Advertisement

அத்தியாயம் 4
யாரோ கதவை பலமாக தட்ட சிரமப்பட்டு கண்விழித்தாள் அனுபமா. கட்டிலிலிருந்து கதவை திறக்க செல்லும் அந்த கணங்கள் நேற்றிரவு நடந்த அனைத்தும் கண்முன் வந்து நிற்க, அடுத்து என்ன நடக்கும்? என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் கதவை திறந்தால், அங்கே அன்னம் ஆராய்ச்சிப் பார்வையோடு நின்றிருந்தாள்.
“இனியன் எழுந்துட்டான். நான்தான் காபி போட்டுக் கொடுத்தேன். நீயும் சீக்கிரம் குளிச்சிட்டு வாம்மா” அன்னம் தன்மையாக கூறினாலும் “என் மகனே எழுந்து விட்டான் உனக்கென்ன தூக்கம் வேண்டி கெடக்கு” என்பது போல்தான் அவள் பார்வை இருந்தது. 
தலையை ஆட்டிய அனுபமா கதவை சாத்தி விட்டு குளியலறையை நோக்கி நடந்தாள்.
இனியன் அறையில் இருக்கின்றானா என்று கூட அனுபமா பார்க்கவில்லை. எங்கு சென்றிருப்பான் என்று தேடவோ? சிந்திக்கவோ அனுபமாவின் உடம்பிலும் தெம்பில்லை. மூளையும் மரத்துப் போய் இருந்தது. அன்னம் கூறிய பின்தான் அவன் அறையிலையே இல்லை என்பது அவளுக்குப் புரிந்தது.    
அனுபமாவோ அன்று இனியன் பேசியத்தைக் கேட்க முடியாமல் போனதை எண்ணி வருந்தியதோடு, திருமணத்தை நிறுத்த முடியாமல் போனதையெண்ணி பெரிதும் வருந்தினாள்.
இவனோடு தன்னால் வாழத்தான் முடியுமா? நடந்த திருமணம் இல்லையென்று ஆகிவிடுமா? அந்த ஜான்சியை தேடித் போய் விடுவானா? போவதென்றால் திருமணத்துக்கு முன்பே போய் இருப்பானே. போக முடியாததால்தான் திருமணத்தை நிறுத்தக் கூறி என்னிடம் கேட்டிருக்கின்றான் என்ற எண்ணங்களில் சுழன்றவாறே தூங்கிப் போய் இருந்தாள்.
இனியன் குளியலறையிலிருந்து வந்ததோ இனியன் குளியலறைக்குள் புகுந்த நொடி அவசர அவசரமாக கட்டிய புடவை விலகியதால் தெரிந்த அவளது இடையை வெறுப்பாக பார்த்ததோ “என்னை மயக்கப் பார்க்கிறாயா?” என்று வசை பாடி விட்டு போர்வையை கொண்டு அவளை போர்த்தியதோ எதுவும் தெரியாமல் கதவை தட்டும்வரை நன்றாக தூங்கியிருந்தாள்.
ஏதேதோ கெட்ட கனவு வேறு அவளை இம்சிக்க, ஒழுங்கான தூக்கமும் கிட்டியிருக்கவில்லை. அன்னம் கதவை தட்டியதில் கண்விழித்தவளுக்கு அறையை பார்த்த கணமே நேற்றிரவு நடந்த அனைத்தும் ஞாபகத்தில் வந்திருந்தது.
குளியறைக்குள் புகுந்தவளின் எண்ணமெல்லாம் இனியன் ஜான்சியை தேடி சென்று விடுவானோ என்பதில் இருக்க, இவன் போனாலும் பிரச்சினை. இருந்தாலும் பிரச்சினை என்றுதான் அவளுக்குத் தோன்றியது.
இருந்தால் ஜான்சியை மறக்க முடியாமல் தன்னை நேற்றிரவு போல் தினமும் வதைத்தால்? தன்னால் தாங்கத்தான் முடியுமா? உடம்பை வதைக்க வேண்டாம், வார்த்தைகளா வதைத்தால் சதா கண்ணீரோடு இவனோடு வாழத்தான் முடியுமா? ஒரேயறையில் எதிரிகளாக எத்தனை நாள் வாழ முடியும்?
இவன் இருப்பதை விட அந்த ஜான்சியோடு சென்று விடுவதே மேல் என்றெண்ணியவள் தந்தையின் முகம் ஞாபகத்தில் வரவே “எவ்வளவு ஆசையாசையாக திருமணம் செய்து வைத்தார். இப்படியொருவனை எனக்கு மாப்பிள்ளையாக பார்த்துவிட்டதை அறிந்துக் கொண்டால் அவர் நிலைமை என்னவாகும்?
“இல்லை அப்பா எந்த உண்மையையும் அறிந்துக்கொள்ளக் கூடாது. இவன் அந்த ஜான்சியை நினைக்கவே கூடாது. குறைந்தபட்சம் நீலுவின் திருமணம் நிகழும் வரையிலாவது நான் அவனோடு வாழ்ந்தாகணும்” அவனால் திருமணத்தை நிறுத்த முடியாமல் போனதற்கு காரணம் இருந்ததை போல் இந்த திருமணத்திலிருந்தும் விலகிச் செல்ல முடியாது. அதனால் ஜான்சியை தேடி ஓட மாட்டான் என்று எண்ணினாள். அப்படிச் செல்ல அவன் வீட்டார்தான் விட்டு விடுவார்களா? அந்த கோபத்தையும் தன் மீதுதான் காட்டுவான் தன் குடும்பத்தாருக்காக இனியனை பொறுத்துப்போக முடிவு செய்தாள் அனுபமா.
வேறொருத்தியை காதலிப்பவன், மனதில் சுமப்பவன் என்று அறிந்த பொழுதும் திருமணம் என்று ஒன்று நிகழ்ந்த பின் தனக்காக சிந்திக்காமல் தன் குடும்பத்தாரை நினைத்து அனுபமாவை போல் முடிவெடுக்கும் பெண்கள்தான் இவ்வுலகில் அதிகம்.
இதுவே அனுபமா வேறொருவனை நேசித்திருந்தால்?
அவளை இனியனுக்கு கட்டாயத்திருமணம் செய்து வைத்திருந்தால்?
முதலிரவில் அவளது காதல் விவகாரம் அறிந்தால் இனியனின் முடிவு என்னவாக இருந்திருக்கும்?
சுயநலமாக சிந்திக்கும் இனியன் அவளை விரும்பி திருமணம் செய்திருந்தால் அவளோடு வலுக்கட்டாயமாக குடும்பம் நடாத்தியிருப்பான். பிடிக்காமல் திருமணம் செய்திருந்தால் குடும்பத்தாரை அழைத்து அனுபமாவை விவாகரத்து செய்திருப்பான்.  
அனுபமாவின் உணர்வுகளை புரிந்துகொள்ளக் கூடிய இனியனாக இருந்தால் அவளை அவள் காதலிக்கும் காதலனோடு சேர்த்து வைக்க யோசிப்பான். அதுவும் அவன் நல்லவனா? என்று தேடிப்பார்த்து விட்டு.
அவளை நேசிப்பவனாக இருந்தால் அவள் மனதில் இடம் பிடித்து அவளோடு வாழ முயற்சி செய்வான்.
விரல் விட்டு எண்ணக் கூடிய ஆண்கள் மட்டுமே மனைவியை பற்றி சிந்தித்து முடிவெடுப்பார்கள்.
தன் குடும்பத்தை எண்ணி, கூடம்பிறந்தவர்களை பற்றி சிந்தித்துப் பார்த்து முடிவெடுக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். தன்னுடைய ஜாதிக்காக, மதத்துக்காக, இனத்துக்காக என்றெல்லாம் காரணம் கூறுவார்கள் ஒழிய பாசத்துக்காக என்ற காரணத்தை முன் வைக்க மாட்டார்கள்.
அனுபமா கூட சுயநலமாக குடும்பத்துக்காக முடிவெடுத்தவள்தான். அந்த முடிவில் இனியன் வார்த்தைகளால் வதைத்தாலும் தான் மெழுகாய் உருகி மற்றவர்களுக்கு வெளிச்சமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள்.
இனியனின் காதல் விவகாரத்தை அறிந்த நொடி அதை அவள் தந்தையிடம் கூறி விவாகரத்துக் கூறியிருந்தால் அவளை யாரும் தைரியமான பெண் என்று புகழ்ந்திருக்க மாட்டார்கள். மாறாக அவளுக்கு புத்திமதிகளைக் அள்ளி வழங்கி இனியனோடு வாழ சொல்லியிருப்பார்கள். அதற்கு ஏதுவாக கூடப் பிறந்த நிலுபமாவும் இருக்க, பேசிப் பேசியே அனுபமாவின் மனதை மாற்றி விடக் கூடும். அவள் தன் முடிவில் உறுதியாக இருந்திருந்தால் அவளை வாழத் தெரியாதவள் என்றும். பிடிவாதக்காரி, முன்கோபி என்று தூற்ற ஆரம்பித்து வாழாவெட்டி என்ற பட்டத்தையும் கொடுத்து விடுவார்கள்.
ஆனால் அனுபமா இனியனோடு வாழ வேண்டும் என்று சுயநலமாக இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கு காரணம் குடும்பத்தார் மீது வைத்த பாசம் மட்டுமே.  
இனியனை பற்றி கவலைக்கொள்ளாது இவள் குளித்து விட்டு புதுமணப்பெண்ணுக்குண்டான ஒப்பனையோடு அறையை விட்டு வெளியே வர இனியன் வாசலில் அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
கணவன் மனைவியை விட முன்னதாக எழுந்து சென்றால் அது விடியற்காலையாகவே இருந்தாலும் மாமியார் வீட்டில் மருமகளை எப்படிப் பார்ப்பார்களோ அப்படித்தான் அங்கிருந்த சிலர் பார்களாயினர்.
“என் பையனே எந்திரிச்சு வந்துட்டான். வீட்டுக்கு வந்தவ இன்னும் தூங்கிகிட்டு” முணுமுணுப்போடு வேலைகளை பார்த்திருந்த அன்னம் அனுபமாவை பார்த்ததும் காபி சாப்பிடுகிறாயா என்று கேட்டிருக்க, அவளோ தானே போட்டுக்கொள்வதாக கூறி சமயலறைக்குள் புகுந்திருந்தாள்.
  
நேற்றிரவு இருவருக்குள்ளும் என்ன நடந்தது என்று அன்னத்துக்கு தெரியாது. மகன் இருக்கும் மனநிலையில் நேற்று நடந்ததை அன்னம் கற்பனைக் கூட செய்து பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு ஏதுவாக இனியனும் அதிகாலையிலையே எழுந்து வந்து காபி கேட்டிருந்தான்.
அன்னைதான் முணுமுணுக்கிறாள் என்றால் இவனாவது அனுபமா தூங்கட்டும், புது இடம் நேரம் சென்று தூங்கியிருப்பாள் அல்லது நேற்று முழுவதும் சடங்கு சம்பர்தாயம் என்று படுத்தியதால் டயட்டில் தூங்கிக் கொண்டிருப்பாள் அவளாக எழுந்து வரட்டும் என்று அன்னையிடம் மனைவிக்காக பேசியிருக்க வேண்டும். நீயாச்சு உன் மருமகளாச்சு என்பதை போல் இனியன் காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தான்.
அன்னத்தின் முணுமுணுப்பும் அனுபமாவின் காதில் விழுந்தது. இனியனின் செய்கையும் கண்களில் விழத்தான் செய்தது. தான் இந்த வீட்டு மருமகள் மாமியார் காபி போட்டு கொடுக்கும் வரையில் காத்திருக்க வேண்டுமா? என்றுதான் காபி போடச் சென்றாள்.
“நீங்க சாப்பிட்டீங்களா அத்த?” பின்னாலையே வந்த அன்னத்திடம் கேட்க,
“இனியன் எந்திரிச்சு வந்து என்ன எழுப்பி காபி கேட்டான். இனிமேல் அவனுக்கு முன்னதா நீ எழுந்து அவனுக்கு காபி போடு. அவனுக்கு போடும் போது நான் குடிச்சேன்”
திருமணமாகி முதல் நாள். தாங்கள் இருப்பதும் ஊரிலுள்ள சொந்தக்கார ஒருவரின் வீட்டில் என்றும் பாராமல் மருமகளுக்கு பாடம் நடாத்தினாள் அன்னம்.
இனியனின் திருமணம் அவனுடைய விருப்பத்தோடு நடந்திருந்தால் மருமகளை அன்னம் இவ்வாறெல்லாம் விரட்டியிருப்பாளோ என்னவோ? தங்கள் பேச்சை மீறி இனியன் ஜான்சியை திருமணம் செய்ய சென்றதிலிருந்து திருமணம் நிகழும் வரை சற்று பதட்டமாகவே இருந்த அன்னம் திருமணம் நடந்தேறிய பின்னும் இனியனை பத்து மாசம் சுமந்து பெத்த கடனுக்காக அதே பதட்டத்தோடு தான் இருந்தாள்.
திருமணமாகி முதல் நாளேவா? என்று மாமியாரை பார்த்த அனு, தன்னை எழுப்பி காபி போட சொன்னால் போட்டுக்கொடுத்திருக்க மாட்டேனா? எழுப்பாதது அவன் தவறு. முதலில் தன் கையால் காபி போட்டுக் கொடுத்தால் அவன் அதை வாங்கிச் சாப்பிடுவானா? அதை கூறப் பிடிக்காமல் “யார் யாருக்கு எப்படி காபி போடணும் என்று சொன்னீங்கன்னா நானே போடுறேன். காலை டிபனுக்கு என்ன பண்ணட்டும்?” என்று மாமியாரைக் கேட்டாள். 
திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஊரில்தான் இருப்பார்கள். மூன்று வேலையும் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள். காபி, டீ மட்டும்தான் வீட்டில் போட்டுக்கொள்கிறார்கள் என்று நன்கு அறிந்திருந்தாள் அனுபமா. இனியனின் வீட்டில் அன்னம்தான் சமைக்கிறாளா? சமையலுக்கு ஆள் வைத்திருக்கிறாளா? என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் கேள்வியை இவ்வாறு கேட்டிருந்தாள்.
“அதான் மூணு வேலையும் சமையலுக்கு ஆள் ஏற்பாடு பண்ணியாச்சே. வீட்டுல போலயே எனக்கு சமைக்கிற வேலையில்லை” என்றாள் அன்னம்.
ஆகா அவள் வீட்டில் சமையலுக்கு ஆள் இருக்கிறார் அனுபமா நிம்மதியாக படிக்க முடியும் என்று எண்ணியவளாக காபியோடு வாசலுக்கு வர உறவுக்கார பெண்ணொருத்தி அவளை இனியனின் முன் இருந்த இருக்கையில் அமர்த்தினாள்.
திருமணத்துக்கு வந்திருந்த சொந்தபந்தங்கள் அங்கங்கே தூங்கிக் கொண்டிருக்க, அவர்களை மிதித்து விடாமல் எவ்வாறு அப்பக்கம் செல்வது என்று முழித்துக் கொண்டிருந்தவளைத்தான் “இன்னும் என்ன புதுப் பொண்ணுக்கு வெக்கம் கணவன் பக்கத்துல உக்காருங்க” என்று அமர்த்தி விட்டு சென்றாள் அப்பெண்மணி.
“இவன் மூஞ்சில முழிக்கக் கூடாது என்று நினைத்தால் இப்படி பண்ணிட்டாங்களே. இதுக்கு என்ன சொல்ல போறானோ? எத்தனை நாள் ஓடி ஒழிய முடியும்? நைட்டுல ஒரே அறையில சந்திச்சுதானே ஆகணும்” என்று அனு நினைக்க,
அவள் அறையை விட்டு வெளியே வந்ததிலிருந்து இனியனும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். நேற்றிரவு நடந்தது எதையும் பொருட்படுத்தாது புதுமனைவிக்குண்டான சர்வாலங்காரத்தோடு குளித்து விட்டு வந்தவள் கொஞ்சம் கூட பதட்டமோ, கவலையோ இல்லாமல் தன்னுடைய சொந்த வீடு போல் சமயலறைக்குள் சென்றதையும், அவன் முன்னால் அமர்ந்து இதோ இப்பொழுது காபியை அருந்துகிறாள்.
அவளை பார்க்கும் பொழுது உள்ளுக்குள் கனன்ற நெருப்பை அடக்க முடியாமல் “என்ன இப்படி மினிக்கிக் கிட்டு என் முன்னாடி வந்து நின்னா உன்ன பார்த்து மயங்கிடுவேன்னு நினைச்சியா?” வார்த்தையை கடித்துத் துப்பினான் இனியன்.
“பெயர்தான் இனிமொழியன் ஆனால் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் எல்லாமே விஷம்” என்றெண்ணியவாறே அவனை ஏறிட்டாள் அவன் மனையாள்.    
அவனிடமிருந்து அவள் இதை தவிர வேறு எதை எதிர்பார்ப்பாள். தன்னை பார்க்கும் பொழுதெல்லாம் இந்த மாதிரியான வார்த்தைகளை உபயோகிப்பான் என்று தெரியும். அவன் அலைபேசி அழைப்பு விடுத்து ஜான்சியை காதலித்ததை கூறியதை தான் கேட்கவில்லையென்று கூறினால் நிச்சயமாக நம்பமாட்டான் என்று புரிய எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.
“ரெண்டு பேரும் கோவிலுக்கு போயிட்டு வாங்கனு சொல்லணும். அப்பா என்னடான்னா குலதெய்வ கோவிலுக்கு போய் பூஜை செய்யலாம்னு சொல்லிட்டாரு. அனு தயாராகி வந்துட்டா இனியா நீயும் போய் ரெடியாகிட்டு வா நான் அப்பாவையும், கணியையும் எழுப்புறேன்” என்றவாறு அங்கே வந்தாள் அன்னம்.  
“ஓஹ்… இவ கோவிலுக்கு போகத்தான் ரெடியாகி நிக்கிறாளா? அதையாவது வாயை தொறந்து சொல்லுறாளா? பாரு கொழுக்கட்டையை முழுங்கினவ. நான் அவளை திட்டனும். அவ அமைதியா அப்பாவியா நிக்கணும். அடப்பாவம்ன்னு நான் சொல்லணும். அவ மேல ஒரு சொப்ட் காணார் உருவாக்கணும் இதுதான் இவ திட்டம். அதெல்லாம் இந்த இனியன் கிட்ட நடக்காதுடி” அனுபமாவை ஒரு பார்வை பார்த்தவன் அன்னம் கூறியதையும் மறுக்கவில்லை. ஊரிலுள்ள வேலைகளை சீக்கிரம் முடித்துக் கொண்டு சென்னைக்கு சென்றால் தானே அவனுக்கு நிம்மதி. இனியன் அமைதியாக அறைக்குள் செல்ல
“நீயென்ன மசமசன்னு நிக்கிற? காபி குடிச்சது போதும். போய் அவனுக்கு துண்டையும் பட்டு வேட்டி சட்டையையும் எடுத்துக்கொடு” மருமகளை அன்னம் விரட்ட, அனுபமா இருக்கையை விட்டு எழுந்துகொள்ளாது இனியனை நன்றாகப் பார்த்தாள்.
மாமியார் விரட்டுகிறாளென்று அவன் பின்னால் சென்றால் வாங்கிக் கட்டிக்கொள்ள நேரிடும் என்று அவளுக்குத் தெரியாதா?
“ஏன் இதுக்கு முன்னால துண்டையும், துணியையும் நீயா எடுத்துக் கொடுத்த? நானாகத்தான் எடுத்துக் கொண்டு குளிக்கப் போனேன். புதுசா ஒருத்தி வந்தா இல்லாத வேலையையும் சொல்லுவியா?” அன்னையை முறைத்தான் இனியன்.
அவன் சொன்னது என்னமோ உண்மைதான். வளர்ந்த பின் அன்னத்தை தலையை துவட்டக் கூட விடமாட்டான். வளர்ந்து விட்டதாக கூறி தானே தன்னுடைய வேலைகளை செய்து கொண்டான். அனுபமாவை பிடிக்காதவன் இந்த இடத்தில் அன்னைக்கு சாதகமாக அல்லவா பேசியிருக்க வேண்டும்? ஆனால் அவள் இன்று அவனது வாழ்க்கையில் இருக்கக் காரணமே அன்னம் தானே. இவ்வாறு பேசி பிடிக்காத அனுபமா அவன் பின்னால் வருவதை தடுத்தாயிற்று. ஜான்சியை திருமணம் செய்யாமல் தடுத்த அன்னையையும் பேசியாயிற்று. மனதில் நிம்மதி பரவ அவன் உள்ளே சென்றான்.
“அவன் அப்படித்தான் சொல்வான். உன் புருஷன நீதான் கவனிச்சிக்கணும். சின்ன சின்ன விசயத்துல கூட” மருமகளை முறைத்து விட்டு சென்றாள் அன்னம்.
ஆகா மொத்தத்தில் இனியனை முந்தானையில் முடிந்து வைத்துக்கொள் என்று மாமியார் கூறாமல் கூறுவதை புரிந்துக் கொண்டாள் அனுபமா.
எந்த மாமியாரும் மருமகளுக்கு கூறாத அறிவுரைதான். எங்கே மருமகள் மகனை தன்னிடமிருந்து பிரித்து விடுவாளோ என்ற அச்சம் சிறிதுமில்லாமல் அன்னம் பேசியது இனியனின் மனதில் இன்னொருத்தி இருப்பதினால் தான் என்று அனுவுக்கு புரியாமலில்லை.      
அவனுடைய சந்தோஷத்தையும் தொலைத்து தன்னுடைய நிம்மதியையும் இழந்த இந்த திருமணம் தேவைதானா? அதற்கு இவர்கள் அவனை அந்த ஜான்சிக்கே திருமணம் செய்து வைத்திருக்கலாம். “ஜான்சி… ஆம் பெயரை பார்த்தால் வேற்று மதத்துப் பெண் போல் தெரிகிறது அதுதான் பிரச்சினை போலும். இவனுக்கும் உலகத்தில் பெண்ணே கிடைக்காதது போல் அந்த பெண்ணை போய் காதலித்திருக்கிறான்” இனியனை மனதுக்குள் வசை பாடியவள் வரதராஜன் எழுந்து வரும் சத்தம் கேட்கவும் சமயலறைக்குள் புகுந்து கொண்டாள். 
குலதெய்வ கோவில் ஊருக்குள்ளேயே இருப்பதினால் நடந்து செல்லும் தூரம்தான். பொங்கல் வைக்க வேண்டும் என்பதினால் அதற்கு தேவையான பொருட்களை வண்டியில் ஏற்றி, இனியனும், கணியும் கோவிலுக்கு சென்றிருக்க, அனுபமாவோடு மற்றவர்கள் நடந்து கோவிலையடைந்தனர்.
அங்கு சென்றால் அவளுடைய குடும்பத்தாரும், சொந்தபந்தங்கள் என்று அனைவருமே கூடியிருந்தனர். 
பெற்றோரையும் தங்கையையும் கண்டவுடன் எல்லாவற்றையும் மறந்து தாவி சென்றவள் நலம் விசாரிக்கலானாள்.
வடிவேலும் மகளை பிரிந்து இருந்ததேயில்லை. ஒருநாள் இரவு பிரிந்திருந்ததற்கே அதிகாலையில் மனைவியை விரட்டி கோவிலுக்கு மகளை பார்க்க வந்திருந்தவரும் யாரையும் கண்டுகொள்ளாது மகளோடு ஐக்கியமாகியிருந்தார்.
பெண்கள் அனைவரும் செங்கல்லை அடுப்பாக வைத்து பொங்கல் வைப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்க, பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த இனியனின் கண்ணில் இக்காட்ச்சி பட்டது.
“ஓஹ்… இங்கயும் அப்பா பொண்ணு பாசமலர் படம்தான் ஓடுதா…” ஏற்கனவே ராஜகோபால் மற்றும் செம்பகவள்ளியின் மீது வெறுப்பில் இருந்தவனுக்கு இவர்களை பார்த்ததும் வெறுப்புதான் தலைத் தூக்கியது.
“போதுங்க பொண்ண பல மாசம் பிரிஞ்சா மாதிரி பண்ணாதீங்க. அனு போ போய் கோலம் போடு” கோகிலவாணி விரட்ட அக்காவும் தங்கையும் அந்த இடத்தை கூட்டி அழகான கலர் கோலமிட ஆரம்பித்தனர்.
“இதெல்லாம் கூட தெரியுமா?” என்றவாறு அங்கு வந்து நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் கணிமொழியன்.
அவன் கேள்வி என்னமோ நிலுபமாவுக்காக இருக்க, பார்வையை அக்கா, தங்கை இருவர் மீதும்தான் செலுத்தினான்.
“அத்தான் இங்க என்ன பண்ணுற?” பெண்கள் இருவரையும் செம்பகவள்ளி முறைத்தவாறு வர, ஹரியும் அங்கு வந்து நின்று கொண்டான்.
கணியையை நேற்று மாலைதான் சந்தித்திருந்தான். அவன் இனியனின் தம்பியென்றும் தெரியும். அரசால் புரசலாக அவனுக்கு செம்பவள்ளியை பேசி முடித்து விட்டதாகவும் அறிந்திருந்தான். கணியின் பார்வை நிலுபமாவி மீது படிவதை பார்த்து ஒரு அண்ணனாக அவன் பார்வையில் அது தப்பாகத் தெரிய வந்தவன்
“நிலு பாப்பா அழுதுகிட்டு இருக்கானு அண்ணி அந்த பக்கம் இருக்கா நீ கொஞ்சம் போய் அண்ணிக்கு ஒத்தாசையா இருக்கிறியா?” என்று கூற,
“இல்ல கோலம்” என்று இழுத்தாள் நிலுபமா.
தன்னுடைய அத்தான் இங்கிருக்கும் பொழுது செம்பகவள்ளிக்கு வேறென்ன வேலை. “நீ போ நான் பாத்துக்கிறேன்” என்றதும் அக்காவை ஏறிட்டாள்.
அனுபமாவின் தலை அசைந்ததும் சிட்டாக பறந்தாள் நிலுபமா. தூரத்திலிருந்து இங்கே நடப்பதை இனியன் கவனித்திருந்தாலும் அங்கு ஹரி இருந்தமையால் இவர்களின் அருகில் வரவில்லை.
நிலுபமாவை சீண்டலாம் என்று வந்த கணியோ ஹரியின் அறுவையில் சிக்கி முழிபிதுங்கி எவ்வாறு தப்பிப்பது என்று யோசிக்க, அண்ணனைக் கண்டு “கூப்டியாண்ணா” என்றவாறே நழுவினான்.  
கோலம் போட்டு முடித்த பின் நடுவில் மூன்று கல்லை வைத்து பொங்கல் பானையை சாமியை வேண்டி வடிவேல் வைக்க, விறகின் மேலிருந்த சூடத்தை பற்ற வைத்தார் வரதராஜன்.
பால் பொங்கி வரவும் பெண்கள் குலவையிட ஆரம்பிக்க, இனியனும், கணியனும் ஒரு ஓரமாக அமர்ந்து பார்த்திருந்தனர்.
“ஊருன்னாவே விஷேஷம் தானில்லை. பேசாம இங்கயே செட்டில் ஆகிடலாம்ணு கூட தோணுது” இயற்கை காற்றை ஆழமாக சுவாசித்தவாறே கூறினான் கணி.
“என்ன இவன் இப்படி சொல்லுறான்? ஒருவேளை நிலுபமா மீது எண்ணத்தை வளர்த்துக் கொண்டானோ?”  இனியன் யோசனையில் விழுந்தான். நேற்று என்னமோ தம்பி செம்பகவள்ளியை திருமணம் செய்யாமல் வேறு யாரையாவது திருமணம் செய்தால் பரவாயில்லை என்ற முடிவில் இருந்தவன் அது அனுபமாவின் தங்கை நிலுபமாக இருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணியது என்னவோ உண்மைதான். 
நேற்று திருமணம் நடந்த பின்பும் சரி இரவு நடந்தவைகளை பின்பும் சரி அனுபமாவை விட்டுச் செல்வதில்லையே குறியாக இருப்பவன் தம்பி நிலுபமாவை திருமணம் செய்தால் தன் வாழ்வில் வேண்டாத பிரச்சினைகள் வரக் கூடும் என்று தம்பியை நிலுபமாவிடம் அண்ட விடக் கூடாது என்று முடிவெடுத்தான்.
“என்னடா பதிலக் காணோம்” அண்ணனின் புறம் திரும்பிய கணி இனியனின் பார்வை இருக்கும் திசையை பார்த்தவன் அங்கே அனுபமா நிற்பதைக் கண்டு “அது சரி புதுசா கல்யாணமானவன் காதுல நாம பேசுறது கேக்குமா? எல்லாமே வேஸ்ட்” என்று விட்டு சென்றான்.   
பொங்கல் வைத்து முடிந்ததும் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட, அனைவரும் அமைதியாக அமர்ந்து அபிஷேகத்தைப் பார்த்தவாறு கடவுளை வணங்கினார்கள்.
“போன பூஜையின் போது சிங்களாக இருந்த இந்த பூஜையில் மிங்களாயிட்ட கலக்குற அனு” நிலுபமா அக்காவை கிண்டல் செய்ய அது அவள் அருகில் நின்றிருந்த இனியனின் காதில் மாத்திரமன்றி அவன் பின்னால் நின்றிருந்த கணியின் காதிலும் விழுந்திருந்தது.
“அதுக்கென்ன அடுத்த வருஷம் வரும் போது நீயும் மிங்களா வா. ரொம்ப அவசரம்னா அடுத்த தடவ வரும் போது கூட வரலாம். நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று கேட்டு கண்சிமிட்டி புன்னகைக்க, நிலுபமா அவனை நன்றாகவே முறைத்தாள்.
அது ஒரு சாதாரண கிண்டல்தான் எங்கே “உன் தங்கை என் தம்பியை மயக்கப் பார்க்கிறாளா?” என்று கேட்டு இனியன் தன்னை முறைப்பானோ என்று அனுபமா அதிர்ந்து அவனை ஏறிட அவள் எண்ணியது போல் அவன் அவளைத்தான் முறைத்தான்.
“இல்லம்மா யாரையாவது லவ் பண்ணுறதாக இருந்தா சொல்லு கல்யாணத்துக்கு சாட்ச்சி கையெழுத்து போட ஆளு வேணாம் அத சொன்னேன்” என்றான் கணி.
“அட நீங்க வேற. எங்கப்பாவே அக்கா கிட்ட கேட்டாரே. எங்க இவ, நான் உங்க பொண்ணுப்பா. நீங்க பாக்குற மாப்புளைய கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டா. கூறுகெட்டவ. இவளால் நானும் நல்லவளா நடிக்க வேண்டியதாக இருக்கு” அலுத்துக்கொள்வது போல் கூறி சிரித்தாள்.
அதைக் கேட்டு “அப்போ இவளோட முழு சம்மத்தோடத்தான் கல்யாணம் நடந்திருக்கு. இவள…” அனுபமாவை முயன்றமட்டும் முறைத்தான் இனியன்.
“என்ன சிரிப்பு?” மூர்க்கு வேர்த்தது போல் கணியின் அருகில் வந்து நின்றாள் செம்பகவள்ளி.
“அடுத்து உங்க கல்யாணம் தானே அதான் சாமிய நல்லா வேண்டிக்க சொல்லி சொன்னேன். உங்க அத்தான் முகத்துல பல்பு எரியுது” என்றாள் நிலுபமா.
அதை கேட்டு செப்பகவள்ளியின் முகம் பிரகாசமானது.
“ஆமா, ஆமா நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே மேடைல ஜாம் ஜாம்மு கல்யாணம் நடக்கட்டும் வேண்டிக்க” என்றான் கணி.
அவன் நிலுபமாவுக்கு கூறினானா? அல்லது வள்ளிக்கு கூறினானா? எந்த அர்த்தத்தில் கூறினானோ அவனுக்கு மட்டுமே வெளிச்சம். தம்பியிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று எண்ணினான் இனியன்.
பூஜைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு மதிய உணவையும் அனைவரும் கோவிலில் அமர்ந்தே கதை பேசியவாறு உண்டு மகிழ்ந்தனர்.
இனியன் மிக மிக சாதாரண முகபாவனையோடு அனுபமாவின் வீட்டாரோடும், உறவினர்களோடும் பேசினான்.
அவன் செய்கை அனுபமாவுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் நிம்மதியையே கொடுத்தது. எங்கே தன்னிடம் எரிந்து விழுவதை போல் தன் குடும்பத்தாரிடமும், சொந்தபந்தங்களிடமும் எரிந்து விழுவானோ என்று அஞ்சினாள்.
என்னதான் தன் மீது எரிந்து விழுந்தாலும் கொஞ்சம் நாட்களில் ஜான்சியை மறந்து இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையும் வந்தது.
பாவம் அவள் அறிந்திருக்கவில்லை. அந்த ஜான்சியை அவன் தந்தை ஏதாவது செய்து விடுவாரோ என்றுதான் இனியன் அவள் குடும்பத்தாரிடம் இன்முகமாகவே நடந்துக்கொள்கிறானென்று. சந்தர்ப்பம் கிடைத்த உடன் அவளையும் அழைத்துக்கொண்டு இந்த நாட்டை விட்டே பறந்து செல்வதுதான் அவனது உறுதியான, இறுதியான திட்டம் என்றும் அனுபமாவுக்கு தெரியவில்லை. புரியவும் வாய்ப்பில்லை.

Advertisement