேகா முடிக்க முன்
“என்னது?” நிலா முறைக்க,
“என்ன முறைப்பு? புருஷன் இல்லாமதான் புள்ள வந்துருச்சோ! அவன்தானே! வேண்டாத பேர உருவாக்கி இருக்கான். பங்க்ஷன்ல உன் புருஷன் கூட ஜோடியா நின்னு போட்டோக்கு போஸ் கொடு அத மீடியால போடலாம். உன் புருஷனுக்கு நோஸ் கட் கொடுக்கலாம். எப்படி என் ஐடியை?”
“ஐடியா நல்லாத்தான் இருக்கு. அந்த திமிரு புடிச்ச சிங்கம் என் பக்கத்துல நிக்குமான்னுதான் தெரியல” நிலா சோகமாக
“விடு பார்த்துக்கலாம்” என்ற லேகாவின் உதடுகளில் மர்மப்புன்னகை விரிந்தது.
இவ்வாறுதான் வாணனின் வரவை இவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். மூன்று நாளுக்கு முன்னாடி சொன்னால் நிச்சயமாக அவனால் உடனே! வர முடியாது விழா அன்று காலையிதான் வருவான் என்று திட்டமிட்டே லேகா அவ்வாறு அழைப்பு விடுத்திருந்தாள்.
ஒரு ராணியின் தோரணையில் தான் நிலாவின் உடையும், அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
“எதுக்கு சந்த்ரம்மா? இதெல்லாம்” என்று நிலா சினுங்க
“எனக்குதான் இந்த கொடுப்பன எல்லாம் இல்ல. நீயாவது எல்லாத்தையும் அனுபவிக்கனும் நிலாம்மா. நான் சொல்லாமலையே! நீ தான் இந்த அரண்மனைக்கு சொந்தக்காரின்னு பாக்குறவங்களுக்கு தெரிய வேணாமா?” என்று அவளின் நாடியை தடவி விட்டு இங்கயே! இரு பங்க்ஷன் ஆரம்பிக்கும் பொழுது உன்ன அழைச்சிட்டு போகிறேன்” என்று லேகா கிழே சென்றாள்.
“பும்சுவன சீமந்தம்” என்ற சிறப்பு யாகத்துக்கு லேகா ஏற்பாடு செய்திருக்க, யாகமும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அழைப்பு விடுத்தவர்களெல்லாம் வருகை தந்துகொண்டிருக்க, அனைவரையும் இன்முகமாக வரவேற்று அமரவைக்கலானாள் லேகா. தொழில்சார்ந்தவர்களோடு லேகாவின் அன்னைவழி, தந்தைவழியென சொந்தபந்தங்களும் அதில் அடக்கம்.
“ஏம்மா சந்திரலேகா அண்ணன் பையன கண்டு பிடிச்சதே! எங்க கிட்ட சொல்லல. சொல்லாம கொள்ளாம அவனுக்கு கல்யாணத்தையும் பண்ணி வச்சிருக்க எந்த குலமோ! கோத்திரமோ! நீ பண்ணி வச்சியா? இல்ல. அவனாவே! பண்ணிகிட்டானா? நம்ம குடும்பத்துல இல்லாத பொண்ணா?” வந்ததும் வராததுமாக லேகாவின் சித்தி பேச
“என் பொண்ணைத்தான் சித்தி கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கேன். இல்லனா சொத்து வெளிய போயிடுமில்ல” நக்கலாக லேகா பேச
“உன் பொண்ணா? உனக்குத்தான் கல்யாணமே! ஆகளையே!” அக்கா பொண்ணு போய்ட்டா சொத்து சொந்த பந்தங்களுக்கு வந்து சேரும் என்று ஆவலாக காத்திருக்க, அண்ணன் மகனாம், பொண்ணாம் என்ன கதை இது என்று வெறுப்பை கக்கினாள் சித்தி 
“கல்யாணம் ஆகம குழந்தை பொறக்காதா? என்ன சித்தி தமாஷ் பண்ணுறீங்க? எனக்கு பொறந்த பொண்ண அவமான சின்னம்ன்னு கொல்ல சொல்லி அம்மாக்கு சொன்னதே! நீங்கதானே! எனக்கு தெரியாதுன்னு நெனைசீங்களா? வந்தோமா? வாழ்த்தினோமான்னு போய்கிட்டே இருக்கணும். வாலாட்ட நினைச்சீங்க, உங்க குடும்பத்துல நடக்குற பிரச்சினைக்கு நான் பொறுப்பில்ல. ஏற்கனவே! பண்ண பாவத்துக்குத்தான். உங்க கடைசி பொண்ணுக்கு கொழந்த பாக்கியம் இல்லாம போச்சு. மறந்துடாதீங்க” லேகா மிரட்ட சித்தி கப்சிப் என்றானாள்.
 அழைப்பு விடுத்தவர்கள் அனைவரும் வந்து சேர்ந்திருக்க, வாணனை இன்னும் காணவில்லை. வருவானா? மாட்டானா? எனற பதட்டம் லேகாவை தொற்றிக்கொள்ள ஜெகனுக்கு அழைப்பு விடுத்தாள்.
“சார் காலையிலையே! புறப்பட்டு வந்துட்டதாக போன் பண்ணினாரே! மேம்” என்றவாறு ஜெகன் அவள் முன்னாடி வந்து நிற்க,
“அப்போ நீங்க அவன் கூட வரலையா? என்ன ஜெகன் நீங்க?” லேகா கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே!
“ஓஹ்.. சார் தானா உங்க ஸ்பை. லைட்டா சந்தேகம் இருந்துகிட்டே இருந்தது. இன்னக்கி கையும் களவுமா பிடிச்சிட்டேன்” என்று லேகாவின் முன்னால் வந்து நின்றான் வாணன்.
“நீ எப்போ வந்த?” விருந்தாளிகள் வருகை தரும் முன்பாகவே! லேகா அங்குதான் நின்றிருந்தாள். அவள் கண்ணை மறைத்து இவன் எவ்வாறு உள்ளே! வந்தான். யோசனையாக அவன் முகம் பார்க்க
ஜெகனை ஒரு பார்வை பார்க்கவும் அதை புரிந்துக்கொண்டு அவன் அங்கிருந்து நகர “எர்லியா வந்ததே! என் பொண்டாட்டிய பார்க்கத்தான். நீங்கதான் அவளை அரண்மனைல வச்சி பூட்டி வச்சிருக்கீங்களே! யாரையும் உள்ள விட மாட்டேங்குறாங்க” என்று வாசலில் இருக்கும் நான்கு காவலாளிகளை கை காட்ட சத்தமாக சிரிக்கலானாள் லேகா.
“என்ன டா வாணா உனக்கு வந்த சோதனை. எட்டு மாசம் கழிச்சு கடல் கடந்து, கண்டம் கடந்து, கட்டின பொண்டாட்டிய பாக்க வந்திருக்குற இளவசரனுக்கு பொண்டாட்டிய கண்ணுல காட்ட மாட்டுங்குறாங்களே! ஐயோ பாவம்” என்று கிண்டல் செய்ய
கடுப்பான வாணன் “நான் அவ கிட்ட தனியா பேசணும் அத்த”
“பேசலாம் என்ன? அவசரம் பங்க்ஷன் நல்ல படியா முடியட்டும். அப்பொறம் பேசலாம்” இப்போ போய் அங்க உக்காரு. நான் நிலாவை கூட்டிட்டு வரேன்”
“நானும் வரேன்” என்று வாணனும் வர
“அந்த நாலு பேரும் உன்ன கழுத்த பிடிச்சி வெளிய தள்ளுறத உன் ஸ்டாப்ஸ் பார்த்தாங்கன்னா உனக்குத்தான் அசிங்கம்” என்று காவலாளிகளைக் காட்ட
“ஆமா எதுக்கு என் ஸ்டாப வர வச்சீங்க? என்ன பிளான் பண்ணி இருக்கீங்க?” வாணன் கையை கட்டிக்கொண்டு விசாரிக்க,
“உன் பொண்டாட்டியோட பங்க்ஷன் பா… உன் சார்பா நாலு பேர் வர வேணாமா?” கிண்டலாகவே! மொழிந்த லேகா யாருக்கோ அழைப்பு விடுத்து நிலாவை அழைத்து வரும்படி உத்தரவிட்டாள்.
நிறைமாத வயிற்றை சுமந்தவாறு கன்னங்கள் சிவக்க நடந்து வரும் நிலாவிடம் லேகா விரைய
நிலாவின் மாற்றங்களை அணுஅணுவாக கண்ணில் நிரப்பிக் கொண்ட வணனோ! மனதில் தோன்றும் எண்ணங்களை கட்டுப்படுத்த முடியாமல் “நல்ல சாப்பிட்டு சாப்பிட்டு பன்னு மாதிரி ஆகிட்டா” அவளின் உப்பிய கன்னங்களை பார்த்து கூறியவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
 நடந்து வந்து கொண்டிருந்த நிலாவும் கண்களை சுழற்றி வாணன் எங்கேயாவது தென்படுகிறானா என்றுதான் பார்த்தாள். அவள் பார்க்கும் பொழுது தலையை திருப்பியவனை கண்டு மனம் சுணங்கியவள் “அப்படி என்ன வெறுப்பு என் மேல? நான் என்ன பண்ணிட்டேன் இவனுக்கு” என்று அவனை பார்க்கவே! இல்லை.
நிலாவோடு நடந்துகொண்டிருந்த லேகா வாணனை அழைக்க அத்தையிடம் விரைந்தான் வாணன். அவனை பார்த்து நிலா முறைக்க, அவளை பார்த்து முறைத்தான் வாணன்.
“ரெண்டு பேரும் கொஞ்சம் சிரிச்சா மாதிரி இருக்கீங்களா? இல்லனா உங்க சண்டை நாளைக்கு பேப்பர்ல வந்திடும்” சிரித்தவாறு லேகா சொல்ல அடுத்தகணம் இருவரின் முகமும் புன்னகையை தத்தெடுத்துக்கொண்டது.
வாணனிடம் ஒரு மாலையை கொடுத்து “இத நிலா கழுத்துல போடு” என்று லேகா சொல்ல வாணன் நிலாவை முறைத்தவாறே போட நிலாவும் அவனை முறைத்து விட்டு லேகாவை பார்த்து கண்களையே! முறையிட்டாள்.
இருவரையும் முறைத்து அங்கிருந்த இருக்கையில் அமரும்படி கூறிய லேகா உரையாற்ற ஆரம்பித்தாள்.
இருவரும் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன்னால் பூக்கள், பல்வேறு வகையான பழவகைகள், சந்தனம், குங்குமம், மஞ்சள், கண்ணாடி வளையல்கள், மேலும் பல்வேறு வகையான இனிப்பு வகைகளும் வைக்கப்பட்டிருந்ததோடு, சர்க்கரைப் பொங்கல், லெமன் சாதம், தேங்காய் சாதம், நெய்புலாவ் சாதம் போன்ற பல்வேறு விதமான சாதவகைகளும் சிறு சிறு கிண்ணங்களில் வைக்கப்பட்டிருந்தன.
“எல்லாருக்குமே! தெரியும் வாணன் என் அண்ணன் பையன் என்று. நிலா வாணனோட மனைவி மட்டுமல்ல என் பொண்ணும் கூட, வந்திருக்கிற அனைவரும் ரெண்டு பேரையும் வாழ்த்தி குழந்தையும் நல்லபடியா பிறக்கணும்னு பிரத்தினையோட வயிறார சாப்பிட்டுட்டு போங்க” என்று விட்டு “எழுந்திரு வாணா உன் பொண்டாட்டிக்கு குங்குமம் வச்சி விட்டு மஞ்சள், சந்தானம் பூசி விடு” என்று சொல்ல
“உங்க பொண்ணா? சொல்லவே! இல்ல” நக்கல் தெறிக்கும் குரலில் லேகாவை கிண்டல் செய்ய
“உன் பொண்டாட்டி எப்படியும் எனக்கு பொண்ணுதான். இருந்தாலும் நான் தத்தெடுத்துகிட்டேன்” என்று அசால்டாக சொல்ல
“என்னது?” என்று வாணன் கண்கள் தெறிக்கும் அளவுக்கு அதிர்ச்சியாக  அவர்களையே பாத்திருந்தாள் நிலா.
“அப்பொறம் அதிர்ச்சியாகலாம் பாரு பெருசுங்க வரிசை கட்டி நிக்குதுங்க சீக்கிரம் ஆரம்பிச்சி வை” மிரட்டும் தொனியில் சொல்ல
“நான் பண்ண மாட்டேன். வளர்ப்பு பொண்ணுக்கெல்லாம் வளைகாப்பு தான் ஒரு கேடு” சத்தமாகவே முணுமுணுக்க, அது நிலாவின் காதிலும் விழுந்து கண்கள் கலங்க ஆரம்பிக்க
“அப்போ அவ வயித்துல வளருற உன் குழந்தையை பத்தி உனக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்ல. அப்படித்தானே!” லேகா தீர்க்கமாக கேக்க
அவன் வந்ததே! குழந்தைக்காகத்தான். மறு பேச்சின்றி நிலாவுக்கு குங்குமத்தை வைத்து விட்டவன் லேகா சொன்னது போல் சந்தனம், மஞ்சள் தடவி இரு கைகளிலும் வளையல் அணிவித்து, பன்னீர் தெளித்தான். வளையல் அணிவிக்கும் பொழுது லேகா உசாராக தான் வாங்கி வைத்திருந்த வைர கற்கள் பதித்திருந்த ஆறு ஜோடி வளையல்களை கொடுத்து போடும்படி வாணனை ஏவ அத்தையை முறைக்க முடியாமல் அதை நிலாவுக்கு அணிவித்திருந்தான் வாணன். நிலாவின் மனது சற்று அமைதியான உணர்வு.
வாணனின் சொந்தபந்தங்கள் மட்டுமல்ல அவனது பணியாளர்களும் அங்கு இருக்கிறார்கள் என்பதை லேகாவின் மூலம் அறிந்துகொண்டபின் வாணன் ஏற்படுத்திய கறையை அவனே! துடைத்து விட்டது போல அவன் வைத்த குங்குமம் அவன்தான் அவள் கணவன் என்று ஊருக்கே சொல்லி இருக்க, வேறென்ன அவளுக்கு வேண்டும். கண்களிலிருந்து பெரிய துளியாய் இரண்டு கண்ணீர் துளிகள் உருண்டு வாணனின் கைகளிலையே! விழ,
“குங்குமம் கண்ணுல விழுந்திருச்சா?” வாணனும் தன்னையறியாமல் கேட்டிருக்க அவனை தனது பெரிய விழிகளை உருட்டி முயன்ற மட்டும் உறுத்து விளிக்கலானாள் நிலா.
சுதாரித்தவன் “முண்ட கன்னி பாக்குறத பாரு முட்ட கண்ண வச்சிக்கிட்டு” அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
அதன் பின் லேகா இனிப்பு பண்டங்களை ஊட்டி விட்டு பின்பு அறுகரிசி இட்டு ஆசிர்வாதம் செய்ய அதை தொடர்ந்து உறவினர்கள், நண்பர்கள் என வந்திருக்கும் அனைவரும் சந்தனம், குங்குமம் வைத்து பன்னீர் தெளித்து, அறுகரிசி இட்டு நிலாவை ஆசிர்வதித்தனர்.
இறுதியாக ஆரத்தியெடுத்து நிலாவுக்கு மற்றுமன்றி வாணனையும் அமர்த்தி திருஷ்டி கழிக்க சொன்னாள் லேகா.
வந்தவர்களை உணவுண்ண அழைத்து செல்லும்படி பொறுப்பை வாணனிடம் ஒப்படைத்து விட்டு மகளின் அருகிலையே! அமர்ந்திருந்தாள். எல்லாவகையான உணவுகளையும் அவளுக்கு ஊட்டிவிட்டு அழகு பார்த்து மகிழ்ந்தாள்.
அவர்களின் பாசப்பிணைப்பை பார்த்து வாணானுக்கு பொறாமை பற்றிக்கொண்டு வந்தது. “உறவென்று கிடைத்த ஒரே அத்தையோடு அவனால் செல்லம் கொஞ்ச என்ன?  ஒழுங்காக பேசக் கூட முடியவில்லை. இவள் என்ன டா என்றால் உரிமையாக எல்லாம் செய்கிறாள். விடக் கூடாது”
நிலாவின் அருகில் வந்த வாணனின் ஆபீசில் வேலை பார்க்கும் சில பெண்கள் அவளிடம் மன்னிப்பு வேண்டி நிற்க அவள் இருந்த மனநிலையில் சட்டென்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“இல்ல மேடம் உங்கள போய் நாங்க தப்பா புரிஞ்சி கிட்டோம். எல்லாம் அந்த பிரபாகரனால் வந்தது” என்று ரூபா பேச முகம் இறுகி நின்றாள் நிலா.
லேகா அவள் கையை பற்றிக்கொண்டு அவர்களை பேசத் தூண்டி விட “ஆமாம் மேம். நீங்க சார பிராங்க் பண்ண அன்னக்கி அப்படி ட்ரெஸ் போட்டுக்கிட்டு வந்திருக்கீங்க இது தெரியாம. நீங்க ரொம்ப ஏழ்மையான பொண்ணுன்னு நினைச்சிட்டேன்” என்று ரூபா சொல்ல
“அப்படி யாரு உங்க கிட்ட சொன்னாங்க?” நிலா கேக்க
“ஜெகன் சார் தான் சொன்னாரு” அது லேகாவின் ஏற்பாடு என்று புரிய லேகாவை திரும்பிப்பார்த்து விட்டு நிலா மௌனமானாள்.  
“சார பார்க்க நீங்க அடிக்கடி வந்ததால உங்கள தப்பா பேச ஆரம்பிச்சிட்டாங்க அந்த புரளியை கிளப்பினதே! பிரபாகரன்தான்” என்று ஒருத்தி சொல்ல
“அவனுக்கு நல்லா வேணும். சார் நல்லா போட்டாரு அன்னக்கி” என்று ஒருத்தி சொல்ல
“என்னக்கி” என்று லேகா எடுத்துக் கொடுக்க
“அதான் மேம். அன்னக்கி உங்கள தொடப் பார்த்தானே!…” திக்கித் திணறி அப்பெண் சொல்லி முடிக்க நிலாவால் அங்கு இருக்கவே! பிடிக்கவில்லை.
“அந்த சம்பவம் நடக்கலைனா மேடம் யார்னு கூட நமக்கு தெரியாம போய் இருந்திருக்கும்” என்று ஒருத்தி சொல்ல நிலா இது என்ன புதுக்கதை என்று பார்த்தாள்.
“ஆமா சார் என் ஆள் மேலையே கைய வைக்கிறியா? என் ஆபீஸ்ல பொண்ணுங்க மேல கை வைக்கிறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா? யாரும் இதுவரைக்கும் எந்த கம்ப்லைன்ட்டும் கொடுக்கல. கொடுத்திருந்தாங்க மவனே! உன்ன நார்நாரா கிழிச்சிருப்பேன். என்றவரு நேரா நம்ம கிட்ட கூட்டிட்டு வந்து “உங்களுக்கு இவன் மேல என்ன கோபம் இருக்கோ! அத்தனையும் காட்டுங்க, உயிர் மட்டும் போகக் கூடாது. ஆஸ்பிடல் செலவு மொத்தைத்தையும் நான் பாத்துக்கிறேன்”
“என்ன ஆம்பிளைக தானே! நீங்க உங்க வீட்டுலையும் அம்மா.. அக்கா.. தங்கச்சி, அண்ணின்னு இருப்பாங்க அவங்களுக்கு ஒன்னுனா இப்படி அமைதியா இருப்பீங்களா?” ஆண்களையும் தூண்டி விட்டிருந்தான் வாணன்.
“அப்பொறம் மேம் நாங்க அடிச்ச அடிலையே! குத்துயிரும் கொலையுயிருமா இருந்தவனை ஜெகன் சார் தான் ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணாரு”
“அங்க பார்த்தா அவனுக்கு கல்யாணமாகி ரெண்டு பொம்பள புள்ள வேற இருக்கு”
“ஏன் தான் இப்படி இருக்காங்களோ!” ஒருத்தி அங்கலாய்க்க
“அவன் பொண்டாட்டி வேற நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அவனை டைவோர்ஸ் பண்ணுற லெவலுக்கு போய்ட்டாங்க, சார் தான் அது எதோ மனநோய் போல அது தவிர பொம்பள சாவகாசமா எல்லாம் அவனுக்கு இல்ல. நாம ஒரு நல்ல டாக்டரை பார்க்கலாம்னு சொல்லி அவன் குடும்பம் பிரியாம பார்த்துக்கிட்டாரு”
“நம்ம சாருக்கு எவ்வளவு நல்ல மனசு” ஒருத்தி பூரித்து போய் கூற
“முதல்ல இவன் போய் பார்க்க வேண்டியது தானே!” நிலா மனதுக்கு கவுண்டர் கொடுக்க
“அது மட்டுமா? அவனை வேலைல இருந்து தூக்குவாருனு பார்த்தா. அவன் கிட்ட போய் என்ன சொன்னாரு தெரியுமா? உன்ன வேலைல இருந்து தூக்கி எங்கயும் வேலை கிடைக்க முடியாம பண்ண என்னால முடியும் ஆனா அப்படி பண்ண மாட்டேன். அப்படி பண்ணா கஷ்டப்படுறது உன் புள்ளைகளும், பொண்டாட்டியும் தான். அதனால நீ என் கிட்ட வேலைக்கு வர, இந்த ஸ்டாப் கூடத்தான் வேலை செய்யுற. என்று ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு”
“அவனால வேலைய விட்டும் போக முடியாதே! அஞ்சு வருஷத்துக்கு கான்ட்ராக்ட்ல சைன் போட்டிருக்கான் பயபுள்ள. வசமா சிக்கிட்டான்”
“மானம் போய், மரியாதை போய், இப்போ ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி ஆபீஸ் வாரான் போறான்” என்று எல்லாவற்றையும் ஒப்புவித்த அந்த பெண்கள் கூட்டம் சிரித்தவாறு விடைபெற்றனர்.
“என்ன நிலாம்மா… இப்போ சந்தோசமா? யாரெல்லாம் உன்ன பேசினங்களோ! அவங்களே! இப்போ உன்ன பத்தி நல்ல விதமா பேசுறாங்க. வாணனும் தப்பானவன் இல்லனு புரிஞ்சிகிட்டியா?”
“அவர் அன்னைக்கே! அவங்க கிட்ட நிலா என் மனைவினு சொல்லி இருக்கலாம்ல? ஏன் சொல்ல ஏன் சந்த்ரம்மா ஏன்”
“அத அவன் கிட்ட கேக்கலாம்” அப்போதைக்கு அவளை சமாதானப்படுத்தினாள் லேகா
வந்திருந்த அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், வளையல் வழங்கி வருகை தந்ததற்கு மரியாதையை தெரிவித்து நினைவு சின்னங்களும் வழங்கி வழியனுப்பி வைத்து விட்டு அனைவரும் அரண்மனைக்குள் வர
வாணன் நிலாவின் கையை பிடித்து நிறுத்தி “இரு நான் உன் கிட்ட பேசணும்” என்று தடுக்க
“என்ன வாணன் இங்க வாசல்ல வச்சுதான் பேசணுமா? ரொம்ப நேரமா ரெஸ்ட்டே இல்லாம இருக்கா பாரு. அவ ரொம்ப சோர்வா தெரியிறா. கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும். அப்பொறம் பேசு” என்று லேகா நிலாவை அழைத்துக்கொண்டு அவளது அறைக்கு செல்ல பல்லைக் கடித்தான் வாணன்.
மாலையாகியும் நிலாவை சந்திக்க முடியாமல் வாணன் அறையறையாக நிலாவை தேட அவளோ நூலகத்தில் அமர்ந்து புத்தகத்தில் மூழ்கி இருப்பதைக் கண்டு கடுப்பானவன்
“என்ன உனக்கு அவ்வளவு திமிரா? பேசணும்னு சொன்னா? என்ன எதுன்னு? கேக்க மாட்டியா?” என்று கத்த
தந்தையின் சத்தத்தால் வயிற்றிலிருந்த சிசு அசையவே! கண்ணை விரித்த நிலா அனிச்சையாக வாணனின் கையை இழுத்து வயிற்றில் வைக்க தன் மகவின் அசைவை முதன் முறையாக உணர்ந்து சிலிர்த்து நின்றான் துகிலவாணன் மௌரி.

   

Advertisement