Advertisement

அத்தியாயம் 7
இனியன் ரொம்பவே குழம்பிப் போய் இருந்தான். அவன் போட்ட திட்டமெல்லாம் குழந்தையின் வரவால் நிலைகுலைந்து போய் இருந்தது. ஜான்சியும் அவனை விட்டு சென்று விட்டாள். அவளை சமாதானப்படுத்தும் மனநிலையில் கூட அவனில்லை.
அவனுக்கு இப்பொழுது தேவை தனிமை. தனிமையில் சிந்திக்க வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கவே அனுபமாவை ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்தவன் அன்னையை அழைத்து அனுபமா கர்ப்பமாக இருப்பதாக கூறி அவளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு கூறியதோடு அன்னம் மேற்கொண்டு கேள்வி கேற்பது அலைபேசி வழியாக காதில் விழுந்தாலும், அவனிருக்கும் மனநிலையில் அவற்றுக்கு பதில் சொல்ல முடியாததால் அலைபேசியை துண்டித்தது மட்டுமல்லாது அன்னம் மீண்டும் அழைக்கவே அலைபேசியை அனைத்தும் வைத்தான்.    
காரியாலயம் சென்று விடுமுறை கூறிவிட்டு அனுபமாவின் வண்டிச் சாவியை பார்த்தீபனிடம் கொடுத்து அவளுடைய வண்டி பூங்காவின் வாகன நிறுத்துமிடத்தில் இருப்பதாகக் கூறி வண்டியை வீட்டில் விடுமாறு கேட்டுக் கொண்டவன் வீட்டுக்கு செல்லாமல் ஹோட்டலில் ஒரு அறையெடுத்து தங்கி விட்டான்.
அலைபேசி வழியாக இனியன் கூறிய செய்தியைக் கேட்டு மனம் குளிர்ந்து சந்தோசத்தின் உச்சிக்கே செல்ல வேண்டிய அன்னமோ முதலிரவு முடிந்த அன்று தான் காலையிலையே சென்று அனுபமாவை எழுப்பியதால் அன்று அனுபமா அணிந்திருந்த ஓகாந்தி புடவை படுத்து எந்திரித்தது போல் மட்டும் கசங்கி இருந்தது கண்ணுக்குள் வர அன்றிரவு  என்ன நடந்தது என்று அறியாமல் அவர்களுக்குள் ஒன்றும் நிகழவில்லை என்று முடிவு செய்தது மட்டுமல்லாது.
இனியன் அனுபமாவை நன்றாக கவனித்துக் கொண்டு அவளை நெருங்க முயன்றாலும், படிப்பை காரணம் காட்டி அவள் தான் அவனை ஒதுக்கி வைத்திருந்தாளே அதனால் தானே அவன் நடுநிசி வரை டீவியில் மூழ்கி கிடந்தான். அப்படியிருக்க அவர்களுக்குள் குழந்தை எவ்வாறு வரும்? என் பையன் இவளை விலக்கி வைப்பானென்று நினைத்தால் இவள் தான் என் பையனை இத்தனை நாட்கள் விலக்கி வைத்திருக்கிறாள். இந்த கேடு கெட்டவள் எவன் குழந்தையையோ வயிற்றில் சுமந்து கொண்டு என் பையனை திருமணம் செய்திருக்கிறாள். அதையறிந்துதான் என் பையன் அவளை மட்டும் வீட்டுக்கு அனுப்பி வைத்து வீட்டுக்கு கூட வராமல் இருக்கிறான் என்று முடிவே செய்து விட்டாள் அன்னம்.
கழுகுக்கு கண்ணாய் தனது மாமியார் கண்காணித்து இப்படி ஒரு முடிவில் இருக்கிறாள் என்று அறியாமல் அனுபமா சோர்வாக வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்திருக்க, அவளை பார்த்ததும் யார் குழந்தையை வயிற்றில் வாங்கி வந்தாய் என்று கன்னம் கன்னமாக அறையலானாள். 
இனியன் எக்காலமும் இந்த திருமணத்தை மதித்து தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அழுதவாறே சிந்தித்துக் கொண்டிருந்தவளை வீட்டுக்கு செல்லலாமென இனியன் அழைக்கவும் தான், தான் இருப்பதே மருத்துமனை என புரிந்தது.
அவன் கூட வராது தன்னை ஆட்டோவில் ஏறியனுப்பவும் ஆயாசமாக அவனை பார்த்தவள் எதுவும் பேசவில்லை. அவனிடம் இதை தவிர வேறு எதையும் அவள் எதிர்பார்க்கப் போவதுமில்லையே. அவன் ஏற்றுக் கொண்டாலும், இல்லையென்றாலும் இது அவன் குழந்தை அவன் வீட்டார் குழந்தையை கொண்டாடுவார்கள் என்று வீட்டுக்கு வந்தால் அன்னம் அது அவன் குழந்தையே இல்லையென்று பேசி அறைந்திருந்தாள்.
அங்கே வந்த வரதராஜன் அன்னத்தை அதட்டி என்னவென்று கேட்க,  அன்னம் கூறிய காரணங்களை கேட்டு மீண்டும் அதிர்ந்தாள் அனுபமா.
இனியன் வேறொரு பெண்ணை காதலித்திருக்கிறான் அதனால் நிச்சயமாக இவர்களுக்குள் முதலிரவு நடந்திருக்காது என்றும் அன்று அனுபமா அணிந்திருந்த சேலை முதற்கொண்டு பேசியவள் இனியன் நடுநிசிவரை டீவி பார்ப்பதால் நிச்சயமாக இது இனியனின் குழந்தை இல்லையென்றே பேச
“அதுக்கு என்ன இப்போ?” அன்னம் சொன்னதை காதிலையே வாங்காமல் அமைதியாக பேசினார் வரதராஜன்.
“என்னங்க? நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் என்ன நீங்க அமைதியா பேசுறீங்க? இவள கழுத்த பிடிச்சி வெளிய தள்ள வேணாமா? என் பொண்ணா இருந்திருந்தா என் கையால கழுத்த நெருச்சி கொன்னிருப்பேன். யாரோ வீட்டு பொண்ணா போய்ட்டா. அடிச்சி துரத்துங்க” காட்டுக் கத்து கத்தினாள் அன்னம். 
“கொஞ்சம் அமைதியா இரு அன்னம். எனக்குன்னு சமூகத்துல மானம் மரியாதை இருக்கு. வரதராஜன் மருமகளை அடிச்சி துரத்திட்டான் என்ற அவப்பெயர் எனக்கு வரக் கூடாது. சொந்த பையன் வேற மதத்து பொண்ண காதலிச்சான்னு அவனை நம்ம ஜாதி பொண்ணுக்கு அவசர அவசரமாக கட்டி வெச்சேனே எதுக்காக? எனக்கு என் ஜாதி, மானம், மரியாதை ரொம்ப முக்கியம்” மனைவியிடம் அமைதியாக பேசியவர்,
அனுபமாவிடம் திரும்பி “சொல்லுமா உன் வயித்துல வளரும் குழந்தைக்கு எவன் அப்பன்? நம்ம ஜாதியா? இல்ல. வேற ஜாதியா? இல்ல என் பையன் வேற மதத்துக்காரிய காதலிச்சது போல வேற மதத்துக்காரன காதலிச்சு புள்ளய சுமந்தியா?”
வரதராஜனின் கேள்வியில் ஒரு பெண்ணிடம் பேசுகிறோம் அதுவும் மருமகளிடம் பேசுகிறோம் என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பேசுபவரை அதிர்ச்சியோடு மட்டுமல்லாது அருவருப்பாகவும் பார்த்தாள் அனுபமா.
“என்னம்மா அப்படிப் பாக்குற? நம்ம ஜாதி பையன்னா ஒன்னும் பிரச்சினையில்ல. குழந்தையை தாராளமா பெத்துக்கலாம். அதுவே வேற ஜாதி பையனோட குழந்தையாகவோ, இல்ல வேற மதத்துக்காரனோட குழந்தையாகவோ இருந்தா கருவருக்கனுமில்லையா?”  வரதராஜனின் கட்டைக் குரலில் கனிவு கொட்டிக் கிடந்தாலும் அது அமைதியாக மிரட்டும் குரல் தான் என்பது அனுபமாவுக்கு நொடியில் புரிந்து போனது.
“ச்சி… என்னங்க பேசுறீங்க? எவன் புள்ளைக்கோ என் பையன் அப்பனா? முதல்ல அந்த கருமத்தை அழிக்கிற வழியப்பாருங்க” கத்தினாள் அன்னம்.
“உன்ன அமைதியா இருக்கச் சொன்னேனே. எனக்கு ஒரு பொண்ணு இருந்து அவ கெட்டுப் போய் வந்திருந்தாலும் அவளை என் ஜாதி பையனுக்கு கட்டிக் கொடுத்திருப்பேன். அவ வயித்துல வளருற குழந்தையை வச்சுதான் எந்த முடிவும் எடுத்திருப்பேன்.
எனக்கு தெரிஞ்சிக்க வேண்டியது நம்ம ஜாதில பையன காதலிச்சு, பையன் வசதி இல்லாததினால் இவ நம்ம பையன கல்யாணம் பண்ணிக்கிட்டாளா? இல்ல நாம நம்ம பையன எப்படி வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணி வச்சோமோ அதே மாதிரி வேற ஜாதிக்காரனையோ, மதத்துக்காரனையோ காதலிச்சத்தினால வடிவேல் இவள எங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சானா? என்றுதான்.
“ஆனா வடிவேல் ஊரு உலகத்துக்கு ஜாதி பார்க்க மாட்டேன், மதம் பார்த்து பழக மாட்டேன் என்று பேசுபவராச்சே” யோசனையாக கேட்டவர் “ஒருவேளை அது ஊருக்கு. சொந்த பொண்ணுகன்னா ஜாதி பார்ப்பவரா?”  
மாமனாரின் பேச்சில் ஜாதிவெறி தாண்டவமாடிக் கொண்டிருப்பதை ஆயாசமாக அனுபமா பார்த்துக் கொண்டிருக்க,  
“நடந்த கல்யாணம் மாறாது. குழந்தை இருக்கணுமா? வேணாமா என்றுதான் முடிவெடுக்கணும்” என்றார் வரதராஜன். 
“என்ன மனிதர் இவர்? தன் குடும்ப வாரிசாக இருக்காதா? என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் சொந்த மருமகளையே சந்தேகம் கொண்டு பேசுவது மட்டுமல்லாது, குழந்தையென்றும் பாராமல் தனது ஜாதியென்றால் விட்டு விடுவதுவதாகவும், வேற்று ஜாதி, வேற்று மதம் என்றால் அழிப்பதாக தனது ஜாதி வெறியை உணர்த்தும் விதமாக பேசுபவரை வெறுப்போடு பார்த்து
“எனக்கு தாலிக் கட்டினாரே உங்க மகன் அவர் வரட்டும் அவர் சொல்லட்டும் இந்தக் குழந்தையை அழிப்பதா? வேண்டாமா? என்று அவர் முடிவு செய்யட்டும்” ஆதங்கமாக மொழிந்தாள்.
ஏற்கனவே இனியன் பேசியவைகளைக் கேட்டு மனம் வெறுத்துப் போய் இருந்தவள், மாமனாரின் பேச்சிலும், மாமியாரின் நடத்தையிலும் உடைந்தே போனாள். அவளுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை இனியனல்லவா? அவன் வந்து சொன்னால் தான் இவர்கள் நம்புவார்கள் என்றுதான் அவனை வரச் சொல்லுமாறு கூறினாள் அனுபமா. இவள் அழைத்தால் அவன் வருவானா? சந்தேகம் தான். இவள் பேசுவதை விட அவன் வந்து பேசினால் இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைக்கும். இவர்களிடம் பேசிப் புரிய வைக்கும் அளவுக்கு அனுபமாவின் மனதில் தெம்பில்லை. போராடவும் உடலில் பலமில்லை. அதனாலயே இனியன் வரட்டும் என்று தன் முடிவைக் கூறினாள்.
அனுபமாவின் பதில் அன்னத்துக்கு திமிராக மட்டும்தான் தெரிந்தததோ என்னவோ “என்னடி பண்ணுறதையும் பண்ணிட்டு உத்தமி போல என் பையன வரச் சொல்லுறியா? தலையணை மந்திரம் ஓதி என் பையன மயக்கி வச்சிருக்கியா? நீ என்ன சொன்னாலும் அவன் ஒத்துப்பான்னு திமிரா? உன் நீலிக்கண்ணீருக்கு அவன் ஏமாற மாட்டான்” என்றவாறே அனுபமாவின் தலை முடியை பிடித்து சுவரில் அடிக்க தலை மோதுண்டு அனுபமாவின் நெற்றி பிளந்து இரத்தம் வழிய ஆரம்பித்தது.
“அம்மா என்ன பண்ணுறீங்க….” கத்தியவாறே பாய்ந்து வந்த கணிமொழியன் அனுபமாவிடமிருந்து அன்னத்தை பிரித்தெடுக்க, மகளை பார்க்கவென வந்திருந்த வடிவேலும், கோகிலவாணியும் இதைக் கண்டு பதறியவாறு அனுபமாவை கட்டியணைத்து கதற ஆரம்பித்தனர்.
“ஐயோ என் பொண்ண கல்யாணம் பண்ணிக் கொடுத்தது அவளை இப்படி பார்க்கத்தானா?” கோகிலவாணி வாய்விட்டே கதற, அனுபமா சின்ன வயதில் தவறி விழுந்தாலே பதறும் வடிவேலின் உள்ளம் கண்ணீர் சிந்தினாலும் வரதராஜனை கோபமாக முறைத்தார்.
அங்கு அனுபமாவின் பெற்றோரை எதிர்பாராத அன்னம் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
“அன்னம் இதுக்குதான் உன்ன பொறுமையாக இருக்கச் சொன்னேன். பார்த்தியா, இப்போ இரத்தம் வரும் அளவுக்கு சம்பவம் நிகழ்ந்துப் போச்சு, சம்பந்தி நம்மளதான் தப்பா நினைப்பார்” எதுவுமே நடவாதது போல் அமைதியாக பேசினார் வரதராஜன்.
“என் பொண்ண எதுக்கு கொல்ல பார்த்தீங்க? இப்படித்தான் வாழ வந்த பொண்ண படுத்துவீங்களா?” கோபமாக கோகிலவாணீ அன்னத்தை பார்த்து கேட்ட நேரம் வடிவேல் வரதஜாஜனின் சட்டையை பிடித்திருந்தார்.
அனுபமா அவர் தவமிருந்து பெற்ற வரம், அவர் குலசாமி. அவருக்கு வரம் கொடுத்த தேவதை. அவளை இந்த நிலைமையில் பார்த்தவரின் கையில் அருவாள் மட்டும் இருந்தால் வரதராஜனையும், அன்னத்தையும் அந்த இடத்திலையே வெட்டி வீசியிருப்பார். இவ்வளவு நடந்தும் அமைதியாக வரதராஜன் பேச கோபத்தில் சட்டையை பிடித்திருந்தார் வடிவேல்.
“நல்லவன் மாதிரி பேசி என் பொண்ண உன் பையனுக்கு கட்டி வச்சியே. என் பொண்ணுக்கு ஒன்னுனா நீ பார்த்துப, தட்டிக்கேப்ப, என் இடத்துல நீ இருப்ப என்று உன் பையன நம்பி கட்டிக்க கொடுத்ததை விட உன்ன நம்பித்தானேயா என் பொண்ண கட்டிக் கொடுத்தேன்” தொண்டையடைக்க வடிவேல் கதறினார். 
“யோவ் கையை எடுயா… யார் சட்டையை பிடிக்கிற? யோக்கியமான பொண்ண பெத்து வச்சிருக்கியா நீ? எவன் புள்ளையையோ வயித்துல சுமந்துக்கிட்டு நிக்கிறா அவளை கேளு” அன்னம் வடிவேலை வரதராஜனிடமிருந்து பிரித்தவாறே கூற
 “அம்மா…” வார்த்தையை விட்டால் அள்ள முடியாது என்பதினால் அதட்டினான் கணிமொழியன்.
“என்ன எதுக்குடா அதட்டுற? உன் அண்ணன் வேற்று மாதத்து பொண்ண காதலிக்கிறான்னுதான் அவசர அவசரமாக இவளுக்கு கட்டி வச்சோம். அவளை மறந்துட்டு அவன் இவ கூட குடும்பம் நடத்துறான்னு சொல்லுறியா? நீ பாத்தியா? ரெண்டு பேரும் சிரிச்சி பேசி இந்த வீட்டுக்குள்ள நீ பார்த்திருக்கிறியா? இல்ல ரெண்டு பேரும் எங்கயாச்சும் வெளியேதான் போய் இருக்காங்களா?” கோப மூச்சுக்கலை வெளியிட்டவாறே கூறினாள் அன்னம்.
அன்னம் பேசப் பேச எந்த உண்மை தன்னுடைய பெற்றோருக்கு தெரியக் கூடாது என்று எண்ணி இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தாளோ அந்த உண்மை தெரிந்து விட்டதே என்று அனுபமா தலையில் அடித்துக் கொண்டு அழ, இனியனின் காதல் விவகாரத்தை அறிந்து அதிர்ந்தது அனுபமாவின் பெற்றோர்கள் மாத்திரமன்றி கணிமொழியனும் தான்.
“என்ன சொல்லுற? இனியன் வேற பொண்ண காதலிச்சானா? அப்போ எதுக்கு இவங்கள?…” அழும் அனுபமாவை பார்த்து வாக்கியத்தை பாதியிலையே முடித்தான் கணி.
“அவ ஒரு கிறிஸ்டியன் பொண்ணு, அதனால நம்ம ஜாதில பொண்ண பார்த்து கட்டி வச்சேன். ஆனா அவனுக்கு வாச்ச பொண்டாட்டியும் அவனை போலயே இருக்கா” என்றார் வரதராஜன்.
“என்ன சொல்லுறீங்க?” புரியாது கேட்டான் சின்னமகன்.
“என்னத்த சொல்ல? என் மகன் காதலிக்க மட்டும்தான் செஞ்சான். இதோ இவ வயித்துல புள்ளய சுமந்து கிட்டு என் பையன் கையால தாலிய வேற வாங்கிட்டா. இவள கண்டம் துண்டமா வெட்ட வேணாம். உன் அப்பா என்னடான்னா… நம்ம ஜாதி பையனோட குழந்தையா இருந்தா அது நம்ம வீட்டுல வளர்ந்துட்டு போகட்டும்ம்னு சொல்லுறாரு”
“ஏய் யாரைப் பார்த்து என்ன வார்த்தடி சொன்ன?” பாய்ந்து வந்த கோகிலவாணி அன்னத்தின் கொண்டையை பிடித்து இழுத்து சண்டை போட, அன்னமும் சண்டையில் இறங்கினாள்.
வடிவேல் கோகிலவாணியை ஒரு பக்கம் இழுக்க, வரதராஜன் அன்னத்தை இழுக்க, கணிதான் நடுவில் இருந்து இருவரையும் பிரித்து விட்டான்.
அனுபமாவின் வண்டியை விட வந்த பார்த்தீபன் வீட்டின் உள்ளே சத்தம் கேட்டு கதவருகே வந்தவன் அவர்கள் பேசியதை கேட்டு ஸ்தம்பித்து நின்று விட்டான். அரவம் செய்யாது வெளியேறியவன் இனியனுக்கு அலைபேசி அழைப்பு விடுக்க, அவனது அலைபேசி எடுக்கப்படவேயில்லை.
“வீட்டுல இவ்வளவு அமளிதுமளி நடக்குது. எங்கதான் போய் தொலைஞ்சான் இவன்? போன எடுடா…” முயன்று தோற்றவன் சக நண்பர்களுக்கு அழைத்து இனியனை தேட முயன்றான் பார்த்தீபன்.
“என்ன அண்ணி நீங்க அமைதியா இருக்கீங்க?. நீங்க அமைதியாக இருக்க, இருக்கத்தான் இவங்க பேசுவாங்க. இவங்க சொல்லுற குற்றச்சாட்டு உண்மையில்லை என்று எனக்குத் தெரியும்” அனுபமாவின் தலையிலிருந்து வழியும் குருதியை துடைத்தவாறே கூறினான் கணிமொழியன். குலதெய்வக் கோவிலில் வைத்துத் தானே நிலுபமா தாங்கள் யாரையும் காதலிக்கவில்லையென்று கூறியிருந்தாள். போலீஸான கணியின் புத்தி சட்டென்று விழித்துக்கொண்டு அவனுக்கு ஞாபகமூட்டியிருக்க, அனுபமாவை பேசத் தூண்டினான்.
அவனை அதிசிய பிறவி போல் கண்களை அகல விரித்துப் பார்த்தாள் அனுபமா. இந்த வீட்டில் அவளை நம்பும் ஒரு ஜீவன் இருக்கிறானா? அவளால் நம்ப முடியவில்லை.
“என்ன கணி நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற?” அன்னம் சின்னமகனை கடிய,
கைநீட்டி அன்னையை தடுத்தவன் “நான் இந்த இலாக்கா சப்பின்ஸ்பெக்டர். இதோ இப்போ கூட காகி யூனிபோர்ம்லதான் இருக்கேன். என் கண் முன்னாடி ஒரு அசம்பாவிதம் நடந்தேறியிருக்கு அத விசாரிக்கிறது என் கடமை” என்றவனை அன்னம் முறைத்துப் பார்த்தாள்.
“முழுசா நான் போலீசா இல்லாம கொஞ்சம் உன் மகனாகவும் பேசுறேன்” என்றவன் “இனியனுக்கு செம்பகவள்ளியைத்தான் கல்யாணம் பண்ணி வைக்க இருந்தீங்க, அவளுக்கு இனியன பிடிக்கல என்றதும்தான் இவங்கள கட்டி வச்சீங்க. இவங்க இடத்துல வள்ளி இருந்திருந்தா உங்க அணுகு முறை இப்படித்தான் இருந்திருக்குமா?” அன்னத்தை பார்த்து கேட்டான் கணி.
“ச்சி வாய கழுவு யாரைப் பார்த்து என்ன பேச்சு பேசுற, வள்ளியும் இவளும் ஒண்ணா? அவ என் தம்பி பொண்ணு”
“அவளை நான் கல்யாணம் பண்ணா அவ இந்த வீட்டு மருமக, அப்போ ரெண்டு பேருக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. இருக்கவும் கூடாது” அன்னையை கூர்ந்து பார்த்தவாறே கண்டனம் தெரிவித்தான் மகன். அந்த நொடி இனியனுக்கு வள்ளியை திருமணம் செய்து வைத்திருந்தால் அனுபமாவை தனக்குத்தான் பேசியிருப்பார்கள். தன்னை திருமணம் செய்திருந்தால் நிச்சயமாக அனுபமாவுக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்றெண்ணியவனின் கண்ணுக்குள் நிலுபமாவின் முகம் வந்து போக தலையை உலுக்கிக் கொண்டான்.
என்னது வள்ளியை இனியனுக்கு பேசினார்களா? அவள் வேண்டாம் என்றதால் அவளை கணிக்கு பேசி முடித்தார்களா? இது அனுபமாவுக்கு முற்றிலும் புதிய செய்தி.  
“இனி என் பொண்ணு இந்த வீட்டுல ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டா வாம்மா போலாம்” வடிவேல் மகளின் கையை பிடிக்க,
“இருங்கப்பா எனக்கு தாலி கட்டினவர் வரட்டும் அவர் சொல்லட்டும் என் வயித்துல வளருறது அவர் குழந்தையா இல்லையானு. அப்பொறம் போலாம்” தந்தையை தடுத்தவாறே கூறினாள் அனுபமா.
“இன்னும் என்னடி என் பையன் வந்து சொல்ல வேண்டி இருக்கு” அன்னம் எகிறிக் கொண்டு வர
அன்னையை தடுத்த கணி “அவங்கள அடிச்சா… மருமகள் கொடுமை படுத்தின குற்றத்துக்காக உங்கள உள்ள வைக்க வேண்டி இருக்கும்” என்றவன் அனுபமாவை பார்த்து “நீங்க கம்பளைண்ட் கொடுத்தா நான் எக்ஷன் எடுக்குறேன். வேறொரு பொண்ண காதலிக்கிற எங்கண்ணனை வலுக்கட்டாயமாக உங்களுக்கு கட்டி வச்சி உங்க வாழ்க்கையை கேள்விக்கு குறியாக்கிட்டாங்க கேஸ் கொடுங்க” என்றான்.
“என்ன இவன் பெத்தவங்களுக்கு எதிராக கேஸ் கொடுக்க சொல்கிறான்” என்று அனுபமாவும், அவள் பெற்றோரும் விழிக்க, அன்னம் கத்த ஆரம்பித்தாள்.
“நான் ஒரு போலீஸ். அநியாயத்த கண்டா நான் தான் பொங்கி எழனும். இங்க அநியாயம் நடக்கிறது அவங்களுக்கு” என்றவனை
“நீ எனக்குதான் பொறந்தியா?” என்று கேட்டார் வரதராஜன்.
நாடியை தடவி யோசித்தவன் “எனக்கு அந்த சந்தேகம் வந்ததேயில்லை. உங்களுக்கு இருக்குன்னா வாங்க போய் ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பார்த்துடலாம். எதுக்கு நமக்குள்ள சண்டை சச்சரவு” என்று மேலும் அவரை அதிர வைத்தான்.
“டேய்” அன்னம் அவனை அறையவே கையை ஓங்கி இருக்க,
“இத்தனை வருஷம் கழிச்சும் உன்னாலையே அப்படி ஒரு வார்த்தையை தாங்கிக்க முடியாதுள்ள, இவங்களால மட்டும் எப்படி தாங்கிக்க முடியும் என்று நினைச்ச? நீ மட்டும் யாரை வேணாலும், எப்படி வேணாலும் தேள் கொடுக்கு மாதிரி பேசலாம். மத்தவங்க அமைதியா போகணுமா? உன் வாய்தான் வள்ளிக்கும்” என்றவாறே இனியனை அலைபேசியில் பிடிக்க முயன்றான். இனியனின் அலைபேசிதான் அனைக்கப்பட்டிருந்ததே.
“என்ன இவன் போன ஆப் பண்ணி வச்சிருக்கான். வேல நேரத்துல போன் ஆப் பண்ண மாட்டானே” யோசனையாக வாய் விட்டே கணி கூற,
“இவளை ஆட்டோ ஏத்தி விட்டவன் எனக்கு போன் பண்ணி இவ வயித்துல வளருறத பத்தி சொன்னவன்தான் என்ன எதுன்னு கேக்குறதுக்குள்ள போன வச்சிட்டான். திரும்ப போன் பண்ணா போன் சுவிட்ச் ஆப் என்று தான் வந்தது. இதுல இருந்து என்ன தெரியுது? இவ வயித்துல வளருற குழந்தை அவனோடது இல்லைங்குற அதிர்ச்சில அவன் போன சுவிட்ச் ஆப் பண்ணிட்டான்னு தெரியுதில்ல” என்று சின்னமகனை பார்த்து கூறிய அன்னம்
அனுபமாவை ஏறிட்டு “உன்னால என் மகன் தலைக்குனிவு என்று தப்பான முடிவு ஏதாவது எடுத்து, அவனுக்கு ஏதாவது ஆகி இருந்தா உன்ன உசுரோட கொளுத்திடுவேன்” என்று மிரட்டினாள்.
இனியன் தற்கொலை செய்துகொள்ளும் ரகமெல்லாம் கிடையாது. அவ்வாறு செய்து கொள்பவனாயின் ஜான்சி கிடைக்கவில்லை என்றும் பொழுதே செய்து கொண்டிருப்பான். ஜான்சி தற்கொலை செய்ய முயற்சி செய்தாள் என்ற பொழுதே கோபம் தான் கொண்டானே ஒழிய அவன் தற்கொலை செய்ய முயலவில்லை. அவன் உயிரோடு இருந்து மற்றவர்களை கொல்லும் ரகம். 
அனுபமா மனதில் நினைக்கும் பொழுதே கணிமொழியன் அதை வாய் மொழியாக கூறலானான்.  
அன்னத்தின் பேச்சில் அனுபமாவுக்கு ஒன்று மற்றும் தெளிவாக புரிந்தது. குழந்தை வரவை இனியன் விரும்பவில்லை. அதனால் தான் அலைபேசியை அனைத்து விட்டு, வீட்டுக்கும் வராமல் எங்கோ சென்று விட்டான். எங்கோ என்ன? அந்த ஜான்சியை தான் தேடித் சென்றிருப்பான்.
அவன் வருவான், வந்து என் வயிற்றில் வளரும் குழந்தை அவனுடையது என்று கூறுவானென்று நான் காண்பது பகல் கனவு. ஜான்சியோடு அவன் ஒன்று சேர அவனுக்கு தடையாக இருக்கும் என்னை இந்த குழந்தையை வைத்தே இந்த வீட்டை விட்டு துரத்தியடிப்பான். ஒருவேளை இதுதான் அவன் திட்டமாகக் கூட இருந்திருக்கும். அதனால் தான் முதலிரவில் என்னை நெருங்கி இருப்பான்” உடைந்த அவள் மனம் தருணத்துக்கேற்றது போல் காரணங்களை அடுக்கி அவளுக்கு கூற அதையே நம்பினாள் அனுபமா.
“வாங்கப்பா போலாம். நாம இனிமேலும் இந்த வீட்டுல இருக்க வேண்டிய அவசியமில்லை”
“என்னம்மா சொல்லுற? அதான் மாப்பிளை வந்தா பிரச்சினை தீரும் என்றியே”  ஆரம்பித்த வடிவேல் கண்களாளேயே மகளிடம் இறைஞ்சினார்.
என்னதான் கோபப்பட்டாலும் மகளின் வாழ்க்கையல்லவா. சம்பந்தி வீட்டுக்காரர்கள்தான் இப்படியிருக்கிறார்கள் என்று கோபப்பட்டவருக்கு கணியை பார்த்ததும் சிறிது நம்பிக்கை வந்திருக்க, அனுப்பமாவே இனியன் வரட்டும் என்றதில் அவளுக்கு தைரியம் கூறலானார்.
“இல்லப்பா… அவர் இன்னும் அந்த பொண்ண மறக்கல. அவ நினைவாகத்தான் இருக்காரு. அன்னைக்கி ராத்தி எல்லாம் முடிஞ்ச பிறகும் அவர் அவ பெயரைத்தான் சொன்னாரு. அவரு வந்தாலும்… ” தன் தந்தையிடம் இதை சொல்ல நேர்ந்தது விட்டதே, அதுவும் அத்தனை பேரின் முன்னால் என்று வாயை கைகொண்டு பொத்தியவள் மேற்கொண்டு பேச முடியாமல் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
மகளைக் கட்டிக் கொண்ட வடிவேல் “நீ எதுவும் பேசாத. நான் இருக்கேன் உனக்கு. வா போகலாம்” அவளை அழைத்துக் கொண்டு வெளியேற, 
“நில்லுங்க அண்ணி, அண்ணன் வரட்டும்” அவளை  தடுக்க முயன்றான் கணி.
“இல்ல. நன் கிளம்புறேன். அன்னக்கி அவர் போன் பண்ணி கல்யாணத்த நிறுத்த சொன்னது மட்டும் எனக்கு கேட்டிருந்தா, அப்பா கிட்ட சொல்லி கல்யாணத்த நிறுத்தியிருப்பேன். என் விதி இப்படியாகிருச்சு. நான் என் புக்ஸ் மட்டும் எடுத்துகிறேன்” என்றாள் அனுபமா.
“எதுக்கு திரும்ப வந்து என் பையன் கூட ஒட்டலாம் என்று நினைப்போ. உன் சாமான் எல்லாத்தையும் எடுத்துட்டு போ” என்றாள் அன்னம்.
“அம்மா  அவசரப்படாதே அண்ணன் வரட்டும் அமைதியாக இரு” என்று கணி சொல்லியும் அன்னம் கேட்கவில்லை. திருமணத்துக்காக பெண் வீட்டில் கொடுத்த சீர்வரிசை, நகைநட்டு என்று எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.
முதன் முதலாக மகளை பார்க்க வந்த கலைவாணியோ அவளை நிரந்தரமாக அழைத்துக் கொண்டு ஊர் திரும்ப நேரும் என்று அறியவில்லையே என்று புலம்பியவாறே அனுபமாவை அழைத்துக் கொண்டு அத்தனை சாமான்களோடு வண்டியில் கிளம்ப வாயிலுக்கு வெளியே நின்று பார்த்திருந்தான் பார்த்தீபன்.

Advertisement