Advertisement

அத்தியாயம் 6
ஜான்சி தற்கொலை செய்ய முயன்ற பின்னரும் இனியனால் அவளுக்கு ஆறுதலாக அவள் அருகில் இருக்க முடியாததை எண்ணி மனதுக்குள் கண்ணீர் சிந்தினான்.
அதை விட ஜான்சி இருக்க வேண்டிய இடத்தில் தனக்கு பிடிக்காத அனுபமாவை தன்னுடைய அறையில் தினமும் சந்திக்க வேண்டியதை எண்ணி சினம் கொண்டான். 
அதை அவளிடம் நேரடியாகக் காட்டக் கூட முடியாதபடி அவளுக்கு சளிப் பிடுத்து உடம்பு படுத்தியெடுக்க, இவன்தான் கவனித்துக் கொண்டான். அதைக் கூட தந்தையை நம்ப வைக்கத்தான் செய்தான்.
அவளை பார்க்கும் கணமெல்லாம் முதலிரவில் நடந்தவைகள் வேறு அவன் கண்முன் வந்து இம்சிக்க, எங்கே அவனையறியாமலே கோபத்தில் அது போன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்து விடுமோ? என்று அஞ்சி அறைக்கு செல்லாது வாசலில் டீவி பார்ப்பவன் அனுபமா தூங்கிய பின்தான் அறைக்கே செல்வான்.
அது அன்னத்தின் கண்ணில் விழ, இதற்குத்தான் பையனுக்கு கல்யாணம் செய்து வைத்தோமா? என்று கணவனிடம் காயலானாள்.
“மருமகள் காலேஜ் செல்ல ஆரம்பிச்சிட்டா இல்ல. படிக்கிற வேலை ஏதாவது இருக்கும். அதனால மருமகளுக்கு தொந்தரவு இல்லாம இவன் வெளிய இருக்கிறானா இருக்கும். அவன் அனுபமாவ புரிஞ்சிகிட்டு நடக்குறானேன்னு சந்தோஷப்படுவியா?” இனியனை கொஞ்சமேனும் சந்தேகம் கொள்ளாமல் பேசினார் வரதராஜன்.
“இதெல்லாம் எங்கப் போய் முடிய போகுதோ” புலம்பினாள் அன்னம். 
தங்களை வரதராஜன் கண்காணிப்பதை அறியாத ஜான்சியோ தான் தற்கொலை செய்ய துணிந்த பின்னும் தன்னை வந்து இனியன் பார்க்காததற்கு காரணம் அவனுக்கு திருமணமானதாக நினைத்துக் கொண்டிருக்க, இனியனோ அவளை சந்திக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
தனது கொலிக்கான பார்த்தீபனின் மூலம் ஜான்சியை தொடர்பு கொண்டு வெளிநாடு சென்று விடும்படியும், தானும் அங்கு வந்து விடுவேன் என்றும் கூற, மறுத்தாள் ஜான்சி.
“அதுதான் அவனுக்கு திருமணம் ஆகிவிட்டதே. இனி என்ன? எதுவும் வேண்டாம்” என்றவள் பார்த்தீபனிடம் இனியனை பற்றி பேசவே பிடிக்கவில்லையென்றும் கூறியிருந்தாள்.
தனக்கு திருமணம் நிகழ்ந்ததால் தான் ஜான்சி இவ்வாறெல்லாம் பேசுகிறாள் என்று இனியனுக்கு புரியாமலில்லை. இதற்கு காரணம் அனுபமா மற்றும் தன்னுடைய குடும்பத்தார் எனும் பொழுது கொலைவெறியே வந்தது,
ஒரு தடவை ஒரே ஒருதடவை அவளை நேரில் சந்தித்து பேசி புரிய வைத்தால் புரிந்துக்கொள்வாள். ஆனால் அவளை நேரில் சந்திக்கத்தான் முடியாது. சந்தித்தால் அது தந்தைக்கு தெரிந்து விடும் என்றஞ்சினான். அதற்காக வேண்டியே தந்தையை நம்ப வைக்க அனுபமாவுக்கு நல்ல கணவனாக நடிக்கலானான்.
அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளாமல் திருமணமாகி இரண்டு மாதங்கள் முடிவடையும் நிலையில் வரதராஜனை நம்ப வைக்க முடிந்த இனியனின் பாதுகாப்பு வளையங்கள் தளர்க்கப்பட இரண்டு மூன்று நாட்கள் சுதந்திரமாக சுற்றி வந்தவன் தன்னை யாரும் பின் தொடர்கிறார்களா என்றும் கவனிக்கலானான்.
பார்த்தீபனும் ஜான்சியின் வீட்டுக்கு அருகில் கண்காணிப்பில் இருந்தவர்கள் காணாமல் போய் இருப்பதாக இனியனுக்கு தகவல் கூறியிருக்க,
“டேய் நிஜமாவா சொல்லுற?”
“டேய் நான் பொய் சொல்வேனா?” நல்லவேளை ஜான்சி வீட்டுப் பக்கத்துல என் அண்ணியோட சித்தி வீடு இருக்கு. அவங்க சித்தி பொண்ணு நிர்மலாவுக்கு போன் போட்டு ஜான்சிக்கு போன் கொடுத்து பேசிகிட்டு இருக்கேன். இல்லனா நம்ம நிலைமை கோவிந்தாதான்.
இதுல எனக்கும் நிர்மலாவுக்கு அபயார்ன்னு அண்ணி அண்ணன் கிட்ட சொல்லி வீட்டுல பிரச்சினையாகிருச்சு. நான் இல்லனு சொல்ல, அந்த பொண்ணு நிர்மலா ஆமான்னு சொல்ல, என்னமோ நான் அந்த புள்ளய காதலிச்சு ஏமாத்த பார்த்தா போலவே அண்ணி முறைக்கிறாங்க.
டேய் உனக்கு இதுக்கு மேல பொண்ணு பார்க்க முடியாது. நீ அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கன்னு அம்மா கடுப்படிக்கிறாங்க.
உண்மையையும் சொல்ல முடியாம. பொய்யும் சொல்ல முடியாம என் நிலைமை பாவம்டா” புலம்பலானான் பார்த்தீபன்.
தன்னால் இவனுக்கு இப்படியொரு நிலைமையா? நண்பனை நினைத்து கவலையடைந்தான் இனியன்.
“ஆமா அந்த புள்ள நிர்மலா எதுக்கு உன்ன லவ் பண்ணுறதா பொய் சொன்னா? பொய் சொன்னாளா? இல்ல யாரோ காதலுக்கு இவ்வளவு ஹெல்ப் பண்ணுறானே நம்மள உசுருக்கு உசுரா லவ் பண்ணுவான்னு உண்மையாகவே உன்ன லவ் பண்ணுறாளா?”  ஜான்சியை சந்திக்கப் போகும் மனமகிழ்வில் சந்தேகமாக கேட்பது போல் நண்பனை சீண்டினான் இனியன்.
“பொய்தான் சொல்லியிருக்கா. அத நான் உண்மையாக்கலாமென்று பாக்குறேன்”
“அடப்பாவி” என்றான் இனியன்.
“பொண்ணு வேற அழகா இருக்கா. நல்ல பொண்ணுதான்” பார்த்தீபன் உளற ஆரம்பிக்க 
“எதற்கும் அந்த பொண்ணுகிட்ட உன்ன பிடிச்சிருக்கா என்று ஒரு வார்த்த கேட்டுட்டு என்ன முடிவு வேணாலும் எடு மச்சான்” என்றவன் அலைபேசியை துண்டித்திருந்தான்.
ஒருவேளை திருமண ஏற்பாடெல்லாம் செய்தாகி விட்டது. சொந்த பந்தங்களுக்கும் ஊருக்கும் பத்திரிகை கொடுத்தாகிற்று. இப்பொழுது போய் திருமணத்தை நிறுத்துமாறு எவ்வாறு கூறுவதென்று அனுபமா அமைதியாக இருந்து விட்டாளோ?  இனியனின் ஒரு மனம் அவளுக்காக வாதிட
தன் தந்தையின் மானம், மாரியாதையே இந்த திருமணத்தில் தான் இருக்கிறது என்று முட்டாள் தனமான முடிவை எடுத்திருந்தால் தான் அவளை விட்டு வெளிநாடு செல்வதில் அவளுக்கும் தான் வலியும் வேதனையும் எஞ்சும். அப்பொழுது அவளுடைய தந்தையின் மானம், மரியாதை காற்றில் பறக்காதா? அவனின் மறுமனம் கேலி செய்தது. 
பிடிக்காத அனுபமாவை தான் திருமணம் செய்ததை போல், தன்னை விரும்பாத ஒருவனை திருமணம் செய்து கொண்டோம் என்ற வலி அனுபமாவுக்குள்ளும் இருக்குமா? தெரியவில்லை. தான் அனுபவிக்கும் அந்த வலி தன் நண்பனுக்கு வேண்டாம் என்று தான் அவ்வாறு கூறினான் இனியன்.
ஜான்சியும் அவள் தந்தை விக்டரும் அமேரிக்கா செல்ல எல்லா ஏற்பாடுகளும் நடந்துக் கொண்டிருக்க, அவளை சந்திக்க அழைத்தான் இனியன்.
வர மாட்டேன் என்றவளை நீ வந்தேயாக வேண்டும் என்று வற்புறுத்தி கூறியிருக்க, ஜான்சியும் வரேன் என்றிருந்தாள்.
உணவு இடைவேளையின் பொழுது அவளை சந்திக்கவென கிளம்பியவன் தன்னை யாரும் பின் தொடரக் கூடாதென்று பார்த்தீபனின் வண்டியை எடுத்துக் கொண்டுதான் கிளம்பியும் இருந்தான்.
அனுபமாவுக்கு கொஞ்சம் நாட்களாகவே தலை சுற்றலும், உடல் சோர்வும் இருந்தது. சளி பிடித்து படுத்தியதால் தான் என்று நினைத்து கண்டு கொள்ளாது இருந்தவள் இன்று கல்லூரியில் மயங்கி விழுந்திருந்தாள்.
காலை உணவை ஒழுங்காக உட்கொள்ளாமல் வருகிறாயா? இங்கு வந்த உடனாவது காலை உணவை உண்ணவில்லையா? என்று சகமாணவர்கள் நலம் விசாரிக்க, ஓய்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அறையில் கண்ணயர்ந்து இருக்கும் பொழுதுதான் நாள் தள்ளி சென்றிருப்பது நியாபகத்தில் வந்தது.
ஒருநாள் உறவில் குழந்தை உண்டாகுமா என்ற சந்தேகம் எல்லாம் அனுபமாவுக்கு இல்லை. சினிமாவில்தான் வித விதமாக கணவன், மனைவி சண்டைகளையும், காதல் காட்ச்சிகளையும் எடுத்து வைத்திருக்கிறார்களே.
முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று கல்லூரிக்கு விடுமுறை கூறியவள் அருகிலுள்ள மருந்தகத்திலிருந்து கர்ப்ப பரிசோதனை கருவியை வாங்கி அப்பெண்மணியின் அனுமதியோடு அங்கே உள்ள கழிவறையில் பரிசோதனை செய்து இரண்டு கோடுகளை காட்டவும், கர்ப்பம் என உறுதி செய்து கொண்டவள் மனமகிழ்வோடு இனியனை காணச் சென்றாள்.
என்னதான் இனியன் அவளை வார்த்தைகளால் வதைத்தாலும் ஜான்சியின் தற்கொலை முயற்சியை பற்றியோ, அதற்கு காரணம் அனுபமா என்றோ இதுவரை குற்றம் சாட்டவில்லை.
வீட்டார் அவனை கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தை நிகழ்த்தி விட்டார்கள். தங்களுக்குள் உறவும் ஏற்பட்டு விட்டது. ஜான்சியை மறக்க முடியாமல் வார்த்தைகளால் குதறியெடுத்துக் கொண்டிருக்கிறான்.
இதுதான் நிதர்சனம் என்று உணரும் பொழுது தன்னை முழுமனதாக ஏற்றுக்கொள்வான் என்று எண்ணினாள். அனுபமா அவ்வாறு எண்ணுவதற்கு ஏதுவாக இனியனின் நடவைக்கைகளுமே அமைத்து விட்டனவே.
குழந்தையும் உருவாக படிக்கும் நேரத்தில் அதை பாரமாக நினைக்காமல் இனியனுக்கும் தனக்குமிடையில் நெருக்கத்தை உருவாக்க கடவுள் கொடுத்த வாரமாகவே கருதினாள்.
எந்த பெண்ணுமே வீட்டாரிடம் கூறும் முன் தன் வாயால் தன் கணவனிடம் தான் கர்ப்பமாக இருப்பதை கூறத்தான் ஆசைப்படுவார்கள். அனுபமாவுக்கும் அந்த ஆசை இருக்கத்தான் செய்தது. கணவனின் முகம் பார்த்து சந்தோசமாக கூற வேண்டும் என்ற ஆசை. மற்ற பெண்களை விட ஒருபடி மேல் இருந்தது. அவள் மீதிருக்கும் வெறுப்பு நீங்கி. இனியன் அவளை கட்டியணைத்து முத்தமழையில் நனைவிப்பான். மன்னிப்புக் கோருவான். கையை பிடித்துக் கொண்டு சேர்ந்து வாழலாம் என்பான். ஏதேதோ கற்பனைகளோடு வண்டியை கிளப்பி அவனது காரியாலயம் வந்தவள் காண நேர்ந்தது பார்த்தீபனிடம் விடைபெறும் இனியனைத்தான்.
மதிய உணவு வேளையில் வீட்டுப்பக்கம் செல்லாது எதிர் திசையில் எங்கே பயணிக்கிறான் என்ற சிந்தனையெல்லாம் அனுபமாவுக்கு இல்லை. இந்த சந்தோசமான விஷயத்தை அவனிடத்தில் முதன் முதலாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவனை பின் தொடர்ந்தாள்.
நதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி
நதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன்
உயிரன்றோ
பூங்காற்று புதிதானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிதானது
புதுவாழ்வு சதிராடுது
அந்த பூங்காவுக்கு முன் வண்டியை நிறுத்திய இனியன் உள்ளே செல்ல பின்னால் வந்து வண்டியை நிறுத்திய அனுபமா இனியனை அழைத்தது அவன் காதில் விழவில்லை.
புன்னகை முகமாகவே வண்டியை விட்டு இறங்கியவள் ஓடாத குறையாக இனியனை தேடி வர, அவனோ ஜான்சியை கண்டு விட்ட மகிழ்ச்சியில் கண்கள் மின்ன அவளை பார்த்தவாறு அவளை நோக்கி வேக எட்டுக்களையெடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
இனியன் ஜான்சியை நெருங்கிய வேளை, அனுபமா இனியனை நெருங்கி அவன் கைகளை பற்றி “இனியன் நீங்க அப்பாவாக போறீங்க” என்று கூற ஜான்சி அதிர்ந்து இனியனை ஏறிட, இனியனும் அதிர்ச்சியாக ஜான்சியை தான் ஏறிட்டான்.
அவள் கவனம் முழுவதும் இனியனின் மீதிருந்ததால், தங்களுக்கு மூன்றடி தூரத்தில் நின்ற பெண்ணை அனுபமா கவனிக்கவேயில்லை. சொல்ல வந்ததை சொல்லியவள் நாணத்தோடு தலைக்கு குனிந்தாள்.
தன் கையை பிடித்திருந்த அனுபமாவின் கையை உதறியவன் ஜான்சியை பார்த்து “இவ பொய் சொல்லுறா. நான் இன்னைக்கு உன்ன சந்திக்க வரத தெரிஞ்சிகிட்டே இங்க வந்து டிராமா பண்ணுறா” என்றான்.
தான் என்ன எதிர்பார்த்தால்? என்ன சொல்கிறான் இவன்? யாரிடம் சொல்கிறான் என்று தலையை தூக்கி ஏறிட்ட அனுபமா குட்டை முடியிலிருந்து பெண்ணை யாரென்று தெரியாமல் குழம்பினாள். 
ஆனால் ஜான்சிக்கு அனுபமா யாரென்று நன்றாகவே தெரியும். அவள்தான் இனியனின் திருமணம் வீடியோவை பார்த்திருந்தாளே.
“இதற்காகத்தான் என்னை இங்கே வரச் சொன்னாயா? நீ உன் மனைவியோடு சந்தோசமாக குடும்பம் நடத்துவதை பார்க்கத்தான் வரச்சொன்னாயா? உனக்கு வாரிசு வரும் சந்தோசத்தை என்னிடமும் பகிர்ந்து கொள்ளத்தான் வரச் சொன்னாயா?” உடைந்தழுதாள் ஜான்சி.
இனியனுக்கு திருமணமான பின்பு அவன் வாழ்க்கையில் குறிக்கிடக் கூடாது. அது அவனது தந்தையின் மீதிருக்கும் அச்சத்தினாலல்ல. இதில் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையும் சம்பத்தப்பட்டிருக்கிறதே! ஒரு பெண்ணாக அனுபமாவை பற்றி சிந்தித்தே ஒதுங்கிப் போக எண்ணினாள் ஜான்சி.
அப்படியெல்லாம் உன்னை கைவிட மாட்டேன் என்று அவள் மனதை பார்த்தீபன் மூலம் பேசிப் பேசியே கரைத்து வைத்திருந்தவன். முற்றாக தன் புறம் சாய்த்துக்கொள்ள இன்று சந்திக்க வந்திருந்தான்.
ஒத்துங்கிப் போக எண்ணியதாலையே இத்தனை நாட்களாக இனியனை சந்திக்கக் கூட அவள் முயற்சி செய்யவில்லை. இன்றும் இனியன் வலுக்கட்டாயமாக அழைத்ததினாலையே வந்திருந்தாள். என்னதான் ஒதுங்கிப் போய் விடலாம் என்று முடிவெடுத்திருந்தாலும், காதல் கொண்ட மனம் இனியனை பார்த்த நொடி தடுமாறத்தான் செய்தது. அனுபமா கூறிய உண்மையில் நிதர்சனம் உணர கதறியழுதாள்
இனியன் ஒன்று நினைக்க, விதி அவன் வாழ்க்கையில் விளையாடியிருந்தது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறதாம். இருமனங்களும் இணையாத அனுபமா, இனியன் திருமண முடிச்சை அவிழ்க்க முடியாதபடி கடவுள் போட்டு விட்டானே.
“நோ ஜான்சி. இவ சொல்லுறத நம்பாத. நானும் நீயும் லவ் பண்ணுறது இவளுக்கு போன் போட்டு சொல்லி கல்யாணத்த நிறுத்த சொன்னேன். இவ அத பண்ணாம எதோ திட்டம் போட்டு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா. இப்பவும் நான் உன்ன சந்திக்க வர்றத தெரிஞ்சிக்கிட்டுதான் ஏதோ திட்டத்தோட வந்திருக்கா. ஏன் நாம ரெண்டு பேரும் வெளிநாட்டுல போய் செட்டில் ஆகுறத தெரிஞ்சிக்கிட்டு கூட வந்திருக்கலாம்” அனுபமாவின் மனம் எவ்வளவு காயப்படும் என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் ஜான்சியின் கையை பிடித்தவாறு அவளை சமாதப்படுத்தலானான் இனியன்.
இனியன் ஜான்சியின் பெயரை கூறிய பின்தான் அவள் ஜான்சி என்றே அறிந்துக் கொண்டாள் அனுபமா. அவன் பேசப் பேச மனதளவில் உடைந்தவளின் தொண்டையடைக்க, தலையசைத்து மறுத்தவாறே குரல் கமற “நீங்க போன் பண்ணி சொன்னதை என்னால கேட்கவே முடியல” அவன் பிடித்திருந்த கையை பார்த்தவாறே அனுபமா கூற, ஜான்சி மெதுவாக தன்கையை இனியனிடமிருந்து விலக்கிக் கொண்டாள்.
தன்னை காதலிப்பவன்தான் கையை பிடித்திருந்தான். நான் நெஞ்சில் சுமப்பவன்தான் இனியன். ஆனாலும் அவன் அனுபமாவுக்கு சொந்தமானவன் அதுதான் காதலுக்கும் கல்யாணத்துக்கும் இருக்கும் வித்தியாசம் என்பதை நன்கு உணர்ந்திருந்தாள் ஜான்சி.  
அனுபமா அவ்வாறு கூறியதும் சினம் கொண்ட சிங்கமாய் சீறினான் இனியன் “வாய மூடு. நீ என்ன கல்யாணம் பண்ணதுக்கே இவ தற்கொலை செய்துக்க பார்த்தா இப்போ இப்படியொரு பொய்யை சொல்லி இவளை உசுரோட கொல்லலாம்னு வந்தியா? எங்களை ஒரேயடியா கொன்னுடு”
“என்ன? என்ன சொல்லுறீங்க? இவங்க தற்கொலை செய்திக்க போனாங்களா? ஏன் என் கிட்ட சொல்லல? அந்த கோபத்துல தான் அன்னைக்கி ராத்திரி…” என்றவள் உதடு கடித்து மௌனம் காத்து மீண்டும் “இவங்கள இன்னுமே காதலிக்கிறதா இருந்தா? எனக்கு உடம்பு முடியாம போனப்போ எதுக்கு என்ன கவனிச்சிக்கிட்டீங்க?” கண்களில் கண்ணீரோடு ஜான்சியை பார்த்தவாறே கேட்டாள் அனுபமா.
“எல்லாம் எங்கப்பாவை நம்ப வைக்கத்தான். அவர் நம்பினா தானே. நான் நினைச்சது நடக்கும்” தெனாவட்டாக கூறினான் இனியன்.
“தான் காதலித்த இனியன் தனக்காக இவ்வளவு செய்தான் என்று பெருமை படுவதா? அல்லது ஒரு பெண்ணின் மனதை ரணப்படுத்தி விட்டானே என்று சினம் கொள்வதா?”  அமைதியாகத்தான் நின்றிருந்தாள் ஜான்சி. அவள் கண்களிலும் கண்ணீர் நிற்காமல் வழிந்துக் கொண்டிருக்க, துடைக்கத் தோன்றாமல் நின்றிருந்தாள்.
இரண்டு பெண்களுடைய கண்ணீருக்கும் இனியன்தான் காரணம். ஜான்சியை காதலிப்பவன் எதற்காக அனுபமாவோடு இணக்கமாக நடந்துக் கொண்டு அவள் மனதில் எதிர்பார்ப்பை தோற்றுவித்தான். அவளிடம் தான் ஜான்சியை இன்னும் காதலிப்பதாக கூறி, புரியவைத்து ஒதுங்கி இருந்திருக்கலாமே.
அல்லது தனக்கு திருமணமாகி விட்டது. திருமணம் மட்டும் ஆகவில்லை. கோபத்தில் அனுபமாவுக்கு இழைக்கக் கூடாத தீங்கை இழைத்து விட்டேன்  என்பதை உணர்ந்து ஜான்சியை மறந்து அனுபமாவோடு வாழ முயற்சி செய்திருக்க வேண்டும்.
ஜான்சியே அவனுக்கு திருமணமாகி விட்டது என்று ஒதுங்கி செல்ல நினைக்கையில் இவனாக சென்று அவளை சந்திப்பதும், அவள் மனதில் ஆசைகளை வளர்க்க முயல்வதும், அனுபமாவுக்குள்ளும் எதிர்பார்ப்புகளை தோற்றுவிப்பதும் என்று இன்று இனியனால் தான் இரு பெண்களுக்குமே இந்த நிலைமை.
அதை அவன் புரிந்தும் கொள்ளாமல் இருப்பதோடு, இருவரையும் ஒரே நேரத்தில் சமாளிக்கவும் நேருமென்று நினைத்தும் பார்த்திருக்க மாட்டான்.
“நான் கிளம்புறேன் இனியன்” என்றாள் ஜான்சி.
“கிளம்ப வேண்டியது நீ இல்ல இதோ இவ தான்” என்று இனியன் கூற,
“என்ன இனியன் விளையாடுறீங்களா? வீட்டுல என் கிட்ட அந்நியோன்யமா நடந்துகிட்டு இங்க வந்து இவங்கள பார்த்ததும் உங்க மனசு அவங்க புறம் தாவுதா?” கோபத்தில் சீறினாள் அனுபமா.
“ஏன் உனக்கு காது நல்லா தானே கேக்குது? உன் கிட்ட நல்லமுறையில் நான் நடந்துகொண்டதற்கு காரணம் என் அப்பா மட்டும்தான். புரியுதா?” அனுபமாவின் மேல் எரிந்து விழலானான்.
அவளுடைய அந்நியோன்யம் என்ற வார்த்தையை ஜான்சி எவ்வாறு எடுத்துக் கொண்டிருப்பாளோ என்று இனியன் ஜான்சியை ஏறிட, இன்னும் எனக்கு இங்கு என்ன வேலை எனும் விதமாக அனுபமாவை தாண்டி நடக்க முயன்றாள் ஜான்சி. அவள் கையை பிடித்து நிறுத்தினான் இனியன்.
“நில்லு ஜான்சி. நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல”
“என்ன பேசுறீங்க இனியன். உங்க குழந்தை, நம்ம குழந்தை” அனுபமாவால் மேற்கொண்டு ஒருவார்த்தையேனும் பேச முடியவில்லை தொண்டையடைத்து கண்ணீர் பொலபொலவென கன்னத்தில் வழிய ஜான்சியை ஏறிட்டாள்.
“என்ன இனியன் தாலி கட்டின பாவத்துக்காக இவங்க கூடயும் குடும்பம் நடாத்திக் கொண்டு, காதலிச்ச பாவத்துக்காக என்னையும் கல்யாணம் பண்ணிக்கலாம் என்ற நினைப்போ?” அவனிடமிருந்து கையை உதறியவாறே வார்த்தைகளை அனலாய் கக்கினாள் ஜான்சி.
“இல்ல ஜான்சி. எனக்கு இவ வேணாம். இவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நான் காதலிச்சது உன்ன. கல்யாணம் பண்ணி வாழ ஆசைப்பட்டது உன்கூட. புரிஞ்சிக்க” ஜான்சியிடம் கெஞ்சலானான் இனியன்.
அதை பார்த்து அனுபமாவின் இதயம் சுக்கு நூறாக உடைந்து விட்டிருந்தது. 
குழந்தை விஷயத்தில் அனுபமா பொய் சொல்கிறாளா? உண்மையை சொல்கிறாளா? ஜான்சிக்கு தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அவள் இனியனின் மனைவி. தான் தான் அவர்களின் நடுவில் குறுக்கிடுவதாக எண்ணினாள்.
“நோ இனியன். நான் இங்க வந்ததே இனிமேல் என்ன தொந்தரவு செய்யாதே என்று சொல்லிட்டு போகத்தான். நான் வரேன்” என்ற ஜான்சி அவனிடமிருந்து கையை உருவிக் கொண்டு நடக்க,
“எல்லாம் உன்னால் தான்” என்று அனுபமாவின் கழுத்தை இறுக்கினான் இனியன்.
அவனை தடுக்கத் தோன்றாமல் கண்களில் வழியும் கண்ணீரோடு நின்றிருந்தாள் அனுபமா.
“என்ன பண்ணுற இனியன். அவங்கள விடு” ஜான்சிதான் இனியனை இழுத்து தடுக்கலானாள்.
இனியனின் கைகளை பற்றியிருந்த அனுபமா கண்கள் சொருகியவாறே இனியனின் கைகளிலையே மயங்கி விழுந்திருந்தாள்.
“எப்படி நடிக்கிறா பாரு? ஏய் எந்திரிடி” அனுபமாவை உதறிய இனியன் கர்ஜிக்க, அனுபமாவை எழுப்ப முயன்றாள் ஜான்சி.
நிமிடங்கள் கரைந்ததே ஒழிய அனுபமாவின் மயக்கம் தெளிவதாக தெரியவில்லை. பயந்து போன ஜான்சியோ இனியனை திட்ட, இனியனும் அனுபமாவை எழுப்ப முயன்று தோற்று அவளை உடனடியாக அருகிலுள்ள மருத்துமனையில் அனுமதித்தான்.
“இந்த மாதிரி நேரத்துல தலை சுற்றல். மயக்கம், வாந்தி எல்லாம் இருக்கத்தான் செய்யுது. நான் நினைக்கிறன் அவங்க காலை உணவை உண்ணாம இருந்திருக்காங்க. அதனாலதான் மயங்கி விழுந்திருக்கணும். பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல. நான் சில விட்டமின் மாத்திரை எழுதித் தரேன். எப்படியும் மகப்பேறு மருத்துவர் கிட்ட போவீங்க. எந்த மாதிரியான உணவு உண்ணனும், உண்ணக் கூடாது, என்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பதையெல்லாம் அவங்க சொல்வாங்க. அவங்க கண்ணு முழிச்சதும் ஜூஸ் கொடுக்க சொல்லி இருக்கேன். கன்டீன்ல ஏதாவது சாப்பிட வாங்கிக் கொடுங்க. சாப்பிட்டாவே சரியாகிடும்” அனுபமாவை பரிசோதித்த மருத்துவர் கூறியதை கிரகித்த இனியன் விதிர்விதித்துப் போனான். 
“அனுபமா பொய் சொல்லவில்லை. உண்மையைத்தான் கூறி இருக்கிறாள். அதைக் கூறத்தான் தன்னை தேடியும் வந்திருக்கிறாள். ஒரே இரவில் நடந்த நிகழ்வால் குழந்தை தரித்து விட்டதா? அப்படியும் நிகழுமா? விதி என் வாழ்க்கையில் நாளா பக்கமும் விளையாடுகிறது. அனுபமாவை ஒதுக்கி வைக்கலாம், ஒதுங்கி நிற்கலாம். அவள் சுமக்கும் என் குழந்தையை என்ன செய்வது? அது என் குழந்தை இல்லையென்று ஆகி விடாதே” தனக்குள் உழன்றுக் கொண்டிருந்தான் இனியன்.
“வாழ்த்துக்கள் இனியன். எனக்கு நேரமாகிறது. நான் கிளம்புறேன்” என்று ஜான்சி கிளம்பிச் சென்றது கூட இனியனின் கவனத்தில் இல்லை. குழப்பத்தில் அமர்ந்திருந்தான்.
கண்விழித்த அனுபமா தாரை தாரையாக கண்ணீர் வடிக்கலானாள். அவளிடம் இனியனை காதலிக்கிறாயா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்பாள். வேறொருத்தியை காதலிப்பவனை இவள் எவ்வாறு காதலிப்பாள்? கணவனாக அவனை முழுமனதாக ஏற்றுக் கொண்டுதான் இருந்தாள். அந்த எண்ணத்தை இனியனின் நடவடிக்கைகளே அவளுக்கு கொடுத்திருந்தன.
தன் கணவன் தனக்கானவன் என்றுதான் இனியன் நடிப்பதை புரிந்துகொள்ளாமல், அறிந்தும் கொள்ளாமல் அவன் வார்த்தைகளால் வதைத்தாலும் பொறுமையாக காத்திருந்தாள்.
ஆனால் எல்லாமே தன்னுடைய தந்தையை ஏமாற்ற செய்த நாடகம் என்று அவன் வாயால் சொன்னானோ அக்கணமே அவள் மனம் உடைந்து விட்டது. ஜான்சியை தேடி செல்ல மாட்டான் என்று நினைத்தாள். எந்த சூழ்நிலையிலும் அவன் செல்லத்தான் தயாராகி நிற்கிறான் என்பத்தையும் அறிந்துக் கொண்டாள். இனிமேல் அவனோடு சேர்ந்து வாழ முடியாது என்பதையும் புரிந்து போன போது கானல் நீராய் போன தன் வாழ்க்கையை நினைத்து கண்ணீர் வடித்தாள்.
பாலைவனத்தில் கூட பனைமரம் இருந்தால் நீர் இருக்கும். அனுபமாவின் வயிற்றில் உதித்த சிசுவால் இனியனின் மனம் மாறுமோ?  குழந்தைக்காக மட்டும் அனுபமாவை ஏற்றுக்கொண்டு வாழ்வானோ? கல்லுக்குள்ளும் ஈரம் வருமோ? காதல் வருமோ? புரிதல் வருமோ? இன்று வருமோ? என்று வருமோ? வரும் பொழுது அனுபமா ஏற்றுக்கொள்வாளோ? தெரியவில்லை.
எது எப்படியோ குழந்தை உண்டான நற்செய்தியை வீட்டாரோடு பகிர்ந்துகொள்ள வேண்டாமா? அனுபமாவை வீட்டுக்கு அனுப்பி வைத்த இனியன் அனுபமா கர்ப்பமாக இருப்பதை அன்னத்திடம் அலைபேசி வழியாக கூற,யார் குழந்தையை வயிற்றில் வாங்கி வந்தாய் என்று வீட்டுக்கு வந்த அனுபமாவை அறைந்திருந்தாள் அன்னம்.

Advertisement