Advertisement

அத்தியாயம் 5

பெற்றவர்களும் நிலுபமாவும் கண்ணீரோடு வழியனுப்பி வைக்க இனியனின் குடும்பத்தாரோடு சென்னைக்கு குடிபெயர்ந்தாள் அனுபமா.
புது இடம், புது சூழல் என்று தன்னை பொருத்திக் கொள்ள சிரமப்பட்டவளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கணவனானவனோ கண்டுகொள்ளவில்லை.
ஒருவாரகாலமாக சென்னை நீரில் குளித்து, குடித்து சளிபிடித்து குரல் கூட கமறி யாரிடமும் ஒழுங்காக பேச முடியாமல் இருந்தாள். அது அவளுக்கு மட்டுமன்றி வீட்டாருக்கும் அசௌகரியமாக இருந்தது.
“புதுசா கல்யாணமானவங்க நாலிடத்துக்கு போய் வருவாங்க என்று பார்த்தா அவன் அவன் பாட்டுக்கு வேலைக்கு போறான். இவளை ஆஸ்பிடலுக்குத்தான் அனுப்பனும் போலயே” என்றாள் அன்னம்.
“ரொம்ப முடியலைன்னா போய் டாக்டரை பார்க்க வேண்டியது தானே” என்றார் வரதராஜன்.
“ஆமா பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சது, வர பொண்ணு அவனையும் நம்ம குடும்பத்தையும் பாத்துக்க. இங்க என்னடான்னா… வந்தவளை நாம கவனிக்க வேண்டி இருக்கு” கணவனிடம் காய்ந்தாள்.
அன்னை தந்தைக்கு காலை உணவை பரிமாறும் பொழுது புலம்பியதை காதில் வாங்கியவாறு காலை உணவுண்ண அமர்ந்தான் இனியன். கணியும் இவர்களின் பேச்சில் கலந்துகொள்ளாமல் அங்குதான் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இந்த இரண்டு வாரமாக வீட்டில் சுப்பிரபாதம் காதில் விழவில்லையானாலும் அன்னையின் இந்த பேச்சு மட்டும் ஓயவே இல்லை. கணியும் தினம் ஒரு சமாதானம் கூறிப் பார்த்தவன் தான் நொந்துப் போய் அமைதியானான்.
“இதோ வந்துட்டான். கல்யாணம் பண்ணி வச்சாசு பொண்டாட்டி வந்து பரிமாறுவானு பார்த்தா. அவ போர்வைய போர்த்திக்கிட்டு தூங்கிக்கிட்டு இருக்கா. இவனுக்கு நான் சோறு போடணும்” அங்கலாய்த்தாள் அன்னம்.
“அம்மா நான் போட்டு சாப்பிட்டுகிறேன். பொன்னி சமைக்கிறத போட்டு சாப்பிடுறது அவ்வளவு என்ன கஷ்டமா? அதுக்கு அனு வந்துதான் பரிமாறணுமா? அதுக்கு அவளை ஊட்டி விட சொல்லேன். இதோ இங்க ஒருத்தன் போட்டு சாப்பிடுறானே. இவனுக்கு நீயா பரிமாறின? இல்ல செம்பகவள்ளி வந்து பரிமாறும் வரைக்கும் வைட் பண்ணிக்கிட்டு இருந்தானா?” கடுப்பானவன் அன்னையை முறைத்ததோடு தம்பியையும் தன் பேச்சில் இழுத்திருந்தான்.
அன்னத்தின் அச்சம் அனு இனியனிடம் ஒன்றவில்லையாயின் அவன் ஜான்சியை தேடி சென்று விடுவானோ என்பதில் இருக்க இவ்வாறு பேசிக்கொண்டிருந்தாள். அது அவனுக்கு புரியவில்லை.
புதிதாக ஒருத்தி வந்ததும் நடைமுறை விஷயங்கள் மாற வேண்டுமா என்ற கோபத்தை விட பிடிக்காத திருமணத்தை செய்து வைத்து விட்டார்களே என்ற கோபம் உள்ளுக்குள் கனற அதை வெளியே காட்டிக் கொள்ளவும் முடியாமல் இனியனும் பேசி தீர்க்கலானான்.
“ஏன் எனக்கு ரெண்டு கையில்லையா? இடது கையால போட்டுக்கிட்டே வலது கையால சாப்பிடுவேன். சாப்பாடு போட பொண்டாட்டி வரணும்னா இங்க எவனுக்கும் சோறு கிடைக்காது” வள்ளியின் பெயரை சொன்னதும் கடுப்பானான் கணி.
“கேட்டுக்கோங்க” அன்னைக்கு பார்வையாலையே பதில் கூறினான் இனியன்.
“விட்டா நம்மள கிறுக்கனாக்கி வள்ளியை தலேல கட்டிடுவாங்க போல இருக்கே” முணுமுணுக்க வேறு செய்தான்.
அது இனியனின் காதில் நன்றாகவே விழுந்து முகத்தில் புன்னகையை தோற்று வித்திருந்தது.
“நிலுபமாவை சீண்டிக் கொண்டே இருக்கிறாயே, உன் மனதில் அவளை பற்றி ஏதாவது எண்ணம் இருக்கிறதா?” என்று இனியன் தம்பியிடம் நேரடியாக கேட்டு விட்டான்.
“அட நீ வேற சின்ன வயசுல வள்ளியை நீ சீண்டுவ, நான்தான் அவளுக்கு ஆறுதலாக இருப்பேன். நான் சீண்ட கிடச்சவதான் நிலுபமா” என்றான்.
அவனுக்கு நிலுபமாவின் மீது எந்த ஈடுபடுமில்லை என்று அறிந்து இனியன் நிம்மதியடைந்தான்.
ஆனால் கணி சொன்னதை வைத்து தான் சிறு வயதில் வள்ளியை சீண்டியதால் அவளுக்கு தன்னை பிடிக்காமல் போனதாகவும் கணி அவளிடம் அன்பாக நடந்து கொண்டதால் அவளுக்கு அவனை பிடித்து விட்டதாகவும் தெரிகிறது. அது இயல்புதானே என்றெண்ணிக்கொண்டான்.
ஆனால் அவன் அறியாத ஒன்று வள்ளிக்கு ராஜகோபால் என்றால் உயிர். ராஜகோபால் போல் கணியும் காவல் துறையில் இருப்பதும் மற்றுமொரு காரணம்.
“அது இருக்கட்டும். உன் பொண்டாட்டி உடம்பு முடியாம படுத்துக் கெடக்குறாளே டாக்டர்கிட்ட கூட்டிட்டு போக தோனலயா உனக்கு?” கட்டைக்கு குரலில் மகனை மிரட்டினார் வரதராஜன்.
உனக்கு திருமணம் ஆகிவிட்டது. அவள் உன் மனைவி. நீ தான் அவளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர் மறைமுக கட்டளையாகவும் இருந்தது.
அதற்கெல்லாம் அசரும் இனியனல்லவே இவன். “நானும் கூப்பிட்டு கூப்டு பார்த்தேன். கசாயம் வச்சி குடிச்சா சரியாகும் என்று சொல்லி வரமாட்டேன் என்று சொல்லிட்டா. சரிதான் என்று விட்டுட்டேன். பத்துநாளா கசாயம் வச்சி குடிச்சது போதும் சளி ஓவராச்சு என்று பார்மஸில கேட்டு நானே மாத்திரை வாங்கி வந்து கொடுத்தேன். அத போட்டுட்டுதான் தூங்குறா” என்றான்.
இனியன் அனுபமாவை மருத்துவரிடம் செல்ல அழைக்கவுமில்லை. அவனுக்கு நேரமும் இல்லை. இரவில் அவள் தூங்காமல் இருமுவது அவனுக்கு தொல்லையாகத்தான் இருந்தது. அதனாலே அவள் ரொம்பவும் முடியாமல் இருக்கிறாள் என்று அறிந்துக் கொண்டான்.
என்னதான் அவள் மீது கோபமிருந்தாலும் உடம்பு முடியாமல் இருப்பவளிடம் கோபத்தை காட்ட முடியுமா? அன்னத்தை அழைத்து தனக்கு நேரமில்லை அனுபமாவை மருத்துவரிடம் அழைத்து செல்லுமாறு இனியன் கூற, அவள் உன் மனைவி அது உன் வேலை. என்னால் முடியாது என்று விட்டு சென்றாள் அன்னம்.
பல்லைக் கடித்தான் இனியன். தந்தை சந்தேகம் கொள்ளாமல் தான் வெளிநாடு செல்ல இருக்கும் ஒரே வழி அவர் முன்னிலையில் அனுபமாவோடு சுமூகமாக நடந்துகொள்வது மட்டும்தான் என்பதையும் உணர்ந்துதானிருந்தான்.
அவளை மருத்துவரிடம் கூட அழைத்து செல்வதில் அவனுக்கு இஷ்டமில்லை. அவளோடு ஜோடியாக எங்கும் செல்வதில் விருப்பமுமில்லை. அதனாலயே அவளை அழைத்து செல்லாது அவனாக மாத்திரை வாங்கி வந்திருந்தான்.
“நீயே போய் மாத்திரை வாங்கி வந்து கொடுத்தது நல்லது. கல்யாணமாகி முதல் முறை வெளிய போறீங்க. ஆஸ்பிடலுக்கா போகணும்” அழுத்துக் கொண்டாள் அன்னம்.
“பரவாயில்லையே மகன் அனுபமாவின் கழுத்தில் தாலி கட்டிய கையேடு அவளை மனைவியாகவும் ஏற்றுக் கொண்டு விட்டானே” என்று வரதராஜனும் மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டார்.
உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட இனியன் தன்னுடைய திட்டத்தை வெகு சீக்கிரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணினான்.
இது எதையுமே அறியாத அனுபமாவோ நல்ல கணவனாக இனியன் மாத்திரைகள் வாங்கி வந்திருப்பதாக எண்ணி நன்றியோடு அதை வாங்கிக் கொண்டவள் மாத்திரையை உண்டு தூங்கியிருந்தாள்.
வரதராஜன் கூர்ந்து கவனிப்பதினாலையே அனுபமாவின் மீது அக்கறை செலுத்துவது போல் அவளுக்காக அறைக்கு சாப்பாடு எடுத்து செல்வதும், சுடுநீர் எடுத்து செல்வதுமென்று இனியன் நன்றாக நடிக்க ஆரம்பிக்க, அதை நம்பி அவனோடு பேசி நெருங்கலாம் என்று அனுபமா நினைத்தால் அவனோ அவளிடம் அனலாய் கொதித்தான்.
மனைவி என்ற பாசம், அக்கறையும் இருக்கத்தான் செய்கிறது கூடவே கோபமும் இருக்கிறது நாளாக நாளாக தன்னை புரிந்துக்கொள்வான் என்று விட்டு விட்டாள் அனுபமா.
தன்னுடைய அறையில் பிடிக்காத அவளோடு இருப்பதே கொடுமை. இதில் அவளை காணும் கணமெல்லாம் முதலிரவில் நடந்தவைகள் அவன் கண்ணுக்குள் வந்து இம்சிக்க வேறு செய்தது.
ஜான்சியை காதலித்திருந்தாலும் அவளை வெளியே சந்தித்த தருணங்களும் மிகக் குறைவு. அப்படியே சந்தித்தாலும் கையை பிடித்து பேசியிருப்பான். அவள் எதிர் பார்க்காத தருணங்களில் கன்னத்தில் முத்தமிட்டிருக்கின்றான். அவள் சம்மதத்தோடு இதழ் முத்தம் கூட கொடுத்திருக்கின்றான். அதற்கு மேல் அவன் சிந்தித்தும் பார்த்ததில்லை.
அனுபமா யாரோ எவளோ என்றாலும் அவளோடு நடந்த நிகழ்வால் அவனையறையாமளையே இனியனின் பார்வை அவன் புறம் தாவிச் செல்ல அவனாலையே அவன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் எங்கே அவளை நெருங்கி விடுவேனோ என்ற அச்சம் வேறு உள்ளுக்குள் எழ ஆரம்பித்திருந்தது.
தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றுக்கொள்ள அவளை நெருங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருந்த இனியனுக்கு இது பெரும் சோதனையாக இருக்க, அனுபமாவோ கணவன் திருமணத்தை ஏற்றுக்கொண்டு வழிக்கு வந்து விட்டான் என்று எண்ணி அவனை நெருங்க முயன்றால் அவளை வார்த்தைகளால் வதைத்து தூர நிறுத்தினான் இனியன்.
வீட்டுக்கு வந்த மருமகள் இப்படி தொட்டாசிணுங்கியாக இருக்கிறாளே என்று அனுபமாவின் உடம்பு தேறும்வரை புலம்பிக் கொண்டிருந்தாள் அன்னம். அது போதாதென்று அனுபமா பி.எட் படிக்க கல்லூரியில் சேர வேண்டும் என்று வடிவேலிடம் அலைபேசியில் பேசியத்தைக் கேட்டு குத்திக்கலானாள்.
“என்னது காலேஜ் போக போறியா? கல்யாணம் பண்ணி வந்த நாளிலிருந்து என் புள்ள உன்ன கவனிச்சிக்கிட்டு இருக்கான். காலேஜுக்கு போறேன். வேலைக்கு போறேன் என்று கிளம்பிட்டா நீ அவனை கவனிச்சிக்குவியோ இல்லையோ அவன் உன்ன கவனிக்க வேண்டியிருக்கும். உன்ன என் பையனுக்கு கட்டி வச்சது குடும்பம் நடாத்த. படிச்சி பட்டம் வாங்குறேன், வேலைக்கு போறேன் என்று சபதம் போடாம புள்ளைய பெத்து என் கைல கொடுக்குற வேலைய பாரு” கறாராக கூற அனுபமாவுக்கு கண்ணீர் முட்டிக்கு கொண்டு வந்தது.
இனியனுடனான திருமணத்தை பேசும் பொழுதே வரதராஜனிடம் வடிவேல் “என் பொண்ணு படிக்கணும் என்று ஆசை படுறா. அவ படிக்கட்டும், அவ ஆசைப்படியே வேலைக்கு போகும் பொழுது கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாம் என்று கூட யோசிக்கிறேன் என்று கூறியிருக்க,
வரதராஜன் இனியனுக்கு பெண் பார்க்கும் அவசரத்தில் “அதுக்கென்ன தாராளமாக படிக்கட்டுமே. என் மருமக படிச்சவ என்றா எனக்கும் பெருமையாக இருக்காதா? கல்யாணத்துக்கு பிறகு படிக்கட்டுமே அதில் என்ன தப்பு” என்று பேசினார்.
அதை வரதராஜன் வாய் வார்த்தையாகவும் கூறவில்லை. அனுபமா படிப்பதிலோ, வேலைக்கு செல்வதில்லையோ வரதராஜனுக்கு எந்த பிரச்சினையுமில்லை. பெண்கள் படிக்கக் கூடாது, வேலைக்கு செல்லக் கூடாது என்று சிந்திக்கும் அளவுக்கு மோசமானவருமல்ல. மனைவியிடம் கலந்தாலோசிக்காமல் வடிவேலுக்கு வாக்கு கொடுத்து விட்டார். இது அன்னத்துக்கு தெரியவில்லை. தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமல்லவா. மனைவியையும் சமாளிக்க வேண்டும். இப்பொழுது இதுதான் பூதாகரமான பிரச்சினை.
“என்ன பேசுற? மருமகள் படிக்கிறதுல உனக்கென்ன பிரச்சினை?”
“என்ன பிரச்சினை என்று நான் இப்போ உங்களுக்கு சொன்னது புரியலையா?” கணவனை முறைத்தாள் அன்னம்.
“உனக்கு உடம்பு முடியலைன்னா நான் பார்த்துக்கிட்டது இல்லையா?” என்று வரதராஜன் ஆரம்பிக்கவும்
“என்னைக்கோ ஒருநாள் சுடுதண்ணீர் வச்சிக்க கொடுத்ததையெல்லாம் சொல்லாதீங்க” அவர் வாயை அடைத்தவள் இனியன் உள்ளே வருவதைக் கண்டு அவனிடம் நியாயம் கேட்கலானாள்.
“இந்த அநியாயத்தை பார்த்தியாடா? உன் பொண்டாட்டி காலேஜுக்கு போகனுன்னு சொல்லுறா. அவளை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சது எதுக்காம்”
“ஆ..கா… பஞ்சாயத்தை கூடிட்டாங்களே. தலைவர் என்ன முடிவு பண்ணி இருக்காரு என்று தெரியாம நாம பேச முடியாதே நம்ம திட்டத்துல கைவச்சிடுவாரே” அக்கனமும் சுயநலமாக சிந்திக்கலானான் இனியன்.
“என்னடா முழிக்கிற? உன் அப்பா மட்டும்தான் சப்போர்ட் என்று நினச்சா நீயுமா?” மகனின் தோளில் அடித்தாள் அன்னம்.
“ஆக தலைவர் வரதராஜன் ஓகே சொல்லிட்டார் போலயே. இப்போ பாரு நம்ம ப்ரோபோமான்ச” மனதுக்குள்ளேயே வேட்டியை மடித்துக் கட்டியவன் “இப்போ என் பொண்டாட்டி படிக்கிறதுல உனக்கென்ன பிரச்சினை?” கையை கட்டிக் கொண்டு அன்னையை ஏறிட்டான்.
“ஏண்டா விளங்காதவனே. இவ்வளவு நேரமும் கத்தினது உன் காதுல விழலையா?”
இனியன் உள்ளே வரும் பொழுது அன்னம் கத்தியது இனியனின் காதில் பாதி தான் விழுந்தது. அது அவனுக்கு தேவையுமில்லையே “இந்த வீட்டுல சமையலுக்கு ஆள் இருக்கு, வீட்டு வேலைக்கு ஆள் இருக்கு. தோட்ட வேலைக்கு கூட ஆள் இருக்கு. அவசரத்துக்கு வண்டியோட்ட ட்ரைவர் கூட இருக்கு. உனக்கு எந்த வேலையுமில்ல. அப்படியிருக்க என் பொண்டாட்டிக்கு என்ன வேலை இருக்க போகுது? அவதான் படிக்கட்டுமே”  நீதான் இந்த வீட்டுல ஒரு வேலையுமில்லாம இருக்க, அவளாவது படிக்கட்டும் என்றானா? தெரியவில்லை.  
“அப்படி சொல்லுடா என் மகனே” என்றார் வரதராஜன்.
“அப்போ என்ன எந்த வேலையும் பார்க்காம சாப்பிட்டு, டீவியை பார்த்துகிட்டு, தூங்குறேன்னு சொல்லுறியா?” கண்ணைக் கசக்கினாள் அன்னம்.
“நீ என்ன பண்ணுறியோ அது உன் இஷ்டம். அது போல அனு படிக்கிறது அவ இஷ்டம்” அனுவின் கணவனாகவே மாறி பேசினான் இனியன்  
“அவளை எதுக்காக உனக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்னா” மீண்டும் ஆரம்பிக்க,
“இங்க பாருமா… என் பொண்டாட்டி ஆசைய நிறைவேத்துறது என் கடமை அதுல குறுக்கால வராத. சரியா” அன்னையின் கன்னம் கிள்ளி சமாதானப்படுத்தினான்.
“போ போய் உன் பொண்டாட்டிய சமாதானப்படுத்து முகத்தை தூக்கிவச்சிகிட்டு நிக்கிறா” பழைய இனியன் திரும்பிய மனமகிழ்வில் அன்னமும் அனுபமா படிப்பை தொடர்வதற்கு ஒத்துக்கொண்டாள்.
“இன்னைக்கே நான் காலேஜ் பார்ம் பில் பண்ணுகிறேன்” சீட்டியடித்தவாறு இனியன் அறைக்கு சென்றான்.
“பாத்தியாடி நம்ம புள்ளைய, எப்படி பிடிவாதமா இருந்தான். கல்யாணமானதும் பெட்டிப்பாம்பா அடங்கிட்டான்”
“உங்கள மாதிரியே பொண்டாட்டி தாசனாகிட்டான்னு சொல்லுங்க”
அனுபமாவும் இனியனும் சந்தோசமாகவும், புரிதலோடும் வாழ்வார்கள் என்று இவர்கள் நினைக்க அவனோ இவர்களின் சிந்தனைக்கு மேலாக இருந்தான்.
அனுபமா படித்தால் என்ன? படிக்கா விட்டால் அவனுக்கென்ன? அவள் யாரோ எவளோ. இனியனின் ஒரே நோக்கம் வரதராஜனின் கருத்துக்கு மாற்றுக் கருத்து கூறாமல் அவருடைய கருத்தையே ஏற்று நாடகமாடி நாட்டை விட்டு செல்வதில் இருந்தது.
அவன் விசாரித்தவரையில் ஜான்சி இன்னும் அவர் கண்காணிப்பில்தான் இருக்கிறாள். அவர் இவனை நம்பினால் தான் அவளை விட்டு விடுவார். விட்டால் தானே அவள் வெளிநாடு செல்ல முடியும். அவள் சென்றால் தானே இவன் செல்ல முடியும்.
இனியனின் ஒவ்வொரு பேச்சிலும், செயலிலும் சுயநலம் மிகுந்திருக்க, அறைக்கு வந்தவன் அனுபமாவை பாராமலையே கணணியை உயிர்ப்பித்து அதை குடைந்தவன் “பி.எட் படிக்க வேண்டும் என்று அப்பா கிட்ட சொன்னியா? இந்த பார்ம் பில் பண்ணிக்க, வீட்டுல இருந்து அஞ்சி கிலோமீட்டற்குள்ளேதான் காலேஜ்” என்று விட்டு குளியலறைக்குள் நுழைந்தான்.
ஆனந்த அதிர்ச்சியடைந்த அனுபமாவோ கல்லூரிக்கு செல்லும் ஆவலில் எதையும் சிந்திக்காமல் படிவத்தை நிரப்பி அனுப்பி விட்டாள்.
“என் கூட வண்டில ஒண்ணா காலேஜ் போகலாம் என்று கனவு கண்டு கிட்டு இருப்பா. நான் யாரு இனியன். அவளை அண்ட விடுவேனா?” துவாலைக்குழாய் நீர் மேனியில் வழிய உள்ளுக்குள் சிரிக்கலானான் இனியன்.
அவனுடைய ஆபீஸ் கிழக்குப் பக்கம் இருந்தால் வேண்டுமென்றே மேற்கு பக்கமுள்ள காலேஜில்தான் அனுபமாவை சேர்த்திருந்தான். காலேஜ் செல்வதை சாக்காக வைத்து அவள் அவனோடு வண்டியில் வரக் கூடும். அவ்வாறு வரும் பொழுது அனுபமா அவனை மயக்க ஏதேதோ செய்வது போல் கற்பனை பண்ணிப் பார்த்தவன் தலையை உலுக்கிக் கொண்டு “நீ நினைப்பது எதுவுமே நடக்காது” என்று கருவிக்கொண்டான்.
ஆனால் அறையில் அனுபமாவோ தான் கல்லூரி செல்லப் போகும் மகிழ்ச்சியான செய்தியை அலைபேசி வழியாக வீட்டாரோடு பகிர்ந்துக் கொண்டிருந்தாள்.
கணி ராஜசேகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையமொன்றில் துணை ஆய்வாளராக பணியில் அமர்த்தப்பட்டிருந்தான். ஆளும் கட்ச்சியில் தங்களுடைய சொந்தக்காரரான மாணிக்கவேல் இருக்கும் பொழுது அவனை வரதராஜனுக்கு வேண்டியதை போல் வீட்டுக்கு அருகே உள்ள காவல்நிலையத்தில்தான் பணியில் அமர்த்தியுமிருந்தார்.
அன்னத்தை பார்க்கும் சாக்கில் கணியை பார்க்கலாம் என்று வந்திருந்த செம்பகவள்ளி இதையறிந்து அன்னத்தை மேலும் குழப்பி விட்டாள்.
“என்ன அத்த சொல்லுறீங்க? காலேஜ் போக போறாலாமா? பொண்ணுங்க என்னதான் படிச்சாலும் வீட்டோட புருஷன பார்த்துகிட்டு புள்ளைய பெத்து போட்டு இருந்தா பத்தாதா? ஆமா காலேஜ் படிப்பை முடிச்சிட்டதா இல்ல சொன்னாங்க”
“ஆமாண்டி அது என்னமோ மேல்படிப்பு அது இது என்று இனியன் சொன்னான்” என்றாள் அன்னம்.
“கல்யாணமான கையோட உங்க மூத்தமகன பொண்டாட்டி முந்தானைல முடிஞ்சி வச்சுக்கிட்டா போலயே. உங்க விருப்பப்படி மருமக கொண்டு வந்தது நீங்க சொல்லுறத கேக்கணும் என்றுதானே. அவ இஷ்டத்துக்கு பண்ணிக்கிட்டு இருக்கா” தன்னுடைய அத்தை கல்யாணத்துக்கு முன்பு புலம்பிய புலம்பல்களைத் தான் இன்று வள்ளி கூறிக் கொண்டிருந்தாள். 
எங்கே இனியன் ஜான்சியை தேடி சென்று விடுவானோ என்று அச்சப்பட்டுக் கொண்டிருந்த அன்னத்தின் மனதில் இனியனை அனுபமா தலையணை மந்திரம் ஓதி, மயக்கி தன் கைக்குள் வைத்திருக்கிறாள் என்பது போல் பேச கலவரமடைந்தாள் அன்னம்.  
முதல் பணி எங்கோ ஒரு ஊரில் கிடைக்கும். அது ஊராக இருந்தால் நல்லது என்று எண்ணிக் கொண்டிருந்தவனை உனக்கு நல்லது செய்கிறேன் என்ற பெயரில் தனக்கு விருப்பம் போல் வேலையும் பார்க்க விடாது வீட்டுக்கு அருகே பணி நியமனம் செய்திருந்தது கணிக்கு கோபத்தை தூண்டியிருக்க, கடுப்பாக வீடு வந்தவன் செம்பகவள்ளி உள்ளே வருவதைக் கண்டு உள்ளே செல்லாமல் வாயில் தாமதமானான்.
“இவ ஒருத்தி இவளுக்கு பயந்துகிட்டு சொந்த வீட்டுக்குள்ள போகாம இருக்க முடியுமா?” பொறுமியவாறே உள்ளே நுழைந்தவனின் காதில் அவளின் வார்த்தைகள் விழ, கொதித்தான்.
“ஆமாம்மா பார்த்து உன் சின்ன மருமக வந்தாலும் உன் சின்ன மகன முந்தானைய முடிஞ்சி வச்சிக்க போறா. ஏன்னா அவன் ஒரு ரூபா காசு பாறேன்” நக்கலாக கூறியவாறே உள்ளே வந்தவன் வள்ளியின் தலையில் கொட்டினான்.
செம்பகவள்ளியை முயன்றமட்டும் முறைத்து விட்டு “அண்ணனுக்கு கல்யாணமான அன்னைல இருந்து புலம்பிகிட்டு இருந்த. இப்போ அவன் அண்ணிக்காக பேசுறான், செய்கிறான் என்று புலம்புற. இப்படியே போனா உனக்கு பி.பி எகிறும். இவ சொல்லுறதெல்லாம் தலைல ஏதிக்காம ப்ரீயா விடு. இப்போ போய் எனக்கு டீ போட்டு எடுத்துட்டு வா” என்று அன்னத்தை அனுப்பி வைத்தான்.
கணியின் தன்னை திட்டியதெல்லாம் எல்லாம் செம்பகவள்ளியின் காதில் விழவே இல்லை. அவன் உள்ளே வந்ததிலிருந்து அவனை ரசித்துக் கொண்டிருந்தவள் அன்னம் உள்ளே சென்றதும் “அத்தான் உங்களுக்கு நான் அல்வா கொண்டு வந்தேன். உங்களுக்கு பாதாம் ரொம்ப பிடிக்குமில்ல. நிறைய போட்டு கொண்டு வந்தேன்” என்று ஒரு கிண்ணத்தை நீட்ட
“நான் அல்வா எல்லாம் சாப்பிட மாட்டேன். அதுவும் பாதாம் போட்ட அல்வானா எனக்கு அலர்ஜி” என்று விட்டு அவனது அறைக்குள் ஓடியே விட்டான்.
“இது எப்போ? சின்ன வயசுல அத்தானுக்கு பாதம் அல்வானா ரொம்ப பிடிக்குமே” குழம்பியவாறு நின்றாள் செம்பகவள்ளி.
அன்னத்திடம் கொடுத்திருந்தால் அன்னம் அதை அவனிடம் கொடுத்திருப்பாள். கனியும் ரசிச்சு, ருசிச்சு சாப்பிட்டிருந்திருப்பான். தான் ஆசையாசையாக கொண்டு வந்ததை அத்தானுக்கு ஊட்டி விடும் கனவோடு வந்த வள்ளியின் எண்ணத்தில் எண்ணையை ஊற்றி வழுக்கி விழ வைத்திருந்தான் கணிமொழியான்.
தனது அத்தையிடமாவது அன்புள்ள அத்தானுக்கு ஏன் இப்பொழுது அல்வா பிடிப்பதில்லையென்று கேட்டிருந்தால் கணி கூறியது பொய்யென்று வள்ளி அறிந்துக் கொண்டிருப்பாள். கணியை பார்த்தாலே அவளுக்கு ஒரு மயக்கம். அதுவும் இன்று காகிச்சட்டையில் வேறு இருந்தானே. அவன் திட்டியதே காதில் விழ வில்லை. கூறிய பொய்யை ஆராயவா தோன்றியிருக்கும். கணிக்கு வேலை கிடைத்தாயிற்று, இனியனுக்கும் கணிக்கும் ஒரு வருடங்கள் தானே வயது வித்தியாசம். தந்தையிடம் பேசி சீக்கிரமே தங்களது திருமணத்தை நடாத்த வேண்டுமென்ற மகிழ்வோடு வீடு சென்றாள் வள்ளி. 
ஒருவாரகாலமாக அனுபமா கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்தாள். இனியனோடு அவன் வண்டியிலையே காலேஜ் சென்று வரலாம் என்று வரதராஜன் பேச “என் ஆபீஸ் எங்க இருக்கு? அவ காலேஜ் எங்க இருக்கு? ஏதாவது ஆட்டோ ஏற்பாடு பண்ணி கொடுங்க” என்றான் இனியன்.
இதோ அவன் நினைத்தது போல் தான் காலேஜுக்கு அவளை அவனோடு அனுப்பி வைக்க முனைகிறார்கள். எவ்வளவுதான் கோபத்தை அடக்குவது. முகத்தை சாதாரணமாக வைத்திருந்தாலும் வார்த்தைகளில் கோபம் வெளிப்படத்தான் செய்திருந்தது.
“என்ன சொல்லுற? எந்த காலேஜுல மருமகளை சேர்த்து விட்ட?” மகனை அவர் சந்தேகமாக ஏறிட
“ஊருல இருந்து என் ஸ்கூட்டியை அப்பா அனுப்பி வைக்கிறேன்னு சொன்னார் மாமா நான் ஸ்கூட்டிலையே போய் வரேன். வீட்டு பக்கத்துலதானே காலேஜ் இருக்கு” என்றாள் அனுபமா.
அவள் கூறியதை வைத்து அன்னத்துக்கு அவள் கல்லூரி செல்வதில் விருப்பமில்லாததால் வீட்டுப்பக்கத்தில் இருக்கும் காலேஜில் சேர்ந்தால் காலேஜ் விட்ட உடன் வீட்டுக்கு வந்து விடலாம். அதுவும் கணவனையோ அவன் வீட்டாரையோ தொந்தரவு செய்யாமல் தந்தையிடம் கூறி ஸ்கூட்டியையும் வரவழைத்து விட்டால் வண்டிக்கு காத்திருக்காமல் சென்று வரலாமென்று அனுபமா முடிவு செய்ததாக நினைத்தார் வரதராஜன். 
தன்னோடு தன் மனைவி வராமல் இவ்வாறு செய்து விட்டாலே என்ற கோபம்தான் இனியனுக்குள் கணருவதாக வேறு நினைத்தார்.
ஜான்சியை கண்காணிப்பில் வைத்திருப்பவருக்கு தெரியாதா? மகன் இன்னும் தொடர்பில் இருக்கிறானா இல்லையா என்று? அவள் தந்தையோடு அமெரிக்காவில் குடிபெயர்வதாக தகவல்.
அதை அவர் மிரட்டியே செய்வித்திருக்கக் முடியும்.
நேரடியாக மிரட்டாமல் இனியனின் பக்கம் திரும்பக் கூடாதென்று பலவழிகளில் இன்னல்களைக் கொடுத்து அவனை விட்டு விலகி வெளிநாடு சென்று விடலாம் என்ற எண்ணத்தை தோற்றுவித்திருந்தார்.
அதுதான் இனியனுக்கும் தேவையாக இருந்தது. தான் அழைத்து வராத ஜான்சி வரதராஜனின் உந்துதலால் தந்தையோடு நாட்டை விட்டே வெளியேற முடிவு செய்திருக்க, அவளை சந்தித்து சமாதானப்படுத்தி தானும் அவளோடு வந்து விடுவதாக கூறி அங்கு சென்று திருமணம் செய்துகொள்ளலாம் என்று சம்மதம் வாங்க அவளை அழைத்துக் கொண்டு பூங்காவுக்கு சென்றான்.
அங்கு வந்த அனுபமாவோ “இனியன்” என்று இவனை அழைத்து அவன் அப்பாவாகப் போகும் சந்தோசஷமான செய்தியை கூற, ஜான்சி அதிர்ச்சியடைந்ததைவிட பேரதிர்ச்சிக்கு உள்ளானான் இனிமொழியன்.

Advertisement