Advertisement

அத்தியாயம் 24
சரஸ்வதியின் மகன் ரகுநாத் வந்தான். அழைக்க சென்றவர் அவனை சரஸ்வதி வீட்டில் ஒரு அறையில் பூட்டி வைத்திருந்ததாகக் கூறினார்.
வந்தவன் பார்க்க அப்பாவியாக, இந்த பூனையும் பால் குடிக்குமா என்றுதான் இருந்தான். தானும் நித்யாவும் காதலிப்பதாகவும் அன்னையிடம் கூறி பெண் கேட்க சொன்னதாகவும், நித்யா ஒரு ராசிகெட்டவ எனக் கூறி அன்னை மறுத்து விட்டாள். நித்யா வீட்டில் அவளுக்கு திடீரென்று திருமண ஏற்பாடு செய்து விட்டதால் நித்யா இரவோடு இரவாக அவனோடு வந்து விட்டதாகவும் கூறினான்.
நித்யா தன்னை யாரோ கடத்தியதாக கூறுகின்றாள். இவன் இப்படிக்கு கூறு கின்றான் யார் சொல்வது உண்மை?
“பொய்” என்று நித்யா சத்தமே வராமல் கதறினாள்.
“தம்பி இது ஒரு பொண்ணோட வாழ்க்கை பிரச்சினை. உண்மையை மட்டும் தான் பேசணும்” வடிவேல் அதட்ட
“என் பையன் எதுக்கு பொய் சொல்லப் போறான்” சீறினாள் சரஸ்வதி.
“அப்போ நித்யா தான் திட்டம் போட்டு எல்லாம் பண்ணி இருக்கான்னு சொல்லுறீங்களா?” என்று கேட்டான் ஹரி.
“நானும் நித்யாவும் சேர்த்துதான் திட்டம் போட்டோம்” என்றான் ரகுநாத்.
“நித்யா நீ இவன காதலிக்கிறியா?” ஹரி நித்யாவிடம் நேரடியாவே கேட்டான்.
“இன்னும் என்ன தம்பி அவகிட்ட கேட்டுகிட்டு இருக்கிறீங்க. ஓடுகாலி நாயி. இவ கால ஒடச்சி ஒரு மூலைல உக்கார வைக்கணும்” என்று கனகா நித்யாவை அடிக்க முனைந்தாள். 
அவளை தடுத்த ஹரி “அவ நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு. கை வைக்கிற வேலையெல்லாம் வச்சிக்காதீங்க” கனகாவை மிரட்டி விட்டு “சொல்லு இவன காதலிக்கிறியா?” மீண்டும் கேட்டான்.
“இல்ல. இவர் சொல்லுறது எதுவுமே உண்மையில்லை. கோவிலுக்கு போகும் போதும் பாத்திருக்கேன். என் கிட்ட வந்து பேச முயற்சி செய்வார். நான் விலகி வந்துடுவேன்” என்றாள்.
“அட ஆமாப்பா நானும் கோவில் வாசல்ல டீ கடையில தான் அமர்ந்திருப்பேன். இவன் இந்த புள்ள கிட்ட பேசிக்கிட்டே பின்னாடி போவான். இந்த புள்ள பேச்சுக் கொடுக்காது” என்றார் ஒரு பெரியவர்.
“நானும் பார்த்திருக்கேன். இந்த பொண்ணு கூடத்தான் யாருமே எந்த பேச்சு வார்த்தையும் வச்சுக்க மாட்டாங்களே. அது அதுபாட்டுல போகும். இவன் தான் பின்னாடி போவான். யாருகிட்ட உதவி கேக்குறது என்று புரியாம இந்த பொண்ணு வேகமா நடந்து போய்டும்” என்றாள் ஒரு பெண்.
“இதுக்கு என்னப்பா சொல்லுற?” என்று வடிவேல் கேட்கவும்
“அவங்க சொல்லுறது எல்லாம் உண்மை. நித்யா கிட்ட என் காதலை சொன்னப்போ. வீட்டுல வந்து பொண்ணு கேட்க சொன்னா. அம்மா கிட்ட போய் சொன்னா அம்மா மறுத்துட்டாங்க. நித்யா என்ன விரும்பாம தான் பொண்ணு கேட்டு வரச் சொன்னாளா?” என்று ரகுநாத் வடிவேலை திருப்பிக் கேட்டான்.
ரகுநாத் நித்யாவை காதலிக்கின்றான். நித்யாவிடம் தான் காதலை கூறியிருக்கின்றான். நித்யா அவனிடம் தப்பிக்க பெண் கேட்டு வரும்படி கூறினாளோ, அல்லது அவளும் அவனை விரும்புகின்றாளோ தெரியவில்லை. வீட்டில் அன்னையிடம் கூறி பெண் கேட்க சொன்னான். சரஸ்வதியோ நித்யா ராசியில்லாதவளென்று மறுத்து விட்டாள். திடிரென்று நித்யாவுக்கு திருமண ஏற்பாடு நிகழ்ந்து விட்டதால் வேறு வழியில்லாது நித்யாவை கடத்தியிருக்கின்றான்.
நித்யா அவனை விரும்புவதாக நினைத்த ரகுநாத் கடத்தி வீட்டில் வைத்திருக்கின்றான். நித்யா எந்த பிரச்சினையும் செய்ய மாட்டாள், அன்னையை சமாதானப்படுத்தலாமென்று எண்ணியிருப்பான். சரஸ்வதி மகனை காப்பாற்ற நாடகமாடுகின்றாள். ரகுநாத் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு நித்யாவை திருமணம் செய்ய முயற்சிப்பதும் தெரிகிறது. அது மட்டுமல்ல இந்த பிரச்சினையை மையமாக வைத்து தனக்கும், நித்யாவுக்கும் நடக்க இருக்கும் திருமணத்தையே நிறுத்த கனகா அத்த வேறு திட்டம் போட்டு பேசுகின்றாள் என்றும் தெளிவாக புரிகிறது. 
நித்யாவை கடத்தியதற்கான எந்த சாட்ச்சியுமில்லை. மணப்பெண்ணான நித்யா எதற்காக கொல்லைப்புறத்தில் வேலையாக இருந்திருக்க வேண்டும்? அதுவும் அந்த நேரத்தில்? வேலை கொடுத்த கனகா உண்மையை சொல்லப் போவதுமில்லை.
நித்யாவை குற்றம் சொல்ல இரண்டு பெண்களும், நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்தி அவளை திருமணம் செய்ய காத்திருக்கும் ரகுநாத்தும் என்று அனைவரும் இருக்க அவளிடம் சென்று நின்றான் ஹரி.
“இங்க பாரு நித்யா… உன் விருப்பமில்லாம இங்க எதுவும் நடக்காது. நீ இவன காதலிக்கிறியா? இந்தம்மாக்கு பயந்து அத சொல்லாம இருக்கியா?” என்று ஹரி கேட்க அழ ஆரம்பித்தாள் நித்யா.
நித்யாவின் ஆழுகை அதுதான் உண்மை என்பது போல் அனைவருக்கும் பறைசாற்ற, சரஸ்வதி கத்த ஆரம்பித்தாள்.
“ஷு… முதல்ல அழுறத நிறுத்து. அழுதா எல்லாம் சரியாகுமா? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு” அதட்டினான் ஹரி.
“இல்ல…” என்றவள் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று ஒரு வார்த்தை கூற வில்லை.
“சரி நான் உன் அப்பா பார்த்த மாப்பிள்ளை. என்ன கல்யாணம் பண்ண உனக்கு சம்மதமா?” என்று அவளை பார்த்துக் கேட்க, முழிக்கலானாள் நித்யா.
தனக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதே சித்தி சண்டை போடும் பொழுதுதான் அறிந்துக் கொண்டாள் நித்யா. இதில் அவன் யார்? எந்த ஊர்? சொந்தமா? என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.
நாராயணன் அவளிடம் பாசமாகக் கூட பேச மாட்டார் அவர் பார்த்த மாப்பிள்ளை மட்டும் எப்படி இருப்பான்? என்று கவலையில் இருந்தவளுக்கு ஹரியின் பேச்சு நம்பிக்கையையும், நிம்மதியையும் கொடுத்தது.
“விருப்பமில்லைனா வாய் திறந்து சொல்லு. அத்த பையனா உனக்கு நானே மாப்புள பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றான்.
தனக்கொரு அத்தை மகன் இருப்பது அப்பத்தா சொல்லித் தெரியும். அவன் வந்ததுமில்லை. அவள் அங்கு சென்றது ஞாபகத்திலுமில்லை. அவனா நீ என்று பார்த்தவள் “அப்பத்தாவோட விருப்பமும் நான் என் அத்தை பையன கட்டிக்கணும் என்றுதான்” அவளின் அப்பேச்சிலையே ஹரி யாராக இருந்தாலும் அவனை அவள் திருமணம் செய்து கொள்வாள் என்று புரிந்தது.
“அம்மா பல வருஷமா கட்டில்லையே கெடந்தாங்க. நித்யாதான் பார்த்துக்கிட்டா அப்போ சொல்லியிருப்பாங்க. அவங்க எண்ணம் போலவே நடந்திருக்கு” என்றார் நாராயணன்.
“அம்மா நீங்க உங்க பையன கூட்டிகிட்டு கிளம்புங்க. உங்க பையன் சொல்லுறது பொய்யென்று புரியுது” வடிவேல் கறார் குரலில் கூற, சரஸ்வதி நொடித்தாள்.
நானும் நித்யாவும் காதலிக்கிறோம். நித்யா வரச்சொல்லிதான். நேத்து வந்து அவளை கூட்டிட்டு போனேன். இப்போ அவ பயந்துகிட்டு மாத்தி பேசுறா…  அவளுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைங்க” ரகுநாத் பிடிவாதம் பிடிக்கலானான்.
“தம்பி சும்மா காதலிக்கிறோம் என்று சொன்னா மட்டும் பத்தாது ஆதாரம் வேணும். லெட்டர் ஏதாவது கொடுத்திருக்காளா? கிரீட்டிங் கார்ட் ஏதாவது அனுப்பியிருக்காளா?” கூட்டத்தில் ஒருவர் கேட்க,
“அதெல்லாம் உங்க காலம் மாமா” என்ற ஹரி “நீங்க ரெண்டு பேரும் காதலிச்சு இருந்தா குறைந்தபட்சம் போன்லயாவது பேசியிருப்பீங்கல்ல. உன் போன கொடு” என்று ரகுநாத்தின் அலைபேசியை வாங்கியவன் “நித்யா உன் கிட்ட போன் இருக்கா?” என்று கேட்டான்.
“நித்தியா இல்லையென்று தலையசைத்ததும் “அப்போ வீட்டுக்குத்தான் பேசியிருக்கணும்” என்று ஹரி கூறும் பொழுதே
“நான் என் போன்ல ரெகார்ட் எல்லாம் டிலீட் பண்ணிட்டேன்” என்றான் ரகுநாத்.
“உன் அம்மா பாத்துடுவாங்கன்னு அழிச்சியாக்கும்” என்று வடிவேல் கிண்டலாக கேட்க, கூடியிருந்த கூட்டம் மொத்தமும் சிரித்தனர்.
ரகுநாத் அலைபேசியில் என்ன செய்கிறான் என்று வேவு பார்க்கும் வயதிலையா அவன் இருக்கின்றான். அதுவும் ஸ்மார்ட் போனை கையால சரஸ்வதிக்கு தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை எனும் பொழுது அவள் அதை தொடப் போவதுமில்லை. அவன் கூறுவது பொய்யென்று அக்கணமே அனைவருக்கும் புரிந்தது.
“அது ஒன்னும் பிரச்சினையில்ல தம்பி கால் ரெகார்ட் வாங்கி செக் பண்ணா உண்மை என்னானு தெரிஞ்சிடப் போகுது” என்றான் ஹரி.
நித்யாவிடம் கெஞ்சிப் பார்த்தவன் நித்யா அமைதியாகவே நிற்க “என்ன காதலிக்கிறேன்னு சொல்லிட்டு என்ன விட வசதியா ஒருத்தன் வந்ததும் என்ன கழட்டி விட்டுட்டு அவன கல்யாணம் பண்ணிட்டல நீ. உன்ன பாத்துக்கிறேன் டி” என்று நித்யாவை வசைபாடியவாறு கிளம்பினான்.
திருமணத்துக்கு இன்னும் ஒரே நாள் தான் இருந்தது. நித்யாவை இந்த வீட்டில் விட்டு செல்ல மனமில்லாமல் சென்றான் ஹரி.
வடிவேலுக்கு வேறு வழியில்லை. நாராயனிடம் நித்யாவை பேசி மனதை காயப்படுத்த வேண்டாமென்று கனகாவை பார்த்தவாறே கூறி விட்டு சென்றார்.
அவர்கள் சென்ற மறுகணமே ஆளாளுக்கு நித்யாவை திட்ட ஆரம்பித்தனர். “அந்தம்மா என்னதான் கத்தினாலும் அவ பையன பெத்து வச்சிருக்கா, பொண்ண பெத்த நாமதான் பொண்ண ஒழுங்கா வளர்க்கணும்” என்று கனகாவின் சொந்தத்தில் ஒருத்தி சொல்ல,
“அதுவும் கனகா சித்தி வேற ஒழுங்கா பொண்ண வளர்களனு அவ மேலதான் குத்தம் சொல்வாங்க” கனகாவின் அக்கா ஒருத்தி கூறினாள்.
“கடைசில என் பெண்ணுக்குத்தான் கெட்டப் பெயர்” என்று கனகாவின் அன்னை புலம்ப
மகளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய நாராயனே நித்யாவை திட்ட ஆரம்பித்தார். 
தான் என்ன தவறு செய்தோம்? ரகுநாத்திடம் விருப்பமிருந்தால் வீட்டில் வந்து பெண் கெடுக்கும்படி கூறியதில் என்ன தவறு? அதை விடுத்து அவன் பின்னால் அலைவது தானே தவறான விஷயம். அவன் வீட்டிலோ, அல்லது தன் வீட்டிலோ திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் அவன் புரிந்துக்கொண்டு ஒதுங்கி விடுவான் என்றுதானே நினைத்தேன். அது கூட தவறு என்று கூறினால் என்ன செய்வது?
தான் தான் தவறு, தான் தான் தவறானவள் என்று இரவுணவையும் உட்கொள்ளாமல் நித்யா புலம்பிக் கொண்டிருக்க, அவளை தூங்க விடாமல் கனகா திட்டிக் கொண்டே இருந்தாள்.
நித்யா ராசி இல்லாதவள் மாத்திரமல்ல, நடத்தை கெட்டவள் அவளால் குடும்ப மானம் போச்சு, மரியாதை போச்சு. நித்யா உயிருடன் இருக்கக் கூடாது என்றும் பேசினாள்.
சின்ன வயதிலிருந்தே பாசம் காட்ட வேண்டிய அப்பா, பாட்டி மற்ற சொந்தங்கள் என்று அனைவரும் அவளை இவ்வாறு பேசிப் பேசியே மனதளவில் துவண்டு போனவள் அப்பத்தாவின் பாசத்தால் மட்டும் தான் கொஞ்சமேனும் மனநிம்மதியோடு இருந்தாள்.
அப்பத்தா இருந்தவரைக்கும் அவளை பார்த்துக் கொள்வதில்லையே நித்யாவின் காலமும், நேரமும் சென்றது. அப்பத்தா இறந்த பின் அவள் வாழ்க்கை ரொம்ப கொடுமைதான். கனகா சதா திட்டிக் கொண்டே இருந்தாள்.
நாமளும் செத்துப் போய்டலாமோ, அப்பத்தா கூடவே போயிருக்கலாமோ என்றெல்லாம் நித்யாவுக்கு எண்ணங்கள் தோன்றும். ஆனால் தற்கொலை செய்யக் கூட அவளுக்கு தைரியமில்லை என்பதுதான் உண்மை.
அது பத்தாதென்று ரகுநாத்தின் தொல்லை வேறு. பொறுக்க முடியாமல் இவள் தான் திருமணம் செய்யும் எண்ணமிருந்தால் வீட்டில் வந்து பேசுமாறு கூறியிருந்தாள்.
அவன் வராததினால் அவனுக்கு இவளை திருமணம் செய்யும் எண்ணமெல்லாம் இல்லை. வேலைவெட்டி இல்லாததால் பின்னால் அழைக்கின்றான் என்றுதான் நினைத்தாள்.
அவன் வீட்டில் பேசி அவன் அன்னை மறுத்ததினால், தன்னை கடத்தும் அளவுக்கு சென்றிருக்கின்றான் என்றால் அவனுக்கு தன் மீது அவ்வளவு காதலா? தன்னையும் ஒருவன் உண்மையாக நேசிக்கின்றானா? நித்யா ஆச்சரியமாக நினைக்கையில்தான் சரஸ்வதி மகனை அறைக்குள் தள்ளி கதவு பூட்டி விட்டு இவளை இழுத்துக் கொண்டு வண்டியில் ஏறியிருந்தாள். 
ஆனால் அவள் நினைத்ததற்கு மாறாக அவள் அப்பத்தாவே கடவுளாக நின்று ஹரியை அவளுக்கு மாப்பிள்ளையாக அனுப்பி வைத்திருக்கின்றான். இனி அவன்தான் அவளுக்கு எல்லாமே என்ற நிம்மதி அடிமனதில் கொஞ்சம் எழ, அந்த நம்பிக்கையை அவளுக்குள் வர விடாமல் கனகா கண்டபடி பேசிக் கொண்டே இருந்தாள்.
திருமணம் நிகழும்வரை ஹரிக்குத்தான் இருப்புக்கொள்ளவில்லை. மணப்பெண்ணாக நித்யா வரும் பொழுதே பொலிவிழந்த அவள் முகத்தை பார்த்தே என்ன நடந்திருக்கும் என்று ஊகித்தான்.
தாலி கட்டும் பொழுதும் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
முதலிரவு அறைக்கு வந்த நித்யாவோ ரகுநாத் தன்னை கடத்தி திருமணம் செய்ய முனைந்ததற்கு தான் தான் முழுக்காரணம். தன் மனதில் ரகுநாத்துக்கு இடம் கொடுத்திருக்கா விட்டால் வீட்டில் வந்து பெண் கேட்கும்படி கூறியிருக்க மாட்டேன். தான் ஒரு நடத்தை கெட்டவள். தான் ஹரிக்கு சற்றுமே பொருத்தமில்லை என்றும். இந்த வீட்டில் ராசியில்லாத தன்னால் ஹரிக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது தான் ஒரு வேலைக்காரி போல் இருந்து விடுவதாகவும் வேறொரு திருமணம் செய்து கொள்ளும்படியும் அழுது கரைந்தாள். 
அவளை அதட்டிப் பார்த்தான். சமாதானப்படுத்திப் பார்த்தான் அவளோ ஹரியின் எந்த பேச்சுக்கும் மசிவதாக தெரியவில்லை.
“சரி நீ சொல்லுறபடியே நான் கேக்குறேன். ஆனா நீ இந்த வீட்டு வேலைக்காரியா இருக்கக் கூடாது. படிக்கணும். படிச்சு ஏதாவது வேலைக்கு போகணும். அப்படி போனா மட்டும் தான் நான் நீ சொல்லுறத கேப்பேன்” என்றான்.
நித்யா பத்தாவது கூட தாண்டவில்லை. அவள் படித்து வேலைக்கு செல்வதா? அவள் வயதில் உள்ளவர்கள் காலேஜ் கூட முடித்திருப்பார்கள்.
“அதெல்லாம் நடக்காத காரியம்” நித்யா உடனே மறுக்க,
“அப்போ… நீ நினைக்குறதும் நடக்காது” என்ற ஹரி கட்டிலில் சென்று தூங்க ஆரம்பித்தான்.
அதுவரையில் ஹரி அவளோடு பேசவேயில்லை. அவள் அவனுக்காக துணி எடுத்து வைத்தால் இவன் வேறொரு துணியை அணிந்துக் கொண்டு செல்வான். அவள் பரிமாறினால் கூட சாப்பிடுவதில்லை.
முகத்தில் அடித்தது போல் அவன் செய்பவைகள் நித்யாவுக்கு ரொம்பவே வலிக்க ஆரம்பித்தது.
“என்ன இவன் இப்படி செய்யிறான்” என்று பார்த்த நித்யா வேறு வழியில்லாது ஹரி கூறியதற்கு இணங்கினாள்.
வடிவேல் கூட கவனித்து என்னவென்று மகனிடம் விசாரிக்க, நித்யா மனதளவில் ரொம்பவும் காயப்பட்டிருக்கின்றாள் அவளை மெதுவாகத்தான் அதிலிருந்து மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று கூற, வடிவேலும் கலைவாணியை அழைத்து நித்யா மீது கூடுதல் கவனம் எடுக்க சொன்னார்.
அவள் படிப்பதற்கு ஏற்பாடு செய்தது மட்டுமல்லாது மருத்துவ ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தான்.
மெதுமெதுவாக நித்யா தன்னை மீட்டுக் கொண்டு வரு பொழுது கலைவாணியின் குடும்பத்தில் நிகழ்ந்த திருமணம் ஒன்றுக்கு செல்ல நேர்ந்த வேளையில் திருமணமாகி ஒருவருடத்துக்கு மேலாகிறது இன்னும் குழந்தையில்லையென்று அக்கறையாக விசாரிப்பது போல் கேட்க ஆரம்பித்த கனகாவிடம் தான் படித்துக் கொண்டிருப்பதாக நித்யா கூறிவிட  ராசியில்லாதவ, நடத்த கெட்டவ என்று பேசி மீண்டும் அவளை அழ வைத்திருக்கிறாள்.
கலைவாணியின் குடும்பத்தில் நிகழ்ந்த சில அசம்பாவிந்தங்களுக்கும், வடிவேலின் குடும்பத்தில் நடந்த அசம்பாவிதங்களும் நித்யா தான் காரணம் என்று பேசி, ஹரியின் பெற்றோ இறந்தததற்கும் நித்யாதான் காரணம் என்பது போல் பேசியிருக்கின்றாள்.
திரும்ப மனதளவில் காயமடைந்தவள் நிலைகுலைந்து பழையபடி புலம்ப ஆரம்பிக்க மனம் வெறுத்தான் ஹரி. 
நித்யாவை கண்ணாடி பாத்திரம் போல் கையால வேண்டிய நிலையில் ஹரி இருக்க, அவளை தனியே விட்டது தன்னுடைய தவறு என்று அதன்பின் எங்கு சென்றாலும் அவளுடனே இருக்கலானான்.
அத்தோடு அனுபமா, நிலுபமாவின் தோழமையும் நித்யாக்குள் பலவித மாற்றங்களை ஏற்படுத்தியிருக்க, புகுந்த வீட்டோடு நன்றாகவே ஒன்றிப்போனாள். 
படித்து முடித்தவள் ஊரிலுள்ள நேசரியில் ஆசிரியையாக பணியாற்றுகின்றாள். அது அவளுள் பல மாற்றங்களை தோற்றுவித்திருந்தது.
குழந்தைகளோடு ஐக்கியமானத்தில் தனக்கும் குழந்தையிருந்தால் நல்லா இருக்கும். தானும் தாய்மை அடைந்தால் சந்தோசம் என்று நினைத்தவளுக்கு தான் ஹரியிடம் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியது ஞாபகம் வந்து. அதை போட்டு மனதில் உருட்ட ஆரம்பித்திருந்தாள்.
தன் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடத்துக்கு மேலாகின்றது. ஆனாலும் ஹரி இன்னுமே அவனுடைய இரண்டாவது திருமணத்தை பற்றி பேசவில்லையே என்ற எண்ணம் வர அவனிடமே அதை பற்றிக் கேட்டாள்.
“நீ பொண்ணு பார்த்து கட்டி வைக்கிறியா? இல்ல நானே பொண்ணு பார்க்கட்டுமா?” சிரிக்காமல் கேட்டான் ஹரி.
“உங்களுக்கு பிடிச்சா மாதிரி நீங்களே பாருங்க” சோகமான குரலில் கூறினாள் நித்யா.
“பேச்சு மாற மாட்டியே” புன்னகை எட்டிப் பார்த்திருக்க அடக்கிக் கொண்டான்.
“ஏற்கனவே பார்த்துட்டேன். நீதான் அவகிட்ட பேசி சம்மதம் வாங்கிக் கொடுக்கணும்” என்றான்.
“பொண்ணு பார்த்தாச்சா? எப்போ? ஏன் என் கிட்ட சொல்ல?” நித்யாவிடம் கேள்விகள் கொட்டிக் கிடந்தன. வலியோடுதான் கேட்டாள். 
“அதோ அங்கதான் இருக்கா. அவகிட்ட பேசி என்ன ஏத்துக்க சொல்லேன்” என்றான்.
நித்யா திரும்பிப் பார்த்த இடத்தில் முகம் பார்க்கும் கண்ணாடிதான் இருந்தது. சட்டென்று அவளுக்கு ஹரி என்ன சொன்னான் என்று புரியவில்லை. புரிந்த உடன் நம்பவும் முடியவில்லை. கண்களை விரித்தவள் “என்னையா சொல்லுறீங்க?” என்று  மீண்டும் கேட்டாள்.
“உன்னைத்தான். இங்க வேறு யார் இருக்காங்க?” அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் ஹரி.
அதன்பின் நித்யா ஹரியின் வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இல்லை.
நித்யா குழந்தை உண்டான பொழுதும் தந்தை வீடு அனுப்பவில்லை ஹரி.
குழந்தை பிறந்து பெயரிடும் விழாவுக்கு வந்த கனகா சமயம் பார்த்து நித்யாவை பேசி வைக்க, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருந்தது.
தன்னால் தன் கணவனுக்கும், குழந்தைக்கும் ஏதாவது நிகழ்ந்து விடுமோ என்று புலம்பலானாள் நித்யா.
கடுப்பான ஹரியோ “இங்க பாரு குடும்பம்னா நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க. அந்தம்மா பேசுறத நீ கேட்டீனா. உன்ன நான் அங்கயே கொண்டு பொய் விட்டுடுவேன்” என்று மிரட்டினான்.
அக்கணம் அமைதியானாலும், குடும்பத்தில் ஏதாவது விஷேசம் நிகழ இருக்கும் பொழுது கனகா வருவாள், தன்னை பேசுவாள் என்று அஞ்சி, அஞ்சியே ஹரியின் உயிரை எடுக்க ஆரம்பித்தாள்.
இன்றும் அதுதான் நடந்திருந்தது. அதைத்தான் இனியன் அரையும் குறையுமாக கேட்டுவிட்டு சொத்து பிரச்சினையாக இருக்குமோ? அனுபமாவுக்கு சீமந்தம் செய்வதில் நித்யாவுக்கு இஷ்டமில்லையோ என்று நினைத்தான்.
“ஓஹ்… சாரி சிஸ்டர். உங்க பயம் தெரியாம நான் பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டேன்” உண்மை அறிந்த மறுகணம் நித்யாவிடம் நேரடியாகவே மன்னிப்பு கேட்டிருந்தான் இனியன்.
அத்தோடு விடாமல் “சாரி மச்சான். உங்களுக்கு தப்பாத்தான் நினைச்சுகிட்டு இருந்தேன். அதெல்லாம் சொன்னா அடிக்க வருவீங்க” என்று ஹரியை பார்த்தான்.
ஆனால் ஹரியோ “இவ இவளோட சித்திய கண்டா நடுங்குற. மாப்புள. அப்படி என்னதான் பயமோ. ஏதாவது பேசினா லெப்ட் அண்ட் ரைட் வாங்க வேணாம்” என்றான்.
“அதுசரி எல்லாரும் அனுபமாவாக முடியுமா? என்ன சிஸ்டர்? அவகிட்ட கிளாஸ் எடுங்களேன்” இனியன் சிரிக்க,
“கேப்ல என் தங்கச்சியையே காலாய்க்கிறீங்களா. இருங்க அவகிட்ட போட்டுக் கொடுக்குறேன்” என்றான் ஹரி.
“இங்க பாருங்க சிஸ்டர். நடந்ததையே மனசுல போட்டு உருட்டிக்கிட்டு இருந்தா நம்மால நிம்மதியா வாழ முடியாது. நாமதான் அதுல இருந்து வெளிய வரணும்” அது அவனுக்கே அவன் கூறிக்கொள்ள வேண்டிய வார்த்தைகள். மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் பொழுது மட்டும் ஏனோ மனிதன் ஞானியாகின்றான் “நீங்க எந்த தப்பும் பண்ணல. இப்படி ஒதுங்கி நின்னா அவங்க பேசத்தான் செய்வாங்க. நான் சொல்லுறேன். அனுவோட சீமந்தத்த நீங்கதான் முன்னால நின்னு நடத்தணும்” என்றான்.
புதிதாக குடும்பத்துக்கு வந்த இனியன் எவ்வாறு இருப்பான் என்ற அச்சம் கூட நித்யாவுக்கு இருந்தது. அவன் பேச்சு அவளுக்கு நிம்மதியை கொடுக்க மெதுவாக தலையசைத்தாள்.
இனியனும் ஹரியும் அரட்டை அடிக்க ஆரம்பிக்க, குழந்தை சிணுங்கவும் நித்யா எழுந்து சென்று விட்டாள். 
“கணி மாப்புள அடிக்கடி போன் பண்ணி பேசுவாப்புல. எதோ கேஸ் விஷயமா பேசினாரு. இப்போ நிலுபமா பேசும் போது பேசுவாரு” என்றான் ஹரி.
“அடக் கிராதகா… மாமனார் குடும்பத்தோட எனக்குத் தெரியாமலையே ஒட்டிக்கிட்டியா? என் பின்னால என்னென்ன வேல பார்த்திருக்க, தம்பி துரோகி” கணியை மனதுக்குள் வசை பாடியவன் புன்னகைத்து மட்டும் வைத்தான்.
அறைக்கு வந்த இனியனுக்கு ஒன்று மட்டும் நன்றாகவே புரிந்தது. எந்த பிரச்சினை வந்தாலும் பாதிக்கப்படுவது பெண்கள் தான். குற்றம் சொல்வதும் பெண்களைத்தான். தன்னுடைய பிரச்சினையில் தானும் சம்பந்தமே இல்லாமல் அனுபமாவையல்லவா குற்றம் கூறினேன். அவளிடம் உடனே மன்னிப்பு கோர வேண்டும் என்று உள்ளம் சொல்ல சீமந்தம் நல்ல முறையில் நடந்து முடியும் வரையில் காத்திருக்கலானான் இனியன்.

Advertisement