Advertisement

அத்தியாயம் 27
எந்த பதிலையும் கூறாமல் அனுபமா இனியனையே பார்த்திருந்தவள் கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள்.
வேக எட்டுக்களை வைத்து அவளை நெருங்கியவன் அவளை அணைத்துக் கொண்டு “ஷ்… அழாத அனு. ப்ளீஸ். என்ன மன்னிச்சுடு. உன்னையும் புரிஞ்சிக்காம, என் மனசையும் புரிஞ்சிக்காம நான் தான் முட்டாளா இவ்வளவு நாளும் இருந்துட்டேன்” என்றான்.
சட்டென்று அழுகையை நிறுத்தியவள் அவனிடமிருந்து திமிறி விலகி “இப்போ எதுக்கு நடிக்கிற? யாரை ஏமாத்த நடிக்கிற? ஜான்சியை கல்யாணம் பண்ணிக்க உங்கப்பாவை ஏமாத்த என் கிட்ட நல்ல புருஷனா நடிச்ச. திரும்ப நடிச்சி என் மனச உடைச்சிடாத. என்னால முடியல. செத்துடுவேன்” என்றவளை அதிர்ச்சியாக பார்த்தான் இனியன்.
இனியன் இதை யோசிக்கவேயில்லையே. அலைபேசி அழைப்பு விடுத்து திருமணத்தை நிறுத்துமாறு அனுபமாவிடம் இவன் கூற, அனு திருமணத்தை நிறுத்தாததினால் ஜான்சி தற்கொலை செய்ய முயன்றாள் என்ற கோபம் இனியனுக்குள் இருக்க, அனு மேல் எந்த தப்பும் இல்லையென்றதும் மன்னிப்பும் கேட்டான் தான்.
ஆனால் ஜான்சியை திருமணம் செய்யவென தந்தையை ஏமாற்ற அவன் நாடகமாடியதில் அனுபமாவின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்குமென்று அவன் கொஞ்சமாலும் சிந்தித்துப் பார்த்திருக்கவில்லையே.
அதனால் தான் அவள் மனதில் காதல் இருந்தும் அதை வெளிக்காட்டாமல் இருக்கின்றாள். 
எங்கே அவனிடம் கூறப் போய் அவளை கேளிச் செய்வானென்று மறைகின்றாளோ? ஏற்றுக்கொள்ளவே மாட்டான் என்று முடிவு செய்தாளோ?
அவளுக்கு அவ்வாறான எண்ணமெல்லாம் உருவாக தான் தான் காரணம். குழந்தைக்காக மட்டும்தான் உன்னோடு சேர்ந்து வாழ்வேன் என்றதில் அவள் என்னிடம் எந்த எதிர்பார்ப்பையும் வளர்த்துக் கொள்ளாமல் கூட இருந்திருப்பாள்.
நான் நடித்து ஏமாற்றியதில் இப்பொழுது நான் கூறியதைக் கூட நம்ப முடியாமல் தவிக்கின்றாள். இவள் நம்பிக்கையை எவ்வாறு பெறுவது?
இனியன் எதையுமே யோசிக்கவில்லை. சட்டென்று அனுபமாவை இழுத்து அணைத்தவன் அவள் இதழ்களை சிறையெடுத்தான். வேகம், வேகம், வேகம் மொத்த காதலையும் ஒரே முத்தத்தில் உணர்த்தும் வேகம் மட்டுமே இனியனிடம்  
அதிர்ந்த அனுபமா அவனிடமிருந்து விலக முனைய இனியன் விடுவதாக இல்லை. அவன் மார்பிலும், தோளிலும் அடித்தவளின் இதழ்களை விடுவித்தவன் இடையோடு தன் கைகளை கோர்த்துக் கொண்டான்.
“இப்போ தானே புரியுது நீ எதுக்கு அடி போடுற என்று? கேவலம் பொம்பள சுகத்துக்காக கட்டின பொண்டாட்டிகிட்டேயே நடிக்கிறியே உனக்கு வெக்கமாக இல்ல” கோபம், கோபம், கோபம் அனுபமாவின் உள்ளம் பற்றி எரிந்தது. கண்மண் தெரியாத கோபத்தில் இருந்தவளின் வார்த்தைகளும் அனலாய் தான் தகித்தது.
அனுபமா இவ்வாறு பேசக் கூடியவள் என்பதனால் இனியன் அதிர்ச்சியடையவில்லை. யுவராணி பிறந்த பின் அனுபமா அவனிடம் இவ்வாறெல்லாம் பேசியதே இல்லை. இவ்வளவு கீழ்த்தரமாக பேசுகின்றாளே என்று கோபமும் வரவில்லை.
கோபத்தில் அவள் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடும் பொறுமையை மட்டும் கைவிடக் கூடாது என்ற முடிவில் இருந்தவன் அவள் பேசியதைக் கேட்ட நொடி சத்தமாக சிரித்தான்.
“இப்போ தான் பொண்டாட்டி ஞாபகம் வந்திருச்சா என்று கேட்டிருந்தா அதுல ஒரு நியாயம் இருக்கு பொண்டாட்டி. பொம்பள சோக்கு தான் தேவைனா ஆயிரம் வழி இருக்கு. என்னென்ன வழின்னு நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்லையே” புருவம் உயரத்திப் பார்த்து கண் சிமிட்டி புன்னகைத்தான்.
அவனை நன்றாக அனுபமா முறைத்தாலும் அவன் சொல்வதில் உண்மையிருப்பதை புரிந்துக் கொண்டாள். இனியன் நினைத்திருந்தால் எதுவும் வேண்டாம் என்று எல்லாவற்றையும் விட்டு விட்டு அவன் விரும்பிய ஜான்சியோடு சென்று வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லையே. அப்படிப்பட்டவன் உடல் சுகத்துக்காக இன்னொரு பெண்ணை நிச்சயமாக நாடியிருக்க மாட்டான்.
“என்ன பொண்டாட்டி யோசிக்கிற?” இனியன் அவளை கிண்டலாக பார்த்து புன்னகைத்தான்.
“அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட” இவள் அவனை கிண்டல் செய்தாள்.  
“அடிப்பாவி கோபத்துலையும் என்ன வார கிடைச்ச சிக்ஸர் அடிக்கிறியே” புன்னகையிலையே இனியன் அனுபமாவை கொஞ்சிக் கொண்டிருக்க,
“முதல்ல என் மேல இருந்து கையை எடு” என்றாள் அனு.
“நான் எங்க உன்ன பிடிச்சிக்கிட்டு இருக்கேன். நான் என்னமோ உன்ன கட்டிப் பிடிச்சிக்கிட்டு போக விடாம இருக்குறது போல நீ தான் என்ன ஒட்டிக்கிட்டு நிக்கிற” என்றவனின் கைகளை இவள் பார்க்க அவன் கைகள் இரண்டும் அவன் பாண்ட் பாக்கட்டில் நுழைந்த்திருந்ததை பார்த்து அதிர்ந்தாள்.
“அடப்பாவி” ஏகத்துக்கும் அவனை முறைத்தவள் விலகி நின்றது மட்டுமல்லாது அறையை விட்டே செல்ல முயன்றாள்.
மீண்டும் அவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டவன் “ஏய் லூசு பொண்டாட்டி. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். அத உனக்கு எப்படி புரிய வைக்கிறது என்றுதான் தெரியல” என்றான்.
அனுபமா திமிரவுமில்லை. விட்டு விலக முயலவுமில்லை. “கல்யாணமாகி மூணு வருஷமாகப் போகுது. இப்போ என்ன புதுசா பொண்டாட்டிய புடிக்குது என்று வந்து நிக்குற? என்ன உன் லவ்வர் ஜான்சி அமெரிக்கால எவனையாச்சும் கல்யாணம் பண்ணி செட்டிலாகிட்டாளா? உன் வயிறு பத்தி எரியுதா? அதனாலதான் இந்த முடிவா?” ஆராச்சியில் இறங்கிய அவள் மனம் அவனை ஏற்றுக்கொள்ள கூறியிருந்தாலும் உள்ளம் நிறைந்த கோபம் சட்டென்று அவனை ஏற்றுக்கொள்ள விடாமல் பிடிவாதம் பிடிக்க, அமைதியான குரலில் கூறினாள்.  
அனுபமாவை அணைத்திருந்த கைகளை தளர்த்தி அவளை தன் புறம் திருப்பிய இனியன். “இங்க பாரு அனு. நான் ஜான்சியை காதலிச்சது உண்மை. அத மறைக்கவும் மாட்டேன். மறுக்கவும் மாட்டேன். கல்யாணம் ஆனா பிறகும் ஜான்சியோடு வாழனும் என்று முடிவு பண்ணதுக்கு பல காரணங்கள் இருக்கலாம். அதையும் தாண்டி உன் கூட வாழ காரணம் நம்ம குழந்தை தான் அதையும் இல்லனு சொல்லல.
உன் கூட வாழ ஆரம்பிச்ச பிறகுதான் உன்ன பத்தி புரிஞ்சிக்கவும், தெரிஞ்சிக்கவும் முடிஞ்சது. உன் மேல எனக்கிருந்த கோபத்தால் உன்ன நெருங்கி வர முயற்ச்சி செய்யல. உன் மேல எந்த தப்பும் இல்லனு தெரிஞ்ச பிறகும் என் மனச உனக்காக என்னால திறக்க முடியல. ஜான்சி மேல இருந்த காதலால் என் இதயம் தொலஞ்சுபோச்சு.
நீ என்ன நேசிச்சாலும் நான் உன்ன நடிச்சி ஏமாத்திட்டேன் என்ற கோபத்துல என்ன நெருங்கி வராம, வார்த்தையால வதக்கி கிட்டு விலகியே இருந்துட்ட, தொலஞ்சி போன என் இதயத்த மீட்டெடுக்க ஒரு தடவையாவது முயற்சி செஞ்சியா?” அவன் செய்தவைகளுக்கும் சேர்த்து அவளையே குற்றம் சாட்டினான்.
“உன் தொலஞ்சி போன இதயத்தை நான் மீட்டெடுக்கணுமா” கோபமாக அவனை முறைத்தாள் அனுபமா.
அவள் பேசியதை பொருட்படுத்தாது இனியன் பேசினான் “குழந்தைக்காக உன் கூட வாழனும் என்று வந்தாலும். உன் கூட இந்த வீட்டுல வாழ ஆரம்பிச்ச பிறகு நான் ஜான்சியை பத்தி நினச்சிக்க கூட பார்த்ததில்லை. ஏன்னா எந்த குறையுமில்லாம கண்டிப்பா அவ நல்லாத்தான் இருப்பா. அவளை பத்தி யோசிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. என் பொண்ண பத்திதான் யோசிச்சேன். என் பொண்டாட்டிய பத்தி யோசிச்சேன். என்ன லவ் பண்ண கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டேன். அவ தான் என்ன லவ் பண்ணுறா ஆனா சொல்ல மாட்டேங்குறா” அனுபமாவின் நெற்றியில் முட்டி நின்றவன் அவள் பதிலை எதிர் பார்த்து நின்றான்.
“ஆமா எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும். உன்ன விட உன் பெயரை பிடிக்கும். அப்பா உனக்கு மாப்புள பாத்திருக்குறேன். மாப்புள பேர் இனிமொழியன் என்று சொன்னப்போவே சரி என்று சொன்னேன். போட்டோ கூட நிச்சயதார்த்தம் நடந்த பிறகுதான் பார்த்தேன். உன்ன பிடிக்கும். காதலிக்கிறேனான்னு எனக்கு சொல்லாத தெரியல. ஆனா நீ ஜான்சியைத் தானே லவ் பண்ணுற. அது எப்படி? இப்போ என்ன லவ் பண்ணுறான்னு சொல்லுற? திரும்ப என் கிட்ட நடிச்சி என் கிட்ட இருந்து என்ன எதிர்பாக்குற? யுவாவ என் கிட்ட இருந்து பிரிக்க திட்டம் போடுறியா?” இனியன் என்ன பேசினாலும் அவனை நம்ப அனுபமா தயாராக இல்லை.
முதலிரவில் வெக்கப்பட்டு இனியனிடம் கூற வேண்டியதை நெஞ்சம் முழுக்க கொழுந்து விட்டு எரியும் தீப்பிழம்பாய் வைத்திருந்தவள் அனலாய் கக்கினாள்.
குழந்தைக்காகத்தான் சேர்ந்தே வாழலாம் என்றவன் அவளிடமிருந்து குழந்தையை பிரிக்க நினைப்பானா? கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று அனுபமா அனலைக் கக்கிக் கொண்டிருக்க, புன்னகைத்தவாறே இனியன் “ம்ம்… யுவாவ பிரிக்க எல்லாம் திட்டம் போடல. குட்டி யுவராஜ உனக்கு பரிசா கொடுக்கலாம் என்று தான் திட்டம் போடுறேன்” என்றான்.
முதன் முறையாக இனியனிடமிருந்து இப்படியொரு பேச்சைக் கேட்டதும் அனுபமாவின் முகம் செம்மை பூசிக்க கொள்ள, அவனை முறைக்க கூட முடியாமல் முகத்தை அவனிடமிருந்து மறைக்க திண்டாடினாள்.
“யுவாகு ரெண்டு வயசாகப்போகுது என்ன சொல்லுற பார்த்டே கிஃப்டா தம்பிப் பாப்பா கொடுத்துடலாமா?” ஹஸ்கி வாய்ஸில் இனியன் கேக்க கிறங்கும் மனதை இழுத்துப் பிடித்தாள் அனுபமா.
மின்னல் போல் தான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து விட்டது போன்ற காட்ச்சிகள் கண்ணுக்குள் வந்தது நிற்க, நடந்த நிகழ்வுகளும் வந்து நின்றது.
தலையசைத்து மறுத்தவள் “எனக்கு பயமா இருக்கு. எல்லாம் நடிப்பு என்று சொல்லிட்டீங்கன்னா என்னால, என்னால தாங்க முடியாது. இப்படியே இருந்துடலாம்” தொண்டையடைக்க கூறினாள்.
அவள் அச்சம் இனியனுக்கு நன்றாகவே புரிந்தது. “ஜான்சியை கல்யாணம் பண்ணத்தான் அப்போ நான் நடிச்சேன். இப்போவும் நான் நடிக்கிறேன் என்று ஏன் நினைக்கிற? அப்போ நான் ஜான்சியை லவ் பண்ணேன். இப்போ உன்னைத்தானே லவ் பண்ணுறேன்” அனுபமாவுக்கு புரிய வைக்க முயன்றான் இனியன். அவன் குரலும் கனிந்துதான் ஒலித்தது.
“சும்மா சும்மா லவ் பண்ணுறேன்னு சொல்லாதீங்க. கடுப்பாக இருக்கு” அனுபமாவின் நெஞ்சில் எரியும் தீ தண்ணீர் ஊற்றினால் அணையுமா? அது எரிமலை குழம்பல்லவா?
“ஏன்டி ஒருதடவை லவ் பண்ணவனுக்கு காதல் வராது என்று சட்டம் ஏதாவது இருக்கா என்ன? சரி நான் உன்ன லவ் பண்ணுறேன்னு சொல்லுறத தான் சந்தேகப்பட, பயப்படுற. நீ தான் என்ன லவ் பண்ணுறியே. எனக்கும் சேர்த்து நீயே லவ் பண்ணேன். நான் தான் உன்ன விட்டு எங்கயும் போக மாட்டேனே” சட்டென்று கோபம் கொண்டான்.
இதற்கு மேலும் என்ன சொல்லி இவளுக்கு புரிய வைக்க, இனியனுக்கு புரியவில்லை.
“நான் சாதாரண மனுஷன் அனு. எனக்கும் ஆசா, பாசம் இருக்கு. என்னோட ஆசைய, காதலை நிறை வேத்திக்க சுயலநலமா நடந்துக்கிட்டேன். என் சூழ்நிலை அப்படி இருந்தது. அதனால நீ எவ்வளவு காயப்படுவ என்று நான் நினைச்சி பார்க்கல.
கல்யாணத்த நிறுத்தாத உனக்கு இந்த தண்டனை தேவை தான் என்று நினச்சேன். அதுக்கு காரணம் என் அப்பா ஜான்சிக்கு பண்ண கொடுமையும் தான்.
ஆனா யுவா மேல இருந்த பாசம் என்ன உன்ன விட்டு போக விடல. அதுதான் நம்ம விதி. இந்த ஜென்மத்துல நான் நேசிக்க வேண்டிய பொண்ணே நீ தாண்டி. அது சட்டென்று வந்த மாற்றமெல்லாம் இல்ல. கொஞ்சம் கொஞ்சமா வந்த மாற்றம் தான். அத இப்போ தான் நான் உணர்ந்து கிட்டேன். அத எனக்கு உணர்த்த வேண்டிய நீயே இப்படி அஞ்சி ஒதுங்கி நின்னா நானும் தான் என்ன செய்ய?” அடுத்த கணமே அமைதியான குரலில் பேசினான்.
இனியன் பேசப் பேச அனுபமா இனியனுக்கு எந்த பதிலையும் கூறாமல் துப்பட்டாவின் நுனியை திருக்கியவாறு அவனையே பார்த்திருந்தாள். 
இவ்வளவு புரிய வைத்தும் இவள் புரிந்துக் கொள்ளவில்லையாயின் என்னதான் செய்வது? இதுதான் தன்னுடைய விதி போலும் என்றெண்ணியவன் பெருமூச்சு விட்டவாறே அறையை விட்டு வெளியேற அவனை பின்னாலிருந்து கட்டியணைத்திருந்தாள் அனுபமா.
இனியன் பேசப் பேச அவனோடு வாழ்ந்த இந்த கொஞ்சம் மாதங்களை மனதுக்குள் ஓட்டிப் பார்த்தவளுக்கு அவன் சொல்வது உண்மையென்று புரிந்தது.
குழந்தைக்காக சேர்ந்து வாழலாம் என்று பேசிய அன்று இனியன் அனுபமாவிடம் தலையசைப்பில் கூட விடைபெறாமல் சென்றவன் தான். இன்று அவள் நலனில் மட்டுமே கவனம் செலுத்துகின்றான்.
குழந்தை வயிற்றில் இருந்த பொழுது பார்த்துக் கொண்டான் சரி. அதன் பின்னும் தான் அவளை கவனித்து பார்த்துக் கொல்கின்றானே.  
“சாரி. என் மேலையும் தான் தவறு இருக்கு என்று இப்போ தான் புரியுது. எதையும் மனம் விட்டு பேசாம உள்ளுக்குள்ளையே இறுக்கிக் கிட்டு இருந்துட்டேன்.
அன்னைக்கி நித்யா அண்ணிக்கு அட்வைஸ் பண்ணுறது கேட்டேன். உங்க மனசு மாறிட்டதா நினச்சேன். வளைகாப்பு முடிஞ்சி பேசணும் என்னீங்களே, நாம சேர்ந்து வாழ்வோமா என்றுதான் கேக்கப் போறீங்க என்றுதான் நினச்சேன். ஆனா… அதுக்கு பிறகு என் வாழ்க்கையே இப்படி தான் கழியும் என்று முடிவு பண்ணிட்டேன்” இனியனின் முதுகில் கன்னம் வைத்து கூறிக் கொண்டிருந்தாள்.
“அதான் நான் புரிஞ்சிக்க…” என்று இனியன் ஆரம்பிக்கவும்
“நான் புரிஞ்சிக்கிட்டேன். யுவாவுக்காக மட்டும் என் கூட இருந்திருந்தா என்னையும், என் குடும்பத்தையும் அனுசரிச்சு, அன்பாக நடந்துக்க வேண்டிய அவசியமில்லை. உங்க தம்பியோட வாழ்கை என்று சொல்லிக் கொண்டாலும் அது உண்மையுமில்லை. உங்க மனசு எப்படியோ மாறிருச்சு. அத நீங்களும் புரிஞ்சிக்கல. என் கோபத்தால் நானும் புரிஞ்சிக்கல” என்றாள்.
“அது என்னவோ உண்மை தான். எனக்கு தான் செம்மையா கோபம் வரும். யுவாவுக்காக என் கோபத்தை குறைச்சிகிட்டேன். ஆனா நீ சும்மா சும்மா கோபப்படுற” தலையால் அவள் தலையை அடித்தான்.
அழைப்பு மணியடித்தும் அனுபமா இனியனை விட்டு விலகுவதாக இல்லை.
“அனு அப்பாவும், அம்மாவும் வந்துட்டாங்க. கதவை திறக்கலைனா பயந்துடுவாங்க” என்று சிரிக்க,
“ஐயோ…” என்று அனுபமா இனியனை விட்டு விலக முயன்றாள்.
அவள் கையை பிடித்துத் தடுத்தவன் “இப்படியேவா போகப் போற? அழுமூஞ்சியா உங்கப்பா முன்னாடி போய் நின்னா. என்ன? ஏது? என்று கேட்காமாலையே என்ன போட்டுத் தள்ளுவாரு. போ… போய் பேஸ் வாஸ் பண்ணிட்டு நல்ல பொண்டாட்டியா எனக்கொரு டீ போட்டுக் கொண்டு வா” என்று இனியன் கதவை திறக்க செல்ல அனுபமா புன்னகைத்து தலையசைத்தாள்.
அனுபமாவின் மனதில் இருந்த சங்கடம் மேகம் மறைத்த நிலவாய் நீங்கி முகம் பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பித்ததை பார்த்து கலைவாணியும்  என்னவென்று கேட்டாள்.
“அதில்லாமா… உன் மாப்புளத்தான் டூர் போலாமா என்று கேட்டாரு. நாம கல்யாணம் ஆகி எங்கேயும் போகல இல்ல” இனியனுக்கு டீயை கொடுத்தவள் வடிவேலுக்கு காபியை கொடுத்தவாறே கூறினாள்.
“ஆகா இது நமக்கு தோணலையே” என்று அவளை பார்த்த இனியனோ “ஆமாம் அத்த நாம குன்னூருக்கே போலாமா… நிலுபமாவையும் பார்த்தது போல ஆச்சு” என்றான் இனியன்.
என்ன திடிரென்று என்றோ, அத்தைக்கு உடம்பு முடியாத நேரத்தில் நாங்க வரல, நீங்க மட்டும் போயிட்டு வாங்க என்றோ வடிவேல் கூறவில்லை. சின்ன மகளை பார்க்க கசக்குமா என்ன? துள்ளிக் குதிக்காத குறையாக சரியென்றவர் எப்போ கிளம்புறோம்? எப்படி பயணம் செய்யப் போகிறோம் என்று இனியனிடம் பேச ஆரம்பித்தார்.
யோசனையாக அவர்களை பார்த்த கலைவாணிதான். “அனு யுவா எந்திரிச்சதும் மூணு பேரும் கோவிலுக்கு போயிட்டு வாங்க” என்றாள்.
யுவாவை குட்டி பொம்மை போல் அலங்கரித்து இனியனும் அனுவும் கோவிலுக்கு கிளம்பிச் சென்றிருக்க, கலைவாணி குலதெய்வத்துக்கு நேர்ச்சை வைக்கலானாள்.
பெற்ற அன்னைக்கு தெரியாதா மகளின் முக மாற்றம். சந்தோசமாக இருப்பது போல் தெரிந்தாலும் அனுபமா மற்றும் இனியனுக்குள் சுமூகமாக உறவு இல்லையென்பது கலைவாணிக்கு பார்த்த உடனே புரிந்துப் போனது.
இனியன் குழந்தையிடம் பாசமாக இருக்கின்றான். அனுபமாவுக்காக பார்த்துப் பார்த்து எல்லாம் செய்கின்றான். ஆனால் அவர்கள் தனியாக எங்கும் செல்வதுமில்லை. சிரித்துப் பேசி கலைவாணி பார்த்ததுமில்லை. அதையெல்லாம் கணவரிடம் சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா? மகளிடம் என்ன? ஏது? என்று கேட்டு மேலும்  ஒரு பிரச்சினையை உண்டு பண்ண வேண்டுமா என்று கடவுளைத்தான் வேண்டிக் கொண்டிருந்தாள்.
இன்று அவள் வேண்டுதல் நிறைவேறியிருந்தது.
சன்னதியை விட்டு வெளியே வந்த உடன் அனுபமா கணவனுக்கும் குழந்தைக்கும் மனநிறைவோடு திருநீர் பூசி விட்டாள்.
இனியனும் யுவாவை தூக்கிக் கொண்டு அவள் உயரத்துக்கு புன்னகைத்தவாறே குனிந்து நின்றான்.
அதன்பின் சற்று நேரம் அமர்ந்து சிரித்துப் பேசலாயினர்.
 புது ஆரம்பம், புது வாழ்க்கை, இருவரும், ஒருவருக்குள் ஒருவர் தொலைந்து போகும் முயற்சியில், ஆராச்சியில் இறங்கியிருந்தனர்.
காதலிப்பது சுகம் ஏனில் காதலிக்கப்படுவது வரம் அந்த வரம் அனுபமாவுக்கும் இனியனுக்கும் கிட்டி விட்டது. இனி அவர்கள் வாழ்வில் வசந்தம்.

Advertisement