Advertisement

அத்தியாயம் 11
எட்டு மாதங்கள் கடந்திருந்தன. வாணனுக்கு நிலா எங்கு சென்றாள். எவ்வாறு சென்றாள் ஏன் என்ன ஆனாள் என்று கூட தெரியவில்லை.
நிலாவை அவள் சொத்தை பறித்து பழிவாங்க வேண்டும். அவளை பைத்தியமாகி அன்னை அனுமதித்திருந்த அதே! மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றுதான் வெறியோடு தேடலானான் வாணன்.
ஆனால் அவன் சந்தித்த நிலாவின் நிலைமை வேறு விதமாக இருக்க, அவன் மூளையும் வேறு விதமாகத்தான் கணக்குப் போட்டது. வாணன் நினைத்திருந்தால் தாலி கட்டாமலே அவளை இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்தி நிலாவை அவனோடு இருக்க சம்மதிக்க வைத்திருக்கலாம். அதற்க்கு சில நாட்கள் எடுத்திருக்கும்.
ஆனாள் சுசிலாவின் வளர்ப்பு தப்பானதாக இருக்காததால் அதை செய்ய அவன் மனம் இடம் கொடுக்க வில்லை. சட்டென்று இரண்டு நாளில் திருமணம் என்று பேசி அவள் சம்மதத்தை வாங்கி இருந்தான்.
எல்லாம் அவன் திட்டப்படித்தான் போய்க் கொண்டிருந்தது. நிலாவும் அவன் மேல் காதல் பித்தாகித்தான் இருந்தாள். அவன் பாராமுகம் காட்ட ஆரம்பித்திருந்தால் அவள் மனமுடைந்து போக்க கூடிய நிலைமையில்தான் இருந்தாள்.
விதி வாணனின் பெற்றோரின் கல்யாண நாளன்று நிலாவின் அன்னை பிறைநிலா இறந்தததும் வாணன் அன்னையை விட்டு அசைய முடியாது இருந்ததும் கோபத்தில் நிலாவிடம் அனைத்து உண்மையை கூறியதும் தான்.
நிலா சாப்பிடாமல் கொள்ளாமல் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு சென்று தப்பிக்கலாம் என்று திட்டம் போட்டும் மாறாத வாணனின் மனம் நிலா தற்கொலை செய்துகொள்வேன் என்றதும் மாறியதற்கு காரணமும் சுசிலாதான். 
கல்யாணமன்று புகைப்படங்களை ஆர்வமாக பாத்திருந்த சுசிலா வாணன் பாடசாலையின் படிக்கட்டின் உச்சியில் அமர்ந்தவாறு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்துதான் கத்திக் கூப்பாடு போட ஆரம்பித்திருந்தாள்.  பாடசாலையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் வாணன் மௌரியனாக அவதாரம் எடுத்த பின்தான் பாடசாலையிலிருந்து பெற்றுக்கொண்டிருந்தான். அதனால்தான் இன்றுவரை சுசிலாவின் அலறலுக்கான காரணம் பிடிபடாமல் போய் இருக்க இந்த புகைப்படத்தின் உதவியால் அது கிட்டி இருந்தது.
அந்த புகைப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று ஆராய்ந்த மருத்துவருக்கும், வாணனுக்கும் இறுதியாக படிக்கட்டை பார்த்தால்தான் சுசிலா அலறுகிறாள் என்று புரிந்தது போனது. வாணனின் தற்போதைய இரண்டு மாடி வீட்டின் படிக்கட்டை பார்த்துதான் வீட்டுக்கு அழைத்து செல்லும் ஒவ்வொரு தடவையும் வயலண்ட் ஆகிறாள் என்று புரிந்துகொண்ட மருத்துவர் அவளை குணப்படுத்திடலாம் என்று நம்பிக்கையாக உறுதியளித்திருந்தார்.
அன்னை குணமடைய போகிறாள் என்ற சந்தோசம் ஒருபக்கமிருக்க, நிலாவை கொடுமை படுத்துவதற்காக திருமணம் செய்துகொண்டதை அன்னை அறிய நேர்ந்தால் நிச்சயமாக தன்னை மன்னிக்க மாட்டாள் என்ற எண்ணமும் வாணனின் மனதை இறுக்கிக் கொண்டிருக்கும் பொழுதுதான் நிலா தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டி இருந்தாள்.
அவளை டாச்சர் செய்ய வேண்டும் என்று எண்ணினானே ஒழிய அவள் செத்து மடிய வேண்டும் என்று ஒரு பொழுதும் வாணன் நினைக்கவே! இல்லை. அவனோடு இருக்கும் பொழுது ஏதாவது செய்துகொண்டால் அவனால் அவள் உயிரை காப்பாற்ற முடியாமல் போனால் நிச்சயமாக அவனை அவனால் கூட மன்னிக்க முடியாமல் போய் விடும் அதனாலயே! “போய் விடு” என்று கூறி விட்டான்.
ஆனாள் அந்த இரவு நேரத்தில் அதுவும்  வெளிச்சமே! இல்லாத காட்டுப்பகுதியில் கற்கள் நிறைந்த பாதையில் நடந்து செல்ல பிடிவாதம் பிடிப்பாள் என்று வாணன் நினைத்தும் பார்க்கவில்லை.
“அவளாச்சு, அவள் முடிவாச்சு போய் தொலையட்டும்” என்று வந்து தூங்கியவனுக்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பொழுது யாராவது அவளை ஏதாவது செய்து விடக் கூடும். ஏன் அந்த பக்கம் செல்லும் ஏதாவது ஒரு வண்டிக்காரன் அவளை கடத்திக் கொண்டு சென்று விட்டால்? என்ற எண்ணம் மனதில் ஓட வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.
அன்றாடம் மீடியாவில் வரும் செய்திகளில் படிப்பதும், பார்ப்பதும் தானே! தனியாக செல்லும் பெண்களுக்கு நடப்பவைகளை. வண்டியை ஓட்டிக்கொண்டு வந்த வாணனுக்கு நிலா எவ்வளவு வேகத்தில் நடத்தாலும் மெய்ன் ரோட்டுக்கு போய் இருக்க வாய்ப்பில்லை என்று மட்டும் புரிய, யாராவது அவளை புதர் பக்கம் இழுத்து சென்று விட்டார்களோ! என்ற சந்தேகம் உருவாக வண்டியை விட்டு இறங்கி தேடலானான்.
பூச்சிகளின் சத்தத்தை தவிர மனித நடமாட்டத்துக்கான எந்த அறிகுறியுமில்லை. மழை பொழிந்திருந்தாலாவது வண்டி வந்து சென்ற தடம் இருந்திருக்கும் வாணனின் நேரம் அது கூட இல்ல. நிலா அவனது வண்டியைக் கண்டு புதருக்கு ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி ஆடுவதாக எண்ணியவன் விடிந்த பின்னும் அவளை தேடியலைந்தான்.  
உன் கண்ணில் சிக்க மாட்டேன் என்பவளை எங்கு தேடினாலும் கிடைக்கப்போவதில்லை என்று வாணனும் தேடுவதை விட்டு விட்டான். இருந்தாலும் மனதின் ஓரத்தில் அவளுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்குமோ? என்று அந்த காட்டையே! அலசி ஆராய்ந்து விட்டான். அங்கு எங்கும் நிலா இருப்பதற்கான அடையாளமோ! சென்றதற்கான அடையாளமோ! இருக்கவில்லை. என்றதும் தேடுதலை விட்டு விட்டான்.
ஆனாலும் தூங்கும் பொழுதெல்லாம் நிலா பிணமாக கண்டெடுக்கப்பட்டாள் என்று கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்தமர்ந்தான்.
“இருந்தும் இம்ச பண்ணா.. இப்போ எங்க போய் இருக்கானு தெரியாமளையே! இம்ச பண்ணுறா” தண்ணீரை குடித்தவன் தூங்கியும் போனான். ஆனாள் விடாது கருப்பு போல் இந்த எட்டு மாதங்களாக கனவு தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
தனது வேலைகளை செய்துகொண்டு வாணன் சாதாரணமாக வாழ முயற்சி செய்ய முயன்றாலும் நிலாவுக்கு என்ன ஆகி இருக்கும் என்று அவனது மூளையும் சிந்திப்பதை விடவில்லை. மனதின் ஓரத்திலும் நிலா அவளை அவனுக்கு மறக்க விடாது இம்சித்துக் கொண்டிருந்தாள். இந்த எட்டு மாதங்களாக நிலாவின் நினைவுகளை துரத்த மாலையானால் பப்புக்கு செல்வதை வளமையாக்கி இருந்தான் வாணன்.
இப்படி இருந்தவனுக்குத்தான் நிலாவை பற்றின தகவலோடு அலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தது அவனது அத்தை சந்திரலேகா மௌரி.
“சொல்லுங்க மேடம்”
“என்ன மௌரி. அத்தைனு பாசமா கூப்பிட மாட்டியா? எங்க சமஸ்தானத்துக்கு நீதான் ஒரே வாரிசுன்னு இருந்தேன். ஆனா அப்படி இல்ல போலயே!” நக்கல் தெறிக்கும் குரலில் லேகா பேச
புருவம் உயர்த்தி யோசித்த வாணன் “என்ன சொல்ல வரீங்க?”
“வரும் திங்கள் சேமமான நாள் உன் பொண்டாட்டிக்கு வளைகாப்பு வச்சிருக்கேன் வந்து சேரு” என்று அலைபேசியை துண்டித்திருந்தாள். லேகா என்றைக்கும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றுதான் வாணனிடம் பேசுவாள் இல்லையென்றால் அவனிடம் பேச முடியாது.
அலைபேசியை கையில் வைத்திருந்தவனுக்கு அதிர்ச்சி “என்ன உளறுறாங்க இவங்க? பொண்டாட்டிக்கு வளைகாப்பு?” அலைபேசியை தூக்கிப் போட்டவனின் எண்ணங்கள் சந்திரலேகா மௌரிய சந்தித்த நாளுக்கு பயணித்தது.
காலேஜ் முடித்த உடன் அவனை சந்திக்க வந்திருந்தார் “உதயம்” ட்ரஸ்ட் உறுப்பினர் ஒருவர்.
“தம்பி மேடம் உங்கள சந்திக்கணும்னு பிரிய படுறாங்க. நீங்க எப்போ ஊருக்கு வரீங்க?”
“உதயம்” டஸ்டின் மூலம் உதவி கிட்டிய பின் அதை நடாத்துவது ஒரு பெண் என்று அவன் அறிந்திருந்தான். அதுவும் அவர்கள் கோயமுத்தூரை சேர்ந்தவர்கள் என்றும். அரச பரம்பரையில் வந்த ஒரு இளவரசியின் குடும்பத்தார் என்றும் வெள்ளையர்களின் ஆச்சியின் போது வீழ்ந்த அரச குடும்பம் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு, வீழ்ந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பது போல் வீழ்ந்தாலும் பிறரை வாழவைத்த குடும்பம் என்று பெயரெடுத்து மட்டுமல்லாது, பெண்களும் படித்து தொழில் புரிந்து இன்று சமூகத்தில் பலருக்கு உதவிக்கொண்டிருப்பதாக அறிந்துக்கொண்டிருந்தான்.
அப்படிப்பட்ட ஒரு பெண்மணியை சந்திப்ப வாய்ப்பு கிடைப்பது அரிது. மறுப்பானா? வாணன்.
ஆனாலும் அன்னையை தினமும் சென்று பார்க்க வேண்டுமே! இல்லை என்றால் ரகளை பண்ணுவாள்! என்ற கவலை வேறு தொற்றிக்கொள்ள “மேடம் சென்னை வரும் பொழுது பார்த்துக் கொள்கிறேன்” என்று விட
அவரோ! “நீங்க இப்படி சொல்வீங்கன்னு தெரியும் சார். மேடம் இப்போ தாஜ் ஹோட்டலில்தான் தங்கி இருக்கிறாங்க. நீங்க டின்னருக்கு அவங்கள மீட் பண்ணா போதும்” என்று சொல்ல வாணன் சிறகில்லாமல் பறந்தான். 
எப்பேர்ப்பட்ட பெண்மணியை சந்திக்க போகிறோம்? கோட் சூட் போட்டு போலாமா? போர்மல் ட்ரெஸ் போட்டுக்கிட்டு போலாமா? இல்ல கேசுவலா ஜீன்ஸ் டீசர்டில் போலாமா? என்று வாணன் தன் மனதோடு போராடி போர்மலில் போலாம் என்று முடிவெடுத்து நீட்டாக ஆடையணிந்து அவனுக்கான அதிர்ச்சியை காண சென்றான்.
குறிப்பிட்ட அந்த ஹோட்டலை அடைந்ததும் அவனை மரியாதையாக அழைத்துக்கொண்டு சென்று உணவகத்தில் அமர்த்த அங்கே அவனை தவிர எவருமில்லை.
சிறிது நேரத்தில் ஹைஹீல்ஸ் சத்தம் கேட்க நடந்து வருபவளை கண்டு ஸ்தம்பித்து எழுந்து நின்று விட்டான் வாணன். பார்க்க வணனோடு கூட பிறந்தவள் போல் இருந்தாள். அவ்வளவு முக ஒற்றுமை.
“என்ன துகிலவாணன் என்னை கண்டு இவ்வளவு ஷாக் ஆகுறீங்க? நான் உன் அப்பா கூட பொறந்த தங்கை. உன் அத்த சந்திரலேகா மௌரி” என்றதும் 
“அப்போ… அப்பா..அப்பா..” என்றவனுக்கு வார்த்தை வரவில்லை. அப்பெண்மணியின் பெயரை சொன்னதும் இந்த பெண்தான் “உதயம்” ட்ரஸ்டின் உரிமையாளர், இளவரசியின் பரம்பரையில் வந்தவர் என்று புரிய அப்போ.. தனது தந்தையும் அதே! பரம்பரை தானே! அவர் ஏன் அவ்வாறான வாழ்க்கையை வாழ்ந்தார்? அதிர்ச்சி ஒரு புறம், ஆயிரம் கேள்விகள் மனதில் எழ, எதை முதலில் கேட்பதென்று புரியாது தடுமாறலானான்.
சந்திரலேகா மௌரி பார்ப்பதற்கு வாணனை போல் இருந்தாள். அத்தை என்றாளே! பட்டுப்புடவை சரசரக்க, நெத்தியில் பெரிய குங்கும பொட்டோடு அறுப்பதில் ஒருத்தி வருவாள் என்று எண்ணினால் அது உங்கள் தவறு.
வயது நாற்பத்தி ஐந்தை தொட்டிருக்காது. சுடிதார்தான் அணிந்திருந்தாள். அப்பொழுதுதான் குளித்திருப்பாள் போலும். நீண்ட முடியை அவிழ்த்துப் போட்டு ஒரு கிளிப்பில் அடக்கி இருந்தாள். வெள்ளை முடிகள் தெரியக் கூடாதென்று சாயமிட்டிருப்பாள். அது போக யோகா செய்து உடலையும் கண கச்சிதமாக வைத்திருக்க, வயது முப்பது போல் தான் தெரிந்தது. வாணனுக்கு அத்தை என்று சொல்வதை விட அக்கா என்றால் நம்புவார்கள்.
“முதல்ல உக்காரு வாணன். என்ன மாதிரியே! இருக்கியே! என் அண்ணன் என் மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தார்னு இப்போ புரியுது” என்ற லேகாவின் கண்களின் ஓரம் ஈரமாகின.
“அவ்வளவு பாசம் வச்சவர் சாவுக்கு கூடத்தான் வராம இருந்தீர்களா?” வாணன் கோபமாக கத்த
“வர முடியாத சூழ்நிலை. அண்ணா இறந்த நாள்ல தான் அம்மாவுக்கு ரொம்ப உடம்பு முடியாம போச்சு. இங்க எல்லாத்தையும் நான் தனியா இருந்து பார்த்துக்க வேண்டியதாகிருச்சு” பெருமூச்சு விட்டுக்கொள்ள
தந்தை இழந்து தான் நிர்கதியா இருந்த பொழுது எவ்வாறெல்லாம் தவித்தோம் என்று நினைத்தவனுக்கு தந்தையின் குடும்பத்தார் மீது வெறுப்புதான் வந்தது.
சத்ரலேகாவை வாணன் வெறுப்பாக பார்க்கையில் “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? உன் அப்பா எக்சிடன் ஆனப்போ எனக்குதான் போன் பண்ணாரு. அவரு பொழைக்க மாட்டாரு உன்னையும் அண்ணியையும் பார்த்துக்க சொன்னாரு” என்ற லேகா வெறுமையாக புன்னகைக்க விரோசனனனின் இழப்பின் துக்கம் அவளின் கண்ணில் இன்னமும் குடியிருந்தது. அவள் உடனே! ஆட்களை அனுப்பியதையோ! விரோசனனின் உடலை ராஜமரியாதையோடு அடக்கம் செய்ததையே! அவள் சொல்லிக்காட்டவில்லை. செய்ததை எல்லாம் சொல்லிக் காட்டுவது அரச பரம்பரைக்கு அழகல்லவே! 
“ஓஹ்.. அதான் இத்தனை வருஷம் கழிச்சி என்ன பார்க்க வந்திருக்கீங்க போல” நக்கல் தெறிக்கும் குரலில் வாணன் பேச
“வர முடியாம உங்க அப்பா பண்ணி கொடுத்திருந்த சத்தியம்தான் என்ன தடுத்துகிட்டு இருந்தது. அம்மா போன வாரம்தான் இறந்தாங்க, அண்ணா அவங்களுக்குத்தானே! சத்தியம் பண்ணி கொடுத்தாங்க எனக்கு இல்லையே!னு உன்ன பார்க்க வந்துட்டேன்” என்று புன்னகைத்த லேகாவின் கண்களில் உண்மை இருந்தது.
“இது என்ன டா புதுக் கதை” என்று லேகாவை வாணன் ஏறிட
“உன் அப்பா உன் கிட்ட சொல்லலைனு நினைக்கிறன். சரி உன் அத்த நான் சொல்லுறேன் கேளு. உன் அப்பா பேர் விரோசனன் {சூரியன்} என் பேர் சந்திரலேகா. எங்க அப்பா தெரிஞ்சி வச்சாரான்னு தெரியல. அப்பாக்கு எங்க ரெண்டு பேரும் வர்ற மாதிரி ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கனும்னு ஆச அப்படி ஆரம்பிச்சதுதான் “உதயம்”
எல்லாம் நல்லாத்தான் போய் கிட்டு இருந்தது. அண்ணனும் லண்டன் போய் படிச்சிட்டு வந்தான். வீட்டுல பொண்ணு பாக்குறோம்னு அம்மா சொன்னதும், இல்ல நான் எங்க வீட்டு டைவர் பொண்ணு சுசிலாவ விரும்புறேன் அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னாரு. சுசிலா அண்ணி டைவர் பொண்ணு மட்டுமில்ல. எங்க வீட்டு வேலைக்கார பொண்ணும் கூட அதனால அம்மா எதிர்த்தாங்க”
“அதனால தான் அம்மா படிப்பறிவு இல்லாம இருந்தார்களா?” வாணன் கேட்க
“அவங்க குணத்துல ரொம்ப தங்கமானவங்க. அண்ணனோட பிடிவாதமான குணம் தெரியுமானதால அம்மா “சரி நீ சுசீலாவை கல்யாணம் பண்ணிக்க ஆனா உனக்கு சொத்துல நயா பைசா தர மாட்டேன். ஊர விட்டு போய்டுனு சொல்லிட்டாங்க. அப்படி சொன்னா அண்ணா சுசிலா அண்ணிய கல்யாணம் பண்ணாம இருப்பாங்கன்னு அம்மா தப்பு கணக்கு போட்டிருந்தாங்க.
அண்ணனும் “நான் படிச்ச படிப்பு என்ன காப்பதும்” என்று வீர வசனம் பேச  
“அதுவும் நான் போட்ட பிச்சை தான்” என்று அம்மா பேச கோபத்துல “சொத்தும் வேணாம், நீங்க தந்த படிப்பும் வேணாம். உங்க மேல சத்தியமா நான் உசுரோட இருக்கும் வரைக்கும் ஊருக்கு வரமாட்டேன்னு” கோவில்ல வச்சி அண்ணிய கல்யாணம் பண்ணிக்கிட்டு ஊரைவிட்டு போனவருதான் இறக்கும் தருவாயிலதான் எனக்கு போன் பண்ணாரு. நான் அவரை தேடாத இடமே! இல்ல. அம்மாமேல தானே! கோபம் நான் என்ன பாவம் பண்ணேன். என் கிட்ட பேசி இருக்கலாம்ல. அப்பா உயிரோட இருந்திருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்காது” கண்கலங்கினாள் லேகா.
வாணனுக்கு அவள் நிலைமை புரிந்தது. “ஏன் இத்தனை வருஷம் வராம இருந்தீங்க?”
“இப்போ எதுக்கு வந்தீங்கன்னு கேக்குறியா?” என்று சிரிக்க வாணனுக்கும் சிரிப்பாகத்தான் இருந்தது.
“ஏன் பாட்டிக்கு என்ன பார்க்கணும்னு தோணல. அப்படி என்ன அப்பா மேல கோவம்” வாணன் கோபமாக கேக்க
“கடைசி வரைக்கும் அம்மா அண்ணனை மன்னிக்கவே! இல்ல. உடம்பு முடியாம இருக்குறவங்க கிட்ட போய் அண்ணன் இறந்த செய்தியை சொல்லவும் முடியல. சரி உன்னையாச்சும் அவங்களோட சேர்க்கலாம்னு பார்த்தா அண்ணன் பண்ணத ஏத்துக்க முடியாமத்தான் மனசோடஞ்சி அவங்க நோய்வாய்பட்டாங்க. அண்ணன் மட்டும் இல்ல. நான் பண்ண முட்டாள் தனத்தாளையும்தான். இதுல அண்ணன் பையன்னு அவங்க முன்னாடி உன்ன கொண்டு போய் நிறுத்தினா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கனு பயம் வேற.  உயிர் போற கடைசி நிமிஷம் அண்ணன் கண்டு பிடிச்சி வீட்டுக்கு கூட்டிட்டு வானு சொன்னாங்க. அத கொஞ்சம் முன்னாடியே! சொல்லி இருந்தா உன்ன கொண்டு போய் அவங்க முன்னாடி நிறுத்தி இருக்கலாம். பெத்த பையன பிரிஞ்சு தண்டனையா பேரான பாக்குற கொடுப்பன கூட இல்லாம போய் சேர்ந்துட்டாங்க. அன்னக்கி உனக்கு எக்ஸாம் வேற அதான் உன்கிட்ட சொல்லல. சொல்ல கூடிய சூழ்நிலையும் இருக்கவுமில்லை” வாணன் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு விளக்கத்தை கொடுத்தாள் சந்திரலேகா.
“அம்மா இறந்துட்டாங்க, அண்ணனும் இறந்துட்டாரு. குடும்பத்துல இருக்குறது நீயும் நானும் மட்டும்தான். எனக்கு பிறகு சொத்தையெல்லாம் நீதானே! பார்த்துக்கணும். பொறுப்பெல்லாம் உன் கிட்ட கொடுக்கணும் நான் ப்ரீ ஆகணும்”
“முடியாது. எனக்குன்னு கனவு, லட்ச்சியம் இருக்கு. நான் அதுல சாதிக்கணும். உங்க கூட எல்லாம் கூட்டணி வைக்க முடியாது” வாணன் ஒரேயடியாக மறுக்க,
“சரி அப்போ சீக்கிரம் கல்யாணம் பண்ணி பையனா பார்த்து பெத்துக்கோடு சொத்துக்கு வாரிசு கிடைச்சுடும்” என்று நக்கல் பண்ண
“அத்தையே! இப்போதான் கிடைச்சிருக்காங்க அத்த பொண்ணு கிடைக்கும் போது பார்க்கலாம்” என்று வாணனும் பதிலுக்கு கிண்டல் செய்ய முகம் மாறினாள் சந்திரலேகா மௌரி.
அன்னை அவனுக்கு அன்பாக வைத்த பெயர் துகிலன். தந்தை அவனுக்கு சூட்டிய பெயர் வாணன். துகில வணனாக இருந்த வாணன். லேகாவை சந்தித்த பின்தான் தான் யார்? எந்த வம்சாவழியை சேர்ந்தவன் என்று அறிந்துகொண்டதுமில்லாது துகிலவாணன் மௌரியாக அவதாரம் எடுத்திருந்தான்.
வேலை செய்துகொண்டிருந்த வாணனின் மண்டைக்குள் லேகா சொன்னதுதான் ஓடிக்கொண்டிருந்தது.
சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தவன் லேகா சொன்னது நியாபகத்தில் வரவே! “அப்போ நிலா அங்கதான் இருக்காளா? வளைகாப்பு என்று வேற சொன்னாங்க, இங்கிருந்து போகும் போது பிரேக்னன்ட்டா இருந்தாளா? அவளுக்கு எப்படி அத்தைய தெரியும்? அவளா இவங்கள தேடிப் போனாளா? இல்ல இவங்க இவளை கூட்டிட்டு போனாங்களா? இப்போ போனாளா? இல்ல அன்னக்கி நைட்டே! கூட்டிகிட்டு போனாங்களா?” குழம்பியவன் சந்த்ரலேகாவுக்கு அலைபேசி தொடர்பை ஏற்படுத்த
“சொல்லுங்க மௌரியரே!” அதே நக்கல் குரலில் கேக்க
“நிலா அங்கயா இருக்கா? எப்போல இருந்து இருக்கா? நீங்கதான் கூட்டிகிட்டு போனீங்களா? இல்ல அவளா உங்கள தேடிகிட்டு வந்தாளா? அவளுக்கு எப்படி உங்கள தெரியும்” என்று கேள்விகளை அடுக்க
“அப்பப்பா… எவ்வளவு கேள்வி… ஒவ்வொன்னத்துக்கும் பதில் சொல்லனுமா? இல்ல எல்லா கேள்விக்கும் ஒரே பதில் சொல்லனுமா?”
“அத்த விளையாடாதீங்க” கடுப்பானான் வாணன்.
“யார் டா விளையாடினா. நீ நிலா வாழ்க்கைல விளையாடினத விடவா?” லேகா அமைதியாக பதில் சொல்ல
“அவ என்ன பண்ணினானு உங்களுக்கு தெரிஞ்சா…”
“எனக்கு எல்லாம் தெரியும். நீ கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் வேணும்னா வளைகாப்புக்கு வந்து சேரு. சும்மா சும்மா போன் பண்ணி தொல்லை பண்ணாத”
“போன் பண்ணுறதே! இல்லனு திட்டுறவங்களா? இப்படி பேசுறாங்க?” ஆச்சரியமாக அலைபேசியை ஒருநொடி பார்த்தவன் யோசனையில் ஆழ்ந்தான்.
முடிவாக வாணனுக்கு ஒரு விஷயம் புரிந்தது அன்று எதேச்சையாக ஜெகன் வந்திருப்பான் அவனோடு சென்று லேகாவை சந்தித்த நிலா தனக்கு நியாயம் கேட்டு கண்ணீர் வடித்து லேகாவை நம்ப வைத்திருப்பாள். ஏற்கனவே! லேகா இளகி மனம் படைத்தவள் பெண் என்றதும் மனமிரங்கி இருப்பாள்.
“நிலா எதற்காக இதையெல்லாம் செய்யணும்?” வாணனின் மனம் கேள்வி கேக்க
“என்னை பழிவாங்கவா? அதுவும் என் வீட்டுக்குள் இருந்துக் கொண்டா? இருக்காது எல்லாம் பணத்துக்காக இருக்கும். வளைகாப்புதானே! சிறப்பா செஞ்சிடலாம். குழந்தை விஷயமே! எனக்கு தெரியாது. இதுல உனக்கு வளைகாப்புதான் குறை. குழந்தையை எடுத்து கிட்டு உன்ன துரத்துறேன். இரு டி வரேன்” பொருமினான் துகிலவாணன் மௌரி.

Advertisement