Advertisement

அத்தியாயம் 8
பல மணிநேரமாக இனியனுக்கு கணி மாத்திரமன்றி பார்த்தீபனும் அழைத்து அழைத்து ஓய்ந்து போயினர்.
வீட்டுக்கும் செல்லாமல் இரவு எட்டு மணி வரை இனியனை தேடிய பார்த்தீபனுக்கு வீட்டிலிருந்து அவனை தேடி அலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருக்க, “அடச்சி அவன் என்ன குழந்தையா? அவனுக்கே குழந்தை பொறக்க போகுது. ஆமா ஜான்சியை காதலிக்கிறேன்னு புலம்பினவன் செய்யிற காரியமா இது? ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டிடான்னு தெரிஞ்சும் நண்பன் காதலுக்கு ஹெல்ப் பண்ண கிளம்பின என்ன சொல்லணும். கட்டின பொண்டாட்டிக்கும் புள்ளய கொடுத்து, ஜான்சியையும் கல்யாணம் பண்ண நினைச்சிருக்கான். ராஜாக்கு ரெட்டை குதிரை வண்டி சவாரி கேக்குதோ. அவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும்” அனுபமா அழுதவாறே சென்றது கண்ணுக்குள் நிற்க, அன்னம் வைத்த குற்றச்சாட்டுக்கள் காதினுள் விழுந்த போதினிலும் ஏனோ அவள் பொய் கூறவில்லையென்று பார்த்திபனின் ஆழ்மனம் கூறியது.  
இன்னும் இரண்டு நாட்களில் கம்பனி வேலையின் காரணமாக இனியன் லண்டன் செல்ல இருப்பது பார்த்தீபன் அறிந்திருந்தமையால் அவன் வேறு எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை. ஜான்சியை சந்திக்க சென்றவனுக்கு அனுபமா கர்ப்பமான செய்தி அதிர்ச்சியாக இருக்கும். நண்பனை அறிந்திருந்த வகையில் இனியன் தப்பான முடிவும் எடுப்பவனல்ல. அவனே வந்து விடுவானென்று இனியனை திட்டியவாறே வீடு சென்றான்.
இங்கே இனியனின் வீட்டில் “ஐயோ என் பையன் எங்க போனான்னே தெரியலையே. அந்த கேடுகெட்டவ செஞ்ச காரியத்தால மனசொடஞ்சி யாருக்கும் முகம் கொடுக்க முடியாம ஓடி ஒழிஞ்சிட்டானோ, தற்கொலை செய்ய முடிவு பண்ணிட்டானோ” அன்னம் புலம்பலானாள்.
“அட சீ வாய மூடு. உன் பையன் தலைமறைவாகணும்னு முடிவெடித்திருந்தா நீ ஏற்பாடு பண்ண கல்யாணத்த பண்ணாம தலைமறைவாகி இருந்திருப்பான். கல்யாணத்தையே பண்ணிக்கிட்டவன், குழந்தை உண்டான விசயத்த கேட்டா போவான். அதுவும் அவன் குழந்தை” கணி அன்னையை திட்டலானான்.
“வாய கழுவுடா. அந்த மூதேவி சுமக்கிறது என் பையன் குழந்தையா? எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி பேசாத” சின்ன மகனை கண்டமேனிக்கு வசைபாட ஆரம்பித்தாள்.
“திட்டு, திட்டு, வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டு. உன் பையன் வந்து அது என் குழந்தை தான் என்று சொல்லி, என் பொண்டாட்டிய கூட்டிகிட்டு வரச் சொன்னா உன் மூஞ்ச எங்க கொண்டு போய் வைப்பனு நானும் பார்க்கத்தானே போறேன்” கோபமாகத்தான் கூறினான்.
வரதராஜன் ராஜகோபாலன் உதவியோடு இனியனை தேடச் சென்றிருக்க, இனியனின் அலைபேசி மருத்துவமனை வளாகத்தில் அணைக்கப்பட்டு விட்டதாகவும், அங்கிருந்து அவன் வண்டியில் புறப்பட்டு சென்ற சீசீடிவி காட்சியும் தான் காணக் கிடைத்தது.
“அன்னம் புலம்புறத போல இனியன் மனசொடஞ்சி எங்கயாச்சும் போய்ட்டானோ மாப்புள” கவலையாக கேட்டார் வரதராஜன். என்ன இருந்தாலும் பெத்தமகனல்லவே  தந்தையாக கவலையடைந்தார்.
“கொஞ்சம் பொறுமையாக இருங்க மாமா. எங்க போனான்னு பார்க்கலாம்”
ஒருவழியாக அவன் காரியாலயம் தான் சென்றியிருக்கிறான். அதன் பின் எங்கே சென்றான் என்று தொழிற்நுட்பத்தின் உதவியோடு தேடியதில் அடுத்த தெருவில் அமைத்திருக்கும் ஹோட்டலில்தான் அறையெடுத்து தங்கியிருக்கிறான் என்று தெரிய வந்தது.
விசாரித்ததில் இனியன் தூங்குவதாக தகவல் கிடைக்க,   “வீட்டுல எவ்வளவோ பிரச்சினை. பொண்டாட்டி விட்டுட்டு போய்ட்டா. இவன் என்னடான்னா போன ஆப் பண்ணிட்டு ரூம் போட்டு தூங்குறான்” முணுமுணுத்தவாறே வரதராஜனோடு வந்த ராஜகோபால் இனியன் தங்கியிருந்த அறைக்கதவை தட்டினார்.
அவனிருந்த மனநிலைக்கும், அவனுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கும் தூக்கம் சிறந்த மருந்தாக இருந்தது. அலைபேசி தொல்லை செய்யாமலிருக்கவே அறைக்கு வந்த இனியன் கொஞ்சம் சரக்கை உள்ளே தள்ளி இருப்பான் போலும் கட்டிலில் விழுந்த கையேடு நன்றாக தூங்கியிருந்தான். 
கதவு தட்டுவது தூரத்தே கேட்க, அழைப்பு மணியும் விடாது அடிக்க சிரமப்பட்டு கண்களை திறந்தவன் சரக்கு பாட்டில் கண்ணில் பட அதை வாயில் சரித்துக் கொண்டு வசைபாடியவாறே வந்து கதவை திறந்தான். தந்தையையும், மாமனையும் ஒன்று சேர கண்டு அதிர்ந்தவன் அவர்களுக்கு வழிவிட்டு நின்றான்.
சட்டென்று கண்களை திறந்து கதவை திறந்தவன் தான் தனது வீட்டில் அறையில் இருப்பதாகத்தான் எண்ணினான். இவர்கள் இப்பொழுது எதற்காக வந்தார்கள் என்று அவர்களை புரியாத பார்வையை வேறு பார்த்து வைத்தான்.
“என்னடா இது புதுப் பழக்கம்? வீட்டுக்கு வராம ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்குறது. முதல்ல வீட்டுக்கு கிளம்பு. அம்மா வேற புலம்பிக் கிட்டே இருக்காங்க” வரதராஜன் கூறிய பின்தான் தான் எங்கே இருக்கிறோம் என்று முழிக்கலானான் இனியன்.
அவர்களிடம் அவன் எதுவும் பேசவில்லை. அமைதியாக முகம் கழுவி விட்டு அவனது வண்டியிலையே வீட்டுக்கு கிளம்பினான்.
அறையை கண்களாளேயே அளந்த வரதராஜனும் மகனிடம் எதுவும் கேட்கவில்லை. அது கேட்கக் கூடிய இடமும் அல்லவே. வீட்டுக்கு சென்றே பேசலாமென்று அமைதி காத்தார்.
வீட்டுக்கு வந்த இனியனிடம் அன்னம் அனுபமாவை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்துக் கொண்டிருக்க அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வீட்டுக்குள் நுழைந்தான் இனியன்.
இனியன் அமைதியாக இருந்ததை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட வள்ளி “ஜாடிக்கேத்த மூடிதான் கிடைக்குமாம் அத்த. உங்க மூத்த பையனுக்கு ஏத்தா மாதிரியே அவரு பொண்டாட்டியும் இருக்கா. இவரு ஒருத்திய காதலிச்சாரு. அவ என்னடான்னா காதலிச்சது மட்டுமல்லாது அவன் புள்ளையையே சுமந்து கிட்டு நம்ம வீட்டுக்குள்ள நடமாட்டிக்கிட்டு இருந்திருக்கா. இனம் இனத்தோடதானே சேரும். எவன் புள்ளையோ இந்த வீட்டு வாரிசு. எவன் புள்ளையைக்கு உங்க பையன் அப்பா. நீங்க பாட்டி. மாமா தாத்தா. கேட்கவே வேடிக்கையா இல்லம் இருக்கு. நடத்த கெட்டவள கட்டிக்கிட்ட உங்க பையன் நிலைமைதான் பாவம். தினம் தினம் அவ கூட குடித்தினம் நடத்தனும் இல்ல. சூடு, சொரணை இருக்குற ஆளா இருந்தா அத்து விடுவாரு. ருசிகண்ட பூனையாச்சே”
தன்னை அடக்கும் இனியனை வள்ளிக்கு என்றுமே பிடிப்பதில்லை. அவன் காதல் விவகாரம் யாருக்கு நன்மையோ இல்லையோ அவளுக்கு விஷம் தடவி பேச அது சந்தர்ப்பமாக அமையுமென்று காத்திருந்தவளுக்கு இன்று சந்தர்ப்பம் அமைத்திருக்கவே பேசினாள்.
வள்ளி இன்னும் என்னவெல்லாம் பேசியிருப்பாளோ? யாரும் சற்று எதிர்பாராத நேரத்தில் வள்ளியை அறைந்திருந்தான் இனியன். அனுபமா யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். தனக்கு அவளை பிடிக்காது. தான் ஜான்சியோடு சேர முடியாமல் போனதற்கு அவளும் ஒரு காரணம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். அவள் தன்னுடைய மனைவி. இந்த வீட்டு மருமகள். வள்ளி பேசியது அவன் மனைவியை. அவன் குழந்தையை என்றதும் பொங்கி எழுந்து விட்டான்.
“டேய் என்னடா இது பொம்பள புள்ள மேல கைநீட்டிகிட்டு” வரதராஜன் மகனை அடிக்க கையோங்க, கணி தந்தையை தடுக்க, அதிர்ந்த வள்ளி கன்னத்தில் கைவைத்தவாறு ராஜகோபாலன் நெஞ்சில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.
வள்ளியின் பேச்சை கணி கண்டிப்பான். இனியன் திட்டுவான் அல்லது தலையில் கொட்டுவான். இப்படி பெரியவர்களின் முன் ஒரு நாளும் அடித்ததில்லை. அந்த தைரியத்தில் தான் வள்ளி பேசியதும். அனுபமாவின் நடத்தையை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்ற தைரியம் வேறு. கூடவே இனியனையும் சீண்ட வேண்டும், சந்தர்ப்பம் அமைந்தால் விடுவாளா? வள்ளி. இனியன் அடிப்பானென்று வள்ளி எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏன் இனியனே எதிர்பார்த்திருக்க மாட்டான்.    
இன்னும் வீட்டில் என்ன நடந்தது என்று இனியனுக்கு தெரியவில்லை. வள்ளி பேசினாள். அடித்து விட்டான். அடித்த கையேடு அவனது அறைக்குள் நுழைந்து கொண்டான். 
“இது உனக்குத் தேவை தான்” எனும் விதமாக வள்ளியை முறைத்தவாறே “இனியா வெளிய வா” அழைத்து கணிமொழியன் தான்.
“என் பையன் அமைதியே உருவான சிலையா இருப்பானே பாத்தியா பாத்தியா அந்த சிறுக்கிமக என் பையன எப்படி மாத்தி வச்சிருக்கா” அன்னம் நெஞ்சில் அடித்துக்கொள்ள
“யாரு இனியன் அமைதியே உருவான சிலையா? வாயில நல்லா வருது. வேணாம். அவன் கோபப்பட்டா என்னவெல்லாம் செய்வான்னு எனக்கு மட்டும் தான் தெரியும். கண்மண் தெரியாம என்னையே அடிச்சிருக்கான்” தங்களது சின்ன வயதில் நடந்த நிகழ்வை நினைவு கூறினான் கணி.
இனியனின் கோபத்தை பற்றி கணிமொழியன் சொல்லி அறிய வேண்டிய அவசியமில்லையே அதீத கோபத்தால் அவன் அனுபமாவுக்கு இழைத்த தீங்கே போதும் இனியன் எவ்வளவு கோபக்காரன் என்று பறைசாற்ற.
“என்னடா உனக்கு பிரச்சினை? எனக்கு தலை ரொம்ப வலிக்குது. தூங்க விடு” உள்ளே சென்ற சரக்கு வேறு வேலையை காட்ட கட்டில் அவனை வா வாவென அழைத்துக் கொண்டிருக்கவே தம்பியை சிடுசிடுத்தான் இனியன்.
“தூங்கலாம், தூங்கலாம். அண்ணி வீட்டுல இல்ல கவனிச்சியா? எக்சுவலி அவங்க அவங்களோட அப்பாகூட ஊருக்கு போய்ட்டாங்க” என்றான் கணி.
“ஓஹ்… பிரேக்னன்ட்டா இருக்குறதால ஊருக்கு போய்ட்டாளா? அதுவும் சரிதான். அம்மா வீட்டுல இருந்தா ரெஸ்ட்டா இருப்பா” என்றவன் வேறெதுவும் கூறாமல் அறைக்கு செல்ல
“டேய் அந்த கேடுகெட்ட எவன் குழந்தையையோ சுமந்துக்கிட்டு நம்ம வீட்டுக்கு வாழ வந்திருக்காடா. முதல்ல அவளை அத்து விடு” கத்தினாள் அன்னம்.
“என்ன பேசுற?” இனியன் அன்னையை முறைக்க, கணி வீட்டில் நடந்த அனைத்தையும் சுருக்கமாக கூறினான்.
இவ்வளவு நேரமாக அன்னை கத்தியதற்கும், வள்ளி பேசிய பேச்சுக்கும் அர்த்தம் இப்பொழுதுதான் இனியனுக்கு புரிந்தது. புரிந்த நொடி சத்தமாக சிரித்தான். அவனை வீட்டார் வினோதமாக பார்த்து வைத்தனர். 
சட்டென்று சிரிப்பதை நிறுத்தியவன் “ஓஹ்… உன் பையன் அவ்வளவு நல்லவன். உத்தமன். காதலிச்சவ கைய கூட தொட்டு பேசல னு நீ நினைச்சுகிட்டு இருக்க. சரி அத விடு. என் பொண்டாட்டி வயித்துல வளருற குழந்தை என்னுடையது தான். நீ நினைச்சது சரிதான். ஜான்சியை லவ் பண்ண நான் சட்டுனு அனுபமாவோட எப்படி குடும்பம் நடத்தியிருக்க முடியும்? அது ஒன்னும் சாதாரணமாக உருவான கரு இல்லையே. பர்ஸ்ட் நைட் அன்னைக்கி நான் அவளை ரேப் பண்ணேன். போதுமா?” இன்று மதியம் நடந்த நிகழ்வால் மனதளவில் தோய்ந்து போய் இருந்தவனின் உள்ளே சென்ற சோமபாணம் வேறு அதன் வேலையை காட்ட மனவேதனையை போக்க உண்மையை உளறிக் கொண்டிருந்தான்.
“டேய் என்னடா சொல்லுற?” கணி அண்ணனின் சட்டையையே பிடித்திருக்க,
தம்பியின் கையை தட்டி விட்டவன் “பின்ன பிடிக்காத கல்யாணத்த பண்ணி வைக்க போனா யார்தான் இஷ்டப்பட்டு கட்டிக்குவாங்க? கல்யாணத்த நிறுத்த போன் போட்டு சொன்னேன். அவ கேக்கல. அந்த கோபத்துல அன்னைக்கி ராத்திரி” அன்று நடந்தவைகள் அவன் கண்ணுக்குள் வந்து இம்சிக்க, அதற்கு மேல பேச பிடிக்காமல் நிறுத்திக் கொண்டான் இனியன்.
அனுபமாவை இனியனுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்ததே அவன் ஜான்சியை மறந்து தங்கள் ஜாதி பெண்ணான அனுபமாவோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான். இனியன் அனுபமாவை முழுமனதாக ஏற்றுக்கொண்டால் என்ன? ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை உருவானால் தான் என்ன? வேற்று மதத்துப் பெண்ணான ஜான்சியின் பக்கம் மட்டும் திரும்பக் கூடாது. தாங்கள் நினைத்தது நடந்து விட்டதால் வரதராஜனும், ராஜகோபால் அமைதியாக அவன் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு நின்றிருந்தனர்.
“அப்போ அனுபமா வயித்துல வளருறது நம்ம வீட்டு வாரிசா? இது தெரியாம புள்ளைய கண்டபடி பேசிட்டேன்” தன் மகன் ஒரு பெண்ணுக்கு கோபத்தில் தீங்கிழைத்தானென்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறான் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கவலையாக சொன்ன அன்னம் பூஜையறைப் பக்கம் திரும்பி குலதெய்வத்தை வேண்டலானாள்.
அன்னமும் ஒரு பெண்தான். பெண்ணுக்கு பெண்தான் எதிரி. அதுவும் மாமியாரென்றால் பரம எதிரி. அனுபமாவுக்கு அன்னம்தான் எதிரி.
தான் பார்த்தவைகளை மட்டும் வைத்து அன்னம் முடிவுக்கு வர காரணம் அவள் பிறந்து வளர்ந்த பணக்கார குடும்ப சூழ்நிலையா? ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து வளர்த்திருந்தால் அனுபமாவை கொஞ்சமாவது புரிந்துக் கொண்டிருப்பாளா? அவ்வாறும் சொல்ல முடியாது. வள்ளியை வளர்த்ததும் அவள் தானே. அவளை போலவே அடுத்தவர்களை புரிந்துகொள்ளாமல் இருக்கிறாள் வள்ளி.
ஆக அன்னம் தான் பார்ப்பதை வைத்து தீர்மானித்து முடிவெடுப்பவள். அதனால் பாதிக்கப்படுவது சொந்த மருமகளானாலும் பரவாயில்லையென்று வார்த்தையை விட்டு விட்டாள். உண்மையை சம்பந்தப்பட்டவன் இனியன் கூறியபின் தான் புரிந்து கொண்டாள். ஆனாலும் பெற்றமகன் செய்த தவறை உணர்ந்து கொண்டாளில்லை.
“இதற்குத்தான் வார்த்தையை விடாதே என்று சொன்னேன்” அன்னையை முறைத்துப் பார்த்த கணி “நீ பண்ண காரியத்தாலதான் அண்ணி அம்மா அவ்வளவு பேசியும் நீ வந்து உண்மைய சொல்லட்டும் என்று பொறுமையாக இருந்தாங்களா? நீ போனையும் ஆப் பண்ணிட்டு வீட்டுக்கும் வராம இருக்கவே. உனக்கு உன் குழந்தை முக்கியமில்லை என்று அவங்களே முடிவு பண்ணிட்டாங்க போல. அதான் அவங்க அப்பா கூட போய்ட்டாங்க. அதுக்கு மிக முக்கியமான காரணமே இதோ இவங்கதான். இவங்க அவ்வளவு பேசினாங்களே. காது கொடுத்து கேட்கக் கூடிய பேச்சா. குடும்பம் விளங்கும்” என்று தனது பெற்றோரை பார்த்துக் கூறினான்.
“அது தெரிஞ்ச விஷயம் தானே. இவங்களுக்கு பெத்த பசங்க சந்தோசம் முக்கியமில்லை. இல்லனா கொஞ்சம் கூட யோசிக்காம இப்படியெல்லாம் பேசுவாங்களா?” ஜான்சியை திருமணம் செய்ய முடியாமல் போன மொத்த கோபத்தையும் இந்த நேரத்தில், இந்த இடத்தில் கொட்டித் தீர்த்தானா? அல்லது அனுபமா வீட்டை விட்டு போனதற்காக பேசுகின்றானா? அவனுக்கே புரியவில்லை.
“சரி வா போலாம். போய் அண்ணிய கூட்டிட்டு வரலாம்” என்றான் தம்பி.
“நான் எதுக்கு போகணும்? நான்தான் அவளை வீட்டை விட்டு போக சொன்னேனா? இல்ல வீட்டை விட்டு துரத்தினேனா? அதற்கு காரணமான இவங்களே போய் கூட்டிட்டு வரட்டும்” என்றான் இனியன்.
“டேய் என்னடா புரியாம பேசுற? அவங்க உன் வைப். நீ பண்ண தப்புக்கு அவங்க ஒரே ஒரு கம்பளைண்ட் கொடுத்தா நானே உன்ன தூக்கி உள்ள வச்சிடுவேன். சரி அத விடு. உன் தம்பியா சொல்லுறேன். உன் குழந்தை உன் மனைவி என்று நீ சந்தோசமா வாழனும் அதுதான் என் ஆசையும். அடம் பிடிக்காம வா” அண்ணனின் கையை பிடித்தான்.
“ஏன் அந்த ஆச இவங்களுக்கு இருக்காதா? போக சொல்லு. போய் அனுபமாவ கூட்டிட்டு வரச் சொல்லு. ஆ என்ன சொன்ன என்ன தூக்கி உள்ள வைப்பியா? முதல்ல அத செய். இவங்க படுற அவஸ்தைய பார்த்து நான் ரொம்ப சந்தோஷப பாடுவேன். நீ செய்யணும் என்று நினைச்சாலும் அது உன்னால முடியாது. அத தடுக்கத்தான் போலீஸ் ரூபத்துல ஒரு ரவுடியை கூடவே வச்சிருக்காரு எங்கப்பா” ராஜகோபால பார்த்துக் கூறியவன், அறைக்குள் நுழைந்து கதவை பூட்டியிருந்தான்.
“என்ன பேச்சு பேசுறான் பார்த்தீங்களா?” அன்னம் கணவனிடம் பொரும வரதராஜன் எதுவும் பேசவில்லை. ஆனால் வள்ளியை அடித்ததால் ராஜகோபாலுக்கு இனியனின் மீது கட்டுக்கடங்காத கோபம் இருந்தது. காக்கிச் சட்டை அணிந்து உயர் பதவியிலிருந்தாலும் தனது அக்காவின் மீது வைத்த பாசம், மாமாவின் மீது வைத்திருக்கும் மரியாதை ராஜகோபாலன் கையை கட்டிப் போட்டிருக்க இனியனுக்கு எதிராக எதையுமே செய்ய முடியாமல் நின்றிருந்தார்.
“அவங்களுக்குள்ள என்ன நடந்தது என்று விசாரிக்கிறதும் இல்ல. உங்க ஆசையை புள்ளைங்க மேல திணிச்சிட்டு அவங்க சந்தோசமா இல்லனு புலம்ப வேண்டியது. அதான் அவனே சொன்னானே அது அவன் குழந்தை என்று. போங்க போய் அண்ணிய கூட்டிட்டு வர்ற வழிய பாருங்க” அன்னையை கடிந்தான் கணி.
அறைக்கு வந்த இனியனுக்கு தன்னை நினைத்தே ஆச்சரியம். அவனா சொன்னான் அனுபமாவை அழைத்து வரச் சொல்லி. அவன் நினைத்திருந்தால் அது என் குழந்தையில்லையென்று அனுபமாவை அத்து விட்டிருக்கலாம். ஆனால் வள்ளி பேசியத்தைக் கேட்டதும் அவனையறியாமளையே அவனுள் எழுந்த கோபத்துக்கு என்ன அர்த்தம்? அதுதான் பிள்ளை பாசமா? இதுதான் தனது இரத்தத்துக்காக துடிப்பது என்பதா? அவனுக்கு புரியவில்லை.
காரியாலயத்திலிருந்து ஹோட்டலறைக்கு சென்றவன் சரக்கை வாயில் ஊற்றியதும், தூங்கி விட்டான். வீட்டுக்கு வரும் வழியில் தான் அன்று நடந்தவைகளை அசைப்போட்டான். வந்து வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த கணம் வள்ளி பேச ஆரம்பித்தாள்.
அப்பொழுது கூட அவன் அனுபமாவோடு சேர்ந்து வாழ்வதை பற்றியோ, குழந்தையை பற்றியோ எந்த முடிவையும் எடுத்திருக்கவில்லை. வள்ளிப் பேசப் பேச அவனுள் தோன்றிய உத்வேகத்தில் வள்ளியை அறைந்து விட்டான். அவன் தான் அனுபமாவை மனைவியாக ஏற்றுக்கொள்ளவே இல்லையே அவளுக்காக வள்ளியை அடித்தானா? அவன் மனம் எக்கணம் அனுபமாவை மனைவியாக ஏற்றுக்கொண்டது? குழந்தையின் வரவாளா? ஆம் குழந்தையினால் மட்டும் தான் என்றது அவன் மனம். ஆணித்தரமாக  குழந்தையின் வரவால் மட்டும் தான். அது அவன் குழந்தை. அவன் இரத்தம்.   
எல்லோரும் காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்கிறார்களா? குழந்தையை பெற்றுக் கொண்டு எத்தனை தம்பதியினர் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ்கிறார்கள். தாங்களும் அதுபோல் வாழ்ந்து விட்டு செல்ல வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தான்.
இனியனின் வீட்டை விட்டு கிளம்பிய வடிவேல் அனுபமாவை அழைத்துக் கொண்டு நேராக ஊருக்கு சென்று விடவில்லை. அனுபமாவை அழைத்துக் கொண்டு சென்றது அவர் சென்னையில் புதிதாக வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டுக்கு.
“யார் வீடுப்பா இது?”  புரியாது மகள் கேட்க,
” நீலு வேற சென்னைல படிக்கணும் என்று சொல்லுறா. உன்ன பிரிஞ்சி உன் அப்பா எப்படி இருப்பாரு? சம்பந்தி வீட்டுல வந்து தங்கத்தான் முடியுமா? வந்தா தங்கி என் கையால சமைச்சி கொடுக்கவும், உங்கப்பா உன்ன தினமும் பார்க்கவும், ஊட்டி செல்லம் கொஞ்சவும் என்றெல்லாம் யோசிச்சுதான் இந்த வீட்டை வாங்கினாரு.
நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி குடிவரலாம் என்று இருந்தோம். ஆனா இப்படி வர வேண்டியதா போச்சு” புடவை முந்தியால மூக்கை துடைத்தவாறே பொருட்களை அடுக்கலானாள்.
“அதையெல்லாம் பத்தி இப்போ யோசிக்காத. முதல்ல பொண்ணு வாழ்க்கையை பத்தி யோசி வாணி. அந்த வரதராஜன் எப்படியெல்லாம் பேசி என்ன ஏமாத்தி அவன் பையனுக்கு என் பொண்ண கட்டி வச்சிட்டான்.
என் பொண்ணுக்கு சீர்வரிசையில குறை வச்சேன்னா? கல்யாண செலவுல குறை வச்சேன்னா? அவன் பொண்டாட்டி கண்டபடி பேசுறா. கல்ல முழுங்கினவன் மாதிரி நிக்கிறான்” கோபத்தை அடக்க முடியாமல் கொந்தளித்தார் வடிவேல்.
“மாப்பிள்ளை வரும் வரைக்கும் இருந்திருக்கனும்ங்க. அந்த பொம்பள பேசினதை கேட்டு அவசரப்பட்டு வந்திருக்கக் கூடாது”
“வேற எவளையோ மனசுல நினைச்சுகிட்டு இருக்கிறவன் வந்து உண்மைய சொல்வான்னு நீ நினைக்கிறியா?”
“என்னங்க வேற ஒருத்திய மனசுல நினைக்கிறான்னு சொல்லுறீங்க? அப்படி நினைச்சுகிட்டு இருந்திருந்தா? இவ கூட குடும்பம் நடாத்தி குழந்தை உண்டாகி இருக்குமா?”
அனுபமா அங்குதான் இருந்தாள். தன்னை பாசமாக வளர்த்த பெற்றோருக்கு அவள் வயிற்றில் வளரும் கரு எவ்வாறு உருவானது என்று அறிந்தால் தாங்கத்தான் முடியுமா? இனியனை உயிரோடு விட்டு வைப்பார்களா?
“அம்மா அதான் சொன்னேனே அவர் வந்து உண்மையை சொன்னாலும் ஒண்ணுதான், சொல்லலைனாலும் ஒண்ணுதான். சொந்த மருமகளென்றும் பார்க்காமல் கண்டபடி பேசி ஒரே நாள்ல தட்டுமுட்டு சாமான் எல்லாத்தையும் கையேடு கொடுத்து விட்டாங்களே. இனி நமக்கும் அந்த குடும்பத்துக்கும் என்ன உறவுவிருக்கு? வேணாம். இனி அந்த குடும்பத்து பேச்சையே எடுக்காதீங்க” என்றவள் அருகிலிருந்த அறைக்குள் சென்று ஒடுங்கிக் கொண்டாள். 
இனியன் ஜான்சியை விட மாட்டான். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டு விவாகரத்துக்கு கேட்பான். அதற்கு முன்னால் நானே அவனை வேண்டாம் என்று ஒதுங்கி விட்டால் குழந்தை என்னோடு இருக்கும். தான் ஒதுங்கிப் போகவில்லையென்றால் குழந்தையை கேட்டு வீணாக வம்பு வளர்ப்பான் என்றெண்ணினாள் அனுபமா.
“ஏன் அவன் வந்து குழந்தை அவனுடையது இல்லையென்று சொல்வானா? நாக்கை அறுத்துட மாட்டேன். ஊர் பஞ்சாயத்தை கூட்டி வரதராஜன் குடும்பத்தை சந்தி சிரிக்க வைப்பேன். அதான் இப்போ எதோ டெஸ்ட் எல்லாம் இருக்கே. அத பண்ணா குழந்தை அவனோடது என்று தெரிஞ்சிடும். நீ கவலை படாத என்ன நடந்தாலும் அப்பா உன் கூட இருப்பேன்” கொஞ்சம் கூட கோபம் குறையாமல் வடிவேல் குமுறிக் கொண்டிருக்க,
“எதுவானாலும் ரெண்டு நாள் கழிச்சி பொறுமையா பேசி முடிவெடுக்கலாம். ஊருல நீலு தனியா இருக்கா. முதல்ல போன போட்டு அவ கிட்ட பேசுங்க. புள்ள பயந்துட போறா” கணவனை அடக்க சின்ன மகளை பற்றி பேச்செடுத்தாள் கோகிலவாணி. மூத்தமகளின் வாழ்க்கை கேள்விக்குறியானால் இளையமகளின் வாழ்க்கை என்னாவது? அன்னையாக வாணிக்குள் அச்சம் சட்டென்று வந்து ஒட்டிக்கொள்ள, பிரச்சினைக்கான தீர்வை மெதுவாக காணலாமென்று நினைத்தாள். 
வடிவேலுக்கு உலகமே பிள்ளைகள் தான். “அவள ஹரி பார்த்துப்பான். எங்கண்ணன் உசுரோட இல்லைனதும் அவனவன் தலைகால் புரியாம ஆடுறானுங்க. முருகவேல் தம்பிடி நான். வரதராஜன் என்ன குறைச்சு எடை போட்டுட்டான். அவனுக்கும் அவன் புள்ளைக்கும் இருக்கு”
“அங்க சுத்தி இங்க சுத்தி இந்த மனுஷன் இந்த பேச்சுளையே வந்து நிக்குறாரே. கடவுளே நீதான் பார்த்துக்கணும்” கடவுளை வேண்டிக் கொண்ட வாணியோ “போங்க போங்க வயித்து புள்ளைக்காரிக்கு கடைல சாப்பாடு வாங்கிக் கொடுக்கவா முடியும்? போய் இரவைக்கு சமைக்க ஏதாச்சும் வாங்கிட்டு வாங்க. மதியம் என்னத்த சாப்பிட்டிருச்சோ”
அப்பேச்சு வடிவேலை அசைக்க, கடைக்கு விரைந்தார். 

Advertisement