Advertisement

அத்தியாயம் 1
“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”
“கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லியவாறே தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தனது கையை உயர்த்தி சைகையும் காட்டினார் புரோகிதர்.
மந்திரம் ஓதப்பட்டது மணப்பெண்ணின் கழுத்தில் தாலி அணிவிக்கத் தானே. அந்த கடமையை இனிமொழியன் செவ்வனே என்று சிறப்பாக செய்து முடித்தான்.
அவன் முகம் இறுகி இருந்தது. பிடிக்காத திருமணத்தை இன்முகமாகவா செய்ய முடியும்? அருகில் அமர்ந்திருப்பவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
அவள் அனுபமா. அவளும் இவன் புறம் திரும்பி பார்க்கவில்லை. கொஞ்சம் நாணம், கொஞ்சம் அச்சம் என்று அமர்ந்திருந்தாள்.
இனிமொழியன் வரதராஜன், அன்னலட்சுமி தம்பதியரின் மூத்த புதல்வன். இளையவன் கணிமொழியன். இனிமொழியனை வீட்டாரும் நண்பர்களும் இனியன் என்றுதான் அழைக்கின்றனர்.
வரதராஜன் இரண்டு ஆண்மகன்களையும் கண்டிப்போடும், பாசத்தைக் கொட்டியும், சுதந்திரமாகவும் வளர்த்ததால் தான் எது சொன்னாலும் அவர்கள் கேட்பார்கள் என்று பிள்ளைகள் மீது அபரீத நம்பிக்கை வைத்திருந்தார்.
அனுபமா இனியனின் தந்தை வரதராஜனின் தூரத்து உறவுதான். வரதராஜனும் அன்னலட்சுமியும் சொந்தத்தில் ஒரு திருமணத்துக்காக ஊருக்கு வந்த பொழுதுதான் அனுபமாவை பார்த்து இனியனுக்கு பெண் கேட்டு பேசி முடித்தனர்.
வீட்டுக்கு வந்து சந்தோசமாக மகனிடம் அதை பகிர்ந்துகொண்டால் அவனோ வரதராஜனின் தலையில் இடியை இறக்கினான்.
தான் வேலை பார்க்கும் இடத்தில் தன்னுடைய கொலிக்கான ஜான்சியை காதலிப்பதாக கூறினான் இனியன்.
“மாற்று மதத்து பெண்ணை காதலிப்பதுமில்லாமல் அதை என்னிடமே தைரியமாக சொல்லுறியா? வேற ஜாதியிலையே பொண்ண கட்ட மாட்டேன். நீ வேற்று மதத்துல பொண்ணு பார்த்து வச்சிருக்கியா?” இனியனை அடிக்கவே பாய்ந்தார் வரதராஜன்.
இதை சற்றும் இனியன் எதிர்பார்க்கவில்லை. வரதராஜனும், அன்னலட்சுமியும் அன்பான பெற்றோர்கள் மற்றுமன்றி தோழமையாக பழகக் கூடியவர்களும் கூட. இப்படி ஜாதி, மதம் என்று பேசுவார் என்று நினைக்கவில்லை.
அவனுடைய பாடசாலை நண்பர்கள், காலேஜ் நண்பர்கள், மட்டுமல்லாது வேலைபார்ப்பவர்களைக் கூட வீட்டுக்கு அழைத்து வந்திருக்கின்றான். பெற்றோரின் கல்யாண நாளா? இவர்களின் பிறந்தநாளா? பார்ட்டி, விருந்து என்று அவர்களும் வந்து வீட்டில் சாப்பிட்டு விட்டு சென்றிருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் அவர்கள் எந்த மதம்? எந்த ஜாதியென்றெல்லாம் கேட்டது கூட இல்லையே ஏன் திடிரென்று. இனியனுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஆனால் இனியன் அறியாதது வரதராஜனுடைய ஜாதியை சேர்ந்த மாணிக்கவேல் தற்பொழுது ஆளும் கட்ச்சியில் அமர்ச்சராக இருக்கிறார். வரதராஜனும் அவருடைய தீவீர தொண்டர்களில் ஒருவர்தான். ஜாதி ஓட்டு மட்டும் பத்தாதே. யாரை எப்படிக் கவர்ந்து மண்டையைக் கழுவி ஓட்டு வாங்குவதென்று சதா சிந்திக்கும் வரதராஜன் மற்ற விடயங்களில் மற்றும் ஜாதி, மதம் பார்ப்பதை விட்டிருந்தார்.
மூத்தமகன் என்று பாசம் காட்டி வளர்த்த தான் காதலில் விழுந்ததை தாங்க முடியாமல் தந்தை கோபப்படுவதாக நினைத்தவன் அன்னையை அணுகினான்.
“இங்க பாரு இனியா. உனக்கு எது நல்லதோ அதைத்தான் அப்பா பண்ணுவாரு. சின்ன வயசுல பாய்ஸ் ஸ்கூல்தான் போவேன்னு சொன்ன, அது அரசாங்க ஸ்கூல் அங்க வேணாம்னு அப்பா உன்ன இங்கிலிஷ் ஸ்கூல்ல சேர்த்தார். உனக்கு நல்லதுதானே நடந்திருச்சு? கம்பியூட்டர் இன்ஜினியரிங் படிக்கணும் என்று ஒத்த கால்ல நின்ன. இன்ஜினியரிங் உனக்கு வேணாம். உன் நேச்சருக்கு ஒரே இடத்துல இருந்து உன்னால வேல பார்க்க முடியாது. உன் திறமைக்கு அஞ்சு வருஷம் ஆனாலும் பரவால்ல B.A ARCH படி என்று சொன்னாரு. இன்னக்கி ஆர்கிடெக்டரா கைநிறைய சம்பாதிக்கிற. உன் கம்பனி சிங்கப்பூர், மலேசியா என்று கட்டிடம் கட்டிக் கிட்டு இருக்கு. கூடிய சீக்கிரம் லண்டன்ல ஒரு ஹோட்டல் கட்ட போறதா வேற சொன்னியே. வேலை பார்த்து சம்பாதிச்சதும் போலாச்சு. ஊரையும் சுத்திப் பார்த்தாச்சு. அப்பா சரியாதான் சொன்னாரு என்று நீயே சொன்னியே”
தாங்கள் எடுத்த முடிவால் தங்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கை சிறந்து விளங்கி முன்னேற்றமடைந்து கொண்டுதான் போகிறது. எந்த விதமான தவறும் பிள்ளைகளுக்கு தாங்கள் இழைக்கவில்லை என்று கூறவே செய்ததையெல்லாம் சுட்டிக் காட்டினாள் அன்னலட்சுமி.  
“படிப்பும், வேலையும், வாழ்க்கை துணைவியும் ஒண்ணா? எதை எதோடு ஒப்பிடுறீங்க? கட்டிக்கப்போறவ என் மனசுக்கு பிடிக்க வேண்டாமா?” இவர்களுக்கு சொல்லிப் புரிய வைப்பது வீணென்று அன்னையை முறைத்து விட்டு அகன்றான் இனியன்.
வீட்டில் இனிமொழியனின் திருமண வேலைகள் நடந்துக் கொண்டிருக்க,  தந்தை சொல்வதற்கு தலையாட்டுவிப்பது போல் அவன் ஒரு திட்டம் போடலானான். வீட்டார் சம்மதிக்கவில்லையென்றால் என்ன தான் ஜான்சியைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக ஜான்சியை பதிவுத் திருமணம் செய்ய எண்ணினான்.
வளமை போல் வேலைக்கு சென்று வந்துகொண்டிருந்தவன் எல்லா ஏற்பாடும் செய்து ஜான்சியை அவளுடைய தந்தையோடு ரெஜிஸ்டர் ஆபீசுக்கு வருமாறு கூறி இருந்தான்.
அன்று காலை அன்னையின் கையால் உணவுண்டவன் தந்தையிடமும் சொல்லிக் கொண்டு தனது வண்டியில் கிளம்பி ரெஜிஸ்டர் ஆபீசை வந்தடைந்தான்.
ஜான்சிக்காக ஒரு மணிநேரம் காத்திருந்தவன் அவளுக்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போனவனாக அவளது வீட்டுக்கு சென்றான்.
பூட்டிய வீடே அவனை வரவேற்றது. காலிங் பெல்லை பல தடவை அழுத்திப் பார்த்தான். கதவை பலமாக தட்டியும் பார்த்தான். எந்த பதிலும் வராது போகவே பயந்து விட்டான்.
அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் இன்று காலை அப்பாவும், மகளும் கிளம்பி சென்றதாக தகவல். எங்கு சென்றார்கள் என்றுதான் தெரியவில்லை. 
பார்ப்பதற்கு திருமணத்துக்கு செல்வது போல்தான் தெரிந்தது. விசாரித்தால் ஜான்சி எதுவும் கூறவில்லையாம். அப்படியாயின் அவர்கள் புறப்பட்டது ரெசிஸ்டர் மேரேஜ் ஆபீசுக்குத்தான். கிளம்பியவர்கள் எங்கே சென்றார்கள்?
ஜான்சியின் அலைபேசி அனைக்கப்பட்டிருந்தது. அவளுடைய தந்தையின் அலைபேசியோ இணைக்கப்படவில்லை. திரும்பத் திரும்ப முயன்றும் அவனால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கண்டறிய முடியாமல் அலைந்தான்.
தேடி தேடி ஓய்ந்தவன் கடைசியாக சென்ற இடம் ஜான்சியின் ஏரியாவில் இருக்கும் காவல் நிலையம்தான்.
அங்கு சென்றால் அவனுடைய மாமா ஏசிபி ராஜகோபால் அங்கு நின்றார்.
என்னவென்று சொல்வான்? காதலியை காணவில்லையென்று சொல்வானா? என்ன? ஏது? என்று விசாரிக்காமலையே வீட்டுக்கு அழைத்து விஷயத்தை கூறி விடுவார். 
ஒருவாறு கூட வேலை செய்யும் பெண்ணை காணவில்லையென்று கம்பளைன்ட் கொடுக்க முனைந்தான்.
“ஏன்டா மாப்புள கூட வேலை செய்யுற பொண்ண காணாம்னா அவ இன்னைக்கு வேலைக்கு வராம இருந்திருக்கணும். ஒருநாள் வேலைக்கு வராம இருந்ததற்கா காணல என்று கம்பளைண்ட் கொடுக்க வந்த? போன் பண்ணியா? வீட்டுக்கு போய் பார்த்தியா?” யோசனையாக கேட்பது போல அக்கா மகனை குடைந்தார் ராஜகோபால்.  
அவர் கேள்வியில் உசாரானவன் “முக்கியமான பைல் ஒன்னு அவ கிட்டதான் இருந்தது. ஆபீஸ் வராததனால வீட்டுக்கு போய் பார்த்தேன். வீடு பூட்டி இருந்தது. அக்கம்பக்கத்துல விசாரிச்சா அப்பாவும் பொண்ணும் ஏதோ கல்யாணத்துக்கு போனதா சொல்லுறாங்க. ஒழுங்கா வேலை செய்யிற பொண்ணு. இப்படி பொறுப்பில்லாம நடந்துகமாட்டா”
“எப்படி உன் கிட்ட சொல்லாம கல்யாணத்துக்கு போறதா?” மருமகனின் வாயை பிடுங்க முயன்றார் ராஜகோபால்.
“பைலை கொண்டு வந்து ஆபீஸ்ல கொடுத்துட்டு போய் இருப்பான்னு சொல்ல வந்தேன்” இவனும் அவருக்கு சளைக்காமல் பதில் சொன்னவன் “அவ போன் எந்த ஏரியால ஆப் ஆச்சுன்னு பார்த்து சொல்லுங்க” உத்தரவு போடுவது போல் கூறினான்.
அவன் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே உள்ளே வந்த எஸ்.ஐ. ரவி “சார் விபச்சார கேஸ்ல கைதான அந்த அப்பா பொண்ண தனித்த தனி செல்லுக்கு மாத்தவா? இல்ல அதே செல்லுல வைக்கட்டுமா? இன்னைக்கு நைட் டியூட்டில எந்த லேடி போலீஸும் …” அங்கே இனியன் இருப்பதை பார்த்து பேச்சை பாதியிலையே நிறுத்தினான்.
“ராஜகோபால் மருமகனை பார்த்தவாறே “தனியா போடுயா. என்னதான் விபச்சாரியானாலும் அப்பா முன்னால கூட படுப்பாளா? சங்கடமா இருக்காதா?” ரவியை கண்களால் வெளியேறும்படி கூறியவர் “அப்பா பொண்ணு என்று சொல்லி வீட்டை வாடகைக்கு வாங்குறது பலான தொழில் பாக்குறது. இதுவே பொழப்பா போச்சு மாப்புள” அலுத்துக்கொள்வது போல் சொன்னார்.
“அப்பா பொண்ணா?” இனியனுக்கு ஏதோ புரிவது போல் இருக்க பதைபதைப்போடு கேட்டான்.
“முதல்ல அதுங்க அப்பா பொண்ணா என்றே தெரியல அத வேற விசாரிக்கணும். பொண்ணு பேர் ஜான்சி. அப்பா பேர் விக்டர். இந்த மாமா பயலுங்க இப்போ இப்படித்தான் தொழில் பாக்குறானுங்க” காதை குடைந்தார் ராஜகோபால்
“ஐயோ” என்றவாறே இருக்கையை தள்ளி எழுந்தவன் ரவியின் பின்னால் ஓடினான்.
அங்கே சிறையில் போலீஸ் அடியில் துவண்டு போய் ஜான்சியும், விக்டரும் ஒவ்வொரு மூலையில் கிடந்தனர்.
விக்டர் ஜட்டியோடு அங்கங்கே இரத்த காயங்களோடும், அடித்த அடியில் உடல் கன்றியும், முகம் வீங்கியும் காணப்பட்டார்.
ஜான்சி உடுத்தியிருந்த சேலையை உருவியிருக்கிறார்கள். ரவிக்கை வேறு கிழிந்திருந்தது. உள்ளாடை வேறு வெளியே தெரிய அவள் குட்டை முடியை வைத்தும் கைகளை வைத்தும் அதை மறைக்க முயன்றவாறு கால்களை ஒடுக்கி அமர்ந்திருந்தாள்.
அவள் கன்னத்தைப் பிடித்து அழுத்தியதில் கன்னம் சிவந்து வீங்கி விரல் தடங்கல் கூட கன்னத்திலிருந்தன.
அவள் இருந்த நிலையைப் பார்த்த உடன் இனியனின் கண்கள் கலங்கி அவள் உருவம் மங்க ஆரம்பித்தது.
கண்களை பரபரவென துடைத்துக் கொண்டவன் “ஜான்சி” என்று அழைத்திருந்தான். கலங்கி ஒலித்த அவன் குரல் அவனுக்கே கேட்டிருக்குமா?  சந்தேகம் தான்.
கைகள் நடுங்கக் கம்பிகளைப் பற்றிப் பிடித்தவன் மீண்டும் “ஜான்சி” என்று அழைக்க அவன் குரல் ஜான்சியின் காதை எட்டியிருந்தது. 
அந்தோ பரிதாபம் ஆண், பெண் என்று வேறுபாடில்லாமல் போலீசார் அடித்ததில் யார் குரல் கேட்டாலும் அச்சத்தில் ஒடுங்கினாள்.
அழைத்தது இனியன் என்று கூட அறியாமல் உடல் நடுங்கியவளைப் பார்த்து இனியனின் கண்களிலிருந்து மேலும் கண்ணீர் பெருக்கெடுத்து தொண்டை கமறியது.
கண்களைத் துடைத்துக் கொண்டவன் “ஜான்சி நான்தான். இனிமொழியன்” என்றான்.
“இனியன் இனியன்” என்றவாறே தட்டுத் தடுமாறி அவனை வந்தடைந்தவளுக்கு நிற்கக் கூட தெம்பில்லாமல் கம்பிகளைப் பிடித்தவாறு தோய்ந்தமர்ந்தாள். 
அழுதவாறே இனியனும் அமர்ந்து என்ன நடந்தது என்று கேட்டான்.
அவளால் பேச முடியவில்லை. காதலனை கண்ட சந்தோஷமும், நிம்மதியிலும் கம்பிகளுக்கூடாக அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அவன் பெயரை மட்டுமே திரும்பத் திரும்ப கூறலானாள்.
புன்னகைத்தவாறே இருக்கும் ஜான்சியை இவ்வாறு இனியனால் பார்க்க முடியவில்லை. அவள் கைகளைப் பிடித்தவாறு இவன் கதற “இனியன் இனியன் என்ன இங்க இருந்து கூட்டிகிட்டு போய்டு” ஜான்சி கதறினாள்.
மகளின் கதறல் சத்தம் கேட்டுக் கண்விழித்த விக்டர் “தம்பி எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல என் பொண்ண பத்திரமா இங்கிருந்து கூட்டிட்டு போய்டுப்பா” என்றார் கைகளைக் கூப்பியவாறு.
“என்ன இனியா உனக்கு தெரிஞ்சவங்களா?” என்றவாறே வந்தார் ராஜகோபால்.
மாமனைக் கண்டதும் வெகுண்டெழுந்தவன் அவர் சட்டையைப் பிடித்து உலுக்கி “யார் சொல்லி இப்படி பண்ணீங்க? சொல்லுங்க? அப்பாதானே” கர்ஜித்தான்.
“அமைதி அமைதி இனியா. வா உக்காந்து பேசலாம்” ஜான்சியை விட்டு வரமாட்டேன் என்றவனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று இன்ஸ்பெக்டரின் அறையிலுள்ள இருக்கையில் அமர்த்தினார் ராஜகோபால்.
“அதிகாரத்தில் இருந்தால் என்ன வேணும்னாலும் செய்வீங்களா?” மனதளவில் துவண்டு போன இனியனால் மாமனோடு சண்டை போடதெம்பில்லாமல் குரலை மட்டும் உயர்த்திக் கேட்டான்.
“அந்த பொண்ண காணோம் என்ற உடனே நீ போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருந்தீனா அவங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. பாவம் நீ இப்போ வருவ, அப்போ வருவ என்று அழுதுகிட்டே இருந்தா” இவன் ஒன்று கேட்க ராஜகோபால் ஒன்றைக் கூறினார்.
எங்குத் தேடியும் கிடைக்காததால் கடைசியாகத்தான் இனியன் காவல் நிலையம் வந்தான். காக்க வேண்டியவர்களே காதலித்ததற்காகக் கொடுமைப் படுத்துவது காவல் நிலையத்தில்தான் நடக்குமென்று இவன் கனவா கண்டான்?
அவன் வரத் தாமதமானதால்தான் ஜான்சிக்கு இந்த நிலைமை என்று மட்டும் ராஜகோபால் சொல்ல முனையவில்லை. இன்று ஜான்சிக்கு இந்த நிலமையே இனியனால்தான் என்று கூறினார்.
ஜான்சியையும் அவள் தந்தையையும் பொய்யான வழக்கில் உள்ளே வைத்து அடித்துக் காயப்படுத்தியதும் இல்லாமல் பெண் என்றும் பாராமல் அவளைச் சித்திரவதை செய்திருப்பதைப் பார்த்த பொழுதே இனியனுக்குத் தெரியாதா? அவனால்தான் அவளுக்கு இந்த நிலமையென்று. இவர் வேறு அதை விலாவரியாக விளக்க வேண்டுமா? கோபம் கனன்றாலும் முதலில் ஜான்சியை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் அமைதியாக “இப்போ நான் என்ன செய்யணும்?” எனக் கேட்டான்.
“வேற என்ன மாப்புள உன் அப்பா பார்த்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க. என் பொண்ணு கட்டினா கணியத்தான் கட்டுவேன்னு ஒத்தக் கால்ல நிக்கிறா. இல்லனா எம்பொண்ண உனக்குக் கட்டி வச்சிருப்பேன்” சர்வசாதாரணமாகக் கூறினார் ராஜகோபால்.
“தன்னுடைய பெண் அண்ணன் வேண்டாம் தம்பிதான் வேண்டும் என்றாளாம் அவளுடைய விருப்பத்துக்குத் திருமணம் செய்து வைக்கிறாராம். இன்னொரு பெண்ணின் மனச பத்தியோ, மானத்த பத்தியோ கொஞ்சம் கூட கவலை இல்ல. ஜாதி வெறி பிடிச்ச மிருகம்” மனதுக்குள் பொருமினான் இனியன்.
“சரி பண்ணிக்கிறேன். ஜான்சியையும் அவ அப்பாவையும் முதல்ல வெளிய விடுங்க” என்றான் அமைதியாக.
“எதுக்கு? வெளிய விட்டதும் கூட்டிட்டு போய் சர்ச்ல கல்யாணம் பண்ணவா?”
உள்ளுக்குள் எழுந்த எரிமலையை அடக்கியவன் “அப்படியெல்லாம் பண்ண மாட்டேன். அப்படிப் பண்ணா அவங்கள மட்டுமில்ல என்னையும் உயிரோட விட்டு வைக்க மாட்டீங்க என்று தெரியும்” இனியன் தன் பேச்சை முடிக்கவில்லை.
“சபாஷ்” என்றார் ராஜகோபால்.
“என் கல்யாணம் முடியிற வரைக்கும் இவங்கள லாக்கப்லயா வைக்க முடியும்? முதல்ல ஹாஸ்ப்பிட்டல சேர்த்து ட்ரீட்மெண்ட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க” தான் இவர்களை அழைத்துக் கொண்டு செல்ல ஒருகாலமும் விட மாட்டார் என்று நன்றாகவே புரியப் பொறுப்பை அவரிடமே கொடுத்தான் இனியன்.
மேசை மீதிருந்த அலைபேசியைக் கையில் எடுத்தவர் “என்ன மாமா அப்படியே பண்ணிடலாமா?” என்று கேட்க, மறுமுனையில் தந்தை அனைத்தையும் கேட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறார் என்று இனியனுக்குப் புரிந்தது..
நடிப்பு மட்டும்தான் ராஜகோபாலுடையது. கதை, திரைக்கதை வசனம் முழுக்க வரதராஜனுடையது என்பதை தெளிவாக உணர்ந்தவனின் கோபம் பல மடங்காக பெருகினாலும், இப்பொழுது அதை இவர்களிடம் காட்ட முடியாது என்று அமைதியானான்.   
தன்னை ஜான்சியோடு இருக்க விடமாட்டார்கள். அவள் நிலைமையையும் அறிந்துகொள்ள வேண்டும். இவர்களை நம்பி விட்டுச் செல்லவும் முடியாது என்று தோன்ற டாக்டராக இருக்கும் ஜான்சியின் தோழியொருத்தியை உதவிக்கு அழைத்து அவர்களை ஒப்படைத்தான்.
அவள் கேட்ட எந்த கேள்விக்கும் இனியனால் பதில் சொல்ல முடியவில்லை. ராஜகோபாலை பார்த்த உடன் அவளும் புரிந்துகொண்டு அமைதியானாள்.
இனியன் வெளியேறும் கணமே ஜான்சியும், விக்டரும் பிணியூர்தியில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
வீட்டுக்கு வந்த இனியன் அன்னலட்சுமி கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. வரதராஜன் மகனைப் பார்த்தவாறே இருக்க, இவன் திரும்பிக் கூட பார்க்கவில்லை. அவர் ஏதாவது கேட்டிருந்தால் இருக்கும் கோபத்தில் அடித்துக் கூட இருப்பான். காலையில் சாப்பிட்டுச் சென்றவன்தான் மதியம் ஜான்சியை தேடி அலைந்ததில் பசி மறந்திருந்தான். கோபம், வெறுப்பு, குரோதம் என்ற உணர்வுகள் தாக்க கட்டிலில் விழுந்தான்.
இரண்டு நாட்களாக வேலைக்குக் கூட செல்லாமல் வீட்டிலையே அடைந்து கிடந்தவனிடம் அன்னலட்சுமி வந்து பேசினால் எரிந்து விழுந்தான்.
“அவன அவன் பாட்டுல விடு அன்னம். நீ கல்யாண வேலைய மட்டும் பாரு” என்றார் வரதராஜன்.
“ஏங்க சாப்பிடாம கொள்ளாம இப்படி இருந்தா சரியா? கணி வேற கல்யாணத்துக்கு முந்தைய நாள்தான் வரேன்னு சொன்னான். அவன் இருந்திருந்தாலாவது இவன் கொஞ்சம் சரியாவான்” இனியனை நினைத்துக் கவலையடைந்தாள் அன்னலட்சுமி.
“அதான் சொன்னேனே போ.. போய் கல்யாண வேலை என்னமோ அதப்பாரு அவனே வருவான்” மனைவியை அதட்டினார்.
இனியனை அழைத்து இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்பதினால் வேலைக்கும் லீவ் சொல்லச் சொன்னார். இவன் முடியாது என்றால் வேலையையே விடச் சொன்னார். தந்தையைக் கடுப்பாகப் பார்த்தவன் இரண்டு வாரம் விடுமுறை எடுத்துக் கொள்வதாக அலைபேசி வழியாகக் கூறி இருந்தான்.
என்னதான் நடக்கிறது என்று குடைந்த அன்னலட்சுமிக்கு ராஜகோபால் இனியன் திருட்டுத் தனமாக திருமணம் செய்ய சென்றதைக் கூற,  அதிர்ந்து விட்டாள்.
வீட்டிலையே அடைந்து கிடந்த இனியனுக்குத் தோன்றியது ஒன்றே ஒன்றுதான். இவர்கள் பார்த்த பெண்ணை திருமணம் செய்வதற்காகத்தானே ஜான்சியை இந்த பாடு படுத்தினார்கள் அதற்காக வேண்டியே இந்த திருமணம் நடக்கக் கூடாது. என்ன செய்வது? என்று யோசித்தவனுக்கு தன்னால் எதுவும் செய்து விட முடியும் என்று தோன்றவில்லை.
இவன் அறையிலிருந்தாலும் யாராவது வந்து பார்த்து விட்டுச் சென்ற வண்ணம்தான் இருந்தனர். அறையை உட்தாழ்பாள் போடக் கூடாது என்று இருந்ததைக் கழற்றி இருக்க, சாவியையும் அன்னலட்சுமி எடுத்துச் சென்றிருந்தாள். இனியன் தற்கொலை செய்துகொள்வான் என்ற பயம்தான்.
அவனுக்கே சிரிப்பாக இருந்தது. “யார் நான் தற்கொலை செய்துகொள்வேனா? உயிரோடு இருந்து உங்களை சாகடிக்கிறேன்” என்று கருவிக்கொண்டான்.
திருமணத்தை எவ்வாறு நிறுத்துவது என்று யோசித்தவனுக்குச் சண்டைக்காரன் காலில் விழுவதை விட சாட்சிக்காரனின் காலில் விழுந்து விடலாமே என்ற எண்ணம் சட்டென்று தோன்றியது.
“தனக்குப் பார்த்திருக்கும் பெண் யார் என்று தெரியாது. அவள் பெயர் கூட தெரியாது. எந்த ஊர் என்று கூட தெரியாமல் அவள் தந்தையைத் தொடர்புக் கொண்டு எவ்வாறு பேசுவது? கல்யாண பத்திரிகை. ஆம் கல்யாண பத்திரிகையில் பெயர் ஊர், விலாசம், அலைபேசி என் உட்பட அனைத்தையும் அச்சிட்டுக் கொடுத்திருப்பார்கள்” தனக்குள் சிரித்துக் கொண்டவன் இரவில்தான் தான் அதிகமாகக் கண்காணிக்கப் படுவோம் என அறிந்து காலையில் குளித்து பூஜையறைக்குள் நுழைந்தவன் சுவாமியின் முன்னிலையில் வைக்கப்பட்டிருந்த கல்யாணப் பத்திரிக்கையை அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
மொட்டை மாடிக்குச் சென்றவன் வடிவேல் மணப்பெண்ணின் தந்தையென்று குறிப்பிட்டிருந்த எண்ணை அழைத்தான்.
“ஹலோ யாருங்க பேசுறது?” திருமணத்துக்காகப் பந்தல் கட்டுவதிலிருந்து பந்தி வைக்கும் வரை புதிய புதிய ஆட்களைச் சந்தித்து அலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தமையால் வடிவேலுக்கு யார் அழைத்ததென்று தெரியவில்லை.
“நான் சொல்லுறத நல்லா கேட்டுக்கோங்க. உங்க பொண்ணுக்கு பார்த்திருக்கிற மாப்புள நல்லவன் கிடையாது. இங்க சென்னைல ஒரு பொண்ணோட சுத்திகிட்டு இருக்கான். உங்க பொண்ண அவங்கப்பாவோட கட்டாயத்தின் பேருலதான் கட்டிக்கப் போறான். உங்க பொண்ணு வாழ்க யோசீங்க” என்றவன் அலைபேசியைத் துண்டித்திருந்தான்.
இனியன் நேரடியாகத் தான் தான் உங்க பெண்ணுக்குப் பாதித்திருக்கும் மாப்பிள்ளை. தனக்கு இந்த திருமணத்தில் இஷ்டமில்லை என்று கூறி இருக்க முடியும். அவ்வாறு கூறி திருமணம் நின்றால் அடுத்து தந்தை ஜான்சியை என்ன செய்வாரோ என்ற அச்சம் இனியனுக்குள் இருக்கவே இவ்வாறு கூறினான்.
“இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” வரதராஜனின் கட்டைக் குரலில் திடுக்கிட்ட இனியன் “காத்து வாங்க வந்தேன்” என்று அவரை நக்கலாகப் பார்த்து விட்டுச் சென்றான். 
ஆனால் இனியன் நினைத்ததற்கு மாறாக வடிவேல் இருந்தார்.
“யாருங்க போன் பண்ணது?” வடிவேலின் தர்மபத்தினி கோகிலவாணி கூந்தலை கொண்டையிட்டவாறே கேட்க,
“எவனோ பொடுபோக்குப் பய. வேலவெட்டி இல்லனு நினைக்கிறேன். மாப்பிள்ளையைப் பத்தி தப்பா சொல்லுறான்”
“என்னங்க சொல்லுறீங்க?. என்ன சொன்னான்? யாரா இருக்கும்” பதறினாள் அனுபமாவின் அன்னை.
“நீ எதுக்கு இப்போ குதிக்கிற? அதான் சொன்னேனே வேலைவெட்டி இல்லாத பயனு. போ போய் கல்யாண வேலைய பாரு. அனு கிட்ட இதையெல்லாம் சொல்லிக்கிட்டு திரியாத சரியா” அதட்டியவர் கல்யாண வேலைகளை பார்கலானார்.   
“இந்த கல்யாணம் நடக்காது” என்று மணப்பெண் வீட்டிலிருந்து அழைப்பு வருமென்று காத்திருந்த இனியனை அழைத்துக் கொண்டு திருமணத்துக்காக அனுபமாவின் ஊரை பார்த்து கிளம்பிச் சென்றனர்.
“என்ன இவன் மக வாழ்க்கை என்று சொல்லுறேன் கொஞ்சம் கூட கவலை படாம இருக்கான்” வருங்கால மாமனாரை மனதுக்குள் வசைபாடிய இனியன்  கோபத்தின் உச்சத்தி இருந்தான்.
அவனுக்குத்தான்  தெரியவில்லை “என் பையன் நாலு காசு சம்பாதிக்கிறான் என்ற பொறாமைல யாரோ பொண்ணு பாக்குற வீடுகளுக்கு போன் செய்து தப்பு தப்பா சொல்லி கல்யாணத்த நடக்க விடாம பண்ணுறாங்க” என்று வரதராஜன் வடிவேலிடம் கூறியிருக்க “நீங்க கவலை படாதீங்க சம்பந்தி” என்றவர்தான் வடிவேல் இனியனின் அலைபேசி அழைப்பைக் கண்டுகொள்ளவில்லை. இல்லையாயின் கொஞ்சமாலும் சிந்தித்துப் பார்த்திருப்பார்.
ஊருக்கு சென்ற இனியனால் தனியாக நிம்மதியாக இருக்க முடியவில்லை. மாப்பிள்ளையை பார்க்கவென மணப்பெண்ணின் சொந்தபந்தங்களும், ஊர்காரர்களும் வந்தவண்ணம் இருக்க கடுப்பானான்.
“நானே நடக்க இருக்குற கல்யாணத்த நிறுத்துறது எப்படினு யோசிக்கிறேன். இவனுன்னுங்க வேற? பேசாம அவ கிட்டயே பேசிடலாமா?” விபரீதமான யோசனை தோன்ற தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணை எவ்வாறு சந்திப்பது? முதலில் அவள் யாரென்றே தெரியாதே என்று புலம்பினான்.
யாரென்று அறிந்திருந்தால் அன்னையை அழைத்துக்கொண்டு இந்த ஊர் கோவிலுக்கு சென்று அவளை சந்தித்து விடலாம்.
சிந்தித்துக் கொண்டிருந்தவனின் மூளையோ “அவள் யாரென்று தெரியா விட்டால் என்ன? அதான் அம்மாவுக்கு தெரியுமே அம்மாவோடு சென்றால் அவளைக் கண்டு அம்மா பேச மாட்டாளா? அப்பொழுது அவளை அடையாளம் கண்டு கொண்டு அவளிடம் பேசி கல்யாணத்தை நிறுத்தத் சொல்” என்றது.
ஒருவாறு வீட்டுக்குள்ளையே இருப்பது போரடிக்கிறது என்று அன்னையிடம் பேசி சம்மதம் வாங்கி கிளம்பினால் “எங்கே கிளம்பிட்டீங்க?” என்று தடுத்தார் வரதராஜன்.
“கோவிலுக்குத்தான் போறோம்” கணவரை முறைத்தாள் அன்னம்.
“சென்னைல அந்த பொண்ணு இன்னுமே என் கண்காணிப்புலதான் இருக்கா. யாரும் மறந்துட வேணாம்” மகனின் முகத்தை கூர்ந்து பார்த்தவாறு கூற,
“நான் எங்கயும் ஓடிப் போய்ட மாட்டேன்” தந்தையை முறைத்து விட்டு அன்னையை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றான் இனியன்.

Advertisement