Advertisement

அத்தியாயம் 1
“கெட்டிமேளம் கெட்டிமேளம்” டேப் ரெக்காடரில் குரல் ஒலிக்க அதை தொடர்ந்து கெட்டிமேளத்தோடு நாதஸ்வர ஓசை இசைக்க, புரோகிதர் திருமண மந்திரங்களை ஓதியபடி தாலியை எடுத்து நீட்ட கல்யாண மாப்பிள்ளையாக அமர்ந்திருந்தவனோ!
“தாலி பெண்களுக்கு வேலினு சொல்வாங்க, ஆனா உனக்கு மட்டும் அது முள்வேலி” என்று மனதுக்குள் கேலியாக எண்ணியவாறே தன் அருகில் அமர்ந்திருந்தவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு மூன்று முடிச்சையும் நிதானமாக கட்டி முடித்தான். கட்டும் பொழுதும் அவன் மனதில் ஓடியவைகள் அனைத்தும் அவன் மட்டுமே! அறிவான்.
மனதில் நினைப்பவைகளை கண்டு கொள்ளும் சக்தி மட்டும் கடவுள் மனிதருக்கு கொடுத்திருந்தால் அவன் அருகில் அமர்ந்திருப்பவளோ! ஏன் அவன் அருகில் அமர்ந்திருக்கப் போகிறாள்? அவன் சட்டையை பிடித்து “ஏன் இப்படி செய்கின்றாய்” என்று கேள்வி கேட்டிருப்பாள். அல்லது அவ்விடத்தை விட்டு எழுந்து அவன் கண்கண்களுக்குள் சிக்காமல், கண்காணாத தூரத்துக்கு மாயமாய் மறைந்து சென்றே விட்டிருப்பாளே!
அவன் அருகில் இருந்தவளுக்கு தான் செய்வது சரியா தவறா? பணத்துக்காக இந்த திடீர் திருமணம் அதுவும் யாரென்றே அறியாத இவனை கல்யாணம் செய்வது சரியா? அவன் தன்னை எதற்கு திருமணம் செய்கிறான் என்று இன்னும் தெரியாது. ஆனால் அவளுக்கு பணம் தேவை. பணத்துக்காக இவனை கல்யாணம் செய்வதா? யார் இவன்? என்ற கேள்வியெல்லாம் மனதுக்குள் முட்டி மோதிக்கொண்டிருந்தாலும், அவள் சூழ்நிலை கைதியானதால, அங்கே! அமைதியாக அமர்ந்து அவன் கட்டிய தாலியை வெறித்திக்கொண்டிருந்தாள்.
இரண்டு நாட்களுக்கு முன்தான் அந்த கம்பனிக்கு இன்டவியூக்காக சென்றிருந்தாள் இவள். அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கம்பனி என்பதால புதியவர்களை சேர்த்துக்கொள்வார்கள், அனுவமிக்கவர்களை தேடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் அந்த கம்பனிக்குள் நுழைந்தாள் இவள். கையில் இருக்கும் பர்சனல் அசிஸ்டன்ட் டிப்ளோமா/ட்ரைனிங் கோர்ஸ் செர்டிபிகேட்டை ஒரு தடவைக்கு இரண்டு தடவை சரி பார்த்து, கூடவே இருந்த மத்த சான்றிதழ்களையும் சரி பார்த்தவள், ட்ரஸ்டின் மூலமாக தனக்கு படிக்க உதவி செய்த சதாசிவம் ஐயாவை கடவுளாக மனதில் நிறுத்தி வணங்கி, தனக்கு ஹிந்தி சரளமாக பேசவும், எழுதவும் கற்றுக்கொடுத்த சீமாவுக்கு அந்த நேரத்தில் மனதுக்குள் நன்றியையும் கூறிக்கொண்டவள், வாயால் மூச்சை “உப்” என ஊதி தன்னை நிலைப்படுத்திக்கொண்டு வேலை எப்படியாவது கிடைத்து விட வேண்டுமே! என்று கடவுளை வேண்டிக்கொள்ளலானாள். அவள் முதுகலை முடித்திருக்கவில்லை. ஏதாவது வேற்று ஒரு மொழியையேனும் தெரிந்திருப்பது அவசியம் என்று விளம்பரத்தில் இருந்ததால்தான் இந்த மனப்போராட்டம்.  
வெகுநேரமாக அவளை காக்க வைத்து உள்ளே செல்லும் படி அங்கிருந்த ரிஷப்சனிஸ்ட் கூற, எத்தனை இன்டவியூகளை சந்தித்தாலும் இந்த வேலை தனக்கு எவ்வளவு முக்கியம் என்ற படபடப்பும், சொதப்பி விடக்கூடாதே என்ற வேண்டுதலோடு கலைந்திருந்த கூந்தலை ஒரு முறை நீவிக்கொண்டவள் தனது எளிமையான சுடிதாரை ஒருமுறை பார்க்க, தன்னிடம் இருக்கும் சில நல்ல சுடிதாரில் இதுவும் ஒன்று. அப்பா இறந்த பிறகு புதிதாய் எதையும் வாங்கியதாக நியாபகம் இல்லை.
தீபாவளி, பொங்கலை கூட சந்தோசமாக கொண்டாட வீட்டில் இருந்தால் தானே முடியும். அன்னையோடு மருத்துவமனையில் இருப்பவளுக்கு எதற்கு பண்டிகை கொண்டாட்டங்கள். அவளின் எண்ணங்கள் இவ்வாறு அவளுள் அலைக்கழிக்க, அந்த பெரிய கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள் ஒரு கணம் ஆச்சரியமாக கண்ணை விரித்து நின்றாள். அந்த அறை செவ்வக  வடிவமாக இருந்தாலும் அளவில் சற்று பெரிதாக இருக்க அவளுக்கு வலது புறத்தில் மேசையும் கதிரைகளும் போடப்பட்டு கூடவே ஒரு கதவும் இருந்தது.
இடது புறத்திலும் ஒரு கதவு இருந்ததோடு சோபாவும் போடப்பட்டிருக்க தொலைக்காட்ச்சி வசதியும், இருந்தது. அவள் உள்ளே வந்த கதவுக்கு நேராக கண்ணாடி தடுப்பு. வெளிச்சம் அறையை நிரப்பினாலும் பச்சை பசேல் என பூச்சாடிகளும், தொங்கும் பூச்சாடிகளும் வரிசையாக கண்ணை கவரும் விதத்தில் அடுக்கப் பட்டிருந்ததோடு அவற்றால் சூரிய ஒளி அளவாக அறையினுள் பரவிக்கொண்டிருந்தது.
பெரியதோடு கடிகாரம் டிக், டிக் என்று ஓசை எழுப்பி அவ்வறையின் அமைதியையே! குழைத்துக்கொண்டிருக்க, அந்த விசாலமான அறையில் யாரையும் காணாமல் ஒருகணம் திகைத்து நின்றவள்  மேசையில் இருந்த அலைபேசி அடிக்கவும் திடுக்கிட்டாள்
மூச்சை இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டவள் அதை எடுக்கவா? வேண்டாமா? வெளியே சென்று யாரையாவது அழைக்கலாமா? மனதோடு பலவாறு பட்டிமன்றம் நடாத்தியவள்,  முடிவாக அது அடித்து   ஓயமுன் எடுத்து காதில் வைத்திருந்தாள். 
“மிஸ் நிலா. ஐம் ஹவின் மை லன்ச் வெயிட் போர் பியூ மினிட்ஸ்” மறுமுனையில் கம்பிரமான ஆண் குரல் உத்தரவிட்டது.
ஆம் அவள் பெயர் நிலா. இளைய நிலா. அன்னையின் பெயர் பிறைநிலா அதனாலயே! அவளுக்கு இளைய நிலா என்று பெயரிட்டு அழகு பார்த்ததாக அடிக்கடி சொல்வாள் இளைய நிலாவை பெற்றவள்.   
“ஓகே சார்” என்றாள் நிலா தானாக. யார் பேசினார்கள் என்று அவளுக்கு தெரியாது. தன் பெயரை கூறியதும். அது தனக்கான அழைப்பு என்று மட்டும் புரிந்து கொண்டவள் பதில் அளித்து முடித்த நொடி, இப்பொழுது தான் அமர வேண்டுமா? அல்லது நின்று கொண்டே இருக்க வேண்டுமா? என்ற சந்தேகம் அவளுள் எழுந்தது.
ஏனெனில் உள்ளே வந்தவளை பேசியவன் எங்கிருந்து கவனித்து பேசினான் என்று தெரியாது. அவன் பேசிய தொனியில் அவன்தான் எம்.டி என்று புரிந்தது. இன்னும் அவன் கண்காணிக்கிறானா என்றும் தெரியாது. அவன் அனுமதி இல்லாமல் அமர்ந்தால் திட்டுவானோ! மனசுக்குள்ளையே பேசிக்கொண்டிருந்தவளின் நிம்மதியை குலைத்தது அவள் அலைபேசி.
இன்றைய காலத்தில் பாடசாலை செல்லும் மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை ஸ்மார்ட் போன்களை பாவிக்க கூடிய நேரத்திலும், வித விதமான ஸ்மார்ட் போன்கள் மலிவாக கிடைத்தும், தேவைக்காக ஒரு பழைய கைபேசியை வைத்திருந்தாள் நிலா. அது கூட மருத்துமனையில் இருந்து வரும் அழைப்புகள்தான் அதிகமாக இருந்தது. தற்பொழுதும் வந்த அழைப்பு மருத்துமனை அழைப்பு என்று புரிய தான் எங்கே இருக்கிறோம் என்பதையும் மறந்தவளாக கைப்பையை துழாவி அலைபேசியை உடனே எடுத்து விட்டாள்.
“மேடம் பெர்சன்ட்டுக்கு போடுற இன்ஜெக்சன் ரெண்டு நாளைக்குத்தான் இருக்கு. அட்லீஸ்ட் ஒன் வீக்குக்காவது ஸ்டாக் இருக்கணும் என்பது ஆஸ்பிடல் ரூல்ஸ். உங்களுக்கு இன்போர்ம் பண்ண சொன்னாங்க சொல்லிட்டேன்” என்ற பெண் குரல் “சதாசிவம் ஐயா சொன்னதுக்காக ஆஸ்பிடல்ல பிரியா இடம் கொடுத்து, முடிஞ்ச அளவு மருத்துவம் பார்க்க உதவுறாரு, பெத்த அம்மாக்கு வைத்தியம் பார்க்க இந்த பொண்ணு இப்படி யோசிக்குது” என்ற முணுமுணுப்போடு அலைபேசி அனைக்கப்பட்டது.
இவள் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. பணம் இருந்தால் வசதியாகவே வைத்தியம் பாத்திருப்பாள். கருணை உள்ளம் கொண்ட ஒருவரால் உதவி கிட்டியது என்னவோ உண்மைதான். அவரும் எவ்வளவு என்று எத்தனை பேருக்குத்தான் செய்ய, ஒரே ஒரு இன்ஜெக்சனை மாத்திரம் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்ட நிலா வேலை கிடைத்திருந்தால் வயித்தை கட்டி, வாயை கட்டியாவது அன்னையின் செலவை பாத்து சதாசிவம் ஐயாவின் சிரமத்தை குறைக்க முயன்றிருப்பாள்.
பாடசாலை செல்லும் பொழுதுதான் அன்னை இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டாள். என்னவென்று கேட்டால் எதோ ஒரு மனநோய் என்று தந்தை கூறி இருந்தார். அன்னை அவ்வாறு ஆகா காரணம் குடும்ப தொழில் சரிந்ததுதான் என்று உறவுகள் கூடிக் கூடி பேசினார்கள். சுனாமி பேரலை தாக்கியது போல் ஒரேநாளில் வீதிக்கு வந்து விட்டனர் நிலாவின் பெற்றோர். நன்றாக இருந்த அன்னை திடிரென்று கண்டதையும் பேசி, கண்டதையும் செய்து யாரோ மாதிரி நடந்துகொள்ள, தந்தையோடு ஒட்டிக்கொண்டாள்.
யாரும் அறியாமல் அன்னையை தந்தை வீட்டில் வைத்துதான் பார்த்துக்கொண்டார். அவளை கட்டி வைத்து கொடுமை படுத்துவதாக எண்ணி தினமும் கண்ணீர் வடிப்பவரை காணக் காண இவளுக்கும் கண்ணீர் வரும், அன்னை சீக்கிரம் குணமாக வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினால் இவர்களுக்கு பாரமாக இருப்பவளை அமைதி படுத்த அவள் தசைகளை அமைதியாக்கினார் கடவுள்.
தசை பிடிப்பால் படுத்த படுக்கையானாள் அன்னை. எதோ ஒரு பரம்பரை நோயென்றார் தந்தை. அழுது கரைந்தவளை சமாதானப்படுத்தி தான் பார்த்துக்கொள்வதாக கூறினார்.
விழுந்த தொழிலிலிருந்து மீள முடியாத மனக்கஷ்டம், மனைவியின் இந்த நிலை என்று தூக்கத்திலையே! காலேஜ் இரண்டாம் ஆண்டில் தந்தையும் காலமாக, இருந்த வீடும் வாடகை வீடு. காலேஜையும் முடித்து அன்னைக்கு மருத்துவமும் பார்த்து வேலை கிடைத்தால் வாழ்க்கை நகர்ந்து விடும் என்று என்ன, அன்னையின் மருத்துவ செலவுகளால் அவள் படிப்பை சரியாக முடிக்க முடியவில்லை.
நிர்கதியாக இருந்தவளுக்கு அடைக்கலம் கொடுத்தது சதாசிவம் ஐயா தான். எப்படியோ ஒருவழியாக படித்து முடித்தால் அவள் விதி வேலை கிடைப்பது கூட குதிரை கொம்பாகிப் போனது.
அதற்காக சும்மா இருக்கவில்லை. கிடைக்கும் வேலைகளை பாட் டைம்மாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள். பணத் தேவை தலை விரித்தாடுதே!
வீட்டு வேலைக்கு கூட செல்ல அவள் தயார் தான். சில கழுகு பார்வைகளையும், அவர்களின் மறைமுக அழைப்புகளையும் தனியாக சமாளிக்க தெம்பில்லாமல் தானாக சென்று அவர்களின் வீட்டிலையே சிறை பட விரும்பாதவள் அந்த மாதிரியான வேலைகளை தவிர்த்து, தன் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடி இன்னும் அலைந்து கொண்டுதான் இருக்கிறாள்.
நல்ல கம்பனி, கண்ணியமான மனிதர்கள், நல்ல சம்பளத்தில் வேலை அமைந்தால் நிம்மதியாக வேலை பார்க்கலாம். அன்னையின் மருத்துவ செலவையும் ஓரலளவுக்கு தன்னால் கவனித்துக்கொள்ளலாம். அமையுமா? கேள்விக்குறிதான்.
“ஹலோ நிலா. சாரி ரொம்ப வெயிட் பண்ண வச்சிட்டேனா?” முகம் புன்னகையை தத்தெடுத்து பேசினாலும் அவனது கண்களோ வேங்கையின் கண்களாக அவளை வேட்டையாடிக்கொண்டிருந்தன.
அவள் உடுத்தி இருந்த சுடியோ சாயம் போனது போல் தெரிய உன்னிப்பாக கவனித்ததில் அது சாயம் போக வில்லை பல முறை துவைத்து போட்டதில் துணியின் தரம் கெட்டிருந்தது. அதில் அவள் வறுமை அவன் கண்களுக்கு விருந்தாக, எட்டு வயதில் காரில் இளவரசியாக பயணம் செய்யும் இவளுக்கா இந்த நிலைமை என்று கண்கள் ஒரு நொடி ஆச்சரியம் காட்டினாலும் மறு நொடி கண்கள் குரூரமாக அவளை பார்க்க, மனதில் சொல்ல முடியாத இதம் பரவலானது. அது அவன் சம்பாதித்த மொத்த சொத்தை விடவும் பல மடங்கு அதிக, சுகத்தைக் கொடுத்தது.
நிலாவின் முகத்தில் எந்த ஒப்பனைகளும் இல்லை. பவ்டர் கூட போட்டாளா? என்றால் சந்தேகம்தான். அறையின் ஏசியில் அவளுக்கு வியர்க்க வில்லை அதனால் இயல்பாக இருக்கிறாள். மாசு மருவற்ற முகம்தான். என்ன வெயிலில் அலைந்தால் கொஞ்சம் கறுத்துப் போய் இருக்கின்றாள். சிம்பலாக சொன்னாலே துடைத்து வைத்த குத்து விளக்கு என்று அவன் மனம் சொல்ல
“இவளா குத்து விளக்கு? தெரு விளக்கு” என்று மனதை அடக்கினான் அவன்.
இவன் நிலாவை அளவிட்டுக்கொண்டிருக்க, நிலாவும் அவனை எடைபோட்டுக்கொண்டிருந்தாள்.
தாடியை ட்ரிம் செய்து மீசையை அழகாக வெட்டி இருந்தான். புன்னகைக்கும் பொழுது அப்படி ஒரு ஒரு வசீகரம் அவன் முகத்தில். ஒருவேளை பெயர் கூட வசீகரனா இருக்குமோ! நிலாவின் மனம் அவளிடம் கேள்வி கேட்க, தன் மனம் போகும் போக்கை அடக்கியவள் “இல்ல சார்” அதையும் வாய் வார்த்தையாக கூறாது தலையசைத்தே பதிலாக அவனுக்கு கொடுத்தாள் பெண்ணவள்.
“யாரு போன்ல? ஏதாவது பிரச்சினையா?”
அவளுடைய அந்த ஓட்ட செல்போனில் அவள் பேசியது, மறுமுனையில் பேசியது என்று எல்லாம் கேட்ட பின்தான் இந்தக் கேள்வியையே! கேட்டிருந்தான்.
இன்டவியூக்கு வந்தவளிடம் நாலு கேள்வியை கேட்டு “யு ஆர் செலெக்டெட். இந்தா அப்பொன்ட்மென்ட் ஆர்டர். என்று கையில் கொடுக்காமல் இது என்ன கேள்வி” எனும் விதமாக அவனை பார்த்து முழித்தாள் நிலா. 
“என்ன செல் வச்சிருக்க நீ. நீ பேசுறது அங்க வர கேக்குது” என்றவன் அவளருகில் வந்து நின்று கை நீட்டி அவள் செல்போனை கேட்க, உரிமையான அவன் பேச்சும் செய்கையும் அவளை திணறச்ச செய்ய அனிச்சையாக அவள் கை கைப்பையை துழாவி அலைபேசியை எடுத்து அவனிடம் நீட்டி இருந்தது.
“ரொம்ப பழைய மாடல் ஆச்சே” என்று அதை திருப்பி திருப்பி பார்த்தவன், அக்கு வேர் ஆணி வேராக உள்ளே நொண்டி பார்த்து விட்டு, அதை அவளிடம் திருப்பி கொடுக்க, பத்திரமாக தனது கைப்பையில் வைத்துக்கொண்டாள்.
அவள் அதை வைத்த விதம் எளிமையை தாண்டி, அவள் வறுமை அவன் கண்களில் பளிச்சென்று பட எள்ளல் புன்னகை உதட்டில் மலர, உடனே மறைத்துக் கொண்டவன்
“ரொம்ப பணக் கஷ்டத்துல இருக்க போல” கண்களை அவன் கூர்மையாக்கி நிலாவின் கண்களை நேர்பார்வை பார்த்து கேட்க, அவள் கண்களின் ஓரம் சிறு கண்ணீர் துளி இப்போ விழாவா என எட்டிப் பார்த்தது.
“இந்த வேல எனக்கு கிடைக்குமா?” அவன் கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லாது அவனையே! திருப்பிக் கேட்டாள் நிலா.
“மாசம் முப்பதாயிரம் சம்பளம் வரும். புதுசா வேற வேலைக்கு சேருற, ஐயாயிரம் கம்பனில பிடிச்சிக்குவாங்க” அதுக்கு சில காரணங்களை சொன்னவன். எங்கே தங்கி இருக்க, என்று கேட்டு “மாசம் பஸ்சசுக்கு இவ்வளவு போகும். சாப்பாட்டு செலவு இவ்வளவு. வீட்டு செலவு….” பேசியவாறே தன் இருக்கையில் வந்தமர்ந்தவன் அவளையும் அமரும் படி கூற
“அது ஒன்னும் பிரச்சினை இல்ல. சாப்பாடு கூட ஒரு நேரம் சாப்பிட்டுக்கொள்வேன். வீட்டு செலவுனு ஒன்னும் இல்ல” உடனே பதில் வந்தது அவளிடமிருந்து என்னவோ வேலையை கொடுத்து முதல் மாத சம்பளத்தையும் அவளிடம் கொடுத்து விட்டதாகவே பேசினாள் நிலா.
 “நான் வேலை கொடுத்தால் முதல் மாசம் சம்பளம் வர ஒரு மாசம் ஆகும் அதுவரைக்கும் என்ன பண்ணுவ?” அவன் கேள்வியில் பாவமாக அவனை பார்த்து முழித்தாள் ஆனால் அந்த கல்நெஞ்சக்காரனின் மனம் இளக்கத்தான் இல்லை.
இவளுக்கு இவன் இவ்வளவு விளக்கம் கொடுக்க வேண்டிய தேவை ஏன் வந்தது என்று நிலா கொஞ்சம் யோசித்திருந்தால், இதெல்லாம் இவன் வேலையில்லையே! என்று கூட புரிந்திருப்பாள். வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தவளுக்கு அதெல்லாம் யோசிக்கத் தோன்றவில்லை.    
“நான் ஒரு ஆபர் தரவா? கல்யாண ஆபர்” என்றவன் சில நிமிடங்கள் மெளனமாக அவன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை அகற்றாது அவள் முகபாவனையை படிக்கலானான்.
“கல்யாண ஆப்பரா? ஏதாச்சும் கல்யாண வீட்டுல  வேலை செய்யணுமோ! கல்யாணத்துல டெக்ரேசன், சமையல் இந்த மாதிரி ” இவ்வாறுதான் நிலாவின் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.
அவள் புரிந்துகொள்ளவில்லை என்றதும் மௌனத்தை கலைத்தவன் “என்னை கல்யாணம் பண்ணிக்கணும்” எந்த மேல் பூச்சும் இல்லாமல். சொல்லி விட்டும் அவள் முத்தை தான் பார்த்துக்கொண்டிருந்தான். 
தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா? என்று அவனையே கேள்வியாய் பாத்திருந்தாள் நிலா.
அவள் பார்வையில் அதிர்ச்சியோ! ஆச்சரியமோ! அவன் எதிர்பார்த்த மகிழ்ச்சியும் இல்லை.
“என்ன பேச்சையே காணோம்?”
“விளையாடுறீங்களா?” என்று கேட்கவும் பயமாக இருந்தது. “நிஜமா?தான் கேட்டிங்களா?” என்று கேட்கவும் தயக்கமாக இருக்க, பதில் சொல்லாது கண்களை உருட்டினாள்.
அவள் பார்வையை சரியாக படித்தவன் “ஒஹ்… நம்பும் படி இல்லையோ!” என்று தாடையை தடவியவன் “உனக்கு பணத் தேவ, எனக்கு நீ” என்று சாதாரணமாக முகபாவனத்தில் சொல்ல
“ஒருவேளை இந்த சினிமால எல்லாம் வருகிற மாதிரி இவருக்கு திடிரென்று கல்யாணம் நடக்கா விட்டால் சொத்து பறி போய் விடும் படியா பாட்டி அல்லது தாத்தா உயில் எழுத்திட்டங்களோ! பொண்ணு கிடைக்காம இருந்தவரு எதேச்சையா நாம போன்ல பேசினது கேட்டுட்டு, என் பணத் தேவையை புரிஞ்சி ஆப்பார்னு உளறுறாரோ!” தானாக மனதில் கண்டதை நினைத்துக் குழம்பிக்கொண்டிருந்தாள் நிலா.  
அவள் மனதில் நினைத்ததை அவனிடம் கேட்டிருக்க வேண்டுமோ!
அவளை சொடுக்கிட்டு நடப்புக்கு கொண்டுவந்தவன் “நீ இப்படி அடிக்கடி ட்ரீம் வர்ல்டுக்கு போய்ட்டினா… ரொம்ப கஷ்டம். உன் குணம் இது இல்லையே! எதுனாலும் பட்டென்று பேசிடுவியே!” ஆச்சரியமாக கூறுவது போல் அவளை கிண்டல் செய்ய
பாவம் அவன் கிடல் அவளை அடையவில்லை. ஆமோதிப்பாய் தலையசைத்தவள் “எல்லாம் அப்பா இருக்குறவரைக்கும் தான். அவர் போனதிலிருந்து எல்லாம் மாறிப்போச்சு” என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் துளி பெரிய துளியாய் உருண்டு விழ தலையை குனிந்து அதை கையில் ஏந்தி அவன் கவனிக்காதவாறு கண்களை துடைத்துக்கொண்டாள் நிலா,
“போய் சேர்ந்துட்டாரா? அதான் உன் திமிர் எல்லாம் அடங்கி, ஒடுங்கி போயிருச்சா? உன் தோற்றத்தை பார்த்தும் பரிதாபம் வரலையே! நீ எனக்கு பண்ணது என் அம்மாக்கு பண்ணது எல்லாத்துக்கும் உன்ன பழிவாங்கலானா? இவ்வளவு நாளும் நான் இழந்த தூக்கத்துக்கு, நிம்மதிக்கு அளவே இல்லாம போயிடும்” மனதுக்குள் பொறுமியவனின் கண்களில் அவள் கண்ணீர் சிந்தியது கூட விழ, மனதில் தென்றல் வீசியது. “நீ இன்னும் அழனுமே! இது பத்ததே! உன் சொத்தையெல்லாம் பறிச்சி உன்ன நிர்கதியா நிக்க வைக்கணும்னு நினச்சேன். ஆனா இப்படி ஒண்ணுமில்லாதவளா… என் கண்ணு முன்னாடி வந்து நிப்பானு நினைக்கல. உன்ன இப்படி பார்த்தும் என் மனசு ஆறலை. உன் மேல பரிதாபம் வரல. உன் பணத்தேவையை எனக்கு சாதகமா பயன் படுத்திக்க போறேன்” குரூரமாக அவளை பார்த்திருந்தவன் அவள் நேராக நிமிர்ந்து அமர்ந்ததும்  
வெளியே புன்னை மாறாமல் “ஓகே நிலா இன்னும் டூ டெஸ்லா நமக்கு கல்யாணம் இந்த அட்ரெஸ்ஸுக்கு வந்துடு” என்று ஒரு விசிட்டிங் காடை கொடுக்க, அதை பார்க்க கூட இல்லை பத்திரமாக கைப்பையில் வைத்துக்கொண்டாள் நிலா.
யாரையோ அலைபேசியில் அழைத்தவன் கேஷ் எடுத்து வரும் படியும் கூடவே இனிப்பும், ஜூசும் கொண்டுவரும் படி கூற அவனை கேள்வியாக ஏறிட்டாள் நிலா.
கண்சிமிட்டி புன்னகைத்தவனின் அழகில் மயங்கி நின்றவளை அவனின் கணீர் குரல் அழைத்து “அதான் நீ சம்மதம் சொல்லிட்டியே ஸ்வீட் எடு கொண்டாடு” 
“நான் எப்போ சம்மதம் சொன்னேன்” என்று யோசித்தவள் அவன் கொடுத்த விசிட்டிங் காடை உள்ளே வைத்தது மாத்திரமன்றி அவன் தனக்கும் அவனுக்கும் இரண்டு நாளில் கல்யாணம் என்று கூறியதையும் மறுக்கவில்லை என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தாள்.
“யாராவது விசிட்டிங் கார்ட் கொடுத்தால் அதை வாங்கி வைத்து கொள்வது இயல்புதானே! அதை எப்படி சம்மதித்து விட்டேன் என்று நினைக்கலாம்?” என்று அவள் மனம் கேக்க,
“நீதான் திருமணத்தை மறுக்கவே! இல்லையே!” என்றது மறுமனம் 
“சார்” என்று அவள் பேச முன்
“புடவை வாங்க மற்றும் உன் தேவைக்குதான் காசு கொண்டு வர சொல்லி என் பி.ஏ. கிட்ட சொல்லி இருக்கேன் நிலா. வீட்டுல நகைகள் இருக்கு கல்யாணம் அன்னைக்கி நீ வந்த பிறகு போட்டுக்கொள்ளலாம். புடவை மட்டும் வாங்கி நீ கட்டிக்கிட்டு வா. புடவை கட்ட தெரியும் தானே!” என்று அவளை சந்தேகமாக வேறு பார்க்க அவள் தலை தானாக ஆடியது.
ஆடிய தலை தானாக நின்று தான்தானா சம்மதம் சொன்னோம் என்று தனக்குள்ளையே கேள்வி கேட்டவள். ஏன் என்றும் புரியாமல் குழம்ப, அவன் சொன்ன பி.ஏ. கதவை தட்டி விட்டு உள்ளே வந்து அவன் கேட்டவற்றை கடை பரப்பினான்.
“ஜெகன் இவங்க நிலா. நான் கல்யாணம் பண்ணிக்க போறவங்க. இன்னும் ரெண்டு நாள்ல எனக்கும் இவங்களுக்கும் என் வீட்டுல அவசரமா கல்யாணம் நடக்கணும். அதுக்கான ஏற்பாடா நீங்க பண்ணிடுங்க” உத்தர விட ஜெகன் முகம் அதிர்ச்சியை அப்பட்டமாக வெளிக்காட்டினாலும் கேள்விகள் ஏதுமின்றி “ஓகே சார்” என்றவன் அறையை விட்டு வெளியேறி இருந்தான்.  
நிலா அவனிடமிருந்து விடை பெற்று வந்தாலும் தான் கனவு கண்டோமா? என்ற சந்தேகம் தீரவே! இல்லை. வேலை தேடி சென்றால் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டான்.
“அவன் மீது உனக்கு சந்தேகம் வரவில்லையா நிலா?” பெண்ணுக்கே! உண்டான எச்சரிக்கை மனம் கேள்வி எழுப்ப
“அதான் தெளிவாக சொன்னாரே! அவருக்கு என் உதவி தேவை படுது. எனக்கு அவர் பணம் தேவை படுது” கசப்பாக புன்னகைத்தாள் நிலா. 
“என்ன இருந்தாலும் முதல் முறையாக பார்க்கும் பெண்ணிடம், பலநாள் பழகியது போல் பேசி, திடிரென்று கல்யாணம் செய்துகொள்கிறாயா என்று கேட்பது முறையில்லை” மீண்டும் அவள் மனம் அவளை எச்சரிக்க,
“அவருக்கு ஒரு பெண்ணின் உதவி தேவைப்பட்டிருந்திருக்கும். அந்த பெண் பணத்துக்காக வந்தாலும் அவர் சொத்துக்காக ஆசைப்பட்டு நாளைக்கு அவர் வாழ்க்கையில் குறிக்கிடவும் கூடாது என்று நினைத்திருப்பார். என்னை பார்த்ததும் ஏமாற்ற மாட்டாள். சொத்து கிடைத்ததும் விவாகரத்து கொடுத்து விட்டு இடத்தை காலி செய்த்து விடுவாள் என்று எண்ணி இருப்பார்” என்று தன் மனதிடம் அவனுக்காக வாதிட்டாள்.
“அது சரி, அந்த, நல்லவர், வல்லவர், கொடைவள்ளல் பெயர் கூடவா கேக்காம திருமணத்துக்கு சம்மதிச்ச” அவள் ஆழ்மனம் கேலி செய்ய
மனதோடு போராடியவாறே இருப்பிடமும் வந்து சேர்ந்திருந்தவள் அவசர அவசரமாக கைப்பையை துளாவி அவன் கொடுத்த விசிட்டிங் கார்டை எடுத்து அவன் பெயரை பார்த்தாள். அதில் துகிலவாணன் மௌரி என்று தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்தது.

Advertisement