Advertisement

அத்தியாயம் 25
வளைகாப்பு நாளும் அழகாக விடிந்தது. விழாவுக்காக அனுபமாவை பட்டுப்புடவையில் அலங்கரித்து கண்ணாடி வளையல்களை அணிவித்திருந்தது மாத்திரமன்றி. நோய் கிருமிகள் அண்டக் கூடாதென்று வேப்பிலை காப்பும் கையில் அணிவித்திருந்தனர்.
அனுப்பமாவே தயாராகி நிற்க, இனியனை காணவில்லை. “மாப்ள எங்க? மாப்புள எங்க?” என்ற குரல் தான் நாளா பக்கமும் ஒலித்தன.
என் அண்ணனை நான் தான் தயார் செய்வேன் என்று கணிமொழியன் இனியனை ஒருவழி செய்து கொண்டிருந்தான்.
ஹரி வந்து இனியனை அனைவரும் தேடுவதாக கூறிய பின்னரே விடுவித்தான்.
பட்டு வேட்டி சட்டையில் வந்த இனியனிடம் “சீமந்தம் எனக்கா? உனக்கா? இவ்வளவு அலப்பறை பண்ணுற? இது உனக்கே ஓவரா தெரியல?” அனுபமா முறைக்க,
“நமக்கு டி… அமைதியா வா…” படிகளில் அவளை பத்திரமாக இறக்கிக் கொண்டு வந்தவன் அவளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருக்கையில் அமர வைத்தான்.
யாரும் சொல்லாமலையே பக்கத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் அவனும் அமர்ந்து கொண்டான்.
இரண்டு குத்து விளக்கில் தீபமேற்றி, பல்வேறு வகையான வாசம்மிக்க பூக்களும், பல்வேறு வகையான பழவகைகள், மஞ்சள், குங்குமம்,சந்தனம், கண்ணாடி வளையல்கள், மேலும் பல்வேறு வகையான இனிப்பு வகைகளும் அனுபமாவுக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்ததோடு, சர்க்கரைப் பொங்கல், லெமன் சாதம், தேங்காய் சாதம், நெய்புலாவ் சாதம் போன்ற பல்வேறு விதமான சித்ரா அன்னங்களும் படைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
தேங்காய் உடைக்கப்பட்ட உடன் இனியன் அனுபமாவுக்கு மாலையணிவித்தான். மாலையணிவிக்கும் பொழுது கூட இது என் கடமைகளில் ஒன்று என்று எண்ணியவன் குங்குமம் வைக்கும் பொழுது “கண்ண முடிக்க கண்ணுல விழுந்துடப் போகுது” என்றான்.
மனதில் கொஞ்சமேனும் அன்பு இல்லாமல் இருந்திருந்தால் இந்த மாதிரியான வார்த்தைகள் இனியனின் வாயிலிருந்து வந்திருக்குமா? அதை அவன்தான் உணர்ந்தானில்லை.
அன்னம் தான் சந்தன கிண்ணத்தை நீட்டி இரண்டு கைகளிலும் அள்ளி கன்னத்தில் பூசச் சொன்னாள்.
“நீ எதுக்குமா வயசான காலத்துல அலையுற? உனக்குத்தான் வேலை செஞ்சு பழக்கமில்லையே” அன்னையை சீண்டியவன் நித்யாவை அழைத்து என்னவெல்லாம் பண்ண வேண்டும்? இப்படியா? என்று அவளை முன்னிறுத்தி ஒவ்வொன்றாகக் கேட்டுக் கேட்டு இரு கைகளிலும் வளையல் அணிவித்து, பன்னீர் தெளித்து, அறுகரிசி படைத்து தனது மனைவியையும், கருவிலிருக்கும் குழந்தையையும் வாழ்த்தியதோடு நித்யாவை அனுபமாவின் அருகிலையே இருக்க வேண்டும் என்று கூறிவிட்டே அகன்றான்.
வடிவேல் தான் வாங்கி வந்த வைர வளையல்களை அனுபமாவின் கைகளில் அணிவித்து, மஞ்சள் குங்குமம் வைத்து “தீர்க்க சுமங்கலியா  என்றைக்கும் சந்தோசமா இருக்கோணும்” அவள் தலையில் கைவைத்து நெகிழ்ச்சியாக வாழ்த்தினார்,
அனுபமாவின் கண்கள் கலங்க “தேங்ஸ்ப்பா” என்றாள். 
அதன் பின் கலைவாணி இனிப்பூட்டி,  அறுகரிசி இட்டு ஆசிர்வாதம் செய்ய, அவளை தொடர்ந்து அன்னம் வந்து இனிப்பூட்டி,  அறுகரிசி இட்டு ஆசிர்வாதம் செய்ய அனுபமா அமைதியாக நின்றாள்.
என்னதான் அன்னம் பேசியிருந்தாலும் இது இனியனின் குழந்தை, அன்னத்தின் பேரக்குழந்தை இல்லையென்றாகாதே. அந்த உரிமை இல்லையென்றும் ஆகாதே.
பிடிக்காத மாமியாரென்று ஆசிர்வாதம் செய்யக் கூடாதென்று அனுபமா பிடிவாதம் பிடித்திருந்தால் அன்னம் வரதராஜனிடம் பொருமி விட்டு மனதால் பேரக் குழந்தையை வாழ்த்தி விட்டு ஒதுங்கியிருக்கவும் கூடும் அல்லது மருமகளை அத்தனை பெயரின் முன்னால் வசை பாடியிருக்கவும் கூடும்.
அன்னத்தின் உரிமைகளை பிடுங்குவதில் அனுபமாவுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது? மனவேதனையும், நிம்மதியையும் இழந்து விடுவாள் அவ்வளவு தானே.
விட்டுக் கொடுத்து அமைதியாக இருப்பதனால் சண்டை, சச்சரவுகளும் குறைவு. பிரச்சினைகளும் வராது என்றெண்ணியே அனுபமா அமைதியாக நின்றாள்.
தான் கொண்டு வந்த பரிச பொருட்களையும் கடைவிரித்தே அனைவருக்கும் காட்டியவள் அனுபமாவின் கையில் வைக்க,
“அனுபமாவின் மாமியாருக்கு பரந்த மனசுபா… தாராளமா மருமகளுக்கு வாங்கி வந்திருக்கா” என்று யாரோ பேச
“பின்ன பசங்கள தானே பெத்து வச்சிருக்கா… மருமக்களுக்குத்தானே சீமந்தம் செஞ்சி அழகு பார்க்கணும்” என்றாள் ஒருத்தி.
“ஜாதக பிரச்சினையால் தனிக்குடித்தனம் வச்சோம். குழந்தை பொறந்தா தோஷம் நீங்கும் என்று ஜோஸ்யக்காரர் சொல்லிட்டாரு. கொழந்த பொறந்த உடனே வந்துடுமா. பெயர் சூட்டும் விழா நம்ம வீட்டுலதான் வைக்கோணும்” சமயம் பார்த்து சந்துல சிந்து பாடினாள் அன்னம்.
நடந்த சம்பவங்கள் அவள் கண்முன் சட்டென்று வந்து போக, அனுபமாவின் முகம் சுருங்கி விட்டது. முக மாறுதலை மறைக்க பெரிதும் பாடுபட்டாள்.
கலைவாணி பல்லைக் கடிக்க, “வயிறு வலிக்குதா அனு” என்று நித்யா கேட்டாள். 
“ரொம்ப நேரம் உட்காந்துகிட்டு இருக்கேனில்ல அண்ணி அதான்” என்று சமாளித்தாள் அனுபமா.
அனுபமாவை வீட்டுக்கு அழைக்கவும் வேணுண்டும். அழைத்தால் அவள் மறுக்காமல் இருக்கவும் வேண்டும். என்ன செய்யலாம் என்று அன்னம் சிந்திக்க, வரதராஜன்தான் இந்த யோசனையை கூறியிருந்தார்.
கூறி முடித்தவள் சரியாக பேசினேனா? என்று கணவனை வேறு பார்த்து வைக்க,
“அம்மாவோட சாவி அங்க இருக்கா… அதானே பார்த்தேன்” என்று நினைத்த இனியன் “என் கொழந்த பொறந்தா வேலையாட்களை வச்சி என் புள்ளைய வளர்க்காம நானே வளர்க்கணும் என்று ஆசை படுறேன். அதுக்கு நானும், அனுவும் மட்டும் போதும் யாரும் வேணாம். நாங்க தனிக் குடித்தனம் இருக்கோம்” என்று அன்னத்தின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க, வரதராஜன் மகனை முறைத்தார்.
கணவனின் பேச்சில் அனுபமாவுக்கு நிம்மதி பரவியது.
அதேநேரம் உறவினர்கள், நண்பர்கள் என வந்திருக்கும் அனைவரும் சந்தனம், குங்குமம் வைத்து பன்னீர் தெளித்து, அறுகரிசி இட்டு ஆசிர்வதிர்த்தனர். சிலர் தாங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை அனுபமாவின் கையில் கொடுத்து ஆசிர்வதித்து வாழ்த்தி விட்டும் சென்றனர்.
“எல்லாரும் பரிசு கொடுத்தாச்சு மாப்புள ஒண்ணத்தையும் கோடுகளையே” கனகா கேட்டாள்.
நித்யாவை பேச சந்தர்ப்பம் பார்த்திருந்தவளுக்கு இந்த வீட்டில் நித்யாவை பேச சந்தர்ப்பம் அமையாது என்று புரிந்தது மட்டுமல்லாது, இனியன் அவளை அழைத்து எல்லா வேலைகளையும் பார்க்க சொன்னது கோபத்தை தூண்டியிருந்தது.
இனியன் பரிசு ஏதும் கொடுக்க வில்லை என்றதும் அதை பேசும் பொருளாக்கலாம் என்றுதான் ஆரம்பித்தாள்.
மகனை பேசினால் அன்னம் சும்மா இருப்பாளா? “என் புருஷன் வைர நெக்லஸ் மட்டும்தான் வாங்கிட்டு வந்தாரு. நான் போட்ட கம்மலும் வளையலும் இனியன் வாங்கிட்டு வந்ததுதான்” என்றாள் அன்னம்.
அவன் போட்டால் அனுபமா மறுப்பாளென்று அன்னத்தை போடச் சொன்னானோ அல்லது அன்னத்துக்கும், அனுப்பமாக்கும் இடையிலிருக்கும் கசப்பு நீங்கட்டும் என்று போடச் சொன்னானோ தெரியவில்லை.
“அத்தனை பேர் முன்னால போட வெக்கப்பட்டுக்கிட்டு அம்மாகிட்ட கொடுத்து போட்டு விட்டாரா?” சொந்தத்தில் ஒருத்தி கூறிச் சிரிக்க,
“அக்காக்கு தங்க கொலுசு வாங்கி வச்சிருக்காரு. தனியா இருக்கும் பொழுது போடலாமென்று இருந்திருப்பார். இப்போதான் எல்லாரும் ஆசைப்படுறாங்களே! எங்க மாமாக்கு என்ன வெட்கம்? அவர் போடுவாரு. இல்ல மாமா” நிலுபமா சீண்ட
“அதானே” என்று ஹரியும், கணியும் இனியனை உசுப்பேத்த இனியன் அனுபமாவைத் தான் பார்த்தான்.
“அண்ணிக்கு நகை வாங்க எங்க உசுர வாங்கிட்டான்” இனியன் கடைக்கு அழைத்து சென்று “இது அனுபமாவுக்கு பொருத்தமாக இருக்குமா? இது அனுபமாவுக்கு பிடிக்குமா? இதை அனுபமா அணிவாளா?” என்று தங்களை கேட்டு என்ன பாடு படுத்தினான் என்று கணியும் நிலுபமாவும் கூறிச் சிரிக்க இனியன் அசடு வழிந்தவாறு நின்றிருந்தான்.      
அனுபமாவுக்கு கொஞ்சம் ஆச்சரியம் தான். இனியனிடம் அவள் எந்த பரிச பொருளையும் எதிர்பார்த்திருக்கவில்லை. வாங்கி வந்திருந்தாலும் குழந்தைக்காக ஏதாவது வாங்கி வந்திருப்பான் என்றுதான் எண்ணியிருந்தாள்.
அப்படியே அவளுக்காக ஏதாவது வாங்கி வந்திருந்தாலும் பெயருக்கு ஏதாவது வாங்கி வந்திருப்பான். இத்தனையும் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை.  
எட்டாவது மாதம் அவளுக்கு பரீட்ச்சை இருப்பதனால் ஏழாம் மாதமே அவளை அழைத்துக் கொண்டு சென்று குழந்தைக்கு தொட்டில், குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு தேவையான துணிகள் மாத்திரமன்றி விளையாட்டுப் பொருட்களை வேறு பார்த்துப் பார்த்து வாங்கிருந்தான்.
அப்பொழுது கூட அனுபமாவுக்கு என்ன வேண்டும் என்று கேட்கவில்லை. அதிகபட்சம் சீமந்தத்துக்கு என்ன அணிகின்றாய் என்று கூட கேட்டிருக்கவில்லை.
திருமணத்து வாங்கிய புடவைகள் இன்னும் அணியாமல் இருக்க சீமந்தத்து புதிதாக வாங்க வேண்டுமா என்று அன்னையிடம் கேட்டால் திருமணத்துக்கு கட்டிய புடவையை தான் அணிய வேண்டும் என்று கலைவாணி இவளிடம் கூறியதால் இவளும் துணி வாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை.
ஆனாலும்  இனியன் குழந்தைக்காக மட்டும் அனைத்தையும் பார்த்துப் பார்த்து வாங்யவன் கணவனாக அவளுக்காக ஒன்றையும் வாங்காதது நெஞ்சம் விம்மத்தான் செய்தது.
அனுபமா அறியாதது அவளிடம் கேட்டால் இவனை வார்த்தைகளால் வதைத்து, வேண்டாமென்று மறுப்பாளென்று நினைத்தவன் கலைவாணியிடம் அலைபேசி அழைப்பு விடுத்து என்ன புடவை வாங்க வேண்டும்? என்ன விலையில் வாங்க வேண்டும்? என்று இனியன் கேட்டிருந்தான்.
திருமணத்துக்கு அணிந்த புடவையை தான் அணிவாளென்று கலைவாணி கூறிவிட தனக்கொரு செலவு மிச்சமென்று இனியன் நினைத்திருக்கலாம். அவன் அவ்வாறு நினைத்திருந்தால் நகையாக வாங்கி வந்திருக்க மாட்டானே.
வாங்கியதையும் அவன் அணிவிக்காமல் அன்னத்திடம் எதற்காக கொடுத்தான்? அத்தனை பேரின் முன்னால் அணிவித்தால் அனுபமா மறுத்திருப்பாளா? தனியாக அவனுக்கு திட்டுகள் விழுமென்றா? கொலுசை மட்டும் ஏன் அன்னத்திடம் கொடுக்காமல் வைத்திருந்தான். அதை அவன் கையாலையே அணிவிக்கத்தானோ? 
அனுபமாவுக்கு சந்தோசம் தாளவில்லை. அவன் தனக்காக எதையும் செய்ய மாட்டான் என்று நினைத்த போது இப்படி சப்ரைஸ் கொடுத்து விட்டானே. வைரமோ, தங்கமோ வாங்கிக் கொடுத்ததை விட மனைவியாக அவளை மதித்து கௌரவப்படுத்தி விட்டானே என்ற சந்தோசம்தான் அனுபமாவுக்குள் இருந்தது.
அனுபமாவின் பூரித்த முகத்தை பார்த்தே அவள் சம்மதம் புரிய இனியன் அவன் வாங்கி வைத்திருந்த தங்கக் கொலுசை அனுபமாவின் காலில் மாட்டி விட்டான்.
அனுபமாவை பார்த்து புன்னகைத்த இனியன் “உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். நைட் பேசுறேன்” என்று சொல்ல.
தாங்கள் சேர்ந்து வாழலாம் என்று தான் சொல்லப் போகிறான் என்று எண்ணி புன்னகைத்தவாறே தலையசைத்தாள் அனுபமா.
இறுதியாக குடும்பத்தில் மூத்த பெண்கள் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிக்க, வந்திருந்த அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், வளையல் வழங்கி வருகை தந்ததற்கு மரியாதையை தெரிவிக்கப்பட்டது.
அடுத்து நிலுபமாவுக்குத்தான் வளைகாப்பு செய்ய வேண்டும் என்று பேச்சு எழ, எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ள போகின்றாய்? காலேஜ் முடியும் வரை குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப் போட்டு விட்டாயா? என்று சொந்தங்கள் விசாரிக்க ஆரம்பித்து அதுதான் உன் மாமியார் வீட்டில் சும்மா இருக்காங்களே குழந்தையை பெற்று கையில் கொடுத்தால் அவங்க பாத்துக்க போறாங்க என்றனர்.
 “யாரு எங்கம்மாவா? எங்களை வளர்த்ததே வேலைகாரங்கதான். சமையலுக்கு ஒரு ஆள். சாப்பாடு ஊட்ட ஒரு ஆள். குளிப்பாட்ட, தூங்க வைக்க என்று எனக்கொரு வேலையாள், இனியனுக்கு ஒரு வேலையாள்” என்றான் கணிமொழி.
“அப்போ உங்கம்மா எந்த வேலையையும் பார்க்கல” நிலுபமா சிரிக்க
“என்ன சிரிக்கிற? நமக்கு இன்னும் பர்ஸ்ட் நைட்டே நடக்கல. குழந்தை எப்படி வரும்?  அத சொல்லட்டுமா? அத சொல்லாம உன்ன காப்பாத்தி விட்டா கேள்வி கேக்குது. லூசுப்பைய புள்ள”
“யாரைப் பார்த்து லூசு என்று சொல்லுற? எங்கப்பாவையா சொல்லுற?” நிலுபமா கணியை அடிக்கத் துரத்த “நா மாமாவ ஒண்ணுமே சொல்லல” வீட்டை சுற்றி ஓடிக்கொண்டிருந்தான்.
விழா முடிந்து அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அனுபமா ஓய்வெடுக்க சென்றாள்.
வழமையாக அவள் தூங்கும் நேரம் தான். ஆனால் இன்று அவளுக்கு தூக்கம் வரவில்லை. விழாவில் நடந்த அனைத்தையும் விட இனியன் பேச வேண்டும் என்றதுதான் கண்ணுக்குள் வந்து நின்றது.
இனியனின் புகைப்படத்தைக் பார்க்க முன்பே பெயரை தான் அறிந்துக் கொண்டாள். இனிமொழியன் என்ற பெயரைக் கேட்ட உடனே உள்ளுக்குள் தித்தித்தது. அவன் உருவம் எவ்வாறு இருக்கும்  என்பதை விட அவன் குரல் எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணி கற்பனையில் மிதக்கலானாள்.
நிச்சயதார்த்தமன்று அவன் புகைப்படம் பார்த்த பொழுது இவன் தான் தனக்கானவன் என்று முடிவே செய்தவள். அவன் குரல் கேட்க தவமாய் தவம் கிடந்தாள்.
அந்த வரம் அவளுக்கு கிட்டிய நொடியே அவனை அவள் கணவனாக ஏற்றுக்கொண்டாள். அதுதான் அவள் விதி. அவன் அவன் திருமணத்தை நிறுத்துமாறு கூறியதை கேட்கக் கூடாதென்பது விதி.
மனம் ஒருவனை கணவனாக ஏற்றுக்கொண்ட பின் காதல் மொட்டு விட ஆரம்பிக்கும். ஆராச்சிக்கு எந்த இடமுமில்லை.
அந்த தவறைதான் அனுபமாவும் செய்தாள்.
ஊருக்கு ஒரு திருமணத்துக்காக வந்த வரதராஜனும், அன்னமும் அனுபமாவை கண்டு பெண் கேட்டது என்னவோ உண்மைதான்.
வடிவேலுக்கு வரதராஜனை தெரியும், அவர் குடும்பத்தை தெரியும் சொந்தபந்தங்களிடம் விசாரித்தது எல்லாம் சாதாரணமாக வீட்டில் நிச்சம் பண்ணும் திருமணத்தில் நடப்பவை தானே.
ஆனால் அதன் பின்னும் தான் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணான தன்னை இனியன் காண வரவில்லை என்றதும் அனுபமா சற்று யோசித்திருக்க வேண்டாமா?
தான் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணை பார்க்க வேண்டும் என்ற ஆசை எந்த ஆண்மகன்னுக்குள்ளும் இருக்காதா? குறைந்த பட்சம் அலைபேசியிலாவது பேச வேண்டும் என்ற ஆவல் இருக்காதா?
அனுபமாவுக்கு இனியன் மீது கொஞ்சமேனும் சந்தேகம் வந்திருந்தால் ஆராய்ந்துப் பார்த்திருப்பாள். ஆராய்ந்து பார்க்க தோணாமல் அவள் மனதில் இனியன் மீது காதல் அரும்பு விட்டிருந்தது என்பது தான் உண்மை. அதற்கு ஏதுவாக காரணங்களையும், எண்ணங்களையும் அவளே கற்பனை செய்து வளர்த்துக் கொண்டாள்.
மனதில் வேரூண்டி கிளைபரப்பி பூத்துக் குலுங்க வேண்டிய காதலை இனியனே முதலிரவன்று அசிட் ஊற்றி கருக விட்டிருந்தான்.
அனுபமாவுக்கு இனியன் ஜான்சியை காதலித்ததோ, சந்தர்ப்ப சூழ்நிலையால் தன்னை திருமணம் செய்து கொண்டு திருமணத்தை நிறுத்தாததற்கு தான் தான் காரணம் என்று குற்றம் கூறுகின்றானே என்றெல்லாம் கோபமில்லை.
தான் ஜான்சியை காதலிப்பதாகக் கூறி தன்னிடமிருந்து விலகி இருந்திருக்கலாம். அவன் சூழ்நிலையை அவளுக்கு புரிய வைத்திருக்கலாம். அதை விட்டு விட்டு ஜான்சியோடு ஒன்று சேர்வதற்காக தந்தையை ஏமாற்ற தன்னிடம் நடித்தான் என்பதைத்தான் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அந்தக் கோபத்தைக் கூட அவன் தனியாக இருக்கும் பொழுது வார்த்தைகளால் வெளிப்படுத்துவாளே தவிர, பிறர் முன்னிலையில் அவனுக்குண்டான மரியாதையை கொஞ்சமேனும் குறையாமல் கொடுத்தாள்.
இனியனின் பிள்ளை பாசத்தை பார்த்து வியந்தவளின் மனதில் காய்ந்த சருகாய் கிடந்த காதல் துளிர் விட ஆரம்பித்தது. தான் காதலித்த ஜான்சி, ஆம் காதலித்த ஜான்சி தான். அவள் இறந்த காலம். காதலித்த ஜான்சியை விட ஒருவன் தன்னுடைய குழந்தை தான் முக்கியம் என்று நினைக்கின்றான் என்றால் அவன் ஒரு நல்ல தந்தையாகவும், கணவனாகவும் இருப்பான் என்ற நம்பிக்கை அனுபமாவுக்கு வந்தது.
தாங்கள் ஒரு குடும்பமாக, சந்தோசமாக வாழ வேண்டும் என்ற ஆசை மேலோங்கி எதிர்பார்ப்பை தூண்டியிருந்ததை இன்று இனியனின் பேச்சியில் அவனும் நடந்தவைகளை மறந்து அவளோடு வாழ ஆசைக்கொள்கின்றான் என்று எண்ணி அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள். 
அனுபமா தூங்கி விழிக்கும் நேரம் என்பதனால் அவளுக்கு அருந்த கஞ்சி எடுத்துக் கொண்டு வந்தான் இனியன்.
அவள் அமர்ந்திருப்பதை பார்த்து “என்ன இன்னைக்கு அதிசயமாக நேரங்காலத்தோடு விழித்திருக்க, டயட்ல நால்லா தூங்கி இருப்பான்னு நினச்சேன்” என்றான்.
“நான் இன்னைக்கி தூங்கவே இல்ல”
“கால் ரொம்ப வலிக்குதா? கூப்ட்டிருந்தா பிடிச்சு விட்டுருப்பேனே” என்றவன் அவள் காலை பிடித்து விட, அனுபமா மறுக்கவில்லை.
சென்னையில் இருக்கும் பொழுது தெரியாதது போல் நாடகம் ஆடுவாள் தான். ஊருக்கு வந்த பின்னால் அவனை பார்த்தவாறே தான் தூங்குகின்றாள்.
“என்னமோ பேசணும் என்று சொன்னீங்களே? என்ன பேசணும்?” அவன் மீது இருந்த கோபம் நீங்கியதில் மரியாதை பண்மையிலையே அழைத்திருந்தாள்.
சட்டென்று அவளை பார்த்த இனியன் அவள் நல்ல மனநிலையில் இருக்கின்றாள் அதை கெடுக்க வேண்டுமா? என்று யோசித்தான். மறுகணம் இப்பொழுதே பேசுவது தான் சரி என்றும் அவனுக்குத் தோன்றியது.
“அது வந்து அது வந்து எப்படி ஆரம்பிக்கிறது என்று புரியல”
“நான் வேணா எடுத்துக் கொடுக்கட்டுமா?” கிண்டல் செய்தாள் அனு.
“நான் என்ன பேச போறேன்னு உனக்குத் தெரியுமா?” ஒருநொடி அதிர்ந்தவன் அவள் கிண்டல் புரிந்த பின் மௌனமானான்.
“சும்மா சொல்லுங்க. ஏன் கிட்ட சொல்ல என்ன தயக்கம்” பேசத் தூண்டியவள் அறியவில்லை. அவன் பேசிய பின் அவள் இறுக்கிப் போவாளென்று.
சிரித்த முகமாக இருக்கும் அனுபமாவை பார்த்து நல்ல மனநிலையில் இருக்கின்றாள். இப்பொழுதே பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்தான்.
“என்ன மன்னிச்சுடு அனு. கல்யாணத்த நிறுத்த சொல்லி உன் கிட்ட நான் சொல்லி இருக்கவே கூடாது. நான் போன்ல சொன்னத நீ கேட்கவே இல்ல. அது தெரியாம நீ கல்யாணத்த நிறுத்த முயற்சி செய்வாய் என்று காத்துகிட்டு இருந்து, அதனால ஜான்சி தற்கொலை செய்யப் போய், உனக்கு தண்டனை கொடுக்கிறதா நினைச்சி என்னவெல்லாமோ நடந்திருச்சு. நான் பண்ண தப்பாலதான் இன்னைக்கி நீ என் கூட இருக்க” அவள் வயிற்றை பார்த்தவாறே கூறினான்.
“இல்லனா…” நிமிர்ந்து அமர்ந்தவள் “இல்லனா ஜான்ஸியோட போய் லண்டன் இல்லனா அமெரிக்கால செட்டிலாகி இருப்பியா?” கோபமாக கேட்டாள்.
ஜான்சியோடு எவ்வாறாயினும் சேர்ந்து வாழ்வதுதான் இனியனின் திட்டம். குழந்தையின் வரவால் தானே அவன் அனுபமாவோடு இருக்கின்றான். அவன் மனம் மாறி விட்டான் என்று அனுபமா நினைக்க, அவன் கொஞ்சமேனும் மனம் மாறவில்லை.
அப்படியியாயின் ஹரி அண்ணாவிடம் பேசும் பொழுது நடந்ததையே மனசுல போட்டு உருட்டிக்கிட்டு இருந்தா நம்மால நிம்மதியா வாழ முடியாது. நாமதான் அதுல இருந்து வெளிய வரணும் என்று நித்யா அண்ணிக்கு உபதேசம் செய்தானே.
அவன் பேசியத்தைக் கேட்டு அவன் ஜான்சியை மறந்து விட்டான். இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டான் என்று நினைத்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்றெண்ணினாள் அனுபமா.
அனுபமாவின் மனதில் ஏற்பட்ட மாற்றம் இனியனுக்குள்ளும் இருக்குமா? அதை எவ்வாறு அறிந்துக் கொள்வது? அறிந்துக் கொள்ளாமல் அவனிடத்தில் தாங்கள் வாழ்க்கையை பற்றி பேசலாமா? என்று சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்குத்தான் இனியனும் அவளோடு சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக அவன் வாயாலையே கேட்க நேர்ந்தது. 
கண்விழித்தவள் இனியனை அழைக்கலாமென்று வெளியே வர ஹரியின் அறையில் அவன் குரல் கேட்கவே “இவன் என்ன அங்க செய்யிறான்” என்று போகும் பொழுதுதான் இனியன் பேசியது அவள் காதில் விழுந்திருந்தது.
அவன் மன மாற்றம் அவளை நெகிழ்ச்சியடையச் செய்ய அங்கிருந்து அகன்றிருந்தாள். ஊருக்கு மட்டும்தான் உபதேசம் என்று இப்பொழுதுதான் புரிந்துக் கொண்டாள். 
இனியன் பேசப் பேச அனுபமாவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கொண்டே இருக்க, சத்தமே வராமல் விசும்பினாள்.
“எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு அனு. என் பொண்ண மட்டும் என் கிட்ட இருந்து பிரிச்சிடாத. உன்ன கெஞ்சி கேட்கிறேன்” அவள் கால்களை பிடித்து கெஞ்சலானான்.
“ஆஹ் … நீங்க கவலை படாதீங்க. அந்த பாவத்தை நான் பண்ண மாட்டேன்” என்றவளுக்கு கேவல் வர உதட்டை கடித்து அடக்கிக் கொண்டாள்.
“நிஜமாவா?” ஆனந்தத்தில் இனியனின் கண்கள் காலங்கள் கேட்டான்.
அனுபமா எதுவுமே பேசவில்லை. “எனக்கு ரொம்ப டயடாக இருக்கு நான் தூங்கணும். நீங்க வெளிய போங்க” என்றவள் தலையணையில் தலைவைத்துப் படுத்துக்க கொண்டது மட்டுமல்லாது கால்களையும் இழுத்துக் கொண்டாள். 

Advertisement