Advertisement

அத்தியாயம் 26
“யுவராணி எங்க என் செல்லம்… எங்க இருக்கிறீங்க? அப்பா கிட்ட வாங்க” ஆபிசிலிருந்து வந்ததும், வராததுமாக மகளை அழைத்தவாறே வந்தான் இனியன்.
“என்னடி இது நான் என் பொண்ணு மேல அதிகமா பாசம் வச்சிருக்கேன்னு நினச்சா… மாப்புள என்னையே மிஞ்சிடுவார் போல இருக்கே” வடிவேல் கலைவாணியின் காதைக் கடிக்க,
“உங்க பொண்ண செல்லம் கொடுத்து கொஞ்சும் போதெல்லாம் உங்கள மிஞ்ச ஒருத்தன் வருவான்னு சொல்லி கிட்டே இருப்பேனே. வந்துட்டாரு” என்ற கலைவாணி வடிவேல் அருந்திய காபி கப்பை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.
படிப்பை முடித்த அனுபமா வங்கியில் பணிபுரிகின்றாள். வேலைக்கு செல்வதால் அவளால் குழந்தையை சரிவர கவனிக்க முடியாது என்று கலைவாணியையும், வடிவேலையும் தங்களோடு வந்து தங்குமாறு கேட்டுக்கொண்டாள்.
மகள்களை பிரிந்து வடிவேலால் நிம்மதியாக ஊரில் இருக்க முடியவில்லை. ஊரிலுள்ள வேலைகளை ஆட்களை வைத்து பார்த்துக்கொள்ளலாம். மீதி வேலையை ஹரி பார்த்துக் கொள்வான். அனுபமாவோடு வந்து தங்கினால் நிலுபமாவையும் தினமும் பார்த்தது போல் இருக்கும். ஆனால் அதற்கு தகுந்த காரணம் வேண்டுமே என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளைதான் அனுபமா அழைத்திருந்தாள். 
“இதோ கிளம்பிட்டேன் மா…” என்ற கணவனை முறைத்தாள் கலைவாணி.
“யோவ் பெரிய மனிஷா பொண்ணுக்கு கொழந்த பொறந்து ஆறு மாசம் வரைக்கும் அங்கதானே இருந்தோம். பேத்தியை பார்க்கணும், பேத்தியை பார்க்கணும் என்று சொல்லாம கொள்ளாம கிளம்பிப் போய் பொண்ணுங்கள செல்லம் கொஞ்சிட்டுதானே வர.
கொழந்த பொறந்த பிறகும் நம்ம பொண்ணு புகுந்த வீட்டுக்கு வந்து வாழ மாட்டேங்குறான்னு சம்மந்தியம்மா குறை சொல்லிக்கிட்டு இருக்குறது பத்தாதா? கொழந்தைய பாத்துக்குற சாக்குல டேரா போட வந்துட்டதாக வாய் கூசாம பேசும். அனு சொன்னாலும் மாப்பிளைகிட்ட எதுக்கும் ஒரு தடவ கேட்டு உறுதி படுத்திக்கோங்க. அப்பொறம் எல்லாம் அனு இஷ்டம் என்று பேச்சு வரக் கூடாதில்ல.   
அன்னம் குழந்தை வளர்த்த லட்சணத்தை அறிந்துக் கொண்ட பின் கலைவாணிக்கு அனுபமாவை வரதராஜனின் வீட்டுக்கு அனுப்ப எண்ணம் வரவேயில்லை.
எதை செய்தாலும் மாப்புள, மாப்புள என்று இனியன் மற்றும் கணியிடம் கேட்டு விட்டே செய்வதால் சம்பந்திகளுக்கிடையிலான மோதல் குறைவு.
அப்படியிருந்தும் வரதராஜனுக்கும் வடிவேலுக்குமிடையில் இப்பொழுது எந்த விதமான பேச்சு வார்த்தையுமில்லை.
வரதராஜன் தனது அரசியல் பயணத்துக்கு வடிவேலைதான் பெரிதும் நம்பியிருந்தார். வடிவேல் ஒரு வார்த்தை கூறியிருந்தால் ஊரிலுள்ள மொத்த சொந்தங்களும் வரதராஜனுக்கு ஓட்டுப் போட்டிருப்பார்கள்.
“என்னோட சொந்தக்காரன், ஜாதிக்காரன் என்று பார்த்து ஓட்டு போட வேண்டாம். ஊருக்கு யாரு நல்லது செய்வாங்க என்று உங்களுக்கு தோணுதோ அதன்படி செய்ங்க” என்று விட்டார் வடிவேல்.
நல்ல எண்ணத்தில் வடிவேல் அவ்வாறு கூறியிருந்தாலும் பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ஊரில் செல்வச்செழிப்போடும், ஊர் மக்களின் நம்மதிப்பை பெற்றிருந்த தனது அண்ணன் முருகவேல் சென்ற வண்டி விபத்துக்குள்ளாகி அண்ணனும், அண்ணியும் இறந்ததில் தற்போது பதவியில் இருக்கும் ஆளும் கட்சி அமைச்சர் மாணிக்கவேலின் மீதுதான் வடிவேலுக்கு சந்தேகம் இருந்ததது.
ஆதாரம் எதுவும் கிடைக்காததால் வடிவேலால் மாணிக்கவேலை எதுவும் செய்ய முடியவில்லை. வருடங்கள் உருண்டோடி மாணிக்கவேல் இன்று ஆளும் காட்ச்சியில் அமைச்சராக பதவி வகிக்கின்றார். ஊருக்கு செய்த நன்மையுமில்லை. அவரை பின் பற்றும் வரதராஜன் மட்டும் எம்மாத்திரம்?  ஜாதி வெறியோடு அலைபவர். ஊருக்கு நல்லது செய்து விடவா போகிறார்.
“இத்தனை வருடங்களாக வெளியூரில் இருக்கும் வரதராஜனுக்கு நம்ம ஊரில் என்ன நடக்கிறது? என்ன தேவையென்று அவருக்கு எப்படித் தெரியும்? நம்ம ஊருக்கு சேவை செய்ய நம்ம ஊர்க்காரன் தான் சரி. அதுவும் நிறைய இளைஞ்சர்கள் இருக்காங்க” என்று ஹரி பேச மக்கள் ஒரு வாலிபனுக்கு ஓட்டுப் போட்டிருந்தனர்.
“என்னய்யா சொத்துக்கு சொத்தும் வந்தாச்சு. பதவியும் வரும் என்று கணக்கு போட்டு பொண்ணெடுத்தியே அதுவும் ஒண்ணுக்கு ரெண்டு பொண்ணு. என்ன ஆச்சு. அமைச்சர் மாணிக்கவேல் வரதராஜனை ஒதுக்க, நொந்து விட்டார் மனிசன்.
யுவராணி பிறந்த உடனே ஹரி நித்யாவையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு வந்து பார்த்து விட்டு சென்றான்.
“பாப்பா.. பாப்பா..” ஹரியின் குட்டி அதியன் குழந்தையை எட்டி தொட முயல நித்யா தூக்கி மடியில் வைத்துக் கொண்டு “பாப்பா பெரியவளானதும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய்டலாம்டா கண்ணா” என்றாள்.
“என் பொண்ண நான் எங்கயும் அனுப்ப மாட்டேன்” என்றான் இனியன் சட்டென்று.
“ஹலோ பிரதர் பொண்ணுனா கல்யாணமாகி புகுந்த வீட்டுக்கு போய் தான் ஆகணும். நாங்க எங்க பொண்ண எங்க வீட்டுக்கே கூட்டிகிட்டு போறோம் என்று தானே சொல்லுறோம். கூடவே அனுவையும் கூட்டிட்டு போறோம். நீங்களும் வரலாம்” என்றாள்.
“என்னங்க நம்ம நித்யாவா இது? வீட்டுல இருக்குற இடம் கூட தெரியாது. என் கூடயே ரெண்டு வார்த்த அளந்துதான் பேசுவா. உங்கள பார்த்தா தெறிச்சு ஓடுவா” கலைவாணி ஆச்சரியமாக கணவனிடம் கூற,
“நல்ல மாற்றம் தான்” புன்னகைத்தார் வடிவேல்.
கணிமொழியன் நிலுபமாவிடம் கூறியது போல் மாற்றல் வாங்கிக் கொண்டு அவர்கள் தேன்நிலவுக்கு சென்ற குன்னூருக்கே சென்றிருந்தான்.
“உன்ன பார்க்கலாமென்று சென்னைக்கு வந்தா என்னம்மா இப்படி பண்ணிட்ட?” வடிவேல் சின்ன மகளிடம் குறைபட,  
“என்ன பண்ணுறதுப்பா… அவர் வேலை அப்படி இருக்கு. கொஞ்சம் நாள் தானே. வந்துடுவோம். யுவாவ பார்க்காம என்னாலையும் தான் இருக்க முடியாது” என்றாள்.
அலைபேசியை வாங்கிய கலைவாணி “எத்தனை நாளைக்கு அக்கா பொண்ண கொஞ்சிகிட்டு இருப்ப? நீ புள்ள பெத்துக்க வேணாம்…”
“மா…”
“என்ன மாடு மாதிரி கத்துற? கல்யாணம் பண்ணி ரெண்டு வருஷத்துக்கு மேலாகுது. படிப்பையும் முடிச்சிட்டு. மேற்படிப்பு படிக்கிறேன்னு சாக்கு சொல்லாத. அக்காவும் படிக்கும் பொழுதுதான் கல்யாணம் பண்ணி, யுவாவ பெத்தெடுத்தா” வழக்கம் போல சின்ன மகளின் காதில் தாலாட்டு பாட ஆரம்பித்தாள்.
“உனக்கு போன் பண்ணாவே ஒரே பாட்டுத்தனமா… நான் போன வைக்கிறேன்” கலைவேணி கத்த, கத்த அலைபேசியை துண்டித்திருந்தாள் நிலுபமா.
கணியை நிலுபமா என்றோ ஏற்றுக்கொண்டு விட்டாள். கணி கொஞ்சம் கொஞ்சமாக நிலுபமாவின் மனதில் இடம் பிடித்திருக்க, யுவா பிறந்த அன்று நடந்த சம்பவமும், அக்காவும், மாமாவும் சந்தோசமாக வாழ்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கையில் எந்த பிரச்சினையுமில்லை. தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கலாமென்று நிலுபமாவே கணியிடம் கூறினாள்.
“நிஜமாவா? நிஜமாவா?” கணி துள்ளிக் குதித்து நிலுபமாவை தூக்கி தட்டாமாலை சுற்ற,
“அதான் குன்னூர் போறோமே அங்க போய்….” என்றவள் வெட்கப்பட்டு தலை கவிழ்ந்தாள்.
தேனிலவுக்கு சென்ற இடத்திலையே அவர்கள் வாழ்க்கையை ஆரம்பித்திருக்க, அவர்களின் வாழ்க்கையில் எந்த பிரச்சினையுமில்லை.
மாற்றல் வாங்கிக் கொண்டு சென்னைக்கே சென்று விடலாம். அங்கே சென்ற பிறகு குழந்தை பற்றி யோசிக்கலாம். இல்லையென்றால் உங்கம்மா, இங்கேயும், அங்கேயும் அலைய வேண்டியிருக்கும் என்று கணிதான் கூறியிருந்தான்.
நிலுபமாவுக்கும் அதுதான் சரியென்று தோன்றியது. அன்பாக பேசும் அன்னையை விட இவ்வாறு அதட்டும் அன்னையைத்தான் நிலுபமாவுக்கு ரொம்பவே பிடிக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பதால் கலைவாணி அவளை பற்றி கவலைக்கொள்ளக் கூடாதென்று இதை பற்றி கூறாமல் இருக்கின்றாள். தன்னை பற்றி சிந்திக்காமல் தந்தையிடம் வசைபாடும் அன்னையின் முகம் வந்து போக சிரித்துக் கொள்வாள் நிலுபமா.   
அன்னம் வந்து பேத்தியை பார்த்து விட்டு செல்லம் கொஞ்சி விட்டு செல்வாள். இனியனை வீட்டுக்கும் அழைத்துப் பார்த்தாள். அவன் மறுத்து விட வளமை போல் கணவனிடம் பொருமி விட்டு அமைதியானாள்.
இனியனின் வாழ்க்கையில் யுவராணி வந்த பிறகு அவன் வாழ்க்கையே வசந்தமானது. ஆம் அவன் குழந்தைக்கு வைத்தது அவன் தேர்வு செய்த பெயரைத்தான். குழந்தையை கையிலேந்திய தருணமே யுவராணி என்று மூன்று முறை அவனே காதில் கூறியிருந்தான்.
சீமந்தம் முடிந்த பின் பிரசவம் சென்னையில் தான் பார்க்க வேண்டும். அங்கே தானே அனுபமா செக்கப்புக்கு சென்றாள் என்று வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருந்தான் இனியன்.
அனுபமாவுக்கு பிரசவலி வந்த கணம் அவள் எவ்வளவு துடித்தாளோ அதை போல் இனியனும் துடித்தான்.
“ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல சீக்கிரம் ஆஸ்பிடல் போய்டலாம்” மருத்துமனைக்கு செல்லும் வரையில் மனைவிக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறிக் கொண்டிருந்தவன் மருத்துவமனைக்கு சென்று நொடி மருத்துவருடன் பிரசவர அறையில் நுழைந்திருந்தான்.
“என்னம்மா மாமாவும் உள்ள போறாரு” நிலுபமா அழுதவாறே அன்னையை கேட்க,
“தெரியலையே. என் பொண்ணுக்கு ஏதும் பிரச்சினையாக இருக்குமோ?” கலைவாணி கணவனை ஏறிட்டாள்.
அப்பக்கம் வந்த தாதியை அழைத்து வடிவேல் விசாரிக்க, குழந்தை பிறக்கும் தருணம் தானும் அனுபமாவின் அருகில் இருக்க வேண்டும் என்று இனியன் மருத்துவரிடம் பேசி அனுமதி வாங்கி விட்டதாக கூறினார் தாதி.
அனுபமாவின் மேல் எவ்வளவு பாசமிருந்தால் இனியன் மருத்துவமனைக்கு வரும் வழியில் ஆறுதலான வார்த்தைகளை கூறி, அவளை தைரிய மூட்டிக் கொண்டு வந்திருப்பான். வந்தது மட்டுமல்லாமல் அவள் மீது இருக்கும் அன்பினால் பிரசவர அறைக்குள்ளே சென்று விட்டானே என்று வடிவேல் மற்றும் கலைவாணி பேசி சிலாகிக்கித்தனர்.
அப்பா பார்த்த மாப்பிள்ளையான மாமா தப்பானவர் கிடையாது. அக்காவை நன்றாகத்தான் பார்த்துக் கொள்கின்றார் என்று நெகிழ்ந்தாள் நிலுபமா. அதுவே அவள் மனமாற்றத்துக்கும் காரணமாகி, கணிமொழியனோடு சேர்ந்துவாழ தூண்டியது.
ஆனால் இனியனுக்கு இருந்தது மனைவியின் மீதான பாசமல்ல பிள்ளையின் மீதான பாசமென்று இவர்களுக்கு யார் புரிய வைப்பார்கள்?
 யுவராணி பிறந்து தருணம் கையிலேந்தியவன் தான் பாலூட்ட மட்டும் தான் அனுபமாவிடம் தந்தான்.
“குழந்தைக்கு இன்பெக்ஷன் ஆகிடும்”
“சத்தம் கேட்டா கண்விழிச்சி அழுவா…”
“மாமா டீவீ சத்தத்தை குறைங்க யுவா தூங்குறா…”
“அத்த சமையலறையில பாத்திரங்களை உருட்டாம வேலை பாருங்க” என்று மற்றவர்களை பாடாய் படுத்தினானென்றால்
யுவராணி கொஞ்சம் சிணுங்கினாள் போதும் “கொசு ஏதும் கடிக்குதா?” என்று பதறித் துடித்து பார்ப்பவன் அழுதால் பசியால் அழுகின்றாளாக இருக்கும் என்று சீக்கிரம் பாலூட்டுமாறு அனுபமாவை துரத்துவான். 
“அடிக்கடி பால் கொடுக்கக் கூடாது. குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருக்கா வயிறு நிறைய கொடுக்கணும். நர்ஸ் சொல்லுறப்போ கேட்டுகிட்டு தானே இருந்தீங்க” கடிந்துகொள்வாள் இனியனின் அனு.
“அப்போ எதுக்கு அழுறா…” குழந்தையை அனுவிடமும் கொடுக்காமல், கலைவாணியிடமும் கொடுக்காமல் தானே தாலாட்டுப் பாடி தூங்க வைக்க முயல்வான்.
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
ஓ… தாயாக தந்தை மாறும் புதுக் காவியம்
ஓ… இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…..
சிலநேரம் சமத்தாக தூங்கும் யுவராணியோ, சிலநேரம் அவனை படுத்தியெடுப்பாள். முடியாமல் அனுபமாவைடம் கொடுக்க அவள் இவனை ஏகத்துக்கும் முறைப்பாள்.
இளித்தவாறு குழந்தைக்கு என்னவென்று அறியாமல் அறையை விட்டு வரமாட்டான் இனியன்.
அவனுக்கு இருக்கும் பிள்ளை பாசத்தாலையே அனுபமா அவனை முன்பு போல் எதுவும் சொல்வதில்லை. தாயும் தந்தையும் இருப்பதால் சொல்லவும் முடியவில்லை.
இனியன் அவளுக்கு செய்தவைகளை அனுபமா மன்னித்து விட்டாள். ஆனால் இன்னமும் அவளால் மறக்க முடியாமல் தவிக்கின்றாள். இனியனிடம் எந்த எதிர்பார்ப்பையும் வளர்த்துக் கொள்ளாமல் இருக்கும் வரை நிம்மதியாக இருக்கலாம். சந்தோசமாக வாழ முயற்சி செய்யலாம் என்று முடிவு செய்தாள்.   
ஆனால் இனியனிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததான. அதற்கு முக்கிய காரணம் பிரசவ அறையில் யுவராணியை ஈன்றெடுக்க அனுபமா பட்ட வேதனைதான்.
அவளின் கதறலைப் பார்த்து இனியனின் கண்கள் கலங்க, அவள் அருகிலையே இருந்து தைரியமூட்டினான்.
எந்தக் கணவனும் போலல்லாது மனைவியின் மீதும் தன் குழந்தையின் மீதும் இப்படி பாசத்தைக் காட்டும் இனியனை மருத்துவருக்கும் ரொம்பவே பிடித்திருந்தது.
குழந்தையை வெளியே எடுத்த கணம் அனுபமாவின் கையில் கொடுக்கும் முன்பாக இனியனின் கையில் கொடுத்த மருத்துவர் “மனைவி படும் கஷ்டத்தை பார்த்து ஒரு குழந்தை போதும் என்று இருந்திடாதீங்க மிஸ்டர் இனியன்” என்றார்.
“அப்படி நம்ம முன்னோர்கள் நினைச்சிருந்தா இன்னைக்கி இந்தியாவோட சனத்தொகை நூறு கோடியா தாண்டியிருக்காது” என்றான் இனியன். அவன் அதை சாதாரணமாகத்தான் கூறினான்.
“ஆமா ஆமா மருத்துவம் வளர்ச்சியடையாத காலத்துலயே பந்து, பன்னிரண்டு குழந்தைகளை பெத்தாங்க, இப்போ நாம் இருவர் நமக்கிருவர் தானே இல்லையா மிஸிஸ் அனுபமா. அடுத்த குழந்தை சீக்கிரமா பெத்துக்குவீங்களா? இல்ல கொஞ்சம் டைம் எடுத்துப்பீங்களா?” வலியில் துடித்து குழந்தையை பார்க்க ஆவலாக, சோபையாக புன்னகைத்தவாறு காத்திருக்கும் அனுபமாவை பார்த்துக் கேட்டார் மருத்துவர்.
அவரை பொறுத்தவரையில் இவர்கள் காதல் நிறைந்து வழியும் ஆதர்ஷ தம்பதியினர். இந்த குழந்தை உருவானாக கதையை அவரிடம் கூறத்தான் முடியுமா? பெருமூச்சு விட்டவள் இனியனின் கையிலிருக்கும் குழந்தையை ஏறிட்டாள்.
மருத்துவரின் உதவியோடு குழந்தையை அனுபமாவின் மார்பில் வைத்த இனியன் அனுபமாவின் நெற்றியிலும் முத்தமிட்டு “ஐ லவ் யு. தேங்க்ஸ் அனு” என்று அவள் கூந்தலை ஒதுக்கி விட்டிருந்தான்.
அனுபமாவின் உடல் ஆட்டம் காண, பல்கலைக் கடித்து தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள்.
இனியன் உணர்ச்சி வசப்பட்டு முத்தமிட்டானென்று அனுபமாவுக்கு நன்றாகவே தெரியும். எங்கே தன் மனம் மீண்டும் அவன் பால் சாந்து, ஆசைகளையும், எதிர்பார்ப்பையும் வளத்துக்கொள்ளுமோ என்று அஞ்சினாள்.
அக்கணம் அனுபமா இனியனின் கண்களுக்கு யுவராணியைக் கொடுத்த தேவதையாக தெரிந்தாள்.
அனுபமா என்பவள் அவன் மனதில் தனது நல்ல குணத்தாலும், செய்கைகளாலும் அவன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டாள். அதை இனியன் உணரத்தான் தவறியிருந்தான்.
அவள் மீது இருக்கும் காதலை, யுவராணியின் தாய் மீது இருக்கும் பாசம் என்ற போர்வையை கொண்டு மூடி வைக்கலானான்.
அவன் மனதை திறக்க வேண்டிய அனுபமாவோ அவனிடம் எந்த எதிர்பார்ப்பையும் வளர்த்துக் கொள்ளாமல், எதிர்பாராமல் அவனிடமிருந்து விலகியே நிற்பதால் இனியனாலும் தன் மனதை அறிந்துக்கொள்ள முடியவில்லை.
இனியன் தன் மனதை அறிந்துக் கொள்ளும் நாளும் வந்தது. அது யுவராணி பேச ஆரம்பித்த பின் தான்.
இனியன் வேலைக்கு செல்லும் பொழுது குழந்தையை கொஞ்சாமல் செல்ல மாட்டான்.
கலைவாணியின் கையிலிருக்கும் குழந்தையை வாங்கி கொஞ்சி முத்தமிட்டு மீண்டும் கலைவாயிடம் கொடுத்து விட்டு செல்வான். இது அவன் வழக்கமாக செய்யும் செயல் தான்.
யுவராணி பேச ஆரம்பித்த பின் “அம்மாக்கு… அம்மாக்கு…” இனியனை அனுபமாவின் பக்கம் திருப்பினாள்.
அனுபமாவும் வேலைக்கு செல்வதால் முத்தமிட்டுதான் செல்வாள் அதைத்தான் குழந்தை கூறுகிறாள் என்று முதலில் நினைத்த அனுபமா மீண்டும் குழந்தையை முத்த மிட முயல,
சிணுங்கியவள் தந்தையிடம் அம்மாவுக்கும் முத்தம் கொடுக்கும்படி சைகை மொழியாலும், மழலை மொழியாலும் கூறி தனது முத்துப் பற்களைக் காட்டிச் சிரித்தாள்.
மகள் சொன்னால் இனியன் தட்டுவானா இனியன் அனுபமாவின் கன்னம் நோக்கி குனிய
அவனை முறைத்த அனுபமா “அம்மாவும் அப்பா கூட போறேண்டா…” என்று குழந்தையை சமாதானப்படுத்த முயன்றாள்.
ஆனால் அந்த குட்டி தேவதை முத்தமிட்டால் தான் நீங்கள் திரும்பி வரும் வரைக்கும் சமத்தாக பாட்டியோடு இருப்பேன் என்பது போல் சிணுங்கி அனுபமாவுக்கும் இனியனிடமிருந்தது முத்தத்தை வாங்கிக் கொடுப்பாள். அதே போல் அனுபமாவையும் இனியனை முத்தமிடச் சொல்லி வற்புறுத்துவாள். இனியனுக்கு அது ரொம்பவே பிடித்திருக்க, நாட்கள் செல்ல செல்ல செல்ல அனுபமா கொடுக்கும் முத்தத்துக்காக ஏங்கித் தவிக்கலானான். 
மகளின் செய்கைகளை பற்றியே பேசியவாறு இனியன் வர முகம் இறுகி அமர்ந்திருப்பாள் அனுபமா.
இதை கவனித்த இனியனுக்கு கோபம் எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது. “நான் அவ புருஷன் தானே. முத்தம் கொடுத்தா முகத்தை தூக்கி வச்சிப்பாளா?” குழந்தைக்காகத்தான் அனுபமாவோடு வாழ்கின்றேன் என்றவன் அவனறியாமலே அனுபமாவின் கணவன் என்று அவன் வாயாலே கூறியிருந்தான். கூறிய பின் தான், தன் மனதை உணர்ந்துக் கொண்டான் இனியன். உணர்ந்த பின் தான் சிந்திக்கவே ஆரம்பித்தான்.    
அதன் பின் வேண்டுமென்றே யுவராணியை வைத்து அனுபமாவை தொடுவதும், சீண்டுவதும், முத்தமிடுவதுமென்று இனியனின் சேட்டைகள் தொடர, கலைவாணியும், வடிவேலும் இருப்பதால் அனுபமாவல் எதுவும் பேசவும் முடியவில்லை.
அனுபமாவும் தன் மனதை எத்தனை நாட்கள் தான் அடக்கி வைப்பாள்?
அன்று கலைவாணிக்கு ஜுரம் அடிப்பது போலிருக்க, வடிவேல் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவரிடம் சென்றிருந்தார்.
யுவராணி கலைவாணி இல்லாமல் அனுபமாவை படுத்தியெடுத்துக் கொண்டிருந்தாள். பாலூட்டிப் பார்த்தும் தூங்காதவள் அனுபமாவின் தோளிலையே தூங்கியிருந்தாள்.
கீழே வைத்தால் எழுந்து விடுவாளோ என்று தோளில் வைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
ஆபிசிலிருந்து வந்த இனியன் ஓவியமாய் இருந்த தாயையும், சேயையும் பார்த்து கட்டியணைத்து இருவருக்கும் முத்தம் வைக்க வெகுண்டெழுந்தாள் அனுபமா.
“இப்போ உனக்கு என்னதான் வேணும்? எதுக்கு சும்மா சும்மா என்ன முத்தமிட்டுகிட்டே இருக்க? மறந்துட்டியா? குழந்தைக்காகத்தானே நீ என் கூட வாழ முடிவு பண்ண. என் மேல எந்த தப்பும் இல்ல என்று தெரிஞ்சி நீ மன்னிப்பு கேட்டப்போ உன்ன மன்னிச்சு உன் பொண்ணு கூட இருக்க விட்டதுக்கு நீ இப்படித்தான் பண்ணுவியா?” விசும்பலோடு நிறுத்தியவள் அவனை ஏறிட்டுப் பார்க்கவேயில்லை.
கோபப் பட வேண்டிய இனியனோ பொறுமையாக குழந்தையை அவள் கையிலிருந்து வாங்கி தொட்டில் வைத்தவன் தலையணைகளை அரணாக வைத்தவாறு “என்ன அனு என்ன பார்க்காம கோபமாக பேசினா உன் மனசுல என் மேல இருக்குற காதல் தெரியாம போய்டுமா?” என்று கேட்டு சட்டென்று அவளை பார்த்தான்.
யுவராணி சொல்லித்தான் அனுபமாவை இனியன் முத்தமிட ஆரம்பித்தான். அவன் முத்தமிடும் பொழுதெல்லாம் அவள் உடல் இறுகுவதைக் கண்டவன் கலைவாணி இருப்பதால் வெக்கப்படுகிறாள் என்றெண்ணி அதை கவனிக்காமல் விட்டிருந்தான்.
அவன் மனதில் ஏற்பட்ட மாற்றத்தால் அவன் இவளை கவனிக்க குழந்தையிடம் விடைபெற்று வரும் அனுபமா இறுகியவாறு அமர்ந்து கொண்டு வண்டியில் வர, தான் மட்டும் பேச அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே யோசனைக்குள்ளானான் இனியன்.
தன் பெயரை கேட்டே தன்னை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்திருந்தவளுக்கு தன்னை பிடிக்காமல் போகுமா? தன்னை விரும்பாமல் இருந்திருப்பாளா? அப்படியென்றால் அவள் இன்னமும் என் மேல் கோபமாகத்தான் இருக்கின்றாளா? குழந்தைக்காக என்னை சகித்துக் கொண்டு இருக்கின்றாளா? எப்படி அவள் மனதை திறப்பது? புரியாமல் தவித்தவனுக்கு இன்று சந்தர்ப்பம் அமைந்திருந்தது.
காலையில் ஆபீஸ் செல்லும் பொழுதே மாமனார் மாலையில் அத்தையை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும் என்று கூறியிருக்க, இனியன் நேரங்காலத்தோடு வருவதாக கூறியிருந்தான். கூறியது போல் வந்தவன் அவளிடம் கேட்டும் விட்டான்.
அவனை அதிர்ந்து நோக்கிய அனுபமா என்ன பதில் சொல்வாள்? ஆம் என்று உண்மையை கூறி அவள் மனதைக் காட்டிக் கொடுப்பாளா? இல்லையென்றுக் கூறி மூடி மறைப்பாளா? எத்தனை நாட்களிலும் அவளால் தன் மனதை மறைக்க முடியும்?

Advertisement