Advertisement

அத்தியாயம் 12
எட்டு மாதங்களுக்கு முன்
நிலா கண்விழித்தது ஒரு பெரிய அறையில். தான் காண்பது கனவா? என்ற சந்தேகம் வேறு அவளுக்கு உண்டாக கண்ணைக் கசக்கிக் கொண்டவள் சுற்றிலும் பார்க்க எதோ ஒரு ஹோட்டல் அறை போலவும் தோன்ற. ஹோட்டல் அறையா? அல்லது அரண்மனையா? என்று குழம்பியவளின் மனக்கண்ணில் ஜெகனும் சந்த்ரலேகாவும் வர தான் மீண்டும் கடத்தப்பட்டு விட்டோம் என்று நினைக்கையில் இங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று அவசர அவசரமாக எழுந்தவள் கதவை நோக்கி ஓடி இருந்தாள்.
கதவை திறந்தவள் சென்றது ஒரு மினி வரவேற்பறைக்கு அங்கு சந்திரலேகா கையில் காபி மக்கோடு அமர்ந்திருக்க நிலா அப்படியே நின்று விட லேகா அவளை பார்த்து விட்டாள்.
“ஹாய் நிலா நல்லா தூங்கினியா? வா காபி சாப்பிடலாம்” என்று அழைத்தவாறு அவளுக்கு ஒரு மக்கில் காபியை ஊற்ற நிலாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
“பிரேக்னன்ட்டா இருக்குற பொண்ணு இப்படி வெறும் வயித்தோட இருக்கலாமா? வா வந்து முதல்ல இந்த காப்பிய சாப்பிடு. ரொம்ப நேரம் தூங்கினதுல தலை வேற வலிக்கும், சூடா சாப்பிட்டா இதமா இருக்கும் வாம்மா..”
“என்னது நான் ப்ரெக்னட்டா இருக்கேனா?” அதிர்ச்சியடைந்தவள் “நான் பிரேக்னன்ட்டா எல்லாம் இல்ல” லேகா அன்பாக அழைக்கவும் மறுக்க தோன்றாமல் வந்தமர்ந்தாள்.
“நீ பிரேக்னன்ட்டா இருக்க. உன்ன பார்த்தாலே! தெரியுது” என்று லேகா சிரிக்க
“நான் வாந்தியே! எடுக்கல. நான் எப்படி பிரேக்னன்ட்டாக முடியும்” முறைத்தாள் நிலா.
புன்னகைத்த லேகா “கல்யாண வீட்டுல சீப்ப ஒளிச்சு வச்சா கல்யாணம் நடக்காது என்கிறது மாதிரிதான் இருக்கு நீ சொல்லுறது. வாந்தி எடுத்தா… தான் பிரேக்னன்ட்டா? ரொம்ப மனஉளைச்சல்ல இருக்க, மயக்கம் போட்டு விழுற, அடிக்கடி சாப்பிடுறியா என்ன?” என்று கேள்விகளை அடுக்க நிலாவின் முகம் யோசனைக்குள்ளானது.
அதெல்லாத்தையும் விடு “பீரியட்ஸ் டேட்ஸ் கூடவா… மறந்து போகும்?”
“ஆ.. ஆமா..” என்ற நிலாவின் கண்கள் கலங்குவதோடு கைகளும் வயிற்றை இறுக பிடித்துக்கொண்டன.
அன்னை இறந்த நாளுக்கு இரண்டு நாள் முதல்லயே! வர வேண்டியது. அதன் பின் அதை பற்றி யோசிக்கக் கூட அவளால் முடியவில்லையே!
வாணனோடு சந்தோசமாக வாழ்ந்த பொழுதெல்லாம் எதிர்பார்த்து காத்திருந்த தருணம் இது. எத்தனை தடவை கற்பனையில் அவனிடம் தான் அம்மாவாக போகிறதை வித விதமாக சொல்லி பார்த்திருப்பாள். சொல்லும் பொழுது அவன் முக மாறுதலை கவனிக்க ஆவலாக காத்திருந்தாளே! நிஜத்தில் நடக்கும் பொழுது அவளால் சந்தோசப் படக் கூட முடியாதபடி பண்ணி விட்டானே! அந்த ராட்சசன். கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் உருண்டு விழ,
“இந்த மாதிரி நேரத்துல அழக் கூடாது நிலா. நல்லா சாப்பிட்டு, நல்லா ரெஸ்ட் எடுத்து, நல்ல மனநிலைல ஆரோக்கியமா இருக்கணும். அப்போதான் பொறக்க போற குழந்தை ஆரோக்கியமா பிறக்கும். புரியுதா?”
சந்த்ரலேகாவின் வார்த்தைகள் நிலாவுக்கு தெம்பையூட்ட “நீங்க வாணனுக்கு யாரு?”  நேரடியாகவே! கேட்டு விட்டாள்.
“நான் வாணனோட அத்த. என் பேர் சந்திரலேகா மௌரி”  என்றவள் காப்பியை ஒரு மிடற் அருந்த
“என்னது அத்தையா? அக்கா மாதிரி இருக்கீங்க” சத்தமாகவே! சொன்னாள் நிலா.
அவள் சொன்னதை பெரிதாக கண்டுகொள்ளாத லேகா “வாணனுக்கு அத்தனா உனக்கு அம்மா. நீ என்ன அம்மானே! கூப்பிடலாம்” என்று புன்னகை செய்ய நிலா அவளை ஆராய்ச்சியாக பார்த்தாள்.
புடவை அணிந்திருந்தாள். நேஷனல் காலர் வைத்த கை நீண்ட சட்டை. தலைமுடியை போனி டைல் போட்டிருக்க வயது நாற்பது தாண்டி இருக்காது என்ற தோற்றம்.
“அம்மானு எல்லாம் சொல்ல முடியாது வேணும்னா அண்ணின்னு சொல்லலாம்” என்று விட்டு நிலா சிரிக்க
“தப்பு நிலா உறவுகளின் மதிப்பே! உரிமையா.. முறையா கூப்பிடறதாலதான் இருக்கு” என்ற சந்திரலேகா நிலாவை தீர்க்கமாக பார்க்க நிலா தலையை உலுக்கிக் கொண்டு
“நீங்களும் வாணனும் பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் உங்க ரெண்டு பேருக்கும் நூறு வித்தியாசங்கள் சொல்லலாம்” என்றவள் லேகாவின் பேச்சை பொருட்படுத்தாது காபியை அருந்தலானாள்.
“ஆண் பெண் என்பதுலையே! நூறு வித்தியாசம் வந்து விடும் நிலாம்மா…” என்ற லேகா சிரிக்க
“நான் சொன்னது முகத்துல” என்று அன்னையானவளை முறைக்கலானாள்.
“சரி சொல்லு பார்க்கலாம்” என்றவளும் சுமூகமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முயன்றாள்.
“ம்ம்.. உங்க ஹெயர் சில்கி வாணனுக்கு சுருட்ட முடி. நெத்தி உங்களுக்கு சின்னது வாணனுக்கு கொஞ்சம் அகலமா இருக்கும். புருவம் உங்களது வில் மாதிரி வலஞ்சி இருக்கு. வாணனுக்கு நேரா அடர்த்தியா இருக்கு. மூக்கு உங்களுக்கு அளவா அம்சமா இருக்கு. வாணனுக்கு கூரா கீழ கொஞ்சம் விரிஞ்சி இருக்கும். ரெண்டு பேரோட மேலுதடும் ஒரே மாதிரித்தான் ஆனா கீழுதடு வேற மாதிரி. தாடை உங்களுக்கு கொஞ்சம் நீண்டும் வாணனுக்கு தட்டையா, கன்னம் உங்களுக்கு உப்பி இருக்கு. வாணனுக்கு சதையே இல்லாம இறுகி இருக்கு. முக அமைப்பு உங்களுக்கு ஓவல் ஷேப்ல இருக்கு வாணனுக்கு செவ்வக அமைப்பு. சொல்ல போனா ரெண்டு பேரோட கண்ணும், கண் இமையும் தான் ஒரே மாதிரி இருக்கு. அதான் பார்த்த உடனே! ஒரே மாதிரின்னு தெரியிறீங்க” நிலா நீளமா பேசி முடிக்க
“சபாஷ். பார்த்த கொஞ்சம் நேரத்துலையே! என்ன இவ்வளவு கவனிச்சு இருக்கியே! வாணன் கூட வாழ்ந்த வாழ்க்கைல அவனை சரியா பார்த்து, புரிஞ்சிக்கிட்டுதான் இருப்ப இல்ல. உனக்கும் வாணனுக்கும் எதோ ஒரு பிரச்சினை இருக்குனு எனக்கு புரியுது. அது என்னனு சொன்னா தீர்த்து வைக்க நான் முயற்சி செய்கிறேன்” லேகா சரியா பாயிண்டை பிடித்து பேச
“அது உங்களால முடியாது” என்றவள் என்ன நினைத்தாளோ! நடந்த எல்லாவற்றையும் மடைதிறந்த வெள்ளம் போல் சொல்லி முடித்தாள்.
எங்கயோ! தப்பு நடந்திருக்கிறது என்று சந்த்ரலேகாவுக்கு புரிந்தது. “சரி நீ வாணன் கூட சேர்ந்து வாழ ஆசை படுறியா? நான் சொன்னா வாணன் கேப்பான். என்னதான் பிரச்சினைனு பேசிப்பார்களாம்” பழிவாங்கத்தான் எல்லாம் செய்ததாக சொன்ன வாணன் காரணத்தை நிலாவிடம் கூறி இருக்காததால் லேகா இவ்வாறு பேச
“அவரே மனசு மாறி வந்தாலும் நான் ஏத்துக்க மாட்டேன்” நிலா உறுதியாக சொல்ல
“அப்போ கொழந்த?” “உங்க ஆட்டத்துல பாவம் ஒன்னுமரியாத பிஞ்சு மாட்டிகிட்டு முழிக்க போகுது” என்று அச்சுறுத்தினாள் லேகா.  
“அதுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இது என் கொழந்த. நீங்க அவர் கிட்ட சொல்ல நினச்சா.. நான் இங்க இருந்து போய்டுவேன்” என்று லேகாவின் முகத்தை தீவிரமாக பார்க்க, லேகாவின் முகத்தில் புன்னகை அரும்புகள்.
மேட்கொண்டு எதையும் பேசாது “அப்படியே உன் அம்மாவோட பிடிவாதம் உன் கிட்ட இருக்கு”
“எங்க அம்மாவ உங்களுக்கு தெரியுமா?” நிலா விழி விரிக்க
“பொண்ணுகளுக்கு பிடிவாதம், பொறாமை, கோபம் இந்த மாதிரி குணங்கள் வந்தா… அது அம்மா கிட்ட இருந்துதான் வந்ததா சொல்வாங்க. அதான் சொன்னேன். நீ ஒன்னும் தப்பா எடுத்துக்காத” என்று புன்னகைத்தவள் “காபி சாப்பிட்டுட்டு, குளிச்சிட்டு வா.. நீ இருந்த ரூம்தான் உன் ரூம். உனக்கான துணி, ஜுவெல்லஸ் எல்லாம் இருக்கு. ப்ரேக்பஸ்ட் சாப்பிடலாம். அப்பொறம் பேசலாம்” என்று விட்டு எழுந்து சென்று விட நிலாவும் குளிக்க சென்றாள்.
தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்த லேகாவுக்கு இவர்கள் இருவரையும் எவ்வாறு ஒன்று சேர்க்க போகிறோம் என்ற கவலை தொற்றிக்கொண்டிருக்க “என்ன டா பண்ணி வச்சிருக்க வாணா… குணத்திலையும் அப்படியே! என்ன மாதிரியே! இருக்கியே!”
அன்னையின் புகைப்படத்தின் முன் வந்து நின்றவள் “உங்க பிடிவாதம் நம்ம குடும்பத்தை எந்த மாதிரியான சூழ்நிலையில கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பாத்தீங்களா? அன்னக்கி அண்ணன் ஆசபட்டது போல சுசிலா அண்ணியையே! கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி இருந்தா வாணன் நம்ம வீட்டுல பிறந்து, வளர்ந்திருப்பான். அண்ணனும் உயிரோட அண்ணியோட சந்தோசமா வாழ்ந்திருப்பாரு. வாணனும் சந்தோசமா இருந்திருப்பான். நானும் உங்கள பழிவாங்க காதல் கத்தரிக்காய்னு போய் இருக்க மாட்டேன். என்ன செய்ய எல்லாம் விதி. பாத்தீங்களா? எங்க சுத்தி எங்க வந்து நிக்குதுனு.
நீங்க சாகும் போது கூட அண்ணனை பத்தி ஒரு வார்த்த கேட்கல. அப்படி என்ன தப்பு பண்ணிட்டான் அவன். காதலிச்சு கல்யாணம் பண்ணது குத்தமா? இல்ல ஒரு வேலைக்கார பெண்ணை கல்யாணம் பண்ணது குத்தமா? உங்க பேச்சு மீறினதுதான் குத்தமா? இருக்கிறதே! ஒரே பையன் அவன் சந்தோசம் முக்கியம்னு நீங்க நினைக்கலையே! ஆனா நான் உங்கள மாதிரி இல்ல. வாணன் கிட்ட பொய் சொல்லிட்டேன். சாகும் போது நீங்க அண்ணனை குடும்பத்தோடு தேடி கூட்டிட்டு வரும்படி கூறியதா பொய் சொல்லிட்டேன்.
அந்த ஒரு பொய் எனக்கு என் அண்ணன் மகனை என் கிட்ட கொண்டு வந்து கொடுத்திருச்சு. பொண்ணு வந்துட்டா, பேரன் பேத்தி வருவாங்க, உங்கள மாதிரி அனாதையா சாக மாட்டேன். அவங்க ரெண்டு பேரையும் ஒன்னு சேர்த்து வாழ வைப்பேன். என் அண்ணன் பையனும் என் பொண்ணும் சந்தோசமா வாழத்தான் போறாங்க” கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறி இருந்தாள் லேகா. 
 குளித்துக் கொண்டிருந்த நிலாவின் எண்ணங்களில் நடந்தவைகளை நடப்பவைகளை மாறிமாறி வந்து மோத லேகாவை நம்பலாமா? கூடாத என்ற என்ற குழப்பம் வேறு வந்து ஒட்டிக்கொண்டது.
“பார்க்க நல்லவங்களாதா தெரியிறாங்க, நல்லாத்தான் பேசுறாங்க” லேகாவுக்கு உடனே! சர்ட்டிபிகேட் கொடுக்க
“ஆமா பார்க்க வாணன் மாதிரி இருக்குறதால சொல்லுறியாக்கும்” அவள் மனம் தூற்ற
“அவங்க ஒன்னும் வாணன் மாதிரி இல்ல” உடனே லேகாவுக்காக வக்காலத்து வாங்கலானாள் நிலா.
“நீ இப்படியே எல்லாரையும் கண்மூடித்தனமான நம்பிகிட்டு இரு” மீண்டும் மனம் தூற்ற என்ன செய்வது என்று குழப்பியவள் ஒரு முடிவோடு குளித்து விட்டு வந்து அந்த அறையிலுள்ள கப்போடை திறந்து அணிய துணியை பார்த்தால் வாணன் வாங்கிக் குவித்தது போல் வித விதமாக சுடிதாரும், சாரிகளும், பாவாடைகளும் அழகாக அடுக்கப்பட்டிருந்தன.
பெருமூச்சு விட்டுக்கொண்டவள் கையில் கிடைத்த ஒன்றை எடுத்து அணிந்துக்கொண்டு சாப்பாட்டறை எங்கே என பார்க்க ஒரு பெண் வந்து அவளை அழைத்து செல்ல லேகா அவளுக்காக காத்திருந்தாள்.
நிலா வரும்வரை மூக்குக்கண்ணாடியை அணிந்து அன்றைய செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருந்தவள் நிலாவைக் கண்டதும் கண்ணாடியை கழட்டியவாறு பத்திரிகையையும் கண்ணாடியையும் அருகிலிருந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு இன்முகமாக நிலாவை எழுந்து நின்று வரவேற்ற விதமே! அவளின் நிமிர்வைக் காட்ட நிலாவுக்கு லேகாவை பிடித்துப் போனது.
“வா சாப்பிடலாம்” என்று அவள் அருகில் அமர்த்திக் கொள்ள அங்கே வித விதமான உணவுகள் இருந்தாலும் அளவாக இருந்தன.
“நாம ரெண்டு பேர் அது போக நீ ரெண்டு பேருக்கு சாப்பிடணும் இல்ல. நல்லா சாப்பிடு” என்று பரிமாற”
“நானே போட்டுக்கிறேன் நீங்க சாப்பிடுங்க” என்று நிலா சொல்ல
“அதுவும் சரிதான். விருந்தாளியத்தான் கவனிக்கணும் வீட்டம்மாவை எதுக்கு கவனிக்கணும்” என்று லேகா சூட்சகமாக பேச
நிலா அதைக் கண்டு கொள்ளாமல் “எனக்கு ஒரு வேலை தேடித் தரீங்களா?” என்று லேகாவின் முகம் பார்த்து நிற்க
“வாணனோட வைப் நீ. இந்த சொத்துக்கே! சொந்தக்காரி நீ. நீ சம்பளத்துக்கு வேலை செய்யணுமா?” லேகா சிரிக்கலானாள்.
“என் புருஷனுக்கு சொத்து இருந்து என்ன பயன்? மனசாட்சியே! இல்லாத போது. அதான் பொண்டாட்டியே! இல்லனு சொல்லிட்டாரே!” கண்கள் கலங்க நிலா தலைகுனிய
“முதல்ல சாப்பிடு நிலாம்மா.. உன் கிட்ட சில விஷயங்கள் பேசணும்” என்ற லேகா அமைதியாக உண்ண ஆரம்பித்தாள்.
சாப்பிட்டு முடித்ததும் லேகா நிலாவை அழைத்துக்கொண்டு அவளது மினி அரண்மனையை சுற்றி காட்ட அழைத்து சென்றாள்.
“இது எங்க தாத்தா கட்டினது நிலா” என்று ஆரம்பித்து அதன் வரலாறு, பூர்வீகம் என்று எல்லா கதைகளையும் சுருக்கமாக சொல்லி முடித்தவள் சுவரிலிருந்த புகைப்படங்களை வரிசையாக காட்டிக்கொண்டு வந்து
“இது என் அம்மா, அப்பா, என் அண்ணா இது நான்” என்று அறிமுகப்படுத்த
“அப்போ வாணனோட குடும்ப புகைப்படம்” ஏன் கேக்கின்றோம் என்று அறியாமளையே! கேட்டிருந்தாள் நிலா.
“என்ன அவசரம் குழந்தை நல்லபடியா பிறக்கட்டும் மூணு பேரும் ஒண்ணா இருந்து எடுக்கலாம்” என்று லேகா சிரிக்க
அவசரமாக மறுத்த நிலா “இல்ல நான் கேட்டது வாணனோட அம்மா, அப்பா..”
“இதோ என் அண்ணன்தான் வாணனோட அப்பா..” என்ற லேகா விரோசனன் எவ்வாறு சுசீலாவை திருமணம் செய்தான் என்பது முதல் இறந்ததுவரை சொல்லி முடிக்க
“அப்பா உயிரோடல இல்ல. அம்மா உன் கூட பேசுற நிலைமையிலும் இல்ல” வாணன் அன்று சொன்னதுக்கான அர்த்தம் புரிய “அப்போ வாணனோட அம்மா இன்னமும் மெண்டல் ஹாஸ்பிடல்லதான் இருக்காங்களா?” வாணனின் மேல் கொஞ்சம் அனுதாபம் தோன்ற தலையை உலுக்கியவள் புருவம் உயர்த்தி வாயால் காற்றை ஊதி தன்னை சமநிலைக் கொண்டு வந்தாள் நிலா. 
“பல வருஷமா அப்படித்தான் இருக்காங்க. வாணனின் பொண்டாட்டின்னு உன்னையும் வாணனின் குழந்தையும் பார்த்தாதான் குணமாவங்களோ! என்னமோ! லேகா ஒரு முடிவோடு பேச நிலா முறைத்தாள்.
“சும்மா சும்மா முறைக்காத.. நீ வாணன் விட்டு பிரிஞ்சி போனாதான் அவன் கட்டின கதை கூட உண்மையாகும். அவன் கூடவே! இருந்து நீதான் அவனுக்கு ஒரே பொண்டாட்டின்னு உலகத்துக்கே! நிரூபி. அவனுக்குத்தான்” நிலாவை தீர்க்கமாக பார்த்தாள் லேகா.
“நிரூபிச்சிட்டு? அவன் கூட சேர்ந்து வாழ சொல்லுறீங்களா? அது மட்டும் நடக்காது” நெஞ்சம் முழுவதும் வாணன் மீதும் வெறுப்பு மட்டுமே! எஞ்சி இருக்க, கழுத்தை நொடித்தாள் நிலா.
“சேர்ந்து வாழணும்னு நீ மட்டும் நினச்சா பத்தாதுமா.. அவனும் நினைக்கணும்” கிண்டலாக மொழிந்த லேகா “வாணன் அடிப்படையில் தப்பானவன் கிடையாது நிலா. அவனுக்குள்ள ஆயிரம் நல்ல குணங்கள் இருக்கு. கூட இருந்த உனக்கு தெரியாதா? அவன் உன் மேல கோபப்படுறதுக்கும் பழி வாங்குற வெறில அலைறதுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்” தனக்கு தெரிந்த உண்மையை சொல்ல இது நேரமுமில்லை. சூழ்நிலையுமில்லை என்பதால் லேகா இவ்வாறு பேச
“என்ன காரணம் இருக்க போகுது? எல்லாம் பணத்த திமிர்தான்” என்றவளின் முகம் வாணனை நினைத்து வெறுப்பில் தகித்தது.
மனம் வெம்பிய லேகா “சரி விடு நிலா இப்போ நீ இருக்குற நிலமைல உன்ன டென்ஷன் பண்ணுற மாதிரி எதையும் நீ யோசிக்காத சரியா.. வா போலாம். சும்மா இருந்தா தான் உன் மூள கண்டதையும் யோசிக்கும். வா உனக்கு நான் வேலை தரேன். சம்பளம் நீ சொல்லுறதுதான் உனக்கு எவ்வளவு வேணுமோ! எடுத்துக்கோ!” என்று அங்கிருந்து அழைத்து சென்றது ஒரு நூலகத்துக்கு.
“இதுல எங்க தாத்தா காலத்துல இருந்து சேமிக்கப்பட்ட புத்தகங்கள் எல்லாம் பத்திரமா அடுக்கப்பட்டிருக்கு. உனக்கு வேண்டியதை படிக்கலாம். உனக்கும் பொழுது போகும். அது போக எனக்கு நம்ம தொழில் விஷயங்களை கம்பியூட்டர்ல ஏத்திக் கொடு. அது ரெண்டும்தான் உன் வேல. இப்போ நான் வெளிய போகணும் டின்னர் டைம் மீட் பண்ணலாம். உனக்கு லன்ச் ரெடியானதும் மீனம்மா வந்து சொல்வாங்க சாப்பிட்டு உன் வேலைகளை தொடரலாம். ரெஸ்ட் எடுக்குறதா இருந்தாலும் ஓகே” என்று லேகா விடைபெற அவள் சொன்னவைகளில் பாதி கூட நிலாவின் காதில் விழுந்திருக்காது “ஆ”வென அந்த நூலகத்தையே! பாத்திருந்தாள்.
முகாட்டுக் கூரை எத்தனை அடி இருக்கும் என்று தெரியவில்லை அத்தனை உயரம்வரை புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்ததோடு, அவற்றை எடுக்க அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டும் வித்தியாசமாக, அழகாக கண்ணை கவர்ந்து.
“அந்த காலத்துலயே! இப்படியெல்லாம் கட்டி இருக்காங்க” தான் பார்த்த கற்பனை கதைகளை வருவது போல் இருக்கவே! மெய்மறந்து ரசிக்கலானாள் நிலா.
நிலாவின் பொழுது நூலத்தோடும், அந்த அரண்மனையின் பூந்தோட்டத்திலும், லேகாவோடும் கழிய ஆரம்பிக்க, லேகாவும் அவளை மனதளவில் திடப்படுத்தும் முயற்சியிலும், உடலளவில் ஆரோக்கியமாகவும் பார்த்துக்கொண்டாள்.
என்னதான் நிலா வாணனின் நினைவுளை துரத்த முயற்சி செய்தாலும் எதோ ஒரு வடிவில் அவள் முன்னால் வாணன் வந்து நின்றான்.
அந்த அரண்மனையில் எங்கும் அவனின் ஒரு புகைப்படம் கூட இல்லை. அவள் வந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் அவன் இங்கு வரவில்லை. அவன் சொத்தை உரிமைக் கொண்டாட எண்ணமே! அவனுக்கு இல்லையா? அப்போ என்னிடம் நடந்துகொண்டது அவனின் பணத்திமிரினால் இல்லையா? நிலாவின் மனதில் கேள்விகளும் எழ, லேகாவிடம் கேட்கவும் முடியாமல் தவித்தாள்.
நிலாவின் யோசனை படிந்த முகத்தை வைத்தே! “என்ன பிரச்சினை நிலாம்மா?” என்று லேகா கேட்டிருக்க ஒன்றுமில்லை என்று பலதடவை நிலா கூறினாலும் லேகாவும் விடாமல் மீண்டும் மீண்டும் அதே! கேள்வியை கேட்க
ஒரு கட்டத்தில் நிலாவும் மறைக்காது “அவர்..அவர் இங்க வர மாட்டாரா?” என்று தயங்கித் தயங்கி கேட்டு விட்டாள். 
வரக் கூடாது என்று கேட்கின்றாளா? வர மாட்டானா? என்ற ஏக்கத்தில் கேட்கின்றாளா? என்று கேட்பவளின் குரலை வைத்தே! புரிந்துக்கொண்ட லேகாவின் உதட்டோரம் சிறு புன்னகை மலர, அதை மறைத்துக்கொண்டவள் “தினமும் காலைல அவன் அம்மாவ பார்கலைனா அண்ணி ரகள பண்ணிடுவாங்க, அதனால அவன் எங்கேயும் போக மாட்டான். அவன் கேம் இவ்வளவு சக்ஸஸ் ஆகி இருக்கு அமெரிக்க, ஆஸ்திரேலியானு கூப்பிட்டும் இவன் போகல”
“அம்மா மேல அவ்வளவு பாசமா?” ஆச்சரியம் கலந்த குரலில்தான் நிலா கேட்டாள்.
“அதனால தானே! நிலாவ பழிவாங்க துடிச்சான்” அர்த்தம் நிறைந்த பார்வையை வீசினாள் லேகா.
“அம்மாமேல பாசம் இருக்கட்டும். அதற்காக ஒரு பெண்ணுக்கு இப்படியெல்லாம் அநியாயம் பண்ணுவாரா?” நிலா முகத்தை சுளிக்க
“இப்போ என்ன? நீ தான் அவன் பொண்டாட்டின்னு ஊரக கூட்டி சொல்லிடலாமா?” கேலியாக லேகா கேக்க
“ஒன்னும் வேணாம்” கோபமாக நிலா அவ்விடத்தை விட்டு அகன்றாள்.
“அப்படியே! அவ அம்மா மாதிரி… இல்ல?” முன்னாடி இருந்த உருவத்திடம் சொல்லிக் கொண்டாள் லேகா.
நிலாவின் மனதை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை லேகாவுக்கு இருந்ததால் நிலா அவள் அருகில் இருக்கும் நேரம் மட்டும் ஜெகனை அழைத்து வாணன் என்ன செய்துகொண்டு இருக்கின்றான் என்று விசாரிப்பாள்.
 “நிலா மேடம் போனதுல இருந்து அவங்கள தேடி அலையிறாரு மேடம். டெய்லியும் பப்புக்கு போறாரு” என்று ஜெகன் சொல்ல
“நல்ல தேடட்டும்” கருவிக்கொள்ளும் நிலா “அப்போ நீங்க நிஜமாலுமே நான் இங்க இருக்கிறதா அவர்கிட்ட சொல்லலையா?”
“சொல்லி இருந்தா அடுத்த செக்கன் அவன் இங்க இருப்பான். சொல்லவா என்ன?” என்று அவளையே! கேக்க நிலாவிடமிருந்து முறைப்புதான் பதிலாக கிடைக்கும்.

 

ஜெகன் மூலம் வாணனிடம் நிகழ்ந்திரும் மாற்றங்களை அறிந்துகொண்ட லேகாவுக்கு நிலாவும், வாணனும் சந்தித்துக் கொண்டால் இருவரும் பேசி தங்களது பிரச்சினையை தீர்த்துக்கொள்வார்கள் என்று எண்ணி ஒருவாறு பேசி புரிய வைத்து “நிலா உன் மீது இருக்கும் களங்கம் நீங்கனும்னா ஒரே வழிதான் இருக்கு” என்று வளைகாப்புக்கு ஏற்பாடும் செய்திருந்தாள் லேகா. வாணனையும் அழைத்து உன் மனைவிக்கு வளைகாப்பு வைத்திருப்பதாக தாவல் சொன்னாள்.
வாணன் வரக் கூடாது என்று முதலில் அடம்பிடித்த நிலா தன்னுடைய நிறைமாத தோற்றத்தை காணும் வாணன் எப்படியான முக மாற்றத்தை கொடுப்பான் என்று பார்க்கும் ஆவலில் சம்மதித்திருக்க, நிலாவை சந்திக்க வளைகாப்புக்கு புறப்பட்டு வந்துகொண்டிருந்தான் துகிலவாணன் மௌரி.

Advertisement